Tuesday, July 31, 2018

கவ்வணம் - eclipse

”சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம் - இச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் என்ன?" என்று முகநூல் சொல்லாய்வுக் குழுவில் கேட்கப்பட்டது. இது போன்ற கேள்விகள் எழும்போது, படித்த தமிழரில் பெரும்பான்மையர், “கொடுக்கப் பட்டவை வடசொற்களே” என எண்ணி விடுகிறார். பின் தமக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்களையும், கிரஹணப் பொருளையும் பார்த்து புதுச்சொல்லாக்க முற்பட்டு விடுகிறார். கொடுக்கப் பட்டவை சங்கதந் தானா, அன்றி வேற்று மொழித் திரிவுகளா?- என்று பார்ப்பதில்லை. தம்மையறியாது சங்கதத்திற்கு முதலிடங் கொடுத்து ஓர்ந்து பார்க்கத் தொடங்கி விடுகிறார். என்ன தான் இந்துத்துவமெனும் இற்றை ஆள்நெறி, சங்கதத்தை முன்னிறுத்தினும், அதோடு முரண்பட்டு, சங்கதத்திற்கு முந்தைய பாகதத்தையும், இணை நின்ற பாலியையும் பார்க்க மாட்டேம் என்கிறார்.

Eclipse - இற்கு இணையாகப் பாகதத்தில் GAha, gahaNa என்பன ஆளப்படும். GrahaNa- இதற்கிணையான சங்கதச் சொல். சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம் என்பன ChandaggAha, SuriyaggAha என்று பாகதத்தில் வரும். சங்கதம், அடிப்படையில் பண்டையிந்தியாவின் வடமேற்கே இலாகூர் வட்டாரஞ் சேர்ந்த (பொ.உ.மு.400 களுக்கருகில் சந்தஸ் என்றழைக்கப்பட்ட) மொழியைப் போல்மமாய்க் கொண்டது. மற்ற சில வட்டாரச் சொற்களில் முதலிலும், இடையிலும் வரும் வல்லின உயிர்மெய்களை உடைத்து ஊடே ரகரமெய் நுழைத்துச் சில போது பலுக்குவார். gahaNa எனும் பாகதச் சொல்லில் இப்படி ரகரம் நுழைத்து GrahaNa ஆனது. சில போது Gra அசையை G எனும் மெய் யெழுத்தாகவும் r`a என்னும் சங்கத விதப்புயிராகவும் சொல்வர். சங்கத-பாகத உறவுகளைப் படிக்கையில் இதுபோல ஒரு சில உத்திகளை (இன்னுஞ் சிலவும் உண்டு.) நினைவிற் கொள்ளவேண்டும்.

சங்க காலத் தொடக்கத்தில் நம்மோடு பெரிதும் உறவு கொண்டது பாகதமே. பொ.உ.150 இற்குப் பின் தான் (இன்னுஞ் சிறப்பாய்க் குப்தர் காலத்திற்றான்) சங்கதம் தமிழோடு உறவு கொண்டது. எனவே எந்தச் சங்கதச் சொல் பார்த்தாலும், உடன் பொருந்தும் பாகதச் சொல்லைத் தேடிப் பார்ப்பது கட்டாயமாகும். தமிழ்-பாகத உறவு தகடூர்-படித்தானம் (இற்றை அவுரங்காபாத் அருகே கோதாவரிக் கரையிலுள்ள பைதான்) - பாடலிப் புத்தம் என்று தக்கணப் பாதையின் வழி ஏற்பட்டது. நம்மூர்ப் பேச்சு அற்றைக் கருநாடகம் (தனிமொழி தோன்றாக் காலத்தில் கன்னடம் என்பது ஒரு வட்டாரத்தமிழே.) வழியான வட்டாரப் பலுக்கலால் பாதிப்புற்றே வடக்கே பரவியது. இன்றும் தமிழிற் பயிலும் “பால்” கன்னடத்தில் ”ஹாலு”வாகும் பகரம் பயிலும் நூற்றுக் கணக்கான தமிழ்ச்சொற்கள் அற்றைக் கன்னடத் தமிழில் ஹகரம் பயின்றன. தவிர, சில சொற்களில் முதலொலியான தமிழ்க் ககரம் கன்னடத் தமிழில் ga என ஒலிக்கும்..நம் ”மகள்” வடகொங்கு (கருநாடத்) தமிழ்நாட்டில் ”magalu” ஆவாள். தகடூரிலிருந்து படித்தானம் கடப்பதற்குள் kappa>gappa>gahha மாற்றம் ஏற்பட்டு விடும். நூற்றுவர் கன்னரின் ஆட்சியில் பாகதம், தமிழென இருவேறு ஆட்சி மொழிகள் இருந்தன. படித்தானத்திற்கு மேல் வடக்கு ஏகையில் பாகதமே எஞ்சும்.

தகடூருக்குத் தெற்கே பகரமும் வகரமும் ஒன்றிற்கொன்று போலிகள். கரப்பும் கரவும் ஒரே பொருள் கொண்டவை. கவ்வும் கப்பும் ஒரே பொருள். கவ்வல்= மறைத்தல். கள்ளெனும் வேர்ச்சொல் கள்வென வளர்ந்து, மறைத்தலை, திருட்டை, விழுங்கலை, மூடலைக் குறிக்கும். கள்வல்>கவ்வல்>கப்பல் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய மாற்றம். கள்க்கல்>கட்கல்>கக்கல் என்பதும் மறைத்தல் பொருள் காட்டும் (வேறு பொருள்களை இங்கு நாம் பேசவில்லை. கக்குள்/அக்குள், மறைப்பு தொடர்பானதே. கவர்பும், கவிப்பும் இதோடு தொடர்புடையனவே. கவவு= பற்றல், அகத்திடல். கவவு அகத்திடுமே- தொல் உரி 59. கப்பல்= அகத்திடல், மூடல்; கவைத்தல்= அகத்திடல்; கவ்வு>கவள்> கவளி கவ்வினாற் போல் மேலுங் கீழும் சட்டம் வைத்துக் கட்டும் பொத்தகக் கட்டு, வெற்றிலைக் கட்டு; கவளி>கவளிகை கவள்> கவண், கவணை, கவண்டு, கவண்டி என்பன கவணின் மறு வடிவங்கள். கவனம்= கவ்வினாற் போல் ஒரு நிகழ்வை, ஆளைப் பார்த்துக் கொள்ளும் பாங்கு. “திருப்பித் திருப்பிச் சொல்றேன். கவனமாய் இரு”

இத்தனையும் கவ்வலில் தொடங்கிய சொற்கள். அது போல் கவ்வணம்> கப்பணம்> கஹ்ஹணம்> க்ரஹணம் என்பதும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியதே. கப்பென்ற வினைச்சொல் மேலை இந்தையிரோப்பியத்தில் ஸகரம் உள் நுழைத்து grasp ஆகும். இதுவும் eclipse இல் நடப்பது தான். (இராகு, கேது நிழற் கோள்கள் நம்மிடம் மட்டும் இருக்கவில்லை. புவி நடுவக் கொள்கை இருந்த எல்லோரிடமும் இருந்தது.) கவ்வும் தொழிற்பெயர் தெரிந்தால் நுங்கல் (=விழுங்கல்)/ முங்கல்,  நொண்டல்/ மொண்டல், கள்ளல்>கொள்ளல்/கொள்வல் (to hold, to have), கரத்தல், கவித்தல், மூய்தல், பற்றல், பிடித்தல், மறைபுகல், ஒளித்தல், சேருதல், செறிதல், உண்ணுதல் என்ற சொற்கள் இணையாய்ப் பயில்வது தெரியும்.

முதலில் அரவை (இராகு) முதலிற் சொல்லி மதியைப் பின்சொல்லுங் காட்டுகளைப் பார்ப்போம். அரவு செய்பொருள். மதி செயப்படு பொருள். அகம் 114 இல் 5 ஆம் அடியிலும், அகம் 313 இல் 7 ஆம் அடியிலும், குறுந் 395 இல் 4 ஆம் அடியிலும் ”அரவு நுங்கு மதி (அரவு விழுங்கும் மதி)” என்று வரும் பரி 10 ஆம் பாட்டின் 76 ஆம் அடியில் ”அரவு செறி உவவு (அரவு நிறைந்த மதி)” என்று வரும். நற் 377 இல் 6-7 ஆம் அடிகளில் ”அரவுக் குறைபடுத்தப் பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல” என்று வரும். இங்கே மதியத்திற்கும் நிலாவிற்கும் வேறுபாடு காட்டுவார். இற்றைத் தமிழில் மதியத்திற்கும் நிலவிற்கும் நாம் வேறுபாடு காட்டுவதில்லை. நாம் இன்று ”நிலவொளி” என்று சொல்வது அன்று நிலவென்றே சொல்லப்பட்டது. காலம் மாறிவிட்டதல்லவா? நற் 128 இல் 2 ஆம் அடியில், ”பாம்பு ஊர் மதி” என்பார். புறம் 260 இல் 16-17 ஆம் அடிகளில் ”வளைஇய பாம்பின் வையெயிற்று உய்ந்த மதி” என்று வரும். கலி 105 இல் 45-46 ஆம் அடிகளில் ”அரவின் வாய்க் கோட்பட்டுப் போதரும் பால் மதியம் போன்ம்” கோட்படுதல் என்பது கோள்படும் நிலை. கிரஹணம் என்ற சொல்லிற்கு கோட்பாடு என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இச் சொல்லை நான் சொன்னால், பொருள் மாறிப் போய்விடும். தமிழ்நடை மாறியதால் வந்த வினை இது.

அடுத்து மதியை முதலிற் சொல்லி பாம்பைப் பின்சொல்லுங் காட்டுகளைப் பார்ப்போம். இந்தக் காட்டுகள் எல்லாமே செயப்பாட்டு வினைகள். பரி 10 இல் 78 ஆம் அடியில் “மதி உண் அரமகள்” என்று வரும். சிறுபாண் 185 ஆம் அடியில் “மதி சேர் அரவு” என்று வரும். பெரும். 383 ஆம் அடியில் “திங்கள் கோள் சேர்ந்தாங்கு” என்று வரும். இங்கே கோள் என்பது இராகு. கலி 104 இல் 37-38 ஆம் அடிகளில் ”மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும் நீல்நிற வண்ணனும் போன்ம்” என்று வரும். இங்கே மாபாரதத்தில் செயத்ரதனின் இறப்பும் அதில் கண்ணன் செய்த ஊடாட்டமும் சொல்லப் படுகிறது. கலித்தொகை காலத்தில் மாபாரத நிகழ்ச்சிகள் தமிழர்க்குத் தெரிந்து விட்டன. கலி 140 இல் 17 ஆம் அடியில் ”திங்கள் அரவு உறின்” என்று வரும்.

இதுவரை ”மதிக் கவ்வணம்” பார்த்தோம். இனிப் ”பரிதிக் கவ்வணம்” பார்ப்போம். இது சங்க இலக்கியத்தில் ஒரேயொரு முறை தான் பதிவு செய்யப் பட்டுள்ளது. புறம் 174 இல் 1-2 ஆம் அடிகளில் ”அணங்குடை அவுணர் கணங் கொண்டு ஒளித்தெனச் சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து” என்று வரும்.

கவ்வணம் என்ற சொல்லைப் பின்னாக்க வழியில் தான் கண்டோம். இதற்கு விளக்கச் சொற்களாய் மூன்று பத்திகள் முன் பல சொற்களைப் பார்த்தோம். அணம் என்ற ஈறு தமிழில் மிகுதியும் பயிலும் ஒன்றாகும். அண்ணுதல்= நெருங்குதல். அள்>அண்>அண்ணம்>அணம். ”கவ்வு மாதிரி” என்கிறோம் இல்லையா? கவ்விற்கு நெருங்கியது கவ்வணம். மறைப்பு, நிழல் என்று இன்றைக்குச் சொல்லலாம். இதுபோற் கற்பனைகளேயே அறிவியலில் ஒதுக்க வேண்டும் என்பது எனக்கு வறட்டுத்தனமாய்த் தெரிகிறது. இராகு/ கேது போன்றவற்றை இன்று நாம் நம்பவேண்டாம் ஆனால் புவி நடுவக் கொள்கையில் நிலவின் நகர்ச்சியை விளக்குவதற்காக இது போன்ற அமைகணக் (imaginary) கோள்களை உருவகஞ் செய்தார் என்று சொன்னால் குறைந்து விடுவோமா? கோப்பர்நிக்கசு வரும் வரை மேலையரும் புவி நடுவக் கொள்கையை நம்பி வந்தாரே? சூரிய நடுவக் கொள்கை சரியென ஏற்பட்ட பிறகு புவி நடுவக் கொள்கையைச் சொல்லாது விட்டாரா என்ன? இராகு, கேதுவையும் அறிவியல் வரலாறாகக் கூட நாம் சொல்லக் கூடாதா? அரவு என்ற பயன்பாடு மேலே சொன்னபடி சங்கத்தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் வந்துள்ளது. இது ஏதோ வடவருக்கு, ஆரியருக்கு மட்டுமிருந்த கற்பனை என்பது உண்மைக்குப் புறம்பானது. தமிழர் ஏதோ அரிதானவர். எப்போதும் சூரிய நடுவக் கொள்கையையே அவர் பரிந்துரைத்தார் என்பதும் வரலற்றிற்கு முரணானது.

சந்திர கிரஹணம் = மதிக் கவ்வணம்
சூரிய கிரஹணம் = பரிதிக் கவ்வணம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: