Friday, March 03, 2006

புங்கம்

முன்பு ஒருமுறை நண்பர் நாக. இளங்கோவன் ஒரு தனிமடலில் பெண்கள் தன்னுதவிக் குழுவால் ஏற்பட்ட, புங்க எண்ணெயின் புதிய பயன்பாடு பற்றி ஒரு சுட்டி எனக்கு அனுப்பியிருந்தார். http://in.rediff.com/news/2004/aug/16nadar.htm அந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது எனக்குப் பெருமையாக இருந்தது. இதுபோன்ற செய்திகள் தமிழ்நாட்டில் பெருக வேண்டும் என்று நான் நினைத்தேன். புங்க எண்ணெய் போட்டுச் சரக்குந்துகள் நகரும் நாள் கூடிய விரைவில் வரட்டும் என்றும் எண்ணினேன். நம் நாட்டுப்புற மக்கள் முன்னேறும் பொழுது பெருமிதம் ஏற்படத்தானே வேண்டும்? இந்தச் செய்தியைப் படித்ததோடு அமையாமல், அதை 2004 செப்டம்பரில் அரையர் குழும்பிற்கும் தமிழ் உலகத்திற்கும் புறவரித்திருந்தேன். (forward). ஒரு சில பின்னூட்டுக்கள் இதற்கு எழுந்தன. (புங்கத்தை விட்டுக் காட்டு ஆமணக்கு - Jetropha - பற்றியும் ஒரு சில எழுந்தன. காட்டு ஆமணக்கு வெளிநாட்டில் இருந்து நம்மூருக்கு வந்தது; புங்கம் நம்மூரிலேயே உள்ள ஒரு மரம்.) பின்னால் இகாரஸ் பிரகாஷ் கேட்டதற்கு இணங்க, புங்கமரம் பற்றி அரையர் குழுமத்தில் ஒரு நீண்ட மடல் எழுதினேன். அதன் படி தமிழுலகத்திற்கும் போனது.

பழையதைப் புரட்டிக் கொண்டு இருந்தபோது, இதை வலைப்பதிவில் மீண்டும் பதித்துக் காக்கவேண்டும் என்று எண்ணியதால் இங்கே இது:
--------------------------------------------------------
புங்க மரத்தின் தாயகம் இந்தியா தான். குறிப்பாக தெக்கணத்தில் (தெற்கனம்>தெக்கணம்) இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை தோன்றியிருக்க வேண்டும் என்று புதலியலார் (botanists) அனுமானிக்கின்றனர். ஏற்கனவே அறிந்த புங்க மரத்தின் பயன்கள் போக, புங்க எண்ணெயின் புதிய பயனை மேலே புறவரித்த செய்தி தெரிவித்தது. அந்தப் பயன் பற்றிய விவரம் அறிந்து, ஆட்களை அனுப்பி, கர்நாடகத்தில் விவரம் கற்றுவரச் செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், புங்க விதைகளைச் செக்கில் ஆட்டி எண்ணெய் பிழியும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மகளிர் தன்னுதவிக் குழு, இந்தச் செயலின் மூலம் தங்களுடைய பொருளியல் நிலையைக் கூட்டிவிடலாம் என்று ஈடுபட்ட அந்த மகளிரின் உறுதி - இவை பற்றியெல்லாம் பேசி, இன்னும் இது போன்ற புது முயற்சிகளை மற்ற இடங்களில் கேட்டறிந்ததை நண்பர்கள் மடற்குழுவுக்கு எழுதுவார்கள் என்று எதிர் பார்த்தேன். நடக்க வில்லை; எனவே மறுபடி புங்கம் பற்றிய வேறு சில செய்திகளை இங்கு தொகுத்துச் சொல்ல முற்படுகிறேன்.

புங்க மரத்தின் புதலியல் (botany) பெயர் Derris indica; Derris என்றால் தோலால் மூடப்பட்டது என்று பொருள். அது விதையின் கடினத் தோலைக் குறிக்கிறது. இந்தப் புதலியல் பேர் ஒருவித வகைப்படுத்தத்தில் (classification devised by Bennet) எழுந்தது. இன்னொரு வித வகைப்படுத்தத்தில் இதற்கு இணையான வேறு பெயர்கள் உண்டு; அவை Pongamia glabra அல்லது Pongamia pinnata எனப்படும். glabra என்றால் வளவளப்பு என்ற பொருள் (smooth and without hairs); இது புங்க இலைகளின் வளவளப்பைக் குறிக்கும். pinnata என்பது சிறகை என்று தமிழில் சொல்லப்படும். பறவையின் சிறகுகளைப் போல, இலைகள் கொப்புகளில் இருப்பதைக் குறிக்கும். (தண்டு-->கிளை-->கொப்பு = இலைக்கொத்து) pongamia என்ற பெயர் தமிழ், மற்றும் தமிழிய மொழிகளை வைத்தே இந்த மரத்திற்குப் பெயரிடப் பட்டிருக்கிறது.

(பலநேரம் நம்மூர் மரங்களின் பெருமை நமக்கே தெரிவதில்லை. மேல்நாடுகளில் வளரும் பைனையும், பீச்சையும், தேவதாருவையும், மேப்பிளையும் பற்றி எல்லாம் படித்துத் தெரிந்து கொள்கிறோம், ஆனால் நம்மூர் இயற்கை வளத்தை விட்டுவிடுகிறோம் என்ற ஆதங்கம் எனக்கு நெடுநாள் உண்டு. நம்மூர்ப் படிப்பில் ஏதோ ஒரு குறை இப்படித் தீர்க்கப் படாமலே இருக்கிறது. நம் சுற்றுச்சூழலை நாமே அவதானிக்க மாட்டேன் என்கிறோம். யாரிடம் போய்ச் சொல்லிக் குறைப் பட்டுக் கொள்வது? நம் வீட்டுப் பிள்ளைகளை 7-12 அகவைக்குள் நம்மைச் சுற்றி உள்ள மரங்களையும் செடிகளையும் காட்டி, இலையை, பூவை, காயை, கனியைக் காட்டிப் பெயர் சொல்லிப் புரிய வைத்து, அவற்றின் நுணுக்கங்களைச் சொல்லி, நிலத்திணைப் பகுதிகளை ஒரு நோட்டப் பொத்தகத்தில் பாடம் பண்ணி வைத்து, புதலியல் அறிவைச் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை, நாம் என்று ஏற்றுக் கொள்ளுவோம்? 80-களில் கொஞ்ச காலம் நெதர்லாந்தில் நான் இருந்த போது அங்குள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இப்படிச் செய்வதைப் பார்த்து மிகவும் வியந்து போனேன். நம்மூரில் மட்டும் ஏன் இப்படிச் செய்ய மாட்டேன் என்கிறோம்? ஏன் இப்படிச் செய்முறை தவிர்த்து மனப்பாட வாந்தியிலேயே ஆழ்ந்து போனோம்? சொல்லிக் கொடுப்பது என்பது பள்ளியில் மட்டும் தானா?)

இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கும் ஆசுத்திரேலியாவிற்கும், அவாய்க்கும், அமெரிக்காவில் உள்ள வுளோரிடாவிற்கும் இந்த மரம் பரவியிருக்கிறது. தமிழில் இதற்குப் புதலியற் பெயரை இடும் போது, "பொரிப்பூம் புன்கு" என்றே, "தமிழ்நாட்டுத் தாவரங்கள்" என்ற பொத்தகம் (ஆசிரியர்: ச.சண்முகசுந்தரம் ஆண்டு: 2002, வெளியீடு: மெய்யப்பன் தமிழாய்வகம்) பெயர் சொல்லுகிறது. சங்க இலக்கியம் பல இடங்களிலும் இந்தப் பொருத்தமான பெயரிலேயே புங்க மரத்தை அழைக்கிறது. ஆனால் புங்கு என்று எழுதாமல் புன்கு என்றே அங்கு பலுக்கப் படுகிறது (பலுக்குதல் = spelling; உயிர்தரிப்பு>உயிர்ச்சரிப்பு>உய்ச்சரிப்பு>உச்சரிப்பு = vocalization); சொற்பிறப்பின் படி பார்த்தால் புங்கு>புன்கு என்பது நால்கு>நான்கு என்பது போல் ஒரு மீ திருத்தமாகவே தென்படுகிறது. அதன் விளக்கத்தைச் சற்று கீழே பார்ப்போம்.

இந்த மரம் பொதுவாக 15 மீட்டர் உயரம் வரையிலும், அதே பொழுது கோணல் மாணலாகவும் வளரக் கூடியது. புங்க மரம் கோடையின் தொடக்கத்தில் இலையுதிர்த்து, பின் சூன் மாதம் வரை பூத்துக் குலுங்கும். வேனிலின் உச்சம் தணியும்பொழுது பூக்கள் அவ்வப்போது உதிர்கின்றன. பூக்களின் நிறம், பெரும்பாலும் வெண்ணிறமாக, விதப்பான வகைகளில் வெள்ளையின் ஊடே சேதா (இளஞ்சிவப்பு) நிறமும், நீல நிறமும், பல போதுகளில் செந்நீலமும், வரிவரியாய் விரவி இருக்கலாம். வெள்ளை நிறமே பொதுவாய் இருந்தாலும், இந்த நிறங்கள் பூவிதழ்களில் ஊடுறுவி நிற்பது காணக் கூடியதே.

பொதுவாக சங்க இலக்கியத்தில் ஒரு மரம் குறிப்பிடப் படும் போது, கண்ணில் தோன்றும் காட்சியில், எது அந்த மரத்தை சட்டென்று அடையாளம் காட்டுகிறதோ, அதை வைத்தே பெயர் அழைப்பார்கள். புங்க மரத்தின் சிறிய வெள்ளை நிறப் பூக்கள், மற்ற பல மரங்களும் காய்ந்து போன நிலையில், வேனிற் காலத்தில் மிகுந்த எடுப்பாகக் காட்ச்஢ அளிக்கும். (புங்கம் மருதத்திலும், பாலையிலும், மிக அரிதாக நெய்தலிலும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் படுகிறது.) பூவின் தோற்றமே அந்த மரத்திற்குப் பெயர் கொடுத்திருக்கிறது.

இந்த வெள்ளை நிறச் சிறு பூக்கள் செந்நெல் பொரி சிதறி விழுந்தாற்போல (அரிசிப் பொரி, சோளப் பொரி போன்றவற்றை மனத்தில் கொள்ளுங்கள்) தோற்றம் அளித்ததே நம் பழந்தமிழனுக்கு விதப்பாய்த் தெரிந்திருக்கிறது. மருதம் பாட வந்த கோப் பெருஞ் சோழன் குறுந்தொகை 53-ல் அப்படியே படம் பிடித்துச் சொல்லுகிறான்.

"எம் அணங்கினவே, மகிழ்ந! முன்றில்
நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை"

"முற்றத்தின் வெள்ளிய மணற்பரப்பில், வேலனால் அமைத்த வெறியாட்ட இடம் தோறும், முதிர்வுற்ற புங்க மர மலர்கள் உதிர்ந்து பரந்து, செந்நெல்லினது வெள்ளிய பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தருகின்றன." "செந்நெல்லின் வெள்ளிய பொரி" என்னும் போது "சேதா வரி ஊடு வரும் வெள்ளை நிறம்" என்ற கருத்துப் புலப்படுவதைக் காணலாம்.

இதே போல மருத நீர்த்துறையின் கரையில் "பொரி எனப் புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய" என்று அகநானூறு 116 பாட்டில் பரணர் சொல்லுகிறார்.

மருதத் திணையில் மட்டுமல்லாமல், பாலைத்திணையிலும் புங்கு பற்றிய சித்தரிப்பு இதே போல் இருக்கிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ கலித்தொகை 33 -ல் "பொரிஉரு உறழ புன்கு பூ உதிர" என்று தெளிவாகச் சொல்லுகிறான். சங்கம் மருவிய காலத்தில் எழுந்த கணிமேதாவியாரின் திணைமாலை நூற்றைம்பது நூலிலும் பாலைத்திணையில் இதே விதச் சித்தரிப்பு எழுகிறது.

எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்கு ஈடில்
பொரிசிதறி விட்டன்ன புன்கு.

அதாவது, "முருக்க மரங்கள் (புரசை மரங்கள்; இவை தான் ஆங்கிலத்தில் flame of the forest என்று சொல்லப் படுபவை. புரசைவாக்கம் என்ற பெயர் இந்தப் புரசைக் காட்டால் ஏற்பட்ட பெயர்.) தீயைச் சிதற விட்டாற் போல பூத்தன. புங்க மரங்கள் கனம் இல்லாத அரிசிப் பொரிகளைச் சிதறியது போல மலர்களை உகுத்தன".

சிலம்பின் வேட்டுவ வரியிலும், உரைப்பாட்டு மடையில், இளங்கோ அடிகள்

"செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்
கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு இளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே."

என்று கொற்றவையின் முன்றிலில் கொட்டிக் கிடந்த பூக்களைப் பாட்டில் காட்டுகிறார்.

நெய்தல் திணையிலும் புன்கின் அழகு சொல்லப் படுகிறது; குறுந்தொகை 341-ல் மிளைக்கிழான் நல் வேட்டனார்,

"பல் வீ பட்ட பசு நனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅக்
சினை இனிது ஆகிய காலையும்"

எனப் பசிய அரும்புகளும், பூக்களுங் கொண்ட குரவ மரக்கிளைகள், நெற்பொறிப் பூக்களைக் கொண்ட புங்கின் கிளைகள் என நிறைந்த சோலை அழகைப் பற்றிச் சொல்லுகிறார்.

இனிப் புங்கம் என்ற சொல்லின் பிறப்பைப் பார்ப்போம். தமிழில் புழுங்குதல் என்பது நீரில் அவித்தலை (boiling)க் குறிக்கும். நீரில் கொதிக்கும் போது நீரை உரிஞ்சி அரிசி பருக்கிறது; இப்படிப் பிறந்த சொல் தான் அரிசிப் பருக்கை என்ற சொல்; மூடி இருந்த (அரிசியை மூடியுள்ள உமி இங்கு சொல்லப் படவில்லை; உமிக்கும் கீழே, அரிசியின் மேலே, சுற்றிக் கிடக்கும் மெல்லிய படலம் இங்கு சொல்லப் படுகிறது) அரிசி அவிழ்ந்து விரிகிறது; அவிழ்த்தல் என்ற சொல்லே திரிவால் அவித்தல் என்று ஆனது. அவிழ் என்ற சொல் கூட சங்க இலக்கியத்தில் சோற்றைக் குறிக்கப் பயன் பட்டிருக்கிறது. இந்தக் காலத்திலும், புழுங்கல் அரிசி என்பது par-boiled rice என்பதைக் குறிக்கும். புழுங்கு/புழுக்கு என்ற சொல்லும் சங்க இலக்கியத்தில் சோறான அரிசியையே குறிக்கும். [குறிப்பாக நிணம் (mutton) கலந்த அரிசிச் சோற்றைப் புழுக்கு என்ற சொல் குறிக்கும். இந்தக் கால briyaani என்ற சொல்லிற்கு அது இணையானது.] (புழுங்கல் - பொருந.114, பெரும்பாண். 101, 474) புழுக்கும் போது ஏனத்தின் மூடியிருக்கும் தகரத்தின் அடியில் ஈரத் துளிகள் ஏற்படுகிறதல்லவா? அதனால் ஈரம் கூடி, நம் தோல் மேல் வியர்வை கோத்துக் கொண்டால், அதை ஒட்டியுள்ள காற்று நிலையை புழுக்கம் (humidity) என்றே இந்தக் காலத்தில் சொல்லுகிறோம். நாம் ஏதோ கொதிக்கின்ற ஓர் அண்டாவிற்குள் இருப்பது போன்ற சூழ்நிலை.

புன்கு என்ற சொல்லிற்கே, சோறு என்ற பொருள் வரும்படி உள்ள சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் இரண்டு இடங்களில் வருகிறது. வெள்ளை நிறத்தில் அரிசிப் பொரி போல, சோற்றுப் பருக்கைகளைப் போல, பூக்களை மலர்க்கும் மரம் புங்க மரம். அகநானூறு 237-ல் பாலைத்திணை பாடிய தாயங்கண்ணனார்,

..................................................கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்திணைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு

"மிக திறனோடு எரியும் செந்தீயில் இட்டு வதக்கிய நிணத்தின் கொழுந்துண்டுகளைத் திணையரிசிச் சோற்றுத் திரளில் சொரிந்த கலத்துடன்" என்னும் போது சோற்றுத்திரள் என்ற பொருள் ஆளப் படுகிறது.

