Thursday, July 19, 2018

திருவள்ளுவராண்டு - 2

சரி, தொல்காப்பியத்தை விட்டுக் காலம் பொ.உ.மு. 300 இலிருந்து பொ.உ.300 என்று ஒப்புக்கொண்ட குறு 41-4, கலி 25-2, 94-22, 102-30, புற 126-10, 188-6, 191.3 ஆகிய சங்கநூற் காட்டுகளில் வரும் பயன்பாடுகளைப் பார்ப்போம்..[என்னைப் போன்றோர், கொடுமணம், பொருந்தல், அநுராதபுரம் போன்ற புதுத் தொல்லியற் சான்றுகளையும், சங்கநூல்கள் விவரிக்கும் தமிழகக் காட்சிகளையும்  அற்றுவிகம் (ஆசீவிகம்) என்ற வேதமறுப்பு நெறியின் தன்பக்க உரைகள் (இதுபற்றி வடக்கே கிடைத்தவை புறப்பக்க உரையாடல்களே) சங்கப்பாடல்களில் மட்டுமேயுள்ளதையும் ஆய்ந்து பார்க்கும் போது ”சங்க காலம் என்பது பொ.உ.மு.550 இலிருந்து பொ,உ.220 ஆகவே இருக்கமுடியும்” என்போம். தமிழைக் குறைத்துச் சங்கதம் உயர்த்துவோருக்கு நாங்கள் என்றுமே முட்களாகிறோம்.]

அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் - று 41-4
வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் - கலி 25-2
மக்கள் முரியே - கலி 94-22
நல் ஆயர் மக்கள் நெருநை அடல் ஏற்றெருத்து இறுத்தார்க் கண்டும் - கலி 102-30/31
நிலமிசை பரந்த மக்கட் கெல்லாம் - புறம் 126-10 மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
மயக்குறு மக்களை யில்லார்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே - புறம் 188-6 பாண்டியன் அறிவுடை நம்பி
மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் - புறம் 191-3 கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையார் சான்றோர்க்குச் சொல்லியது

என்ற சங்கநூற் சான்றுகளைப் பார்த்தால் பிறகென்ன சொல்வது? இவற்றிலும் மக்களென்ற சொல் புழங்கியிருக்கிறதே? இதேபோல் மாக்கள் (48), மாக்காள் (1), மாக்கட்கு (2) ஆக 51 இடங்களிலும் கள் ஈறு சங்கநூல்களிற் புழங்கி யுள்ளதே? இக்காட்டுகளை மறுத்துக் கள் விகுதியை வள்ளுவரே உயர்திணைக்கு முதலிலாண்டார் என்பது எவ்வளவு பிழை? முழுப்பூசனியைச் சோற்றில் அமுக்கலாமா? கலித்தொகையை பொ.உ.100 க்கு அருகில் தள்ளினாலும் குறுந்தொகை, புறநானூறு போன்றவை பொ.உ.மு.விற்கு முதல் 3 நூற்றாண்டுகளுக்கு வந்துசேருமே? ஆகக் கள் விகுதி உயர்திணைக்கு நெடு நாளாய்ப் பயன்படுவது உண்மை தானே? அப்படிப் பயன்படுவதன் மாந்தவியற் காரணஞ் சொல்லி விளக்கியபின்னால் ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்? இனிக் குறள் 263-க்கு வருவோம்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்

இக்குறளில் வரும் மற்றையவர்களைப் புரிந்துகொள்ளுமுன், சில பின்புலங்களைப் பார்ப்போம். அறத்துப்பாலில் முதல் 4 அதிகாரங்களுக்கு அப்புறம் இல்லறவியலும், அதன்பின் துறவறவியலும் வரும். (அறத்தின் குறள்வரையறை மிக எளிது. ”அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்”. அவ்வளவுதான். definition. so simple. அவனுக்குத் தா; இவனுக்குக் கொடு, உவனுக்கு ஈ - என்பதெலாம் இதனுள் அடங்கிவிடும். இழுக்கா இயன்றது= ஈர்க்காது இயன்றது. ஆக அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் நான்கை விட்டுவிட்டாலே வள்ளுவரின்படி அறத்தாற்றினுள் நாம் வந்துவிடுகிறோம். இது அற்றுவிகமா, செயினமா, புத்தமா? ஓர்ந்துபாருங்கள். மூன்றிலுமுண்டு. இன்னும் ஏன்? பிற்காலச் சிவநெறி, விண்ணவத்திலும் இவையுண்டு.

வேதமறுப்பு நெறிகளில் (செயின) முனிவர், (அற்றுவிக) அறிவர், (புத்த) பிக்கு ஆகியோரின் துய்ப்பிற்கான (consumption) உரவு(= வலுச்) செய்வது து(ய்)ப்புரவு> துப்புரவு; அதாவது அவர்களின் உண்டி, (தேவைப்படின்) உடுக்கை, உறைவிட உதவிகளெனப் பலவற்றைப் பார்த்துக்கொள்வது துப்புரவாகும். இதைச் செய்வோர் சால்வகர்>சாவகர் எனும் இல்லறத்தார். துறந்தோரென்போர் துறவிகள். துறவு வாழ்க்கையில் எதைத் துறக்கிறார்? - என்பது முகன்மையான கேள்வி. ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால், “பிறந்து வளர்ந்து இறந்து, மீண்டும் பிறக்கும் பிறவிச் சுழற்சியைத் துறக்கிறார்” என்பது புரியும்.. ஆனால் எல்லோரும் பிறவிச்சுழற்சியை துறக்கும் நிலைக்கு சட்டென வருவதில்லை. அதற்குப் பல பிறவிகள் கூட ஆகலாம்.

இந்நிலைகளைக் கடக்கும் முறை (இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி யறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங் கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினை அச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ் என்ற அதிகாரங்களின் வழி) திருக்குறள் இல்லறவியலிலும், (அருளுடைமை, புலால்மறுத்தல், தவம், கூடாவொழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுயணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்ற அதிகாரங்களின் வழி) துறவறவியலிலும் சொல்லப்படும். (உதிரி உதிரியாகத் திருக்குறளைப் பார்ப்பதைக் காட்டிலும். தொகுதியாய்ப் பார்ப்பதே அதன் சமண அடிப்படையை நமக்குணர்த்தும். சமணம் என்பது மேலே நான் சொன்ன வேதமறுப்புப் பொதுநெறி. செயினமென்று குறுக்கவேண்டாம்.) 

மாந்தவாழ்வில் பல்வேறு நிலைகள் உள்ளதாக வேதமறுப்பு நெறிகள் சொல்லும். காட்டாக, அற்றுவிகத்தில் கரும்பிறப்பு, கருநீலப்பிறப்பு, பசும்பிறப்பு, பொன்பிறப்பு/செம்பிறப்பு, வெண்பிறப்பு, கழிவெண் பிறப்பென 6 வண்ண நிலைகளைச் சொல்வர். (ஒளி வண்ணமாலையில் பொன்னையும், செம்மையையும் பிரித்துக்காட்டுவோம்.) செயினத்திலும் கரும்பிறப்பு, நீலப்பிறப்பு, சாம்பற்பிறப்பு, மஞ்சற்பிறப்பு, வெண்பிறப்பு என்ற படிநிலை கொண்ட இலேசியக் கொள்கையைச் சொல்வர். இதேபோன்ற ஒழுக்கப் படிநிலைகள் புத்தத்திலும் உண்டு.

அற்றுவிகத்தில் பசும்பிறப்பு நிலையென்பது இல்லறத்தாரைக் குறிக்கும். (கரும்பிறப்பு, கருநீலப் பிறப்பு என்பவை பசும்பிறப்பிற்கும் கீழுள்ள இல்லறப் படிநிலைகளாகும்.). ஓராடையுடுத்தும் சமணத் துறவின் தொடக்கர்கள் பொன்பிறப்பு/செம்பிறப்பு, வெண்பிறப்பு ஆகியநிலைகளைக் கடக்க வேண்டுமென்பது அற்றுவிக நிலைப்பாடு.. கழிவெண் பிறப்பென்பது வண்ணங்கடந்த நிலை; உள்ளதிலேயே உச்சம். (இதையே வாலறிவனென்று இரண்டாங் குறள் சொல்லும்.) செயினத்திற் சொல்லும் தீர்த்தங்கரர் போல் இதைக்கொள்ளலாம். அற்றுவிகத்தில் நந்தவாச்சா, கிசசங்கிச்சா, மற்கலி கோசாளர் ஆகிய மூவர்மட்டுமே இந்நிலை அடைந்ததாய்க் கூறுவர். செயினம் இம்மூவரையும் ஏற்காது வர்த்தமானரை முந்தியிருந்த 23 பேரோடு சேர்த்து 24 பேரே இந்நிலை அடைந்ததாய்க் கூறும். புத்தமும் தன்வழியிற் கருத்துக்களைக் கூறும். புத்தத்தின்படி, கோதம புத்தர் கழிவெண்பிறப்பு நிலை அடைந்தவராய்க் கருதப்படுவார். 

உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு

என்றகுறளிற் தவத்தின் வரையறை சொல்லப்படும். தம்வாழ்விற்பெறும் பல்வேறு வதைகளை (துன்பங்களை, வலிகளை) ஏற்று நோல்வதும். (நோ(ல்)வது நோய்) அந் நொம்பலத்தின் வழியாக வெகுண்டு, மற்றவுயிர்க்கு உறுகண் செய்யாது இருப்பதே தவத்தின் உருவென இக்குறள் சொல்லும். இல்லறத்தாரால் வதைகளை ஏற்பது இயலாமற் போய், அவ்வலியால் மற்றவுயிர்க்கு உறுகண் செய்யலாம். ஆனால் துறவறத்திற்குள் நுழைய முற்படும் தொடக்க நிலையாருக்கு இத்தவம் முகன்மையானது. இத் தவமில்லையேல் செம்பிறப்பிலேயே உழன்று மாய வேண்டியது தான். வெண்பிறப்பு நிலைக்குப் போக முடியாது. எனவே உறுதுணை செய்யும் (இல்லறஞ் சார்ந்த) பசும்பிறப்பார், செம்பிறப்பார் தவத்தை மறக்கக்கூடாது. வெறுமே வெண்பிறப்பார் தவத்திற்கு மட்டும் உறுதுணையாவதில் என்ன பயன்? வெண்பிறப்பார் ஏற்கனவே ஒருநிலை கடந்தவர். இப்புரிதலோடு பசும்பிறப்பாரின் கைப்பிடிகாட்டும் 63 ஆம் குறளைப் படியுங்கள். இங்கே மற்றையவர்களென்பது செம்பிறப்பாரைக் குறிக்கிறது..

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்

வெண்பிறப்பு நிலையடைந்தவரின் துப்புரவைப் பேணவேண்டிச் (செயற்படும்) பசும்பிறப்பார், செம்பிறப்பார் தவத்தை மறந்தாரோ? - என்கிறார் வள்ளுவர். குறளுக்கான அற்றுவிகவழிப் புரிதல் இதுவே. மற்றையவர்கள் என்பது இங்கே இரட்டைப்பன்மைப் பெயரல்ல. ஒரு துறவு மடத்துள் செம்பிறப்பாரும் வெண்பிறப்பாருமே உள்ளார். வெண்பிறப்பார் என்பார் முற்றிலும் துறந்தவர்; செம்பிறப்பார் என்பார் அடுத்த படிநிலையாளர். இங்கு மற்றையவரென்பது மதிப்புக் (மரியாதை) குறிக்கும் ஒற்றைப் பெயராகும்..

”ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்,
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்,
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கில் சொல்லா றல்ல”

என்று சொல்லதிகாரம் கிளவியாக்கம் 27 இல் சொல்வார் தொல்காப்பியர். அதாவது இலக்கணப்படி ”மற்றையவர்கள்” என்பது தவறு. ஆனால் தொல்காப்பியர் காலத்திலேயே இது வழக்கிலிருந்தது. இதைப் பால் வழுவமைதி என இலக்கணத்தார் சொல்லுவர். காட்டு: “இளங்கோ வந்தார்”.) வள்ளுவரென்பார் ஓர் இலக்கணியல்ல. இலக்கண வழக்கையும், உலகியல் வழக்கையும் அவர் சேர்த்தே ஆண்டிருக்கிறார். எனவே மற்றையவர்கள் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பழைய உலகவழக்குப் போலும். அதாவது குறிப்பிட்ட மடத்தில் ஒரு வெண்பிறப்பாரோ, பல வெண்பிறப்பாரோ இருக்கலாம். ஆனால் எண்ணிக்கையில் எப்போதும் பலராகிய செம்பிறப்பார் உறுதியாக இருப்பார். இந்நுணுக்கப் புரிதலோடு மேலிருக்கும் குறளைப் படியுங்கள். திருவள்ளுவர் சரியாகச் சொல்லியது புரியும். இவ்விடத்தில் ”கள்” என்பது முகன ஈறு

அன்புடன்,
இராம.கி.

No comments: