Tuesday, July 24, 2018

திருவள்ளுவராண்டு - 7

அடுத்தது அந்தம் (563),

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

இங்கே ஒருதல் (= ஒன்றுதல்), வருதல் என்ற இருவினைகளின் கூட்டிற் பிறந்த ஒருவந்தம் என்ற பெயர்ச்சொல்லால், ”அச்சம் தருவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலுடையவனாய் ஓர் அரசன் ஆகிவிட்டால், ஒருசேரக் கடிதிற் கெடுவான்” என்ற பொருள் வந்துசேரும் இதற்கு மாறாய் ஒரு அந்தம் என்றதைப் பிரித்து, ஏகாந்தப் பொருள் கொண்டு, “அச்சம் தருவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலுடையவனாய் ஓரரசன் ஆகி விட்டால், ஏகாந்தனாய்க் கடிதிற் கெடுவான்” என்பது பரிமேலழகரின் வல்லடியுரை. ஆகக் கமில் சுவலபில்லிற்கும், வையாபுரியாருக்கும் முன் நின்று வடசொல் எனக் கூறியது பரிமேலழகரே. தன் சிந்தனையில் தனக்குப் பழக்கமான தமிழில், வடமொழி இடைப்பரட்டோடு அவர் உரைத்திருக்கிறார். நாம் பரிமேலழகரைப் படிக்கவேண்டும் எனினும், இதுபோல் அவர்தம் இடைப்பரட்டை வள்ளுவர்மேல் ஏற்றுவது சரியா? உரையாசிரியருக்குச் சாய்வேயில்லையா? பொ.உ. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை சங்கதவழிச் சிந்தனை தமிழிற் கூடித் தமிழ் X வடமொழி முரண்பாடு இங்கே முற்றியதற்கு உரையாசிரியரே பெருங்காரணம். இக்கால இணையப் புலிகளோ இவை எதற்றையும் மீள ஆயாது, பரிமேலழகருக்கு கிளிப்பிள்ளை யாகிறார்  (பாவாணர் கூட அந்தத்தை வடசொல் என்றே கொள்வார். நான் பாவாணரிலிருந்தும் இங்கு வேறுபடுவேன்.)

இனிப் பரிமேலகர் கருத்தை எடுத்துக்கொண்டு “அந்தம்” என்ற சொல்லுக்கு வருவோம். தமிழில் இல்லுதல்= குற்றுதல். இல்தல்>இற்றலாகும். பேச்சு வழக்கில் இத்தலென்போம். ஒருபொருள் தேய்ந்து ஓட்டை விழுந்தால் இற்றியதென்போம். ஒரு நூற்கண்டோ, கம்பியோ இற்றுப்போயின் அது முறிந்து 2 முனைகள் உண்டாகும். இறுதல்= முடிதல். இறுவெனும் வினைச் சொல் ஈறெனும் பெயர்ச்சொல்லை உருவாக்கும். இல்லுக்கும் அல்லுக்கும் தமிழில் எப்போதும் உறவுண்டு. அல்லுதல்= இல்லாதுபோதல். அல்லுதலைச் (’அல்ல’ இதிலெழுந்தது) சிலவிடத்தும் இல்லுதலைச் (’இல்லை’ இதில் எழுந்தது) சில இடத்தும் மரபு கருதிப் பயனுறுத்துவோம். அல்ந்தது அந்து போகும். ”நூல் அந்திருச்சு” என்று சிவகங்கைப் பக்கஞ் சொன்னால், நூல் அறுந்துவிட்டதென்று பொருள். நாங்கள் பேசுவது தமிழ் தானே? அல்லுதலும் அறுதலும் தொடர்பானாவை. அந்துதலென்பது நற்றமிழே. அந்து = அந்தியதின் முனை. அந்திற் பெரியது அந்தம்.

இங்கொரு முரண் சொல்லவேண்டும். ’அந்துதல்’ ஒரு பக்கம் அறுதல் பொருளையும், இன்னொரு பக்கம் கலத்தல், பொருந்துதல் பொருளிலும் வரும். ஆறுமணிக்கருகில் எற்பாடும் மாலையும் கலக்கும் நேரம் அந்தி. இதைச் சகரஞ் சேர்த்துச் சந்தியென்றுஞ் சொல்வார். வாங்க, விற்கக் கூடுமிடம் சந்தை. 2/3 தெருக்கள் கூடுமிடம் சந்தி. (அந்தியென்றுஞ் சொல்லப்படும்.) மொத்தக்கூட்டுத் தொகை அந்து. அந்தின் வலிமிகு சொல் அத்து இது பற்றி முன்பதிவில் நிறையப் பேசிவிட்டோம். இருவகைப் பொருளும் தமிழ்த் தோற்றங் கொண்டவையே. ஒரேசொல்லுக்கு இருவேறு முரணான பொருள்கள் அமைவது தமிழிற் சில சொற்களுக்குண்டு. முனைகுறிக்கும் இந்தையிரோப்பிய end உம், சங்கத அந்தமும் தமிழ் இற்றோடும், அந்தோடும் தொடர்புடையன. எப்படியென்று சொல்ல எம்போன்றோர் முயல்கிறோம். ஆனால் ”சங்கதத்தின் முன் தமிழா?” என்ற முடிந்த முடிவில் எம்மைப் பேசவிடாது தடுக்க ஏராளமான பண்டிதர் முயன்று கொண்டே இருக்கிறார். என்றோ ஒரு நாள் உண்மை வெளிப்படும். நான் பார்த்த வரை இவ்வுறவுகள் அதிகம் உள்ளன. சங்கதம் மேடெனும் பார்வை அதைக் கோணலாகவே பார்க்கிறது.   
    .   
அடுத்தது அமர் (814)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

அமர் (battle) என்பது போரின் (war) ஒரு பகுதி. இதைச் சமரென்றுஞ் சொல்வர். அமர் முதலா, சமர் முதலா என்பது நம் பார்வையைப் பொறுத்தது. சகரம் மெலிவது ஒருவகை. சகரஞ் சேரும் என்பது இன்னொரு வகை. இரண்டில் எது சரி என்பதில் ஒருமித்த கருத்தில்லை. இரண்டும் நடக்கலாம்.. அமலுதல் வினை தமிழானதால் ’அமர்’ தமிழென்றே நான் எண்ணுகிறேன். இருவேறு கூட்டத்தார் தம் வலியைக் காட்டிச் சமர்களாற் பொருதுவதே போர். அதையே வேறொரு போக்கில் விதிகளுக்காட்பட்டு விளையாட்டாய்ப் பொருதுவது பொருது (sport). இனி, அமல்வது (அமர்வது) அமர். ”அமர்தல் மேவல்” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரிச்சொல்லியல் சொல்லும் வாசகம். ஒருவர் இன்னொருவரை வென்று மேல்வருதல் என்பது மேவுதலாகும்.

போர்க்களத்தில் பகைப்படைகள் கலத்தலும் கூடுதலே. (அன்பாற் கலத்தலுக்கு மாறாய் இங்கே பகையாற் கலக்கிறார். அதுவே வேறுபாடு.) உம்முதல்= கலத்தல், கூடுதல். உம்>அம்>அமல்>அமர் என்று இச்சொல் வளரும். சங்க இலக்கியத்தில் பல்வேறு சமர்களும் போர்களும் பேசப்படுகின்றன. குடிகளிடையே சள்ளிட்டுச் சண்டை (சள்+ந்+து = சண்டு>சண்டை) போட்டுக் காலங் கழித்தவரிடம், சேர, சோழ, பாண்டியர் எனும் பெருங்குடிகளைத் தம்முள்ளே உருவாக்கி நிலைத்தவரிடம் சமரென்ற சொல்லில்லை என்பது முற்றிலும் வியப்பானது. போரையும் காதலையும் விடுத்தால் சங்க இலக்கியம் 80 விழுக்காடு காணாது போகும். இன்னொன்றையும் இங்கு சொல்லவேண்டும். உ>உத்து என்பதும் பொருத்துவதே. உத்து>உத்தம் என்பதில் யகரத்தை முன்சேர்த்தால் சங்கத ”யுத்தங்” கிடைக்கும். உத்தில் பயன்படுத்தும் வழிமுறை உத்தி. இது பின்னால் வெவ்வேறு தொழில்களில் நுழையும். (இலக்கியம் படைப்பதில் 32 உத்திகளை தொல்காப்பியங் கூறும்.) அதிலும் முன்னால் யகரஞ் சேர்த்து யுத்தி>யுக்தி என்றாகும். யுத்தத்தில் ”பெரும் யுத்தம் மகா யுத்தம்” என்று சங்கத வழி சொல்லப்படும்.. . 

போரின் பகுதியான சமரில் அடுவரை (tactics) என்பது முகன்மை. சமர்களின் தொகுதியான போரில் தடவரை (strategy) என்பது முகன்மை. போரில் வெல்வதற்காகச் சமர்களில் தோற்பது நடந்துள்ளது. சில சமர்களின் வெற்றித் தாக்கத்தால் போர்கள் வெற்றியடைந்துள்ளன. அடுத்தடுத்து வெறி (வெறியின் தொடர்ச்சி வீரம்), திறன், மும்முரம், உத்திகள், அடவுகள் (அடவு = arrangement of actions) என முறைப்படுத்தி எதிரியோடு சமரிட்டு நகர்வதே வெற்றிக்கு இட்டுச் செல்லும். ஈழப்போர் வருமுன் தம் பட்டறிவால் அணமைக்காலப் போரைப் பார்த்திராத இற்றைத்தமிழர் பல போர்ச்சொற்களின் பொருள் புரியாதிருந்தார். இப்போது அவருக்குக் கொஞ்சங்கொஞ்சமாய்ப் புரியத் தொடங்குகின்றன. ஆனால் என்ன செய்வது? ஈழப்போர் வெற்றி பெறாது போனது.

அமரகம் = battle field; போர்முனை = war front. அமரகத்திற்கென்று ஒரு போக்கு/ஆறு இருக்கும். இதை இருவேறு படைகளின் அடுவரைகள் நிருணயிக்கின்றன.. இவ்வாற்றை அறுக்கும் வகையில் பழக்கமில்லாக் குதிரையோ, யானையோ குறுக்கு வந்தால் அங்கு குழப்பமே மிஞ்சும். குதிரைகளை மிரள வைத்தும், யானைக்கு மதம்வர வைத்துஞ் சமரைத் திருப்பும் உத்தி சங்க இலக்கியங்களில் வரும், அருத்த சாற்றத்திலுஞ் சொல்லப்படும். கல்லுதல்= கற்றல்; இங்கே பழக்குதல். கல்லா மா = பழக்கம் பற்றாத அடைப்பு விலங்குகள் (improerly trained domestic animals). கல்லா மா அன்னார் = கல்லா விலங்குகளைப் போன்ற மாந்தர், (அமைச்சர், படைத் தலைவர், கூட வரும் அரசர், குறுநிலத்தார் என எவராயினும் இவர் அமையலாம். இத்தகையோர் அரசனின் நட்பாளராய் இங்கிருந்தார் என்பதே அடிப்படைச் செய்தி.) ”இவரைப் போன்றவர் அருகிருப்பதைக் காட்டிலும் தனிமையே அரசனுக்குச் சிறப்பு” என்று இங்கே வள்ளுவர் சொல்கிறார். (”கேட்பார் பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போகாதே” என்று மற்றோருக்கு அறிவுரை சொல்கிறோமே, அது நினைவிற்கு வருகிறதா?)

இக் கல்லா மாக்களின் ஓர்மைகளைக் கேட்டால் அமரகத்தில் அரசன் கொள்ளும் (வெறி, வீரம், திறன், மும்முரம், உத்தி, அடவு நிறைந்த) அடுவரை, குலைந்தே போகும். பின்னால் முகன்மையான சமரிற் தோற்று, அதனால் மொத்தப் போரிலுந் தோற்றுப் போகலாம். ஈழப் போர் ஏன் தோற்றதென இன்று பலரும் ஆய்ந்துகொண்டிருக்கும் வேளையில் எந்தச் சமர்கள் தோற்றனவென அலசுவதும் தேவையானது. இந்தக் குறள் அதற்குப் பயன்படலாம். அடுத்த சொல்லிற்குப் போவோம். அமரர் (121),

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

இக்குறளில் வரும் அமரரைத் தேவரென்று பொருள்கொண்டோர் மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் முதல் பாவாணர் வரைப் பலர். இப்பொருளிலிருந்து மாறி ”திருக்குறள் மெய்ப்பொருளுரை” கண்டவர் பெருஞ்சித்திரனார் ஒருவரே. அமரர்க்குக் ”புகழோடிருப்பவர்” என்று அவர் பொருள்சொன்னதை நானும் ஏற்பேன். ஆனால் அதோடு நிற்காது பழந்தமிழர் குமுகாய மரபையும் ஆதாரமாய்ச் சொல்வேன். தமிழரின் பழங்குடி மரபுப்படி ”இறந்தோரை எரிப்பதில்லை; புதைப்பதே வழக்கம்”.. எரிவழக்கம் நெடுங் காலங் கழித்து வடக்கிருந்து வந்தது. புதைப்பதிலும் இங்கே இருவேறு வழக்கமுண்டு. சாத்தார (சாதாரண) மாந்தரை வெறும் மண்ணிலும், உயர்ந்தோரை, அறிவரை, தலைவரைப் பதுக்கைகளிலும், தாழியிலும் புதைத்தார். (பழம் எகிப்திலும் கூட இப்படி நடந்தது. சாத்தார மாந்தருக்கு மண்ணிற் புதைப்பு. பெரியோருக்கு pyramid.)

பெரியோரைப் புதைக்கையில் நம்மூரில் அமரவைத்தே புதைப்பார். மற்றோரைக் கிடத்திப்புதைப்பர். (எகிப்தில் பெரியோருக்கு sarcophagi யும் மற்றோருக்குத் துணிச்சுற்றும் அமைப்பர்). சங்கராச்சாரியர் முதலாய்த் துறவிகளை இன்றும் அமர வைத்தே புதைத்துப் பள்ளிப்படையெடுப்பர். பெரியோரின் உடலை ஊருலவாய்ச் சுற்றிவருகையில் அமர்த்தியே செய்வர். மற்றோரைக் கிடத்திக் கொணர்வர். நாம் காணும் பென்னம்பெரிய கோயில்களிற் பலவும் ஆழ்ந்துபார்த்தால் பள்ளிப்படைகளாகவே உள்ளன. புதைத்த மேட்டில் ஓர் இலிங்கம் வைப்பார். அம்மன் கோயில்களில் மார்புவரை திருமேனி தரையில் பதிக்கப் படும். (மாங்காடு, திருவேற்காடு போன்றவையுங் கூடப் பள்ளிப்படைக் கோயில்களே.) அவற்றிலெல்லாம் ஏதோவொரு பெரியவர் திருமேனி இருந்திருக்கிறது. இது நம் மரபு அவ்வளவு தான். இங்கே அமரர் எனுஞ் சொல் அமர்த்தப்பட்ட மதிப்பிற்குரிய பெரியவரைக் குறிக்கும். “.மனவடக்கம், மெய்யடக்கம். அறிவடக்கம் கொள்வது அமரராய்ப் போய்ச் சேரும் பெரியவருள் நம்மை உய்விக்கும். அடக்கமிலாமை உயர்வுக்கு மாறாய் இருளிற் கொண்டு சேர்க்கும்” என்கிறார் வள்ளுவர். 

இக்குறளுக்கு வேதநெறியினுடைய அல்லது வடபுலத்து மற்ற நெறிகளுடைய உட்பொருள்களை நாம் கொண்டுசேர்க்க வேண்டியதில்லை. சங்ககாலத்தில் நம்மிடமிருந்த பழக்கமே போதும், தமிழரிடம் விளைந்து வடக்கேபோன அற்றுவிகம் (அஜிவிகம்) இதே உடலடக்க முறையை அங்கே சொன்னாலும், நாளடைவில் சற்று உருமாறி ”தேவர், பாதாளர் என்ற நம்பிக்கைகளை எடுத்துக்கொண்டதோ?” என்ற ஐயம் எனக்குண்டு. ஏனெனில் 84 இலக்கம் பிறவிகள் என்ற கருத்தீடு அற்றுவிகம், செயினம், புத்தம், உத்தர மீமாஞ்சம் (பூருவ மீமாஞ்சத்தில் இது இல்லை), சிவம் (திருமந்திரத்தில் பார்த்து வியந்து போனேன்), விண்ணவம் என எல்லாவற்றிலும் வந்துள்ளது. இவ்வுலகத்தில் 6 வித அறிவுயிர்கள் இருப்பதாயிருந்த தமிழர் புரிதல் தொல்காப்பியம் உரியியல் வழி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆரறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

என்ற மரபியல் 27 ஆம் நூற்பாவை எண்ணிப் பாருங்கள். ஈரேழு பதினாலு உலகமென்ற கருத்தீட்டை இதோடு பொருத்தினால் 14*6 = 84 வகை உயிரின பெருவகுப்பு 14 உலகத்திலும் இருப்பதாய்க் கொள்ளமுடியும். ஒவ்வொரு வகுப்பிலும் குத்து மதிப்பாய் (ஞாவகம் குத்து மதிப்பாய்) ஓரிலக்கம் உயிரினங்களென்று கொண்டால், இப்பேரண்டத்தில் 84 இலக்கம் பிறவிகள் இருப்பதாய் ஒரு கணக்கு வந்து சேரும். மொத்தப் பிறவிகள் இத்தனை என்று மேற்சொன்ன எல்லா நெறிகளும் சொல்லும். அற்றுவிகம் 85 இலக்கம் பிறவிகளிலும் புகுந்துவந்தாற்றான் வீடுபேறென்று சொல்லும். மற்ற நெறிகள் முற்பிறப்பிற் செய்யும் தீவினையை இப்பிறப்பின் நல்வினையாற் குறைக்கமுடியுமென்னும். அதற்குவழிகளாய் ஒவ்வொரு நெறியும் ஒவ்வொரு வழிமுறை சொல்லும். 84 இலக்கம் பிறப்புகளை முற்றும் மறுத்தவர் சாருவாகரெனும் பொருள்முதல்வாதிகள் மட்டுமே. அவரை ”இன்பவாதி” என மற்றவரெலாந் திட்டுவார். இதை எதற்குச் சொன்னேன் என்றால் 84 இலக்கத்தை நம்பும் எல்லோரும் அமரர் = தேவர் என்பதை நம்புவோர் தாம். துறக்கம் (சொர்க்கம்), நிரயம் (நரகம்) என்பதை நம்புவோர் தாம்.

வள்ளுவரின் இக்குறளுக்கான பொருளைவிரிக்க, மேற்கூறிய நெறிகள் எதற்குள்ளும் போக வேண்டியதேயில்லை. எனவே ”அமரரைத்” தமிழாகவே கொள்ளலாம்.     
       . 
அன்புடன்,
இராம.கி.


No comments: