Sunday, January 26, 2020

பாசண்டச் சாத்தன் - 19

சேரன் தான்போகும் வழியில் சம்பந்தரின் சீகாழியையும் , இன்னும் பல கோயில்களையுங் கண்டு, முடிவில் காவிரித் தென்கரை அடைந்து ஆரூர் செல்கிறான். திருநாகைக் காரோணம் சென்ற ஆருரரும் திருவாரூருக்குத் திரும்பிவந்து சேரமானை எதிர்கொள்கிறார். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நட்பு பாராட்டிக் கொள்கிறார். இந்நட்பு இருவரின் வாழ்நாள் முழுதும் நீள்கிறது. இதனாலேயே சுந்தரருக்குச் சேரமான் தோழரென்ற பெயருண்டு.  ஐயனார் கோயில் முதற் சுற்றாலையில், ஜடாவர்மன் வீரபாண்டியன் காலத்தைய (கி.பி. 1277) 19 ஆம் கல்வெட்டில் (ARE 589/1908) ஒப்புகை கொடுத்ததாய், ”மேலைசூருடையான் சேரமான்தோழன்” என்றபெயர் வருமெனக் கட்டுரை 16 ஆம் பகுதியில் குறித்ததை நினைவுகொள்க. ”சேரமான் தோழன்” என  மேலைசூருடையானுக்கும் வாய்த்ததெனில், சேரமான் கதை பிடவூர் நாட்டில் பெருவலமானதைப் புரிந்துகொள்ளலாம். 

இருவரும் ஆரூர்க்கோயிலில் இறைவனைத் துதித்தபோது, ”திருவாரூர் மும்மணிக்கோவையை” சேரமான் பாடுகிறான். இந்நூலும் 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. இருவரும் பரவையார் மாளிகைக்கு வருகிறார். பரவையாரைத் திருவமுது படைக்கும்படி சுந்தரர் சொல்ல, அவர் கணவருக்கு ஓரிடத்திலும், சேரமானுக்கு மற்றோரிடத்திலும் இலை பரப்புகிறார். இதுகண்டு அதிர்ந்துபோன சுந்தரர் ”தன்னோடு சேரமான் ஓரிடத்தில் சேர்ந்தே உண்ணவேண்டும்” என அழுத்திக்கேட்கச் சேரமானும் இசைகிறார். (7 ஆம் நூற்றாண்டிலேயே சாதிக்கொடுமை தமிழ்க் குமுகாயத்தில் உள்வந்த நிகழ்வு இங்கே வெளிப்படுகிறது.)  சுந்தரர் தந்த திருநீற்றை ஏற்று, பின் அவர்காலில் விழுந்து சேரமான் வணங்குகிறான்.

வீதிவிடங்கப் பெருமானைப் பலநாட்கள் சேவித்த இருவரும் மதுரைக்கும், மற்றவூர்களுக்கும் போகவிழைகிறார். போம்வழியில் கீழ்வேளூர், நாகைக் காரோணம், மறைக்காடு, அகத்தியான்பள்ளி எனும் கோடிக்கரை, திருப் புத்தூர் போன்ற கோயில்களில் சேவித்து மதுரையடைகிறார். ஏற்கனவே அங்கிருந்த கோச்சடையன் இரணதீரனும், அவன்  மருமகனான சோழனும் (நின்றசீர் நெடுமாறன் தேவி மங்கையர்க்கரசியின் சோதரன் பெயரன். பெரியபுராணப் படி இரணதீரனின் மகளை மணந்தவன். விசயாலயச் சோழனுக்கு (கி.பி. 848-871) 138 ஆண்டுகள் முந்தையன். பொதுவாய்ச் சங்க காலத்தின் பின்னால், பெருஞ்சோழருக்கு முன்னால், வரும் இடைக்காலச் சோழர் செய்திகளைத் தமிழ் வரலாற்றில் தேடவேண்டியுள்ளது. பெரும்பாலும் கிடைப்பதில்லை.) சுந்தரர், சேரமான் ஆகிய இருவரையும் பாண்டியன் வரவேற்கிறான். சுந்தரரும் மூவேந்தரும் சொக்கன் - கயற் கண்ணியைத் தொழுகிறார். சொக்கன் அளித்த திருமுகத்தை அக்கணம் எண்ணிச் சேரன் துதிக்கிறான்.

பின் சுந்தரரும் சேரமானும் பூவனம், ஆப்பனூர், வேடகம், பரங்குன்றம்,  குற்றாலம், நெல்வேலி, இராமேச்சுரம் (அங்கிருந்த வாக்கில் கேதீச்சுரம்), சுழியல், கானப்பேர், புனல்வாயில், பாம்பணி பாதானீச்சுரம் ஆகிய கோயில்களில் வணங்கி திருவாரூர் திரும்புகிறார். சிலநாட்களின் பின் சேரமானோடு சுந்தரர் மேற்கே நகர்கிறார். வழியில் கண்டியூர், ஐயாறு போய்,  கொங்குநாடு போய், முடிவில் கொடுங்கோளூர் அடைகிறார். பின் திருவஞ்சைக் களத்தில் தொழுது, சேரன் மாளிகையை அடைகிறார். சிலகாலம் சேரரொடு தங்கியிருந்த சுந்தரர், திருவாரூரை எண்ணிப் புறப்படுகிறார். சேரமான் பல்வேறு செல்வங்களைச் சுந்தரர்க்குப் பரிசாகக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். திரும்பும் வழியில் திருமுருகன் பூண்டியில் சுந்தரர் வழிபட்டு, திருவாரூருக்குத் திரும்புகிறார். இத்தோடு கழறிற்றறிவார் புராணம் முடிகிறது. அடுத்து வெள்ளானைச் சருக்கத்திற்கு வருவோம்.

இச் சருக்கத்தில், மீண்டும் சேரமானைக் காணச் சுந்தரர் விழைகிறார். போகும்வழியில் திருப்புக்கொளியூர் (அவிநாசி) சென்று அங்கு முதலை விழுங்கிய 5 வயது அந்தணச் சிறுவனை 2 ஆண்டுகள் கழித்து மீளக் கொணர்ந்து விட்டுப்போன பூணூலணி மங்கலத்தை நடத்துகிறார். பின் மேற்குப் பதிகளைத் துதித்துவண்ணம், கொடும்பாளூர் சேர்கிறார். சேர மானோடு மலைநாட்டுப் பதிகளுக்குச் செல்கிறார். ”இவ்வுலக வாழ்க்கை துறந்து கயிலாயம் போகச்” சுந்தர் விழைய, அதே தருணத்தில் முந்தைச் சிவகணமான ஆலாலசுந்தரர் கயிலாயம் திரும்பும் காலம் நெருங்கியதால், சுந்தரரைக் கூட்டிவர, வெள்ளானையைப் பரிவாரங்களோடு இறைவன் அனுப்புகிறார். அவை கொடுங்கோளூர் வந்து சேரன் மாளிகையை அடைகின்றன.  இறைவன் ஆணையேற்று வெள்ளானையில் சுந்தரர் ஏறிக் கயிலாயம் கிளம்புகிறார். கிளம்புமுன் சேரமானை எண்ணுகிறார்.

தம்பிரான் தோழரின் செயலறிந்த சேரன் தம் பந்தியில் (=லாயம்) நின்ற குதிரையில் ஏறித் திருவஞ்சைக்களம் சாரும் போது சுந்தரரின் வெள்ளானை வானம்வழி போவதைக் காண்கிறான். குதிரைக் காதில் அஞ்செழுத்தோதக் குதிரை பறக்கிறது. சுந்தரர்கூடவே சேரமானும் கயிலாயம் போகிறான். சேரனின் வீரர்சிலர் தம் உடலை வீழ்த்தி சேரனோடு சேர முற்படுகிறார். கயிலையின் தெற்குவாயிலை அடைகிறார்.  சுந்தரரை அனுமதிக்கும் திருவணுக்கர் சேரனை வாயிலில் நிறுத்திவிடுகிறார். உள்ளே சுந்தரர் அம்பலவாணரைத் தொழுது வணங்குகிறார். “நம்பி ஆரூரா! உலகுய்ய வந்தனையோ?” என்று இறைவன் கேட்கிறார். தம் பிழை பொறுத்து அருளியமைக்கு ஆரூரர் நன்றிசொல்லி, தெற்குப்புறவாயிலில் சேரன் நிற்பதைச் சொல்கிறார். சேரனை அழைத்துவர நந்தியார் பணிக்கப் படுகிறார்.  உள்வந்த சேரனிடம், “நாம் அழைக்காமல் நீ இங்குவந்த காரணம் யாது?” என இறைவன் கேட்கிறார். “அடியேன் நம்பியாரூரார் திருவடிகளைத் தொட்ர்ந்து வந்தேன். தங்களின் அருள் என்னை உந்தி இங்கு கொணர்ந்தது” என மறுமொழித்த சேரன் மேலும் ஒரு விண்ணப்பம் விடுக்கிறான்.

”அன்பினால்  தங்கள் மேல் பாடியத் திருவுலா பாட்டைத் தாங்கள் கேட்க வேண்டும்” என்கிறான். ”கூறுக” என்று இறைவன் சொல்ல, “திருக்கயிலாய ஞான உலா” என்றநூல் எழுகிறது. சேரமான் நூலேற்று, அவர் இருவரையும்  சிவகணங்களுக்குத் தலைமையேற்றுத் தங்க இறைவன் அருள்செய்கிறார். ஏற்கனவே  பரவையார் (கமலினியார்), சங்கிலியார் (அனிந்திதையார்) ஆகியோர்  பார்வதி அம்மையாரின் தொண்டில் ஈடுபடுகிறார். வரும்வழியில் சுந்தரர் பாடிய ஏழிசைப் பதிகத்தைப் பரவச்செய்யும் படி வாரணன் (கடல் தெய்வம்) பணிக்கப் படுகிறான். அவன் திருவஞ்சைக்களத்தில் அதைச் செய்கிறான். சேரமான் நூலோ, பெரியபுராணத்தின் படி, வேறு வகையில் உலகோர்க்கு அறிமுகஞ் செய்யப்படுகிறது. அதைப் (4280) பார்ப்போம்.             

”சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அத்திரு உலாப்புறம் அன்று
சாரல் வெள்ளியங் கயிலையில் கேட்ட மாசாத்தனார் தரித்து இந்தப்
பாரில் வேதியர் திருப்*பிடவூர்*தனில் வெளிப்படப் பகர்ந்து எங்கும்
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே”

                                                                         
ஆக, சுந்தரரின் ஏழிசைப் பதிகம் திருவஞ்சைக்களத்தில் வாரணன் மூலம் உணர்விக்கப் பட்டது. சேரமானின் திருக்கயிலை ஞான உலா சாத்தன் மூலம் பிடவூரில் வெளிப்படப் பகரபட்டது. 2 ஆவதை எப்படி, ”அரங்கேறியது?” என்று பிற்காலத்தார் சொன்னார்? - புரியவில்லை. இக்கதைப்படி சாத்தன் ஒரு messenger தானே? பின் எப்படி அரங்கேறிய ஐயனாரென்று சொல்லமுடியும்? ஐயனார் தானே நூல் எழுதி அதை உலகோர்க்கு வெளிபடுத்தினால் தானே அரங்கேற்றம் எனமுடியும்? சரி.  சுந்தரர்-சேரமான் கதையைப் பிடவூருடன் ஏன் பொருத்தினார்? காரணமென்ன? இத்தனைக்கும் சுந்தரோ, சேரமானோ பிடவூருக்கு வந்ததேயில்லை. சுந்தரரால் வைப்புத்தலமாய் மட்டுமே பிடவூர் குறிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பார்வையில் அலசுவதற்கு நிறையவுள்ளது. அடுத்த இடுகையில் காண்போம். 

அன்புடன்,
இராம.கி.

No comments: