யாராவது நாடகக் கலைஞரின் ஆக்கங்களையும், திரைப்படக் கலைஞரின் ஆக்கங்களையும் ஒன்று சேர வைத்து மெய்ப்பாட்டுக் கலையென்று மதிப்பிடுவார்களோ? இன்றையத் தமிழ்த் திரைப்படம், நாடகத்தில் இருந்து பிறந்து வந்திருந்தாலும், நாடகக் கூறுகள் எல்லாம் மறைந்து திரைப்படம் தனி நிலை பெற்றுவிட்டது. அது போலத்தான் புதுக் கவிதை என்று கிளம்பி மக்கள் மனத்தைக் கவர்ந்து புழங்கிவரும் உரைவீச்சும்; என்னதான் இதைச் செய்பவர்கள் இலக்கணம் இல்லையென்றாலும், அதற்கென ஓர் இலக்கணத்தை ஒருசிலர் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதையும் மரபுப் பாவையும் சேர்ந்து மதிப்பிடச் சொன்னால் எப்படி?
பாவிற்கும், உரைவீச்சிற்கும் களம் ஒன்றுதான். பொருள் ஆழம் தேவை.; அதுதான் உள்ளடக்கம்; ஆனால் சொல்லும் முறைகள் வெவ்வேறானவை.
பா என்பது உள்ளடக்கம் பொருந்திய ஒரு கோலம். அது மாக் கோலமாக இருக்கலாம். அல்லது வண்ணம் கலந்த நிறங்கோலியாகக் (ரங்கோலி)கூட இருக்கலாம். அங்கே ஓசை உண்டு; முன்வந்து நிற்கிற மோனை உண்டு; எதிர்கொண்ட எதுகை உண்டு; ஒவ்வொரு சொல்லும், அசையும், தளைப்படுகிற கட்டும் உண்டு. அது ஒரு தேர்ந்த பின்னல் வேலையைப் போன்றது; அழகுணர்ச்சியின் உந்துதலால், மேலும் மேலும், முனைந்து நாம் சோடிக்கின்ற முத்தாய்ப்பு, மரபுப் பா.
பா வடிப்பவர்கள், இசைக்கத் தெரியா விட்டாலும், கேட்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; நாட்டுப்புறத் தெம்மாங்கில் ஈடுபாடு இருக்க வேண்டும்; ஓசையில் கொஞ்சம் ஆழ்ந்து தோய வேண்டும். தந்தனாத் தாளத்தில் இழைந்திருக்கத் தெரிய வேண்டும் (இழைதலைத் தான் வட மொழியில் லயம் என்று பெயர்க்கிறார்கள். இழையம்>லயம்) மொழியின் நெளிவு, சுழிவுகள், மற்றும் சொல்வளம் தெரிந்திருக்க வேண்டும். இவையெல்லாம் கூடும் போது, தானாகவே மோனை, எதுகை, தொடை, தளை எல்லாம் வந்து விடும். அப்புறம் யாக்கத் தெரிந்தவனுக்கு யாப்பு எதற்கு? எழுதிய பாவை, தனித்திருந்து, குரலை எடுத்து, உயர்த்தி, உரைத்துச் சொல்லிப் பாருங்கள்; ஓசை தட்டுமிடத்தில், தளை தட்டும்; நீங்கள் திருத்தி விடலாம். ஒருமுறைக்கு மும்முறை உங்கள் பாவைப் படியுங்கள்; உங்களுக்கே திருத்தங்கள் தெரியும். அதே பொழுது, ஆனைக்கும் அடி சறுக்கலாம். ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்; உங்கள் பா வளம் சிறக்கும்.
பாவின் வளம் சொன்னதால், உரைவீச்சு குறையுள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். யாராவது ஆப்பிளையும் நாரங்கைப் (orange) பழத்தையும் ஒப்பிடுவார்களோ? அது ஒரு விதம்; இது இன்னொரு விதம்; உங்களைச் சட்டென்று களத்துக்குள் கொண்டு வரும் ஓர் உலுக்கல், உரை வீச்சிற்கு உண்டு. இங்கே அழகு என்பது ஒரு பொருட்டல்ல; ஆனால் துடிப்பு என்பது முகன்மையானது. அதனால் தான் இதை வீச்சு என்கிறோம். இதன் ஈர்ப்பில் நாம் கவரப் படுகிறோம். அதே பொழுது, உரைவீச்சு என்ற என் சொல்லைக் கண்டே வெகுண்டு எழுகிறவர்களும் உண்டு. முன்பு எப்பொழுதோ ஒருமுறை உரைவீச்சு / மரபுப் பா பற்றி நான் தமிழ் இணையத்தில் எழுதப் போக, ஈழக் கவிஞர் இரமணிதரன் வெகுண்டு எழுந்தார். ஒரு பத்து மடல்களில் வீச்சும் மரபுமாக வெவ்வேறு புனைப் பெயர்களில் மழை பொழிந்தார்; மனம் மகிழ்ந்தேன் நான்; எப்பேர்ப் பட்ட கவிஞன் இவன் என்று வியந்து போனேன். சிறந்த கவிஞர்கள் அரிதாக இருக்கிறார்கள்.
உரைவீச்சை உணரவேண்டியவர்கள் மரபு ஓவியத்திற்கும், கலவைப் பகுந்தத்திற்கும் (collage painting) உள்ள வேறுபாட்டை உணராதவர்கள்.
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
என்ற குறளில் சொல்லப்படும் "விழைகின்ற இருவருக்கு இடையே காற்றால் கூடப் பிரிக்க முடியாத தழுவல்" என்ற கருத்தை, ஒரு பகுந்தத்தால் (painting) உணர்த்த வேண்டும் என்றால், அங்கே மரபு ஓவியம் சற்றும் பயன்படாது; ஆனால் கலவை (collage) என்பது மிகச் சிறப்பாக மிளிர்ந்து நிற்கும். ஏனென்றால் சொல்லப் படுவது அதிகப் பட்ட கற்பனை (காற்றால் கூடப் பிரிக்க முடியாத தழுவல்); அதை அதிகப் பட்ட உருவகம் கொண்ட இற்றைக்காலப் பகுந்தத்தால் (modern painting) தான் வரைய இயலும். இங்கே இயற்கைக்கு மீறிய அளவாய், உடலின் வரைவுகள் இருந்தால் தான், சொல்ல வந்ததைக் காண்போருக்கு உணர்த்த முடியும்.
அதைப் போலத்தான் சில உருவகங்களை, எவ்வளவு முயன்றாலும் நாடகத்தில் கொண்டு வர இயலாது; ஆனால், திரைப்படத்தில் கொண்டுவர இயலும். இதே போல, மரபுப் பாக்களைக் காட்டிலும், உரைவீச்சில் சில உருவகங்கள் மிக எளிதாக வெளி வந்து சேரும்.
அதே பொழுது உரைவீச்சு செய்பவர், அந்த "வீச்சு" என்ற கருத்தின் பொருளை உணர வேண்டும். துணுக்கு, துணுக்காகவாவது அங்கங்கே வீச்சு (ஓசையால் அவ்வப்போது வருவது) வரவேண்டும். (முரண் என்பது ஒரு வீச்சு; முரண் மட்டுமே வீச்சு அல்ல; உரையோடை - rhetoric - என்பது ஒரு வீச்சு; ஆனால் அடுத்தடுத்த உரைவீச்சில் அதே விரவி நின்றால் அப்புறம் வீச்சு தெறிக்காது; நமக்கு வெறுத்துப் போய்விடும்.) படிக்கும் போது, உள்ளே ஊடி நிற்கும் வீச்சுத் தான் மனதில் நிறைந்து, முழு ஆக்கத்தையும், மீண்டும் நம் ஞாவகத்திற்குக் கொண்டு வரச் செய்யும். இல்லையென்றால் வெறும் வரிகளை மடித்துப் போட்ட நிலையில், முடிந்துவிடும். (ஒரு காலத்தில் இப்படி மடித்துப் போட்டவற்றைக் கம்பாசிட்டர் கவிதை என்று கேலி செய்வார்கள்.) உரைவீச்சில் தளை இருக்க வேண்டியதில்லை; ஆனால் ஆங்காங்கே மோனையும், சிறிதளவாவது எதுகையும், தொட்டுக் கொள்கிறாற் போல் தொடையும் இருந்தால், அது இன்னும் சிறப்பு.
உரைவீச்சாளர்கள் மொழியில் ஆழ்ந்த கவனம் கொள்ளவேண்டும். "ஜுவாலை, ஸ்வதந்திரம், ஜகம், பிரகாஸம், சூட்சுமம், இப்படியாக ஆங்காங்கே நாலைந்து வட மொழிச் சொல்லாட்சிகளை உள்ளே கொண்டு வந்து விட்டால், உங்கள் வீச்சின் வளம் கூடும் என்று நினைக்காதீர்கள். அது உங்களை, ஏதோ ஓர் இனம் புரியாத சிந்தனையாளனாக வேண்டுமானால் காட்டும்; வீச்சின் வளம் கொண்டவராய்க் காட்டாது. நல்ல தமிழில், உரை வீச்சை எழுத முடியும்; செய்யுங்கள்! உரை வீச்சு என்ற புதிய வடிவம் தமிழுக்கு வந்தது நல்லது தான்.
மரபுப் பா எழுதுவோர்க்கும், உரைவீச்சாளருக்கும் ஒரு பொதுவான வேண்டுகோள்; உங்கள் ஆக்கத்தை படித்து, அது நினைவில் நின்று, ஆறு மாதம் கழித்து படித்தவனால் அதை மேற்கோள் காட்ட முடியுமானால், நீங்கள் வென்றீர்கள் என்று பொருள்; அதை நினைவு கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு இதற்கு மிகத் தேவை.
அன்புடன்,
இராம.கி.
12 comments:
உரைவீச்சுக் குறித்த தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா!
இத்தகைய ஆலோசனைகள் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு அவசியம்.இதையொரு எழுத்து-படைப்புப் பட்டறையாக வளர்த்துச் சென்றீர்களானால்- அது இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள்"ஆற்றும்"பெரும் பணியெனக் கூறலாம் ஐயா.
ஆக, நீங்களும் "புதுக்கவிதை" என்ற சொல்லுக்கு எதிர்ப்புப் போலும்.
கவிஞர் காசி ஆனந்தன், 'கவிதை என்றால் அது ஒன்றுதான். புதுக்கவிதையென்று எதுவுமில்லை. வேண்டுமானால் அதற்கு வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்' என்றுவிட்டு தானெழுதிய மரபற்ற கவிதைகளை 'நறுக்குகள்' என்று வெளியிட்டார். ஆனால் உரைவீச்சென்பது புதுக்கவிதையாக இன்று அடையாளங் காணப்படுபவற்றுக்குப் பொருத்தமான சொல்லா?
ஐயா மீண்டும் தவறான இடத்திகேட்பதுக்கு மன்னிக்கவும், ஆனால் கூட்டமைப்பு என்ற சொல் இலங்கையில் "Alliance" என்பதை குறிக்க பயன்படுகிறதே??
நீங்கள் "Orange" பழத்தை நரங்கை என்று தமிழில் கூறியுள்ளிர்கள். ஆனால் இலங்கையில் "தோடம்பழம்" எனும் சொல்தான் "Orange" பழத்தை குறிக்க பயன்படுகிறது. "நரங்கை" என்பது எலுமிச்சை அளவில் ஒரு சிறிய மஞ்சல் (Orange குடும்பத்தை சேர்ந்த) பழத்தை குறிக்கவே பயன்படுகிறது.
தோடம்பழமும் நாரந்தை(நாரங்கை?)யும் வேறுவேறாகவே நானும் அறிந்து வைத்துள்ளேன். தமிழகத்தில் சாத்துக்குடி என்று சொல்லப்படுவதுதான் இலங்கையில் தோடம்பழம். ஆனால் நாரந்தை என்பது மேலேயுள்ளவர் சொன்னது போல் சிறிய மஞ்சள் நிறத்திலானதென்று நானறியவில்லை. அது கடும்பச்சை நிறத்தில் தோடம்பழத்தின் அளவுக்குப் பெரியதாகவிருக்கும். அதிகமான புளிப்பைக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் அருந்தலாக வீடுகளில் வளர்க்கப்பட்டாலும் வன்னியில் காட்டுக் கரைகளில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும்.
***********************
Alliance என்பது கூட்டணி என்ற கருத்தில் வருகிறது. ஆனால் சமஸ்டி என்பது கூட்டாட்சி என்ற கருத்தில் தானே பாவிக்கப்படுகிறது?
வசந்தன் கூறும் பச்சை பழம் கொடித்தோடை ஆகும். நாரத்தை ஒரு சிறிய மஞ்சள் பழத்தையே குறிக்கிறது.
வசந்தன் நீங்களெல்லோரும் "வெறும் பால்குடிப் பசங்கள்"தான்!சாத்துக்குடி என்பது எலுமிச்சையின் பழம்.அதாவது எலுமிச்சம்பழம்.
அன்பிற்குரிய கருணா,
கனிவிற்கு நன்றி.
அன்பிற்குரிய வசந்தன்,
நான் தான் பதிவில் சொல்லியிருந்தேனே! பாவும் உரைவீச்சும் அடிப்படையில் வெவ்வேறானவை. நறுக்குகள் என்ற சொல்லைக் கேள்விப் பட்டு இருக்கிறேன். உரைவீச்சு என்ற சொல் ஒரு 30, 40 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலும், சிங்கை, மலேசியாவிலும் புழங்கிப் பார்த்திருக்கிறேன். நறுக்குத் தெறித்தாற் போல என்பதும் வீச்சு என்பதும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. இரண்டுமே ஒருபொருட் சொற்கள் தான்.
அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
alliance என்பதற்கு கூட்டணி என்ற சொல்லையே நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அணி என்று சொல்லும் போது வரிசை என்ற பொருளும் வந்துவிடும். வரிசை பரிசையாகி மலாய்/இந்தொனேசிய மொழியில் barisan என்ற ஒலிப்பில் alliance என்ற பொருளில் பயனாக்குவார்கள். கூட்டமைப்பு என்பது சமஷ்டி என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப் படுவது. கூட்டாட்சி என்று வசந்தன் சொல்லுவது கூட்டமைப்பில் செய்யப்படும் ஆட்சி. ஆனால் கொஞ்சம் மயங்கிய போக்கில் கூட்டமைப்பு, கூட்டாட்சி இரண்டும் ஒன்று போலப் பயன்படுத்தப் படலாம்.
அன்புள்ள பெயரில்லாதவர், வசந்தன், மற்றும் கருணாவிற்கு,
தமிழ்நாட்டுப் புழக்கம் பற்றிச் சொல்லுகிறேன். இங்கு இயற்கையாய் விளைந்தவை:
எலுமிச்சை; நாரத்தை (=நாரந்தை), சாற்றுக்குடி (=சாத்துக்குடி; இதை வடநாட்டில் முசாம்பி என்று சொல்லுவார்கள்.) ஆகியவை.
இதுபோக வெளிநாட்டிலிருந்து வந்து, இங்கு இறங்கி இப்பொழுது பெருத்துப் போன பழம் orange ஆகும். நாக்பூர் இதற்குப் பேர் போனது. orange என்பதன் பெயர் நம்மூர் நாரந்தை என்ற சொல்லை ஒட்டியே மேலை நாட்டில் எழுந்தது என்று பல மொழியியலார்கள் சொல்லுகிறார்கள். இப்பொழுது orange பழம் இங்கும் வந்து சேர்ந்த காரணத்தால், வேறுபாடு காட்டிச் சொல்லுதற்காய், நாரங்கை என்பதை orange என்பதற்கும், நாரந்தை என்பதை நம்மூரின் இயல்பான பழத்திற்கும் (மஞ்சள் ஊடு பரந்த பச்சைப் பழம்) பயன்படுத்துகிறோம். நாரந்தை என்பது புளிப்பானது. நாரங்கை இனிப்புக் கூடியது.
தோடம்பழம் என்ற சொல் எனக்குப் புதியது. (சாத்துக்குடிக்குத் தோடம்பழம் என்ற பெயரா? எப்படி அந்தப் பெயர் கிளைத்தது?) ஈழத்தாரும் தமிழகத்தாரும் பேசி ஓருவருக்கொருவர் தெரிந்து கொள்ளவேண்டிய பண்பாட்டுக் கூறுகள், சொல்விளக்கங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள இது நல்ல வாய்ப்பு.
அன்புடன்,
இராம.கி.
எலுமிச்சை என்பதை "தேசிக்காய்" என்று நாங்கள் சொல்வோம்.
Orange என்பதை "தோடம்பழம்" என்போம். (இதன் மரம் / செடி "தோடை" எனப்படும். இச்சொல் எப்படி வந்ததென்று தெரியாது. ஆனால் நீண்டகாலம் பாவிக்கப்படுகிறது.)
ஆனால் எலுமிச்சையும் சாத்துக்குடியும் ஒன்று என்று கருணா சொல்வது எனக்குப் புதிய தகவல். இரண்டுமே ஒன்றுதானா? இராம.கி சொன்னதன்படி இரண்டுமே வேறுவேறானவை என்றல்லவா வருகிறது. (கருணா சொன்னது போல நான் ஒன்றுமறியாத சின்னப்பிள்ளைதான், இந்தியாவிலிருந்த காலத்தில் சாத்துக்குடி பற்றிய புரிதலின்போது;-))
நாரந்தை - நாரங்கை வித்தியாசம் சொன்னதுக்கு நன்றி. Orange தமிழின் நாரந்தையிலிருந்து வந்ததே என்று முனைவர் அரசேந்திரன் சொல்லிக் கேட்ட ஞாபகம். நான் முந்தைய பின்னூட்டிற் சொல்லியிருப்பது நாரந்தை என்ற புளிப்பு அதிகமான கனியையே.
நீங்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்குமான சொல் வித்தியாசத்தைப் பற்றிக் கதைப்பதைச் சொல்கிறீர்கள். ஆனால் இஞ்ச எங்களுக்குள்ளயே வேறுபாடிருக்கிறதே?
ஆனாமதேய அன்பரே,
நாரந்தை என்று நான் சொன்னதுக்கும் "கொடி" என்ற சொல்லுக்கும் யாதொரு தொடர்புமில்லை. ஏனென்றால் அம்மரம் (ஆம் செடி என்று சொல்லமுடியாதபடி ஓரளவு பெரிதாகவே வளரும்) கொடிக்குரிய எக்குணத்தையும் கொண்டிருக்கவில்லையெனும்போது எப்படி "கொடித் தோடை" எனும் பெயரைப் பெறும்?
(அதுசரி, யாழ்ப்பாணத்தின் நாரந்தனை என்ற பகுதிக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பிருக்கா?)
வேண்டுமானால் நீங்கள் சொல்வது இராம.கி சொல்லும் நாரங்கை என்ற வகையுடன் ஒத்துப்போகலாம். எங்கள் ஊரில் 'கொடித் தேசி' என்று ஒன்றுண்டு. அது வழமையான தேசிக்காயைவிட சற்றுப்பெரியதும் முட்டை வடிவத்தைக் கொண்டதும். நல்ல மஞ்சள் நிறத்திலிருக்கும். புளிப்பு ஒப்பீட்டளவில் குறைவு. அதைச் சொல்கிறீர்களோ என்றும் யோசிக்கிறேன்.
என்றாலும் ஈழத்துக்குள்ளேயே வேறுபாடுகளுண்டு. நீங்கள் எப்பகுதியென்று அறிந்தால் பிறிதொரு இடத்தில் பயன்படக்கூடும்.
எனக்கு தெரிந்த மட்டிலும், இலங்கையில் இதுதான் பயன்பாடு
தோடம்பழம் = Orange
கொடித்தோடை = Passion Fruit
நாரங்காய் = ????
தேசிக்காய் = Lime
எலுமிச்சை = Lemon
எனக்கு தெரிந்த மட்டிலும், இலங்கையில் இதுதான் பயன்பாடு
தோடம்பழம் = Orange
கொடித்தோடை = Passion Fruit
நாரங்காய் = ????
தேசிக்காய் = Lime
எலுமிச்சை = Lemon
//இது இன்னொரு விதம்; உங்களைச் சட்டென்று களத்துக்குள் கொண்டு வரும் ஓர் உலுக்கல், உரை வீச்சிற்கு உண்டு. இங்கே அழகு என்பது ஒரு பொருட்டல்ல; ஆனால் துடிப்பு என்பது முகன்மையானது. அதனால் தான் இதை வீச்சு என்கிறோம்//
:-))., உண்மை!!.
//இத்தகைய ஆலோசனைகள் தமிழ்ப்படைப்பாளிகளுக்கு அவசியம்.இதையொரு எழுத்து-படைப்புப் பட்டறையாக வளர்த்துச் சென்றீர்களானால்- அது இளந்தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள்"ஆற்றும்"பெரும் பணியெனக் கூறலாம் ஐயா. //
இதையே நானும் வழிமொழிகிறேன்.
Post a Comment