இதே போல அகநானூறு - -ல், பாலை பாடிய மாமூலனார், "குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்" என்று சோற்றுத்திரளைப் புன்கம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

புங்க மரத்தில், பூக்கள் மட்டும் சிறப்பல்ல; இந்த மரங்களில் பளபளக்கும் தாம்பர நிறத்தில் உருவாகும் தளிர்களை மாலையாக ஆக்கி, மார்பில் அணிவதையும் சங்க இலக்கியம் சொல்லுகிறது.

ஐங்குறுநூறு: 347-ல்,

"அவரோ வாரார்; தான் வந்தன்றே
எழில் தகை இளமுலை பொலியப்
பொரிப்பூம் புன்கின் முறிதிமிர்ப் பொழுதே"

"அழகு தகைந்த இளங்கொங்கை பொலிவு அடையுமாறு, பொரிப்பூம் புன்கின் தளிர்களை அணிகிற வேனிற் காலம் வந்ததே அன்றி, அப்பருவத்தில் வருவேன் என்று தெளிவு படுத்திப் போன தலைவர் வரவில்லையே" என்று சொல்லுகிறாள் தலைவி.

நற்றிணை 9ல், பாலை பாடிய பெருங்கடுங்கோ,

பொரிப்பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிறி

என்று சொல்லுகிறான். "பொரிப்பூம் புன்கின் அழல் தகைந்த ஒள்ளிய தளிர்களை, உன் தேமல் படர்ந்த அழகிய கொங்கைகளில் அழகு உண்டாகும் படி பூட்டிக் கொள்க" என்று சொல்லுகிறான்.

கோடையின் கடுமை தொடங்கிய நிலையில், பூக்களைச் சொரிந்து, தளிர்களெல்லாம் கரும்பச்சை இலைகளாய் மாறி, நல்ல நிழல் தரும் சூழ்நிலையும் சங்கப் பாட்டுக்களில் பதிவாகி இருக்கிறது. பூக்களை உதிர்த்து, மரத்தினடியில் ஒரு மலர்ப்படுக்கையை ஏற்படுத்தி, பாதசாரிகளின் களைத்த பாதங்களுக்கு இதம் தரும் சூழ்நிலையும் சொல்லப் பட்டிருக்கிறது.

ஐங்குறுநூறு 368, ஓதலாந்தையார், பாலைத்திணை
.......
எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்மலர்
பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்
தண்பத வேனில் இன்பநுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும!

நீர்நிலைகளின் கரைகளில் இந்த மரம் வளர்ந்திருந்ததும் தெரிகிறது. ஆக, குறைந்தது 2300 ஆண்டுகள் நம் இலக்கியத்தில் இந்த மரம் பதிவாகி இருக்கிறது. இப்பொழுது, இந்த மரங்கள் கிழக்குக் கடலோர மாவட்டங்களின் எல்லா நிலங்களிலும், ஆற்றுக் கரையோரங்களிலும் (தாம்பர பெருநையின் கரையில் இது இருப்பது வியப்பில்லை), உள்நாட்டில் ஓடை, குளக்கரைகளிலும், ஏன் சாலை மரங்களாகவும் கூட, வளர்க்கப்படுகின்றன.

ஆக புங்கின் சொற்பிறப்பு புல்>புய்>பொய்>பொய்சு>பொசு>பொசுங்கு என்பது வெப்பப் பொருளைக் குறித்து எழுந்தது. வெம்மைக் காலத்தில் மலரும் மரம் புய்ங்க மரம். புல்>புய்>புய்ங்கு>புங்கு>புன்கு என்பது நால்கு>நால்ங்கு>நாங்கு>நான்கு என்பதைப் போன்ற ஒரு சொற்திரிவு.

புங்கத்திற்கு இன்னொரு பெயர் கரஞ்சம். (ககர சகரப் போலியில் சரஞ்சம் என்றும் எழுதப்படும்.) வடமொழியில் கரஞ்சம் என்றே எழுதப் பெறும். இதை இந்தி மற்றும் வங்காள மொழிகளில் karanj, kanji என்று அழைப்பார்கள். இதன் சொற்பிறப்பும் நம்மூரில் தான். வேனிலின் உச்சியைச் சொல்லும் பொழுது வெய்யில் பொசுக்கிறது என்பது போல் வெய்யில் கருக்குகிறது என்றும் சொல்லலாம் அல்லவா? கருத்தல் என்பது இங்கே வெம்மை கூடியதைக் குறிக்கிறது. வெம்மையில் பொசுங்குவது போல் உள்ள இன்னொரு வினை கருங்குவது அல்லது கரிஞ்சுவது. குரு என்ற சொல்லும் வெம்மையைக் குறிக்கும்; சுரம் என்ற சொல்லும் வெம்மையான பாலையைக் குறிக்கும். கரிஞ்சு>கரிஞ்சம் என்று இன்னொரு சொல்லும் புங்கிற்கு வெம்மைப் பொருளிலேயே ஏற்பட்டது.

புங்க மரத்தை மேல்நாட்டு Beech- என்னும் மரத்தோடு இணைப் படுத்தி Indian Beech என்று அழைப்பதும் உண்டு. அப்படிச் செய்வதற்கு ஒரு காரணமும் உண்டு. இந்த மரத்தின் இலைகள் தளிராய் இருக்கும் போது தாம்பர நிறத்திலும், பின் முதிர்கின்ற போது கரும்பச்சை நிறத்திலும் இருப்பது மேல்நாட்டு Beech மரங்களை நினைவு படுத்துகிறது. இரண்டு மரங்களும் வெவ்வேறு நிலத்திணைக் குடும்பங்களைக் குறித்தாலும், வெள்ளைக்காரன் இந்த ஒப்புமையைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். இந்தியர்களில் பலருக்கும் வெள்ளைக்காரனோடு ஒப்பிட்டால் தானே உச்சி குளிர்கிறது. :-)

கரஞ்ச மரத்தோடு தொடர்புறுத்திக் கரஞ்சத் தீவு என்ற ஒன்று மும்பைக்கு அருகில் மராட்டியத்தில் இருக்கிறது. ஈழத்தில் இருக்கும் புங்குடுத் தீவு புங்க மரத்தின் பெயராலே ஏற்பட்டதா என்று தெரிந்தவர்கள் ஆராய வேண்டும். தமிழ்நாட்டிலே திருப் புன்கூர் என்பது சோழநாட்டில் காவிரியின் வடகரையில் வைத்தீசுவரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. வடமொழியில் கஞ்சாரண்யம் என்று சொல்லுவார்கள். இது சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம். திருவருட்பாவிலும் இந்தத் தலம் பேசப்படுகிறது. திருபுன்கூர் இறைவர் பெயர் சிவலோக நாதர்; இறைவி பெயர் சொக்க நாயகி; இங்குள்ள தல மரம் புங்க மரம்; இந்த ஊரின் சிறப்பு திருநாளைப்போவார் (நந்தனார்) வணங்குவதற்காக நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு ஈசன் பணித்த தலம். கோபால கிருட்டிண பாரதியின் "சற்றே விலகியிரும் பிள்ளாய் - சந்நிதானம் மறைக்குதாம் - நீ நற்றவம் புரியும் நம்மிடம் திரு நாளைப்போவார் வந்திருக்கின்றார்" என்ற பேர் பெற்ற கீர்த்தனை இந்த நிகழ்ச்சி பற்றித்தான் எழுந்தது.

பூவையும் தளிரையும் பேசிய தமிழ் இலக்கியம் ஏனோ, புங்கங் காயைப் பற்றிப் பேசவில்லை. ஒருவேளை சித்த மருத்துவ நூல்கள் பேசியிருக்கலாம்; எனக்குத் தெரியாது; அலசிப் பார்க்க வேண்டும். தமிழராகிய நாம் விட்டுத் தொலைத்த செய்திகள் ஏராளம், ஏராளம். இவற்றையெல்லாம் என்று நாம் மீட்டுக் கொண்டு வரப்போகிறோமோ, தெரியவில்லை.

இந்தக்காலப் புதலியல் வழி அறிந்தவற்றை இனிச் சொல்லுகிறேன். இந்த மரம் பூத்து முடியும் தருவாயில், அதனுடைய நெற்றுக் (nuts) காய்கள் தகடையாக, அவரை விதைகளைப் போல் நீள்வட்ட வடிவில், உரமான தோடுகளாக (காயின் மேல் காய்ந்த தோலாய் இருப்பது தோடு), 1.5 அணுங்குழை (inch) யில் இருந்து 2 அணுங்குழை வரை சனவரி, பிப்ரவரி மாதங்களில் உருவாகும். இந்த நெற்றுக்களில் (nuts) ஒன்று அல்லது இரண்டு விதைகள் சிவப்பத் தொலி (skin; விலங்கிற்கு இருப்பது தோல்; விதையின் மேல் இருப்பது தொலி. தோல், தோடு, தொலி போன்றவற்றின் வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.) போர்த்திய நிலையில் இருக்கும். ஆண்டொன்றுக்கு நன்கு வளர்ந்த மரமொன்று, 90 கிலோ வரை, விதை கொடுக்கும். விதையில் 5% தொலி, 95% பருப்பு இருக்கும்.

விதையில் உள்ள சத்துக்கள்:
ஈரம் - 19%
எண்ணெய் - 27.5%
புரதம் - 17.5%
மாவுப்பொருள் - 6.6%
மாழை உப்புக்கள் - 2.4%
(metallic salts)

மற்றும் விதையில் நுண்ணிய அளவில் ஒரு தைலமும், ஒரு வழவழப்புப் பொருளும் உள்ளன. விதையில் பல சுவையன்களும் (flavinoids) உள்ளன.

நன்கு உலர்த்திய விதையில் 27-39% அளவில் எண்ணெய் உள்ளது. நாட்டுச் செக்கில் பிழியும் போது 18-22% அளவில் எண்ணெய் கிடைக்கும். வெளியெக்கியின் (expeller) மூலம் 24-27.5% எண்ணெயைப் பெறலாம். நன்கு வளர்ந்த 40 மரங்களில் இருந்து 373 கிலோ எண்ணெய் பெறலாம்.

புங்க எண்ணெய் பிழிந்தெடுக்கும் போது மஞ்சள் தழுவிய நாரங்கை (orange) நிறத்தில் இருக்கும்; பின்னர் பழுப்பு நிறம் பெற்று, கடுமையாக மாறும். இந்த எண்ணெயில் உள்ள கொழுப்புக் காடிகளாவன:

ஓலியிக் காடி (oleic acid) 44.5% - 71.8%
லினோலியிக் காடி (Linoleic acid) 10.8% - 13.3%
எய்கொசெனாயிக் காடி (eicosanoic acid) 9.5% - 12.4%

இது போன எண்ணெய்கள் புங்க மர விதைகளில் மட்டுமல்ல, பல எண்ணெய் வித்துக்களில் இருந்தும் பெறலாம்; ஏன் அரிசி உமியில் இருந்து கூடப் பெறலாம். ஆனால் எது பயன்படும் என்பது கிடைப்பு (availability), விளைச்சல் (production), பொருளியல் (economy), கொளுதகை (cost), நுட்பியற் சிக்கல்கள் (technological difficulties) போன்றவற்றைப் பொறுத்தது. இந்த எண்ணெய்கள் (காட்டாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்) போன்றவற்றை வெளிச்சம், சமையல் போன்ற துறைகளுக்கு மட்டுமே நாம் இது காறும் பயன்படுத்தி வந்தோம். அவற்றை உள்ளெரிப்பு எந்திரங்களில் (internal combustion engines) பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குவது இதுகாறும் பொருளியற் படி சரிக்கட்டி வரவில்லை.

ஒரு கணக்குச் சொல்லுவார்கள்; என்றைக்கு பாறைநெய்யின் (petroleum) விலை ஒரு பீப்பாய் 25/27 அமெரிக்க வெள்ளிக்கு மேல் வருகிறதோ அப்பொழுது இயற்கை வழிப் பெறும் எண்ணெய்கள் உள்ளெரிப்புக்குப் பெரிதும் பயன்படும் என்று சொல்லுவார்கள்; இப்பொழுதுதான் பாறைநெய் விலை $45க்கும் மேல் $60, 70 என எகிறிவிட்டதே? இனி இயற்கைவழிப் பெறும் எண்ணெய்கள் பெரிதும் உள்ளெரிப்புக்குப் பயன்படலாம்.

புங்க எண்ணெயைப் பற்றி இன்னும் ஆழமாய் அறிவதற்கு முன்னால், பாறைநெய்ச் செலுத்தங்கள் (petroleum processes) பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுவது நல்லது. பாறைநெய்யை சூழ்அழுத்தத் துளித்தெடுப்பின் (atmospheric distillation) மூலம் பிரிக்கும் போது துளித்தெடுப்புக் கோபுரத்தின் (distillation tower) மேலே வருவது நீர்ம எரிவளி (Liquid Petroleum Gas), அடுத்து, அதற்குச் சற்றுக் கீழே வருவது கன்னெய் - கல்நெய் - (petrol or gasoline), அடுத்து இன்னும் கீழே வருவது நடுவத் துளித்தெடுப்புகள் (middle distillates) ஆன மண்ணெயும் (மண்ணெய் என்றே சொல்லலாம்; மண் எண்ணெய் என்று நீட்ட வேண்டாம். அதன் உள்ளே கிடக்கும் எள்ளைத் தூக்கி எறிந்து விடலாம்.), டீசலும்; முடிவாகக் கீழே வருவது வளிநெய் (gas-oil).

இப்படி இயல் பாறைநெய்யை (crude petroleum) முதலில் சூழ்அழுத்தத்தில் துளித்தெடுத்து (distilled at atmospheric pressure), அந்தக் கோபுரத்தின் அடியில் கிடைக்கும் வளிநெய்யை, பின்னர் குறை அழுத்தத்தில் மீண்டும் துளித்தெடுக்கலாம் (distilled at low pressure; இதை வெறுமத் துளித்தெடுத்தம் = vacuum distillation என்றும் சொல்லுவார்கள்.). இந்த இரண்டு துளித்தெடுத்தங்களுமே (distillation) கொதிநிலை (boiling points) வேறுபாட்டைப் பயன்படுத்திப் பாறைநெய்யைப் பிரித்தெடுக்கும் செலுத்தங்கள் (separating processes) ஆகும். வெறுமத் துளித்தெடுப்புகளைப் (vacuum distillates) பின்னர் ஒரு பாய்மப் படுகையில் (fluidized bed) அனுப்பி, வினையூக்கி உடைப்பைச் (catalytic cracking) செய்யலாம்; அல்லது நீர்மத்தோடு (hydrogen) வினைகூட்டி நீர்ம உடைப்பையும் (hydrocracking) செய்யலாம்.

நீர்ம எரிவளி என்பதற்குள் பெரும்பாலும் C3,C4 அடங்கிய நீர்மக்கரியன்களே (hydrocarbons) இருக்கின்றன. கன்னெயில் பெரும்பாலும் C8,C9 என்ற நீர்மக்கரியன்களே செறிந்திருக்கும். மண்ணெயில் C10-C16 வரை உள்ள நீர்மக்கரியன்களும், டீசலில் C12-C19 வரை உள்ள நீர்மக் கரியன்களும் இருக்கும். இது போகச் சூழ்அழுத்தத் துளித்தெடுப்பான நெய்தையில் (நெய்தை = naphtha - "inflammable liquid distilled from petroleum," 1572, from L., from Gk. naphtha "bitumen," perhaps from Pers. neft "pitch," or Aramaic naphta, nephta, but these could as well be from Gk. Naphthalene was coined 1821 by Eng. chemist John Kidd (1775-1851) from naphtha + chem. suffix -ine + -l- for the sake of euphony.) இருந்து வினையூக்கி மறுவாக்கம் (catalytic reforming) முலம் எட்டக எண்ணை (octane number) கூடியுள்ள கன்னெய்யை உண்டாக்கலாம்.

வெறுமத் துளித்தெடுப்புக் கோபுரத்தின் (vacuum distillation tower) அடியில் கிடைப்பதைப் பிசுக்கைப் பொருள் (pitch (n.) - "tar," O.E. pic, from L. pix (gen. picis) "pitch," from PIE base *pi- "sap, juice" (cf. Gk. pissa, Lith. pikis, O.C.S. piklu "pitch," related to L. pinus, see pine (n.)) என்று சொல்லுவார்கள். இந்தப் பிசுக்கைப் பொருளைத்தான் கீல் என்றும், ஆங்கிலத்தில் tar என்றும் சொல்லுகிறோம். சாலைகள் போடப் பயன்படுவது இதுவே. இதே போல நிலக்கரியில் இருந்தும் ஒருவித வேதிச் செலுத்தத்தில் கரிப்பிசுக்கையைப் (coal-tar) பெறலாம். பாறைநெய் கிடைக்காத காலங்களிலும், இடங்களிலும் கரிப்பிசுக்கை முகன்மையான இயல்பொருளாகிறது. அதை உடைத்து மீண்டும் நடுவத் துளித்தெடுப்புகளை (middle distillates) உருவாக்குவார்கள். காட்டாகத் தென்னாப்பிரிக்காவில் இது போல செய்யப் படுகிறது.

இப்படி பாறைநெய்த் துளித்தெடுப்பில் வெவ்வேறு பொருட்கள் கிடைப்பது போல புங்கநெய் உருவாக்கத்தில் மற்ற துணைப் பொருட்கள் கிடைக்குமா என்றால் கிடைக்கும் என்றுதான் சொல்லவேண்டும்.

பாறைநெய்யில் இருந்து பிரிக்கப்படும் டீசல் போன்றவற்றைப் பார்க்கும் போது இயல் எண்ணெய்கள் அதிகம் பிசுக்குமை (viscosity) கொண்டவை. தவிர, இயற்கை எண்ணெய்களில் செறிந்துள்ள கொழுப்புக் காடிகள் தனித்து இருப்பதில்லை; பெரும்பாலும் அவை களிக்கரை(glycerol)யோடு பிணைந்து கூட்டுப் பொருளாகியே இருக்கின்றன. புங்க எண்ணெயில் உள்ளவையும், முன்னே சொன்னது போல் களிக்கரையோடு (glycerol) பிணைந்த கொழுப்புக் காடிகளே; கொழுப்புக் காடிகளை வெறியங்களோடு (alcohol) பிணைத்துக் கிடைக்கும் பொருள்களை கொழுப்புக் காடி அத்துகள் (fatty acid esters) என்று சொல்லுவோம். ஒவ்வொரு நிலத்திணை எண்ணெயிலும் பெரும்பாலும் இருப்பவை கொழுப்புக்காடி அத்துக்களே. இவற்றை அப்படியே உள்ளெரிக்கப் பயன்படுத்தலாம் தான்; இல்லை எனில் அவற்றின் பிசுக்குமையைக் (viscosity) குறைக்க, அவற்றின் பாய்மை (fluidity) யைக் கூட்ட, இந்த அத்துக்களில் இருந்து வேதிவினை மூலம் களிக்கரையைப் பிரித்து (அப்படிப் பிரிப்பதால் கிடைக்கும் களிக்கரை வெகுவிரைவில் கடல்போல் பெருகிவிடும்; அத்தனை களிக்கரையை வைத்துக்கொண்டு வேறு என்ன பொருள் செய்வது என்று நுட்பியல் உலகம் இன்னும் முடிவு செய்யவில்லை.) பின் கொழுப்புக் காடியில் இருக்கும் காடித்தன்மையை எடுத்து, முடிவில் நீர்மக்கரியன்களாக (hydrocarbons) மாற்றி உள்ளெரிப்புக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இதற்கெல்லாம் ஏகப்பட்ட செலவு ஆகும். உள்ளெரிப்பின் நேர்த்தித்திறன் (efficiency) பற்றிக் கவனிக்கின்ற போது இந்தப் புதிரிகளுக்கு (problems) நுட்பியல் விடை சொல்லும் என்று எண்ணுகிறேன். அதுவரையில் அப்படியே இயலாக (raw) எரிப்பது தான் இப்பொழுது உள்ள நடைமுறை. நேரடியாக டீசல் எந்திரத்திற்குள் போட்டு உள்ளெரிக்க வேண்டியதுதான். போயே போயிந்தி.

மேலே சொன்ன புங்க எண்ணெய்ப் புனைகளின் (components) செறிவைக் (concentration) குறிப்பிட்ட போது, மூன்று காடிகளைக் குறிப்பிட்டிருந்தேன். முதலிற் சொன்ன ஓலியிக் காடி ஒரு தெவிட்டாத காடி (தெவிட்டுதல் = to saturate; தெவிட்டாத காடி = unsaturated acid; தெவிட்டாமை = unsaturation); அதை [CH17H33COOH] என்றோ, அல்லது விரிவாக CH3[(CH2)7]CH=CH(CH2)7COOH என்றோ, குறிப்போம். ஒலியிக் காடியின் வாய்பாட்டு நடுவில் (=) என்ற இரட்டைப்பிணை (double bond) இருப்பதால் அது ஒரு தெவிட்டாத காடியாகும். நம்மூர் ஆமணக்கு விதையில் இருந்து பெறப்படும் எண்ணெயில் ரிசினோலியிக் காடி அதிகம் இருக்கும். அதை CH3(CH2)5CHOHCH2CH=CH(CH2)7COOH என்று குறிப்போம். லினோலியிக் காடி என்பது தெவிட்டாமை இன்னும் கூடியது. அதில் இரண்டு இடங்களில் இரட்டைப் பிணை இருக்கும்; CH3[(CH2)4CH=CHCH2]CH=CH(CH2)7COOH என்று குறிக்கப்படும். எய்கொசெனாயிக் காடி என்பது CH3(CH2)18COOH என்று குறிக்கப்படும்.

புங்க எண்ணெய் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது. புங்கப் பிண்ணாக்கு உரமாகப் பயன்படுகிறது; கால்நடைகளுக்குக் கொடுப்பது நல்லதல்ல. புங்கக் குச்சியைப் பல்துலக்கப் பயன்படுத்தலாம்.

இணையத்தில் இப்பொழுது கிடைக்காத செய்திகள் நம்மூர் நிலத்திணைகள் பற்றித்தான். அருமையான சில பொத்தகங்களை இங்கு உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

1. வளம் தரும் மரங்கள் - 5 பொத்தகங்கள் அடங்கிய ஒரு தொகுதி, ஆண்டு: 1992-94, ஆசிரியர்: திரு. பி.எசு.மணி, வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தகாலயம்
2. Flowering Trees - 1983; 8th Reprint 1996, M.S.Randhawa, National Book Trust
3. Common Trees - 1966; 7th Reprint 1999, H.Santapau, National Book Trust
4. தமிழ்நாட்டுத் தாவரங்கள் - 2002; ச.சண்முகசுந்தரம், மெய்யப்பன் தமிழாய்வகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் -608001

இவை எல்லாம் நம் வீட்டு நூலகங்களில் வைத்துக் கொள்ளவேண்டிய பொத்தகங்கள்.

இந்த மடலுக்குப் பின்னூட்டில் பிரகாஷ் எழுதியது:

தகவலுக்காக சில விஷயங்கள். bio-fuels தொடர்பாக, சில தனிச்சுற்று தாளிகைகளை, கிண்டியில் இருக்கும் TN PCB நூலகத்தில் பார்க்க நேர்ந்தது. வேறு குறிப்புகள் எடுக்க வேண்டியிருந்ததால், அத் தாளிகைகளை படிக்க வில்லை. தாவர எண்ணை எரிபொருள் பற்றி பரவலாக கட்டுரைகள் வரத் துவங்கி உள்ளன. அதைப் போல டாடா எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்டியூட் நிறுவனம், ஒரு மாதாந்திர இலவச மின் இதழை வெளியிடுகின்றது. அதிலும், சில இதழ்களில் தாவர எரி பொருள் பற்றிய கட்டுரைகளை பார்க்க நேர்ந்தது. ஆர்வமிருப்பின் பெற்றுக் கொள்ளலாம். (முகவரி : http://www.teriin.org/terragreen/subscribe.htm) அன்புடன் பிரகாஷ்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு. மடலாடற்குழுக்களிலும், வலைப்பதிவுகளிலும் இலக்கியம், அரசியல், திரைப்படம் போன்றவை நடு இடத்தைப் பெற்றாலும், ஓரத்தில் இப்படி அறிவியல், நுட்பியல், பொது அறிவு பற்றிய செய்திகளைத் தமிழில் பரிமாறிக் கொள்வது நல்லது; அப்படிச் செய்யும் போது, அது கூடவே நம்முடைய தமிழ்நடையை வளர்க்கும். தயங்காமல் தமிழில் எதையும் சொல்லப் பழகலாம். மேலே எழுதியதை மிக எளிதில் தமிங்கிலத்தில் எழுதிவிடலாம் என்றாலும் அது எதிர்காலத்தை நசுக்கி விடும் என்று தமிழில் எழுதுகிறேன். நாம் முயலாவிட்டால் நம் மொழிவளம் பெருகாது.

6 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

நீண்ட கட்டுரை. அருமை. நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி ஐயா.

ஞானவெட்டியான் said...

அன்பு இராமகி,
18 சொற்கள் தரவுத் தளத்தில் சேர்த்துக் கொண்டேன்
நன்றி.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அருமையான கட்டுரை அய்யா. இங்கு மீள்பதிவு செய்ததற்கு நன்றி.

வேதிப்பொறியியல் பற்றிச் சில கட்டுரைகளை நானும் எழுத முனைந்துகொண்டிருக்கிறேன். உங்களளவு சரியான சொற்களும் தெளிவும் விவரங்களும் இருக்குமா என்று தெரியவில்லை :-) இருப்பினும் முயல்வேன்.

கேள்வி: இயல்பொருள் என்னும் பதத்தை raw material என்று கையாண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்று. ஆனால் பிறிதொரு இடத்தில் crude என்பதற்கும் இயல் என்றே பலக்கியிருக்கிறீர்கள். இங்கு துல்லியம் கருதி வேறுபடுத்தலாமல்லவா? Crude என்பதற்குப் பொதுவாகக் 'கச்சா' என்னும் சொல் புழக்கத்தில் இருப்பதை ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது அது வேற்றுமொழிச் சொல்லானால் அதையொட்டிய தமிழ்ச்சொல் என்னவென்று நீங்கள் தான் பார்க்க வேண்டும்.

கச்சா எண்ணெய் வள உச்சம் பற்றிப் பல மாதங்கள் முன்பு நான் எழுதிய பதிவொன்று உங்கள் பார்வைக்கு.

Anonymous said...

Useful information. but your way of narration is little bit difficult to read. I read r.selvaraj's pathivu too. his one is more readable than yours. This is my opinion only. If this hurts you in any way please forgive me.

Krish

Simulation said...

சுத்திகரிப்பு ஆலை குறித்த சொற்களுக்கு நல்ல மொழிபெயர்ப்பு. எனது வலைத்தளத்தில் இது குறித்து எழுதியுள்ளேன். மறுப்பு ஏதுமிருக்காது என்று விழைகின்றேன்.

Anonymous said...

வெறியம் = CAFFEINE
(LIFCO ENGLISH TAMIL DICTIONARY