இப்போது புறம் 395 இன் பொருளுக்கு வருவோம். இப்பொருள் விளங்கச் சில குறிப்புகளையும் பார்ப்போம். சுரம் = மதுரையிலிருந்து உறையூர் வரும் காட்டுவழி. சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் இது உறையூரிலிருந்து மதுரை போகும் வழியாய் விவரிக்கப் படும். தடாரி= பறை. ஓலையரிப்பால் பாட்டின் நடுவே ஒரு சொல் காணாது போயுள்ளது. அரில்பறை = இன்னொரு வகைப் பறை. அரியல்= சப்பானியச் சாக்கே போல் சோற்றுக் கஞ்சியில் நொதித்துவந்த கள். இதைத் தோப்பிக் கள் என்றும் சொல்வார். பாட்டின் பொருளை அடுத்துக் கூறுகிறேன்.
---------------------
முன்நாள் நண்பகலில் சுரத்தில் உழந்து வருந்தி, ஞாயிறு நனிசென்ற இருள்செறி மாலையில், அவன் மனைமுன்றில் தோன்றி, தீங்குரல் . ............கின் அரிக்குரல் தடாரியொடு, என் உறவு இசைத்தலில், ”மென்புல வயலை உழுவோர், வன்புலத்தில் தம் எருதுகளை மேயவிட்டு, குறுமுயலின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நெடிய வாளைமீன் அவியல் சேர்த்த, பழஞ்சோற்றை உண்டு, மலர்ந்த முல்லைப் பூவைச் சூடி, அரிற்பறையால் புள்களை ஓட்டி, அவிய வைத்த சோற்றிலாக்கிய அரியலை ஆர்ந்திருந்தார். ஒருபக்கம் மனைக்கோழி ஈர அழைப்புத் தர, இன்னொருபக்கம் காட்டுக் கோழிக் கவருங் குரலெழுப்ப, மூன்றாம் பக்கில் நீர்க்கோழிக் குரலெடுத்துக் கூப்பிட்டது. மூங்கில் மென்தோளும், மயில் மென்சாயலும் கொண்ட மகளிர் கிளி கடியும்போது, புள்கள் அகல்சேற்றில் இருந்தன. பெரும! நல்ல பல விளைபுல வரிசைகள் சூழ்ந்த, சீர்சால் விழுச்சிறப்புக் கொண்ட, (சிறுகண் யானைகளைப் பெறுவதில் அரிய தித்தனின்) நற்புகழ் கெடா உறந்தையின் கிழக்கில், நெடுங்கை வேள்மானின் அருங்காவல் பொருந்தியுள்ள பிடவூர் அறப்பெயர்ச் சாத்தனின் சுற்றத்தாராய் நாங்கள் ஆனோம்” என நானுரைக்க,
ஆங்கு நின்ற எனைக்ண்டு, சிறிதும் நில்லானாய், பெரிதுங் கூறானாய், அருங்கலன்கள் வருவித்து அருளி, வேண்டிய வியப்பொடு உரைத்தன்றி நல்கி, பொன்போல் மடந்தையான தன் மனையாளைக் காட்டி, “இவனை என்போல் போற்று” என்றான்; அதற்கொண்டு, அவனை மறவேன்; பிறரை உள்ளவும் மாட்டேன். ”அகல்ஞாலம் பெரிதாய் வெம்பினும், எரிமீன்கள் வானில் மிகத் தோன்றினும், குள மீனோடு தாள்மீன் புகையினும், பெருவயல் விளையும் நெற்கதிரை உகிரால் நிமிர்த்தி, பசுங்கண் கருணைக் கிழங்குக் கறியைச் சூட்டொடு மாந்துக!, விளைவு ஒன்றோ? வெள்ளமெனக் கொள்க! இருப்பதும் இல்லாததும் அறியாது ஆங்கு அமைந்ததால், அவன் தாளாண்மை வாழட்டும்” என்றான்.
---------------------
”நாங்கள் அறப்பெயர்ச் சாத்தனின் கூட்டத்தார்” என்று பாடலூடே நக்கீரர் பொட்டென்று அடித்துச்சொன்ன மாத்திரம், பிடவூர்ப் பெருஞ்சாத்தனின் இயல்பான வள்ளன்மை பெருகிக் கொப்பளிக்கிறது . தன் மனவியைக் கூப்பிட்டு, “இவனை என்னைப்போல் எண்ணி, விருந்தோம்பு” என்கிறான். ஒரு புலவனுக்குத் தரும் அளவற்ற கனிவு அவனிடம் வெளிப்படுகிறது. அவன் சொல் கேட்டு நக்கீரரும் நெகிழ்ந்து போகிறார். பிடவூர்க் கிழான் குடும்பத்தாருக்கு அறப்பெயர்ச் சாத்தனெனும் முன்னோன் பெயரும் புகழும் முகன (main) அடையாளம் போலும். ஒரு பக்கம் அம்முன்னோர் வேளிர்குல வீரர், இன்னொரு பக்கம் ”தரும சாத்தன்” என்ற பெயரால், ஒரு மெய்யியல் பள்ளியை உருவாக்கி தமிழுலகெங்கும் நற்பெயர் படைத்திருப்பாரோ?- என ஐயுறுகிறோம். நக்கீரரின் வேறிரு புறப் பாட்டுகளில் 189 ஆம் பாட்டும் அறம் பற்றியே பேசுகிறது.
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.
”தெளிந்த கடல்வளாகத்தில் பிறவேந்தர்க்குப் பொதுவாகாதபடி, ஒற்றை வேந்தனாய்த் தானே வெண்குடை நிழற்றியவருக்கும் (இவரை ஆழி வேந்தன் = சக்கரவர்த்தி என்பார்.) நடுநாள் யாமத்திலும் பகலிலும் துஞ்சாது புலியைக் கவனித்துப்பார்க்கும் கல்லா ஒருவற்கும், உண்பது நாழியே. உடுப்பது இரு துணியே. மற்ற எல்லாமுங் கூட ஒத்துப்போகும். ஆகச் செல்வத்துப் பயன் ஈதலே. எல்லாவற்றையும் தாமொருவரே துய்ப்பமெனில் பலவும் தப்பும்” என்று இப்பாட்டின் பொருள் போகும். பாட்டின் மெய்யியலை ஆழ்ந்து ஓர்ந்தால், அற்றுவிகஞ் சார்ந்த வினைமறுப்புக் கொள்கை, இயல்புவாதம், பொதுமைநிலை போன்ற சிந்தனைகள் பாட்டினுள் இழைவதை உணரலாம்.
2 பாக்களையும் பார்த்தால், ஒருவேளை நக்கீரர் அற்றுவிகச் சாவகரோ என்று தோற்றுகிறது. அதேநேரம், நன்மாறனைப் பாடிய புறம் 56 இல் சிவன், வாலியோன், மணிவண்ணன், முருகன் எனும் பெருந்தெய்வங்களைப் போற்றிப் பரவுவார். இதுபோலும் கலப்புப்போக்கு பெருவாரித் தமிழரிடம் இன்றுமுண்டு. ஒருபக்கம் வேதநெறி சார்ந்த சிவ, விண்ணவக் கோயில்களில் வழிபடுவதும், இன்னொரு பக்கம் வேதமறுப்பு ஐயனார் கோயிலுக்கும் போவதும், நியதி/விதிச் சிந்தனையை இன்றும் உடும்புப்பிடியாய்க் கொள்வதும், எல்லாவற்றையும் இயல்புவாதப் போக்கைக் கடைப்பிடிப்பதும், தற்செயல் நடப்புகளை இயற்கையெனப் புரிந்துகொள்வதும் இற்றைத்தமிழரிடம் விரவியிருக்கும்.
ஆழ்ந்துகாணின் சங்ககாலத்தின் பின், மேலே சொன்ன (நியதி/விதி, இயல்புவாதம், தற்செயல் நடப்பு எனும்) அற்றுவிகச் சிந்தனைகளை, நாம் இப்போது கடைப்பிடிக்கும் சிவ, விண்ணவ நெறிகள், தம்வயப் படுத்திக்கொண்டன. இவற்றின் ஊற்று இன்று பலருக்கும் தெரியாது போகலாம். ஆம், இன்று ’ஐயனார்’ சிவநெறிக்குள்ளும், ’கருப்பர்’ விண்ணவ நெறிக்குள்ளும் ஆழ்ந்துபோய்த் தெரிகிறார். அற்றுவிக நெறியார் பெரும்பாலும் மற்ற 2 சமய நெறிகளுள்ளும், குறைவானவர் செயினத்துள்ளும் கரைந்தே போனார். நாம் தாம் தொல்லியல் ஆய்வுநடத்தி முன் நடந்ததைத் தேடிக்கொண்டிருக்கிறோம். பாசண்டச் சாத்தனுக்கான இந்த ஆய்வுத்தேடலும், “எங்கே அற்றுவிகம் மீண்டெழுந்து விடுமோ?” எனச் சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
[அற்றுவிகம் பற்றிச் சிலவற்றையே நான் இத்தொடரில் எழுதப் போகிறேன். நான் சொல்லாத பல செய்திகள் History and Doctrines of the Ajivikas - A vanished Indian Religion என்ற நூலில் உண்டு, இணையத்தில் பரியாக -( free) இறக்கிக் கொள்ளும் வகையில் pdf உம் கிடைக்கிறது. ]
https://archive.org/stream/HistoryAndDoctrinesOfAjivikasALBasham/History%20and%20Doctrines%20of%20Ajivikas%20AL%20Basham_djvu.txt.
அன்புடன்
இராம.கி.

No comments:
Post a Comment