”அறுபதாண்டு வட்டமென்பது ஒரு ஆண்டிற்கும் மேலான கால அளவு; அப்படியோர் அலகு நம்மிடம் இருந்ததிற் குற்றமில்லை. ”ப்ரபவ, விபவ....” என்று தொடங்கும் அவற்றின் சங்கதப் பெயர்களைத் தூக்கியெறிந்து மிக எளிதாய் நல்ல தமிழில் அழைக்கலாம்” என்று என் முன்னிகையைத் ”தமிழராண்டுப்” பதிவிற் சொன்னேன். இப்பொழுது திருவள்ளுவர் பெயரால் அமையும் தொடராண்டு பற்றிச் சொல்ல விழைகிறேன். இதில் திருக்குறளின் காலம் பற்றியும் சொல்ல வேண்டியுள்ளது. இக்கட்டுரைத் தொடர் நீளமானது. திருக்குறளென்ற காரணத்திற்காக நீண்டு செய்ய வேண்டியுள்ளது. (என் செய்வது? திருக்குறட் காலத்தைக் கீழிறக்கி விட்டால் தமிழரின் இருப்பையும் இறக்கிவிடலாமென்பது சிலரின் கனவு.)
பொதுவாக வரலாற்றாய்வு என்பது காலவோட்டத்திற் கொஞ்சமும் நகராது போட்டது போட்டபடி குத்துக் கல்லாய் இருப்பதில்லை. புதுத் தரவுகள் கிடைப்பின் கால நிருணயங்கள் பின் நகரலாம். முன் நகரவுஞ் செய்யலாம். மறைமலையார், திரு.வி.க., கா.சு.பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் வள்ளுவர் காலம் ,கி.மு.31 என்று கணித்த போது எதை ஆதாரமாய்க் கொண்டாரெனத் தெரியாது. ஆயினும் பெரும்பாலான தமிழறிஞரின் அற்றைப் புரிதல் அதுவே. புதுத்தரவுகளை வைத்து இக்கணிப்பைச் வேறு சிலர் கீழே கொணர முயல்வதும், இன்னுஞ் சிலர் வேறு புதுத் தரவுகளைக் கொணர்ந்து பொ.உ.மு. 31க்கு முன் கொணரப் பார்ப்பதும் இயல்பாய் நடக்கக் கூடியதே. வள்ளுவர் காலத்தை இன்றறிய விரும்புகிறவர் கமில் சுவலபில் என்ற வெளிநாட்டு ஆளுமையின் தாக்கத்தில் மட்டுமே சொல்லக் கூடாது. ஒவ்வொரு வெளிநாட்டாருக்கும் பின் உள்ளார்ந்த “துபாஷிகள்” உண்டு. சரியான தெளிவு வேண்டின் துபாஷிகளின் சாய்வைப் புரிந்து கொண்டு, வழக்கின் 2 உள்ளூர்ப் பக்கங்களையும் படிக்கவேண்டும். அது தான் சரியான வழி.
தமிழென்று வந்தால் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மறைமலையார் ஒருபக்கம் எனில், வையாபுரியார் இன்னொரு பக்கம். பின்னவருக்கு ஆதரவாய் சங்கதச் சார்பாளரும் இடதுசாரிகளும், தமிழ்த்தேச நோக்கில்லாப் பலரும் இருந்தார். இப்போது 21ஆம் நூற்றாண்டில் இரு கருத்தாரின் பழைய வாதங்களைக் கிளிப்பிள்ளை போல் இனையத்தில் ஒப்புவிக்குஞ் சடங்கும் நடைபெறுகிறது. புதுத் தரவுகளோடு வாதங்களை அலசுகிறவர் இன்று குறைந்து போனார். வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தமிழ்படித்த கமில் சுவலபில்லும் ”தமிழ்ச்சுடர் மணிகளில்” வந்த வையாபுரியார் கருத்துக்களை மந்திரம் போல் மறு வாசிப்பு இன்றி ஓதி வையாபுரியாரிலிருந்து 200 ஆண்டுகள் தள்ளி, ”The Smile of Murugan on Tamil Literature of South India” என்ற தன்நூலில் ”வள்ளுவர் காலம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் முன்னிருக்க வாய்ப்பில்லை” என்பார். சிறகு இதழில் திரு. ஆச்சாரி ”குறளின் மொழி, முந்தைய நூல் மேற்கோள் காட்டல், வடசொற் பயன்பாடு, சமணத் தாக்கம் ஆகியவை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்க காலத்திற்குப் பின்பே எழுதப் பட்டிருக்கலாம்” என்பார். நான் இக்கட்டுரைத் தொடரில் கமில் சுவலபில்லின் கூற்றுக்களை மறுக்கிறேன்.
முதலில் மொழியின் புத்திலக்கணப் பயன்பாடு பற்றிப் பார்க்கலாம். சங்க நூல்களில் இல்லாத புத்திலக்கண முறைகள் முதன் முதலாகத் திருக்குறளில் வருகிறதாம். காட்டாகப் பன்மை குறிக்கும் ‘கள்’ ஈறு குறளில் அஃறிணையில் மட்டுமின்றி உயர்திணையிலும் வருகிறதாம். (263-மற்றையவர்கள், 919-பூரியர்கள்). இது போற் சங்கநூல்களில் இல்லையாம். எனவே திருக்குறளின் காலம் மிகப் பிந்தையதாம். இப்படித் தான் கமில் சுவலபிலின் முதல் வாதம் போகிறது. இதன் மறுமொழியை மாற்றுக் கருத்தார் முன்பே கொடுத்து விட்டார். இருப்பினும் மூலத் தரவுகளை மீளப் பார்த்து சிலநாள் அலசி இங்கு சொல்கிறேன். (கள் பற்றி உரையாடவே மூன்று பதிவுகள் தேவையாய் உள்ளன.). .
மள் என்பது இளமை, இளையோரைக் குறிக்கும் வேர்ச்சொல். மள்ளன்= இளைஞன். (உள்ளார்ந்து வீரனென்ற பொருளுமுண்டு.) மள்+கள்>மட்கள்> மக்கள் என்றாகும். மழவென்ற உரிச்சொல்லிற் கிளைத்து மள்>மழ>மழவு> மகவு என்றாகும். ”மழவுங் குழவும் இளமைப் பொருள” என்பது தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரியியல் 14. மகவென்பது மக என்றும் ஆளப்படும் (தொல்.பொருள்.கற்பியல் 6) மக +கள் =மகக்கள்>மாக்கள்= மாந்தர், குழந்தைகள், குழந்தை மனங் கொண்டோரென்ற பொருள்களுண்டு. (மாக்களை அறிவில்லாதவர் என்றே பலரும் புரிந்து கொள்கிறார். அது தவறு. அவர் குழந்தை மனங் கொண்டவர். விவரந் தெரிந்தோர் அவருக்கு வழிகாட்ட வேண்டும். நாக்கை வளைத்து ழகரஞ் சொல்கையில் கேட்போருக்கு அது ககரமாய்த் தோன்றலாம். சொற்பிறப்பியல் வழி கணிசமான சொற்களைப் பார்க்கையில் ழகரங் ககரமாவது புலப்படும். (பாவாணரைப் படித்தால் இது புரியும்; ஒதுக்குவோருக்கு மட்டுப்படாது. சிக்கலே பாவாணரை ஒதுக்குவதிற்றான் தொடங்குகிறது. சொற்பிறப்பென்ற ஆணிவேரை பாவாணர் பிடித்தது தான் சங்கதச் சார்பாளருக்குத் தலைவலியானது.)
தொடக்கத்தில் காட்டு விலங்காண்டி மாந்தர், ஒரு தலைவி/ தலைவனின் கீழ் பெருங்குடும்பமாகவே அலைந்து திரிந்தார். குழுக்களும் குடும்பத்தின் விரிவுகள் தாம். சில ஆண்டுகளில் குடும்ப உறுப்பினர் எல்லாருமே தலைவரின் மகவாய் ஆகிப்போவார். ”இளையோர்” போகக் குடும்பம், குலம், மாந்தரெனும் பொருட்பாடுகளும் மகவிற்கு வந்துசேரும். குழந்தை போலவே மழந்தை> மகந்தை>மகந்தன்>மாந்தன் என்ற சொல் பிறக்கும். மகன் மானும் ஆவான். இன்றுங் கூடப் பேச்சுவழக்கிற் குழந்தைகளைப் பலவின்பாலாய்ச் சொல்லும் வழக்கமுண்டு. ”எங்க குழந்தை அப்படி ஓடியது, உங்க பொண்ணு பாடுமா? அந்தக் குழந்தை பாருங்க! எப்படி ஆட்டம் போடுது?” இப்படி மகவுகளை மக்களாக்கி அஃறிணை, உயர்திணையிற் பொருத்திச் சொல்வோம். மகன்களும், மகள்களும் சேர்த்தாற் போல் பொதுப்பட மக்கள் ஆவர். கள்ளெனும் வினைக்குத் திரட்சிப் பொருளுமுண்டு. ”கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழியுடைய பலவழிச் சொற்கே” என்று தொல்காப்பியம் சொல்லதிகாரம் பெயரியல் 15 ஆம் நூற்பா வரையறுத்தாலும், அவரே கீழ்வரும் காட்டுக்களில் மக்களென்ற உயர்திணைக்குக் கள்ளெனும் விகுதியைப் பயன்படுத்துவார்.
அப்பெயர் மெய்யொழிந்து அன்கெடு வழியும்
நிற்றலும் உரித்தே அம் என் சாரியை
மக்கள் முறைதொகூஉம் மருங்கி னான
- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியல் 55
மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி
தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே
- தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியல் 109
உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆ இரு திணையின் இசைக்குமன் சொல்லே
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் கிளவியாக்கம் 1
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.
- தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணை இயல் 54
தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால்
- தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 6
காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்ற்
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்தன் பயனே
- தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 51
மாவும் மாக்களும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
- தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 32
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
- தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் 33
ஏன் இப்பயன்பாடு? மகவென்ற சொல்லை அஃறிணையாகவும் உயர்திணை ஆகவும் பேச்சுவழக்கில் கையாளும் மாந்தவியற் காரணந்தான். தொல்காப்பியர் என்ற இலக்கணி நூற்பாவில் பொதுவழக்கைச் சொல்லி, வேறிடத்தில் விதக்கும் புறனடையுங் காட்டுவார். அதாவது விதியுங் காட்டி, விதி மீறலையுங் காட்டுவார். He was not a linguistic commissar, but a grammarian. There are many practices between the cup and lip. தொல்காப்பியத்திலிருந்து ஆதாரங் கொடுத்தால் இன்னொரு சிக்கலிருக்கிறது. மாற்றுக் கருத்தார், ”தொல்காப்பியர் தானே உங்களாதாரம்? அவர் காலத்தையே நாங்க doubtலெ போடுவோமே? அப்புறம் நீங்க அம்பேல்" என்று தொல்காப்பியர் காலம் பொ;உ.5 ஆம் நூற்றாண்டென்று பிறழச் சொல்வர்.
வேறொன்றுமில்லை, பாணினியை முன் கொணர்ந்து தொல்காப்பியரைப் பின்னுக்குத் தள்ளுவதில் அவருக்கவ்வளவு உகப்பு. .இப்படியொரு பட்டவம் (fashion) நூறாண்டாய் இங்கு நடக்கிறது. பெரிதும் முயன்று, பென்னம் பெரிய சான்றுகளோடு தொல்காப்பியக் காலம் பொ.உ.மு.7/8 ஆம் நூற்றாண்டென்று காட்டினாலும் உரையாட்டை வேறு பக்கம் மாற்றுவர். இதுவரை பொ.உ.மு. 7/8 நூற்றாண்டை மறுக்கும் கருத்தை ஓராசிரியரும் உருப்படியாய் தன்னாய்வாய் ஊற்று மூலங்களை வைத்துக் கூறி நான் பார்த்தில்லை. எல்லாம் “அவர் சொன்னார், இவர் சொன்னார்” தான். 20 ஆம் நூற்றாண்டு மறு சுழற்சிகள் தாம். உண்மையில் தொல்காப்பியம் போன்ற இலக்கணமெழ, தமிழ் பல்லாண்டு காலம் பேச்சுமொழியாக இருந்திருக்கவேண்டும். (பாணினியின் காலம் பொ.உ.மு.4 ஆம் நூற்றாண்டெனில், அதற்குமுன் குறைந்தது 1000 ஆண்டுகளாவது சந்தமொழி இருப்பைச் சொல்கிறாரில்லையா? தமிழுக்கு மட்டும் பின் ஏன் ஓரவஞ்சனை? ஒருகண்ணில் வெண்ணெய்; இன்னொரு கண்ணிற் சுண்ணாம்பா?)
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment