Friday, March 24, 2006

இளைய அரபிகள் மரபுத் தொலைப்பு

எல்லாம் இந்தப் பாறைநெய்(1) விளைவு;
என்றோ நிலத்தைத் தோண்டிப் பார்த்துக்
கல்லையும் மீறிப் எண்ணெயைப் பீற்றி,
கணகண வென்று காசையும் கொட்டி
தொல்லை யில்லாத எங்களின் வாழ்வை
தொலைத்து முழுக வைத்தவன் ஒருவன்;
ஒல்லையிற் சிறந்த எங்களின் வாழ்வில்
ஒட்டகம் போச்சு; ஊர்ந்ததும் போச்சு;

சாகாட்டு மந்தைகள் கூட்டமும் போச்சு;
சடையெனக் கோரை முடையலும் போச்சு;
பாகெனக் காய்க்கும் ஈச்சும் குறைந்தது;
பாலையில் திரிந்த வாழ்க்கையும் போச்சு;
ஏகமாய் யாவரும் நகரினுள் நுழைந்தோம்;
எக்கச் சக்கமாய் மக்களெண் ணிக்கை;
வேகமாய்ச் செல்வம் கூடிய தாலே
விளைந்தது எங்களின் மரபுத் தொலைப்பே!

எம்முடை இளையர் கணக்கிலாய்ப் போனார்;
எங்கணும் பெருக்கம்; இடைவெளி உறவுகள்;
தம்முடைப் பிள்ளைகள் அறியிலாத் தந்தை;
தாயோ செல்லிடைப் பேசி(2)யில் ஒடுக்கம்;
கும்மிய கூட்டம் வீட்டினுள் எங்கும்;
கொண்டதே கோலமாய் வாழ்க்கையும் ஆச்சு;
நம்முடைத் தாத்தனும் பாட்டியும் இவரென,
நாங்கள் சொல்வதைக் கேட்பதே இல்லை;

பிள்ளைகள் பிறக்கவே ஃபிலிப்பினோ ஆயா;
பிறந்துதன் அகவை இரண்டாய்க் கூடியும்,
துள்ளிடும் குதிரைப் பாவை(3)யின் மேலே
துடிப்புடன் ஏறிடக் குழந்தைக்குத் தயக்கம்;.
அள்ளியே ஏற்றிக் குதிரையில் வைத்து
அசைக்கவும் ஆட்டவும் ஆயாதான் வேண்டும்;
பள்ளியிற் படிப்பு முடிகிற வரைக்கும்
பாங்கியாய் இருப்பது வெளிநாட்டுப் பெண்களே!

ஏழரை மணிக்கே அவக்கென ஓடி
எம்முடை மக்கள் எக்கிடும் பள்ளி;
பாழெனப் பகலில் தூங்கிய களைப்பு;
பாடங்கள் எல்லாம் படியுமோ மனதில்?
கோழையாய்க் குறுகிச் சிறுவய திருந்தே
கொள்கையில் பெரியவர் சொல்வதே காட்சி;
வாழவே இவர்க்கு மற்றவர் துணைதான்;
வாய்ப்பதில் தன்னிலை எதுவுமே கொள்ளார்;

எத்துணை சிறிய புதிரி(4)யைக் கொடுத்தும்
எள்முனை அளவும் முயற்சிகள் செய்யார்;
கத்தியே பாடம் நெட்டுருப் போட்டு
கசங்கிச் சுணங்கி பள்ளியில் நெளிவார்;
சுற்றிலும் இருக்கும் வெளிநாட்டுப் பிள்ளையோ,
சூடிகைப் பேர்களைத் தட்டியே செல்லும்;
இத்தரை அரபிப் பிள்ளைகள் எல்லாம்
எப்படி முன்நிலை வந்திட முடியும்?

பள்ளியில் இருந்து வெளிவரும் போதே
பையினை எறிவது துரவரை(5) நோக்கி;
தள்ளியே விரைவுணக் கடைகளுக்(கு) (6) ஓட்டம்;
தடையிலா மாலையிற் கால்பந் தாட்டம்;
சுள்ளுறும் கதிரவன் சாய்ந்த பிற்பாடும்
சூழ்தொலைக் காட்சியில் கால்பந் தாட்டம்;
நள்ளிய யாமம் துயிலுறப் போந்தால்
நாளை எழுவதோ காலையும் பிறந்தே!

கொண்ட"கோக் காள"மாய் (7) கடைவாய் அருந்திப்
குழைபனி(8)ப் பால்பழச் சாற்றொடு வறுவலும் (9),
உண்டே களித்து ஊதையாய்த் திரிந்து,
உலவி யழிந்து கைக்காசு கரைத்து,
கொண்டதை குப்பையாய் வீதியில் எறிந்து
கோநகர்(10) பேணாது வீணராய் அலைந்து,
தண்டலைத் தறுதலைப் பிள்ளையாய் மாறிட
தகப்பனோ தாயோ உணரவேண் டாமோ?

பிள்ளைகள் நேரம் பெற்றவர் அறியிலர்;
பெற்றதில் சிலகணம் பக்கலில் இருந்திலர்;
தள்ளையும்(11) தந்தையும் படிப்பினில் உதவார்;
தறுதலை கொழுக்கக் காசுகள் தருவார்;
விள்ளியே அறிவுரை சொல்லவும் மாட்டார்;
வெளியிடம் களியுற(12)த் தந்தையர் அலைய,
உள்ளிலே(13) தொணதொணப் பேச்சுடன் தாயர்கள்
உருப்பட வழிகள் பிள்ளையர்க் குண்டோ ?

எல்லாம் இந்தப் பாறைநெய் விளைவு;
என்றோ நிலத்தைத் தோண்டிப் பார்த்துக்
கல்லையும் மீறிப் எண்ணெயைப் பீற்றி,
கணகண வென்று காசையும் கொட்டி
தொல்லை யில்லாத எங்களின் வாழ்வை
தொலைத்து முழுக வைத்தவன் ஒருவன்;
ஒல்லையிற் சிறந்த எங்களின் வாழ்வில்
ஒட்டகம் போச்சு; ஊர்ந்ததும் போச்சு;

சாகாட்டு மந்தைகள் கூட்டமும் போச்சு;
சடையெனக் கோரை முடையலும் போச்சு;
பாகெனக் காய்க்கும் ஈச்சும் குறைந்தது;
பாலையில் திரிந்த வாழ்க்கையும் போச்சு;
ஏகமாய் யாவரும் நகரினுள் நுழைந்தோம்;
எக்கச் சக்கமாய் மக்களெண் ணிக்கை;
வேகமாய்ச் செல்வம் கூடிய தாலே
விளைந்தது எங்களின் மரபுத் தொலைப்பே!

அன்புடன்,
இராம.கி.

அருஞ்சொல் அடைவு:

1. பாறைநெய் = petroleum
2. செல்லிடை பேசி = cell phone
3. குதிரைப் பாவை = பூங்காக்களில் இருக்கும் குதிரைப் பொம்மைகள்
4. புதிரி = problem
5. துரவர் = driver
6. விரைவுணக் கடைகள் = fastfood restaurants
7. கோக் காளம் = coco cola
8. குழைபனி = ice cream
9. வறுவல் = chips
10. கோநகர் = capital, Riyadh
11.தள்ளை = mother
12.களியுறு வெளியிடம் = recreation place
13.உள்ளிடம் = inside of the house

14 comments:

Anonymous said...

¿õã þɢÖõ þо¡ý ¿¢¨Ä¨Á
À¡¨È¦¿ö ÂøÄ¡Áü ¸½¢¦Àö ¦ÀÕõÀ½õ;
ÀõÁ¡ ÁüÀ½õ ţ͸¢ý È¡÷¸û;
À¾Å¢º¡ö þÕì¸ì Ü͸¢ý È¡÷¸û.
ÍõÁ¡ ÌÅ¢Ôõ ¦ÀÕõÀ½õ Ѹ÷óÐ
͸Á¡ö þÕì¸ò ¾¨¼¾¡ý ±ýÉ?
«õÁ¡ Á¢Ì¦À¡Õû «¨¼Å¢ì Ìõ͸õ
«Ç츢ý ´Õ측ø ¦¾¡¨Äò¾¨Å ÒâԧÁ¡?
«ýÀý,
¬ÚÓ¸ò¾Á¢Æý

இராம.கி said...

அன்பிற்குரிய் ஆறுமுகம்,

கணிபெய் பணத்தால் நம்மூரில் வரும் புதிய மாற்றங்கள் தனித்து எழுதப்பட வேண்டியவை. ஒரு நாள் முயலுகிறேன்.

இங்கே எழுதியது சவுதியின் நிலை. அங்கு அரயிகளிடம் பழகும் வரை இந்தப் பார்வை எனக்குப் பிடிபடவில்லை. உண்மையில் அது ஒரு சோகம். அவர்கள் கண்ணிற்குமுன் இளைய தலைமுறை தறிகெட்டுப் போகிறது. அங்கே குமுகாயம் சிதறிக் கொண்டிருப்பது உறுதி. சவுதி அரேபியா ஒரு நான்குநேரிச் (நான்கு வழி)சதுக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது.

வரவிற்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

சிவக்குமார் (Sivakumar) said...

//ஏகமாய் யாவரும் நகரினுள் நுழைந்தோம்//

ஏகம் என்பது தமிழா அல்லது வடமொழியா ஐயா? வடமொழி என்று எண்ணுகிறேன்.

Anonymous said...

நல்ல ஓசை நயமும், பொருள் நயமும்.
.

╬அதி. அழகு╬ said...

சொற்களைத் தேடும்வேளை உண்மையைத் தொலைத்து விடுவது மரபுக் கவிதைகட்கான மரபு.

உங்கள் கவிதையில் நல்லவேளையாய் உண்மை இருக்கிறது, தொலைந்து போகாமல்.

பதிவிற்கு நன்றி!

இராம.கி said...

அன்பிற்குரிய பெருவிஜயன்,

ஏகம் என்பது வட தமிழிய மொழிகளிலும், சங்கதத்திலும் பரவலாய் உள்ள சொல் தான். எண்களின் சொற்பிறப்பைப் பற்றித் தனியே ஒரு இடுகை எழுத எண்ணம் உண்டு.

அன்பிற்குரிய சுந்தரவடிவேல்,

வாங்க, வாங்க, கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய அழகு,

மரபுக் கவிதைக்கு மரபு சொல்லியிருக்கிறீர்கள்! சிரித்துக் கொண்டேன்.

மரபிலும் சொத்தை உண்டு; அதற்காக மரபே சொத்தை அல்ல.

நான் எழுதிய பாவை விதந்ததற்கும், வருகைக்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

nayanan said...

அய்யா, வண்க்கம்.

கவிதைக்குள் ஓசை மட்டுமல்ல, உண்மையான கருத்தும் கவலையும் இருக்கின்றன. உங்களின் இந்தக் கவலைதான் இங்கு பெரும்பாலானவர்களின்
கவலையாகவும் எனது இந்தப் பயணத்தில் காண்கிறேன். ஒரு கட்டுப்பாடில்லாத நிலைக்குத் தங்களைத் தள்ளிக் கொண்டதோடு, இந்த நாட்டைத் தேடி வருவோருக்கும் இந்த நிலை தொற்றிக் கொள்வது நிறைய கதைத்தலில் அறிகீறேன். குறிப்பாக வணிக நிறுவனங்களின் கவலையே, எப்படி எதிர்காலச் சவால்களை இக்குமுகம் சந்திக்கப் போகிறதோ என்றுதான். அதோடு, இக்குமுகம் தனக்கு இட்டுக் கொள்கிற கட்டுகளும் பன்னோக்கில் மீள்பார்வையிடப்படுவது அவசியமாகத் தெரிகிறது.
அன்புடன்
நாக.இளங்கோவன்

இராம.கி said...

வாங்க இளங்கோ!

இது மாதிரிக் கவலையெல்லாம் கொண்டால், அதற்கு முலாம் பூசி "இந்த ஆள் இப்படி" என்று பட்டம் கொடுத்து விடுகிற காலத்தில், நீங்கள் நான் சொன்னதை உண்மையென்று சொல்ல வந்திருக்கிறீர்கள்.

Arab News ல் வரும் Letters to the Editor-யையும், அதே நாளிதழில் அரபி நாளிதழ்களில் வரும் ஒரு சில கட்டுரைகளைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் போடுவதையும், படித்ததோடு, அதைப்பற்றி அங்கிருந்த அரபிகளோடும், வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்வோரிடமும் பேசியதால், இது போன்ற செய்திகளையும், உணர்வுகளையும், ஏக்கங்களையும் அறிந்தேன்.

அரபிகளின் குமுகம் ஒரு சிக்கலான நிலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இத்தனை பணமும் நிலைக்குமா என்று தெரியவில்லை. பணம் கரைவதற்குள் நாட்டை ஓரளவு நிலைப்படுத்த வேண்டுமானால், அங்கே உள்ள மஜ்லிஸ் நல்ல முறையில் செயற்பட வேண்டும். மன்னர் அப்துல்லாவின் சில முற்போக்கு முயற்சிகள் ஓரளவாவது, அவர் கூட இருந்து ஆளுகின்றவர்களால் ஏற்கப் பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப் பட வேண்டும்.

பெண்களின் நலன் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் பேணப் படவேண்டும். பொது இடங்களில் அவர்களின் பங்களிப்பு கூடவேண்டும்.
பள்ளிப் படிப்பு முறையில் பெரிய மாற்றங்கள் வரவேண்டும். கூடவே நாட்டில் பிள்ளைப் பிறப்பு வீதம் குறைய வேண்டும்.

நாடெங்கும் பரவிக் கிடக்கும் குடிவழி (tribal) வகைகளின் குமுக ஏற்ற இறக்கம் குறைய வேண்டும். நாட்டுப்புறப் பொருளாதாரம் வளர்ச்சியுற வேண்டும்.

நம்மைப் போன்ற வெளிநாட்டு மக்களுக்கு எதிரானது என்றாலும், சுவுதிமயமாக்குதல் என்பது இன்னும் கொஞ்சம் கூடத் தான் வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Vassan said...

திரு. இராம கி

சவுதிகள் பற்றிய உங்களுடைய பரிவு என்னை சிலிர்க்க வைக்கிறது..? !

சவுதி பற்றிய சில எண்ணங்களை - அமேரிக்காவில் வசிக்கும்
ஒரு இந்தியாவில் பிறந்த இசுலாமியர் நடத்தும் தொ.காட்சி நிகழ்ச்சியின்
எழுத்து வடிவங்களை இங்கே காணலாம். ஃபரீட் மதரசாக்களில் படித்தவரில்லை.

http://tinyurl.com/l8ms5

இராம.கி said...

அன்பிற்குரிய வாசன்,

உங்களுடைய வருகைக்கு நன்றி. உங்கள் முன்னிகையில் முதல் வாக்கியத்திற்குப் பின்னால் இருக்கும் கேள்விக் குறிக்கும் வியப்புக் குறிக்கும் எனக்குப் பொருள் புரியவில்லை. சவுதி மக்களிடம் பரிவு வரக் கூடாதா, என்ன?

நான் அந்த நாட்டில் 20 மாதங்கள் தங்கியவன். அந்த நாட்டின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கும் வாய்ப்பு ஓரளவு கிடைத்தது. அதன் விளைவாய் அவர்களுக்குள்ளும் இருக்கும் குமுகாயச் சிக்கலை அறியும் படி அமைந்தது. அதைச் சொன்னேன்; அவ்வளவு தான். இன்னொரு நாட்டிற்குப் போயிருந்தாலும், அங்கும் அந்த மக்களைப் பற்றி அறியும் வாய்ப்பு இருந்திருந்தால், இது போன்ற ஒரு பதிவு என்னிடம் எழத் தான் செய்யும்.

சவுதியரும் நம்மைப் போல் மாந்தர் தானே?

நீங்கள் சுட்டிய சக்காரியாவின் தளத்திற்குப் போய்ப் படித்தேன். இவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். படித்ததில்லை.

மதராசாவில் பெரிய பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் படிப்பு முறை எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால், சிறு பிள்ளைகளுக்கு அவர்கள் சொல்லிக் கொடுக்கும் முறை நம்முடைய அந்தக்காலத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் போலத் தான் என்று தெரியும்.

அன்புடன்,
இராம.கி.

Vassan said...

அன்பின் நண்பர் இராம.கி

வணக்கம்.

நீங்கள் சவுதியில் வேலை பார்த்தவர் என்பது ஞாபகம் இருந்தது. உங்களைப் போன்ற liberal < மன்னிக்க, பொருத்தமான தமிழ்ச் சொல் தோன்ற மாட்டேன் என்கிறது > ஒருவர், பழமையான - பிற்போக்குவாத, கற்கால மனித எண்ணம் கொண்ட வக்காபிகள் வலிமையுடன் உள்ள நாட்டின் இளஞ்சமுதாயம் பற்றி கவலைப்படுவது ஆச்சரியமாய் பட்டது.


நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய வாசன்.

liberal என்பதற்கு இணையாக எழுவரல் என்ற சொல்லைக் கையாளுகிறோம்.

ஆளுவோரின் போக்குகளை வைத்து மக்களின் சிந்தனைகளை வகைப்படுத்த இயலுமா? இந்திய ஆட்சியாளரின் போக்கு காரணமாய், தமிழ்நாட்டுத் தமிழர் ஈழத்தார்க்கு எதிரானவர்கள் என்று கூற இயலுமா? தமிழ்நாட்டில் இதுவரை இருந்த செயலலிதா அரசின் போக்கைப் பார்த்துத் தமிழநாட்டவர் போக்கைக் கூற இயலுமா? அல்லது சிங்கள அரசின் போக்கைப் பார்த்துப் பொதுவாகச் சிங்களவர் போக்குத் தமிழருக்கு எதிரானது என்று சொல்ல இயலுமா? மலேசிய அரசாங்கத்தில் தமிழர்க்கு எதிராக நடைபெறும் செயல்கள் பல; அதை வைத்து மலேசிய மக்களை எடை போட முடியுமா? இது போலச் சொல்லிக் கொண்டே போகலாம்.

தனி மாந்தர்கள் பெற்ற, விதப்பான பட்டறிவுகளை (specialized experiences) எல்லாம் கூறின் அளவு (sample size)பார்க்காமல், கணப் படுத்த முடியுமா (can it be generalized)?

மாந்தர்கள் பலவிடத்தும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள். வெறும் மிடையங்கள் மாந்தரை அரக்கராகக் காண்பிக்கிறார்கள்; ஒன்று இருந்தால் அதை ஒன்பதாக ஊதிக் காண்பிக்கிறார்கள்.

எனக்குச் சவுதியில் நல்லதும் நடந்திருக்கிறது; கெட்டதும் நடந்திருக்கிறது. எனக்கு நடந்த கெட்டதைப் பற்றியே பேசி மற்றவர்களிடையே வெறுப்பை உண்டாக்கி நான் என்ன சாதிக்கப் போகிறேன்?

மாந்த நேயம் என்று உண்டல்லவா?

அன்புடன்,
இராம.கி.

இப்னு ஹம்துன் said...

அய்யா,
உங்களின் கவிதையாலும் தமிழ்ச் சொற்களாலும் ஈர்க்கப்பட்டுள்ளேன். கவிதை சொல் நயமும் பொருள் நயமும் கொண்டு சிறப்பாக உள்ளது.
அது போல உங்களின் கருத்துரைப்பு மறுமொழிகளில் சிறப்பாக வெளிப்படுகிறது. நன்றி.

இப்னு ஹம்துன் said...

//வேகமாய்ச் செல்வம் கூடிய தாலே
விளைந்தது எங்களின் மரபுத் தொலைப்பே!//

சவூதிகளே ஆம் என்பர்.