இப்பொழுது தஞ்சைக் குடமுழுக்கு நேரம் சிலர் ஏதோ தமிழில் மந்திரங்களே இல்லையென்று சொல்ல முற்படுகிறார்கள். நான் எல்லா மந்திரத்தையும் பேச முற்படலாம். அது வழவழ என்று போகும். முகன்மையான அஞ்செழுத்து, எட்டெழுத்து மந்திரங்களைப் பேசுவோம். நண்பரொருவர் தொலைபேசியில் ஓம் என்பதன் தமிழ்மை பற்றி விவரங் கேட்டார். அப்பொழுது தான் சிலம்பின் ஐயங்கள் என்ற தொடரில் 13, 14 ஆம் பகுதிகள் நினைவிற்கு வந்தன. அதில் இருந்து தேவையானவற்றை இங்கே வெட்டியொட்டியுள்ளேன்.
எல்லா மந்திரங்களும் “ஓம், ஹாம், ஹூம், ஹ்ரீம், சூ, மந்திரக்காளி...” என்று அமைவதாகவே சிறு அகவையில் நாம்பார்த்த கதைப்படங்களாலும் (cartoons), பாட்டிகதைகளாலும், அம்புலிமாமா இதழ்களாலும், பின்னால் திரைப்படம், தொலைக்காட்சிகளாலும் எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் அப்படிக் கிடையாது. பெரும்பாலான மந்திரங்கள், ”என்னைக் காப்பாற்று” என்பதை அடிப்படையாய்க் கொண்டன. தமிழில் ஓம்புதல் என்பது காப்பாற்றலைக் குறிக்கும். விருந்தோம்பல் எனில் விருந்தினருக்கு உணவிட்டுக் காப்பாற்றல் ஆகும். ”தொடர்ந்து துன்பத்திற் சிக்கி நான் வீழ்ந்து வருகிறேன். இதைத் தடுத்து என்னைக் காப்பாற்று”, என்றே மக்களிடம், பெரியவரிடம், தலைவனிடம், எல்லாம்வல்ல இறைவனிடங்கூட, வேண்டுகிறோம். தடுத்தாட் கொள்ளுதலைச் சிவ, விண்ணெறிகளிற் சூழ்க்குமமாய்ச் சொல்வர். உல்> ஒல்>ஒ>ஓ>ஓம் என்பது ”தடுத்தலை” உள்ளடக்கிக் காப்பாற்றும் பொருளைக் காட்டும். ”ஓம்” என்பது முழுக்க முழுக்க நல்ல தமிழ்ச்சொல். அதைச் சங்கதம் என நினைப்பது தவறு. பொதுவாய் 100க்கு 99 மந்திரங்களில் இந்த ”ஓம்” இருந்தே தீரும்.
["எனைக் காப்பாற்று” எனும் மந்திரங்கள் குறைந்தது 5000 ஆண்டுகளாய் நாவலந் தீவில் உள்ளன. சிந்துவெளியில் 2 ”ஒ” எழுத்துக்களில் ஒன்று இன்னொன்றைக் குறுக்கே வெட்டுவதாக்கி, ம் ஒலியை + வடிவாய் நடுவில் வைத்து, மூன்றையும் பிணைத்துச் சுழற்(சுவத்திக)குறி அமைத்தார் என திரு. இரா.மதிவாணன் சொல்வார். அவரை நம்பாதோர் இன்னும் தடுமாறுவார். மதிவாணனோ சிந்துசமவெளி எழுத்தைப் படித்துவிட்டதாய்ச் சொல்கிறார். இப்புலத்தினுள் நான் போக விழையவில்லை. ஓம் என்ற சொல் இங்கு எழுந்ததால் இதைச் சொன்னேன்.]
.
கோவலன் சொல்லும் மந்திரத்திற்கு முன்னர் காடுகாண்காதையின் 128-132
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண்டு ஓதி
வேண்டிய தொன்றின் விரும்பினிர் ஆயின்
காண்டகு மரபின அல்ல மற்றவை
என்ற 128-132 ஆம் வரிகளில் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் பற்றி மாங்காட்டுப் பார்ப்பான் சொல்வான். ஐந்தெழுத்து சிவநெறிக்கும், எட்டெழுத்து விண்ணவத்திற்கும் ஆனதென்றே இற்றைக் காலத்திற் பலருங் கொள்கிறார். ஆனால் மாங்காட்டுப் பார்ப்பானோ (வேதங் கலந்த) விண்ணவ நெறியாளன். அவன் சொல்லும் ஐந்தெழுத்து விண்ணவ மந்திரம் ஆகலாம். வடக்கிருந்து வந்த பார்ப்பனர் சிவ, விண்ணவ நெறிகளோடு வேத நெறி கலந்து தமிழரிடையே புதுநெறிகளை உருவாக்கினாலும், இவற்றின் அடிப்படைகளும் பழம் நடைமுறைகளும், இன்னும் தமிழ் வழியே உள்ளன. ஆழ்ந்து பார்த்தால், சிவ, விண்ணவ மந்திரங்கள் சற்றே ஓசை மாறிய தமிழ் மந்திரங்களே. வடக்கு வேத மந்திரங்கள் இவற்றிலிருந்து வேறுற்றவை. பொதுவாய்ச் சிவனையும் விண்ணவனையும் அவை கூப்பிட்டழைக்கா. (அரிதாய் உருத்திரனையும், விண்ணுவையும் அழைப்பதாய்ச் சில மந்திரங்கள் சொல்வர்.)
.
முதலில் ஐந்தெழுத்து மந்திரம் பார்ப்போம். எல்லாச் சிவன்கோயில் சுவர்களிலும் ”சிவசிவ” என இன்றும் பெரிதாய் எழுதுவர். இதோடு ஓம் சேர்த்தால் நாம் தேடும் ஐந்தெழுத்துக் கிடைத்துவிடும். ”ஓம் சிவசிவ” என்பதே சிவநெறியில் முதலிலெழுந்த ஐந்தெழுத்து மந்திரம். (கட்டளைப் பாக்களில் எழுத்தெண்ணும் போது மெய்யெழுத்தை எண்ணமாட்டார். கவனங் கொள்ளுங்கள் இங்கே ஓம் என்பது ஓரெழுத்து;) ”சிவனே காப்பாற்று” என்பது தான் இம் மந்திரப் பொருள். அதேபோல் ”ஓம் நாராயணா” எனும் ஐந்தெழுத்து மந்திரம் பெருமாள் கோயில்களிலுண்டு. (நாராயணன் நீரில் உள்ளவன் ஆவான் .”நாரணன்” என்ற என் கட்டுரையைப் பாருங்கள். http://valavu.blogspot.in/2009/08/blog-post_28.html
இனிக் குழைதலுக்கும் வணங்குதலுக்குமான சொற்களைப்பார்ப்போம். நுள்>நுள்வு>*நுவ்வு>*நும்மு>நுமு>நமு என்ற சொல் தளர்ந்து, குழைவதைக் குறிக்கும். பொதுவாகக் குழைந்தபொருள் மென்மையாகிப் பின் வளையும், வணங்கும். குழைதற் பொருளில் திருவாய் மொழியின் ஒன்பதாம் பத்தில் ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாம் பாட்டில் (திவ். திருவாய் மொழி 9:9:3)
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்
இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து
துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும்செவ் வாயும், நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளூம்
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ!
என நம்மாழ்வார் நாயகி பாவத்தில் ”நமுதற்” சொல்லின் மூலம் ”என் இணை முலைகள் குழைந்து போயின” என்பார். நமுத்துப்போவதை நமத்துப் போவதாயும் சொல்கிறோமே? ”அப்பளத்தை வெளியே வைத்ததால் நமத்துப் போனது” நமத்துப் போதல்>நமர்த்துப்போதல் என்றும் பேச்சு வழக்கிற் சொல்லப் படும். ரகரமும் லகரமும் பலவிடங்களிற் போலிகள். நமர்த்துப் போதல் நமல்த்துப் போதலும் ஆகும். தான் கொண்ட பற்றியாற் குழைந்து போனவன் இறைவனை வணங்கவே செய்வான். நமுதல் நீண்டு நமல்தல்/நமலுதலாகி வணங்கற் பொருளைக் குறிப்பது முற்றிலும் இயற்கையே. சங்க கால முடிவிலெழுந்த நமல்தல்/நமலுதல் என்ற வினைச்சொல்லிற்கு வணங்குதலென்று பொருள். இதன்காட்டைத் திருவாய் மொழியின் மூன்றாம் பத்தில் மூன்றாம் பதிகத்தில் ஏழாம்பாட்டில் (திவ். திருவாய் மொழி 3:3:7)
”சுமந்து மாமலர் நீர்சுடர் தீபங்கொண்டு
அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
சமன்கொள் வீடு தருந்தடங் குன்றமே”
என்று நம்மாழ்வார் சொல்வார். நமன்றெழும் என்பது ”வணங்கியெழும்” என்று பொருள் கொள்ளும். நமனுதலுக்கும் வணங்கற் பொருளுண்டு. நமனிகை என்பது அடியார் வணங்கும் உட்கருவறை (inner sanctuary). தென்னகக் கோயில் நிருவாகத்தார் யாரும் தேர்ந்தெடுத்த சிலரைத் தவிர மற்றெவரையும் உட்கருவறைக்குள் புகவிடார். தீட்டுப் பட்டுவிடுமென்பார். ஆனால் காச விசுவ நாதர் கோயிலில் (செல்வ வளம், பண்டாரிக்கு நெருக்கம், அதிகாரிகளுக்கு நெருக்கம் என்ற உலக வழக்கம் பொறுத்து) நமனிகைக்குள் யாரும் போய் விசுவநாதனைத் தொடலாம். (நான் தொட்டுள்ளேன்.) பாலால் முழுக்காட்டலாம். வில்வமுமிடலாம். அது பொதுவான வடபுலப் பழக்கம். தென்புலப் பழக்கமோ மிகக் கட்டுப் பெட்டியானது. எல்லோரையும் விடாது.
நுள்ளிலிருந்து உருவான நுமுதல் ஒரு தனிப்பட்ட வளர்ச்சியன்று. அதுபோலப் பல சொற்கள் உள்ளன. நுள்>நுளு>நுழு>நுகு என்ற வளர்ச்சியில் நுகும்பு, நுகை, நுணங்கு, நுடங்கு, நெகு, நெக்கு, நெகிழ், நெளு, நெளி, நொளு, நொய், நொய்வு, நொம்பு, நொம்பலம் என்று பல்வேறு தனிச்சொற்களாலும், கூட்டுச் சொற்களாலும் தளர்ச்சி, குழைவு, இளகு, உருகு, வளைவுப் பொருட்களை உணர்த்தும். 200 சொற்களாவது குறைந்தது தேரும். நமல் நெமலாகி நேமியும் ஆகலாம். அது வளைந்து கிடக்கும் வட்டம், சக்கரத்தைக் குறிக்கும். சமணத்தின் 22 ஆம் தீர்ந்தங்கரர் நேமிநாதர் சக்கரப் பொருளாற் பெயர் கொண்டவர். மதுரைக்கு அருகிலுள்ள ஆனைமலைக் கல்வெட்டில் ”அரிட்ட நேமி” என்ற துறவி பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
”நமல்க” என்ற சொல்லை (நம்மாழ்வாரின் திருவாய்மொழியிற் காணாவிடில் எனக்குக் கொஞ்சமும் விளங்கியிருக்காது. நெடுங்காலம் ”நமக”வைச் சங்கதம் எனவே எண்ணியிருந்தேன்.) ஐந்தெழுத்து மந்திரத்தோடு சேர்ந்தால் எட்டெழுத்து மந்திரங் கிடைத்துவிடும். (கட்டளைப் பாவை மறந்துவிடாதீர். ஒற்றிற்கு மதிப்பு இல்லை என்பதால் மல் என்பது ஓரெழுத்து.)
”ஓம் சிவசிவ நமல்க - சிவனே! (எம்மைக்) காப்பாற்று. (எல்லோரும்) வணங்குக”,
“ஓம் நாராயண நமல்க - நாராயணா (எம்மைக்) காப்பாற்று (எல்லோரும்) வணங்குக”
நாளாவட்டத்தில் நமல்க என்பது பேச்சுவழக்கில் நமக என்றாகிப் பின் சங்கதத் தாக்கில் நம: என்றாகும். அப்படியாகையில் ஓரெழுத்துக் குறையும். (ம: என்பது மஃ என்று ஒலிக்கும். அதை வைத்து நம் ஆய்தமும் வடவரின் விசர்க்கமும் ஒன்றென்று சிலர் சொல்வார். முற்றிலுங் கிடையாது. ஆனாற் சில ஒப்புமைகளுண்டு.) தவிர ஆய என்ற தமிழ்ச்சொல்லையுஞ் சங்கத முறையிற் கொண்டுவந்து சேர்ப்பர். [ஆகுதல்>ஆய்தல் என்பது ஆகுஞ் செயலைக்குறிக்கும். ஆயனென்ற பெயர்ச்சொல் ஆய என்றாகும்.)
இந்தப் பிணைப்பால் ”நாராயண” என்பது ”நாராயணாய” என்றாகும் ”சிவ” என்பது ”சிவாய” என்றாகும். முடிவில் விண்ணவ எட்டெழுத்து மந்திரம் ”ஓம் நாராயணாய நம:” என்றாகும். இதைச் சற்று மாற்றி ”ஓம் நம: நாராயணாய / ஓம் நமோ நாராயணாய” என்றுஞ் சொல்லுவர். சிவ ஐந்தெழுத்து மந்திரம் ”ஓம் சிவசிவ” என்பதற்கு மாறாய் ஓமை விட்டுவிட்டு ”சிவாயநம:” என்று மாறிப் போகும். இதை ”நம:சிவாய/நமச்சிவாய” என்றும் பலுக்குவர். முடிவில் ”சிவனை வணங்குக” என்று மட்டுமே இம்மந்திரம் பொருள் தரும். சிவ எட்டெழுத்து மந்திரத்திற்கு ”ஒம் சிவசிவாய நம”: என்றமையும். மொத்தத்தில் பலரும் இன்ற சொல்லும் சிவ, விண்ணவ மந்திரங்கள் தமிழுஞ் சங்கதமுங் கலந்த மந்திரங்களே. தமிழ் மந்திரம் வேண்டுமெனில் மேற்கூறியவற்றைப் பலுக்கவேண்டும்.
இதேபோல் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் அற்றுவிகத்திலும், செயினத்திலும், புத்தத்திலும் இருந்திருக்கலாம். மணிமேகலையில் ஓம் மணிபத்மேய நம: என்பது புத்த நெறியின் எட்டெழுத்து மந்திரமும், ஓம் மணிபத்மேய என்ற ஆறெழுத்து மந்திரமும் பற்றிச் சொல்வர்.. மணிபதும/மணிபத்ம என்பது ”மணிபோன்ற பாதத்தாமரைகளைக்” குறிக்கும். பல ஆங்கில உரையாசிரியர் இது புரியாது juwel lotus என்றெழுதி ஆன்மீகப் பொருள் கொடுத்துக் குழப்பிக் கொண்டிருப்பர். (இணையத்தில் எங்கு தேடினும் இக்குழப்பம் நிகழ்வது புரியும்.) அடிப்படையில் பொருள் மிக எளிது. மகாயானம் தோன்றும் வரை புத்தனைப் பீடிகையாலே மக்கள் தொழுதார். புத்தனின் செங்காலடிகளுக்கு மணியும், பதுமமும் உவமங்கள். மணிப் பதுமம் என்பது இரட்டை உவமம் அவ்வளவு தான்.
இதேபோல் மந்திரங்கள் செயினத்திலும், அற்றுவிகத்திலும் இருக்கலாம். தேடிப்பார்க்க வேண்டும். தீர்த்தங்கரரை அழைத்தும், இயக்கிகளை அழைத்தும் மந்திரங்கள் இருக்கலாம் (அவையெலாம் இப்போது எனக்குத் தெரியாது.) தெரிந்தவர் சொன்னால் கேட்டுக்கொள்வேன்.
குடமுழுக்கிற்கா தமிழ்மந்திரம் இல்லை? திரு. சத்தியவேல் முருகனாரைக் கேட்டால் அவர் விடைசொல்வார்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment