Thursday, January 30, 2020

பாசண்டச் சாத்தன் - 21

சங்ககாலத்தின் பின் களப்பிரர் காலத்தில் புத்தமும், செயினமும் நம்மூரில் அரசப் புரவலைப் பெற்றன. (அச்சுத விக்கந்தன் போன்ற களப்பிர அரசர் இதற்கு எடுத்துக் காட்டு.). (பரதவாய/பரத்வாஜக் கூட்டம் என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக்கொண்ட) பல்லவரின் ஆட்சித் தொடக்கத்தில் புத்தம் குறைந்து செயினம் பெருமதிப்பு பெறத் தொடங்கியது. அதே போது ஆந்திரத்திலும் இலங்கையிலும் புத்தம் பெருகியது. களப்பிரர் காலத்திலும், பல்லவரின் தொடக்கத்திலும், சிவ, விண்ணவ நெறிகள் நம்மூரில் குறைந்தே புரக்கப் பட்டன. வட புலத்தில் தன்னோடு தீவிரமாய்ப் போட்டியிட்ட புத்தமும், செயினமும் தெற்கிலும் புகுந்து இங்குள்ள அரசர்களைத் தம் வயம் ஈர்க்கத் தொடங்கியதால், அற்றுவிக நெறியின் இருப்பு  பெரிதும் சிக்கலுக்கு உள்ளானது. உள்ளூரில் தம்மோடு உடன்பிறந்த சிவ, விண்ணவ நெறிகளோடு ஒன்றாய்க் கலந்துவிடுவதே தமக்கு நல்லதென்ற நிலைக்கு அற்றுவிகர் தள்ளப்பட்டார்.

பெரும்பாலும் களப்பிரர் காலத்தில்,  ஐயனார் கோயில்களுக்குள் இலிங்கங்கள் நுழைந்திருக்கலாம். தவிர, ஐயனாரின் ஓக நிலையும் தக்கண மூர்த்தியோடு ஒன்று சேர்த்துப் பார்க்கப்பட்டது.  ஒரு சில கோயில் கருப்பருக்கு நாமமும் போடத் தொடங்கினார். கருப்பன்/கண்ணன்/இராமன் என்ற  கருத்துத் தொடர்பு கூடியது (அழகர் கோயில் கோபுர வாசலுக்கு அருகில் இன்றுள்ள 18 ஆம் படிக் கருப்பர் திருநிலை இப்படிக் கிளைந்ததே.) அற்றுவிகச் சார்வகர்  சிவ, விண்ணவ நெறிகளுக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் இணையத் தொடங்கினார். அற்றுவிகக் கருத்துகளும் உள்ளூர் நெறிக் கருத்துகளும்  கலந்து இழையத் தொடங்கின. இதன் மூலம், அற்றுவிகம் தன்னை ஓரளவு உருமாற்றிக் காத்துக்கொண்டது. இதன் வெளிப்பாடே மேற்கூறிய அப்பர் தேவாரம்.

அதேபோது எல்லா அற்றுவிகரும் சமதானம் பண்ணிக்கொண்டாரா எனில் இல்லை. சிலர் தனிநிலை நீட்டித்திருந்தார். பின் ஏற்பட்ட அழுத்தத்தால் செயினத்திற்கு மாறி, “அமணர்” எனப்பட்டவரும் உண்டு. (புத்தத்திற்கு  நகர்ந்தவருமுண்டு.)  கி.பி. 13 ஆம் நூற்றாண்டு ”சிவஞான சித்தியார்” செயின, அற்றுவிகரைத் தனியே வைக்காது கலந்தே பேசும். மொத்தத்தில் அற்றுவிகர் எண்ணிக்கை பத்திக் காலத்தில் பெரிதும் குறைந்துபோனது. இன்னுஞ் சொன்னால், குண்டலகேசிக்கு மறுப்பான, களப்பிரர் காலத்தைய, நீலகேசிக்கும் பின் அற்றுவிகரின் தனியிருப்பு  இல்லையெனலாம். அப்படி யெனில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் அற்றுவிகம் ஏறத்தாழக் குலைந்துவிட்டது போலும்.  அற்றுவிகப் பாழிகளாய் முன்னிருந்தவை எல்லாம்,  சம்பந்தர் காலத்தில் பொது அமணர் பாழிகளாய்ப் பார்க்கப் பட்டதை பெரிய புராணத்தின் திருஞான சம்பந்தர் புராணம் 2769 ஆம் பாடலால் அறியலாம்.     

பூழியன் மதுரை யுள்ளார் புறத்துளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக் கிளரொளித் தூய்மை செய்தே
வாழிஅப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்.

ஒருசில ஆய்வர் “அமணர் சேரும் பாழி”யை, “அற்றுவிகப் பாழி” எனப் பொருள் கொள்வர். இப்புராணத்தை முழுக்கப் படித்தால், அப்படித் தோன்ற வில்லை. [ பாழி= அமணர் தங்கிய குகை; பள்ளி = அருகர் /தீர்த்தங்கரர் படிமங்களுள்ள கோயில்.] 6 ஆம் நூற்றாண்டில் (இராயல சீமையிலிருந்து தமிழகம் நகர்ந்த) பல்லவர் தொண்டைநாட்டில் நிலைபெறுகிறார். சோழ நாட்டின் பெரும்பகுதியும்  கைக் கொள்கிறார். 7 ஆம் நூற்றாண்டு அப்பர், சம்பந்தர் காலத்தில்,  மகேந்திரவர்மனும், பிற்றைப் பல்லவரும் சிவ, விண்ணவ நெறிகளுக்கு மாறுகிறார். “பத்திக் காலத்தில் அற்றுவிகம் பேரளவில் இங்கில்லை” என்பதே என் புரிதல். புதுத் தரவுகள் கிடைத்தால் ஓர்ந்து பார்க்க அணியமாயுள்ளேன். ஆக, அற்றுவிக நிலைப்புக் காலம் கி.மு. 600 - கி.பி  600.  மொத்தம் 1200 ஆண்டுகள் மட்டுமே  தெற்கே அது இருந்தது. வடக்கே இதற்கும் குறைவான காலம் தான் இருந்துள்ளது. இப்புரிதலோடு திருப்பிடவூருக்கும், அதன் ஐயனார் கோயிலுக்கும்  போவோம்.

அங்குள்ள எல்லாக் கோயில்களுக்கு முன்,  ஒரு நடுகல் போலவே சங்க காலத்தில் தொடங்கி, நக்கீரர் (கி.மு. 2 ஆம் நூற்.) பாடும்போது நடுகல்லின் நீட்சியாய் ஐயனார் கோயில் உருவாகியிருக்கலாம்.  நாகரிக வளர்ச்சிக்குத் தக்க, அவ்வப்போது ஐயனார் கோயிலின் மூலப்படிமம்  உருமாறி இருக்கலாம். கூகுள் முகப்பைப் (map)பார்த்தால் இற்றைக் கோயில் ஒரு தெற்றியில் (மேட்டில்) அமைந்து இருப்பது புரியும். அதனாற்றான் தெற்றி யுடையான் கோயிலெனப் பெரும்பாலான கல்வெட்டுகளில் சொல்லப் பட்டுள்ளது. அது எப்படி அரங்கேறிய ஐயனார் கோயிலாய் இற்றைப் பேச்சுவழக்கில் மாறியது? கீழே வருவோம். (அதேபொழுது ஊர்நினைப்பை விடாது, திருமண் தவமுடையான் என்ற பெயரும் தொடர்ந்துள்ளது.)

களப்பிரர் காலத்தில் வேளிராட்சி குலைந்து, பிடவூர்க் கிழான் குடும்பம் இல்லாது போனது. புரவலனின்றி ஊர்மக்கள் பேணிய ஐயனார் கோயில் மண்தளியாய்த் தொடர்ந்தது, (முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் அது கற்றளியானது).  மாற்றங்கள் நடக்க நடக்க, ஊர்க்கதைகளும் மாறும். தொடர்ந்து அமைதியிருந்தால் மட்டுமே எக்கதையும் நிலைக்கும்  ”கதிர் ஒன்பது” என்ற விதப்பான பெயர்கொண்ட மற்கலி நூல் பிடவூர் மக்களுக்கு இம்மாற்றங்களால் மறந்தே போயிருக்கலாம். ஆனாலும் தம் ஊர்ப் பெரு மகன் ஏதொவொரு முகன நூலைச் செய்தான் என்பது பொதுப் புத்தியில் பதிந்திருக்கும். இந்நிலையில் களப்பிரரைத் தோற்கடித்த பல்லவரும் பாண்டியரும் சோழநாட்டைத் தமக்குள் பங்கிட்டார். (களப்பிரரின் பெரு வாரி ஆட்சிநிலம் பழஞ்சோழநாட்டில் இருந்தது. ) காவிரி வடகரை பல்லவருக்கும், தென்கரை பாண்டியருக்குமானது. பல்லவர் வீச்சு அவர் நாட்டின் தென்னெல்லையான பிடவூர் வரை இருந்தது.

வேண்டியவரை நாட்டெல்லையில் குடியேற்றி, ஏதோவொரு முறையில் நிலங்களை அவர்க்கு மாற்றிக்கொடுப்பது ஆட்சியாளரின் பொதுவியல்பு. பிடவூர், வெள்ளறை, சிராப்பள்ளி போன்றவற்றில் பெருமானர் குடியிருப்பு இப்படி ஒரு முறையில்  உருவானது தான், ஏனெனில் அவர் அரசிற்கு ஆதரவாய் இருப்பாரென்று பல்லவர் எதிர்பார்த்தார். சிவபெருமானக்கென உருவான பிடவூர்ப் பிரம தாயம், விசயாலய சோழனுக்கு (கி.பி. 848-871) முன், எதோவொரு பல்லவன் ஆணையால் உருவாகியுள்ளது.  எந்தப் பல்லவன் இதுசெய்தான் என்றறிய சான்றெதுவும் கிட்டவில்லை.  ஆனாலும் இங்கு உள்ள முதற் சிவன்கோயிலான கயிலாயநாதர் கோயில் பெரும்பாலும் இராசிம்மன் ஆணையால் கட்டப்பட்டது உறுதி.  இப்பிரமதேயம் சுந்தரர் காலத்திற்குச் (கி.பி.670-710) சற்று பின்னால் எழுந்து இருக்கலாம்.  கி,பி, 710 இலிருந்து கி.பி. 850 வரை 140 ஆண்டுகள் இடைவெளி காட்டும். இதில் 100 ஆண்டுகளாவது பல்லவர் நிர்மாணித்த பிரமதேயம் இருந்திருக்குமென்றே அனுமானிக்கிறோம்.

பல்லவர்க்குப் பின், சோழப்பேரரசில் இப்பிரமதாயம் நெடுங்காலம் தொடர்ந்தது. பிரமதேயத்தால் வந்திறங்கிய சிவப்பெருமானர் தமக்கு முன்னிருந்த ஐயனார் வழிபாட்டை ஏற்றுள்ளார்.  இவ்வூரில் தமக்கு முன் பிறந்த வேளிர்மகனே ஐயனார் என்பதையும், பிடவூர் நாடு சோழநாட்டில் முகன்மைக் குறுநிலம் என்பதையும், உறையூரோடு (பெருஞ்சோழரின் இறுதிவரை தஞ்சாவூர், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய வற்றோடு சங்ககாலப் புகாரும், உறையூரும் அரசாங்க நகர்களாய் தொடர்ந்து இயங்கின. கல்வாரி, மண்வாரியடித்து  உறையூர் அழிந்ததைப் 12 ஆம் நூற். தக்க யாகப் பரணியின் உரை பேசும்) பிடவூர் பிணைக்கப் பட்டதையும் சிவப்பெருமானர் நன்றாயறிவார்.  சாத்தன் இயற்றிய ”கதிர் ஒன்பது” என்ற நூற்பெயர் தெரியாவிடினும்  ஐயனாருக்கும் ஒரு பழஞ்சமய நூலுக்கும் தொடர்புண்டென அவர் அறிவார். ஆனால் அற்றுவிகச் சமயத்தை எல்லாப் பெருமானரும் அறிந்திருக்க மாட்டார். செயினத்தோடு அவர் குழப்பிக் கொள்ளத் தான் செய்வர்.

பெரியபுராணத்தின் வெள்ளானைச் சருக்கம் சிவப்பெருமானருக்குள் இருந்த தொன்மத்தைக் குறிக்கிறதென்றே சொல்லலாம்.  அதிலிருக்கும் ஒருசில குறிப்புகள் அப்படி எண்ண வைக்கின்றன. கொடுங்களூரிலிருந்து கயிலாயம் புறப்பட்ட சுந்தரும் சேரமானும் முறையே ஏழிசைப் பதிகமும் திருகயிலாய ஞானவுலா இயற்றியதும் திருமுறையைத் தொகுக்கும்போது வெளிப்பட்டிருக்கும். சுந்தரர் பதிகத்தை திருவஞ்சைக்களத்தில் வாரணன் வெளியிட்டதாகவும், சேரமான் நூலைத் திருப்பிடவூரில் சாத்தன் வெளியிட்டதாகவும் சொல்வது ஏதோவொன்றை அறியாது பொதுப்புத்தியில் குழம்பிப் பொருந்தப் புகல்வது போல் தோன்றுகிறது. முதலில் திருவஞ்சைக் களம் போவோம்.


வருணன் வழியாக ஏழிசைப் பதிகம் கொடுங்களூரில் வெளிப்பட்டிருந்தால், ஏழிசைப் பதிகமும், திருவஞ்சைக்களப் பதிகமும் ஏதோவொரு திரிந்த வடிவில் மலையாளத்தில் இருந்திருக்க வேண்டுமே? ஏன் அங்கு இல்லை? தமிழ்வடிவம் மட்டுமே நமக்குக் கிடைக்கிறதே? அங்குள்ளவரின் பொதுப் புத்தியில் இன்று வரை ஏன் அது தங்கவில்லை?. இவை தமிழ்நாட்டில் மட்டுமே புரக்கப் பட்டது போல் தெரிவதன் காரணம் என்ன? தவிர வெள்ளானையை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? (கவரிமா அறியாது கவரிமான் என்றே நம்மூர்ப் பொதுப்புத்தியில் நெடுநாள் இருந்ததுபோல் வெள்ளாணையும் இருந்ததை அடுத்துப் பார்ப்போம்.) எல்லாப் படங்களிலும்.”வெள்ளை நிற யானை” என்றே காட்டப்படுகிறதே? அது ஏன்? கருப்பு யானையைக் காட்டிலும் வெள்ளாணை உயர்த்தியா? நமக்குள் ஏன் கருப்பு/ வெள்ளைத் தாழ்வு மனப்பான்மை இழைந்தோடுகிறது? இந்திரன் யானை = ஐராவதி என்ற வெள்ளானை; சூரசம்மாரத்திற்கு முன் முருகனின் வாகனம் = பிணிமுகம் எனும் வெள்ளானை;  சாத்தனின் யானை = வெள்ளானை. சுந்தரர் கயிலாயம் போனதும் வெள்ளானை. அப்படி வெள்ளானை என்பது உண்மையிலேயுண்டா?  அன்றி அது கற்பனையா?

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Anonymous said...

ஆஜீவிகர் என்பவர்தான் அற்றுவிகரா? I am an independent researcher in the Cultural History of India. Came across your blog while researching 9 kathir. Would like to discuss and understand your historical perspective in the blog. My number is 9790886293. Can I call you?
I am in Pondicherry. 88yrs old. Retired as Joint Secretary to the GOI in 92. Have uploaded a few chapters of my work in Academia.edu. Accessible under my profile therein.
Look forward to hearing from you.
Vanakkam. And many thanks for an illuminating blog.