ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், 1999 பெப்ரவரியில், தமிழ் இணையம் மடற்குழுவில், "கணினி, கணிணி, கணிப்பொறி என்றெல்லாம் எழுதுகிறார்களே? கம்ப்யூட்டரைத் தமிழில் எழுதுவது எப்படி?" என்று திரு இண்டி ராம் கேட்டிருந்தார். அதற்கு நான் எழுதிய மறுமொழி சற்று திருத்திய விளக்கங்கங்களோடு இங்கு கொடுத்திருக்கிறேன். மட்டுறுத்தலை (to moderate) ஏற்றுக் கொண்ட தமிழ்கூறு நல்லுலகம் இதையும் ஏற்குமா?
-----------------------------------------------
"கணினி, கணிணி, கணிப்பொறி" எனப் பல காலம் குழம்பிக் கொண்டே இருக்க வேண்டாம் என்பது என் கருத்து. சொல்ல எளிதாய்க் "கணி" என்றே சொல்லலாம்.
தமிழிணையம் 99 - கருத்தரங்கில், அண்ணா பல்கலைக் கழக வளர்தமிழ் மன்றத்தார், தங்களின் "கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி"யை வெளியிட்டனர். நல்ல முயற்சி; அதில் இருந்து எடுத்துக் காட்டாக ஒரு 10 சொற்களை இங்கே கொடுத்திருக்கிறேன்
computer jargon - கணிப்பொறிக் குழுமொழி
computer network -கணிப்பொறி வலையமைப்பு
computer operations -கணிப்பொறிசார் செயல்பாடுகள்
computer program -கணிப்பொறி நிரல்
computer security -கணிப்பொறிக் காப்பு
computer simulation -கணிப்பொறிப் பாவனை
computer utility -கணிப்பொறிப் பயனமைப்பு
computer aided design -கணிப்பொறிவய வடிவமைப்பு
computerisation -கணிப்பொறிமயமாக்கல்
computer phobia -கணிப்பொறி அச்சம்
இந்தக் கூட்டுச் சொற்களில், "ப்பொறி" என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டுப் படியுங்கள்; உடனே, இந்தக் கூட்டுச் சொற்கள் சொல்வதற்கும் எளிதாக இருக்கும்; பொருளும் மாறு படாது. (நான் மேலே உள்ள சொற் தொகுதிகளில் கணிப்பொறி என்ற சொல்லிற்கு அப்புறம் அடுத்து வரும் சொற்களைப் பற்றி இங்கு முன்னிகை - comment - அளிக்கவில்லை.) [பொதுவாகத் தமிழில் ஈரசைச் சொற்களே மேலோங்கும். ஓரசைச் சொற்கள் கூட்டுச் சொற்களுக்கு முன்னொட்டாய்ப் புழங்கத் தொடங்கும். மூவசைச் சொற்கள் ஓரோ வழி நிற்கும். மூவசைக்கும் மேற்பட்ட சொற்கள் தமிழில் மிக மிக மிக அரிதாகவே இருக்கும். யாப்பில் கூடத் "தேமாநறுநிழல்" போன்ற நாலசை வாய்ப்பாடுகள் அரிதிலும் அரிது.]
ஒரு காலத்தில், கிட்டத் தட்ட 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு, electricity-யைப் பற்றித் தமிழில் எழுதியபோது, "மின்சாரம்" என்றே எழுதியதால், பிறகு, electrical என்ற முன்னொட்டு வருகின்ற நூற்றுக் கணக்கான அறிவியற் சொற்களைத் தமிழில் எழுதப் பலரும் தடுமாறிக் கொண்டிருந்தது உண்டு. பின் யாரோ ஒருவர் "சாரம்" தவிர்த்து "மின்" என்று சுருக்கி எழுத ஆரம்பித்தார். திடீரென்று எல்லாமே எளிதாயிற்று. ஆற்றொழுக்குப் போல் எல்லோரும் மின்கலம் (electrical battery), மின்சுற்று (electrical circuit), மின்னாக்கி (electrical generator), மின்னோடி (electrical motor), மின்மாற்றி (electrical transformer) என்று எழுத ஆரம்பித்தார்கள். தமிழின் நீர்மை (flexibility) அப்பொழுதுதான் எல்லோருக்குமே விளங்கிற்று. இங்கே "மின்" என்ற குறுஞ் சொல்லே உட்கருத்தைக் கொண்டு வந்து விடுகிறது அல்லவா? அதற்குப் பின் "சாரம்" எதற்கு? (மின் என்பது முதலில் ஒளி என்பதைக் குறித்திருத்தாலும், வழி நிலைப் பொருளாய்ப் பின்னாளில் electricity என்பதைக் குறிக்கிறது. இது போன்ற வளர்ச்சிகள் எந்த ஒரு மொழியிலும் நடப்பதே. மொழி பேசுபவர்கள் புதுப் பொருளைப் புரிந்து கொண்டு புழங்கத் தொடங்கி விட்டால் வழி நிலைப் பொருட் பாடுகள் - derived meanings - நிலைத்து விடுகின்றன. இன்றைக்கு மின்னுதல் என்னும் போது ஒளிர்ந்தது என்றும், மின்பாய்ந்தது என்னும் போது electricity சென்றது என்றும் தானே புரிந்து கொள்ளுகிறோம்? அப்புறம் "சாரம்" எதற்கு?)
இது போல computer - க்கு "கணி" என்றே சொல்லலாம் என்பது என் கருத்து. "கணி" என்ற குறுஞ் சொல்லே வினையாகவும், பெயராகவும், முன்னொட்டாகவும் இருக்க முடியும். "னி","ணி", "ப்பொறி" என்பவை வெறும் ஒன்றிரண்டு எழுத்துக்களே ஆனாலும் தேவையற்றவை. பலுக்க எளிமை என்பது முகமையானது. சுருங்கச் சொல்லிப் பெருக விளக்குவது நல்லதல்லவா? பொதுவாக, ணகரமும், னகரமும் அடுத்தடுத்து வரும்போது இரண்டாவதாய் வரும் னகரம் மெய்யாகவோ, அல்லது குற்றியலுகரமாகவோ வரவில்லையென்றால் ஒலிப்பது பலருக்கும் கடினமாகவே இருக்கும்.
இது போன்று சுருக்க வேண்டிய இரு சொற்களும் உண்டு; அவற்றில் முதற் சொல் தொழில் நுட்பம் / தொழில் நுட்பவியல். technology - இதற்கு தொழில் நுட்பவியல் என்று பலரும் எழுதி வருகிறார்கள். என்னைக் கேட்டால் "நுட்பியல்" என்பதே technology - யைக் குறிப்பதற்குப் போதும்; "தொழில்" என்ற முன்னொட்டை விட்டு விடலாம். அதே போல, "நுட்பம்" என்ற சொல் technique - யைக் குறிக்க முடியும்.
நுட்பியல் = technology
நுட்பியலாளன் = technologist
நுட்பம் = technique
நுட்பாளன் = technician
நுட்ப மாற்றம் = technical change
இதே வகையில், இன்னொரு சொல்லையும் குறுக்க வேண்டிய காலம் வந்தாயிற்று. அலுவ(லக)ம் என்ற சொல்லில் உள்ள "லக" என்ற எழுத்துக்கள் நீக்கப் படலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. எங்கெல்லாம் அலுவலகம் என்று சொல்கிறோமோ அங்கெல்லாம் அலுவம் என்றே சொல்லலாம்; அப்படிச் சொல்லுவதால் கூட்டுச் சொற்களைப் பலுக்குவது எளிதாகும். அலுவச் செய்தி (office news), அலுவ வேலை (office work), அலுவக் கணி (office computer), அலுவர் (officer), அலுவ ஒருங்கம் (office organization) இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்புடன்,
இராம.கி
13 comments:
Nalla Sinthanai. rasithu Padithane.. Karanangal niyaayamaaga therikirathu...
Chumma velayaattukku..
IRAMA.Ki enapathai I.Ki endrum surukkalaame.. Thamizhil I-yil aaramabikkum athika peyarkal IRAMAN endre aarambippathaal.. I.Ki enpathe.. IRAMA.Ki aaagum vaaypu ullathu.
:)
endrendrum anbudan
Seemachu...
What is the word that is being commonly used right now?
மின்சாரத்தில் உள்ள மின் போலவும் கணிப்பொறியில் உள்ள கணி போலவும் அலுவம் என்பது பொருள்துகிறதா எனத் தெரிய வில்லை. சற்று விளக்கினால் நன்று.
கம்பியூட்டரை கணிப்பொறி என்பதும் கணி என நீங்கள் குறிப்பிடுவதும் பொருத்தப்பாடானதாக தெரியவில்லை. கம்பியூட்டர் என்பது கணிப்பானாக ஆரம்பித்தில் இருந்து பின்னர் வளர்ச்சியடைந்து தற்போதைய நிலையை அடைந்திருக்கிறது. அதனால் ஆங்கிலத்தில் என்பதும் பயன்பாட்டில் இருக்கின்றது என நினைக்கிறேன். கணி என குறிப்படுவதன் மூலம் கம்பியூட்டர் தனியே கணிப்பான் என விளங்கப்படக்கூடியதாக இருக்கிறது.
ஈழத்தில் கம்பியூட்டருக்குரிய தமிழ்ச்சொல்லாக கணனி என்று பயன்படுத்துகிறார்கள். அதுபற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
அன்பிற்குரிய சீமாச்சு,
உங்கள் வரவிற்கு நன்றி.
என் பெயரைச் சுருக்குவது பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இராமசாமி என்பதை எங்கள் மாவட்டத்தில் பலரும் இராம. என்றே முதலெழுத்துத் தமிழ்ச் சுருக்கமாய் அந்த நாளில் கொண்டார்கள்; இரட்டையெழுத்துப் பழக்கம் அங்கே மிகுதி. இப்பொழுது சற்று மாறி இரா. என்று எழுதப் படுகிறது. அகவை கூடிய காலத்தில் இனிமேல் மாற்ற வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய நற்கீரன்,
இடுகையின் முதலிலேயே சொல்லியிருந்தேனே! பலரும், கணினி, கணிப்பொறி, கம்ப்யூட்டர் என்றே பலவிதமாய் எழுதுகிறார்கள். கணி என்ற சொல்லே போதும் என்று இங்கு சொன்னேன்.
அன்பிற்குரிய பெருவிஜயன்,
அலுவல் என்ற சொல்லும் பணி, செயல், வேலை, தொழில் என்பவற்றைப் போல வேளாண்மையின் வழியாய்க் கிளைத்த சொல் தான். பலருக்கும் அதன் உருவம் சட்டென்று விளங்குவதில்லை.
பள்ளும் செயல் பண்ணுதல்; பண்ணப் படுவது பணி. (அதனால் தான் நிலத்தில் உழைப்பவன் பள்ளன் எனப்பட்டான். பின்னால் அதைச் சாதிக் கொடுமையால் பொருள்மாறிப் புரிந்து கொண்டார்கள். பள்ளன் என்பவன் உழவனே. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம். எனவே இந்தச் சொற்கள் உயர்ந்த பொருளிலேயே முதலில் பிறந்தன.
செய்யப் படுவது செயல் (செய் என்பது வயல் தான்.)
வேலைக் குத்தித் தான் உழவு முதலில் செய்யப்பட்டது. வேல் என்பது hoe வைப் போலப் பயன்பட்டது. வேலை வைத்துத் தான் வெட்டும் செயல் நடந்தது. வேலை வெட்டி இல்லையா என்ற பேச்சு வழக்கில் வெட்டிச் செய்யப்படும் வேளாண்மை குறிக்கப் படுகிறது. slash and burn type of agriculture. வேலை என்பது வேளாண்மை வழி ஏற்பட்டது. வேலில் இருந்து கிளைத்த சொற்கள் தான் வேளாளர், வேளாண்மை போன்றவை.
தொள்ளுவது தோண்டுவது என்ற சொல்லின் முதல் நிலை. தொள் என்பது பள்ளத்தையே குறிக்கும். தொள்ளுதல் என்ற வினையே தொழில் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும்.
அதே போல அலுத்தல் என்பது வேர்வை வர வேலை செய்தல். அயர்த்தல், அலுத்தல் என்பதெல்லாம் ஒருபொருள் சொற்கள்.
நாளாவட்டத்தில் பணி, செயல், வேலை, தொழில், அலுவல் போன்றவை இன்றைக்கு வெவ்வேறு விதப்பான பொருட் பாடுகளைப் பெற்று விட்டன. அப்படிப் பெறுவது மொழி வளர்ச்சியையும், நாகரிக வளர்ச்சியையும் குறிக்கிறது.
அலுவல் நடக்கும் அகத்தை அலுவலகம் என்று சொன்னார்கள். நான் சொல்ல வருவது அந்த அகம் என்ற தனிச் சொல் தேவையில்லை. ல் என்னும் ஈற்றை மாற்றி ம் என்று சேர்த்தாலே அலுவம் நடக்கும் இடம் என்ற பொருள் வந்துவிடும் என்று சொல்லுகிறேன். அவ்வளவு தான்.
காட்டு: இடம் = இடப் பட்ட place (இடுதல் = to place). இது போல அகம், புறம், நிலம், வானம், தானம் என நூற்றுக் கணக்கான விதவிதமான place related சொற்களை ஓர்ந்து பாருங்கள்.
ஒவ்வொன்றையும் இப்படிக் கூட்டுச் சொற்களாய் எழுதி நீட்டி முழக்குவது சில பொழுது சரியாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் சரியாய் இராது. மொழி வளர வேண்டுமானால், சொற் சுருக்கம் என்பது நமக்கு இயற்கையாய் வரவேண்டும்.
என் பரிந்துரை அலுவம்; அதை ஏற்பதும் ஒதுக்குவதும் உங்கள் உகப்பு.
அன்புடன்,
இராம.கி.
அன்புடன்,
இராம.கி.
மதிப்பிற்குரிய இராம. கி.,
பல்வேறு வேதித்தனிமங்களின் தமிழ்ப்பெயர்களை அறிந்து பொள்ள முயற்சிக்கிறேன். இதுவரை 21 தனிமங்களின் பெயர்களை அறிந்து கொண்டேன். மற்றவை தமிழில் இல்லையா அல்லது என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையா என்பது தெரியவில்லை. உங்கள் உதவி கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
( பெரும்பாலான தனிமங்கள் கடந்க நூற்றாண்டில் தான் மேலை நாட்டவர் அறிந்தனர். ஆகவே அவற்றுக்கு தமிழில் இதுவரை பெயர்கள் இல்லையென்றாலும் இனி வைப்பதில் தவறில்லை என்பது என் கருத்து. )
என்னுடைய மின்னஞ்சல் முகவரி manyvan2000@yahoo.com
நன்றி
மணிவண்ணன்
அன்பிற்குரிய தம்பி,
நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து வெறுமே பின்னூட்டில் மறுமொழி சொல்லக் கூடியது அல்ல. விளக்கமாக எழுதித் தனிப்பதிவு போடவேண்டியது. குறித்து வைத்துக் கொள்ளுகிறேன்.
சுருக்கமாகச் சொன்னால், accounting, calculating, computing, assessing, summing, adding, integrating, இன்னும் இதுபோலப் பலசொற்களுக்கு வேறுபாடு காட்டவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். அந்தக் காலத்தில் எல்லாவற்றையும் கணக்கு என்று சொன்னாலே போதும் என்ற நிலை. இப்பொழுது அது முடியாது. உயர்கணிதம் நமக்கு வயப்பட வேண்டுமானால் நாம் கையாளும் சொற்களில் துல்லியம் கூட வேண்டும். மேலே கூறிய ஒவ்வொன்றிற்கும் வேறுபாடு காட்டவேண்டும். பொறுமையாக ஓர்ந்து பாருங்கள்.
நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதில் நான் என் பரிந்துரைக்கு வரவில்லை. மற்ற கணிதச் சொற்களையும், அவற்றின் ஒழுங்கு முறைமையும் பார்த்தே இதற்கு வந்தேன்.
கணனி என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஈழத்தார் புழக்கத்தில் பல சொற்களை என்னால் ஏற்க முடியும். ஆனால் கணனி என்ற பயனாக்கம் நம்மை வெகு தொலைவு இட்டுச் செல்லாது என்றே நான் புரிந்து கொள்ளுகிறேன். இதைப்பற்றி ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் மடற்குழுக்களில் பேசியிருக்கிறார்கள். அகத்தியர் மடற்குழு என்ற நினைவு. பொதுவாக, பழைய மடற்குழுக்களின் மடல்கள் (எல்லாம் TSCII-குறியீட்டில் இருப்பவை) மிகப் பெரிய கருத்துக் கருவூலம்.
கணிதம் பற்றிய பதிவைச் செய்ய முனைகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
அன்பிற்குரிய மணிவண்ணன்,
வாங்க. வாங்க. வளவுக்குள்ளே வந்ததற்கு நன்றி. பட்டாலைலே உக்காருங்க. பார்த்துப் பேசி ரொம்ப நாளாச்சு.
வேதி எளிமங்களின் (elements; முன்பெல்லாம் தனிமம் என்று தான் புழங்கினேன்; இப்பொழுது சில காலமாய் எளிமம்.)பெயரைத் தமிழாக்கி நான் எழுதியது 1968-70 களில். அந்தக் கட்டுரை, பட்டியல் எல்லாமே எங்கள் வீட்டுப் பரணில் சென்னையிலும், ஊரிலும் தேட வேண்டும். இப்பொழுது கிடைக்குமா என்று தெரியவில்லை. முயலுவேன்.
தமிழில் எளிமங்களின் பெயரைச் சொல்லுவது, தமிங்கிலம் கன்னாப் பின்னா என்று பரவிக் கிடக்கும் இந்தக் காலத்தில், பலருக்கும் உகந்ததாய் ஆகாமல் போகலாம். போக்குகள் எதிர்த் திசையில் போய்க் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் ஒரு பொழுது அதை முழுக்கச் செய்தேன். கிட்டத் தட்ட கரிமந் தவிர் (inorganic) வேதியல் முழுக்கத் தமிழிலேயே எழுதிவிட முடியும் என்று தான் இருந்தது.
அது ஒரு காலம்; ஆர்வம் நிறைந்த பொழுதுகள். ஈடுபாடுள்ள நண்பர்கள் பலர் இருந்தார்கள். கல்லூரிகளுக்கு இடையே மாணவர்களிடம் தமிழ் மன்றங்களின் வழி, அறிவியல் ஆக்கங்கள் பற்றி, ஒரு போட்டி இருந்தது. கல்லூரியில் தமிழ் ஒரு பாடமொழியாக நுழைய வேண்டும் என்று கல்வியாளர்களும், அறிஞர்களும், மாணவரும், ஏன் அரசியலாரும் கூட நினைத்திருந்த காலம் அது. அப்படி நினைத்தவர்கள் தானே தமிழ்நாட்டையே மாற்றி வைத்து பேராயத்தை (congress) வீட்டிற்கு அனுப்பிக் கழகத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்கள். (பின்னால், பணம், பதவி, செல்வம், சொத்து, சுகம் என்பதைத் தேடி, தன்னலமே பெரிதாகிப் போய், மாநிலத்தை அடகு வைத்து, எல்லாவற்றையும் குழி தோண்டிப் புதைத்து, இரண்டு கழகத்தாரும் சேர்ந்து நீர் தெளித்துப் பிண்டம் இட்டு, தென்புலத்தாருக்கு படையல் இட்டு, தர்ப்பணமும் செய்தது ஒரு சோகக் கதை. இப்பொழுது தொடக்கப் பள்ளியிற் கூடத் தமிழ் பிழைக்குமா என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்; கழகங்கள் கொண்டு வந்த பின்னேற்றப் போக்கு இது. இதெல்லாம் கனவாய், பழங்கதையாய்ப் போனது வெறும் 35 ஆண்டுகளுக்குள் என்று என்னைப் போன்றவர்களால் நம்ப முடிய வில்லை. இதற்குப் பேராயமே இருந்திருக்கலாம் என்று எண்ணாமலும் இருக்க முடிய வில்லை.)
அன்றையத் தமிழ் முயற்சிகளின் வெளிப்பாடு (வேதியியல், வேதி நுட்யியலையும் சேர்த்து) கோவை நுட்பியல் கல்லூரியின் (Coimbatore Institute of Technology) "தொழில் நுட்பம்" என்ற மலரில் (1968, 69, 70 ஆண்டுகள்) இருக்கும்.
அந்தக் கால நண்பர்கள் யாரிடமாவது இருந்து, இந்த மலர்களின் படி (copy) எனக்குக் கிடைத்தால் பழசை நினைவு படுத்திக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
அன்புடன்,
இராம.கி.
நல்ல விளக்கம். நன்றி ஐயா.
மதிப்பிற்குரிய இராம.கி,
நீங்கள் சொன்னது உண்மை என்ற போதும் இப்போது நிலை மாறி வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவு தமிழார்வமும், மரபுக் கவிதைகள் குறிப்பாக வெண்பாக்களிலும் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நானும் நண்பர்களும் எங்களுக்கு உள்ள அறிவை எளிமையான வெண்பாக்களில் எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.
நான் தற்சமயம் முயற்சித்துக் கொண்டிருப்பது வேதி எளிமங்களைப் பற்றிய அடிப்படைகளை குறட்பாக்களில் கொண்டு வருவது. எளிமையாக ஒவ்வொரு துறையிலும் எழுத ஆரம்பித்தால் விரைவில் தமிழில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்று நினைக்கிறோம. இதற்கு முதற்கட்டமாகப் பல்வேறு எளிமங்களின் தமிழ் பெயர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் உங்களிடம் அதுபற்றிக் கேட்டேன்.
இது போன்ற முயற்சிகளுக்கு ஹரிக்கிருஷ்ணனை, சுஜாதாவை, உங்களைப் போன்ற அறிஞர்களுடைய ஆதரவும் வழிகாட்டுதலும் தேவை. எங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி, எங்களுக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி வணக்கங்கள்
மணிவண்ணன்.
//நானும் நண்பர்களும் எங்களுக்கு உள்ள அறிவை எளிமையான வெண்பாக்களில் எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்//
மணிவண்ணன்,
'முயற்சித்து' என்பது சரியான சொல்லன்று. 'முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்' என்று எழுதுக. 'முயன்று கொண்டிருக்கிறோம்' என்பது சாலவும் சரியான சொல்லாட்சி.
திருத்திக் கொள்கிறேன்
நன்றி.
மணிவண்ணன்.
Post a Comment