Sunday, January 26, 2020

பாசண்டச் சாத்தன் - 18

பெரிய புராணம் என்பது கி.பி.1135 இல் 2 ஆம் குலோத்துங்கன் காலத்தில் பரவியிருந்த 63 நாயன்மார் பற்றிய வாய்மொழிக் கதைகளைச் சொல்வது ஆகும். இதுபோல் பொதுமக்களின் செவிவழிக் கதைகளைச் சொல்லும் இலக்கியங்களில் பொதுப்புத்தியின் மிகைக் கற்பனையும், ஆசிரியரின் புனைதிறமும் சேர்ந்துகொள்வது இயல்புதான். கொஞ்சம் உண்மை கொஞ்சம் புனைவு. (பல நேரம் சிவநெறியாளர் இவ்வடிப்படையை மறந்து விடுகிறார். பெரியபுராணம் என்பது revealed truth போல எண்ணும் போக்கு  சிலரிடமுள்ளது. அப்படியிருக்கத் தேவையில்லை.) பெரிய புராணக்  கதைத் தலைவரான சுந்தரரின் வாழ்வை (கி.பி 694-712) விவரிக்கும் போது இடை யிடையே மற்ற நாயன்மார் கதைகளும் வந்து சேரும். அதிலொன்று சற்று பெரிதான கழறிற்றறிவார் நாயனார் புராணம் எனப்படும் 43 ஆம் புராணம் ஆகும்.  சுந்தரர் கதை நடந்த காலத்திற்கும்  பெரிய புராணம் என்ற இலக்கியம் எழுந்த காலத்திற்கும் இடையே ஏறத்தாழ 423 ஆண்டுகள் ஆகின. இதனூடே பல்லவர் ஆட்சி மங்கி பெருஞ்சோழர் ஆட்சி ஊடுவந்து பின் பிற்காலத் தெலுங்குச் சோழர் ஆட்சியும் வந்துவிட்ட காலம். எனவே கற்பனை சற்று அதிகமாய் இருக்கும். இனி கழறிற்றறிவார் கதைக்கு வருவோம்.

நின்றசீர் நெடுமாறனெனும் மாறவர்மன் அரிகேசரியின் சமகாலத்தில் (கி.பி.640-670), சேரநாட்டில் ஆண்டுவந்த ”செங்கோல் பொறையன்” திடீர் எனத் துறவுகொள்ள விழைய, அவன் அமைச்சரும்  சான்றோரும் (ஏற்கனவே சிவப்பணியில் இருந்த) இளவரசன் மாக்கோதையை அரசப்பொறுப்பு ஏற்கும் படி அறிவுறுத்த, இறைவன் வழிகாட்டலின் பின், அவன் அதற்கொப்பி, முடி சூடி, சேரமான் பெருமாள் ஆகிறான். முடிசூட்டு நாளில் இறைவனை வணங்கி மாக்கோதை திரும்புகையில், தோளில் உவர்மண் மூட்டை சுமந்து வரும் வண்ணாரைப் பார்க்கிறான். மழையில் உவர்மண் கரைந்து வண்ணார் மேனி வெளுத்துச் சிவனடியார்போல் காட்சியளிக்க,  மாக் கோதை  வண்ணாரை வணங்கித் ”தான் அடிச்சேரன்” என நெகிழ்ந்து நிற்க, “தான் அடிப்பணியாள்” என வண்ணார் சொல்ல, “நீறு பூசிய அடியாராகவே நீர் இல்லாவிடினும் அப்படி எண்ணும்படி எனக்கு நினைவூட்டினீர், என் நிலை உணர்வேன், வருந்தாது செல்க” என வேந்தன் மறுமொழித்து மாளிகையுள் புகுவான்.

சிவப்பணியையும் அரசுப்பணியையும் சேர்ந்துசெய்த சேரமான் பெருமாள், பாண்டியன் நெடுமாறனுக்கு அடுத்துவந்த கோச்சடையன் இரணதீரன் காலத்தைச் (கி.பி.670-710) சேர்ந்தவனாவான். அரசனின் இடைவிடா இறைப் பணியை  மெச்சிய தில்லைக்கூத்தன், ஒவ்வொருநாளும் பூசை-அர்ச்சனையை அரசன் முடிக்கும் நேரத்தில் தன் காற்சிலம்பொலி அரசனுக்குக் கேட்கும்படி அருள் செய்தான். இதனைப் ”பரிபுரக் கம்பலே இருசெவி யுண்ணும் குடக்கோச் சேரன்” என்று கல்லாடம் சிறப்பித்துக் கூறும். தம்மிடம் வந்த அடியாருக்கும் வறியவருக்கும் வேண்டிய உதவிகளை அரசன் தொடர்ந்து செய்து வந்தான்.  தன் ஆட்சியில் வதியும் உயிர்கள் தமக்குள்ளே பேசுவன (கழறிற்று) எல்லாவற்றையும் அறியும் திறனை இறைவன் அருளால் சேரன் பெற்றிருந்த காரணத்தால், சேரமான் பெருமாளுக்கு ”கழறிற்று அறிவார் நாயனார்” எனும் பெயருமுண்டாயிற்று.       

இந்நிலையில், இசைப்பாக்களால் தமைத் துதித்துவந்த பாணபத்திரருக்கு பெருஞ்செல்வம் அளிக்க விரும்பிய ஆலவாய்ச் சொக்கன், பாணபத்திரர் கனவில் எழுந்தருளி, “நம்மைப் பரவும் சேரமான் பெருமாளிடம் நான் ஈயும் ஓலையைக் கொண்டுசேர்த்தால் அவன் உனை இனிதே புரவுவான்” என உரைத்து மறுநாள் காலை “மதிமலி புரிசை...” எனத்தொடங்கும் ஓலை  தந்து அருள்கிறார்.

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால் நிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆலவாயின்
மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்

பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
ஒருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க

பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்ல்
மாண்பொருள் கொடுத்து வர விடுப்பதுவே.

இப்பாடல் 11 ஆம் திருமுறையில் திருமுகப் பாசுரம் என்ற தலைப்பின் கீழ் உள்ளது. ஓலையைத் தலைமேல் தாங்கிய பாணர் சேரநாட்டிற்கு ஏகித் தன்வருகையைச் சேரனுக்கு அறிவிக்கிறார். அதைக் கேட்டு நெகிழ்ந்த சேரன், திருமுகத்தை வாங்கிப் பாணபத்திரர்க்குப் பெருஞ்செல்வத்தையும் தன் ஆட்சியையுமே ஈய முன்வருகிறான். பாணர் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, சேரனே ஆட்சியையும், அங்கங்களையும் வைக்கப் பணித்து மதுரை திரும்புவார்.  பாணபத்திரர் பற்றிய இன்னுஞ்சில செய்திகள் சிற்சில வேறுபாடுகளுடன் பெரும்பற்றப் புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் பாடிய திருவிளையாடற் புராணங்களில் புனைந்து கூறப்படும். ஏமநாதனோடு இசைப்போட்டி நடந்தது, மழையில் யாழ்நனைந்து கட்டழியாதபடி காக்க, இறைவன் பொற்பலகை தந்தது, பாடினியின் இசைப்போட்டியில் உதவியதென எழும் கதைகளைச் சேர்த்துப் பார்க்கையில், பாணபத்திரர் உண்மையிலேயே இருந்தாரா என்பதும் கேள்விக்குறியே. திருவிளையாடற் புராணங்களில் வரும் பாணபத்திரர் எக்காலம் என்பதும் நமக்கு விளங்கவில்லை.



சரி, சேரமான் பெருமாள் கதையைத் தொடர்வோம். காலகாலமாய்ப் பூசைமுடிவில் கேட்கும் சிலம்பொலி ஒருமுறை கேளாது போகையில், “தான் என்னபிழை செய்தோம்?” என்றழுது, தன் வாளை மார்பிலே பாய்ச்ச முற்படுகையில், இறைவன் சிலம்பொலியை அதிகமாக்கிக் காட்டுவார். “ஒலியருளச் சுணக்கம் ஏன்?” எனச் சேரன் வினவியபோது, “ தில்லை அம்பலத்தில் ஆரூரன் பதிகங் கேட்டதில் சுணக்கம் ஏற்பட்டதாய் உருவற்ற இறைவன் குரல் கேட்கும். ”தன்னைவிட பெரியவரான ஆரூரரைப் பார்க்க வேண்டும், பெரும்பற்றப் புலியூரில் பொன்னம்பலம் காண வேண்டும்” என்ற விழைவில் சேரமான் பயணந்தொடங்குகிறான். போகும் வழியில் அடியார்க்குப் பணிவிடைகளும் உதவிகளும் நடக்கின்றன. முடிவில் காவிரி கடந்து பெரும்பற்றப் புலியூர் வந்து,  பொன்னம்பலக் கூத்தனின் திருநடங் கண்டு களித்து, பொன்வண்ணத்து அந்தாதியைப் பாடுகிறான். இந்நூல் 11 ஆம் திருமுறையில் இருக்கிறது. அந்தாதி கேட்ட கூத்தன் வழக்கமான சிலம்பொலியைச் சேரன் கேட்கும்படி எழுப்புகிறார். அங்கே சிலநாட்கள் திருக்களிற்றுப் படியின் கீழ் தங்கி கூத்தனை வணங்கிய சேரன் பின் திருவாரூருக்குப் புறப்பட்டான்.

அன்புடன்,
இராம.கி.

No comments: