Tuesday, July 31, 2018

கவ்வணம் - eclipse

”சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம் - இச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் என்ன?" என்று முகநூல் சொல்லாய்வுக் குழுவில் கேட்கப்பட்டது. இது போன்ற கேள்விகள் எழும்போது, படித்த தமிழரில் பெரும்பான்மையர், “கொடுக்கப் பட்டவை வடசொற்களே” என எண்ணி விடுகிறார். பின் தமக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்களையும், கிரஹணப் பொருளையும் பார்த்து புதுச்சொல்லாக்க முற்பட்டு விடுகிறார். கொடுக்கப் பட்டவை சங்கதந் தானா, அன்றி வேற்று மொழித் திரிவுகளா?- என்று பார்ப்பதில்லை. தம்மையறியாது சங்கதத்திற்கு முதலிடங் கொடுத்து ஓர்ந்து பார்க்கத் தொடங்கி விடுகிறார். என்ன தான் இந்துத்துவமெனும் இற்றை ஆள்நெறி, சங்கதத்தை முன்னிறுத்தினும், அதோடு முரண்பட்டு, சங்கதத்திற்கு முந்தைய பாகதத்தையும், இணை நின்ற பாலியையும் பார்க்க மாட்டேம் என்கிறார்.

Eclipse - இற்கு இணையாகப் பாகதத்தில் GAha, gahaNa என்பன ஆளப்படும். GrahaNa- இதற்கிணையான சங்கதச் சொல். சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம் என்பன ChandaggAha, SuriyaggAha என்று பாகதத்தில் வரும். சங்கதம், அடிப்படையில் பண்டையிந்தியாவின் வடமேற்கே இலாகூர் வட்டாரஞ் சேர்ந்த (பொ.உ.மு.400 களுக்கருகில் சந்தஸ் என்றழைக்கப்பட்ட) மொழியைப் போல்மமாய்க் கொண்டது. மற்ற சில வட்டாரச் சொற்களில் முதலிலும், இடையிலும் வரும் வல்லின உயிர்மெய்களை உடைத்து ஊடே ரகரமெய் நுழைத்துச் சில போது பலுக்குவார். gahaNa எனும் பாகதச் சொல்லில் இப்படி ரகரம் நுழைத்து GrahaNa ஆனது. சில போது Gra அசையை G எனும் மெய் யெழுத்தாகவும் r`a என்னும் சங்கத விதப்புயிராகவும் சொல்வர். சங்கத-பாகத உறவுகளைப் படிக்கையில் இதுபோல ஒரு சில உத்திகளை (இன்னுஞ் சிலவும் உண்டு.) நினைவிற் கொள்ளவேண்டும்.

சங்க காலத் தொடக்கத்தில் நம்மோடு பெரிதும் உறவு கொண்டது பாகதமே. பொ.உ.150 இற்குப் பின் தான் (இன்னுஞ் சிறப்பாய்க் குப்தர் காலத்திற்றான்) சங்கதம் தமிழோடு உறவு கொண்டது. எனவே எந்தச் சங்கதச் சொல் பார்த்தாலும், உடன் பொருந்தும் பாகதச் சொல்லைத் தேடிப் பார்ப்பது கட்டாயமாகும். தமிழ்-பாகத உறவு தகடூர்-படித்தானம் (இற்றை அவுரங்காபாத் அருகே கோதாவரிக் கரையிலுள்ள பைதான்) - பாடலிப் புத்தம் என்று தக்கணப் பாதையின் வழி ஏற்பட்டது. நம்மூர்ப் பேச்சு அற்றைக் கருநாடகம் (தனிமொழி தோன்றாக் காலத்தில் கன்னடம் என்பது ஒரு வட்டாரத்தமிழே.) வழியான வட்டாரப் பலுக்கலால் பாதிப்புற்றே வடக்கே பரவியது. இன்றும் தமிழிற் பயிலும் “பால்” கன்னடத்தில் ”ஹாலு”வாகும் பகரம் பயிலும் நூற்றுக் கணக்கான தமிழ்ச்சொற்கள் அற்றைக் கன்னடத் தமிழில் ஹகரம் பயின்றன. தவிர, சில சொற்களில் முதலொலியான தமிழ்க் ககரம் கன்னடத் தமிழில் ga என ஒலிக்கும்..நம் ”மகள்” வடகொங்கு (கருநாடத்) தமிழ்நாட்டில் ”magalu” ஆவாள். தகடூரிலிருந்து படித்தானம் கடப்பதற்குள் kappa>gappa>gahha மாற்றம் ஏற்பட்டு விடும். நூற்றுவர் கன்னரின் ஆட்சியில் பாகதம், தமிழென இருவேறு ஆட்சி மொழிகள் இருந்தன. படித்தானத்திற்கு மேல் வடக்கு ஏகையில் பாகதமே எஞ்சும்.

தகடூருக்குத் தெற்கே பகரமும் வகரமும் ஒன்றிற்கொன்று போலிகள். கரப்பும் கரவும் ஒரே பொருள் கொண்டவை. கவ்வும் கப்பும் ஒரே பொருள். கவ்வல்= மறைத்தல். கள்ளெனும் வேர்ச்சொல் கள்வென வளர்ந்து, மறைத்தலை, திருட்டை, விழுங்கலை, மூடலைக் குறிக்கும். கள்வல்>கவ்வல்>கப்பல் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய மாற்றம். கள்க்கல்>கட்கல்>கக்கல் என்பதும் மறைத்தல் பொருள் காட்டும் (வேறு பொருள்களை இங்கு நாம் பேசவில்லை. கக்குள்/அக்குள், மறைப்பு தொடர்பானதே. கவர்பும், கவிப்பும் இதோடு தொடர்புடையனவே. கவவு= பற்றல், அகத்திடல். கவவு அகத்திடுமே- தொல் உரி 59. கப்பல்= அகத்திடல், மூடல்; கவைத்தல்= அகத்திடல்; கவ்வு>கவள்> கவளி கவ்வினாற் போல் மேலுங் கீழும் சட்டம் வைத்துக் கட்டும் பொத்தகக் கட்டு, வெற்றிலைக் கட்டு; கவளி>கவளிகை கவள்> கவண், கவணை, கவண்டு, கவண்டி என்பன கவணின் மறு வடிவங்கள். கவனம்= கவ்வினாற் போல் ஒரு நிகழ்வை, ஆளைப் பார்த்துக் கொள்ளும் பாங்கு. “திருப்பித் திருப்பிச் சொல்றேன். கவனமாய் இரு”

இத்தனையும் கவ்வலில் தொடங்கிய சொற்கள். அது போல் கவ்வணம்> கப்பணம்> கஹ்ஹணம்> க்ரஹணம் என்பதும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியதே. கப்பென்ற வினைச்சொல் மேலை இந்தையிரோப்பியத்தில் ஸகரம் உள் நுழைத்து grasp ஆகும். இதுவும் eclipse இல் நடப்பது தான். (இராகு, கேது நிழற் கோள்கள் நம்மிடம் மட்டும் இருக்கவில்லை. புவி நடுவக் கொள்கை இருந்த எல்லோரிடமும் இருந்தது.) கவ்வும் தொழிற்பெயர் தெரிந்தால் நுங்கல் (=விழுங்கல்)/ முங்கல்,  நொண்டல்/ மொண்டல், கள்ளல்>கொள்ளல்/கொள்வல் (to hold, to have), கரத்தல், கவித்தல், மூய்தல், பற்றல், பிடித்தல், மறைபுகல், ஒளித்தல், சேருதல், செறிதல், உண்ணுதல் என்ற சொற்கள் இணையாய்ப் பயில்வது தெரியும்.

முதலில் அரவை (இராகு) முதலிற் சொல்லி மதியைப் பின்சொல்லுங் காட்டுகளைப் பார்ப்போம். அரவு செய்பொருள். மதி செயப்படு பொருள். அகம் 114 இல் 5 ஆம் அடியிலும், அகம் 313 இல் 7 ஆம் அடியிலும், குறுந் 395 இல் 4 ஆம் அடியிலும் ”அரவு நுங்கு மதி (அரவு விழுங்கும் மதி)” என்று வரும் பரி 10 ஆம் பாட்டின் 76 ஆம் அடியில் ”அரவு செறி உவவு (அரவு நிறைந்த மதி)” என்று வரும். நற் 377 இல் 6-7 ஆம் அடிகளில் ”அரவுக் குறைபடுத்தப் பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல” என்று வரும். இங்கே மதியத்திற்கும் நிலாவிற்கும் வேறுபாடு காட்டுவார். இற்றைத் தமிழில் மதியத்திற்கும் நிலவிற்கும் நாம் வேறுபாடு காட்டுவதில்லை. நாம் இன்று ”நிலவொளி” என்று சொல்வது அன்று நிலவென்றே சொல்லப்பட்டது. காலம் மாறிவிட்டதல்லவா? நற் 128 இல் 2 ஆம் அடியில், ”பாம்பு ஊர் மதி” என்பார். புறம் 260 இல் 16-17 ஆம் அடிகளில் ”வளைஇய பாம்பின் வையெயிற்று உய்ந்த மதி” என்று வரும். கலி 105 இல் 45-46 ஆம் அடிகளில் ”அரவின் வாய்க் கோட்பட்டுப் போதரும் பால் மதியம் போன்ம்” கோட்படுதல் என்பது கோள்படும் நிலை. கிரஹணம் என்ற சொல்லிற்கு கோட்பாடு என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இச் சொல்லை நான் சொன்னால், பொருள் மாறிப் போய்விடும். தமிழ்நடை மாறியதால் வந்த வினை இது.

அடுத்து மதியை முதலிற் சொல்லி பாம்பைப் பின்சொல்லுங் காட்டுகளைப் பார்ப்போம். இந்தக் காட்டுகள் எல்லாமே செயப்பாட்டு வினைகள். பரி 10 இல் 78 ஆம் அடியில் “மதி உண் அரமகள்” என்று வரும். சிறுபாண் 185 ஆம் அடியில் “மதி சேர் அரவு” என்று வரும். பெரும். 383 ஆம் அடியில் “திங்கள் கோள் சேர்ந்தாங்கு” என்று வரும். இங்கே கோள் என்பது இராகு. கலி 104 இல் 37-38 ஆம் அடிகளில் ”மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும் நீல்நிற வண்ணனும் போன்ம்” என்று வரும். இங்கே மாபாரதத்தில் செயத்ரதனின் இறப்பும் அதில் கண்ணன் செய்த ஊடாட்டமும் சொல்லப் படுகிறது. கலித்தொகை காலத்தில் மாபாரத நிகழ்ச்சிகள் தமிழர்க்குத் தெரிந்து விட்டன. கலி 140 இல் 17 ஆம் அடியில் ”திங்கள் அரவு உறின்” என்று வரும்.

இதுவரை ”மதிக் கவ்வணம்” பார்த்தோம். இனிப் ”பரிதிக் கவ்வணம்” பார்ப்போம். இது சங்க இலக்கியத்தில் ஒரேயொரு முறை தான் பதிவு செய்யப் பட்டுள்ளது. புறம் 174 இல் 1-2 ஆம் அடிகளில் ”அணங்குடை அவுணர் கணங் கொண்டு ஒளித்தெனச் சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து” என்று வரும்.

கவ்வணம் என்ற சொல்லைப் பின்னாக்க வழியில் தான் கண்டோம். இதற்கு விளக்கச் சொற்களாய் மூன்று பத்திகள் முன் பல சொற்களைப் பார்த்தோம். அணம் என்ற ஈறு தமிழில் மிகுதியும் பயிலும் ஒன்றாகும். அண்ணுதல்= நெருங்குதல். அள்>அண்>அண்ணம்>அணம். ”கவ்வு மாதிரி” என்கிறோம் இல்லையா? கவ்விற்கு நெருங்கியது கவ்வணம். மறைப்பு, நிழல் என்று இன்றைக்குச் சொல்லலாம். இதுபோற் கற்பனைகளேயே அறிவியலில் ஒதுக்க வேண்டும் என்பது எனக்கு வறட்டுத்தனமாய்த் தெரிகிறது. இராகு/ கேது போன்றவற்றை இன்று நாம் நம்பவேண்டாம் ஆனால் புவி நடுவக் கொள்கையில் நிலவின் நகர்ச்சியை விளக்குவதற்காக இது போன்ற அமைகணக் (imaginary) கோள்களை உருவகஞ் செய்தார் என்று சொன்னால் குறைந்து விடுவோமா? கோப்பர்நிக்கசு வரும் வரை மேலையரும் புவி நடுவக் கொள்கையை நம்பி வந்தாரே? சூரிய நடுவக் கொள்கை சரியென ஏற்பட்ட பிறகு புவி நடுவக் கொள்கையைச் சொல்லாது விட்டாரா என்ன? இராகு, கேதுவையும் அறிவியல் வரலாறாகக் கூட நாம் சொல்லக் கூடாதா? அரவு என்ற பயன்பாடு மேலே சொன்னபடி சங்கத்தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் வந்துள்ளது. இது ஏதோ வடவருக்கு, ஆரியருக்கு மட்டுமிருந்த கற்பனை என்பது உண்மைக்குப் புறம்பானது. தமிழர் ஏதோ அரிதானவர். எப்போதும் சூரிய நடுவக் கொள்கையையே அவர் பரிந்துரைத்தார் என்பதும் வரலற்றிற்கு முரணானது.

சந்திர கிரஹணம் = மதிக் கவ்வணம்
சூரிய கிரஹணம் = பரிதிக் கவ்வணம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, July 27, 2018

பனுவலும் text உம் ஒன்றா? - 3

Text ஐப் பனுவலோடு குழம்புவோர் பெரும்பாலும் "துகில் நுட்பியல் எப்படி நம்மூரில் வளர்ந்தது?” என அறியாதிருக்கிறார். சில துகிலியற் கலைச் சொற்களைப் புரிந்து கொள்ளாமல் மேற்கொண்டு Text ஐ நோக்கி நகர முடியாது. இப்பகுதியில் இவற்றையே முதலிற் பார்க்கப் போகிறோம்.

தடுக்குகள், பாய்கள் முடிவில் துகில்களென்று படிப்படியாக நுட்பியற் சோதனை நடந்தது. பருத்தியில் துகில் செய்யுமுன், பனையோலைக் கீற்று, நாணற் கோரைகளால் தடுக்குகளையும், பாய்களையும் முடைந்த பட்டறிவு பழந்தமிழருக்கு இருந்திருக்கவேண்டும். (கோரைகளாற் புனைகளைச் செய்து, பாய்களைச் சீரைகளாக்கி (sails), தேவைப் படுகையில் விலாவரிகள் (outriggers) பொருத்தி, நெடுந்தூரக் கடற்பயணங்கள் போனது இன்னொரு கதை. அதையிங்கு பேசவில்லை.) அதே சமயம், நெகிழ்ந்துஅசையும் தடுக்குகளையும், பாய்களையும் தென்னையோலை, ஈச்சோலையைக் கொண்டு செய்ய முடியாது. கொற்கை, மாறோக்கமெனப் பொருநைக் கோரை நிலங்களில் நிலைகொண்ட முன்னோருக்கு அதன் முகன்மை புரிந்திருக்கும்.

தவிர, தென்கிழக்காசியச் சன்னக் கோரம் (Thin reed / Phrynium dichotomum) பாயையும் பழந்தமிழர் பயன்படுத்தினார். கோரைகள் பற்றிய புதலியற் குறிப்பை தமிழில் விரிவாய் யாரும் பதியவில்லை. முன்னாளையத் தமிழகக்கோரைகளில் ஒருவேளை சன்னக்கோரையிருந்து இப்போது அழிந்ததா? தெரியாது. எந்தெந்தக் கோரைகள் இங்கிருந்தன? எவை எப்போது அழிந்தன? தமிழ்ப் பார்வையில் கோரைப் புணைக் கலங்கள் (reed ships) பற்றி யாரேனும் ஆய்வு செய்யாரா? - என்ற கேள்விகள் சுவையாரம் ஆனவை. கடந்த 300 ஆண்டுகளிற் குறிப்பாகத் சிவகங்கை, புதுக்கோட்டை மக்களுக்கு பர்மாப் பாய் என்பது பெரிதும் பழக்கம். இச் செய்முறையில் தமிழர் பங்குண்டோ அல்லது செய்முறை அங்கிருந்து இங்குவந்ததா என்ற ஐயமுமுண்டு. ஏனெனில் இரு செய்முறைகளும் பெரிதும் ஒத்துப் போகின்றன.

[இங்கோர் இடைவிலகல். தமிழாய்வுக் கட்டுரைகளில் தேச வழக்கங்களை மீறும் இயலுமைகளைத் தெரிவிக்கத் தயக்கமாயுள்ளது. ஏனெனில் பல்வேறு தமிழன்பரும் ஒருபக்கம் வடக்கோடு நமக்கிருந்த உறவைப் பேச மறுத்தால், இன்னொரு பக்கம் தென்கிழக்காசிய உறவிலும் ஒருதிசை நோக்கே கொள்கிறார். நாமென்ன தனித்தீவிலா வாழ்கிறோம்? அன்றி நாம் மட்டுமே அறிவார்ந்தவரா? இற்றை ஈனியலின் படி, 4350 ஆண்டுகளுக்குமுன் தமிழர் இங்கிருந்து கடல்வழி போய் ஆத்திரேலியப் பழங்குடிகளோடு மீண்டும் கலந்திருக்கிறார். அவர் சென்ற நாவாயிற் சீரையில்லாது போயிருக்குமா? அற்றைப் பழங்குடி வாழ்விற் பாய்முடை கலை நம்மிடம் இல்லாதுபோனதா? 4500 ஆண்டுகளில் தமிழகத்தின் நாலாபக்கமும் பல்வேறு உறவுகளும் இடையாற்றங்களும் ஏற்படாதோ? நெடுந்தூரக் கடல் பயணத்தில் உதவும் இரட்டை விலாவரிக் கலம் (double outrigger canoe) முதன்முதலில் தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியதாய் இற்றை மாந்தவியலார் சொல்கிறார். நம்மூரிலும் நெடுநாள் அது உள்ளது இதைப் பார்த்தால், இடையாற்றம் இரு பக்கமிருந்ததோ? பாய்முடையும் தொழிலும் அப்படி இருந்திருக்கலாமோ? - என்றும் தோன்றுகிறது.]

சன்னக்கோரை பர்மா, தாய்லந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, போர்னியோ, பிலிப்பைன்சு நாட்டு ஆற்றங்கரைகளில் பெரிதும் விளைந்தது. அசாம், வங்காள தேசம், மேற்குவங்கம் வரை பரவி இருந்தது. கீழ்பர்மாவில் ஐராவதியாறு கடல் சேருமிடங்களிற் கரையொட்டிய சதுப்புகளில் இது வளர்ந்தது. முதலிற் கிடையாய் வளர்ந்து, பின்வளைந்து, நெட்டங்குத்தலாய்த் தோற்றங்காட்டும். அடிவேர் போகக் கிடைத்தண்டின் கணுவீறுகளில் வெளிப் படும் விழுதுகள் தூறுகளாகி மண்ணில் வேர்கொள்ளும். நிறைய இலைகள் உள்ள தண்டிற் இரண்டிரண்டாய்க் கிளை (இருகோடும = dichotomous) பிரிந்து இலைகள் எழும். (It is a rhizomatous plant with an erect and glossy green stem attaining a height of 3–5 m and a diameter of 2.0 cm. The stems are leafy and dichotomously branched.) இதன் நடுச்சோற்றை எடுத்த பின், சன்ன அகலத்திற் புறக்காழை நீளச் சீவிக் கிடைத்த சீம்புகளையே பாவாகவும் ஊடாகவுமாக்கிப் பாய் முடைவர். இதைச் சீரையாக்கி எந்தப்படகிலும் நெடுந்தூரம் கடற்பயணஞ் செய்யலாம் சொகுசான பர்மாப் பாயின் கட்டுமான நுட்பியல், தமிழர் குமுகாயத்தில் பெருந்தாக்கம் விளைத்திருக்கும்.

இது ஒரு பக்கம் நடக்கையில் இன்னொரு பக்கம், பருத்திக்காயுடைத்து பஞ்சுக்கொட்டைகளை கிண்டிக் கிளறினால் (=கடைந்தால்) பஞ்சையும், கொட்டையையும் தனியே பிரிக்கமுடிந்தது. கிண்டுதல்> கிண்ணுதலே மேலையர் மொழியில் ginning ஆனது. கிண்ணிக்கிடைத்த பஞ்சு இள்ளிகளைத் திருக்களி மூலம் ஒருங்கே பிணைத்து, நூலாக்கி, முறுக்கு ஏற்றவும் முடிந்தது. (திருக்கு/திருக்கம் = torque. திருக்கை அளிப்பது திருக்களி. கையாற் சுற்றப் படும் spindle. பன்னுதலிலிருந்து ஆங்கிலச்சொல் எழுந்தாலும் திருக்களிக்கும் காரணத்தால் சுற்றும் பொருளையும் பெற்றது. இன்று பொருள் நீட்சியில் எது எதற்கோ spinning என்கிறார். திருக்களியோ நம்மூர்ப் பேச்சுவழக்கில் தக்களியாகி தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் தப்புந் தவறுமாய்க் கிடக்கிறது. தக்களி கீழடி 4 ஆங் கட்ட ஆய்வில் கிடைத்ததாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது. பொதுவாகத் துகில் நுட்பியற் சொற்கள் பலவுந் தமிழ் அகரமுதலிகளிற் குலைந்து கிடக்கின்றன. யாரேனும் அவற்றைத் திருத்தித் தொகுப்பின் நல்லது. என்னாலியன்ற உதவியளிப்பேன்.) திருக்கேறிய நூல் திரி/திரள் ஆனது. (ஆங்கிலத்தில் thread என்றார்.)

கயிறுகளுக்கு முறுக்கம் கொடுப்பதும் நூல்களுக்கு திருக்கம் கொடுப்பதும் ஒன்று போலவே அமையும். முறுக்கேறிய திரி நூலுக்கு உறுதி ஏற்படுவதால் (இன்னும் உறுதி வேண்டின், திரிநூலின்மேற் பசை/ கஞ்சி/ காடி போடுவார்.) பாவில் (warp) கோரைகளுக்கு மாறாய் நூல்களே பின்னால் இடம்பெற்றன. இது சட்டென விளைந்த மாற்றமாயினும், ஊட்டின் (weft) பயன்பாட்டில் கோரைகள் தொடர்ந்தன. இம்மாற்றம் பாய்களுக்கு நெகிழ்ச்சியையும் சுற்றிவைக்கும் வாகையையுங் கொடுத்தது. மாந்தவாழ்க்கையில் இதுபோல் புதுப் பயன்பாடுகள் எழுந்தன. இன்றுங்கூட இக் கட்டுமானத்திலேயே (நெல்லைப்) பத்தமடை, (சீர்காழித்) தைக்கால் போன்ற இடங்களில் பாய்கள் நெய்யப்படுகின்றன. [நான் பென்னம்பெரிய தொழிலிடங்கள் சொன்னேன். மாநிலத்தின் வேறிடங்களிலும் பாய்முடைதல் ஓரளவு வளர்ச்சி பெற்றுள்ளது. பழங்காலத்தில் கோரையிருந்த இடங்களிலெல்லாம் இந்நுட்பியல் இருந்து இருக்கும்.] 

பாவிற் கோரையை உருவி, நெகிழ்ச்சி பார்த்தவனுக்கு, ஊடிலும் கோரையை நீக்கி நூல்பயன்படுத்த எத்தனை காலமாகும்? இனிப் பின்னல், முடைதல், வேய்தல், பொருத்தல், கள்ளல், கட்டுதல், நுள்ளல், நெருக்கல், நெய்தல் என்பவற்றைப் பார்ப்போம். ஓலைக்கீற்றுகள் நீளவாட்டிலும் குறுக்கு வாட்டிலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் போவதைப் பின்னலென்றார். பாவும் ஊடும் முட்டுவது முடைதலாயிற்று. முடைதலுக்கு, வேய்தலென்றும் பெயர் (மேலை மொழிகளில் வேய்தலே weaving ஆயிற்று. துகிற்றொழிலை இன்றது குறித்தாலும் ஓலை முயற்சியை உள்ளே காட்டுகிறது.) இருவேறு பட்ட ஊட்டையும் பாவையும் பொருத்துவதால் பொருத்தலாயிற்று. பாவும் ஊடுஞ் சேருவதாற் கள்ளலாகி, அதன் நீட்சியிற் கட்டுவதானது. (ஊடையும் பாவையும் கட்டுகிறோமே?) நுள்ளல் அடைத்தலையும், செறிதலையும், பொருத்தலையும், குறித்தது. நன்குசெறிந்த தடுக்கோ, பாயோ இடைவெளி காட்டாது நுள்>நெள்>நெருக்கென நெருக்கிநிற்கும். இன்னொரு வகையில் நுள்>நெள்>நெய் ஆகிப் பாய் நெய்தலைக் குறித்தது. (பாய் நெயவின் நெளிவு சுளிவுகளை நானிங்கு விவரிக்கவில்லை.) பாவும், ஊடும் பிணையும் அடிச்செயல் ஒன்றே. அவ்வளவுதான். ஓலைக்கீற்று, கோரை, நூலெனச் செய்பொருட்கள் இதில் மாறிவந்தன.

மேற்சொன்ன அத்தனை சொற்களும் சுற்றிவளைத்து இச்செயலையே குறிக்கும். இன்னும் கலிங்கல், துற்றல், தறித்தலென்ற வினைகளை நான் சொல்லவில்லை. அதற்குமுன் நெய்தல் எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். நெய்தலைத் ”துணி, பாய் முதலியன உருவாக்கத் தறியில் நீளவாட்டில் நூலையோ, கோரையையோ செலுத்திக் குறுக்குவாட்டிற் இன்னொன்றைக் கோத்துப் பின்னுதல் = to weave” என்று வரையறுப்பார். “நெய்யு நுண்ணூல்” என்பது சீவக. 3019. நெய்தலுக்குத் தொடுத்தற் பொருளுண்டு. to string, to link together "நெய்தவை தூக்க” என்று பரிபா. 19:80 சொல்லும். கிட்டத்தட்ட எல்லாத் தமிழிய மொழிகளிலும் நெய்தலுக்கு இணைச்சொற்களுண்டு. ம>நெய்க; தெ.நேயு; க.நேய், நேயி, நெய்யு; கோத.நெச்; துட.நிச்; குட.நெய்; து.நெயுநி; கூ.நெப; குவி.நெநை; குரு.எஸ்நா; மா.எசெ.

பாவலின் (fabric) அகலத்திற்குத் தக்க, நூலின் விட்டத்தைப் பொறுத்து, நெயவுத்தறியில் பாவுநூல் இழுனைகளை (warp threadlines; இதை இழையணிகள் என்றுஞ் சங்க இலக்கியஞ் சொல்லும்.) முடிவு செய்வர். பட்டவப் பலக்குமைக்கு (complxity of the pattern) ஏற்ப இழுணைகளைத் தொகுதி பிரிப்பர். எளிய பட்டவத்தில் 1, 3, 5, 7..... என்ற ஒற்றைப்படை இழுனைகளை A தொகுதியாயும், 2, 4, 6, 8,.. எனும் இரட்டைப்படை இழுணைகளை B தொகுதியாயும் கொள்ளலாம். இரு தொகுதிகளின் ஒரு பக்க நுனிகளையும் தறிக்கப்பால் ஓரச்சிற் பிணைத்து, இன்னொரு பக்க நுனிகளை அகலப் பரப்பி, தேவைப்பட்டாற் கோல்களாற் சுற்றி நகர்த்தி, A நுனிகளை மேலும், B நுனிகளைக் கீழும் கொணர்ந்தால், இருவேறு பாவு இழுனைகளுக்கும் நடுவே ஒரு V வடிவக் கூடும் உருவாகும். (கூடு>skud>sked> shed) இக்கூட்டின் நடுவேதான் ஊடு நூல் போகிறது. ஊடுநூலைச் சுருட்டிவைக்கும் இல்லுக்கு ஊடில்/ஊடம் என்று பெயர் (shuttle; பேச்சுவழக்கில் ஊடம் ஓடமானது. space shuttle = விண்வெளி யோடம் என்கிறோமே, நினைவிற்கு வருகிறதா? ஊடப் பேருந்து (shuttle bus) என்ற. தமிழ்ச்சொல் மறந்து இப்போதுபலரும் சட்டில்பஸ் என்கிறார். நுட்பியற் கலைச்சொற்களை தமிழில் வளர்க்காததால் வந்து சேர்ந்த கொடூரம் இது. இத்தனைக்கும் ஊடத்தோற்றம் நம்மூரில் ஏற்பட்டது.]

தறியில் ஊடு நூல் இடமிருந்து வலம் போனதென வையுங்கள். ஊடு நூல் போனபின்பு, B யை மேலும், A யைக் கீழும் பிரித்தால், ஊடுநூல் சிக்கும். மீண்டும் ஊடுநூலை வலமிருந்து இடம் அனுப்பி, பாவு நூலில் A ஐயை மேலும், B ஐயைக் கீழுமாக்கினால் ஊடுநூல் மீளவுஞ் சிக்கும். இப்படி மாறி மாறிப் பாவுநூலின் A யும், B யும், மேல்-கீழில் இடங்கொள்ள, ஊடுநூல் இடம் வலம் என்று மாற, நூற்பிணைப்பு கூடிவரும். நெய்தல் தொழில் என்பது இதுதான். ஒருபக்கம் வெள்ளமாய்ப் பெருகும் நூல் இன்னொரு பக்கம் கட்டுப்படுத்திப் பிணைத்து வெளிவரும் துணி. இதை மாந்த உழைப்பாலும், எந்திரப் புயவாலும் (power) செய்யமுடியும். ஒவ்வொரு சுற்றும் (பாவுமாற்றம்/ஊடு மாற்றம்) முடிந்தவுடன் ஊட்டுப்பிடிப்புகளை நெருக்கவேண்டும். இதற்குத் தறியில் நெருக்குக்கோலுண்டு. (இன்னொரு பெயரைக் கீழே சொல்வேன்.) நெய்வதில் எளிமையான பட்டவம் இதுதான். மாறாகப் பாவுத் தொகுதிகளை இரண்டு ஆக்காது பலவாக்கி, ஊட்டுநூலை ஒன்றல்லாது பலவாக்கி, பல்வேறு பலக்கிய பட்டவங்களை (complex patterns) உருவாக்கலாம். பலக்கிய நெய்விற்கான சக்கார்டு (Jacquard) கருவியை பிரஞ்சுத் துகலியலார் கண்டு பிடித்தார். அதை இங்கு சொல்லின் விரியும். (நமக்கு அவ்விளக்கம் இங்கு தேவையில்லை)   

உழவில் தோய்ந்தோருக்கு நெய்தல் தொழிலை வேறொன்றோடு ஒப்புமை செய்யத் தோன்றாதா, என்ன? ஏரிப்பாசனக் கலிங்கோடு நெய்தற் கருவியை ஒப்பு நோக்கினார். ஒரு பக்கம் வெள்ளம் வர, இன்னொரு பக்கம் கலிங்கால் (கலிங்கின் சொற்பிறப்பைக் கீழே சொல்வேன். கலிங்கிற்கு மற்ற சொற்களும் உண்டு. மடுப்பதால் மடு>மடையென்றும், மடு>மடுகு> மடகு>மதகென்றுஞ் சொல்வர்.) கட்டுப் படுத்தி நீரைத் திருப்புவோம் பாருங்கள். அதுபோல ஒரு பக்கம் பாவு/ஊடுநூல்கள் வர, நெய்தற்கருவி ஒழுங்கே பிணைத்து, இன்னொரு பக்கம் துணியாக வெளிப்படுத்துமாம். இவ்வொப்புமையால் நெய்தற் கருவிக்கு கலிங்கு, மடுகு/மடுகம் எனும் பெயர்கள் ஏற்பட்டன. இதன் விளைவால் கலிங்கம், மடி என்ற சொற்கள் துணிகளுக்கும் ஏற்பட்டன. மடுகம்>மடுக்கம்>மட்கம்>மக்கம் என்ற சொல் தமிழ்ப்பேச்சு வழக்கிலும், மலையாளத்திலும் ஆனது. தெலுங்கு, கன்னடம், துளு, கோண்டி, மராட்டி மொழிகளிலும் அதன் இணைகள் புழங்குகின்றன. [4624 Ta. makkam loom. Ma. makkam id. Ka. magga id. Tu. magga id. Te. maggamu id.; maggari weaver. Go. (Mu.) maŋṭa weaving instrument (Voc. 2681). / Cf. Mar. māg loom; Or. maṅg id. DED(S)] 

[வழக்கம்போல் நுட்பியல் விவரம் அறியாது உரையாசிரியரும் அகர முதலியாரும் கலிங்கத்திலிருந்து வந்த விதப்புத்துணி கலிங்கமென்பார். ஆழம் பார்க்கின் அப்படித் தெரியவில்லை. கணப்புப் (generic) பயன்படாகவே கலிங்கம் தெரிகிறது. அரசர், செல்வரிலிருந்து வறியமக்கள் வரை, அவர் உடம்பின் உச்சிமுதல் உள்ளங்கால்வரை, அணியுந் துணியே கலிங்கமாகும். விவரிப்புகளை அடுத்த பகுதியில் ஐந்தைந்தாய் அடுக்குவேன். இவ்வளவு விரிவு தேவையில்லை தான். இருப்பினும், “உரையாசிரியர் பற்றி இராம.கி.க்கு என்ன தெரியும்?” எனத் தமிழறிஞர் அதிர்ந்து உறழலாம். ஒரு புலத்தின் அடியில் ஆழ்ந்துள்ள புரிதலை வெளியாள் ஒருவன் அசைத்துப் பார்ப்பதை புலத்தின் உள்ளேயிருப்பவர் கனிவாய்ப் பார்க்கமாட்டார். உள்ளிருக்கும் யாருமே என் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பார். பொறுத்துக் கொள்ளுங்கள். உரையாசிரியரை நான் முழுதும் மறுக்கவில்லை. சில இடங்களில் மறு ஆய்வு கட்டாயம் தேவை என்கிறேன். அவ்வளவு தான்.]

அன்புடன்,
இராம.கி.

Thursday, July 26, 2018

பனுவலும் text உம் ஒன்றா? - 2

31/5/2016 அன்று இக்கட்டுரையின் முதற்பகுதியை மடற்குழுக்களில் வெளியிட்டு 3,4 நாளில் அடுத்த பகுதிக்கு வருவதாய்ச் சொல்லியிருந்தேன். ஆனால் முன்னரே ஒப்புக்கொண்டிருந்த வேதிப்பொறியியல் ஆலோசிப்பு வேலையை முடிக்காது நகரவியலா நிலையில் இது பின்தங்கிப்போனது.

துகில்தொழின் பனுவலை முதற்பகுதியில் பேசிய நாம் text -ஐ இனிப் பார்ப்போம். இதிலும் ஒரு பனுவலுண்டு.

மாந்தன் தன் எண்ணங்களை இன்னொருவனோடு முதலிற் பரிமாறிக் கொண்டது பேச்சாலும் கைச்செய்கைகளாலும் தான். நாளடைவிற் செய்கைகளைக் குறைத்து எண்ணப்பரிமாற்றத்தில் பேச்சுமட்டுமே முழுதும் நிறைந்திருக்கலாம். (இன்றும் பேச்சினூடே செய்கைகளுண்டு.) இதன் தொடர்ச்சியாய்க். கல்லிற் கீறிய படங்கள், சுருக்கப்படத் தொகுதிகள், படவெழுத்துக்கள், கருத்தெழுத்துக்கள், கல்/மாழை/ ஓலை/தாள் ஆகியவற்றில் எழுதிய அசையெழுத்துக்கள், (syllabaries. தமிழெழுத்து இவ்வகையே.) முடிவில் கல்/மாழை/ஓலை/தாள்/அச்சு/ கணி வரை வந்த மெய்யுயிரெழுத்துக்கள் (alphabets) எழுந்தன.

[இங்கோர் இடைவிலகல். மெய்யுயிரெழுத்தில் 2 வகையுண்டு. முதல் வகையை அபுகிடா (abugida) என்பர். இதில் உயிரெழுத்துக்கள், அகரமேறிய மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்க் குறியீடுகள் உண்டு. இன்னொன்றை அபுஜெட் (abujed) என்பார். இதில் மெய்யெழுத்துக்கள், உயிர்/உயிர்மெய்க் குறியீடுகள் மட்டுமேயுண்டு. அரபிக், அரமெய்க், ஈப்ரு போன்ற மொழி யெழுத்துக்கள் அபுஜெட் வகையைச் சேர்ந்தவை. ”தனி உயிரெழுத்துக்கள் எதுரசுக்கனில் தான் முதலில் அரைகுறையாய் எழுந்ததோ?” என்ற ஐயம் ஆய்வாளருக்குண்டு. தமிழெழுத்து எப்போது எழுந்தது? - என்று சொல்ல முடியவில்லை. தமிழில் உயிரெழுத்து எப்பொழுதெழுந்தது? அதுவுந் தெரியாது. ஆனால், இன்று வரை தமிழெழுத்து அசையெழுத்தாகவே நமக்குக் காட்சியளிக்கிறது.

எத்தமிழிலக்கணமும் உயிர்மெய்களிலுள்ள கால், கொக்கி, சுழிக்கொக்கி, (வளை, கோடு, வளைக்கோடு, வளைச்சுழி, வளைக்கால், கோட்டுவளை போன்ற) உகர/ஊகாரக் குறிகள், ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்பு, ஔகாரச் சிறகு போன்றவற்றை சிறப்பித்துச் சொன்னதில்லை. 1950கள் வரை திண்ணைப் பள்ளி ஆசிரியர் எங்களுக்கு இதன் வடிவுகளையும் பெயர்களையுஞ் சொல்லிக் கொடுத்தார். (இக்காலத்தில் வடிவுகளை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார். பலருக்குந் தமிழ்ப்பெயர் தெரிவதே இல்லை.) இக்குறிகளுக்கான செந்தரமாக்கலும் நடைபெறவில்லை. வடிப்புக் கிறுவியல் (typography) என்பது தமிழர்களிடம் ”வீசை என்ன விலை?” என்று கேட்கும் நிலையிலேயே உள்ளது.

இதற்கு மாறாய் நம் பிள்ளைகளின் கல்வியிற் கைவைத்துச் சிலர் உகர/ஊகாரச் சீர்திருத்தம் பேசி, எல்லோரையும் வழிபிறழ வைக்கிறார். எந்த வொரு தமிழெழுத்தையும் கணித்திரையில் காட்டக் கணியில் 2 பொத்தான்களை அடித்தால் போதும் என்ற இந்நாளைய நுட்பியல் வளர்ச்சி உணராது, தமிழைக் குலைத்தே தீருவதென்று பல சீர்திருத்தவாதியர் கங்கணங் கட்டித் திரிகிறார். கேட்டால், “பெரியார்” என்று சொல்லிவிடுவார். பெரியாரின் எத்தனையோ கருத்துக்களை ஏற்கலாம். ஆனால் எழுத்துச் சீர்திருத்தம் போன்ற அரைகுறைக் கருத்துக்களை எப்படிநாம் ஏற்பது? போகிற போக்கில் சீர்திருத்த வாதிகள் பெரியாரைச் சங்கராச்சாரியார் போல் ஆக்கி விடுவாரோ, என்னவோ? பெரியார் சொன்னதெலாம் வேதமா?  பெரியார் சொன்னதில் தவறே இருக்காதா? இந்த “பாழாய்ப்போன” எழுத்துச் சீர்திருத்தம் பெரியாரின் தவறுகளில் ஒன்று. எழுத்துச் சீர்திருத்தம் செய்த மலேசியா, துருக்கி, இந்தோனேசியா போன்ற நாடுகள் தம் வரலாற்றை, தம் பழம் நூல்களின் தொடர்ச்சியை இழந்ததுதான் மிச்சம். இன்று எழுத்துச் சீர்திருத்தம் செய்தால், கோடிக்கணக்கான பழந்தமிழ்ப் பொத்தகங்கள் அழிந்தே போகும்.

இது ஒருபக்கமெனில், இன்னொரு பக்கம் உள்ளுரும நுட்பியல் (information technology) சார்ந்த இந்திய நடுவணரசுத் துறைகளும், ஒருங்குறிச் சேர்த்தியம் உட்பட்ட அனைத்துநாட்டு நிறுவனங்களும் தமிழெழுத்தின் இயல்பைத் தவறாக மதிப்பிடுகின்றன. தமிழில் உயிருக்கும், மெய்க்கும் தனித்தனிச் சிறப்புண்டு. அகரமேறிய உயிர்களுக்கு எந்தத் தமிழிலக்கணமும் முகன்மை தராது.  இவ்விவரம் புரியாத மேலே சொல்லப்பட்ட நிறுவனங்கள், அபுகிடா என அறியப்பட்ட வடவிந்திய எழுத்துக்களோடும், தமிழல்லாத திராவிட எழுத்துக்களோடும் சேர்த்துத் தமிழை நெருக்கித் தள்ளுகின்றன. (தமிழெழுத்தும் அபுகிடாவும் ஒன்று என்பது பெரும் முட்டாள்தனமான கூற்று. தொல்காப்பியம் படியுங்கள். உங்கள் தவறு சட்டெனப் புலப்படும்.) நம் வலிமை குறைந்து கிடப்பதால் நாமும் முனகிக்கொண்டே இதை ஏற்க வேண்டியுள்ளது. ஒரு பெண்ணை ஆணென்று இடக்கு முடக்காய் அடையாளஞ் சொல்லி, தப்புத் தப்பாய் சொவ்வறை (software) ஆடைகளைப் போட்டு, பாடாய்ப் படுத்தினால் உளச் சிக்கல் வாராதோ?]

எழுத்து வளர்ச்சிக்கான அடிப்படையைப் பகரிக் கொள்கை (rebus principle) என்பர். இருவேறு பொருள் குறிக்கும் சொல்லுக்கு ஒரு பொருளில் பூதியல் வடிவும் (physical shape), இன்னொன்றில் கருத்தியல் அடிப்படையும் (ideological underpinning) இருப்பின் இடம், பொருள், ஏவல்பார்த்து ஒன்று இன்னொன்றுக்குப் பகரியாய் ஆகும். ஒரு வாயோடு உள்நோக்கிய அம்பும், வெளிநோக்கிய அம்புமாய் ஒரு படம் போட்டால் ”உண்ணுதல், பேசுதல்” போன்ற வினைகளை உணர்த்தி விடலாம். கணித்திரையில் இப்போது காணும் எமோஜிகளுங் (emojis) கூட இப் பகரிக் கொள்கையைத் தான் உணர்த்தும். (எமோஜிகளை வைத்துச் சப்பானில் குறும்படக்கதைகள் கூட வந்துவிட்டனவாம்.)

கீழ்வாலை ஓவியங்களைப் போல் படவெழுத்துப் பாவனைகள் 5000/6000 ஆண்டுகளுக்கு முன் தமிழில் இருந்திருக்கவேண்டும். ஓரசைக் குறும் படங்கள் நாளடைவில் அசையொலியையுங் குறித்தன. (தமிழி, பெருமி, உரோமன் போன்றவற்றிலுள்ள அகரம் “ஆ” என்னும் மாட்டு முகத்தின் குறும்படம் தான். வியப்பாய் இருக்கிறதோ? எழுத்துக்களின் உருவ ஒற்றுமை பற்றி நண்பர் நாக.இளங்கோவன் ஒரு கட்டுரை எழுதினார். 4, 5 எழுத்துக்களுக்கு விரிவாக எழுதியவர் அப்புறம் ஏனோ தொடராது விட்டார். அவர் அதைத் தொடர வேண்டும்.)

முதலிற் படங்கள் குறுந்தொடர்களையே கல்லில் தெரிவித்தன. குறும்படத் தொகுதிகள் புரிதலை விரிவாக்கின. படவெழுத்துக்கள் கதை சொல்லத் தொடங்கின. அசையெழுத்துக்கள். பேரிலக்கியங்களைக் கூட பதிவாக்கின. முடிவில் 250 க்கும் அருகில் அசையொலிகள் தமிழில் எழுந்த பிறகு, இன்னுஞ் சுருக்கி 31 எழுத்துக்களையும் சில ஒட்டுக்குறிகளையும் வைத்து தமிழ் எழுத்தைச் செந்தரப்படுத்தினார். இவ்வளர்ச்சிக்கு 1000, 2000 ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். தமிழில் இச்செந்தரம் எப்பொழுதெழுந்தது? உறுதியாகத் தெரியாது. ஆனால் இன்றைக்குக் கிடைக்கும் தொல்லியற் செய்திகளைப் பார்க்கும்போது, பொ.உ.மு. 800 இலேயே அசையெழுத்துக்கள் வந்துவிட்டன என்று சொல்லத் தோன்றுகிறது..எனவே பெரும்பாலும் பொ.உ.மு. 1000/1500க்கு இடையில் இச்செந்தரம் எழுந்திருக்கலாம். கவனங் கொள்ளுங்கள். “லாம்” என்று சொன்னேன்.

எழுத்தென்ற பெயர் ஒருபக்கம் தொண்டையிலெழும் வினையால் ஒலியையும், இன்னொரு பக்கம் எழுதுபொருளிற் செய்யப்படும் இழுத்தல் வினையால் வடிவையுங் குறித்தது. ஒலியெழுத்து, வரையெழுத்து என்பன இருவேறு புரிதலை அளிக்கும். நுட்பியல் வளராக் காலத்தில் பேச்சென்பது காற்றோடு போச்சு. ஆனால் கல்/ மாழை/ ஓடு/ ஓலை/ தாள் ஆகியவற்றில் எழுதினால் அது ஓர் ஒலியை/ சொல்லை/ கருத்தை இழுத்துக் கட்டி நிலைத்ததாயிற்று. காலகாலத்திற்கும் இன்னொருவர் அதை, முயன்றால் அறிய முடியும். சொன்னவரும் தன் பேச்சை மாற்ற முடியாது. நாகரிக வளர்ச்சியில் எழுத்தின் பங்கு முகன்மை ஆனது. வரையெழுத்து வளர வளர, அது பேச்சிற்கும் துணையாகியது.

பேச்சில் ஈடுபடக் குறைந்தது 2 மாந்தராவது அருகருகே வேண்டும். ஒருவர் வாயையும், இன்னொருவர் செவியையும் பயன்படுத்தினார். வரையெழுத்து என்று வந்தவுடன், இன்னொரு மாந்தன் அருகிருக்குந் தேவை குறைந்தது. முதல் மாந்தன் -> கல்லின்மேல் எழுத்து -> இரண்டாம் மாந்தன் எனும்போது இடமும் காலமும் விலகிப் போகலாம். இந்தப் பிரிப்பு மாந்தச் சிந்தனையை வளர்த்தது. பாண்டியன் சோழனோடு பேச முடிந்தது. எள்ளுப் பாட்டன் கொள்ளுப் பேர்த்தியோடு பேச முடிந்தது. பின்னால் உரைப்பேச்சும் வரையெழுத்துஞ் சேர்த்து மாந்தச் சிந்தனையைப் பெரிதாகவும் நுண்ணிய தாகவும் ஆக்கின..

எழுத்திற்கும் பேச்சிற்குமான இடையாற்றத்தைச் (interaction) சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மாந்தன் தன் எண்ணங்களை வரைதல்/ எழுதல் வழியாய் இன்னொருவருக்குப் பரிமாறிக் கொண்டது வெகுகாலங் கழித்தே யாகும். தொடக்கத்தில் பேச்சின் வழியாகவே மாந்த மொழிகள் வளர்ந்தன; (எழுத்துகளை முயன்று சரிபார்த்து - trial and error - உருவாக்கிய காலத்திலும்) மொழியிற் தொடர்கள் தோன்றிக் கொண்டு தான் இருந்தன, வாக்கியங்கள் விரிந்தன. இலக்கியங்கள் பிறந்தன; இலக்கணங்கள் எழுந்தன. இத்தனைக்கு நடுவில் ஏதொன்றையும் ஞாவகம் வைத்துக் கொள்ள மாந்தர் மனப்பாடமே செய்து வந்தார். அதிலும் 1000 ஆண்டுகளாய் படிப்பென்பது இந்தியக் குருகுலங்களில் மனப்பாடமாகவே இருந்தது. {அண்மைக்காலம் வரை இது நடந்தது. என் 4 ஆம் அகவையிலிருந்து 7 ஆம் அகவை வரை (1952-55) திண்ணைப் பள்ளிக்கூடத்திற் படித்தபோது இப்படியே தான் எனக்கும் என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.

“ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.....;”

”ஓரோன் ஒன்று, ஈரோன் ரெண்டு, எண்ணிரண்டு பதினாறு...”;

இப்படித்தான் நான் படித்தேன். ஏட்டுப் பையும் மனப்பாடமுமாய் இப்படி எல்லா மாணவருந் திரிந்தோம். பன்னிப் பன்னிப் பன்முறை வாயால் ஒலித்து எல்லாவற்றையும் படிக்க வேண்டும். மொழி, பண்பாடு, பழக்கவழக்கம், நீதிநெறி, சாமிபாட்டு என எல்லாமும் மனப்பாட முறையிற்றான் எமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அந்தக்கால என்படிப்பில் மனப்பாடமே 90% இருந்தது. மணலில் நான் எழுதிக் காட்டியதும், ஓலையில் எழுதியதும் மீச்சிறு அளவே. மொத்தத்தில் ”பாடம்” என்ற சொல் பல இடங்களில் மனப் பாடத்தையே குறித்தது. ”உங்களுக்குக் கோளறு பதிகம் பாடமா?” – என்றால் ”மனப்பாடமாய்த் தெரியுமா?” - என்று பொருள். அவ்வளவு எதற்கு? text book என்பதற்கு ஈடாய்ப் பாடப் புத்தகம் என்று தான் இன்றுஞ் சொல்கிறோம்.

மனப்பாடமென்பது நம்மில் அவ்வளவு தொலைவு ஊறிக்கிடக்கிறது. அதனாற்றான் text இன் பெயர்ச் சொல்லைத் தொலைத்துத் தேடிக் கொண்டிருக்கிறோம். படித்தல் என்பது கூட reading என்பதாக மட்டுமின்றி memorize என்பதாகவே நம்மூரில் புரிந்துகொள்ளப் பட்டது. மனப்பாடமென்பது இந்தியப் பண்பாட்டிற்கே உரித்தான ஒரு நடைமுறை. இந்த அளவிற்கு இதற்கு முகன்மை வேறு நாகரிகங்களில் வந்ததாய்த் தெரிய வில்லை.]

பன்னுதலென்ற சொல்லிற்குப் பலமுறை சொல்லுதலென்றே பொருள் ஏற்பட்டது. “ஏன் இப்படிப் பன்னிக்கொண்டிருக்கிறான்?” என்றால் ”ஏன் திருப்பித் திருப்பிச் சொல்கிறான்?” என்று பொருளாகும். சமய நூல்களைப் பரவுதற்கும் பன்னுதலைப் பயன்படுத்தியதால், பாராயணஞ் செய்தல் என்றுஞ் சொன்னார். ”உங்களுக்குத் திருக்குறள் பாராயணமாய்த் தெரியுமா?” என் தாத்தா எங்களூர்க் கோயில் ஓதுவாரை 1 1/2 ஆண்டுகள் எங்கள் வீட்டிற்கு வரவழைத்து எனக்குத் தேவாரம் சொல்லிக்கொடுக்க வைத்தார். எல்லாம் பாராயணந் தான். பன்னுதலிலிருந்து பனுவுதலென்ற வினைச்சொல் பிறந்தது. இந்த வகையில் பனுவலென்பது மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய நூல்களைக் குறிக்கும். இருக்கு, திருக்குறள், நாலடியார், கீதை, விவிலியம், குரான் - இதுபோன்ற நூல்கள் பனுவல் வகையைச் சேர்ந்தவை.

எல்லா நூல்களும் பனுவல்களா என்பது காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம், ஆட்களுக்குத் தக்க மாறுபடும். எனக்குப் பனுவலானது உங்களுக்குப் பனுவலாகத் தேவையில்லை. அதேபோல் எந்தப் பனுவலும் எழுத்தால் ஆகி இருக்கவுந் தேவையில்லை. இன்று பல பனுவல்களும் எழுத்தாலாவது நுட்பியல் தந்த கொடை. அவ்வளவு தான். முப்பாட்டன் காலத்தில் எழுத்து நூல்களைப் படித்தோர் மிகக் குறைவு. ஆனாலும் பலருக்கும் தேவாரம், நாலாயிரப் பனுவலிற் சில பாடல்கள் தெரிந்தே இருந்தன. எல்லாம் கேள்வி ஞானமும் மனப்பாடப் பயிற்சியும் தான். நினைவிருக்கட்டும் பனுவலென்ற சொல்லிற்குப் ”பலமுறை சொல்லும் பொத்தகம்” என்பதே பொருள். துகலியல் (textile) துறையில் பல இள்ளிகள் சேர்ந்த பஞ்சு, பனுவல் இழையாயிற்று. படிப்புத் துறையில் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்ப்பதால் படித்தது பனுவலாயிற்று. (பனுவுதலை ஆங்கிலம் spinning என்றது. அதை விளக்கப் போனால், இராம.கி. மீண்டும் ”ஆங்கிலவொலியிற் சொல் படைக்கிறார்” என்று திட்டு விழும்.)

இனி நுவலியது நூலாகும். அதாவது ஒருபொருள் பற்றிய அறிவுத் திரட்டையே நூலென்று சொல்கிறார். அதே பொழுது, எல்லா நூலும் எழுத்தாய் இருக்கத் தேவையில்லை. ஆகமம், ஆரிடம், பிடகம், தந்திரம், பனுவல், சமயம், சூத்திரம் என்று நிகண்டுகள் நூல்களுக்கு வகை சொல்லும். இவை எல்லாமே எழுத்தில் அமைவன அல்ல. இன்று நுட்பியல் காரணமாய் இவை எழுத்தில் அமைவது ஒரு வித வாய்ப்பு அவ்வளவு தான். துகலியல் துறையில் நுல்லிக்கொண்டு நீண்ட காரணத்தால் நூல் எனப்பட்டது. படிப்பத்துறையில் வாயாற் சொன்ன காரணத்தால், நுவலியது நூலாயிற்று. இரண்டும் இருவேறு சொற்பிறப்புகள். நூல் என்று முடிப்பு மட்டும் தான் ஒன்றுபோல் தெரிகிறது.

பனுவல், நூல் என்னும் இருவேறு சொற்களுக்கும் தனித்தனியே இருவேறு பொருள்கள் இருவேறு துறைகளில் இப்படியுண்டு. இங்கும் பகரிக்கொள்கை விளையாடுகிறது. விவரமறிந்தோர் குழப்பங் கொள்ளார். நானறிந்தவரை பனுவலுக்கு text பொருள் என்பது கிடையாது. அப்படி யாரேனுஞ் சொன்னால் அது வலிந்து சொல்வது. (ஆர்வக்கோளாறால் text ற்கு இணையாய் ஒருகாலத்தில் நானும் இடுகுறிப் பெயராய்ப் பனுவலைப் பயனுறுத்தியது உண்டு. பின் ஆழ்ந்த படிப்பால், உட்பொருளறிந்து குறைத்துக் கொண்டேன். “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது வெற்று மொழியல்ல.) கல், மாழை, ஓலை, தாள், கணி என வெவ்வேறு எழுதுபொருள்களில் வரை வடிவிற் சேமிக்கப் படும் text, வாய்வழிப் பேச்சிலிருந்து மாறுபட்டது. (இக் காலத்தே பேச்சுக்களையுஞ் சேமிக்கிறோம்.) கொஞ்சங் கொஞ்சமாய் பேச்சிற்கும் text க்குமான இடைவெளி, நுட்பியல் வளர்ச்சியாற் குறைகிறது.

சரி text க்கு வேறென்ன தான் சொல்வது? துகலியற் தொழிலுக்குள், அதன் தறிக்குள், பாவல் (fabric) கட்டுமானம் பற்றிய வேறு சொற்களுக்குள், போய்த் தேடினால் அதற்கும் வழியுண்டு. அடுத்த பகுதியிற் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, July 25, 2018

பனுவலும் text உம் ஒன்றா? - 1

2016 இல் “பேச்சிலிருந்து தடவரை (Speech to text), தடவரையிலிருந்து பேச்சு (Text to speech), எந்திர மொழிபெயர்ப்பு (machine translation)” என்ற 3 தமிழ்க்கணிமை வேலைகளைத் தொட்டு, இந்தையிரோப்பிய, தமிழிய மொழிக் குடும்பங்களின் வாக்கியவொழுங்கு வேறுபாட்டை மடற்குழுக்களிற் சுட்டிக் காட்டினேன். அதற்கு நேராக மறுமொழி தராது, பகடி நடையோடு, ”தடவரை போன்ற சொற்களைப் பழகுதமிழில் மாற்றக் கருவியுண்டா?” என்று திரு.வேந்தனரசு கேட்டார். அவர் குசும்பைக் கண்டு கோவமுற்று நான் முதலில் மறுமொழித்தாலும். ”பருத்திப்பெண்டின் பனுவலன்ன” என்ற புறம் 125 குறிப்பையும், ”ஆளில்பெண்டிர் தாளின்செய்த நுணங்குநுண் பனுவல் போல” என்ற நற்றிணை 353 குறிப்பையும், ”செவிமுதல் வித்திய பனுவல்” என்ற புறம் 237 குறிப்பையும் கொடுத்துப் ”பனுவலென்றால் பஞ்சு மற்றும் பாட்டு. ஆங்கிலத்தின் டெக்ஸ்ட்டுக்கு பொருத்தமான சொல். ஏற்கனவே இரு பொருளிலும் பழகுதமிழில் புழக்கத்திலுள்ள சொல்” என்ற வேந்தனரசின் 2 ஆம் மொழிக்கு, கோவத்தைக் குறைத்து என் மறுப்பின் உரியவிளக்கத்தை அளிக்கத்தான் வேண்டும். இல்லெனில் பனுவல் பற்றிய தவறான புரிதல் மடற்குழுக்களில் நிலைத்துப் போகலாம்.

textக்கு இணையான தமிழ்ச்சொல்லை விளக்குமுன், பருத்தி, பஞ்சு, பன், பன்னல், பன்னுதல், பனுவுதல், பனுவல் போன்ற பல்வேறு துகில் துறைச் (textile) சொற்கள் தமிழில் எழுந்த வகையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டிற்குமிடையே தொடர்பும், அற்றதும் உண்டு. கீழே நான் நீளமாய்ச் சொல்வதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். முதலில் பருத்தி பற்றிப் பேசிவிடுகிறேன். பருத்தியை நூலாகவும், ஆடையாகவும் பயன்படுத்தலாம் என உலகிற்குரைத்தவர் எகிப்தியரா, இந்தியரா? - தெரியாது. ஆனால் சிந்து சமவெளியில் ஆதாரங் கிடைப்பதாய்ச் சொல்வதைப் படித்திருக்கிறேன். அதே பொழுது, இன்றைக்கு மேலை நாடுகளிற் பருத்தியையொட்டிப் பரவிய பல சொற்களும் தமிழ்மூலம் காட்டுவதை. விவரமாய்ச் சொல்லவேண்டும்.

பருத்திக்காயினுள்ளே கொட்டையை ஒட்டிக்கிடக்கும் இள்ளிகள் (fibre. இள்ளுதல் = மெல்லியதாதல்)- நீட்சி கருதி இழைகள் (filament) என்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்பட்டன. (fibre, fila விற்கு மூலந் தெரியாதென்றே மேலைச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் கூறும்.) ஆயினும் அறிவியல் வரிதியாய் நீட்சி குறைந்ததை இள்ளியென்றும் பட்டுப்போல் நீட்சி கூடியதை இழையென்றுஞ் சொன்னால் தெளிவு கூடும். (இள்ளியை ஒரு வகையிற் குற்றிழை எனலாம்.) இள்ளித் தொகுதி எடை குறைந்து பருமன் கூடிப் பருத்துக் கிடந்ததால் அது பருத்தியாயிற்று. இன்னொரு வகையில் கொட்டைக்குள் பன்னூறு இள்ளிகள் இருந்ததால் பல்ஞ்சு>பன்ஞ்சு>பஞ்சு என்றுஞ் சொல்லப் பட்டது. (பருமையால் பருத்தி; பன்மையாற் பஞ்சு. முன்னது செடிக்கும், விளைவின் காழுக்கும் (content); பின்னது விளைவின் எண்ணிக்கையாலும் ஆன பெயராகும்.) பஞ்சிற்கு ஆங்கிலத்தில் staple fibre என்று பெயர். பல்லத்தாலை (polyester factory) ஒன்றை நிறுவிய என் பணிக் காலத்தில் ஈரோடு, சேலம் பகுதிகளில் மாறகைப்புத் (marketing) தொடர்பாய்க் கைத்தறி, புயவுத்தறியாளரோடு (power loom) ”துகலியற் தொழிலின் நடைமுறைச் சிக்கல்கள் (practical problems in textile industry)” பற்றிப் பேசி யுள்ளேன்

[வேதிப்பொறியாளனாய் இங்கேயோர் இடைவிலகல். பல்வேறு காடிகளும் (acids), வெறியங்களும் (alcohols), களியங்களும் (glycols), களிச்செறியங்களும் (glycerols) ஒன்றோடொன்று வினைபுரிந்தெழும் கூடுகைகளைக் (compounds) அலங்க வேதியலில் (organic chemistry) அத்துகள் (esters) என்பர். அலங்கக் காடியின் ஒருபக்கம் நீரகங் (hydrogen) கொண்ட கரிமஃகக் (carboxyl) கூறும், இன்னொரு பக்கம் அலங்க அடிக்கூறும் (organic base groups) உண்டு. அலங்க அடிக்கூற்றில் கொழுவகை (aliphatic type), மணவகை (aromatic type) என 2 வகைகளுண்டு. கொழுவகையில் ஏற்றல் (ethyl), புறப்பல் (propyl; (from prop(ionic acid) Greek pro "in front" + piōn "fat", because it's first in order of the fatty acids), பொலிதயில் (butyl; "butyric acid" comes from Latin butyrum, butter) போன்ற கூறுகளும், மண வகையில் பெஞ்சாவியல் (Benzyl; சாவாத் தீவிற் பெற்ற கருப்பூரம் இதற்கு அடிப்படை), தோலுவியல் (tolyl; கொலம்பியாநாட்டு தோலுமரத்திற் பெற்ற மணச்சாறு), தாரியல் (phthalic; பாறைநெய்த் தாரிற் பெற்ற naphthalene கருப்பூரம்) போன்ற கூறுகளும் உண்டு. வெறியம்/களியம்/களிச்செறியம் போன்றவற்றிலும் காடிகளைப்போல் இரு பக்கமுண்டு. ஒரு பக்கத்தில் (வெறியம் - ஒரு OH; களியம் - இரு OH; களிச்செறியம் - 3 OH என்றபடி) நீரகஃகக் கூறுகளும், இன்னொரு பக்கத்தில் அலங்க அடிக்கூறுகளும் இருக்கும். காடிக்கும், வெறியம்/களியம்/களிச்செறியம் ஆகியவற்றிற்கும் வினைநடக்கும் போது காடியின் நீரகமும், வெறியம்/களியம்/களிச்செறியம் ஆகியவற்றின் ”நீரஃகதோடு” புணர்ந்து நீர் மூலக்கூற்றை வெளிப்படுத்தும்].

மேலே கூறப்பட்ட எல்லோர்க்கும் தெரிந்த பல்லத்துப் பஞ்சு ஏற்றலியக் களியமும் (ethylene glycol), எதிர்த்தாரியக் காடியும் (terephthalic acid) வினை புரிந்து polyethylene terephthalate பெறுவதாகும். பல்லத்தின் பன்மை கூடக்கூட மேலும் நீர் வெளிப்பட்டு, பலமரின் (polymer) எடையுங் கூடும். குறிப்பிட்ட எடைக்குள் ஒரு பலமரை வைத்திருப்பது வெவ்வேறு பயன்பாடுகளுக்கு வழி வகுக்கும். பருத்திப் பஞ்சைப் போலவே polyester staple fibre ஐப் பாலியெசுட்டர் பஞ்சென்று தறியாளர் சொல்வர். இயற்கைப் பருத்திப் பஞ்சோடு பயனுறுத்தும் இன்னொரு வகைச் செயற்கைக் குச்சிலப் (cellulose) பஞ்சும் பருத்தி போலவே தோற்றமளிக்கும். வேதியியலின் (chemical) படி இயற்கையும், செயற்கையுமான இவ்விரண்டுமே குச்சிலங்கள் தான். ஆனாற் பூதியலின் (physical) படி வெவ்வேறு தோற்றங்கள் காட்டும்.

இனிப் பஞ்சென்ற சொல்லை இள்ளித்தொகுதிக்கு வைத்துப் பழங்காலத்திற் பருத்தியைச் செடியோடு சேர்த்தார். (ஒரு நாளும் தமிழர் பஞ்சுச் செடியெனச் சொல்லார். பருத்திச் செடி என்பதே பாடம்.) கொட்டையும் இள்ளிகளும் நிறைந்து, உலர்ந்து வறண்டுபோன பருத்திக் காய்களையே இங்கிருந்து அக் காலத்தில் ஏற்றுமதி செய்ததால் ”பருத்திக்கொட்டையில் பெற்றது” எனும் படிக் கொட்டை (cotton) என்ற சுருக்கப் பெயரே மேலைநாடுகளிற் பருத்தியைக் குறிக்கலாயிற்று. (செடியை அங்கு விளைவிப்பது குறித்து முதலில் அவர்கள் எண்ணவில்லை போலும். எகிப்தியம், சுமேரியம், பாபிலோனியம், அக்கேடியம் போன்றவற்றில் பருத்திக்கு என்ன பெயரென்று நான் ஆய்ந்தேனில்லை. அவற்றை ஆய்வது சுவையாகலாம்.)

நாருக்கும், இள்ளி/இழைக்கும் குறிப்பிட்ட வேறுபாடுண்டு. நாரென்பது (புடலங்காயுள் துளைபோல) உள்ளே நீளமான துளையுள்ளது. (நாளம், நார், நரம்பு போன்றவை தொடர்புள்ளவை.) இது புல்லில் புறக்காழ் வகை போன்றது. இள்ளி/இழை என்பது நடுவில் துளையில்லா அகக்காழ் கொண்டது. பருத்தியிள்ளிகள் பட்டிழைகளைப் போல நீளமானவையல்ல. அவற்றை வைத்து நூற்பது, தேங்காய் நாரைத் திரித்து முறுக்கேற்றி நீண்ட புரிகளைச் செய்து புரிகளை மேலும் பிணைத்துக் கயிறாக்குவதைப் போல் ஆகும். பருத்தி நூலில் இள்ளிகள் -> நூல் என்று நேரே போய்விடும். புரிகள் இருக்கா. அதிகமான வலிமை கூடிய நுட்பியல் உருளிக் கயிறு (technical tyre cord) செய்யும் போது இழை -> புரி-> கயிறு என்றாகும்.

சரி நூலென்ற பெயர் எப்படி வந்தது? பஞ்சைத் திரித்து இழுத்து முறுக்கும் போது ஒரே சமயத்தில் 1 பரிமானத்தில் பருமனானது நுல்லிக்கொண்டு (மெலிந்து) இன்னொரு பரிமானத்தில் நூலிக்கொண்டு (நீண்டு) வருவதால் நூலாயிற்று. (நுல்லென்ற வேரில் இருந்து நுல்>நெல்>நெள்>நெள்கு> நெகு> நெகிழ்>நெகிள்>நீள் என்ற வளர்ச்சியில் ஏராளமாய்த் தமிழ்ச் சொற்களுண்டு. அவற்றை இங்குசொன்னால் விரியும்.) பல்கிய இள்ளிகளைச் சேர்த்து நூல் ஆக்குவதால் பன்னுதல் என்றுஞ் சொல்லப்பட்டது. (பன்னுதல் = பல இள்ளிகளைச் சேர்த்தல்). பன்னல்>பனுவல் என்றசொல் பன் எனும் எண்ணிக்கையால் ஆடைநூலுக்குப் பெயராயிற்று. பன்னல், பனுவுதல் (staple fibre spinning) என்பவை தொழிற்பெயராயின. ஆங்கிலத்தில் இருக்கும் spinning என்ற சொல் கூட நம் பன்னலுக்கு இணைகாட்டும்.

இன்னொரு விதமான நூலாக்குதலில் நூற்காழ் அல்லது பாகுப்பிசின் (viscous resin) ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டோடு நீண்டுவந்து ஓர் இழையாகவே தொடர்ந்து பின் வெளியே (பல்லத்திழையிற்) குளிர்ந்தோ, (பட்டிழையிலும், குச்சில இழையிலும்) வேதிமாற்றம் பெற்றோ நூலாகும் இழை நூலாக்கலுக்கு (filament yarn formation) பேச்சுவழக்கில் பன்னல், பனுவுதல் என்றுஞ் சொல்வது உண்டு தான். ஏனெனில் பருத்திப்பஞ்சு பன்னூறாண்டுகளாய் நம்மைப் பிணைத்திருக்கிறது. பட்டுப்பூச்சியின் ஆக்கம் நமக்குச் சீனத்திலிருந்து பெறப்பட்டது. நம்மூர் முறையிலேயே வெளியார் நுட்பம் உள்வாங்கப் பட்டதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் நுட்பியல் அடிப்படையில் இழைநூல் ஆக்கலும், பன்னுதலும் வேறுபட்டவை. விவரமறிந்தோர் குழம்ப மாட்டார். நூற்றலென்ற சொல் இரண்டிற்குமே பொதுவானது.

நூலென்ற பொருளிருந்தும், yarn என்ற மேலைச்சொல் கயில்>கயிறோடும், யாண்>ஞாண்>நாணோடும் தொடர்புற்றது. அதை விளக்கினால் நேரங் கூடும். எனவே தவிர்க்கிறேன். [முடிந்தால் அருளியின் “யா” பொத்தகத்தைப் படியுங்கள். அவருக்குமேல் நான் ஒன்றுஞ் சொல்வதற்கில்லை. சணல் (sunn - hemp, Crotalaria juncea) என்றசொல்லும் யாணோடு தொடர்புற்றதே.] ஆடைப் பயன்பாட்டைப் பொறுத்தவரை பனுவலென்பது நூல், தந்து போன்ற வற்றைக் குறிக்கும். ”தந்து” பற்றி என் முந்தைக் கட்டுரைகளில் குறித்து உள்ளேன். பனுவலோடு நிறுத்துவதே இங்கு குறிக்கோளெனினும், அடுத்த நிலைச் செயலாக்கங்களையும் சொல்லவேண்டியது முறையல்லவா?

நெய்தல் = weaving. நுள்>நெள்>நெய் என்று இச்சொல் வளர்ந்து நூலை நெருக்கித் துணியாய் முடைதலைக் குறிக்கும். இதில் பாவு (warp) நூல், ஊடு (weft) நூல் என்ற இருவகையுண்டு. பாவுநூல்களின் நீளம் துணிநீளத்தையும், பாவுநூல்களின் குறுக்குவெட்டும் எண்ணிக்கையும் துணியகலத்தையும் நிருணயிக்கின்றன. பாவுநூல்களின் ஊடே ஒன்றுமாறி ஒன்றாய் ஊடுநூல் வலைத்துவலைத்துத் துணியை நிறைக்கிறது. (வல்வுதல் = வலைத்துப்/வளைத்துப் பற்றுதல்; வவ்வுதல் என்பதே weaving ற்கு இணையான தமிழ்ச் சொல். வலைத்துப்பற்றுதலை மேலைச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் சொல்லா. இன்னொரு எடுத்துக்காட்டுஞ் சொல்லலாம். நூலை வலைத்துச் செய்யப்படுவது வலையாகும். வலயத்தின் அளவிற்கேற்பத் துணியின் அடர்த்தி மாறும். வலை நெருக்கமாய்ச் செய்யப்பட்டதா? கலக்கச் செய்யப் பட்டதா? - என்பதைப்பொறுத்து வலையின்/துணியின் பயன்பாடு மாறும்.

இதேபோல், ”என்ன நூல் பாவாகிறது? எது ஊடாகிறது? எப்படி நூற்செறிவு பெறுகிறது? எவ்வளவு நெருக்கமாய் நெய்கிறோம்?” என்பவற்றைப் பொறுத்தே நெய்யப்படுந் துகிலின் தன்மை உருவாகும்.. இங்கே பாவுதல் என்பது முதற் பொருளில் பரவுதலையே குறிக்கும். பரவுகின்ற - பாவுகின்ற - ஆடை பாவாடை. இதைச் சிறுமியர் அணிவார். இங்கே warp பொருள் அமைவதில்லை. வீட்டுத்தரைகளின் மேற் பரப்பிப்பொருத்தும் தட்டைக் கல்லைக் (tiles) பாவுகல் (paving stone) என்பார். இற்றைக்காலத்தில் பாவு என்றவுடன் பரப்பை மறந்து warp எனும் வழிப்பொருளையே பலரும் நினைவு கொள்கிறார். அது ஒருபக்கப் பார்வை. அதேபொழுது, ஆங்கிலத்திலுள்ள warp ம், weft -ம், தமிழ்ச் சொற்களோடு தொடர்புள்ளவைதாம்.

துணி என்பது பேச்சுவழக்கில் cloth ஐக் குறிப்பதால், அறிவியற் கலைச் சொல்லாய் பாவலைப் (fabric) பழகுவது நல்லது. பருத்திப் பாவல் (cotton fabric). பல்லத்துப் பாவல் (polyester fabric), நைலான் பாவல் [Nylon fabric, நியூயார்க் (ny) சுருக்கெழுத்தையும், இலண்டன் (lon) சுருக்கெழுத்தையுஞ் சேர்த்த பெயர்.), பல்புறப்பலின் பாவல் (polypropylene fabric), நூகிழைப் பாவல் (micro filament fabric; கழுத்துப்பட்டை (neck tie)கள், சில சேலைகள் ஆகியவற்றைளைத் தொட்டுப் பார்த்தால் வழுவழுப்பு உணர்வு காட்டும் பாவல்.) என வெவ்வேறு பாவற் கட்டுமானங்கள் (fabric constructions) உண்டு.

அடுத்தது பின்னல் = knitting. ஆங்கிலத்தில் இதை knot - முடிச்சுப் போடுதல் என்பதோடு தொடர்புறுத்துவர். பாவு, ஊடு என்று 2 நூல்களல்லாது ஒரே நூலை வைத்து வெவ்வேறு பட்டவங்களில் (pattern) முடிச்சுப்போட்டு ஒரு துணியை உருவாக்கமுடியும். இதுதான் திருப்பூரில் நடக்கிறது. பின் எப்படி knitting என்ற ஆங்கிலச்சொல் ஏற்பட்டது? வேறொன்றுமில்லை. ஒவ்வொரு knot க்கும் நடுவே ஒரு கண் உண்டு. கண்>கண்டு. தமிழிற் கண்டென்பது முடிச்சைக் குறிக்கும். நூற்கண்டு என்பது முடிச்சுப்போட்ட நூற்சுருள். கண்டுதல் = முடிச்சுப்போடுதல். முடிச்சுப்போட்டு துணியுருவாக்கும் நுட்பியல் நம்மூரில் வந்தபோது, ”கண்டுதல்” என்ற சொல் பரவாது, ”பின்னலே” பழகியது. முடிச்சின் தொழிற்பெயரான முடைதல், ஓலைகளை வைத்துக் கூடை, கொட்டான், கீற்று, தடுக்கு போன்றவை செய்யப் பயன் படுத்துச் சொல்லாகும். இங்கும் ஒரணியில் ஓலைவைத்து முடைவதும், ஈரணியில் ஓலைகள்வைத்து முடைவதும் என இருவேறு செயலாக்கங்கள் உண்டு.

மூன்றாவது வகை அண்மையில் இந்தியாவிற்கு வந்த non-woven spunbond ஆகும். ஒரு மாகனத்தின் (machine) மூலம் பல்லத்துப் பஞ்சைத் தட்டையாகப் பரப்பி, பஞ்சுத் தகட்டின் வெம்மையைக் (temperature) கூட்டி, பல்லாயிரம் நுணுகிய சம்மட்டிகளால் மென்மேலும் அதைக் குத்தியடித்து, எவ்வித நூற்பு, நெய்ப்பு, பின்னல் வேலைகளும் இல்லாது தகட்டின் தடிமனைக் குறைத்து பின் ஒன்றோடு ஒன்று பிணைந்தபின் ஆற வைத்து ஆக்கும் துணியைத்தான் நெய்யாத பன்னபந்தப் பாவல் (non-woven spunbond fabric) என்கிறார். இதைப் பல்லத்துப் பஞ்சில் மட்டுமின்றிப் பல்புறப்பலின் பஞ்சிலும் உருவாக்க முடியும். பின்னது முன்னதை விட மலிவானது. பல்லங்காடிப் பொருளடைப்பு/பொத்தகைப் (packing) பைகளும், திருமண வரவேற்புத் தாம்பூலப் பைகளும் இப்போது பன்னபந்தப் பைகளாகவேயுள்ளன. சில அழைப்பிதழ் கூடுகளைக் (covers) கூட இதே பாவலாற் செய்து விடுகிறார். காலம் மாறிக்கொண்டுள்ளது.

தச்சுத் தொழிலுக்கும் துகில் தொழிலுக்கும் சில ஒப்புமைகள் உண்டு. இரண்டுமே பொருத்தல் கருத்தில் உருவானவை. ஆங்கிலத்தில் வரும் text, texture, textile, technician, technic, technology இன்னும் பல்வேறு சொற்களெலாம் தச்சு, துகில், தையல் போன்ற பிணைப்பு வினையை ஒட்டியே ஏற்பட்டன. இவற்றில் பல சொற்களின் வேர் தமிழ்மூலங் காட்டுகிறது. இவற்றைச் சொல்லப் போனால் அனுமார் வாலாய் நீளும். மொத்தத்தில் தமிழ்மொழியின் வளத்தை நாம் அறிந்தோமில்லை. இப்பின்புலத்தோடு படிப்பது தொடர்பான ”நூலுக்கு” வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

பளிங்கு/படிகம் என்பது கட்டி (crystal) அல்ல

”படிகம்” 1600 ஆண்டுகளுக்கு முந்தைய சொல்லென்று முகநூல் சொல்லாய்வுக் குழுவில் திரு இரவீந்திரன் வெங்கடாசலம் தெரிவித்தார். ஆண்டு, பொருள் அனைத்திலும் அவருக்குக் குழப்பம் போலும். அவர் சொல்லும் காலம் தேவார, நாலாயிரப் பனுவலுக்கும் முந்தைய கி.பி, 5 ஆம் நூற்றாண்டாகும். கம்பன் காலம் 12 ஆம் நூற்றாண்டென்றே கேள்விப் பட்டுள்ளேன். 9/10 ஆம் நூற்றாண்டிற்குக் கம்பனைக் கொண்டு செல்லச் சிலர் முயல்வர். 5 ஆம் நூற்றாண்டிற்குக்.கொணர முயல்வதை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். பண்டிதரின் முயற்சி வெல்லட்டும்!!! என் கருத்தைச் சொல்கிறேன். முதலிற் கம்பன் காலத்தைக் காண்போம்.

விக்கிரமச் சோழன் (கி.பி.1118-1135), 2 ஆம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150), 2 ஆம் இராசராசன் (கி.பி.1146-1163) ஆகியோரின் அரசவைகளை அலங்கரித்தவர் ஒட்டக்கூத்தர். விண்ணவ மரபு சார்ந்த விக்கிரமச்சோழன் திருவரங்கக் கோயிலுக்கு நிறையப் பணிகள் செய்தான். அவன் காலத்திற்கு முன்னேதான், (120 அகவை வாழ்ந்த) இராமானுசர் திருவரங்கத்தில் பணிசெய்யத் தொடங்கினார். அவர் பணிகளூடே கம்பராமாயணம் எழுந்திருப்பின், இராமானுசர் கம்பனை ”கம்பநாட்டாழ்வார்” என மிக்குயர்ந்து புகழ்ந்திருப்பார். குருபரம்பரைச் செய்திகள் அப்படியேதுஞ் சொல்லவில்லை. 2 ஆம் குலோத்துங்கன் முற்றிலும் சிவநெறி சார்ந்து அவ்வெறியில் இராமானுசருக்கு ஏராளஞ் சிக்கல் கொடுத்தான். அதன் விளைவாய், 12/13 ஆண்டுகள் கருநாடகம் மண்டியா மாவட்டம் மேற்கோட்டையில் இராமானுசர் தங்கவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. எனவே குலோத்துங்கன் காலத்திலும் களையிழந்த திருவரங்கத்தில் இராமாயணம் அரங்கேறியிருக்க வழியில்லை.

2 ஆம் இராசராசன் காலத்தில் சிவநெறி / விண்ணவநெறிக் குழப்பங்கள் சோழ நாட்டிற் சரிசெய்யப்பட்டன. இவன்காலத்திற்றான் இராமானுசர் நிற்றசூரி ஆனார். இராமானுசருக்குப் பின்னரே கம்பன் இராமாயணம் பாடியிருக்க வாய்ப்புண்டு. கம்பன் உத்தர ராமாயணம் பாடாததால், ஒட்டக்கூத்தர் அதைப் பாடினார். உத்தர ராமாயணம் 1163 க்குச் சிலவாண்டுகள் முன்னெழுந்தது எனில், கம்பராமாயண எழுச்சி அதற்குஞ் சிலவாண்டுகள் முன்னராகலாம். எனவே கம்பராமாயணம் ~ கி.பி. 1150க்கு அருகில் எழுந்ததாகவே கொள்ள முடியும். எனவே படிகச் சொல்லாட்சி என்பது கி.பி. 1150 க்கு அருகில் தான் எழமுடியும். அதாவது இற்றைக்கு ஏறத்தாழ 868 ஆண்டுகள் முந்தையது. 1600 ஆண்டுகள் என்பது நண்பரின் வரலாற்றுத் தெளிவில்லாப் பேச்சு. .

சரி ’படிகத்தின்’ பொருளைப் பார்க்கலாம். அகர முதலிகள் என்பவை பொருள் அறியுந் தொடக்கம் தரலாமே தவிரச் சான்றுகளாகா. குறிப்பிட்ட ஒரு சில அகரமுதலிகள் தவிர, மற்றவை எந்தப் பொருள், எந்த இடத்தில், எந்தக் காலத்தில் தோன்றியதென்று சொல்லா. படிகப் பொருளாய்ப் பளிங்கு, கூத்து (அக.நிகண்டு), விளாம்பட்டை (சூடாமணி நிகண்டு), இரப்பு (பிங்கலம்) ஆகியன குறிப்பிடப்படும். கடைசி 3 பற்றி இங்கு பேச்சில்லை. பளிங்கின் ஆங்கிலப் பொருளாய் crystal போட்டிருப்பதிற்றான் சிக்கலே. பளிங்கைக் crystal க்குச் சமங்கொண்டது எக்காலம்? பண்டிதர் தேடட்டும். நானறிந்தவரை பொதுப் பயன்பாட்டிற்கு இப்புரிதல் 70 ஆண்டுகளுக்கு முன்னரே வந்தது. பளிங்கின் பொருளறியக் கம்பனுள் வருவோம். பாலகாண்டம். வரைக்காட்சிப் படலத்தில் 809 ஆம் பாட்டில் வரும்.

படிகத்தின் தலமென் றெண்ணிப் படர்சுனை முடுகிப் புக்க
கடிகைப்பூங் கமல மன்ன சுடர்மதி முகத்தி னர்தம்
வடகத்தோ டுடுத்த தூசை மாசில்நீர் நனைப்பு நோக்கி
கடகக்கை எறிந்து தம்மில் கருங்குழல் வீரர் நக்கார்.

என்ற வரிகளின் பொருளாய் “தாமரைபோற் சுடர்மதி முகங்கொண்ட பெண்களின் மேலாடையும் கீழாடையும் படர் சுனையில் முடுகிவிழ, ’பளிங்குத் தலத்தை அவை நாடுவனவோ?’ என்றபடி மாசற்ற நீர் அவற்றை நனைத்துவிட்டது. பெருவீரக் கழலணிந்த, தோள்வளை அணிந்த, வீர இளைஞரோ, அக்காட்சி கண்டு தம்மிடத்தில் மாசற்ற நீர் இருந்தபடி, கைகளைத் தட்டிச் சிரித்தார்.” என்று பொருள் சொல்வர்.. இச்சுனை மட்பாங்கான இடத்திலில்லாது (குற்றாலம் செண்பகாதேவி அருவியின் கீழமைந்த) பளபளப்புக் காட்டும் கற்பாறைச் சுனை போன்றது. இதைக் crystal என்பது சரியெனத் தோன்ற வில்லை. இதே சுனையை 801 ஆம் பாட்டில் “தெள்ளிய பளிக்குப் பாறைத் தெளிசுனை மணியில் செய்த” என்பார். ஆக இச்சுனை பளிங்குப் பாறையால் ஆனது. பளிங்கு என்றாலென்ன?

பளபள என்பது ஒளிபடத்தெறிக்கும், வழுவழுத்துத் தோற்றும். ஆங்கிலத்தில் shining glittering என்பார். ”தங்கத் (வெள்ளித், செம்புத்) தட்டு பளபளவென்று இருந்தது” என்போமல்லவா?. பளபள-த்தல் என்ற செ.கு.வினைச்சொல்லும் உண்டு, பளபள என்பது ஒளிக்குறிப்பு. பளிங்கு-தலும்/பளிக்கு-தலும் shining glittering. ”பளிக்கறை புக்க காதை” மணிமேகலையிலுண்டு. பளிங்காலான அறை பளிக்கறை/ பளிங்கறை. ஒருபொருளின் மீது ஒளிபடும்போது  3 வகையிற் பிரியும், ஒளி ஊடுறுவலாம், ஈர்க்கப்படலாம், மறுபளிக்கவுஞ் செய்யலாம். இம்மூன்றும். எவ்வளவு நடக்குமென்பது குறிப்பிட்ட பொருளின் பரப்பைப் பொறுத்தது. நுணுகிய மேடுபள்ளமின்றி எவ்வளவு வழவழப்பான தட்டையாகுமோ, அவ்வளவு கூறுபாடு நடக்கும். எந்தெந்தப் பொருளெல்லாம் மறுபளிப்பைக் கூடக் காட்டுமோ, அதெல்லாம் பளிங்கு தான். அது crystal ஆய் மட்டுமே இருக்கத் தேவையில்லை. காட்டாக கண்ணாடியில்லாக் காலம் ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள். பழங்காலத்தில் செப்புத் தகடு இருந்தது. நாட்பட நாட்பட தகட்டின் மறுபளிப்புக் குன்றினால் என்ன செய்திருப்பார்? எலுமிச்சை/ புளிச்சாறு கொண்டு ஒருமுறை விளக்கி, பின் திருநீற்றுப் பொடியும், துணியுங் கொண்டு தேய்த்துப் பளிச்சூட்டுவார் அல்லவா? நன்றாகப் பளிச்சூட்டிய பிறகு, முகங் கூடப் பார்க்க முடியுமே? மங்கிப்போன கண்ணாடிக்கும் திருநீறு கொண்டு இற்றை நாளில் பளிச்சூட்டுகிறோமே? பளிங்கெல்லாம் crystal என்றால், உம்பர்க் குளிரூட்டிய நீர்மமான கிளர்த்தி (glass) ஒரு crystal ஆ?

சுனைக்கரையிலிருந்து பார்க்கையில் சிலவகைப் பாறைக்கற்கள் மறுபளிப்புத் தன்மை கூடிக்காட்டும். அவற்றையே பளிங்குப்பாறைகள் என்பார். அறிவியல் வளராக் காலத்தில் பட்டறிவால் பெற்ற சொல் பளிங்காகும். பளிங்குக்கல், பளிங்குக் கீச்சான் (இதுவொரு மீன்), பளிங்குக் குருவங்கம் (சித்த மருத்துவம்), பளிங்குச் செய்ந்நஞ்சு (சித்தமருத்துவம்), பளிங்குச் சாம்பாணி (மறுபளிப்பு கூடக் காட்டும் சாம்பிராணி), பளிங்கு ஏனங்கள், பளிங்கு உப்பு, பளிங்குப் புட்டில் (கண்ணாடிப் புட்டி), பளிங்கு மத்து, பளிங்கு மாசிக் கட்டி, பளிங்கு வடம் எனப் பல பயன்பாடுகள் உண்டு. திரு இரவீந்திரன் காட்டிய சரசுவதி அந்தாதியும் படிக/பளிங்கு நிறத்தைக் (ஒளியை மறுபளிக்கும் நிறம். கலைமகளுக்கு வெள்ளை நிறமென்பது இங்கு குறிப்பல்ல, கருகரு நிறத்தாளுக்கும் பளிங்குமை காட்டலாம்) குறிக்கும்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

இது தவிர, பளிங்குக் குறிப்பு

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தி னுள்ளே
இருப்பள்இங்கு வாரா திடர்.

என்ற கம்பர் பாட்டிலும் வரும். பளிங்கு, பளிகென்று சில வட தமிழக வட்டாரங்களில் பலுக்கப்படும். இன்றும் ஆந்திரத்திலுண்டு. நாம் தெலுங்கு என்போம். அவர் தெலுகென்பார். (தென் தமிழகத்தில் கிடையாதென்று சொல்ல முடியாது. ”அவுங்க வந்தாங்க” என்பது புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் “அவுக வந்தாக” எனப்படும். இதுபோற் பழக்கம் நிறைய மாவட்டங்களிலுண்டு. தவிரச் சோழர் என்பது நெல்லூர், சித்தூர் பக்கத்தில் சோடராகும். தெலுங்குச் சோழர் = தெலுகுச் சோடர் பொதுவாகப் பல தமிழ்ச் சொற்களின் பாதை தமிழ்- தெலுங்கு- பாகதம்- சங்கதம் என்றே போகும். அப்படியே ஒடிசா, வங்கம் மகதம் போன்றவற்றின் பாகதத்திற்கும் ’படிகு’ பரவும். (பாகத, பாலி அகர முதலிகளைப் பாருங்கள்). பின் படிகு படிகமுமாகும். சங்கதம் இதைக் கடன் வாங்கி முன்னால் ஸகரம் சேர்த்து ஸ்படிகமாக்கும். நம்மூர் பளிங்கு எப்படியெல்லாம் திரிகிறது? வியப்பு வருகிறதல்லவா? ’ஸ்படிக லிங்கத்தின்’ மேல்படும் ஒளி பெரிதும் மறுபளிக்கப் பட்டு நமக்கொரு பரவசத்தைக் கொடுக்கும். ஸ்படிக லிங்கம் என்பது crystal ஆய் மட்டுமே இருக்கத் தேவையில்லை.

crystal இன் அடிப்படைப் பொருள், நீர்மத்திலிருந்து மூலக்கூறு மூலக்கூறாய்ப் பிரிந்து பின் ஒன்றுசேர்ந்து தனிக் கட்டுமானம் உருவாக்குவதே. இக் கட்டுமானம் பளிங்காய் இருங்கத் தேவையில்லை. உருகிய கந்தகத்தைக் குளிர்விக்கிறோம். கொஞ்சங் கொஞ்சமாய் கந்தகக் crystal உருவாகிறது. வேதிப் பொறியியலில் கட்டியாக்கல் (crystallization) என்போம். கட்டியை உருக்கினால் கந்தக நீர்மமாகும். கந்தக நீர்மத்தைக் குளிரூட்டினால் கட்டியாகும். இது என்ன பளிங்கா? அல்ல; வெறுங் கட்டி. கட்டிக்கும் crystal க்கும் மட்டுமே தொடர்புண்டு. பளிங்கிற்கும் crystal க்கும் தொடர்பில்லை. பளிங்கு/படிகத்திற்கும் crystal க்கும் தொடர்பேற்படுத்தியது 70 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தவறான புரிதலால். பூதியல், வேதியல் தெரியாதவர்களால் இது ஏற்படுத்தப்பட்டது. இதைப் புரிந்துகொண்ட நாமினியும் தவறான இணைப்பை தொடரக்கூடாது. (ஐயா, வேதிப்பொறியியல், என் ஓதம். இதிற்றான் 55 ஆண்டுகள் குப்பை கொட்டினேன்.) எத்தனைநாள் இத்தவறை தூக்கிச் சுமக்கவேண்டும்?   

படிகமும் பளிங்கும் பளபளப்புத் தன்மையால் ஏற்பட்டவை. எல்லாக் crystalகளும் பளபளப்புக் காட்டவேண்டியதில்லை. விக்கிப்பீடியாவில் A crystal or crystalline solid is a solid material whose constituents (such as atoms, molecules, or ions) are arranged in a highly ordered microscopic structure, forming a crystal lattice that extends in all directions.[1][2] In addition, macroscopic single crystals are usually identifiable by their geometrical shape, consisting of flat faces with specific, characteristic orientations என்று வரையறை கொடுத்திருப்பர். அதையேற்றால், அணுக்கள்/. மூலக்கூறுகள்/ அயனிகள் ஒன்றுசேர்ந்து (வடிவியல் முறையில்) கட்டியமைத்துக் கட்டுமானஞ் செய்தது கட்டி என்று கொள்ளலாம்.இதைக் கட்டியென்று சொல்லாது வேறெப்படிச் சொல்வது? ஒருவேளை திண்மங்களையும் கட்டிகளையும் சிலர் குழப்பிக் கொள்ளலாம். எல்லாத் திண்மங்களும் கட்டிகளல்லவே?.

அன்புடன்,
இராம.கி.


Ortho, meta, para

துறைகடந்து பயிலப்படும் meta- எனும் முன்னொட்டின் தமிழாக்கத்தை ஒரு நண்பர் கேட்டிருந்தார். இதுபோன்ற சொற்கள் துறைகடந்து பொதுவாக இருப்பதே நல்லது. இப்போதெலாம் ஒவ்வொரு துறையாரும் அவரவர் துறைக்கெனத் தனித்தனியே சொல்லாக்க விழைகிறார். என்னைக் கேட்டால் இத்தகைப் போக்கு சரியில்லை. ஒவ்வொரு துறையிலும் இதுபோலும் முயற்சிகள் துறைக்குப் பாத்தி கட்டுவதாகவே முடியும். தவிர, பல்புல ஆய்வையும் (multi-disciplinary research) மட்டுப்படுத்தும். துறைச்சொற்கள் என்பவை மிகச் சிலவே. பொதுச்சொற்களே அறிவியலில் மிகுதி. காட்டாக பென்சீன், தோலுவீன், சைலீன் போன்றவை வேதியலில் வரும் விதப்புப் பெயர்கள். அவற்றைத் தமிழாக்குவதோ, அப்படியே வைத்துக் கொள்வதோ வேறு கதை. (அப்படியே வைத்துக் கீழே காட்டுகிறேன்.) வேதியலுக்கு உள்ளாகவே அதை முடிவு செய்யலாம். ஆனால் வினைத்தல், உண்டாக்கல், மானுறுத்தம் (manufacture), பயன்பாடு என புலனங் கடந்த கலைச்சொற்களை வேதியியலுக்கெனத் தனித்துச் சொல்லாக்கினால் என்ன பயன் விளையும்-?

meta-விற்கு வேதியலார் சொல் ஒரு மாதிரியும், தாவரவியலார், மருத்துவர் சொற்கள் இன்னொரு மாதிரியும் இருந்தால் நன்றாகவா இருக்கும்? இம் முயற்சிகளால் ஒருவர் பேச்சு இன்னொருவருக்குப் புரியாது போகுமே? அறிவியற்றமிழ் பின்னெப்படி வளரும்? அறிவியலாய்வு தமிழ்மூலம் வெளிப்பட்டுச் சிறக்கத் தானே இந்தனை பேர் முயல்கிறோம்? அதேபொழுது பாமரம், எளிமை என்று எம் போன்றோரை மருட்டி, வெற்றோசை கூடிய, துல்லியமில்லாத, விளக்கவுரை போன்ற, ஒப்புக்குச் சப்பாணியான, ”பொதுவல் தமிழ்” (popular Tamil) நோக்கி, அறிவியற் சொற்களை நகர்த்துவதை நான் என்றும் ஒப்ப மாட்டேன். அப்படிச் செய்தால் கூடியிருக்கும் குழுவினரின் கைதட்டோசை கிடைக்கும். என்றுமுள தென்றமிழுக்கு அது உரிய பயன் தருமோ? பாமரத் தமிழுக்கும் பண்டிதர் தமிழுக்கும் இடையே நாம் முயன்றால் ஒரு நடுவழி காணலாம். இதற்குப் பண்டிதர் கொஞ்சம் இறங்கியும், பாமரர் கொஞ்சம் ஏறியும் வரவேண்டும். எழுத்துத்தமிழையும் பேச்சுத்தமிழையும் இணைப்பது போற்றான் இதையுங் கொள்ளவேண்டும். எத்தனை நாள் தான் இருகிளவிப் (diglossia) போக்கை தமிழர் கையாள்வது ?

meta- வைத் தனித்துப்பாராது ortho, meta, para என்ற 3 ஐயும் சேர்த்துப் பார்ப்பதே எல்லாத் துறைகளுக்குப் பொதுவாய் வரும். முதலில் ortho- (before vowels orth-) வைப் பார்ப்பொம். இதை word-forming element meaning "straight, upright, rectangular, regular; true, correct, proper," now mostly in scientific and technical compounds, from Greek ortho-, stem of orthos "straight, true, correct, regular," from PIE *eredh- "high" (source also of Sanskrit urdhvah "high, lofty, steep," Latin arduus "high, steep," Old Irish ard "high" என ஆங்கிலத்தில் வரையறுப்பர். தமிழின் ’ஊர்த’ என்பது, வகரஞ் சேர்ந்து சங்கதத்தில் ’ஊர்த்வ’ ஆகும். முயலகன் மேல் தில்லை நடவரசன் ஆடுவது ஊர்தத் தாண்டவமென்பர். ஊர்தல், ஊன்றலுமாகும். ஊர்தல்/ஊன்றல் = நிலை கொள்ளல். ஊரென்ற இடப் பெயரை எண்ணுங்கள். ஊர்தல்/ஊன்றலுக்கு high, lofty, steep என்ற பொருள்களுமுண்டு. ஊர்தலின்/ஊன்றலின் பிறவினை ஊர்த்தல்/ஊற்றல். 

ஊற்றுக்கும் ortho-வுக்கும் பயன்பாடு சற்று வேறுபடும். ஆங்கிலத்தில் ortho, என்றுமே முன்னொட்டுத் தான். தமிழில் சிலபோது முன்னொட்டு (காட்டாக ஊற்றுத்தாண்டவம்; orthogonal - ஊற்றுக்கோண, orthopraxy - ஊற்றுப்படிகை, orthology - ஊற்றவியல், orthoscopy - ஊற்றுப்பார்ப்பியல், வேதியலில் orthoxylene - ஊற்றுச்சைலீன்), சிலபோது பின்னொட்டு. (காட்டு: orthodontic - தந்தவூற்று; orthodox - பாடவூற்று, orthogenesis - ஈனூற்று, orthographic - கிறுவூற்று/வரியூற்று, orthopaedic - பாதவூற்று, orthotropic - திருப்பூற்று; திருப்பு = திசை; orthochromatic - குருமவூற்று) எல்லாவற்றையும் எந்திரப் போக்கில் முன்னொட்டு ஆக்குவது தமிழ் போன்ற ஒட்டுநிலை மொழிகளில் சரியில்லை. இடம் பார்த்துப் பயன் கொள்ள வேண்டும்.

அடுத்து meta- எனும் முன்னொட்டைப் பார்ப்போம். இதை word-forming element meaning 1. "after, behind," 2. "changed, altered," 3. "higher, beyond;" from Greek meta (prep.) "in the midst of; in common with; by means of; between; in pursuit or quest of; after, next after, behind," in compounds most often meaning "change" of place, condition, etc. This is from PIE *me- "in the middle" (source also of German mit, Gothic miþ, Old English mið "with, together with, among;" see mid). Notion of "changing places with" probably led to senses "change of place, order, or nature," which was a principal meaning of the Greek word when used as a prefix (but also denoting "community, participation; in common with; pursuing"). என்று வரையறுப்பர்.

இதற்குத் தமிழில் சரியான சொல் முகடென்றே தோன்றுகிறது. முகட்டின் திரிவாய், அதே பொழுது மேற்சொன்ன ("after, behind," "changed, altered," "higher, beyond;" என்ற) 3 பொருண்மைகளையும் குறிக்கும்படி இற்றைத்தமிழிற் 3 சொற்கள் பயில்கின்றன. அவற்றைப் பார்ப்போம். முகடென்ற சொல்லின் 2 ஆம் எழுத்தும் 3 ஆம் எழுத்தும் இடம் மாறி (metathesis) முடகாகும். (பல சொற்களில் இப்படி ஆகியுள்ளது. காட்டாகப் பொக்குளென்ற சொல் கொப்புள் என்று திரிவது இப்படித்தான். கொப்புள் இன்னுந் திரிந்து உந்தியைக் குறிக்கும் கொப்பூழாகும். கொப்புட் கொடியைத் தொப்புட் கொடி என்றுஞ் சொல்வர். [நினைவு கொள்ளுங்கள் திரிவின்றி மொழி வளர்ச்சி இல்லை. Mutations are the cause of genetic growth and development.]

முடகு மேலுந்திரிந்து (முடகு>முடுகு>முதுகு) முதுகென்ற சொல்லை உருவாக்கும். இதன் பொருள் "after, behind" என்பதாகும். ஒரு கூரையின் முகடு அதன் முதுகுப்பக்கமே. உடம்புக்கூட்டின் முகட்டில் தொடங்கிய மார்பு எலும்புகள் மார்பில் பிணைவதால், அம் முகடும் முதுகு தான். இனி முடகு/முடங்கு என்ற சொல் வினையாகி, "changed, altered" என்ற பொருளுணர்த்தி மாற்றுக்கருத்தைக் காட்டும். மூன்றாவதாய் முகடு>மெகடு>மேடு என்ற திரிவில் "higher, beyond" என்ற பொருளுணர்த்தும். ஆங்கிலத்தில் கொள்கின்ற இந்த 3 பொருள்களும் முகடென்ற தமிழ் மூலச்சொல்லிற்கு அமைவது தன்னேர்ச்சியா?  என வியந்து போகிறோம். ஒரு இந்தையிரோப்பியச் சொல்லுக்கான 3 பொருளையும் ஒரே தமிழ்ச்சொல் உணர்த்துமானால் 2 சொல்களுக்கும் இடையே, நமக்குத் தெரியாத  ஏதோவொரு தொடர்பு இருப்பதை அது நமக்கு உணர்த்த வில்லையா? இதன் காரணத்தாலேயே, meta-விற்குச் சரியான இணைச்சொல் முகடென்று சொல்வேன். (பலரும் முகட்டிற்கான மேட்டுப் பொருளை மட்டும் பார்த்து அதன் பயனைக் குறுக்குவர்.) .

முகட்டைச் சிலபோது முன்னொட்டாகவும் [காட்டு: metacarpus முகட்டுக் கிலுத்தம் (கிலுத்தம் என்பது நம் கையின் மணிக்கட்டைக் குறிக்கும்). metacommunication = முகட்டுக் குமுனேற்றம். metalinguistics = முகட்டு மொழியியல். metafictionist = முகட்டுப் புனைவு செய்வார் (முகட்டுப்புனைவாளர் சரிவராது.) metamathematics = முகட்டுக்கணிதம். metamorph = முகட்டுமால்வு (மால் என்பது மாற்றத்தின் வினையடி இற்றைத் தமிழர் பலரும் இதை உணர மறுக்கிறார். மாலுதலின் இன்னொரு பெயர் வடிவம் மால்வு = மாற்றுத் தோற்றம்.) metastabilities = முகட்டுத் தம்பலம். metaphysics = முகட்டுப் பூதியல். metaphysician = முகட்டுப் பூதிகர் (பூதியல் = physics; பூதிகம் = physic. இவற்றின் வேறுபாட்டைக் கூர்ந்தறிக.) metapsychology = முகட்டு உளவியல்], சிலபோது பின்னொட்டாகவும் [காட்டு: metonymy = பெயர் முகட்டியல். metathesis = இட முகட்டு] என்றும் பயனுறுத்தலாம்.

முடிவில் para- (1) இதை before vowels, par-, word-forming element meaning "alongside, beyond; altered; contrary; irregular, abnormal," from Greek para- from para (prep.) "beside, near, issuing from, against, contrary to," from PIE *prea, from root *per- (1) "forward," hence "toward, near, against." Cognate with Old English for- "off, away" என்று வரையறுப்பர். இதைப் பர என்று சொல்வோம். “வெளிப்பக்கம்”, ”இன்னொரு வகை”.என்ற பொருள்கள் அமையும். ஆங்கிலத்தில் 400 சொற்களுக்கும் மேல் இந்தப் ”பர” வகைச் சொற்களுள்ளன. இங்கே காட்டாக ஒருசிலவற்றை மட்டுமே சொல்கிறேன். parabola - பரவளைவு, parachute பரக்குடை, paradigm பரத்தோற்றம், paradox பரத்தேறு, paralanguage பரமொழி.

[ஊற்று, முகடு, பர என்ற 3 ஒட்டுக்களைப் பயனுறுத்தி வேதியலில் ஒரு படியாற்றஞ் (application) சொல்லலாம். சைலீன் (xylene) மூலக்கூற்றில் 6 கரிமங் கொண்ட பென்சீன் (benzene) வளையமுண்டு. இவ்வளையக் கரிமங்களோடு 2 இடங்களில் மீதைல் (methyl) தொகுதியைச் சேர்த்தால் 3 விதமாய்ச் சைலீன் மூலக்கூறு அமையும். முதல் மீதைல் தொகுதியை முதற் கரிமத்தோடும், 2 ஆம் மீதைல் தொகுதியை 2 ஆங் கரிமத்தோடு ஒட்டினால் ஏற்படும் வகையை ஊற்றுச் சைலீன் (ortho xylene) என்றும், 2 ஆம் மீதைல் தொகுதியை 3 ஆங் கரிமத்தோடு ஒட்டினால் முகட்டுச் சைலீன் (meta xylene) என்றும், 2 ஆம் மீதைல் தொகுதியை 4 ஆங் கரிமத்தோடு ஒட்டினால் பரச் சைலீன் (para xylene) என்றும் அழைப்பர். பரச் சைலீனிலிருந்தே எதிர்த்தாரியக் காடி (teriphthalic acid) என்பது உருவாகும். எதிர்த்தாரியக் காடியோடு, இத்திலீன் களியத்தை (ethylene glycol) வினையுறுத்தியே பல்லத்தியிழையைச் (polyester fibre) செய்வார். பருத்தி யிழை போல் பல்லத்தியிழையும் நம் வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்டது.]

வெவ்வேறு படியாற்றங்களில் (applications) இதேபோல் 3 முன்னொட்டுக்களைப் பயனுறுத்தலாம். இதுவரை எச் சிக்கலையும் நான் சொற் படியாற்றங்களில் காணவில்லை. உங்கள் படியாற்றத்தைச் சொல்லுங்கள். பொருத்தத்தைப் பார்க்கலாம். சிக்கலிருந்தால் ஓர்ந்து பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

பல்லத்தி (polyester)

என் பணிக்காலத்தில் சில ஆண்டுகள், ”எதிர்த்தாரியக் காடி ஆலை (Terephthalic acid plant) ” உருவாக்கத்திலும், அதற்குமுன் ”பாராசைலீன் ஆலை (paraxylene plant) ” உருவாக்கத்திலும் ஈடுபட்டிருந்தேன். பின்னால், பல்லத்தி ஆலை (polyester factory) ஒன்றை நிறுவிக் கொண்டிருந்த  பணிக் காலத்தில் ஈரோடு, சேலம் பகுதிகளில் மாறகைப்பு (marketing) தொடர்பாய்க் கைத்தறி, புயவுத் தறியாளரோடு (power loom) ”துகலியற் தொழிலின் நடைமுறைச் சிக்கல்கள் (practical problems in textile industry)” பற்றியும் உரையாடியுள்ளேன். என் பணியை ஆங்கிலவழி செய்தபோதே, ஒருகாலம் தமிழிலும் இவற்றைச் சொல்ல வேண்டுமென்று சொற்களை அலசிக்கொண்டிருந்தேன். அப்போது அலங்க வேதியலில் உருவான சொல் தான் ”பல்லத்தி” ஆகும். இந்த இடுகையில் பல்லத்தி பற்றியும், நூலாக்கல், துணியாக்கல் பற்றியுஞ் சொல்கிறேன். வேதியியலில் இல்லாதவரும் இதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். சற்று முயலுங்கள்.
 
ஒரு வெறியமும் (alcohol), ஓர் அலங்கக் காடியும் (organic acid. அங்கம் தமிழில்லையென ஒருகாலங் கருதி கரிமக் காடி என்று சொல்லிவந்தேன். அண்மையில் இக்குழப்பம் தீர்ந்தது. வலைப்பதிவில் இந்தப் பதிவிற்கு முந்தைய ”அலங்கம்” என்ற பதிவைப் படியுங்கள்) வினைபுரிந்து, அதனால் நீர்பிரிந்து அமையும் பூண்டை (compound; இதைக் கூட்டென்றுஞ் சொல்லலாம்) ஆங்கிலத்தில், ester என்பார்.

compound formed by an acid joined to an alcohol, 1852, coined in German in 1848 by German chemist Leopold Gmelin (1788-1853), professor at Heidelberg. The name is "apparently a pure invention" [Flood], perhaps a contraction of or abstraction from Essigäther, the German name for ethyl acetate, from Essig "vinegar" + Äther "ether" (see ether). Essig is from Old High German ezzih, from a metathesis of Latin acetum (see vinegar) என்பது இதன் வரையறை. Essig அன்றி வேறு காடிகளை வைத்தும் வெறியக்காடிப் பூண்டுகளை உருவாக்கலாம். ester க்குத் தமிழில் பொதுப்பெயர் வேண்டும் என உருவாக்கியது தான் அத்து/அத்தி என்பதாகும்.

’உ’வெனும் வேர்ச் சொல்லில் பிறந்தது உம். ”அவனும் நானும்” என்பதில் வரும் உம் ஒலிக்குறிப்பு சேர்தலை உணர்த்தும். அதே ’உ’வில் பிறந்தது உத்து> உத்தம். உத்தல்= பொருந்துதல். உத்தி= பொருந்தும் முறை. உடுதலும், உடுத்தலும், உருதலும், உருத்தலும், உறுதலும், உறுத்தலும், உவத்தலும், உன்னலும், உன்னித்தலும், ஒக்கலும், ஒட்டலும், ஒடுவலும், ஒண்டலும், ஒண்ணலும், ஒத்தலும், ஒப்பலும், ஒருங்கலும், ஒருதலும், ஒருத்தலும், ஒருவுதலும், ஒல்லலும், ஒவ்வலும், ஒன்றலும், ஓடலும், ஓர்தலும் தொடர்புடைய சொற்கள். உகர/அகரத் திரிவில் உத்தல் என்பது,  அட்டல்/அத்தல் என்றுமாகும். அதிலுங்கூட ஏராளஞ் சொற்கள் பிறக்கும்.

அத்தலோடு தொடர்புற்ற அதிகம், அதிகரித்தல் சொற்களும் என்பவையும் தமிழே. ஆங்கிலத்தில் அட்டம்= addition என்ற சொல் பிறக்கும். இந்தை யிரோப்பியனில் நான் இப்படிச் சொன்னால் பலரும் நம்பமறுக்கிறார். உத்தல்> அத்தல்= சேர்த்தல். அத்தலிற் பிறந்த இன்னொரு பெயர்ச்சொல் அத்தி என்பதாகும். பல்வேறுவகைக் காடிகளும் (acids), வெறியங்களும் (alcohols) ஒன்றோடொன்று வினைபுரிந்து எழும் பூண்டுகளைக் அலங்க வேதியலில் (organic chemistry) அத்திகள் (esters) என்பர். எல்லாவித அலங்கப் பூண்டுகளையும் அத்திகள் என்றழைக்கக் கூடாது. சில குறிப்பிட்ட வகைகளே அத்திகளாகும்.

அலங்கக் காடிகளிலும் பலவகை உண்டு. எளியவகையில் ஒருபக்கம் நீரகங் (hydrogen) கொண்ட கரிமஃகக் (carboxyl - COO) கூறும், இன்னொரு பக்கம் அலங்க அடிக்கூறும் (organic base groups) இருக்கும். அலங்க அடிக்கூற்றில் கொழுவகை (aliphatic type), மணவகை (aromatic type) என 2 வகைகளுண்டு. கொழுவகையில் ஏற்றல் (ethyl), புறப்பல் (propyl; (from prop(ionic acid) Greek pro "in front" + piōn "fat", because it's first in order of the fatty acids), பொலிதயில் (butyl; "butyric acid" comes from Latin butyrum, butter) போன்ற கூறுகளும், மணவகையில் பெஞ்சாவியல் (Benzyl; சாவாத் தீவிற் பெற்ற கருப்பூரம் இதனடிப்படை), தோலுவியல் (tolyl; கொலம்பியாத் தோலுமரத்திற் பெற்ற மணச்சாறு), தாரியல் (phthalic; பாறைநெய்த் தாரிற்பெற்ற naphthalene கருப்பூரம்) போன்ற கூறுகளுமுண்டு.

ஒரு நீரகக் கரிமஃகக் கூறு கொண்ட எளியவகை அலங்கக் காடியை ஒற்றை கரிமஃகக் காடி (monocarboxylic acid) என்பார். சற்று பலக்கியதாய் இரட்டைக் கரிமஃகக் காடிகளும் ((dicarboxylic acids) முவ்வைக் கரிமஃகக் காடிகளும் (tricarboxylic acids) அதற்கு மேலும் உண்டு. இரு பக்கம் நீரகக் கரிமஃகம் (-COOH), நடுவில் அலங்க அடிக்கூறு கொண்டது இரட்டைக் கரிமஃகக் காடியென்று சொல்லப்படும். இவற்றை இருகை கொண்ட அலங்க அடிக்கூறாய் உருவகிக்கலாம். அடுத்து மூன்று கை கொண்ட அலங்க அடிக்கூறுகளை உருவகிக்கலாம். ஒவ்வொரு கையிலும் நீரகக் கரிமஃகம் இருந்தால் அது முவ்வைக் கரிமஃகக் காடியாகும். வெறியம் தவிர்த்த களியம்/ களிச்செறியம் போன்றவற்றிலும் ஒன்றிற்கு மேற்பட்ட கைகளுண்டு. ஒரு நீரஃகக் கை (1 -OH) உள்ளது வெறியமென்றும், இரு நீரஃகக் கை ( 2 -OH) கொண்டது களியம் என்றும், 3 நீரஃகக் கை கொண்டது (3 -OH) களிச்செறியமென்றும் சொல்லப் படும். வெவ்வேறு வகைக் காடிகளும், வெறியம்/ களியம்/ களிச்செறியம் ஆகியவையும் சேர்ந்து வினைநடக்கையில் காடியானது, நீரகம், வெறியம்/ களியம்/ களிச்செறியங்களில் உள்ள ”நீரஃகத்தோடு” புணர்ந்து அதன்வழி நீரை வெளிப்படுத்தும்.

இனி எல்லோர்க்கும் தெரிந்த பல்லத்துப் பஞ்சு என்பதைக் கொங்கு மண்டலத்தில், பருத்திப் பஞ்சைப் போலவே,  பாலியெசுட்டர் பஞ்சென்று (polyester staple fibre ஐ) தறியாளர் பேச்சுவழக்கிற் சொல்வர்.) ஏற்றலியக் களியமும் (ethylene glycol), எதிர்த்தாரியக் காடியும் (terephthalic acid) வினை புரிந்து பல் ஏற்றலிய எதிர்த்தாரிய அத்தைப் (polyethylene terephthalate) பெறுவதாகும். பலமரேற்றலின் (polymerization) பன்மை கூடக் கூட நீர் மேலும் மேலும் வெளிப்பட்டு, பலமரின் (polymer) எடை கூடிவரும். குறிப்பிட்ட எடைக்குள் பலமரை வைத்திருப்பது வெவ்வேறு பயன்பாடுகளுக்கு வழி வகுக்கும்.

[இங்கே இயல்பருத்தி பற்றிய வேதி விளக்கம் சொல்லவேண்டும். பருத்திக் காய்க்குள் பலமரேற்றங் (polymerization) கூடக் கூட பருத்திக் கொட்டையைச் சுற்றிப் பருத்தி இள்ளிகள் (fibre. இள்ளுதல்= மெல்லியதாதல்) தோன்றத் தொடங்கும். இள்ளிகள் நீண்டு இழைகளாகவும் ஆகலாம் ((filament)) அறிவியல் வரிதியாய் நீட்சி குறைந்ததை இள்ளியென்றும் பட்டுப்போல் நீட்சி கூடியதை இழையென்றுஞ் சொல்வது நல்லது. பருத்திக் காய்க்குள் இள்ளிகளும், இழைகளும் நிறைய உள்ளன. ஒருவகையிற் பார்த்தால் இள்ளியைக் குற்றிழை எனலாம். பேச்சு வழக்கில் இள்ளிகளுக்கும் இழைகளுக்கும் வேறுபாடு காட்டார். (fibre, fila விற்கு மூலந்தெரியாதென்றே மேலைச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் கூறும். தமிழ் மூலம் அவர் அறியார். நானறிந்தவரை பருத்தி தொடரான சொற்கள் எல்லாமே தமிழ் மூலங் காட்டும்.) இயற்கைச் செடியில் கிடைக்கும் இள்ளித் தொகுதி எடைகுறைந்து பருமன்கூடிப் பருத்துக் கிடந்ததால் அது பருத்தியாயிற்று. கொட்டைக்குள் பன்னூறு இள்ளிகளிருந்ததால் அது பல்ஞ்சு>பன்ஞ்சு> பஞ்சு என்றுஞ் சொல்லப்பட்டது. (பருமையால் பருத்தி; பன்மையாற் பஞ்சு. முன்னது செடிக்கும், விளைவின் காழுக்கும் (content); பின்னது விளைவின் எண்ணிக்கையாலும் ஏற்பட்ட பெயர்களாகும்.) பஞ்சிற்கு ஆங்கிலத்தில் staple fibre என்று பெயர்.

இயற்கைப் பருத்திப் பஞ்சோடு பயனுறுத்தும் இன்னொரு வகைச் செயற்கைக் குச்சிலப் (cellulose) பஞ்சும் பருத்தி போல் தோற்றமளிக்கும். [வேதியியலின் (chemical) படி இயற்கை, செயற்கை ஆன இரண்டுமே குச்சிலங்கள் தாம். பூதியலின் (physical) படி  வேறு தோற்றங்கள் காட்டும்.]

நாருக்கும், இள்ளி/இழைக்கும் கூடக் குறிப்பிட்ட வேறுபாடுண்டு. நாரென்பது (புடலங்காயுள் துளை போல) உள்ளே நீளமான துளையுள்ளது. (நாளம், நார், நரம்பு போன்றவை தொடர்புள்ளவை.) இது புல்லில் புறக்காழ் வகை போன்றது. இள்ளி/இழை என்பது நடுவில் துளையில்லா அகக்காழ் கொண்டது. பருத்தி இள்ளிகள் பட்டிழைகளைப் போல நீளமானவையல்ல. அவற்றை வைத்து நூற்பது, தேங்காய் நாரைத்திரித்து முறுக்கேற்றி நீண்ட புரிகளைச் செய்து புரிகளை மேலும்பிணைத்துக் கயிறாக்குவதைப் போலாகும். பருத்தி நூலில் இள்ளிகள் -> நூலென்று நேரே போய்விடும். புரிகளிருக்கா. அதிகமான வலிமை கூடிய நுட்பியல் உருளிக் கயிறு (technical tyre cord) செய்யும் போது இழை -> புரி-> கயிறு என்றாகும்.

சரி நூலென்ற பெயர் எப்படி வந்தது? பஞ்சைத்திரித்து இழுத்து முறுக்கும் போது ஒரே சமயத்தில் 1 பரிமானத்தில் பருமனானது நுல்லிக் கொண்டு (மெலிந்து) இன்னொரு பரிமானத்தில் நூலிக் கொண்டு (நீண்டு) வருவதால் நூலாயிற்று. (நுல்லென்ற வேரிலிருந்து நுல்>நெல்>நெள்>நெள்கு> நெகு> நெகிழ்>நெகிள்>நீள் என்ற வளர்ச்சியில் ஏராளம் தமிழ்ச் சொற்களுண்டு. அவற்றை இங்கு சொல்லின் விரியும்.) பல்கிய இள்ளிகளைச் சேர்த்து நூலாக்குவதால் பன்னுதலென்றுஞ் சொல்லப்பட்டது. (பன்னுதல்= பல இள்ளிகளைச் சேர்த்தல்). பன்னல்>பனுவல், பன்னின் எண்ணிக்கையால் ஆடை நூலுக்குப் பெயராயிற்று. பன்னல், பனுவுதல் (staple fibre spinning) என்பவை தொழிற் பெயராயின. ஆங்கிலத்தில் இருக்கும் spinning என்ற சொல் கூட நம் பன்னலுக்கு இணைகாட்டும்.

இன்னொரு விதமான நூலாக்குதலில் நூற்காழ் அல்லது பாகுப்பிசின் (viscous resin) ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டோடு நீண்டுவந்து ஓர் இழையாகவே தொடர்ந்து பின்வெளியே (பல்லத்தி இழையிற்) குளிர்ந்தோ, (பட்டிழையிலும், குச்சில இழையிலும்) வேதிமாற்றம் பெற்றோ நூலாகும் இழை நூலாக்கலுக்கு (filament yarn formation) பேச்சுவழக்கில் பன்னல், பனுவுதல் என்றுஞ் சொல்வது உண்டு தான். ஏனெனில் பருத்திப் பஞ்சு பன்னூறாண்டுகளாய் நம்மைப் பிணைத்திருக்கிறது. பட்டுப்பூச்சியின் ஆக்கம் நமக்குச் சீனத்திலிருந்து பெறப் பட்டது. நம்மூர் முறையிலே வெளியார் நுட்பம் உள்வாங்கப் பட்டதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் நுட்பியல் அடிப்படையில் இழைநூல் ஆக்கலும், பன்னுதலும் வேறுபட்டவை. விவரமறிந்தோர் குழம்ப மாட்டார். நூற்றலென்ற சொல் இரண்டிற்குமே பொதுவானது.

தச்சுத்தொழிலுக்கும் துகில்தொழிலுக்கும் சில ஒப்புமைகளுண்டு. இரண்டும் பொருத்தல் கருத்தில் உருவானவை. ஆங்கிலத்தில் வரும் text, texture, textile, technician, technic, technology எனும் பல்வேறு சொற்கள் தச்சு, துகில், தையல் போன்ற பிணைப்பு வினை ஒட்டியே ஏற்பட்டன. இவற்றில் பல சொற்களின் வேர் தமிழ்மூலங் காட்டுகிறது. இவற்றைச் சொல்லப்போனால் அனுமார் வாலாய் நீளும். மொத்தத்தில் தமிழ்மொழி வளத்தை நாம் அறிந்தோமில்லை. இப்பின்புலத்தோடு படிப்பது தொடர்பான ”நூலுக்கு” வருவோம்.

நண்பர் வேந்தன் அரசின் குசும்பைக் கண்டு கோவமுற்று நான் முதலில் மறுமொழித்தாலும். ”பருத்திப்பெண்டின் பனுவலன்ன” என்ற புறம் 125 குறிப்பையும், ”ஆளில்பெண்டிர் தாளின்செய்த நுணங்கு நுண்பனுவல் போல”  என்ற நற்றிணை 353 குறிப்பையும், ”செவிமுதல் வித்திய பனுவல்” என்ற புறம் 237 குறிப்பையும் கொடுத்துப் ”பனுவலென்றால் பஞ்சு மற்றும் பாட்டு. ஆங்கிலத்தின் டெக்ஸ்ட்டுக்கு பொருத்தமான சொல். ஏற்கனவே இரு பொருளிலும் பழகுதமிழில் புழக்கத்திலுள்ள சொல்” என்ற வேந்தனரசின் 2 ஆம் மொழிக்கு, என் கோவத்தைக் குறைத்து என்மறுப்பின் உரிய விளக்கத்தை அளிக்கத்தான் வேண்டும். இல்லெனில் பனுவல் பற்றிய தவறான புரிதல் மடற்குழுக்களில் நிலைத்துப் போகலாம்.

textக்கு இணையான தமிழ்ச்சொல்லை விளக்குமுன், பருத்தி, பஞ்சு, பன், பன்னல், பன்னுதல், பனுவுதல், பனுவல் போன்ற பல்வேறு துகில்துறைச் (textile) சொற்கள் தமிழில் எழுந்த வகையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டிற்குமிடை தொடர்பும், தொடர்பற்றதுமுண்டு. கீழே நான் நீளமாய்ச் சொல்வதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். முதலில் பருத்தி பற்றிப் பேசி விடுகிறேன். பருத்தியை நூலாகவும், ஆடையாகவும் பயன்படுத்தலாம் என உலகிற்குரைத்தவர் எகிப்தியரா, இந்தியரா? - தெரியாது. ஆனால் சிந்து சமவெளியில் ஆதாரங் கிடைப்பதாய்ச் சொல்வதைப் படித்திருக்கிறேன். அதேபொழுது, இன்றைக்கு மேலைநாடுகளிற் பருத்தியையொட்டிப் பரவிய பலசொற்களும் தமிழ்மூலங் காட்டுவதை. விவரமாய்ச் சொல்லவேண்டும்.
 .
இனிப் பஞ்சென்ற சொல்லை இள்ளித்தொகுதிக்கு வைத்துப் பழங்காலத்திற் பருத்தியைச் செடியோடு சேர்த்தார். (ஒருநாளும் தமிழர் பஞ்சுச் செடியெனச் சொல்லார். பருத்திச் செடி என்பதே பாடம்.) கொட்டையும் இள்ளிகளும் நிறைந்து, உலர்ந்து வறண்டுபோன பருத்திக் காய்களையே இங்கிருந்து அக் காலத்தில் ஏற்றுமதி செய்ததால் ”பருத்திக்கொட்டையில் பெற்றது” எனும்படிக் கொட்டை (cotton) என்ற சுருக்கப்பெயரே மேலைநாடுகளிற் பருத்தியைக் குறிக்கலாயிற்று. (செடியை அங்கு விளைவிப்பது குறித்து முதலில் யாரும் எண்ணவில்லை போலும். எகிப்தியம், சுமேரியம், பாபிலோனியம், அக்கேடியம் போன்றவற்றில் பருத்திக்கு என்ன பெயரென நான் ஆய்ந்தேனில்லை. அவற்றை ஆய்வது சுவையாய் இருக்கலாம்.)

நூலென்ற பொருளிருந்தும், yarn என்ற மேலைச்சொல் கயில்>கயிறோடும், யாண்>ஞாண்>நாணோடும் தொடர்புற்றது. அதை விளக்கினால் நேரங் கூடும். எனவே தவிர்க்கிறேன். [முடிந்தால் அருளியின் “யா” பொத்தகத்தைப் படியுங்கள். அவருக்குமேல் நான் ஒன்றுஞ் சொல்வதற்கில்லை. சணல் (sunn-hemp, Crotalaria juncea) என்ற சொல்லும் யாணோடு தொடர்புற்றதே]. ஆடைப் பயன்பாட்டைப் பொறுத்தவரை பனுவலென்பது நூல் போன்றவற்றைக் குறிக்கும். நெய்தல்= weaving. நுள்>நெள்>நெய் என்று இச்சொல் வளர்ந்து நூலை நெருக்கித் துணியாய் முடைதலைக் குறிக்கும். இதில் பாவு (warp) நூல், ஊடு (weft) நூல் என 2 வகையுண்டு. பாவுநூல்களின் நீளம் துணி நீளத்தையும், பாவுநூல்களின் குறுக்குவெட்டும் எண்ணிக்கையும் துணியகலத்தையும் நிருணயிக்கின்றன. பாவு நூல்களின் ஊடே ஒன்று மாற்றி ஒன்றாய் ஊடு நூல் வலைத்து வலைத்துத் துணியை நிறைக்கிறது. (வல்வுதல்>வவ்வுதல் = வலைத்துப்/வளைத்துப் பற்றுதல்; வவ்வுதலே weaving ற்கு இணையான தமிழ்ச் சொல். வலைத்துப் பற்றுதலை மேலைச் சொற்பிறப்பியல் அகரமுதலிகள் சொல்லா. இன்னொரு எடுத்துக்காட்டுஞ் சொல்லலாம். நூலை வலைத்துச் செய்யப்படுவது வலையாகும். வலயத்தின் அளவிற்கேற்பத் துணியின் அடர்த்தி மாறும். வலை நெருக்கமாய்ச் செய்யப்பட்டதா? கலக்கச் செய்யப் பட்டதா? - என்பதைப்பொறுத்து வலையின்/துணியின் பயன்பாடு மாறும்.

இதேபோல், ”என்ன நூல் பாவாகிறது? எது ஊடாகிறது? எப்படி நூற்செறிவு பெறுகிறது? எவ்வளவு நெருக்கமாய் நெய்கிறோம்?” என்பவற்றைப் பொறுத்தே நெய்யப்படுந் துகிலின் தன்மை உருவாகும். இங்கே பாவுதல் என்பது முதற் பொருளில் பரவுதலைக் குறிக்கும். பரவுகின்ற/பாவுகின்ற  ஆடை, பாவாடை. இதைச் சிறுமியர் அணிவார். இங்கே warp பொருள் அமைவதில்லை. வீட்டுத் தரைகளின் மேற்பரப்பிப் பொருத்தும் தட்டைக் கல்லைக் (tiles) பாவுகல் (paving stone) என்பார். இற்றைக் காலத்தில் பாவு என்றவுடன் பரப்பை மறந்து warp எனும் வழிப்பொருளையே பலரும் நினைவு கொள்கிறார். அது ஒருபக்கப் பார்வை. அதேபொழுது, ஆங்கிலத்திலுள்ள warp ம், weft -ம், தமிழ்ச்சொற்களோடு தொடர்புள்ளவைதாம்.

துணி, பேச்சுவழக்கில் cloth ஐக் குறிப்பதால், அறிவியற் கலைச்சொல்லாய் பாவலைப் (fabric) பழகுவது நல்லது. பருத்திப் பாவல் (cotton fabric). பல்லத்துப் பாவல் (polyester fabric), நைலான் பாவல் [Nylon fabric, நியூயார்க் (ny) சுருக்கெழுத்தையும், இலண்டன் (lon) சுருக்கெழுத்தையுஞ் சேர்த்த பெயர்.), பல்புறப்பலின் பாவல் (polypropylene fabric), நூகிழைப் பாவல் (micro filament fabric; கழுத்துப்பட்டையையும், (neck tie), சில சேலைகளையும் தொட்டுப்பார்த்தால் வழுவழுப்பு உணர்வுகாட்டும் பாவலுக்கு இப் பெயருண்டு.) என வெவ்வேறு பாவற் கட்டுமானங்கள் (fabric constructions) உண்டு.

அடுத்தது பின்னல்= knitting. ஆங்கிலத்தில் இதை knot - முடிச்சுப்போடலோடு தொடர்புறுத்துவர். பாவு, ஊடு என்று 2 நூல்களன்றி ஒரே நூலால் வெவ்வேறு பட்டவங்களில் (pattern) முடிச்சுப்போட்டு துணியை உருவாக்கலாம். இதுவே திருப்பூரில் நடக்கிறது. பின் எப்படி knitting என்ற ஆங்கிலச் சொல் ஏற்பட்டது? வேறொன்றுமில்லை. ஒவ்வொரு knot க்கும் நடுவே ஒரு கண் உண்டு. கண்> கண்டு. தமிழிற் கண்டென்பது முடிச்சைக் குறிக்கும். நூற்கண்டென்பது முடிச்சுப்போட்ட நூற் சுருள். கண்டுதல் = முடிச்சுப்போடல். முடிச்சிட்டுத் துணி உருவாக்கும் நுட்பியல் நம்மூரில் வந்தபோது, ”கண்டுதல்” வினை பரவாது, ”பின்னலே” பழகியது. (கண்டுதல் என்பது knitting ஓடு நேரடித் தொடர்பு கொண்டது.) முடிச்சின் தொழிற்பெயரான முடைதல், ஓலைகளை வைத்துக் கூடை, கொட்டான், கீற்று, தடுக்கு போன்றவை செய்யப் பயன்படுத்தும் சொல்லாகும். இங்கும் ஒரணி ஓலைவைத்து முடைவதும், ஈரணி ஓலைகள் வைத்து முடைவதும் என இருவேறு செயலாக்கங்கள் உண்டு.

மூன்றாவது வகை கடந்த 15/20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்த non-woven spunbond ஆகும். ஒரு மாகனத்தின் (machine) மூலம் பல்லத்திப் பஞ்சைத் தட்டையாகப் பரப்பி, பஞ்சுத் தகட்டின் வெம்மையைக் (temperature) கூட்டி, பல்லாயிரம் நுணுகிய சம்மட்டிகளால் மென்மேலும் குத்தியடித்து, எவ்வித நூற்பு, நெய்ப்பு, பின்னல் வேலைகளின்றித் தகட்டின் தடிமனைக் குறைத்து பின் ஆறவைத்து ஆக்கும் துணியையே நெய்யாத பன்னபந்தப் பாவல் (non-woven spunbond fabric) என்கிறார். பல்லத்திப் பஞ்சில் மட்டுமின்றிப் பல்புறப்பலின் பஞ்சிலும் இதை உருவாக்க முடியும். பின்னது முன்னதை விட மலிவானது. பல்லங்காடிப் பொருளடைப்புப் (packing) பைகளும், திருமண வரவேற்புத் தாம்பூலப் பைகளும் இப்போது பன்னபந்தப் பைகளாகவே உள்ளன. சில அழைப்பிதழ் கூடுகளைக் (covers) கூட இப்போது இதே பாவலாற் செய்துவிடுகிறார். காலம் மாறிக்கொண்டுள்ளது..

இன்னுமுள்ள வேறுவகைப் பயன்பாடு பல்லேற்றலின் (polyethylene) பைகள், விரிப்புகள் போன்றவையாகும். இவையும் பல்புறப்பலின் போன்றே செய்யப் படுகின்றன.

அன்புடன்,
இராம.கி.



அலங்கம் (organ)

organic computing என்பது கரிமக் கணிமையா? உயிரிக் கணிமையா?” என்று முகநூலின் சொல்லாய்வுக் குழுவில் ஒரு நண்பர் கேட்டார். organic fouling என்பதுபற்றி இன்னொரு நண்பர் அண்மையிற் கேட்டார். அக்குழுவின் நடை முறை பார்க்கின், விளக்கமான என்னிடுகைகள் அங்கு ஒன்றுவதாய்த் தோன்ற வில்லை. அக்குழு நிர்வாகத்திற்கும் என்னிருப்பு இடைஞ்சலாகவே தெரிகிறது. ஏறத்தாழ ஓராண்டு ஆகிவிட்டது. இனிமேலும் ”கடைவிரித்தேன், கொள்வாரிலை” என, வேண்டாவிருந்தாளியாய் அங்கிதை இடுவதினும், என் காலக்கோட்டில் இடுவதே சரியாகத் தோன்றுகிறது. இனி நண்பர்கள் ஏதேனும் என்னை வினவவேண்டின் அருள்கூர்ந்து என் காலக்கோட்டிற்கே வந்து கேளுங்கள். என்னால் முடிந்ததை இங்கு சொல்கிறேன். பல்வேறு பார்வைகள் தரும் முகநூல் பரந்தது தானே? (முகநூலில் எழுதிய கட்டுரையை இப்பொழுது வலைப்பதிவில் இடுகிறேன்.)

organic என்பதை ’அங்கக’ என உடலுறுப்புப் பொருளில் ஒருகாலம் மொழி பெயர்த்தார். organic chemistry ஐ அங்கக ரசாயனமென்றே இளமையில் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அச் சங்கதச் சொல்லாக்கம் ஏற்காதவரும் உண்டு. சொற்பிறப்பியல் பேரகரமுதலியிலும் அச்சொல் தவிர்க்கப்பட்டது. அரிசி கேட்டால் பருப்பைக் காட்டுவது போல், பிடிபடாத இச்சொல்லுக்கு, கரிம வேதியலென முன்பெலாம் நான் மொழிபெயர்த்தேன். மொழியியல், வேர்ச்சொல்லாய்வு அறியா நிலையில் வேறேதும் அப்போது செய்யத் தோன்றவில்லை. இப்போது பட்டறிவால் என் எண்ணம் பெரிதும் மாறிவிட்டது. அங்கத்திற்குமுன் வேறு தமிழ்ச்சொல் இருந்திருக்குமோவென ஐயுறுகிறேன். முதலில் ”இது சங்கதமா?” என்று முதலிற் பார்ப்போம்.

(தமிழெனில் ஓராயிரங் கேள்வி கேட்கும் தமிழரிற் பலர் ஒன்றைச் சங்கதம் எனில் அப்படியே ஏற்றுக்கொள்வது ஏனென்று எனக்குப் புரிவதில்லை. அண்மையில் ஒரு நண்பர் ”ஶிவம், ஶைவம் என்பன வடமொழிச் சொற்கள், சிவம், சைவம் என்பன அவற்றின் தமிழ் வடிவங்கள்” என்றார். அதிர்ந்து போனேன். எப்படியெலாம் நம் தமிழர் பிறழ்கிறார்? ஏனோ, கண்ணை மூடிக்கொள்கிறார்? ”சிவம்” என்பது முற்றிலும் தமிழ்ச் சொற்பிறப்புக் கொண்டது. தொல்காப்பியச் சேயோனே சிவன்/செவ்வேள் எனும் 2 வேறு கருத்துகளுக்கு வழிவகுத்தவன். ஶிவம், ஶைவம் என்பன தமிழிலிருந்து உருவான சங்கதப் பெயர்ப்புகள். ஶைவத்தைத் தமிழிற் கடன்வாங்கி நாம் சைவமாக்கினோம். சங்கதர் பெற்ற முதற் கடனை மறைத்து நாம் பெற்ற முட்டாள்தனமான இரண்டாங் கடனை முதலாக ஆக்கினால் எப்படி? இதனாற்றான், “நண்பர்களே! சைவமென எக்காலத்தும் பழகாதீர்! சிவநெறி என்றே கூறுங்கள்” என்பேன். பிறசொல் பழகப்பழக நம்வரலாறு நம் முன்னேயே மறைந்துதொலையும் என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டு. இலிங்கத்தைச் ”சிசுனதேவன்” என்றும் ”தஸ்யூக்கள் குறியை வழிபடுகிறார்” என்றும் எம்மைக் கேலி செய்த வேதநெறியாரா, சிவநெறிக்குச் சொந்தக் காரர்? என்ன கொடுமையிது சரவணா?)

சரி, புலனத்திற்கு வருவோம். அங்கத்தின் தாது ’அம்’மென்றும், சதபத பிராமணம், அதர்வண வேதத்தில் அங்கம் பயின்றதாகவும், முந்தை நூலன்றி பிந்தை அகரமுதலிகளில் இச்சொல் பயின்றதாகவும் மோனியர் வில்லிம்சு அகரமுதலி பதியும். பாணினியின் தாதுபாடம் போன்ற உணாதி சூத்ரம் நூலோ, அம்மிற்கு அசைதல் எனும் இயங்கற்பொருளை உணர்த்தாது, ”மொத்தத்தின் ஒருபகுதி” என்று பொருள் சுட்டும். அதேபொழுது, இந்தை யிரோப்பியனிலோ, ஆங்கிலத்திலோ) organ இன் விளக்கம் அசைவு, மற்றும் இயக்கத்தைக் குறிக்கும். fusion of late Old English organe, and Old French orgene (12c.), both meaning "musical instrument," both from Latin organa, plural of organum "a musical instrument," from Greek organon "implement, tool for making or doing; musical instrument; organ of sense, organ of the body," literally "that with which one works," from PIE *werg-ano-, from root werg- "to do."

இந்தையிரோப்பியனில் சங்கதம் ஓர் உறுப்பு மொழியெனில், ஏனிப்படி இருவேறு மாற்று விளக்கங்கள் அமைகின்றன? புரியவில்லை. ஒருவேளை வேறேதேனும் மொழியில் முந்தைச் சொல்லிருந்து அதுதிரிந்து வழிப்பொருள் சுட்டுவதாய் சங்கதத்துள் ”அங்கம்” நுழைந்ததா? அன்றி, இந்தை யிரோப்பியனில் தரப்படும் விளக்கம் தவறா? இதுவும் புரியவில்லை. ஆனால், தமிழைப் பார்த்தால் அசைவு, இயக்கம் ஆகியவற்றோடு, உறுப்பையுஞ் சேர்த்துக் குறிக்கும் சொற்றொடர்பு இந்தையிரோப்பியன் குடும்பத்தில் உள்ளது போலவே அமைந்திருப்பது வியப்பாகிறது. நானறிந்தவரை, இயக்கம் இன்றி எந்த உடலுறுப்புமில்லை; அசைவுகாட்டா உடலுறுப்பு அழிந்து/இறந்து படுமென்றே இந்திய மருத்துவம் சொல்கிறது. .அதெப்படி இந்தையிரொப்பியனுக்கும் தமிழுக்கும் இடையே இதுபோன்ற தொடர்பு ஏற்பட்டது?

எழுத்து>வேர்>முளை என்றாகி பேச்சில் அவை பழகி வினைச்சொல், பெயர்ச்சொல்லென அடுத்தடுத்து உருவாவதே பல்வேறு மொழிச் சொற்களின் பொது வளர்ச்சியாகும். இது தமிழுக்கு மட்டுமின்றி எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். வேரின் அடிப்பொருளோடு, முளை/பகுதியின் வழிப்பொருள்களும் தொடர்புகாட்டும். இதனால் முரணியக்க முறையிiல் தலைகீழாக வழிப்பொருள்களின் வழி வேர்/முளைச் சொற்களின் அடிப் பொருளையும் ஓரளவு ஊகிக்கலாம். அதைத்தான் இங்கு செய்யப் போகிறோம். அங்கத்திற்கு முந்தைய சொல் எப்படி எழுந்திருக்கும்? இதை விளக்கும் இந்த இடுகையை தனித்தமிழ் அன்பர் சிலர் ஏற்காது போகலாம். இருப்பினும் சற்று பொறுமையோடு படியுங்கள்.

தமிழில் ஊ>உ>உல் எனும் வேருக்கு 11 விதமாய்ப் பொருள் சொல்வர். [தாது என்ற சங்கதச்சொல் ஒரு காலத்தும் வேரைக் குறிக்காது; வினை யடிகளையே குறிக்கும். ஏறத்தாழ 2200 தாதுக்கள் சங்கதத்திலுண்டு. தமிழில் அதைப் பகுதி / பகாப்பதம் என்பார். குத்துமதிப்பாகத் தமிழ் வினையடிகள் 5000 க்கு மேலும் வரும். இன்னும் சரியாக யாருங் கணக்கிட்டதில்லை. (இது வொரு ஆய்வுக்குறைவு) அதேபொழுது, ஓரசையில் வரக்கூடிய முதல் எழுத்துகள், சுட்டெழுத்துகள், எளிதிற் பலுக்கும் ஈற்றெழுத்துகள் எனக் கணக்கிட்டால் வேர்ச்சொற்கள் என்பவை 9*3*3 = 81க்கும் குறைவாகவே அமையும். (எவ்வளவு குறைவு என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் 81 க்கு மிஞ்சியுள்ளதாய்த் தெரிய வில்லை.) இவ்வேர்களிலிருந்து பேச்சுத் திரிவால் மடக்கிப் (exponential) பெருக்கியும், சில சாரியைகள், இடைநிலைகளைச் சேர்த்தும் தமிழ் வினையடிகள் பிறந்துள்ளன. வேர்ச்சொற்களுக்கும் வினையடிகளுக்கும் இடையே குழம்பாது இருப்பதே சொற்பிறப்பியலில் முதற் பாடம். பலரும் எது வேர்ச்சொல் என்பதிற் குழம்புகின்றனர். இதைப் பற்றி வேறொருமுறை கட்டுரை எழுதவேண்டும் போலும்.]

உல்லின் பொருட்பாடுகள் வருமாறு:

உல் 1 = முன்னுதல் (இதன்விரிவில் உல் 2 என்பது முன்னுறல், மேற்செலல், உயரல், விரைதல், மிகுதியுறல் ஆகியவற்றைக் குறிக்கும்);
உல் 3=  தோன்றல் (முளைத்தல், மெல்லுறல், பெருவுதல்);
உல் 4 = நெருங்கல் (தொடல், உராயல், வலிதல்);
உல் 5 = இயங்கல் (அசைதல், வருந்தல், துன்புறல், எரிதல்);
உல் 6 = உள்ளொடுங்கல் (உள்ளடங்கல், கீழிறங்கல், கீழே தங்கல், சிறுத்தல்);
உல் 7 = வளைதல் (சுற்றல், சுற்றிவரல், சுழலல்);
உல் 8 = குத்தல், (துளைத்தல், அழித்தல், கெடுத்தல்; இதன்விரிவில்
உல் 9= ஊடுருவல், ஊடுருவி வெளிப்படல் ஆகியவற்றைக்குறிக்கும். இன்னும் விதப்பாக,
உல் 10 தேங்காயுரிக்கும் கருவியையும், கழுவையுங் குறிக்கும்.
உல் 11 என்பது குத்தியெடுக்கப் பயன்பட்ட பழங்கோடரியையும், கல்லையுங் குறிக்கும். இந்த விரிவுகள் எல்லாமே குத்தல்/துளைத்தல் பொருளில் எழுந்தவை தான்.)

இவற்றில் நம் கவனத்திற்கு உரியது உல் 5 எனும் வேராகும். இதன் அடிப் பொருளாய் அசைவு குறிக்கும் இயங்கற் பொருள் சொல்லப்படும். விடாது அசைவு தொடர்ந்தால் மாந்தருக்குக் களைப்பும், வருத்தமும், துன்பமும் வந்துசேரும். இன்னும் அசைவுகூடின், அசையும் பொருளுக்குத் தேய்வும், எரிதலும் / எரிச்சலும் ஏற்படலாம். உல்லில் விளைந்த உலக்கல், உலத்தல், உலவல், உலாங்கல், உலாஞ்சல், உலாத்தல் என்ற சொற்கள் எல்லாமே ”அசைதல், இயங்கல், திரிதல், தலைசுற்றல், தள்ளாடல், துன்புறல், குறை படல், எரிதல்” போன்ற பொருட்பாடுகளை வெவ்வேறிடங்களிற் குறிக்கும். ”உலகுங் கூட அசைவு/இயக்கமுள்ள இடம்” என்றே சொல்லலாம். (இயற்கை, குமுகாயம் ஆகியவற்றில் அசைவைக்கவனிக்கலாம். அசைவிலா இடத்தை பார்த்தமாத்திரத்தில் நாம் ”செத்துக் கிடப்பதாகவே” சொல்வோம். உலகிற்கு என சிலர் உருண்டைப் பொருள் சொல்வதை நான் ஒப்பமாட்டேன். விலங்காண்டி மாந்தனுக்கு உலகம் என்பது தட்டையே. உருண்டைத் தன்மையை உணர அவனுக்கு வெகுநாட்கள் பிடித்திருக்கும். நாகரிகம் எழாது இவ்வுண்மை முதல் மாந்தருக்குப் புரிபடாது. ”ஞாலம் தொங்குகிறது” என்ற உண்மையும் கூட அதற்குப் பின்பே தெரியும். காலம் பிறழ்ந்து விலங்காண்டி மாந்தனுக்குப் பலவற்றை நாம் கற்பிக்கக் கூடாது. அது போன்ற சொற்பிறப்பு விளக்கங்கள் தவறானவையே.)

உலமரல் (=துன்பம்), உலப்பு (=திருத்தம்), உலவை (=காற்று) போன்றவையும் இதே தொடர்புடையவை. இனிச் சில ’உல்’வகைச் சொற்களைக் காணலாம். உலக்கலின் முந்தைத் திரிவாய் உலுக்கல் (= குலுக்கல், நடுங்கல்), உலுத்தல், உலுப்பல், உலைதல் (= நிலைகுலைதல், அலைதல்) என்ற தன்வினைகளும், உலைத்தல், உலைச்சலெனும் பிறவினைகளும் எழும். உலைப்பாடு, உலைப்பு, உலைவென்ற பெயர்ச்சொற்களும் தொடர்புள்ளவையே. அடுத்து உலைத்தல்>உழைத்தல்>உழத்தலென்ற திரிவில் மண்ணைக்கிண்டிக் கிளறி அசைக்குஞ் செயல் குறிக்கப்படும். மண்ணூடே புரைமை (porosity) கூட்டவே மாந்தர் உழுகிறார். இல்லாவிடில் உழுதலின் தேவையென்ன? மண்ணில் ஏற்படும் புரை மிகுதியால், காற்றும் நீரும் உட்சென்று பயிர் வளர உதவுகின்றன. உழல்தல்= அசைதல், அலைதல்; உழற்றுதல்= அலையச் செய்தல், வருத்தத்தோடு கழித்தல், உழறுதல்= அலைதல்; உழன்றல்= களைப்புறல், உழிதல்= அலைதல்; உழிதரல்= அலைதல் என்ற சொற்களையும் இங்கே எண்ணிப்பார்க்கலாம்.

உல்லின் திரிவான ஒல்லுக்கும் இதுபோல் பொருட்பாடுகளுண்டு. ஒல்= தொல்லை, துன்பம், மெலிவு, தளர்ச்சி; ஒல்கல்= தளர்தல், மெலிதல், குழைதல், நுடங்கல், சுருங்கல், அசைதல், ஒதுங்கல், சாய்தல், நடத்தல், வளைதல், வறுமைப் படுதல், மேலே படுதல், மனமடங்கல், கெடுதல். (தமிழிற் பெரிதும் புழங்கும் ஒல்கல் வினைச்சொல் வளமானது.) ஒல்லல்= இயலுதல், உடன் படுதல், தகுதல், பொருந்தல், நிகழ்தல், ஒத்தல், நிறைவேற்றல், பொறுத்தல். ஒல்லை= தொந்தரவு, துன்பம். ஒல்லலின் திரிவான ஒழுக்கத்திற்கும் நடை யென்ற அசைபொருளுண்டு. ஒழுகல்= நடத்தல், பரவல், இடைப்படல்; ஒழுகலின் நீட்சியாய் ஒழுகு= வரிசை, row, ஒழுங்கு= வரிசை, முறை, ஒழுங்கை= lane என்ற சொற்களும் அமையும். ஒழுங்கின் திரிவாய் ஒருங்கு. இவையெல்லாமே அசைவின் பாற்பட்டவை.

ஒல் என்பது அல்லாயும் திரியும். அல்லல்=அசைதல், வருந்தல், துன்புறல்; அல்லகத்தல்>அல்லாத்தல்=துன்புறல்; அல்லகப்பு>அல்லாப்பு=வருத்தம்; அல்லாடு=அலைந்துதிரி, தொந்தரவுறு; அல்லாட்டம்= அசைந்து திரிதல்; அ(ல்)லக்கண்= துன்பம்; அலக்கல்= அசைவித்தல், ஆடைவெளுத்தல் (அக்கலென்பது ஆக்கலின் குறிலொலிப்பு); அலக்கு= கோட்டை, கிளை, வரிச்சு; அலக்கழிதல்= மிக வருந்தல், துன்புறல்; அலக்கழித்தல்= அலைத்து வருந்தல்; அலக்கொடுத்தல்= தொந்தரவுசெய்தல், தொல்லைகொடுத்தல்; அலக்கொடுப்பு இதன் பெயர்ச்சொல் (சிவகங்கை மாவட்டத்தில் புழங்கும்.). அலங்கம்/ அலங்கன்= கோட்டை மதில் மேலுள்ள தடை, கொத்தளம், மதிலுள் ஓருறுப்பு; அலங்கல்= அசைதல். அசையும் பொருள்; அலங்கலம்= அசைகை; அலங்கல்= அசைதல் மனந் தத்தளித்தல்; அலட்டல்= தன்னை வருத்திக் கொள்ளல்; அலத்தல்=துன்புறல்; அலத்தல்= அலைத்தல், துன்புறல், அலந்தார்= துன்புற்றார்; அலந்தை/அலப்பு= துன்பம்; அலம்பல்= தொந்தரவு, முயற்சி, மெய் வருத்தம், அசைத்தல், வருந்தல், அசைத்தொலித்தல்; அலம்பி = உடம்பின் 10 நாடிகளில் ஒன்றான நாவு நாடி; அலம்பல்= அலைத்தல். (உடம்பு உறுப்புகள் அலம்பிக்கொண்டே இருக்கின்றன. அலம்புதலால் தான் உயிரிருப்பை உணர்கிறோம். நெஞ்சாங் குலையின் ”லப் டப்” ஒலியை ஒரு விலங்காண்டி கூட இன்னொருத்தர் மார்போடு தன் செவி பொருத்தி உணரமுடியும்.)

அலமரல்=அசைதல்; அலமலத்தல்=துன்புறல்; அலமாப்பு=துன்பம்; அல மாறு=தொந்தரவு; அலமி=துன்பம்; அலமுறல்=துன்பமடைதல்; அலமுதள்> அலவுதல்=வருந்தல். அலுத்தல்= அசைத்தல், களைத்தல்; அலுங்கு>அலங்கு; அலவுதல்= வருந்துதல்; அலவு= அசைவு; அலுக்கல்= அசைத்தல், அலுக்கிக் குலுக்கி என்பது பேச்சுவழக்கு. அலுங்கு= மணிமுடியில் அசையும் ஓர் உறுப்பு; அலுங்கல்= அசைதல்; அலுத்தல்= களைத்தல், சோர்தல்; அலுத்துப் புலுத்து= மிகவும் களைத்து; அலுப்பு= சோர்வு, அயர்வு; அலுவல் = வேலை, களைக்குமளவு உழைக்கும் வேலை; அலைதல்=அசைதல், வருந்துதல், துன்புறல்; அலைத்தல்= அசைத்தல்; அலை = அசைவு; அலட்டுண்கை = தளர்வு, வருத்தம்.

இவ்வளவு அசைவுச் சொற்களையும் காரணத்தோடே இங்கு பட்டியலிட்டேன். அசைவுகளுக்கும் உடலுறுப்புகளுக்கும் உறுதியாகத் தொடர்புண்டு. இத்தனை அசைவு/இயக்கச் சொற்களைப் பார்த்த நாம், இனி அலங்கு என்ற சங்க காலச் சொல்லின் பரந்த ஆட்சிக்கு வருவோம். (சங்க நூல்களுக்கு அப்புறமும் இச்சொல்லாட்சி இருக்கிறது. இங்கு நானவற்றைத் தேடிப் பதியவில்லை.)

”அலங்கு சினை” = ”அசையும்/இயங்கும் உறுப்பு” என்பது நற் 118-1, 243-3, 292-1, குறு 134-4, 296-2, ஐங் 8-4, அக 1-15, 236-7, 245-15, 272-17, 304-10, 319-2, திரு, 298, பெரு 83, மலை. 144 ஆகியவற்றில் பயிலும். இதேபோல். “அலங்கு குலை” என்பது நற் 185-8, 359-2, குறு 239-3 ஆகியவற்றில் பயிலும். குலை = கொத்து. ”குலை அலங் காந்தள்” = ”குலையாக அசையுங் காந்தள்” என்பது கலி 40-12, அக 108-15, 178-10 ஆகியவற்றில் பயிலும். “அலங்கு கதிர்” = ”அசைகின்ற பயிர்க்கதிர்” என்று பதி 58-18, அக 169-2, 224-14, 381-5, புற 35-6, 375-1 ஆகியவற்றில் பயிலும். “அலங்கு தலை” என்பது அக 84-12, 241-10 ஆகியவற்றில் பயிலும். ”அலங்கு வெயில்” = ”நகரும் வெய்யில்” குறு. 376-5 இல் பயிலும்.

“ஒலிதலை அலங்கு கழை” = ”அசையும் மூங்கில்” அக. 47-3,4, மலை 161 இல் பயிலும். “அலங்கு இதழ்” = ”அசையும் இதழ்” ஐங் 185-1, கலி 7-15 ஆகியவற்றில் பயிலும். ”அலங்கு மழை” = ”பெய்யும் மழை” ஐங் 220-1; ”அணி அலங்கு ஆவிரைப் பூவொடு” = “அலங்காரமாய் அசையும் ஆவிரம் பூவொடு” கலி 139-8; “அலங்குளைப் புரவி” = “அசையும் பிடரி கொண்ட குதிரை” புற 2-13; “அலங்குளைப் பரீஇ இவுளி” ”அசையும் பிடரியொடு செல்லும் குதிரை” புற 4-13; ”அலங்குளைய பனைப்போழ் செரீஇ” = “அசைந்தாடும் பனந்தோட்டைச் செருகி” புற 22-21; ”அலங்கு செந்நெற்கதிர்” = ”அசையும் செந்நெற்கதிர்” புற 22-14; ”அலங்குபடு நீழல்” = அசைந்துறும் நிழல்” புற 325-11; ”அலங்குளை அணியிவுளி” = அசையும் பிடரியால் அணியுற்ற குதிரை” புற 282-4

அலங்கு சினை/குலை/கதிர்/தலை/ வெய்யில்/மழை/நிழல்/ கழை/இதழ்/பூ/உளை எனும் இத்தனை காட்டுக்களைப் பொதுப்படப் பார்த்தால் அலங்கும் ஓர் உறுப்பாய்ச் சொல்லப் படுவது புரியும். அலங்குறுப்பென்ற கூட்டுச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல்லியலில் இன்னொரு வளர்ச்சியுண்டு. பெயரடையும் பெயருஞ் சேர்ந்த ஒரு கூட்டுச்சொல்லைப் பலநாள் பழகிய பின், இடம்/பொருள்/ஏவல் புரியும் எனில், பெயரைக் குறிக்க (விகுதி சேர்ந்தோ, சேர்க்காமலோ) பெயரடையே சுருக்கமாய் புழங்குவதில் தமிழில் எந்தச் சிக்கலும் கிடையாது. காட்டாக நீர்க்கடலைக் கடலென்போம்; எல்லோர்க்கும் பொருள்புரியும். நல்ல பையன் என்பவன் நல்லனாவன்; குள்ளமாந்தன், குள்ளனாவான். இப்பழக்கம் தமிழில் மட்டும் இன்றி மற்ற இந்திய மொழிகளிலும் உண்டு. காட்டாகச் சங்கதத்தில் ஜலசமுத்ர என்பது சமுத்ர ஆகும். இவ்வகையில் அலங்கு> அலங்கமாகித் தனித்து நின்று சினையுறுப்பைக் குறிக்கும். [உயிர்ப்பொருள் அலங்கும். ஆனால் அலங்கும் பொருளெலாம் உயிருள்ளன அல்ல. அலங்கலென்பது உயிரையுணரத் தேவையான / கட்டாயமான (essential) கட்டியம் (condition). ஆனால் அது போதுங் (sufficient) கட்டியமல்ல. இன்னுஞ் சில கட்டியங்கள் உயிர்மைக்குத் தேவை. அலங்கம் என்ற சொல்லைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.]

அலங்கமென அகரமுதலிகளிற் தேடின் எந்தச்சொல்லும் நேரடி உறுப்புப் பொருளிற் கிடைக்காது. அலுங்கு/அலங்கு = அசைவு என்றுமட்டும் இருக்கும். இன்னும் பார்த்தால், .அலுங்கு திரிந்து அனுங்கு ஆயினும் அதேபொருள் குறிக்கும். அலுங்கின் லுகரந்தவிர்த்தே அங்கு>அங்கம் எழுந்தது. இதற்கு உறுப்புப்பொருள் சொல்வர். [இதைச்சொன்னதால் அவநம்பிக்கையோடு எனைப் பார்க்கவேண்டாம். பொருள்மாறாதபடி தமிழிற் பலசொற்கள் இப்படியாகும். காட்டாக ஒளிமழுங்கல், ஒளிமங்கலெனப்படும். இதில் ழுகரம் தேய்ந்ததைப் பாருங்கள். பேச்சுவழக்கில் மழுங்கல், மழிஞ்சலாகும். இதில் ழிகரம் மறைந்து மஞ்சல்>மஞ்சள் எனும் நிறப்பெயர் ஏற்படும். அரிம்பு, அம்பாகும். அரம், அரி, அறு, அழி என்பவை தொடர்புடையவை. இந்தை யிரோப்பியன் arrow, பாகத/சங்கத சர/சரங் கூட இவற்றோடு தொடர்பு உடையவை தான். இதேபோல் இறுஞ்சுதல்>இஞ்சுதல் ஆகும். எண்ணிப் பார்த்தால் நிறையத் தோன்றுகிறது. தமிழ் அகரமுதலிச் சொல்வரிசையை அலசினால், பல்வேறு காட்டுகளை நீங்களே காணமுடியும். தமிழ்போலும் மொழிகளில், (குறிப்பாக ர,ற,ல.ழ,ள ஆகியவற்றின் இகர/உகர உயிர் மெய்கள் இழிந்துவரும்) இடைக்குறைப் பழக்கம் மிகுதி.]

இதுபோன்ற காரணங்களாற்றான் தமிழின் ”அங்கமே” சங்கதம் போனது என்கிறேன். இந்தையிரோப்பியனில் இதை organ என்பார். (சங்கதத்தில் எப்படி இடைக்குறையானது?- என்ற கேள்வி அவ்வளவு எளிதில் தள்ளக் கூடியதல்ல.) பல மொழிகளில் ரகரமும் லகரமும் ஒன்றிற்கொன்று போலி. வட்டாரம் பொறுத்து ஒலி மாறும். அங்கத்திற்குக் காத்திரம். உறுப்பு, அவயவம், சினை, கிளை, துளிரென்று அகரமுதலிகளிற் பொருள்சொல்வார். கா(ர்)த்தம் = தோற்றம். உறுப்பு தோன்றுவதால் இப்பெயர் ஏற்பட்டது. கா(ர்)த்தம் இருபிறப்பி ஆகிக் காத்திரமானது. இக்காத்திரமும் இன்னொரு காழ்(த்)திரமும் வேறுபட்டவை. (2 ஆவது சொல் இற்றை ஈழ ஆக்கங்களின் வழி பயின்று, தமிழ்நாட்டில் இடதுசாரி எழுத்துகளில் பரவியது. காத்திரம்= வலு, திண்மை என்று பொருள்சொல்வர்.) உறுப்பு= முழுதின் பகுதி. அவயவம்= அவய+அம் = உறுப்பம். அவ்வுதல்= பற்றுதல், பிரித்தல். அவல் = கீழ். அவயவம் என்பது இருபிறப்பிச்சொல். சில்லியது சினையும். சில்= துண்டு. சில்லல்= உடைதல், துண்டாதல். சில்நை>சின்னை>சினை என்று அடுத்தசொல் எழும். அடுத்தது கிளை. கிள்ளியது கிளைக்கும். கிள்ளல்= துண்டாக்குதல். துளிர் என்ற சொல் துளித்ததில் உருவானது.

அங்கத்தின் இன்னொரு வளர்ச்சி அங்கிதம் = உடற்றழும்பு. அங்கத்தோடு நீட்டளவையால் தொடர்புற்றது அங்குலி. பெருவிரல் என்பது பெருவிரல் நுனியிலிருந்து அதன் முதல்மடிப்பு வரையுள்ள கணு நீளத்தைக் குறிக்கும். [இருபது பேருக்கு மேல் பெருவிரல் முதற்கணுவை அளந்து அதன் நிரவலைக் (average) கணக்கிட்டால், கிட்டத்தட்ட 1 3/8 அங்குலம் இருப்பதாகக் கொடுமுடி சண்முகம் தன் “பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்- முதற்பகுதி” என்ற நூலில் வெளிப்படுத்துவார்.] பெருவிரல் தவிர்த்துக் கையின் மற்ற 4 விரல்களைச் சேர்த்த அகலத்தில் நாலில் ஒருபங்கை விரற்கிடை என்பார். (பேச்சுவழக்கில் இது விரற்கடையாகும்.) இதையே வடமொழியில் அங்குலி என்பார். அங்குலமென்றும் குறித்துள்ளார். காட்டு: குடிலரின் அர்த்தசாற்றம் (அர்த்தசாஸ்த்ரம்). இன்றைக்கு, அங்குலமென்ற சொல்லிற்கு ஆங்கிலத் தாக்கத்தால் அளவுமாறிப்போன கரணியத்தால், பழைய வடசொல்லை அங்குலி என்றும், inch-ஐ அங்குலமென்றும் பலரும் பயில்வார்.

மேற்சொன்ன சொற்களை வைத்து இன்னும் பல ஆங்கிலச்சொற்களுக்கு தமிழில் இணைச்சொல் காட்டலாம். limb (n.1) = அலம்பு "part or member," Old English lim "limb of the body; any part of an animal body, distinct from the head and trunk;" main branch of a tree," from Proto-Germanic *limu- (source also of Old Norse limr "limb," lim "small branch of a tree"), a variant of *liþu- (source of Old English liþ, Old Frisian lith, Old Norse liðr, Gothic liþus "a limb;" and with prefix ga-, source of German Glied "limb, member").

organelle (n.) = அலங்கில். 1909, from Modern Latin organella, a diminutive from Latin organum "instrument," in Medieval Latin "organ of the body" இல் என்பது இலத்தீன் போலத் தமிழிலும் ஒரு குறுமை விகுதியே. அலங்கில் என்பது சிறு உடலுறுப்பைக் குறிக்கும்.

organist (n.) = அலங்காளன். 1590s, from organ + -ist, or from or influenced by Middle French organiste, from Medieval Latin organista "one who plays an organ," from Latin organum (see organ). (காற்றசைவு நடக்கும் உறுப்பு இங்கே organ எனப்படுகிறது. காற்றசைவால் ஓசையெழுகிறது. பழைய கிறித்துவ ஆலயங்களில் organ இசைக்கருவி இருக்கும்.

organize (v.) = அலுங்குறுத்து> ஒருங்குறுத்து. early 15c., "construct, establish," from Middle French organiser and directly from Medieval Latin organizare, from Latin organum "instrument, organ" (see organ). Related: Organized; organizing.  அலுங்குறுத்து என்பதை விட அதன் தொடர்பான ஒருங்குறுத்து இற்றைத் தமிழில் மிகப் பொருத்தமாகும்.

organic (adj.) = அலங்க. 1510s, "serving as an organ or instrument," from Latin organicus, from Greek organikos "of or pertaining to an organ, serving as instruments or engines," from organon "instrument" (see organ). Sense of "from organized living beings" is first recorded 1778 (earlier this sense was in organical, mid-15c.). Meaning "free from pesticides and fertilizers" first attested 1942. organic என்பதைப் பாகதத்தில் jaivik என்பார். ஜீவிதம்/உயிரோட்டம் இருந்ததென்று அதற்குப் பொருள்.

organic farming அலங்கப் பண்ணையம் food, shapes, compounds, waffles, coconut oil, molecule, architecture. எந்தச் செயற்கையுரமும், பூச்சிக்கொல்லியும், களைக் கொல்லியும் இடாது நடத்தும் பண்ணையம். இதைத்தான் காலஞ்சென்ற வேளாண் அறிவியலார் நம்மாழ்வார் பரிந்துரைத்தார். இப்பொழுது கொஞ்சங்கொஞ்சமாய் தமிழ்நாட்டில் பரவி வருகிறது; இன்னும் பரவ வேண்டும்..

Organic chemistry = அலங்க வேதியல் is attested from 1831. Inorganic chemistry = அலங்கா வேதியல் Physical Chemistry = பூதி வேதியல். Organo-metallics = அலங்க மாழையங்கள். bio-organic chemistry = உயிர் அலங்க வேதியல். உயிர்வேதியலின் (biochemistry) ஒரு பகுதி. (காட்டாக வலகை மூலக்கூறுகள் (dextro-molecules) போலன்றி இடகை மூலக்கூறுகளைச் (laevo-molecules) செய்யும் முறையை உயிர் அலங்க வேதியல் உருவாக்கும்/படிக்கும். அலங்க என்ற ஒரு சொல்லால் தமிழில் வேதியலை விவரிப்பதில் பல சிக்கல்கள் தீர்ந்தன. இத்தனை காலம் சுற்றி வளைத்துக் கரிமவேதியல் என்று மனம்நிறையாது சொல்லித் தடுமாறிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் சொல்லியல் அகழ்வால் ஒருவழி கிடைத்தது. அங்கத்தின் முற்சொல்லைக் காணவும் வழிபிறந்தது. 

organization (n.) = அலங்கம்/ஒருங்கம். mid-15c., "act of organizing," from Middle French organisation and directly from Medieval Latin organizationem (nominative organizatio), noun of action from past participle stem of organizare, from Latin organum "instrument, organ" (see organ). Meaning "system, establishment" is from 1873. Organization man is from title of 1956 book by American sociologist William H. Whyte (1917-1999). Related: Organizational. இங்கும் இற்றைத்தமிழ் புழக்கங்கருதி ஒருங்கமே சிறப்பாய்த் தெரிகிறது.

முடிவில் organic fouling. இதற்கு முன் foul (adj.) என்பதன் வரையறுப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும். Old English ful "rotten, unclean, vile, corrupt, offensive to the senses," from Proto-Germanic *fulaz (source also of Old Saxon and Old Frisian ful, Middle Dutch voul, Dutch vuil, Old High German fül, German faul, Gothic füls), from PIE *pu- (2) "to rot, decay," perhaps from the sound made in reaction to smelling something bad (see pus). ஊளை அல்லது சீழ் என்றே பதனழிவுப் பொருள்களுக்குத் தமிழிற் சொல்லுவோம். சீழ்க்குப் பிடித்தவன் சீக்குப் பிடித்தவன் ஆவான். [sick ஓடு ஒலியொப்புமை ஏற்பட்டது வேறு கதை.] எனவே organic fouling இற்கு அலங்க ஊளல்/ஊளை என்பதே என் பரிந்துரை. (ஊரெல்லாம் பேசுகிறோமே, அந்த ஊழலும் ஊளலின் வளர்ச்சியே.)

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 24, 2018

திருவள்ளுவராண்டு - 7

அடுத்தது அந்தம் (563),

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

இங்கே ஒருதல் (= ஒன்றுதல்), வருதல் என்ற இருவினைகளின் கூட்டிற் பிறந்த ஒருவந்தம் என்ற பெயர்ச்சொல்லால், ”அச்சம் தருவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலுடையவனாய் ஓர் அரசன் ஆகிவிட்டால், ஒருசேரக் கடிதிற் கெடுவான்” என்ற பொருள் வந்துசேரும் இதற்கு மாறாய் ஒரு அந்தம் என்றதைப் பிரித்து, ஏகாந்தப் பொருள் கொண்டு, “அச்சம் தருவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலுடையவனாய் ஓரரசன் ஆகி விட்டால், ஏகாந்தனாய்க் கடிதிற் கெடுவான்” என்பது பரிமேலழகரின் வல்லடியுரை. ஆகக் கமில் சுவலபில்லிற்கும், வையாபுரியாருக்கும் முன் நின்று வடசொல் எனக் கூறியது பரிமேலழகரே. தன் சிந்தனையில் தனக்குப் பழக்கமான தமிழில், வடமொழி இடைப்பரட்டோடு அவர் உரைத்திருக்கிறார். நாம் பரிமேலழகரைப் படிக்கவேண்டும் எனினும், இதுபோல் அவர்தம் இடைப்பரட்டை வள்ளுவர்மேல் ஏற்றுவது சரியா? உரையாசிரியருக்குச் சாய்வேயில்லையா? பொ.உ. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை சங்கதவழிச் சிந்தனை தமிழிற் கூடித் தமிழ் X வடமொழி முரண்பாடு இங்கே முற்றியதற்கு உரையாசிரியரே பெருங்காரணம். இக்கால இணையப் புலிகளோ இவை எதற்றையும் மீள ஆயாது, பரிமேலழகருக்கு கிளிப்பிள்ளை யாகிறார்  (பாவாணர் கூட அந்தத்தை வடசொல் என்றே கொள்வார். நான் பாவாணரிலிருந்தும் இங்கு வேறுபடுவேன்.)

இனிப் பரிமேலகர் கருத்தை எடுத்துக்கொண்டு “அந்தம்” என்ற சொல்லுக்கு வருவோம். தமிழில் இல்லுதல்= குற்றுதல். இல்தல்>இற்றலாகும். பேச்சு வழக்கில் இத்தலென்போம். ஒருபொருள் தேய்ந்து ஓட்டை விழுந்தால் இற்றியதென்போம். ஒரு நூற்கண்டோ, கம்பியோ இற்றுப்போயின் அது முறிந்து 2 முனைகள் உண்டாகும். இறுதல்= முடிதல். இறுவெனும் வினைச் சொல் ஈறெனும் பெயர்ச்சொல்லை உருவாக்கும். இல்லுக்கும் அல்லுக்கும் தமிழில் எப்போதும் உறவுண்டு. அல்லுதல்= இல்லாதுபோதல். அல்லுதலைச் (’அல்ல’ இதிலெழுந்தது) சிலவிடத்தும் இல்லுதலைச் (’இல்லை’ இதில் எழுந்தது) சில இடத்தும் மரபு கருதிப் பயனுறுத்துவோம். அல்ந்தது அந்து போகும். ”நூல் அந்திருச்சு” என்று சிவகங்கைப் பக்கஞ் சொன்னால், நூல் அறுந்துவிட்டதென்று பொருள். நாங்கள் பேசுவது தமிழ் தானே? அல்லுதலும் அறுதலும் தொடர்பானாவை. அந்துதலென்பது நற்றமிழே. அந்து = அந்தியதின் முனை. அந்திற் பெரியது அந்தம்.

இங்கொரு முரண் சொல்லவேண்டும். ’அந்துதல்’ ஒரு பக்கம் அறுதல் பொருளையும், இன்னொரு பக்கம் கலத்தல், பொருந்துதல் பொருளிலும் வரும். ஆறுமணிக்கருகில் எற்பாடும் மாலையும் கலக்கும் நேரம் அந்தி. இதைச் சகரஞ் சேர்த்துச் சந்தியென்றுஞ் சொல்வார். வாங்க, விற்கக் கூடுமிடம் சந்தை. 2/3 தெருக்கள் கூடுமிடம் சந்தி. (அந்தியென்றுஞ் சொல்லப்படும்.) மொத்தக்கூட்டுத் தொகை அந்து. அந்தின் வலிமிகு சொல் அத்து இது பற்றி முன்பதிவில் நிறையப் பேசிவிட்டோம். இருவகைப் பொருளும் தமிழ்த் தோற்றங் கொண்டவையே. ஒரேசொல்லுக்கு இருவேறு முரணான பொருள்கள் அமைவது தமிழிற் சில சொற்களுக்குண்டு. முனைகுறிக்கும் இந்தையிரோப்பிய end உம், சங்கத அந்தமும் தமிழ் இற்றோடும், அந்தோடும் தொடர்புடையன. எப்படியென்று சொல்ல எம்போன்றோர் முயல்கிறோம். ஆனால் ”சங்கதத்தின் முன் தமிழா?” என்ற முடிந்த முடிவில் எம்மைப் பேசவிடாது தடுக்க ஏராளமான பண்டிதர் முயன்று கொண்டே இருக்கிறார். என்றோ ஒரு நாள் உண்மை வெளிப்படும். நான் பார்த்த வரை இவ்வுறவுகள் அதிகம் உள்ளன. சங்கதம் மேடெனும் பார்வை அதைக் கோணலாகவே பார்க்கிறது.   
    .   
அடுத்தது அமர் (814)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

அமர் (battle) என்பது போரின் (war) ஒரு பகுதி. இதைச் சமரென்றுஞ் சொல்வர். அமர் முதலா, சமர் முதலா என்பது நம் பார்வையைப் பொறுத்தது. சகரம் மெலிவது ஒருவகை. சகரஞ் சேரும் என்பது இன்னொரு வகை. இரண்டில் எது சரி என்பதில் ஒருமித்த கருத்தில்லை. இரண்டும் நடக்கலாம்.. அமலுதல் வினை தமிழானதால் ’அமர்’ தமிழென்றே நான் எண்ணுகிறேன். இருவேறு கூட்டத்தார் தம் வலியைக் காட்டிச் சமர்களாற் பொருதுவதே போர். அதையே வேறொரு போக்கில் விதிகளுக்காட்பட்டு விளையாட்டாய்ப் பொருதுவது பொருது (sport). இனி, அமல்வது (அமர்வது) அமர். ”அமர்தல் மேவல்” என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரிச்சொல்லியல் சொல்லும் வாசகம். ஒருவர் இன்னொருவரை வென்று மேல்வருதல் என்பது மேவுதலாகும்.

போர்க்களத்தில் பகைப்படைகள் கலத்தலும் கூடுதலே. (அன்பாற் கலத்தலுக்கு மாறாய் இங்கே பகையாற் கலக்கிறார். அதுவே வேறுபாடு.) உம்முதல்= கலத்தல், கூடுதல். உம்>அம்>அமல்>அமர் என்று இச்சொல் வளரும். சங்க இலக்கியத்தில் பல்வேறு சமர்களும் போர்களும் பேசப்படுகின்றன. குடிகளிடையே சள்ளிட்டுச் சண்டை (சள்+ந்+து = சண்டு>சண்டை) போட்டுக் காலங் கழித்தவரிடம், சேர, சோழ, பாண்டியர் எனும் பெருங்குடிகளைத் தம்முள்ளே உருவாக்கி நிலைத்தவரிடம் சமரென்ற சொல்லில்லை என்பது முற்றிலும் வியப்பானது. போரையும் காதலையும் விடுத்தால் சங்க இலக்கியம் 80 விழுக்காடு காணாது போகும். இன்னொன்றையும் இங்கு சொல்லவேண்டும். உ>உத்து என்பதும் பொருத்துவதே. உத்து>உத்தம் என்பதில் யகரத்தை முன்சேர்த்தால் சங்கத ”யுத்தங்” கிடைக்கும். உத்தில் பயன்படுத்தும் வழிமுறை உத்தி. இது பின்னால் வெவ்வேறு தொழில்களில் நுழையும். (இலக்கியம் படைப்பதில் 32 உத்திகளை தொல்காப்பியங் கூறும்.) அதிலும் முன்னால் யகரஞ் சேர்த்து யுத்தி>யுக்தி என்றாகும். யுத்தத்தில் ”பெரும் யுத்தம் மகா யுத்தம்” என்று சங்கத வழி சொல்லப்படும்.. . 

போரின் பகுதியான சமரில் அடுவரை (tactics) என்பது முகன்மை. சமர்களின் தொகுதியான போரில் தடவரை (strategy) என்பது முகன்மை. போரில் வெல்வதற்காகச் சமர்களில் தோற்பது நடந்துள்ளது. சில சமர்களின் வெற்றித் தாக்கத்தால் போர்கள் வெற்றியடைந்துள்ளன. அடுத்தடுத்து வெறி (வெறியின் தொடர்ச்சி வீரம்), திறன், மும்முரம், உத்திகள், அடவுகள் (அடவு = arrangement of actions) என முறைப்படுத்தி எதிரியோடு சமரிட்டு நகர்வதே வெற்றிக்கு இட்டுச் செல்லும். ஈழப்போர் வருமுன் தம் பட்டறிவால் அணமைக்காலப் போரைப் பார்த்திராத இற்றைத்தமிழர் பல போர்ச்சொற்களின் பொருள் புரியாதிருந்தார். இப்போது அவருக்குக் கொஞ்சங்கொஞ்சமாய்ப் புரியத் தொடங்குகின்றன. ஆனால் என்ன செய்வது? ஈழப்போர் வெற்றி பெறாது போனது.

அமரகம் = battle field; போர்முனை = war front. அமரகத்திற்கென்று ஒரு போக்கு/ஆறு இருக்கும். இதை இருவேறு படைகளின் அடுவரைகள் நிருணயிக்கின்றன.. இவ்வாற்றை அறுக்கும் வகையில் பழக்கமில்லாக் குதிரையோ, யானையோ குறுக்கு வந்தால் அங்கு குழப்பமே மிஞ்சும். குதிரைகளை மிரள வைத்தும், யானைக்கு மதம்வர வைத்துஞ் சமரைத் திருப்பும் உத்தி சங்க இலக்கியங்களில் வரும், அருத்த சாற்றத்திலுஞ் சொல்லப்படும். கல்லுதல்= கற்றல்; இங்கே பழக்குதல். கல்லா மா = பழக்கம் பற்றாத அடைப்பு விலங்குகள் (improerly trained domestic animals). கல்லா மா அன்னார் = கல்லா விலங்குகளைப் போன்ற மாந்தர், (அமைச்சர், படைத் தலைவர், கூட வரும் அரசர், குறுநிலத்தார் என எவராயினும் இவர் அமையலாம். இத்தகையோர் அரசனின் நட்பாளராய் இங்கிருந்தார் என்பதே அடிப்படைச் செய்தி.) ”இவரைப் போன்றவர் அருகிருப்பதைக் காட்டிலும் தனிமையே அரசனுக்குச் சிறப்பு” என்று இங்கே வள்ளுவர் சொல்கிறார். (”கேட்பார் பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போகாதே” என்று மற்றோருக்கு அறிவுரை சொல்கிறோமே, அது நினைவிற்கு வருகிறதா?)

இக் கல்லா மாக்களின் ஓர்மைகளைக் கேட்டால் அமரகத்தில் அரசன் கொள்ளும் (வெறி, வீரம், திறன், மும்முரம், உத்தி, அடவு நிறைந்த) அடுவரை, குலைந்தே போகும். பின்னால் முகன்மையான சமரிற் தோற்று, அதனால் மொத்தப் போரிலுந் தோற்றுப் போகலாம். ஈழப் போர் ஏன் தோற்றதென இன்று பலரும் ஆய்ந்துகொண்டிருக்கும் வேளையில் எந்தச் சமர்கள் தோற்றனவென அலசுவதும் தேவையானது. இந்தக் குறள் அதற்குப் பயன்படலாம். அடுத்த சொல்லிற்குப் போவோம். அமரர் (121),

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

இக்குறளில் வரும் அமரரைத் தேவரென்று பொருள்கொண்டோர் மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் முதல் பாவாணர் வரைப் பலர். இப்பொருளிலிருந்து மாறி ”திருக்குறள் மெய்ப்பொருளுரை” கண்டவர் பெருஞ்சித்திரனார் ஒருவரே. அமரர்க்குக் ”புகழோடிருப்பவர்” என்று அவர் பொருள்சொன்னதை நானும் ஏற்பேன். ஆனால் அதோடு நிற்காது பழந்தமிழர் குமுகாய மரபையும் ஆதாரமாய்ச் சொல்வேன். தமிழரின் பழங்குடி மரபுப்படி ”இறந்தோரை எரிப்பதில்லை; புதைப்பதே வழக்கம்”.. எரிவழக்கம் நெடுங் காலங் கழித்து வடக்கிருந்து வந்தது. புதைப்பதிலும் இங்கே இருவேறு வழக்கமுண்டு. சாத்தார (சாதாரண) மாந்தரை வெறும் மண்ணிலும், உயர்ந்தோரை, அறிவரை, தலைவரைப் பதுக்கைகளிலும், தாழியிலும் புதைத்தார். (பழம் எகிப்திலும் கூட இப்படி நடந்தது. சாத்தார மாந்தருக்கு மண்ணிற் புதைப்பு. பெரியோருக்கு pyramid.)

பெரியோரைப் புதைக்கையில் நம்மூரில் அமரவைத்தே புதைப்பார். மற்றோரைக் கிடத்திப்புதைப்பர். (எகிப்தில் பெரியோருக்கு sarcophagi யும் மற்றோருக்குத் துணிச்சுற்றும் அமைப்பர்). சங்கராச்சாரியர் முதலாய்த் துறவிகளை இன்றும் அமர வைத்தே புதைத்துப் பள்ளிப்படையெடுப்பர். பெரியோரின் உடலை ஊருலவாய்ச் சுற்றிவருகையில் அமர்த்தியே செய்வர். மற்றோரைக் கிடத்திக் கொணர்வர். நாம் காணும் பென்னம்பெரிய கோயில்களிற் பலவும் ஆழ்ந்துபார்த்தால் பள்ளிப்படைகளாகவே உள்ளன. புதைத்த மேட்டில் ஓர் இலிங்கம் வைப்பார். அம்மன் கோயில்களில் மார்புவரை திருமேனி தரையில் பதிக்கப் படும். (மாங்காடு, திருவேற்காடு போன்றவையுங் கூடப் பள்ளிப்படைக் கோயில்களே.) அவற்றிலெல்லாம் ஏதோவொரு பெரியவர் திருமேனி இருந்திருக்கிறது. இது நம் மரபு அவ்வளவு தான். இங்கே அமரர் எனுஞ் சொல் அமர்த்தப்பட்ட மதிப்பிற்குரிய பெரியவரைக் குறிக்கும். “.மனவடக்கம், மெய்யடக்கம். அறிவடக்கம் கொள்வது அமரராய்ப் போய்ச் சேரும் பெரியவருள் நம்மை உய்விக்கும். அடக்கமிலாமை உயர்வுக்கு மாறாய் இருளிற் கொண்டு சேர்க்கும்” என்கிறார் வள்ளுவர். 

இக்குறளுக்கு வேதநெறியினுடைய அல்லது வடபுலத்து மற்ற நெறிகளுடைய உட்பொருள்களை நாம் கொண்டுசேர்க்க வேண்டியதில்லை. சங்ககாலத்தில் நம்மிடமிருந்த பழக்கமே போதும், தமிழரிடம் விளைந்து வடக்கேபோன அற்றுவிகம் (அஜிவிகம்) இதே உடலடக்க முறையை அங்கே சொன்னாலும், நாளடைவில் சற்று உருமாறி ”தேவர், பாதாளர் என்ற நம்பிக்கைகளை எடுத்துக்கொண்டதோ?” என்ற ஐயம் எனக்குண்டு. ஏனெனில் 84 இலக்கம் பிறவிகள் என்ற கருத்தீடு அற்றுவிகம், செயினம், புத்தம், உத்தர மீமாஞ்சம் (பூருவ மீமாஞ்சத்தில் இது இல்லை), சிவம் (திருமந்திரத்தில் பார்த்து வியந்து போனேன்), விண்ணவம் என எல்லாவற்றிலும் வந்துள்ளது. இவ்வுலகத்தில் 6 வித அறிவுயிர்கள் இருப்பதாயிருந்த தமிழர் புரிதல் தொல்காப்பியம் உரியியல் வழி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆரறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

என்ற மரபியல் 27 ஆம் நூற்பாவை எண்ணிப் பாருங்கள். ஈரேழு பதினாலு உலகமென்ற கருத்தீட்டை இதோடு பொருத்தினால் 14*6 = 84 வகை உயிரின பெருவகுப்பு 14 உலகத்திலும் இருப்பதாய்க் கொள்ளமுடியும். ஒவ்வொரு வகுப்பிலும் குத்து மதிப்பாய் (ஞாவகம் குத்து மதிப்பாய்) ஓரிலக்கம் உயிரினங்களென்று கொண்டால், இப்பேரண்டத்தில் 84 இலக்கம் பிறவிகள் இருப்பதாய் ஒரு கணக்கு வந்து சேரும். மொத்தப் பிறவிகள் இத்தனை என்று மேற்சொன்ன எல்லா நெறிகளும் சொல்லும். அற்றுவிகம் 85 இலக்கம் பிறவிகளிலும் புகுந்துவந்தாற்றான் வீடுபேறென்று சொல்லும். மற்ற நெறிகள் முற்பிறப்பிற் செய்யும் தீவினையை இப்பிறப்பின் நல்வினையாற் குறைக்கமுடியுமென்னும். அதற்குவழிகளாய் ஒவ்வொரு நெறியும் ஒவ்வொரு வழிமுறை சொல்லும். 84 இலக்கம் பிறப்புகளை முற்றும் மறுத்தவர் சாருவாகரெனும் பொருள்முதல்வாதிகள் மட்டுமே. அவரை ”இன்பவாதி” என மற்றவரெலாந் திட்டுவார். இதை எதற்குச் சொன்னேன் என்றால் 84 இலக்கத்தை நம்பும் எல்லோரும் அமரர் = தேவர் என்பதை நம்புவோர் தாம். துறக்கம் (சொர்க்கம்), நிரயம் (நரகம்) என்பதை நம்புவோர் தாம்.

வள்ளுவரின் இக்குறளுக்கான பொருளைவிரிக்க, மேற்கூறிய நெறிகள் எதற்குள்ளும் போக வேண்டியதேயில்லை. எனவே ”அமரரைத்” தமிழாகவே கொள்ளலாம்.     
       . 
அன்புடன்,
இராம.கி.