Friday, March 17, 2006

சமயம்-4

சகர வரிசைச் சொல்லுக்கும் அகரவரிசை மாதிரி, அதே பொருள் தான். ஆனாப் பயன்பாடுகள் வேறே.

சம்>சம்மதம் = உடன்பாடு, நட்பு, கொள்கை (பல பேர் சம்மதம் வட மொழின்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம்ம வளமே நமக்குத் தெரியலை. மதம் என்பது நெறி.)
சம்>சமம் = ஒன்று படுதல்; ஒரே மாதிரி இருத்தல், ('சமன்பாடு'ங்கிற சொல்லாட்சியைப் பார்த்தீங்கன்னாப் புலப்படும்.)
சம தானம் = ஒரே நிலை; (இதைச் சமாதானம்னு பலுக்கி வடமொழின்னு நினைச்சுப் பிட்டோ ம். சரியாப் பலுக்குனா, அது தமிழாயிடும்.)
சம்மாரம் = அழிவு (இதையும் சம்ஹாரம்னு சொல்லி வடமொழியாப் புரிஞ்சுக்கிறோம். அது பெரிய அவலம் அண்ணாச்சி! சம்மாரங்கிறது கோட்டை, கொத்தளத்தை எல்லாம் அழிச்சுத் தரை மட்டமா ஆக்குறது; திருச் செந்தூரிலே சூர சம்மாரம் நிரம்பச் சிறப்பா நடக்கும்.)
சம்மானம் = உபசாரச் சொல், வெகுமதி, இறையிலியாக விடப்பட்ட நிலம்
சம்மெனல் = கம்பீரக் குறிப்பு
சம்மேளனம் = கலப்பு, கூட்டம்
சமட்டி = தொகுதி (சமஷ்டி -ன்னு வடமொழியிலே போகும்); இந்தக் காலத்திலே கூட்டமைப்புன்னு சொல்லுவாக. (சமளுதல் = ஒன்று போல ஆகுதல். கூட்டுச் சேரும் எல்லோரும் ஒன்று போல ஆன நிலையில் இருக்கும் கூட்டு சமள்+தி = சமட்டி என்று ஆகும்.)

அடுத்தது அம்முதல்>அம்மி போல, அமுக்குதல், துவைத்தல் என்ற பொருள்களைப் பார்க்கலாம்.

சமட்டுதல் = காலாலே துவைத்தல்
சமட்டுவண்டி = மிதி வண்டி (சமட்டு வண்டிங்குற புழக்கம் இப்பவெல்லாம் சுத்தரவாக் கிடையாது. இதுமாதிரிப் பல சொற்கள் எழுந்து பின்னாடி அடங்கிப் போறது எந்த மொழியிலேயும் இயற்கை.)
சமட்டுதல்>சவட்டுதல் = வளைவாக்குதல், மெல்லுதல், விழுங்குதல், அழித்தல், கொல்லுதல், மிதித்தல், வல்லுதல், மொத்துதல்
சம்மட்டி = குதிரையோட்டும் கருவி, சுத்தியல் வகை,
சமட்டு = E. smite, to strike, A.S. smiten, Dut. smijten. சமட்டுவது சமட்டி -சம்மட்டி. -E. hammer, A.S. hamor, Ger. hammer, Ice hamarr, a tool for beating, E.smith, one who smites. (ஒப்பியன் மொழிநூல் - 2, பாவாணர், தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 176)

சவங்குதல் = மனந் தளர்தல், மானம் மழுங்கிப் போதல், உயிர் மெலிதல், வீக்கம் வற்றுதல், மூர்ச்சை போதல்
சவலை = தளர்ந்து போன, துவண்டு போன நிலை
சவளுதல் = வளைதல், துவளுதல்
சவம் = பிணம்

சம்'கிறது போலவே 'சப்'புங்குற ஒலிக்குறிப்பும் பல சொற்களை உருவாக்கிருக்கு.

சப்பட்டை = தட்டை, தட்டையானது, உள்ளீடின்மை, பதர், மடையன், கெட்டவன், சப்பை, சிறகு
சப்படி = தட்டையானது
சப்பரம் = சிறுதேர்; (சப்பரம் கட்டி இறைவன் திருமேனியை அதில் சோடித்து இழுப்பது பல சிவன் கோயில்களில் பழக்கம் தான்.)
சப்பர மஞ்சம் = மேற்கட்டு அமைந்த அலங்காரக் கட்டில்
சப்பரை = மூடன்
சப்பல் தட்டை, சப்புதல்
சப்பளாக் கடை = தாளக் கட்டை
சப்பளிதல் = தட்டையாதல்
சப்பாணி = கைசேர்ந்து கொட்டுதல், அட்டணங்கால் இடுகை, நொண்டி
சப்பாத்தி = சப்பையான கோதுமைப் பண்டம். (வட தமிழிய மொழிகளில் வழங்கும் பெயர்.)
சப்புதல் = மெல்லுதல்
சப்பை = தட்டையானது, தேரின் சக்கரத்துக்கு அடியில் கொடுக்கப் படும் கட்டை

கூடுதல் பொருளில் இன்னொரு பரிமாணம் சகரம் போலவே ககரத்துலே இருக்கு.

கும்முதல் = கூடுதல்
குமிதல்>குவிதல்

இதை விரிச்சா மிகப் பெருகும். அதனாலெ, மீண்டும் சகரத்திற்கே வருவோம்.

சம்>சம்மண்>சம்மணம்= காலை ஒண்ணாச் சேர்த்து தட்டையாக்கி நெஞ்சு நிமிர்ந்து உட்காரும் நிலை.
சம்மணம்>சமணம் = அருகமதம், அம்மணம். (உண்மையிலே பொதுமையாச் சொன்னா, இது செயினம், புத்தம், ஆசீவகம் ஆகிய மூணு நெறியினரையும் குறிக்கும்; இருந்தாலும் விதப்பா, செயினரை மட்டுமே குறிக்கிற புழக்கமும் நம்மூர்லெ இருந்துருக்கு.)

சம்மணத்திலேர்ந்து சமணம் வந்துதுன்னு சொன்னா சிலபேருக்கு வியப்பா இருக்கும். இதுக்கு சான்று எது? அடுத்த மடல்லே பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

சுதேசன் said...

அற்புதமாக படைக்கிறீர்கள் இராம.கி,
தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்

Anonymous said...

ஐயா நீங்கள் வட்டாரத் தமிழில் ஆங்காங்கு எழுதியது தான் எனக்கு புரியவில்லை.

இராம.கி said...

சுதேசன் என்பவர் அனுப்பிய பின்னூட்டை இங்கு அனுப்பி வைத்தேன். என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. எனவே அதை அப்படியே படியெடுத்து நான் பதிக்கிறேன்.
----------------------------
அற்புதமாக படைக்கிறீர்கள் இராம.கி,
தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்
-----------------------------

இதே போல பெயரில்லாதவர் ஒருவர் எழுதிய பின்னூட்டு (இந்தப் பின்னூட்டு சமயம் -3 யைப் பற்றியது என்று நினைக்கிறேன்.):
----------------------

ஐயா நீங்கள் வட்டாரத் தமிழில் ஆங்காங்கு எழுதியது தான் எனக்கு புரியவில்லை.

------------------------

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

¦¸¡í¨¸ìÌõ ¦¸¡íÌìÌõ ¸õ¦Áý§È «õÁ¢¿¢ýÈ
Àí¸¡Ç¢ì Üð¼¾É¢ø Á¢ýÉÊò§¾ - ¾í¸õ¾¡ý
¾ð¼¿£Ùõ ±ó¾Á¢ú¾¡ý ±ýȨÁòÐì ¸¡ðÊÅÕõ
¸¢ð¼ý§À÷ Å¡ú¸¦Åý§È °Ð.

¬¸¡ ºÁ½ò¾¢ý §Å÷¸ñ¼¡ý ºõÁ½ò¾¢ø
ܸ¡ ±ÉìÌÆÚõ Üð¼ò¨¾î - º¡¸¡ò
¾Á¢Æ¡ü ÒÈí¸ñ¼¡ý ºí¸¾ò¨¾ š¡
ÖÁ¢Æ¡ì¸¢ É¡§É ¸ºóÐ.

¬ÚÓ¸ò¾Á¢Æý

இராம.கி said...

அன்பிற்குரிய சுதேசன்,

உங்கள் கனிவிற்கு நன்றி

அன்பிற்குரிய பெயரில்லாதவரே!

வட்டாரத் தமிழைப் பயன்படுத்துவதில் இருவேறு கருத்துக்கள் உண்டு; ஒருசிலர் அதைக் கொச்சை என்றும், அதைத் தவிர்த்தே எழுத வேடும் என்றும், இன்னும் ஒருசிலர் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே பெருந்தொலைவு கிடக்கிறதென்றும், இந்தத் தொலைவு குறைக்கப் படவேண்டும் என்றும், பேச்சுத் தமிழை எழுத்தில் பரிமாறிக் கொள்ளும் போது கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவட்டாரத் தடமிழ் இன்னொருவருக்குப் புரியத் தொடங்கும் என்றும், அதன் மூலம் ஒரு பொதுநடை தமிழில் உருவாகும் என்றும் சொல்லுவார்கள்.

நான் இரண்டு நடையையும் எழுதிவருபவன் தான். நீங்கள் சொல்லுவதையும் மனத்தில் நிறுத்திக் கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய ஆறுமுகம்,

வாழ்த்திற்கு நன்றி. வெண்பா கூடி வருவதைப் பார்க்கிறேன். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.