Friday, July 27, 2018

பனுவலும் text உம் ஒன்றா? - 3

Text ஐப் பனுவலோடு குழம்புவோர் பெரும்பாலும் "துகில் நுட்பியல் எப்படி நம்மூரில் வளர்ந்தது?” என அறியாதிருக்கிறார். சில துகிலியற் கலைச் சொற்களைப் புரிந்து கொள்ளாமல் மேற்கொண்டு Text ஐ நோக்கி நகர முடியாது. இப்பகுதியில் இவற்றையே முதலிற் பார்க்கப் போகிறோம்.

தடுக்குகள், பாய்கள் முடிவில் துகில்களென்று படிப்படியாக நுட்பியற் சோதனை நடந்தது. பருத்தியில் துகில் செய்யுமுன், பனையோலைக் கீற்று, நாணற் கோரைகளால் தடுக்குகளையும், பாய்களையும் முடைந்த பட்டறிவு பழந்தமிழருக்கு இருந்திருக்கவேண்டும். (கோரைகளாற் புனைகளைச் செய்து, பாய்களைச் சீரைகளாக்கி (sails), தேவைப் படுகையில் விலாவரிகள் (outriggers) பொருத்தி, நெடுந்தூரக் கடற்பயணங்கள் போனது இன்னொரு கதை. அதையிங்கு பேசவில்லை.) அதே சமயம், நெகிழ்ந்துஅசையும் தடுக்குகளையும், பாய்களையும் தென்னையோலை, ஈச்சோலையைக் கொண்டு செய்ய முடியாது. கொற்கை, மாறோக்கமெனப் பொருநைக் கோரை நிலங்களில் நிலைகொண்ட முன்னோருக்கு அதன் முகன்மை புரிந்திருக்கும்.

தவிர, தென்கிழக்காசியச் சன்னக் கோரம் (Thin reed / Phrynium dichotomum) பாயையும் பழந்தமிழர் பயன்படுத்தினார். கோரைகள் பற்றிய புதலியற் குறிப்பை தமிழில் விரிவாய் யாரும் பதியவில்லை. முன்னாளையத் தமிழகக்கோரைகளில் ஒருவேளை சன்னக்கோரையிருந்து இப்போது அழிந்ததா? தெரியாது. எந்தெந்தக் கோரைகள் இங்கிருந்தன? எவை எப்போது அழிந்தன? தமிழ்ப் பார்வையில் கோரைப் புணைக் கலங்கள் (reed ships) பற்றி யாரேனும் ஆய்வு செய்யாரா? - என்ற கேள்விகள் சுவையாரம் ஆனவை. கடந்த 300 ஆண்டுகளிற் குறிப்பாகத் சிவகங்கை, புதுக்கோட்டை மக்களுக்கு பர்மாப் பாய் என்பது பெரிதும் பழக்கம். இச் செய்முறையில் தமிழர் பங்குண்டோ அல்லது செய்முறை அங்கிருந்து இங்குவந்ததா என்ற ஐயமுமுண்டு. ஏனெனில் இரு செய்முறைகளும் பெரிதும் ஒத்துப் போகின்றன.

[இங்கோர் இடைவிலகல். தமிழாய்வுக் கட்டுரைகளில் தேச வழக்கங்களை மீறும் இயலுமைகளைத் தெரிவிக்கத் தயக்கமாயுள்ளது. ஏனெனில் பல்வேறு தமிழன்பரும் ஒருபக்கம் வடக்கோடு நமக்கிருந்த உறவைப் பேச மறுத்தால், இன்னொரு பக்கம் தென்கிழக்காசிய உறவிலும் ஒருதிசை நோக்கே கொள்கிறார். நாமென்ன தனித்தீவிலா வாழ்கிறோம்? அன்றி நாம் மட்டுமே அறிவார்ந்தவரா? இற்றை ஈனியலின் படி, 4350 ஆண்டுகளுக்குமுன் தமிழர் இங்கிருந்து கடல்வழி போய் ஆத்திரேலியப் பழங்குடிகளோடு மீண்டும் கலந்திருக்கிறார். அவர் சென்ற நாவாயிற் சீரையில்லாது போயிருக்குமா? அற்றைப் பழங்குடி வாழ்விற் பாய்முடை கலை நம்மிடம் இல்லாதுபோனதா? 4500 ஆண்டுகளில் தமிழகத்தின் நாலாபக்கமும் பல்வேறு உறவுகளும் இடையாற்றங்களும் ஏற்படாதோ? நெடுந்தூரக் கடல் பயணத்தில் உதவும் இரட்டை விலாவரிக் கலம் (double outrigger canoe) முதன்முதலில் தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியதாய் இற்றை மாந்தவியலார் சொல்கிறார். நம்மூரிலும் நெடுநாள் அது உள்ளது இதைப் பார்த்தால், இடையாற்றம் இரு பக்கமிருந்ததோ? பாய்முடையும் தொழிலும் அப்படி இருந்திருக்கலாமோ? - என்றும் தோன்றுகிறது.]

சன்னக்கோரை பர்மா, தாய்லந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, போர்னியோ, பிலிப்பைன்சு நாட்டு ஆற்றங்கரைகளில் பெரிதும் விளைந்தது. அசாம், வங்காள தேசம், மேற்குவங்கம் வரை பரவி இருந்தது. கீழ்பர்மாவில் ஐராவதியாறு கடல் சேருமிடங்களிற் கரையொட்டிய சதுப்புகளில் இது வளர்ந்தது. முதலிற் கிடையாய் வளர்ந்து, பின்வளைந்து, நெட்டங்குத்தலாய்த் தோற்றங்காட்டும். அடிவேர் போகக் கிடைத்தண்டின் கணுவீறுகளில் வெளிப் படும் விழுதுகள் தூறுகளாகி மண்ணில் வேர்கொள்ளும். நிறைய இலைகள் உள்ள தண்டிற் இரண்டிரண்டாய்க் கிளை (இருகோடும = dichotomous) பிரிந்து இலைகள் எழும். (It is a rhizomatous plant with an erect and glossy green stem attaining a height of 3–5 m and a diameter of 2.0 cm. The stems are leafy and dichotomously branched.) இதன் நடுச்சோற்றை எடுத்த பின், சன்ன அகலத்திற் புறக்காழை நீளச் சீவிக் கிடைத்த சீம்புகளையே பாவாகவும் ஊடாகவுமாக்கிப் பாய் முடைவர். இதைச் சீரையாக்கி எந்தப்படகிலும் நெடுந்தூரம் கடற்பயணஞ் செய்யலாம் சொகுசான பர்மாப் பாயின் கட்டுமான நுட்பியல், தமிழர் குமுகாயத்தில் பெருந்தாக்கம் விளைத்திருக்கும்.

இது ஒரு பக்கம் நடக்கையில் இன்னொரு பக்கம், பருத்திக்காயுடைத்து பஞ்சுக்கொட்டைகளை கிண்டிக் கிளறினால் (=கடைந்தால்) பஞ்சையும், கொட்டையையும் தனியே பிரிக்கமுடிந்தது. கிண்டுதல்> கிண்ணுதலே மேலையர் மொழியில் ginning ஆனது. கிண்ணிக்கிடைத்த பஞ்சு இள்ளிகளைத் திருக்களி மூலம் ஒருங்கே பிணைத்து, நூலாக்கி, முறுக்கு ஏற்றவும் முடிந்தது. (திருக்கு/திருக்கம் = torque. திருக்கை அளிப்பது திருக்களி. கையாற் சுற்றப் படும் spindle. பன்னுதலிலிருந்து ஆங்கிலச்சொல் எழுந்தாலும் திருக்களிக்கும் காரணத்தால் சுற்றும் பொருளையும் பெற்றது. இன்று பொருள் நீட்சியில் எது எதற்கோ spinning என்கிறார். திருக்களியோ நம்மூர்ப் பேச்சுவழக்கில் தக்களியாகி தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் தப்புந் தவறுமாய்க் கிடக்கிறது. தக்களி கீழடி 4 ஆங் கட்ட ஆய்வில் கிடைத்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது. பொதுவாகத் துகில் நுட்பியற் சொற்கள் பலவுந் தமிழ் அகரமுதலிகளிற் குலைந்து கிடக்கின்றன. யாரேனும் அவற்றைத் திருத்தித் தொகுப்பின் நல்லது. என்னாலியன்ற உதவியளிப்பேன்.) திருக்கேறிய நூல் திரி/திரள் ஆனது. (ஆங்கிலத்தில் thread என்றார்.)

கயிறுகளுக்கு முறுக்கம் கொடுப்பதும் நூல்களுக்கு திருக்கம் கொடுப்பதும் ஒன்று போலவே அமையும். முறுக்கேறிய திரி நூலுக்கு உறுதி ஏற்படுவதால் (இன்னும் உறுதி வேண்டின், திரிநூலின்மேற் பசை/ கஞ்சி/ காடி போடுவார்.) பாவில் (warp) கோரைகளுக்கு மாறாய் நூல்களே பின்னால் இடம்பெற்றன. இது சட்டென விளைந்த மாற்றமாயினும், ஊட்டின் (weft) பயன்பாட்டில் கோரைகள் தொடர்ந்தன. இம்மாற்றம் பாய்களுக்கு நெகிழ்ச்சியையும் சுற்றிவைக்கும் வாகையையுங் கொடுத்தது. மாந்தவாழ்க்கையில் இதுபோல் புதுப் பயன்பாடுகள் எழுந்தன. இன்றுங்கூட இக் கட்டுமானத்திலேயே (நெல்லைப்) பத்தமடை, (சீர்காழித்) தைக்கால் போன்ற இடங்களில் பாய்கள் நெய்யப்படுகின்றன. [நான் பென்னம்பெரிய தொழிலிடங்கள் சொன்னேன். மாநிலத்தின் வேறிடங்களிலும் பாய்முடைதல் ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது. பழங்காலத்தில் கோரையிருந்த இடங்களிலெல்லாம் இந்நுட்பியல் இருந்து இருக்கும்.] 

பாவிற் கோரையை உருவி, நெகிழ்ச்சி பார்த்தவனுக்கு, ஊடிலும் கோரையை நீக்கி நூல்பயன்படுத்த எத்தனை காலமாகும்? இனிப் பின்னல், முடைதல், வேய்தல், பொருத்தல், கள்ளல், கட்டுதல், நுள்ளல், நெருக்கல், நெய்தல் என்பவற்றைப் பார்ப்போம். ஓலைக்கீற்றுகள் நீளவாட்டிலும் குறுக்கு வாட்டிலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் போவதைப் பின்னலென்றார். பாவும் ஊடும் முட்டுவது முடைதலாயிற்று. முடைதலுக்கு, வேய்தலென்றும் பெயர் (மேலை மொழிகளில் வேய்தலே weaving ஆயிற்று. துகிற்றொழிலை இன்றது குறித்தாலும் ஓலை முயற்சியை உள்ளே காட்டுகிறது.) இருவேறு பட்ட ஊட்டையும் பாவையும் பொருத்துவதால் பொருத்தலாயிற்று. பாவும் ஊடுஞ் சேருவதாற் கள்ளலாகி, அதன் நீட்சியிற் கட்டுவதானது. (ஊடையும் பாவையும் கட்டுகிறோமே?) நுள்ளல் அடைத்தலையும், செறிதலையும், பொருத்தலையும், குறித்தது. நன்குசெறிந்த தடுக்கோ, பாயோ இடைவெளி காட்டாது நுள்>நெள்>நெருக்கென நெருக்கிநிற்கும். இன்னொரு வகையில் நுள்>நெள்>நெய் ஆகிப் பாய் நெய்தலைக் குறித்தது. (பாய் நெயவின் நெளிவு சுளிவுகளை நானிங்கு விவரிக்கவில்லை.) பாவும், ஊடும் பிணையும் அடிச்செயல் ஒன்றே. அவ்வளவுதான். ஓலைக்கீற்று, கோரை, நூலெனச் செய்பொருட்கள் இதில் மாறிவந்தன.

மேற்சொன்ன அத்தனை சொற்களும் சுற்றிவளைத்து இச்செயலையே குறிக்கும். இன்னும் கலிங்கல், துற்றல், தறித்தலென்ற வினைகளை நான் சொல்லவில்லை. அதற்குமுன் நெய்தல் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். நெய்தலைத் ”துணி, பாய் முதலியன உருவாக்கத் தறியில் நீளவாட்டில் நூலையோ, கோரையையோ செலுத்திக் குறுக்குவாட்டிற் இன்னொன்றைக் கோத்துப் பின்னுதல் = to weave” என்று வரையறுப்பார். “நெய்யு நுண்ணூல்” என்பது சீவக. 3019. நெய்தலுக்குத் தொடுத்தற் பொருளுண்டு. to string, to link together "நெய்தவை தூக்க” என்று பரிபா. 19:80 சொல்லும். கிட்டத்தட்ட எல்லாத் தமிழிய மொழிகளிலும் நெய்தலுக்கு இணைச்சொற்களுண்டு. ம>நெய்க; தெ.நேயு; க.நேய், நேயி, நெய்யு; கோத.நெச்; துட.நிச்; குட.நெய்; து.நெயுநி; கூ.நெப; குவி.நெநை; குரு.எஸ்நா; மா.எசெ.

பாவலின் (fabric) அகலத்திற்குத் தக்க, நூலின் விட்டத்தைப் பொறுத்து, நெயவுத்தறியில் பாவுநூல் இழுனைகளை (warp threadlines; இதை இழையணிகள் என்றுஞ் சங்க இலக்கியஞ் சொல்லும்.) முடிவு செய்வர். பட்டவப் பலக்குமைக்கு (complxity of the pattern) ஏற்ப இழுணைகளைத் தொகுதி பிரிப்பர். எளிய பட்டவத்தில் 1, 3, 5, 7..... என்ற ஒற்றைப்படை இழுனைகளை A தொகுதியாயும், 2, 4, 6, 8,.. எனும் இரட்டைப்படை இழுணைகளை B தொகுதியாயும் கொள்ளலாம். இரு தொகுதிகளின் ஒரு பக்க நுனிகளையும் தறிக்கப்பால் ஓரச்சிற் பிணைத்து, இன்னொரு பக்க நுனிகளை அகலப் பரப்பி, தேவைப்பட்டாற் கோல்களாற் சுற்றி நகர்த்தி, A நுனிகளை மேலும், B நுனிகளைக் கீழும் கொணர்ந்தால், இருவேறு பாவு இழுனைகளுக்கும் நடுவே ஒரு V வடிவக் கூடும் உருவாகும். (கூடு>skud>sked> shed) இக்கூட்டின் நடுவேதான் ஊடு நூல் போகிறது. ஊடுநூலைச் சுருட்டிவைக்கும் இல்லுக்கு ஊடில்/ஊடம் என்று பெயர் (shuttle; பேச்சுவழக்கில் ஊடம் ஓடமானது. space shuttle = விண்வெளி யோடம் என்கிறோமே, நினைவிற்கு வருகிறதா? ஊடப் பேருந்து (shuttle bus) என்ற. தமிழ்ச்சொல் மறந்து இப்போதுபலரும் சட்டில்பஸ் என்கிறார். நுட்பியற் கலைச்சொற்களை தமிழில் வளர்க்காததால் வந்து சேர்ந்த கொடூரம் இது. இத்தனைக்கும் ஊடத்தோற்றம் நம்மூரில் ஏற்பட்டது.]

தறியில் ஊடு நூல் இடமிருந்து வலம் போனதென வையுங்கள். ஊடு நூல் போனபின்பு, B யை மேலும், A யைக் கீழும் பிரித்தால், ஊடுநூல் சிக்கும். மீண்டும் ஊடுநூலை வலமிருந்து இடம் அனுப்பி, பாவு நூலில் A ஐயை மேலும், B ஐயைக் கீழுமாக்கினால் ஊடுநூல் மீளவுஞ் சிக்கும். இப்படி மாறி மாறிப் பாவுநூலின் A யும், B யும், மேல்-கீழில் இடங்கொள்ள, ஊடுநூல் இடம் வலம் என்று மாற, நூற்பிணைப்பு கூடிவரும். நெய்தல் தொழில் என்பது இதுதான். ஒருபக்கம் வெள்ளமாய்ப் பெருகும் நூல் இன்னொரு பக்கம் கட்டுப்படுத்திப் பிணைத்து வெளிவரும் துணி. இதை மாந்த உழைப்பாலும், எந்திரப் புயவாலும் (power) செய்யமுடியும். ஒவ்வொரு சுற்றும் (பாவுமாற்றம்/ஊடு மாற்றம்) முடிந்தவுடன் ஊட்டுப்பிடிப்புகளை நெருக்கவேண்டும். இதற்குத் தறியில் நெருக்குக்கோலுண்டு. (இன்னொரு பெயரைக் கீழே சொல்வேன்.) நெய்வதில் எளிமையான பட்டவம் இதுதான். மாறாகப் பாவுத் தொகுதிகளை இரண்டு ஆக்காது பலவாக்கி, ஊட்டுநூலை ஒன்றல்லாது பலவாக்கி, பல்வேறு பலக்கிய பட்டவங்களை (complex patterns) உருவாக்கலாம். பலக்கிய நெய்விற்கான சக்கார்டு (Jacquard) கருவியை பிரஞ்சுத் துகலியலார் கண்டு பிடித்தார். அதை இங்கு சொல்லின் விரியும். (நமக்கு அவ்விளக்கம் இங்கு தேவையில்லை)   

உழவில் தோய்ந்தோருக்கு நெய்தல் தொழிலை வேறொன்றோடு ஒப்புமை செய்யத் தோன்றாதா, என்ன? ஏரிப்பாசனக் கலிங்கோடு நெய்தற் கருவியை ஒப்பு நோக்கினார். ஒரு பக்கம் வெள்ளம் வர, இன்னொரு பக்கம் கலிங்கால் (கலிங்கின் சொற்பிறப்பைக் கீழே சொல்வேன். கலிங்கிற்கு மற்ற சொற்களும் உண்டு. மடுப்பதால் மடு>மடையென்றும், மடு>மடுகு> மடகு>மதகென்றுஞ் சொல்வர்.) கட்டுப் படுத்தி நீரைத் திருப்புவோம் பாருங்கள். அதுபோல ஒரு பக்கம் பாவு/ஊடுநூல்கள் வர, நெய்தற்கருவி ஒழுங்கே பிணைத்து, இன்னொரு பக்கம் துணியாக வெளிப்படுத்துமாம். இவ்வொப்புமையால் நெய்தற் கருவிக்கு கலிங்கு, மடுகு/மடுகம் எனும் பெயர்கள் ஏற்பட்டன. இதன் விளைவால் கலிங்கம், மடி என்ற சொற்கள் துணிகளுக்கும் ஏற்பட்டன. மடுகம்>மடுக்கம்>மட்கம்>மக்கம் என்ற சொல் தமிழ்ப்பேச்சு வழக்கிலும், மலையாளத்திலும் ஆனது. தெலுங்கு, கன்னடம், துளு, கோண்டி, மராட்டி மொழிகளிலும் அதன் இணைகள் புழங்குகின்றன. [4624 Ta. makkam loom. Ma. makkam id. Ka. magga id. Tu. magga id. Te. maggamu id.; maggari weaver. Go. (Mu.) maŋṭa weaving instrument (Voc. 2681). / Cf. Mar. māg loom; Or. maṅg id. DED(S)] 

[வழக்கம்போல் நுட்பியல் விவரம் அறியாது உரையாசிரியரும் அகர முதலியாரும் கலிங்கத்திலிருந்து வந்த விதப்புத்துணி கலிங்கமென்பார். ஆழம் பார்க்கின் அப்படித் தெரியவில்லை. கணப்புப் (generic) பயன்படாகவே கலிங்கம் தெரிகிறது. அரசர், செல்வரிலிருந்து வறியமக்கள் வரை, அவர் உடம்பின் உச்சிமுதல் உள்ளங்கால்வரை, அணியுந் துணியே கலிங்கமாகும். விவரிப்புகளை அடுத்த பகுதியில் ஐந்தைந்தாய் அடுக்குவேன். இவ்வளவு விரிவு தேவையில்லை தான். இருப்பினும், “உரையாசிரியர் பற்றி இராம.கி.க்கு என்ன தெரியும்?” எனத் தமிழறிஞர் அதிர்ந்து உறழலாம். ஒரு புலத்தின் அடியில் ஆழ்ந்துள்ள புரிதலை வெளியாள் ஒருவன் அசைத்துப் பார்ப்பதை புலத்தின் உள்ளேயிருப்பவர் கனிவாய்ப் பார்க்கமாட்டார். உள்ளிருக்கும் யாருமே என் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பார். பொறுத்துக் கொள்ளுங்கள். உரையாசிரியரை நான் முழுதும் மறுக்கவில்லை. சில இடங்களில் மறு ஆய்வு கட்டாயம் தேவை என்கிறேன். அவ்வளவு தான்.]

அன்புடன்,
இராம.கி.

No comments: