உயர்திணைக்குக் கள்ளீற்றை முதலிற் பயனுறுத்தியவர் வள்ளுவரல்ல. இதுகுறித்து வள்ளுவர் மேல் ஏதேனுஞ் சொல்லவேண்டின், அவர் நூலில் 21 இடங்களில் [கீழ்களது (1075), பூரியர்கள் (919), மக்கள் (60, 61, 62, 63, 64, 65, 66, 68, 196, 388, 410, 600, 770, 993, 997,1071), மாக்கள் (329, 420), மற்றையவர்கள் (348) எனக்] கள்ளீற்றைத் தன் கைச்சாத்தாய்ப் (signature) பயின்று பெருவல (ப்ரபல)ப் படுத்தினார் எனலாம் அதைக் காலப்பழக்கமெனப் பொதுமைப்படுத்துவதும் திருக்குறள் பிற்கால நூலென்பதும் பொருத்தமில்லை. நெல்லை நண்பர் ஒருவர் “ஜங்ஷனிலெ வெச்சுப் பார்த்தேன்” என்பார். ”வைத்துப் பார்ப்பது” என்பது நெல்லை வட்டாரநடை. அதுபோல் ஒரு குறிப்பிட்ட சாதியார்க்கென்று தமிழ்நாட்டில் ஒரு பேச்சுநடையுண்டு; தமிழகத்தில் சில ஊரார்க்கென்று ஒரு விதப்பான நடையுண்டு. அப்பேச்சுநடைகள் எலாம் அவரவர் மொழிப் பயன்பாட்டில் மிகுத்துவரலாம். (என்பேச்சு சிவகங்கைமாவட்டப் பேச்சு.) இவற்றைக் காலப்பிரிப்பிற்கு உள்ளாக்குமுன் ஆழ்கவனம் வேண்டும். கிடைத்த தரவுகளை வைத்துப்பார்க்கையில், ”கள்” பயன்பாட்டால் வள்ளுவர் காலம் கணிக்க முடியாதென்றே தோன்றுகிறது. ஏனெனில் கள் ஈறு சங்க காலத்திலேயே, அதுவும் தொடக்க நூல்களிலேயே, உயர்திணைக்குப் பயன்பட்டுள்ளது. இனிக் கட்டியப் பின்னொட்டுகளுக்கு (conditional suffixes) வரலாம்.
‘ஏல்’ எனும் ஈறு 3 இடங்களில் (உண்டேல்-368, இன்றேல்-556, செய்வானேல்-655 என) வந்திருப்பதை திரு. ஆச்சாரி கூறுவார். உண்மையில் ஆயினென்ற பொருளில் ஏலெனும் வினையெச்ச விகுதி (செயின் வாய்ப்பாட்டில்) 18, 368, 386, 556, 573, 575, 655, 996, 1014, 1075, 1118, 1144, 1151 என்ற 12 இடங்களில் வந்துள்ளது. அல்லனேல் (அல்லாதவன் ஆயின்)-386, இன்றேல் (இல்லை யாயின்)- 556, 573, 575, 996,1014, 1144, உண்டேல் (இருக்குமாயின்)-368, 1075, 1151, செய்வனேல் (செய்வானாயின்)-655, வல்லையேல் (திறமுடையாய் ஆயின்)-1118 என்று அதுவிரியும். இவற்றில் (அல்லன், இல்லை, இருக்கும், செய்வான், திறமுடையாய் எனும்) வினைமுற்றைத் தொடர்ந்து ஆயினைக்குறிக்கும் ஏல் வினையெச்ச விகுதி இக்குக் கிளவியாய் (if clause) இங்கு அமைகிறது. தவிர, ”செயின்” முடிபோடு (= செய்தால்; எதிர்கால.வினையெச்சக் குறிப்பு.) 104, 109, 116, 120, 150, 175, 181, 308, 483, 484, 493, 494, 497, 537, 547, 586, 804, 805, 808, 852, 881, 965, 1257, 1288 என்ற 24 குறள்களில் வந்துள்ளது. ஏல், ஆயின், செயின் என்பவற்றுள் இருப்பதும் இல்லெனும் அடிப்படையுருபே. இல்லென்பது இருத்தலைக் குறிக்கும் வேர் (இல்>இர்>இரு). to be என ஆங்கிலத்திற் சொல்கிறாரே அப்பொருள் இங்கு வந்துசேரும். எல்லா if clause ற்கும் இதுவே அடிப்படை.
இல், இன்னாக மாறியும் இக்குக் கிளவியைக் குறிக்கும். ”இன்” என்பது சங்க இலக்கியங்களில் கணக்குவழக்கற்று வந்துள்ளது. மேலே குறிப்பிட்ட இடங்களில் இல், ஏலாகிறது. அதற்கு இயல்ந்தது> இயன்றது என்றும் ஏற்றதென்றுஞ் பொருள் சொல்லலாம். ஏலாது = இயலாது. [இப்பொருளில் தனிவினையாகவே சங்கநூல்களில் ஏல் பயன்படும். இயலாப் பொருளில் புறம் 389-4இல் ஏலா என்ற சொல்லும், ஏற்றற் பொருளில் ஏல என்பது பரி 9-41 இலும், ஏலா/ஏலாது என்றபடி பரி 8-69, 19-62 இலும், புறம் 179-2 இலும் வரும். பொதுவாக தமிழிலக்கணத்தில் தனிவினைச் சொற்கள் வேர்ச் சொல்லாய்த் தோற்றங் காட்டி, உருபாக வேலை செய்வது, பரக்கக்கண்ட உண்மை.] அல், ஆல் போன்ற இக்குக் கிளவி வினையெச்ச ஈறுகளுங் கூடச் சங்க இலக்கியத்தில் பயில்கின்றன.
சங்க இலக்கியங்களில் முதலில்தோன்றிய நூல்களைப் பார்த்தால் ”இல்”லின் காலம் குறைந்தது (கவனம்: குறைந்ததென்றே சொல்கிறேன். இதன்தோற்றம் எப்போதென யாருக்கும் தெரியாது.) பொ.உ.மு. 300 ஆவது இருக்குமென்றே சொல்லத்தோன்றுகிறது. இல் உருபு, ஏலாக மாற எவ்வளவுகாலம் பிடிக்கும்? 1 நூறாண்டு வருமா? தெரியவில்லை. ஆனால் ஏலின் பயன்பாடு பரிபாடல், கலித்தொகை போன்ற பிற்காலச் சங்க இலக்கியங்களிலுண்டு. காட்டாகப் பரிபாடலில் 2 இடங்களும் (அன்றேல் பரி 20-77, சூளேல் பரி 8-68) கலித் தொகையில் 5 இடங்களிலும் (அன்னதேல் கலி 91-18, இல்லேல் கலி 60-21, என்றீரேல் கலி 142-19, விடுவாயேல் கலி 93-33, விடுவானேல் கலி 147-50) வரும். தவிர, இன்னெனும் உருபோடு செய்யினென்ற சொல்லும் (நற் 247-6, குறு 309-7, கலி 73-14) செயின் என்ற சொல்லும் (நற் 239-12, 252-3, குறு 397-6, கலி 15-8, 91-22, 113-18, 140-34, 148-190), தலைப்பெயின் என்பதும் (கலி 54-24) சங்ககாலத் தொடக்கிலிருந்தே புழங்கியுள்ளன. பெரும்பாலும் இல், ஏலாக வளர்ந்தது சங்ககாலப் (பொ.உ.மு.550 - பொ.உ.220) பிற்பகுதியில் இருக்கலாம். ,
ஏலெனும் வினையெச்ச விகுதியோடு, செய்யாமல் (101, 313), சூழாமல் (1024) என்ற சொற்களில் வரும் அல் வினையெச்சத்தையும் திருக்குறளில்வந்த முதற்பயன்பாடென்று திரு.ஆச்சாரி சொல்வார். ஆய்ந்துபார்த்தால் இதுவுஞ் சரியில்லை. நாணாமல் (பரி 20-74), கூறாமல் (கலி 1-3), தீராமல் (கலி 38-13), போகாமல் (கலி 109-25), முற்றாமல் (கலி 19-12) எனுமிடங்களில் நாணாம், கூறாம், தீராம், போகாம், முற்றாம் என்ற வினைமுற்றுகளுக்கு அப்புறம் இங்கே அல் உருபு பயின்றுவந்துள்ளது. வருதலான் நற் 261-19, 353-11, 383-9, இல்லால் புற 203-3, இயங்குதலால் (பரி 17-41), கேட்டால் (கலி 107-12), மெல்லியால் கலி 113-16, 115-5 என்று (அல்லின் நீட்சியான) ஆல் உருபு எதிர்மறையின்றி வருகிறது. இவற்றைப் பார்த்தால், இவ்வளர்ச்சியும் சங்ககாலப் பிற்பாதியில் நடந்தது புரியும். எனவே பரிபாடல், கலித்தொகை காலத்திலோ, அன்றி அதற்குமுன்னோ திருக்குறள்காலம் இருந்திருக்கலாமென ஊகிக்கிறோம்.
சரி பரிபாடற் காலமென்ன?. இது ஆழமான கேள்வி. நீளமாய் மறுமொழி சொல்லவேண்டும். (வையாபுரியார் ஆய்வுகள் பரிபாடல், கலித்தொகை, சிலம்பு, திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றைத் தூக்கியெறிந்து தோண்டுகுழி (dungeon) போல் பொ.உ.5 ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளும்). நான் புரிந்தவரை தொல்காப்பியக்காலம் சங்கநூல்களுக்கு முந்தையதென்பேன். பலரும் பொ.உ.மு. 800/700 என்பார். கலித்தொகையை நானின்னும் ஆழப் பயிலவேண்டும். என் காலக்கணிப்பு அதன்பின்தான். பரிபாடற்காலங் கணித்திருக்கிறேன். அதைக் காணுமுன் சிலம்பின்காலம் பேசவேண்டும். உள்ளகச் சான்றுகளைக் கொண்டுபார்த்தால் சிலம்பின் காலம் பொ.உ.மு.75 ஆகலாம். (பார்க்க: ”சிலம்பின் காலம்” எனும் என் நூல்). தமிழக வரலாற்று ஆய்வில் சிலம்பு ஓர் அச்சாணி. அதைப் பிடித்தால் மற்ற சங்க நூல்களின் காலங்கள் முன்னும் பின்னுமாய்ச் சரியாய்ப் பொருந்தும். சிலம்புக் காலத்தில் தவறிழைத்தால் தமிழக வரலாறே தறிகெட்டுப் போகும். சங்க காலம் கணிப்பதில் தவறியோர் பலரும் சிலம்பின் காலத்திலும் தவறியுள்ளோர். {சிலம்பையும் ம்ணிமேகலையையும் இரட்டைக் காப்பியமாய் எண்ணுவதால் வரும் பிழை இது. மணிமேகலை பொ.உ.450. சிலம்பு மிக முந்தையது.]
வரலாற்றாய்வில் occam's razor principle முகன்மையாய்க் கருதப்படும். Every historiography involves assumptions, but minmal in number. சோழநாட்டுப் பெண் ஒருத்தி மதுரைக் கொலைக்களத்தில் முலையறுத்தது நம்மூர் வரலாற்றில் 2 முறை நடந்திருக்க வாய்ப்பில்லை. இச்செய்தி நற்றிணை 216 இல் மருதன் இளநாகனாராலும், சிலம்பில் இளங்கோவாலும் சொல்லப்படும். இவை இரண்டையும் வெவ்வேறாக்கி, ”கயவாகு, சங்கம் மருவியது, களப்பிரர், செயினம்/புத்தம், கருநாடகத் தாக்கம், நாயன்மாருக்கு முன்னால், பரதநாட்டிய சாற்றம், மெய்ப்பாடுகள்” என்று பொருத்தமற்ற கற்பனைத் தேற்றங்களைக் கொண்டுசேர்த்துப் போகாதவூருக்கு வழி சொல்லி 5 ஆம் ஆண்டிற்குச் சிலம்பைத் தள்ளியது தவிர்த்து தமிழிலக்கிய வரலாற்றிற்காக வையாபுரி வகையினர் எதையுஞ் சாதித்ததாய் எனக்குத் தெரியவில்லை. (வையாபுரியாரின் பதிப்புப் பணி, அகராதிப் பணி போன்றவற்றை என்றும் நான் மதிப்பேன். அது வேறு பக்கம். ஒரு பேச்சிற்குச் சொல்கிறேன். எண்ணிப் பாருங்கள்; பூதியற் (Physics) பணிகளுக்காக நீயூட்டனைக் கொண்டாடும் உலகம், அவரின் இன்னொரு பக்கமான “ரசவாதப் (Alchemy)” பணிகளைப் பேசுகிறதோ?)
நற்றினை 216 இல் மட்டுமல்ல, அகம் 149 ஆம் பாடலிலும் எருக்காட்டூர் தாயங்கண்ணனாரால் கண்ணகி பற்றிய ஒரு செய்தி சொல்லப்படும்.
......................................................சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
அருஞ்சமம் கடந்து, படிமம் வௌவிய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
என்ற வரிகளை ஆழ்ந்து படியுங்கள். ”யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்பதைப் படித்து வியந்து போன ஆய்வுலகம் இன்னும் 2 வரி தள்ளிப் படிக்கத் தயங்குகிறதே, அது ஏன்? அது என்ன படிம வௌவல்? அக் குறிக்கோள் எந்தச் செழியனுக்கிருந்தது? வஞ்சியில் படிமம் இருந்தது எவனுக்கு அவமானமோ, அவனே அதை வௌவ விழைவான் அல்லவா? பொறுமையாய் சிலப்பதிகார நிகழ்வுகளோடு இதைப்பொருத்தி ஓர்ந்தால், வஞ்சியிற் பதித்த கண்ணகி படிமத்தை செங்குட்டுவனுக்குப் பின் வெற்றிவேற் செழியன் வௌவியது இங்கே இயல்பாய்ப் புலப்படும். (என் நூலைப் படியுங்கள்.) இதுவும் சிலம்பை ஒட்டிய வரலாற்றுக் குறிப்பே. இதையும் வையாபுரி வழியினர் புரிந்துகொள்ள வில்லை. தம் குறையை நூலிலேற்றிச் ”பொருத்தம் இல்லா நிகழ்ச்சிகள்” என்று சொல்லிச் சிலம்பை ”நவீனம்” ஆக்கி, நம்மைப் போக்கடித்தது தான் மிச்சம். மாறாகச் சிலம்பையும், நற்றினை 216 ஐயும், அகம் 149 ஐயும் மற்ற சான்றுகளோடு ஒன்றாய்ப் பொருத்தினால், சிலம்பு என்பது ஒரு ”நவீனம்” அல்ல, வரலாற்றுப் பதிவென்பது விளங்கும். அதன்காலம் பெரும்பாலும் பொ.உ.மு.75 க்கு அருகிற்றான் இருக்கமுடியுமென்றும் புரிந்துகொள்ளலாம். .
இனிப் பரிபாடலுக்கு வருவோம். இதன் காலக்குறிப்புகளை என் நூலிற் "சிலம்பிற்குப் பின்வந்த செய்திகள்” என்ற பின்னிணைப்பிற் சொன்னேன். நற்றிணை 216 மருதன் இளநாகனார் பாடியதென்பார். இவர் சங்க இலக்கியத்தில் அதிகம் (43) பாடியவருள் ஒருவர். இவரின் புறப்பாடல் (52) மதுரையை ஆண்ட கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியைப் பாடும். 55 ஆம் புறப்பாடல் கொற்கையை ஆண்ட இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடும். இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனென்ற குறுநில மன்னனையும் பாடுவார். மாறன்வழுதி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் மகனாய் இருக்கலாம். நன்மாறன் வெற்றிவேற் செழியனின் மகனாயிருக்கலாம். பாண்டியரிற் தந்தை செழியனெனில் மகன் மாறன்; தந்தை மாறனெனில் மகன் செழியன். இப் பழக்கம் 14 ஆம் நூற்றாண்டு வரை உண்டு. சழியன்>செழியன் என்ற தமிழ்ப்பெயர் பின்னாளில் திரிந்து சடியனாகிப் பின் சடையனாகி, சடையவர்மனாகி, முடிவில் ஜடிலவர்மன் என்று சங்கதமாகும். இதேபோல் மாறன் மாறவர்மனாவான். (செழியனும், மாறனும் குடிவழிப் பட்டப்பெயர்; இயற்பெயரல்ல. வெற்றிவேல், தானைவேல் போன்றவை இயற்பெயர்கள். பாண்டியனும், வழுதியும் குலச்சின்ன நிறமான வெண்மை குறிக்கும் பெயர்கள்.)
மாறன்வழுதி, நன்மாறன் போன்றோரின் சமகாலத்தில் உறையூரில் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான் ஆண்டான். கிள்ளி வளவனை உறையூர் அரியணையில் ஏற்றியவன் 55 ஆண்டுகள் ஆண்ட, முதிய செங்குட்டுவன் ஆவான். கிள்ளிவளவன் செங்குட்டுவனின் தாய்மாமன் மகனோ, பேரனோ தெரியாது. 9 அரசரை வீழ்த்தி, செங்குட்டுவன் இதைச் செய்வான். 9 அரசர் போருக்குச் சற்று தள்ளிச் சேரனின் கடைசிக்காலத்தில் வடபடையெடுப்பு நடந்தது. போர்முடிந்து வாரணவாசிக்கருகில் கங்கையின் தென்கரையில் இருக்கையில் ”கிள்ளிவளவன் ஆட்சி எப்படி நடக்கிறது?” என்று செங்குட்டுவன் மாடலனிடம் கேட்டது சிலம்பிற் சொல்லப்படும். ஒரு தலைமுறைக் காலம் 25 ஆண்டுகளெனில், சிலம்பிற்கு அப்புறம் மருதன் இளநாகனார் மாறன் வழுதியைப் பாடியது பொ.உ.மு. 50 எனலாம். இனி ஐயூர் முடவனாரெனும் புலவர் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதியையும் குடமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பாடியிருக்கிறார். மேலே சொன்ன எல்லாவற்றையும் பொருத்திப் பார்க்கையில், மருதன் இளநாகனார், ஐயூர் முடவனார், மாறன்வழுதி, நன்மாறன், கிள்ளிவளவன், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.50 ஆகும்.
இக்காலப் பின்னணியைத் தெரிந்துகொண்டநாம் மருதன் இளநாகனாரின் அகம் 59 ஆம் பாடலுக்கு வருவோம். இதில் ”அந்துவன் பாடிய சந்துகெது எழுவரை” என்றவரியில் பரங்குன்றைச் சுற்றி சந்து (=இசை) கதுவுவது (கது>கெது = பற்று) சொல்லப்படும். நல்லந்துவனார் இசையையும், பாடலையும் மருதன் இளநாகனார் தெரிந்திருந்தார் போலும். நல்லந்துவனார் முருகனைப் பாடியிருக்கிறார். பரிபாடலில் 70 பாடல்கள் இருந்ததை
திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடல் திறம்
என்ற வெண்பா சொல்லும். 70 பாடல்களில், 22 முழுப்பாடல்களும், 11 சிதைந்தவையும் இன்று கிட்டியுள்ளன. இவற்றுள் திருமாலுக்கு 7 உம், செவ்வேளுக்கு 8 உம், வையைக்கு 10 உம், மதுரைக்கு 6 உம், இன்னதென்று தெரியாது 6 உம் உள்ளன. இதில் மதுரைக்கெனக் கிடைத்தவற்றுள் 2 உண்மையில் மதுரைக்கில்லை. (தவறாக மதுரையென்று புரிந்து கொள்கிறோம்.) இவற்றில் 19 பாடல்களுக்கு எழுதியோர் பெயரும், பண்ணமைத்தோர் பெயரும் தெரிகின்றன. நல்லந்துவனார் என்பார் 3 பாடல்கள் எழுதியுள்ளார். (அதில் 1 பாடல் செவ்வேள் பற்றியது.)
எந்தெந்தப் பாடலாசிரியர், பாணர் சமகாலத்தில் உறவுகொண்டார் என்பதை வலைப்பின்னல் தேற்றில் (network theory) வரும் அண்ணக மடக்கை (adjacency natrix) வழி அலசிக்கண்டுபிடிக்க இயலும். இதன்படி பார்த்தால் பரி 1, 7, 14, 22 போக மற்ற 18 உம் சமகாலத்தவை என்றே தோற்றுகிறது. மேற்குறிப்பிட்ட நாலும் தொகுதியின் போதோ, அதற்கு முந்தியோ பாடப்பட்டிருக்கலாம். பரிபாடல் தொகுப்பும் சமகாலத்தில் எழுந்திருக்கலாம்.
இப்போது பரங்குன்று, செவ்வேள், நல்லந்துவனார் என்பவற்றை அகம் 59 ஓடு பொருத்தினால், நல்லந்துவனாரின் காலமும் பொ.உ.மு.50 ஆகும். அப்படிப் பார்த்தால் சிலம்பிற்கப்புறம் 25 ஆண்டுகள் கழித்து பொ.உ.மு.50 இல் பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி காலத்தில் பரிபாடல் தொகுக்கப்பட்டிருக்கலாம். உரைகாரர்மூலம் அகநானூறும், குறுந்தொகையும், ”பன்னாடு தந்தான் மாறன் வழுதி காலத்தில் தொகுக்கப்பட்டன” என்று அறிகிறோம். இரு மாறன் வழுதிகளும் ஒருவரா என்பது ஆயப்பட வேண்டியதே. இச்சிந்தனையில் பரிபாடற்காலம் பொ.உ.மு. 50 என்றாகிறது. திருக்குறளின் காலமும் இதையொட்டியோ, அல்லது இதற்குச் சற்று முன்னரோ இருக்கலாம். திரு. ஆச்சாரியின்/ திரு.கமில் சுவலபில்லின் மற்ற கருத்துக்களுக்கு அடுத்து வருவோம்.
அன்புடன்,
இராம.கி.

2 comments:
இராம. கி என்ற நீங்கள் யார்? அழகாக தமிழ்ச் சொற்களின் கருத்துக்களை ஆதார பூர்வமாகக் கூறுகிறீர்கள்.
நான் நான்தான் ஐயா! தேவையானால் விக்கிப்பீடியாவில் என்பெயரிட்டுப் பாருங்கள். விவரங் கிடைக்கும். உங்கள் அடையாளத்தைச் சொல்லாமல் என் அடையாளங் கேட்கிறீர்களே?
Post a Comment