Monday, July 23, 2018

திருவள்ளுவராண்டு - 6

அடுத்தது அச்சு (475)

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்

அச்சு என்ற சொல்லுக்கான விடையைக் கம்முதல், கமுக்கம், கமுக்கூடு, கமுக்குள், கம்குள்/கங்குள், கக்குள், கக்கம், அக்குள் என்ற சொற்களை எல்லாம் பார்த்துவிட்டுப் பிறகு சொல்லவேண்டும்.

கம்மல் = அடங்குதல், மூடுதல். கம்முன்னு கிட = சத்தமின்றி அடங்கிக்கிட. ஒர்ு திரைப்படத்தில் (சம்சாரம் அது மின்சாரமா?!) மனோரமா சொல்லுவார் பாருங்கள்.  கம்மலின் நீட்டம் கமுக்கம் = மறைப்பு. இன்னொருவர் அறியாது ஏதேனும் உடற்கூட்டால்/மூட்டாற் கமுக்கச்செயல் செய்ய முடியுமெனில் கைவிரல் மூட்டுக்களாலும், தோள்மூட்டாலும் மட்டுமே முடியும். (தோள் ஒரு தனியுறுப்பல்ல. தோட்பட்டை, மேற்கை, பந்துக்கிண்ணமூட்டு, மூடுதசைகள் என எல்லாஞ்சேர்ந்ததே தோள்), விரல்களைக்கூட எளிதிற் திறந்துவிடலாம்; தோள்மூட்டுள் சிறுபொருள் மறைத்தால் சட்டெனத் தெரியாது. எனவே அது கமுக்கூடாயிற்று. சிறுவெங்காயத்தை இதில்மறைத்து ஓரிருபாகை உடல் வெம்மை கூட்டிக் காய்ச்சல் வரவைத்து சிற்றகவையில் விளையாடியது நினைவுக்கு வருகிறது.

கமுக்கூட்டைச் சிவகங்கைப் பக்கம் கம்புக்கூடென்பார். கமுக்குள் எனவுஞ் சுருங்கும். குள் = குழி. கைக்குழியைக் குறிக்கும் வகையில் தமிழல்லாத திராவிடமொழிகளில் கமுக்குள்>கம்குள்>கங்குழ்/ கங்குள் எனப்படும். (க.கங்குழ், கங்குழ, கங்குழு, கவுங்குழ், கொங்கழ், கொங்கழ; து. கங்குள; தெ. சங்கெ, சங்கிலி; பட. கக்குவ) கங்குளில் வல்லினமேற்றி தமிழிற் கக்குள் என்றுஞ் சொல்வோம். கக்குள் கக்கமுமாகும். முன் ககரம் மெலிந்து இது அக்குளுமாகும். கக்குளின் முடிவிலுள்ள ளகரம் என்பது ஒரு முகன்மைக் குறிப்பு. அது இல்லெனில் குழிப்பொருள் புரியாது. கக்கம் சங்கதத்துட்போய் கக்ஷ, அக்ஷவென ஆகும். மேலையிரோப்பியனுள் அக்குள் போய் axle ஆகும். (ளகரத்தைக் கவனியுங்கள். இலத்தினிலிருந்தது சங்கதத்தில் இல்லை.)

கக்குள் மூட்டால், ஒருபக்கம் தோள்பட்டை நிலைத்து நிற்க, இன்னொரு பக்கம் மேற்கை சுழலும். இதே மாகனியம் (mechanism) வண்டியிற் பயனாகும். வண்டி யச்சு தோள் போலவும், மேற்கை சக்கரம் போலவும் உருக்கொள்ளும். பந்து கிண்ண மூட்டு, அச்சும் சக்கரமும் சேருவது போல் உருக்கொள்ளும். வண்டி என்பது சங்கதம் உருவாகும் முன்னமே இருந்தபொருள். அதைச் சிந்து சமவெளியிலேயே கண்டு பிடித்திருக்கிறார். குதிரையால் வண்டியிழுத்தது பின்னால் வந்திருக்கலாம். மாடு கொண்டு வண்டியிழுத்தது குறைந்தது 4600 ஆண்டுகளுக்கு முன். எனவே அச்சுப் பொருளுக்கு அக்காலத்தில் பெயர் இருந்திருக்க வேண்டும். அது சங்கதமாய் இருந்திருக்க வழியில்லை. அது தமிழா? தெரியாது. ஒரு வேளை இருக்கலாம். அச்சென்ற சொல் அக்ஷ என்பதிலிருந்து வந்ததென்பது ஒருவகைக் கருதுகோள். அவ்வளவு தான். மேற்சொன்ன இத்தனை சொற்கள் உள்ள தமிழில் அச்சைச் சங்கதத்திலிருந்து கடன்வாங்கினார் என்பது வியப்பாகவுள்ளது. ”ச்ச” என்ற எழுத்துக்கூட்டு வந்தாலே அது க்ஷ என்ற ஒலிக்கூட்டிலிருந்து தான் வந்திருக்கவேண்டும் என்றுசிலர் சொல்வது முறையாய்த் தெரியவில்லை. இதுவொரு இணையாகவும் இருக்கலாம். அக்கமென்ற சொல் அச்சென்ற சொல்லையும் அக்ஷ என்ற சங்கதச் சொல்லையும் வெவ்வேறு வட்டாரங்களில் சம காலத்தில் உருவாக்கியிருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் வேர் தமிழில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
              ,   
இன்னும் அடுத்தது அதி (636).

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முநிற்ப வை

இக்குறளில் அதி என்பதை வடமொழி இடைச்சொல்லென பரிமேலகர் சொல்லி விட்டதால் வையாபுரியார் அப்படியே ஏற்றுக்கொண்டார் போலும். முன் ஒருமுறை பத்தாண்டுகளுக்கு முன் அதிட்டம் என்ற கட்டுரையில் (http://valavu.blogspot.in/2007/03/blog-post_20.html) இது பற்றிப் பேசினேன். அதை இங்கே வெட்டியொட்டுகிறேன். 

தமிழில் அடுதலென்பது சார்தல், சேர்தல் பொருள்தரும் வினைச்சொல். அள் எனும் வேர். நெருங்குதல் பொருளுடையது. அட்டுதலென்பது பிணைத்தல், ஒட்டுதல் பொருளில் பிறவினை காட்டும். இதே போல அடுத்தலும் பிறவினைச் சொல் தான். அடுத்தது = next என்ற பொருளிற் சொல்கிறோமே, அதைக் கவனியுங்கள். ஒன்றன்பின் ஒன்றாய் அடுத்திருப்பது அடுக்கு என்றாகும். நம் உடம்பை அட்டி, அரத்தமுறிஞ்சும் புழு அட்டைப்புழுவாகும். பொத்தகத்தின் இருமருங்கும் அட்டித்து (ஒட்டி) இருக்கும் கனத்த தாள் அட்டை. அடுத்தென்ற சொல் மென்மேலென்ற பொருளையும் கொண்டுவந்து தரும். (தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டு விற்கப்போன தமிழர் எல்லோரும்) அவர் கடைகளில் (அது எதுவாயிருந்தாலும்) நமக்கு உதவியாய் இருப்பவரை (assistant) அடுத்தாள் என்பார். அடுத்தேறு என்ற சொல் மிகை என்ற பொருளில் திருவாய்மொழி ஈடு, முப்பத்தாறாயிரப்படி 3,8,9 -இல் "அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து" என்று பயிலப்பட்டுள்ளது.

அடுத்தலின் திரிவான அடர்த்தல், செறிதற் பொருளில் ஆளப்பட்டுள்ளது. நாங்கள் பள்ளியிற் படித்தபோது, அடர்த்தி என்பது densityக்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. (இன்றைக்குத் திணிமை என்றே நான் புழங்குகிறேன். திணித்தது திண்மம் - denser substance is solid. At the same time solidity is more meaningful than density. திண்மத்தனம் என்பது திணிமையைக் காட்டிலும் பெரியது. இப்போதெல்லாம் concentration க்கு இணையாய்ச் செறிவைப் பயனுறுத்துகிறோம்.) மேற்சொன்ன தென்கிழக்காசியாவிற்குக் கொண்டு விற்கப் போன தமிழர் கடைகளில் அடத்தி என்பது wholesalerக்கு இணையாய்ப் பயன்பட்டது. அடத்தியிடம் பொருள் வாங்கிச் சில்லரை வணிகர் வாய்பகரம் (=வியாபாரம் = trade) செய்வார். 

சேர்ப்பென்ற பொருள் நாளாவட்டத்தில் பெரியதெனும் பொருளைக் கொடுக்கும். அட்டக்கரி, அட்டக்கருப்பு என்பவை, அடர்கருப்புநிறப் பொருளில் நாட்டுப்புறங்களில் பயன்படுவதை ஓர்ந்துபாருங்கள். "பெருந்தொல்லை" என்ற பொருளிற் பயன்படும் அட்டகாசமென்ற சொல்லையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். மொத்தமாகத் தெரிவுசெய்த வரியை (total tax) அடந்தேற்றம் என்று (அடந்து தெரிந்தது) சொல்லும் பழக்கமும் ஒருகாலத்திலிருந்தது. இன்றைக்கு மொத்தவரி என்று சொல்லிவிடுகிறோம். "வந்துசேர்ந்தது" என்பதை அடைதலென்கிறோம். அடைதலின் பிறவினையாய் அடைச்சுதல்/சேர்ப்பித்தல் என்பதும் சொல்லாட்சி கொண்டுள்ளது. வேறுபெயரில் அழைக்காமல், கடலையடையும் குறுவாற்றை அடையாறென்றே சென்னையில் அழைக்கிறோம். அடைத்தலென்பது நியமித்தல், விதித்தல் என்ற பொருளுங் கொள்ளும். அடைமானம், வாங்கிய கடனுக்கு மாறாக நியமித்தது, விதித்ததென்றே பொருள் கொள்ளும். பல பருப்புக்களையும் அரிசியையுஞ் சேர்த்தரைத்து மாவாக்கிச் சுடும் பண்டத்திற்கு அடையென்றே பெயர். (சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிதும் விரும்பப்படும் உணவு.) எங்கோ ஓர் ஒழுக்கு (leak) ஏற்பட்டு, அவ்வொழுக்கை அடைக்கிறோம்; அது அடைப்பாகிறது". மூடுதல், பொருத்துதலென்ற பொருளும் வந்து சேர்கிறது.

அடைதலின் இன்னொரு திரிவாய் அடைசுதலென்ற சொல் நெருங்குதல், அளவுக்கதிகமாகச் சேர்தல், பொருந்துதலென்ற பொருட்பாடுகளில் ஆளப் பட்டுள்ளது. "என்ன இது, வீடெல்லாம் அடைசலாய்க் கிடக்கிறது?" என்பது சிவகங்கை வழக்கு. நாட்டியத்திற் காட்டும் வெவ்வேறு கைப்பொருத்துகளை, அடைவென்கிறோம். சிலபோது இது அடவென்றும் எழுதப்படுகிறது. அடவுகள் தெரியாமல் நாட்டியம் கற்கமுடியாது. வெவ்வேறு பொருத்தங்கள், வித விதமாய் அமைவதால் அடவென்ற (arrangement) சொல்லையே இன்று designக்கு இணையாய்ப் பொறியியலில் பயன்படுத்துகிறோம். மேலைமொழியிலும் arrangement என்ற கருத்துத்தான் design எழக் காரணமாயிருந்தது. ”இளமைக் காலத்தில், நான் ஓர் அடவுப்பொறிஞனாய் இருந்தேன் - I was a design engineer in my younger days".

முன்சொன்னது போல் டகரவொலி தகரமாய்த் திரிவது தமிழிலுள்ள பழக்கம்; குறிப்பாக வடபுலத்தில் இது இன்னும் விரிவான பழக்கம். இரு துண்டை ஒன்றாய்ப் பொருத்தித் தைத்தலை அத்துதலென்று வின்சுலோ அகரமுதலி குறிக்கும். "அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம்" என்று பிங்கலம் 2302 குறிக்கும். அத்தென்ற சாரியை கூடச்சேர்ந்த என்ற பொருளைத் தமிழிற் குறிக்கும். "காமத்துப் பகை" (குறுந்: 257) "அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்" (சில. 4, 3) போன்ற சொல்லாட்சிகள் தமிழில் கணக்கற்றுண்டு. "வானம் என்பதைச் சேர்ந்த அணிநிலா" என்ற கருத்தை ஆழப் புரிந்து கொண்டால் அத்தென்பது எவ்வளவுதூரம் தமிழ்வழக்கைச் சேர்ந்ததென்பது புரியும். "அந்தத் தோட்டத்து மாம்பழம்" எனும்போது, தோட்டமும் மாம்பழமும் ஒன்றோடொன்று சேர்ந்தது புலப்படும். ஆங்கிலத்தில் and என்பதும் add என்பதும் ஒரேபொருள்தான். மற்ற மேலைமொழிகளிலும் இதுபோல் சொல்லிணையைக் காணமுடியும். தமிழிலும் அதேபொருள். அடுத்தல்/அத்து என்பதில் வருவதை எண்ணிப்பாருங்கள்.

இனி (தமிழும் சங்கதமுங் கலந்த) இரு பிறப்பியாய் அத்தியந்தம் என்றசொல் "முற்று முழுமையாக, மிகவும்" என்ற பொருட்பாடுகளைக் காட்டும். அத்தித்தல்>அதித்தல் என்பது சிறத்தல், மிகுதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். அதிகம் என்ற பெயர்ச்சொல் மிகுதியென்ற பொருளைச் சுட்டும். காளமேகப் புலவரின் வேடிக்கையான பாட்டு அதிகமென்ற சொல்லை ஆளும்விதத்தைப் படியுங்கள்.

கண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலுமோ யான் அதிகம் ஒன்றுகேள் - முன்னமே
உன்பிறப்போ பத்தாம் உயர்சிவனுக்கு ஒன்றுமிலை
என்பிறப்பெண் ணத்தொலையா தே.

அதி என்ற முன்னொட்டு மிகுதி, அப்பால், மேல், மேன்மை என்பவற்றை உணர்த்தி வடமொழியில் பயிலும். நான் அறிந்தவரை பாணினியின் தாது பாடத்தில் அதி என்பதற்கு எந்த வேர்ச்சொல்லையும் காட்டவில்லை. மோனியர் வில்லியம்சே கூட, இதை முன்னொட்டென்று சொல்லி, அதன் ஊற்றுகை (origin) ஏதென்று சொல்வதில்லை. (ஆனாலும் அதிர்ஷ்டம் என்ற வடமொழித் தோற்றம் கொண்ட சொல்லை வடமொழிச்சொல் என்றே பலரும் எழுதி வருகிறார். எனக்குப் புரியவில்லை. நான் எதைக் கவனிக்க மறந்தேன் என்று அறிந்தவர் கூறினால் திருத்திக்கொள்வேன். பல சொற்களை இதுபோல வெறும் நம்பிக்கையில் வடமொழி எனும் பழக்கம் நம்மிடம் அதிகமாகவே உள்ளது. அதிர்ஷ்டம் என்ற தோற்றங்கண்டு மருண்டுபோனால் எப்படி? உண்மையில் அதிட்டியது அதிட்டு>அதிட்டம். இதை இருட்டியது இருட்டைப் போல் என்று புரிந்துகொள்ளுங்கள். அதிட்டம் என்பது வடமொழியிற் போகும் போது, அதிஷ்டம்>அதிர்ஷ்டம் என்று பலுக்கப்படும் ஒரே காரணத்தால் அது வடமொழியாகி விடாது.) குறளுக்கு உரை சொன்ன பரிமேலழகர் "அதி என்பது மிகுதிப் பொருளதோர் வடமொழி இடைச்சொல்" என்று சொன்னதால் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுமா, என்ன? 

அதிகத்திற்கு இன்னொரு வலுவான பொருளுண்டு. "அதிகம்....பொலிவின் பெயரெனப் புகன்றனர்" என்று திவாகரம் 1672 பயிலும். பொலிவென்பது சற்று வெளிறிய மஞ்சள் ஓடிய, பொன்நிறம். பொலிவு - அதிகம் நிறைந்தவன் அதிகன்>அதியன். அதிகன் மகன் அதிகமான். தமிழ் மூவேந்தர் மூவரும் அவர் குடியினர் பூசிக்கொண்ட நிறங்களால் அறியப் பெற்றுள்ளார். (அவரின் இயற்கை நிறம் கருப்புத் தான்.) தமிழரின் நெடுநாள் உறவினரான ஆத்திரேலியப் பழங்குடியினரும் தாம் பூசிக் கொள்ளும் நிறங்களால், சூடிக் கொள்ளும் அடையாளங்களால் அறியப்படுகிறார்.

சாம்பல் (=பாண்டு. பால்நிறம் பாண்டு.) பூசியவர் பாண்டியர் (தமிழரின் திருநீற்றுப்பழக்கம் இவரிடமிருந்து வந்திருக்கலாம்.) மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் பூசியவர் கோழியர்(=சோழியர்).குங்குமச்செந்தூரம் இன்றும் தமிழரிடம் விரவிக்கிடக்கிறது. சார்ந்தது சார்ந்தனம்>சந்தனம். சார கந்தகம் என்பதும் சந்தனத்தைக் குறிக்கும். சாரம் = சந்தனம்; சாரத்தின் சகரங்குறைந்த சொல்லான ஆரமும் சந்தனத்தையே குறிக்கும் சாரர்>சேரர் என்போர் சந்தனம் பூசிய இனக்குழு ஆவார். இன்றைக்கும் மலையாளத்தில் சந்தன முகன்மை புலப்படும். திருநீறு, குங்குமம், சந்தனம் எனப் பலவும் விலங்காண்டி நிலையில் வெவ்வேறு தமிழ் இனக்குழுவினர் அணிந்த இன வேறுபாட்டு அடையாளங்களே. அதேநோக்கில் மஞ்சள்/பொன்/பொலிவு நிறம் அணிந்த இனக்குழுவினர் அதிகர் இனக்குழுவாய் இருந்திருக்கலாம். மோரியர் காலத்திருந்தே மூவேந்தரோடு அதிகர் ஒருங்குவைத்து எண்ணப்பட்டதும் ஓர்ந்து பார்க்கவேண்டிய ஒன்று. அதிகமென்ற சொல்லின் தமிழ்மை நன்கு புலப்படும்.

அதிகாலை என்றசொல் காலைக்கு முந்திய பருவத்தைக் குறிப்பதையும் எண்ணிப்பார்த்தால் அதித்தலென்ற வினைச்சொல்லின் ஆழம்புரியும். அதித்த நிலையை உருவாக்குதலை அதிகரித்தலென்று சொல்வதும் சேர்ந்து பார்க்கவேண்டிய ஒன்றாகும். அன்றாடநிலைக்கு மேற்பட்டு அதிகஞ்செய்தது அதிசெய்யம்>அதிசயம் என்றேயாகி வியப்பு, சிறப்பு என்ற சொற்களைக் குறிப்பது அதி என்ற முன்னொட்டோடு சேர்ந்ததாற்றான். நான் புரிந்துகொண்ட வரை அதி/அதிட்டம் என்பவை பெரும்பாலும் தமிழாயிருக்கவே வாய்ப்புண்டு. அதற்கான முகன்மைக் குறிப்புக்கள் அத்தெனும் சாரியைப் பொருள், அடுத்தல் என்ற வினைச்சொல், அதிகனென்ற குடிப்பெயர் ஆகியவையாகும். இவையெல்லாம் தொல்காப்பியம், சங்கநூல்களில் ஆளப்படுபவை.

அன்புடன்,
இராம.கி.

No comments: