Monday, January 13, 2020

பாசண்டச் சாத்தன் - 6 .

”பாசண்டச் சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு - புகார் 9/15” என்று வரும் பாசண்டச் சாத்தனைக் ”கையில் சாட்டைகொண்டவனாய்ப் புரிந்துகொண்ட நாம் “தொண்ணூற்று அறுவகை பாசண்டத் துறை - வஞ்சி 26/130” என்பதையும், ”பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல் - வஞ்சி 30/69, பாசண்டன் பால் பாடுகிடந்தாட்கு - வஞ்சி 30/78” என்பவற்றையும்,  “பலவகை மரபின் பாசண்டியர்கள் சலசல மிழற்றும் சமய விகற்பமும் - பெருங்கதை உஞ்சை. 32/3,4” என்பதையும் புரிந்துகொள்வது எப்படி? சாத்தன் இன்றிப் பாசண்டன், பாசண்டியர், பாசண்டத் துறை என்ற சொற்கள் தனியே இங்கு இப்படிப் புழங்கியுள்ளனவே?

மூன்று வேதமறுப்பு நெறிகளும் சிலம்பில் அடையாளங் காட்டப் பட்டுள்ளன. இந்திரவிழவு ஊரெடுத்த காதை 179-180 ஆம் வரிகளில் ”அறவோர் பள்ளியாய்ச்” செயினப் பள்ளியும்  ”அறன் ஓம்பு அடையாய்ப்” புத்தம் ஓம்பும் மடமும், ”புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானத்தால்” என 3 ஆவதும் நம்மைத் தெளிவுறுத்தும். கனாத்திறம் உரைத்த காதையின் 9/12-13 வரிகளால், “புறம்பனையான் வாழ்கோட்டம்,  நிக்கந்தன் கோட்டம்” ஆகியன வெவ்வேறு அடையாளங் காட்டுவதை ஆழ நோக்குங்கள். இனிமேலும் நம்மூர் அறிஞர், மகாவீரரோடும், புத்தரோடும் சாத்தனைப் பொருத்திக் குழம்புவதில் பயனில்லை. (திவாகரம் 10 ஆம் நூற்பாவின் வழியாகப் பார்த்தால்,  நாம் பெறும் ”காரி”, ”கடல்நிற ஐயன்” என்ற நிறக் குறிப்புகள் மகாவீரர், புத்தர் ஆகிய இருவரையும் குறிக்கவில்லையென்று காட்டிவிடும். அவர்கள் நல்ல சிவப்பு ஐயா!) சாத்தன் என்பான் வேறொருவனே!  அதுவும் கருப்புத் தமிழனே!. காரி! கடல்நிற ஐயன்!

தவிர, ”பாசண்டம்” என்பது வேறுவகைப் பொருளிலும் புழங்கியது. பாசாண்டச் சாத்தன் வெறுஞ் சாத்துக் காவலன் அல்லன்  அதற்கு மேலும், 96 வகை பாசண்டத் துறைகளை ஊருக்குச் சொன்னவனாய், அறிவுத் தலைவனாய்க் காட்சியளிக்கிறான். (திருப்பிடவூர் ஐயனாரை, அரங்கேற்ற ஐயனார் என்பார். அங்கொரு நூல் அரங்கேறியுள்ளது. அது எந்த நூல் என்பதில் தான் தடுமாற்றமுண்டு. )  அகரமுதலிகள் “தொண்ணூற்று அறுவகை பாசண்டத்துறையை”, “96 வகை சமயசாத்திரக் கோவை” என்று குறிக்கும். ”பாசண்டத் துறையு மிவற்றுட் பலவாம், பேசிற் றொண்ணூற் றறுவகைப் படுமே” என்பது திவாகரம் 2373.

இது தவிர, சிலப்பதிகாரம், கனாத்திறமுரைத்த காதையில் 14-15 ஆம் அடிகளுக்குப் பொருள் சொல்கையில், அடியார்க்கு நல்லார் “பாசண்டம் = தொண்ணூற்றறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை” என்று சொல்லி, “என்னை?” என்று கேள்வி கேட்டு, வளையாபதியில் வரும் கீழ்க்கண்ட பாவைச் சொல்வார். தொண்ணூற்று அறுவகையை  உறுதி செய்யும் பா இது.

பண்ணால் திறத்தில் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணாறு இயங்கும் விறலவர் ஆயினும்,
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்”

இதுவரை கிட்டிய பாக்களை வைத்து வளையாபதியைச் செயினக்காப்பியம் என்று தமிழறிஞர் முடிவுசெய்வார். இப்பாவில் ஐயனார் பற்றிய கூற்றுள்ளது. முழுக் காப்பியமும் கிடைத்திருந்தால் பலவற்றை அறிந்திருக்கலாம்.   (96 வகைச் சமய நூல்களை 96 வகைச் சிற்றிலக்கியங்களோடு குழப்பி "கதிர் ஒன்பது" எனும் அற்றுவிக நூலை மறக்கடித்து, சேரமான் பெருமாள் நாயனாரின் ”திருக்கயிலாய ஞான உலாவோடு” சிலர்குழம்புவர். கீழே அதை விரிவாகப் பார்ப்போம்.) பாசண்டச் சாத்தனுக்கு இன்னொரு பொருளாய் ”சமய நூல்களில் வல்லவரான ஐயனார்” என்றுஞ் சொல்லப்படும், பாசண்டம் என்பது ”புறச் சமயக் கொள்கை, வேத ஒழுக்கத்திற்கு வேறான சமயம்” என்றும் சொல்லப் படும். ”பாசண்டி மூடம்” என்பதற்கு, அகராதிகள் “புறச் சமயத்தாரைப் போற்றும் மடமை” என்றுஞ் சொல்லும். புறச்சமயக் கொள்கையை ஆங்கிலத்தில் heresy என்பார். அதைக் கீழுள்ளவாறு வரையறுக்கவும் செய்வார்.

"doctrine or opinion at variance with established standards" (or, as Johnson defines it, "an opinion of private men different from that of the catholick and orthodox church"), c. 1200, from Old French heresie, eresie "heresy," and by extension "sodomy, immorality" (12c.), from Latin hæresis, "school of thought, philosophical sect." The Latin word is from Greek hairesis "a taking or choosing for oneself, a choice, a means of taking; a deliberate plan, purpose; philosophical sect, school," from haireisthai "take, seize," middle voice of hairein "to choose," a word of unknown origin, perhaps cognate with Hittite šaru "booty," Welsh herw "booty;" but Beekes offers "no etymology."

The Greek word was used by Church writers in reference to various sects, schools, etc. in the New Testament: the Sadducees, the Pharisees, and even the Christians, as sects of Judaism. Hence the meaning "unorthodox religious sect or doctrine" in the Latin word as used by Christian writers in Late Latin. But in English bibles it usually is translated sect. Transferred (non-religious) use in English is from late 14c.

எப்படிக் கத்தோலிக்க மரபிற்கு எதிரானது  இரோப்பாவில் heresy ஆனதோ, அதுபோல் வேதமறுப்பு நெறிகள் என்பன ஏற்கன நிறுத்தப் பட்ட வேத நெறிக்கு இவை எதிரானதால், இங்கு அவை heresy ஆயின. சிலபோது  சிவ, விண்ணவ நெறிகளுக்கும் அவை புறம்பாகின. ஆகச் சாத்தனுக்கும் வேதமறுப்புக் கொள்கைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு தென்படுகிறது. இதெல்லாம் அறியாது, மெய்யியலும் புரியாது, காலங் காலமாய் நம் சாத்தார மக்கள் ஐயனாரை வழிபட்டு வந்ததில் ஒன்றும் வியப்பில்லை. இன்றுங்  கூட புத்த, செயின நெறிச் சாவகர்,  புத்த, செயினக் கொள்கைகளை அரை குறையே தெரிந்து வைத்து இருந்தாலும், புத்தர், மகாவீரர் வழிபாட்டில் ஒருநாளும் குறையார். அதேபோல் நம்மூர் மக்கள் ஐயனார் வழிபாட்டில் என்றுங் குறை வைத்தது இல்லை. அவருக்கு ஐயனார் கோயில்களின் தொடர்பான கொள்கை தெரியாமல் இருக்கலாம். சரி, இனிமேல் வேதமறுப்பிற்கு வருவோம்.

பொ.உ.மு. 600 அளவில் புத்தரையும், மகாவீரரையும் தவிர்த்து, இன்னும் ஐவர் வேதத்தை மறுத்துப்பேசினார். அந்த வேத மறுப்பு நெறிகள், கடவுள் மறுப்பு நெறிகளுமாய் இருந்தன. தம்முள் அவை வேறுபடினும், சில பொதுவான ஒர்மைகளை வேதமறுப்பு நெறிகள் சுட்டின. பொ.உ.மு.500 களுக்கு அப்புறம் வேதமறுப்பு ஆசான்களின் பாதப் படிமங்களை வைத்தும், பின் ஒரு சில  பத்தாண்டுகளில் உருவங்களை வைத்தும் மக்கள் தொழத் தொடங்கினர். கொஞ்சங் கொஞ்சமாய் பள்ளிகள் என்பனவும் கோயிற் கருத்தீட்டிற்குள் வந்தன. இனக்குழுப் படையல்கள், பழக்கவழக்கங்கள், கொண்டாட்டங்கள், நினைவேந்தல்கள் போன்றவையும் வேதமறுப்புச் சமயங்களின் பள்ளிகளில் நடக்கத் தொடங்கின. முடிவில் படிமங்களும் அவற்றில் விதவிதமாய் எழுந்தன.


நிக்கந்த நாதர் (மகாவீரர்), மற்கலி கோசாளர் (மகாவீரர் தவிர்த்த மற்ற தீர்த்தங்கரர் அற்றுவிகத்திற்கும் ஏற்றவரே), பூரணகாயவர் (பூர்ண காசிபர்), பக்குடுக்கை நன்கணியார் (பக்குட கச்சாயனர்), நரிவெரூஉத் தலையார் (அஜிதகேச கம்பலர்), சஞ்சய வேளத்து (சம்சய பேலட்ட) புத்தர், கோதம புத்தர் (முந்தை 23 தீர்த்தங்கரர் பற்றிப் புத்தருங் கூட எந்தக் கேள்வியும் எழுப்பார்) ஆகிய அனைவரும் நாளாவட்டத்தில் ”ஐயன்/ ஆத்தன்/ ஆதன்/ ஆசான்/ஆசன்/ ஆஸ்ரன்/ஆஸ்ரியன்” என அறியப்பட்டார்.  தமிழ்  ”ஐயனும்” பாகதப் ”பகவானும்” ஒரே பொருளன. புத்தருக்கும், மகாவீரருக்கும் இருந்த பகவான்  பெயர் நம்மூரிலும் பரவியது. ஆனால் நம்மூர் ஐயனார் என்றும் ஐயனாரே. அவரின் தமிழ் மூலம் அப்படி.

பொ.உ.மு 600 அளவில் மற்கலி கோசாளர், பூரணகாயவர், பக்குடுக்கை நன்கணியார் ஆகியோருடைய கொள்கைகளை இணைத்து, அற்றுவிகம் (>அத்துவிகம்> அஜ்ஜுவிகம்> ஆஜீவிகம்> ஆசீவிகம்) என்ற பொதுப் பெயர் கொடுத்துச் சிலர் கொள்ளத் தொடங்கினார். (நான் ஆசு+ ஈவு+அகம் எனப்பிரியும் பொருட்கோளை ஏற்றவனில்லை. மதிப்பிற்கு உரிய பேரா. க.நெடுஞ்செழியனோடும் இதில் வேறுபடுவேன். அவரிடமே அதைத் தெரிவித்துள்ளேன். ஆசீவிகச் சொற்பிறப்பைக் கீழே வேறொரு இடத்தில் பார்ப்போம்.) மற்ற இருவரும் (அதாவது பூரண காயவரும், பக்குடுக்கை நன்கணியாரும்) மற்கலியைத் தலைவராய் ஏற்றார். செயின, புத்த ஆவணங்கள் பூரணர், மற்கலியை இரட்டையராகவே சொல்லும். நரிவெரூஉத் தலையரும் (அஜிதகேச கம்பலரும்), சஞ்சய வேளத்தரும் கடைசி வரை எந்தச் சமயங்களையும் நிறுவவில்லை. அவரின் கொள்கைகள் பொதுவாய் மெய்யியலில் மட்டுமே பேசப்படும். நான் கூறிய செயற்பாடுகள் எல்லாம் வடக்கே மகதம் ஒட்டி நடந்ததாகவே ஆய்வாளர் சொல்வர். இந்த 7 பேருமே வடவரா? யாருமே தமிழரில்லையா? - என்பது நுண்கேள்வி. ஆழமானதும் கூட.

இவர் தங்கிய ஊர்களைக் காணின், உத்தர, தக்கணப் பாதை வழிச் சில இயலுமைகள் தோன்றும். சாவத்தி கபிலவாய்த்து, குசிநாரா, வேசாலி, அரசகம் என்பவை உத்தரப்பாதை சார்ந்தன. உஞ்சை, பில்சா, கோசாம்பி, சாகேதம், சாவத்தி ஆகியவை தக்கணப் பாதையில் வருவன. தவிர, காசி, பாடலி ஆகியவை அரசகம், கோசாம்பியோடு தொடர்புற்றன. இவ் ஊர்களிலேயே  மற்கலியும், மகாவீரரும், புத்தரும், தம் சாவகரை பெரிதும் வழிநடத்தினர். சாவத்தியில் தான் உத்தர, தக்கணப்பாதைகள் சந்தித்தன. தவிர தக்கணப் பாதையின் முடிவிடம் சாவத்தியே. எனவே வணிகச் சாத்தின் வழி தமிழகத்தில் இருந்து புறப்பட்டவர் தகடூர், கர்நாடக ஐம்பொழில் வழி படித்தானம் போய், அங்கிருந்து சாவத்திக்குப் போய்ச் சேர்வது எளிதே. சேரரின் குட/ கொங்கு வஞ்சி, மதுரை, உறையூர்/புகார் ஆகியவற்றிலிருந்தும் தகடூருக்குச் செல்வது கடினமில்லை. புத்தரும் மகாவீரரும் பலகாலம் உறைந்த சாவத்தியில் தமிழர் கணிசமாய் வாழ்ந்து இருக்கலாம் என்றே தோன்றுகிறது.  சாவத்திக்கும் நம் ஐயனாருக்கும் ஏதோவொரு உறவிருந்ததோ என ஐயுறுகிறோம். அடுத்த கேள்வி - சாத்தனின் சொந்தவூர் எது? - என்பதாகும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: