Thursday, March 23, 2006

கூட்டின் மேல் கணக்கீடு

ஆண்டுக்கு 3 மில்லியன் டன் கொண்மை (capacity) கொண்ட, அண்மையில் கட்டப்பட்ட, பாறைநெய் விள்ளெடுப்பு ஆலையின் (Petroleum refinery; விள்ளுதல் = தெளிவாதல், பிரித்தல்; விள்ளெடுப்பு = தெளிய வைத்துப் பிரித்தெடுத்தல்) மதிப்பு ரூ 2500 கோடி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இப்பொழுது, இன்னொரு இடத்தில் இதே போன்ற பாறைநெய் விள்ளெடுப்பு ஆலையை, (காட்டாக, 6 மில்லியன் டன் கொண்மை கொண்ட ஆலையை) கட்டுவதற்கு குத்து மதிப்பாக எவ்வளவு செலவாகும் என்று ஒரு நிருவாகத்தார், பொறிஞராகிய நம்மைப் பார்த்துக் கேட்டால், அதுவும் உடனேயே சொல்லுங்கள் என்று கேட்டால், நாம் என்ன விடை சொல்லுவது?

இது போன்ற உடனடிக் கணக்கீடுகளை, "கூட்டின் மேல் கணக்கீடு" (back of the envelope calculation) என்று பொறியியற் துறையில் சொல்லுவார்கள். அதாவது, நாலு கிறுக்கலில், ஒரு குட்டித்தாளில் கணக்குப் போட்டு, உடனே விடை சொல்லி விட வேண்டும். அப்படிப் பட்ட கணக்கில் மிகப் பெரிய துல்லியம் எல்லாம் விடைக்குத் தேவையில்லை. கிட்டத் தட்ட, ஒரு மேல் விளிம்பாய்ச் சொன்னாலே போதும் என்பார்கள்.

சரி, சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல், (ஒரு கிலோ இவ்வளவு விலை, எனவே மூன்று கிலோ மூன்று மடங்காய் இருக்கும் என்பது போல்,) 6 மில்லியன் டன் ஆலைக்கு ரூ 5000 கோடி என்று சொல்ல முடியாமா என்றால், முடியாது; ஏனென்றால், அப்படிச் சொல்லும் விடை நடை முறையில் பெரிதும் தவறாகவே இருக்கிறது.

இது போன்று வேதித் திணைக் களங்களின் (Chemical plants) கொளுதகைகளை (costs) மதிப்பிடும் போது நெல்சன் விதி என்றும், மூன்றில் இரண்டாம் புயவு விதி என்றும் (two third power; power is different from energy; ஆற்றல் = energy; புயவு = power; புயம் = தோள்; தோள்வலியின் ஒப்புமையையில் புயவு என்ற சொல் எழுந்தது.), ஒரு வழிமுறையின் மூலம், முதல் மதிப்பீட்டைக் (first estimate) கண்டுபிடிக்க முயலுவார்கள். புறத்திட்டப் பொறியியலில் (project engineering) ஈடுபடும் வேதிப் பொறிஞர்கள் (Chemical engineers) பலரும் இந்த விதியை அறியாமல் இருக்க மாட்டார்கள். ஆனால், இந்த விதியின் உள்ளே பொதிந்திருக்கும் ஆயவூன்றுகள் பலருக்கும் தெரிவதில்லை. (ஆயவூன்றுகள் = assumptions; இவற்றை அடிப்படை என்று சொல்ல முடியாது. தமிழ்ச் சொல்லின் தோற்றம் கண்டுபிடிக்க, கோயில்களில் பல்லக்கு மற்றும் கோயில் வாகனங்களில், அல்லது சிவிகைகளில் ஊருலவுத் திருமேனிகளை வைத்துத் தூக்கிச் செல்லுவதை நினைவு கொள்ளவேண்டும்; அப்படித் தூக்கும் போது, அவ்வப்பொழுது சிவிகைகளைத் தோளில் இருந்து எடுத்து நிறுத்திக் கொள்வதற்கு ஆயக்கால்களை வைத்து ஊன்றிக் கொள்வார்கள். அந்த ஆயவூன்றுகளின் மேல் தான் ஊருலவுத் திருமேனிகள் நிற்கின்றன. assumptions மேல் தான் தேற்றுகள் - theories - நிற்கின்றன.)

இந்தப் பதிவில் நெல்சன் விதியைத் தாங்கி நிற்கும் ஆயவூன்றுகள் பற்றிச் சொல்ல முற்படுகிறேன். முதலில் விதியைப் பார்ப்போம்.

புதிய கொளுதகை = பழைய கொளுதகை * (புதிய கொண்மை / பழைய கொண்மை)^(2/3)

காட்டாக, புதிய 6 மில்லியன் டன் பாறைநெய் விள்ளெடுப்பு ஆலையின் கொளுதகை = (ரூ 2500)*(6 மில்லியன் டன் / 3 மில்லியன் டன்)^(2/3) = கிட்டத் தட்ட ரூ 3968.5 கோடி ஆகும். (ரூ 5000 கோடி ஆகாது.)

இந்த விதி எப்படி எழுந்தது என்று இப்பொழுது புரிந்து கொள்ளுவோமா? கொஞ்சம் நுட்பச் சொற்கள் ஊடே வரும்; பொறுத்துக் கொள்ளுங்கள். (சொற்களின் சொற்பிறப்பை இங்கே நான் பல இடத்தும் கூறவில்லை; அதைக் கூறத் தொடங்கினால் கட்டுரை நீண்டுவிடும்.) பொதுவாக வேதித் திணைக்களம் (chemical plant) என்பது,

பெரும் பெரும் கோபுரங்கள் (towers),
வினைக் கலன்கள் (reactors),
வெப்ப மாற்றிகள் (heat exchangers),
தாங்கல்கள் (tanks),
தொட்டிகள் (ground level storages and pits)
நீளமான தூம்புகள் (tubes),
புழம்புகள் (pipes)

என்பவற்றோடு [இவற்றை வேதிநுட்பப் பேச்சில் ஏந்தங்கள் (equipments; ஏந்து = வாய்ப்பு; ஏந்தம் = வாய்ப்பு ஏற்கும் கலன்) - என்று பொதுவாக அழைப்பார்கள்],

இறைப்பிகள் (pumps),
அமுக்கிகள் (compressors),
ஊதிகள் (blowers),
நகர்த்திகள் (conveyors),
மின்னோட்டிகள் (motors),

இன்னும் இதுபோன்ற பலவற்றையும் கொண்டது. (இந்த இரண்டாம் வகையை மாகனைகள் - machineries என்று வேதிப் பொறிஞர்கள் அழைப்பார்கள்). மாகனைகள் மூலமாகவும், புவியீர்ப்பின் (gravity) மூலமாகவும் தான் ஒரு திணைக் களத்தில் கையாளப்படும் செலுத்தப் பாய்மங்கள் (process fluids), ஒரு ஏந்தத்தில் இருந்து, இன்னொரு ஏந்தத்திற்கு அனுப்பப் படுகின்றன.

இப்பொழுது முதல் ஆயவூன்றாக (assumption),

வேதி வினைகள் (chemical reactions), பூதி மாற்றங்கள் (physical changes), பாய்ம நகர்ச்சிகள் (fluid movements) என எல்லாமே மாகனைகளின் உதவியில்லாமல், புவியீர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு நடைபெறுவதாக எண்ணுங்கள். [அதாவது இயல்பொருட்கள் (raw materials) என்பவை எங்கோ உயரத்தில் இருக்கும் ஏந்தத்துள் நுழைந்து, அடுத்தடுத்து வெவ்வேறு ஏந்தங்களுக்குள் மாறி வந்து, அப்படி வரும் போதே வேதி வினைகளில் ஈடு பட்டு, பூதி மாற்றங்கள் அடைந்து, பின்னால் புவியீர்ப்பின் துணையாலே, நமக்கு வேண்டிய புதுக்காய்ப் (புதுக்கு = product) பிரிந்து, அடியில் வந்து சேருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.] மாகணைகள் இல்லாத திணைக்களம் என்பது வெறும் ஏந்தங்களால் ஆனது என்று ஆகிவிடுகிறது.

சரி, இந்தப் பாய்மங்கள் வெவ்வேறு ஏந்தங்களிலும் கொஞ்ச நேரமாவது இருக்க வேண்டும் அல்லவா? அப்பொழுது தானே வேதி வினைகளும், பூதி மாற்றங்களும் நடைபெற முடியும்? இப்படி ஏந்தங்களுள் இருக்கும் நேரத்தை, வேதி நுட்பவியலார் (chemical technologists) "இருத்தல் நேரம் (residence time)" என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு கலனை (vessel) ஓட்டியும், ஒரு பிரிவை (section) ஒட்டியும், ஒரு திணைக் களத்தை (plant) ஒட்டியும் கூட இருத்தல் நேரங்கள் என்னென்ன என்று பேச முடியும். இந்த இருத்தல் நேரம் என்பது வேதிப் பொறியியலில் பெரிதும் முகன்மையானது. ஒரு திணைக் களத்தின் கொண்மை எவ்வளவு இருந்தாலும், இருத்தல் நேரம் என்பது மாறக் கூடாது. மாறினால் சரியான அளவு வேதிவினையோ, பூதி மாற்றமோ நடவாமல் போய்விடும். நேரம் என்பது முதன்மையானது.

ஒரு கிலோ மதுகை கொண்ட பாறை நெய் (மதுகை = mass; மதர்த்துக் கிடப்பது மதுகை; மதுகை என்பதும் எடை என்பதும் சற்று வேறானவை. தமிழில் அவற்றை வேறு படுத்திச் சொல்லும் போக்கு வரவேண்டும்.) ஒரு திணைக்களத்தில் முதல் துளித்தெடுப்புக் கோபுரத்திற்குப் (distillation tower) போனதில் இருந்து ஒவ்வொரு ஏந்தமாய் நுழைந்து, பல மாற்றங்களைப் பெற்று, முடிவில்

கொஞ்சம் நீர்ம எரிவளி (liquid fuel gas),
கொஞ்சம் கன்னெய் (petrol or gasolene),
கொஞ்சம் மண்ணெய் (kerosene),
கொஞ்சம் டீசல்,
கொஞ்சம் வளிநெய் (gas oil)

என்று வந்து சேரும் வரை ஆகின்ற இருத்தல் நேரம் இருக்கிறது பாருங்கள், அது 12 மணி நேரம் என்றால், 3 மில்லியன் டன் விள்ளெடுப்பு ஆலையிலும், அதைப்போல இரண்டு மடங்கு கொண்மை கொண்ட 6 மில்லியன் டன் விள்ளெடுப்பு ஆலையிலும், அதே 12 மணிநேரம் தான் இருக்க முடியும்.

எனவே நமக்கு முன்னால் இருக்கும் இரண்டாவது ஆயவூன்று: இரண்டு ஆலைகளுக்கும் இருத்தல் நேரம் என்பது சமம்.

சரி, ஒரு திணைக் களத்தில் இருக்கும் கோபுரங்கள், வினைக்கலன்கள், வெப்ப மாற்றிகள், தாங்கல்கள், தொட்டிகள், தூம்புகள், புழம்புகள் எல்லாம் வெவ்வேறு அளவுகளோடு (விட்டம் - diameter, உயரம், திண்ணம் - thickness), வெவ்வேறு வடிவங்களோடும் (கொஞ்சம் கூம்பு - conical - போன்றது; கொஞ்சம் சப்பையானது - flat, கொஞ்சம் கோளமானது - spherical.....), வெவ்வேறு மாழைகளாலும் (ஒரு கலன் கரிம எஃகு - carbon steel, இன்னொன்று துருவிலா எஃகு - stainless steel, இன்னும் மற்றொன்று வார்ப்பிரும்பு - cast iron, செம்பு, ஈயம் - lead இப்படி.....) ஆகி இருக்கலாம்.

எனவே மூன்றாவது ஆயவூன்று: வெவ்வேறு வடிவங்களையெல்லாம் அகற்றி ஒரே ஒரு உருளை வினைக் கலன் (cylinderical reactor) ஆகவே, திணைக்களத்தை உருவகிக்கலாம். அப்படிச் செய்வதற்கு ஒரே ஒரு தேவை, இருத்தல் நேரம் என்பது மாறாதிருப்பதே.

நாலாவது ஆயவூன்று: விதவிதமான மாழைகளுக்கு மாறாய், சூழமைவின் (environment) காரணமாய் ஒரே ஒரு மாழையால் மட்டுமே இந்த உருளை செய்யப்பட்டுள்ளது.

இந்த உருளை வினைக்கலனை தொடர்ந் துருவிய தாங்கல் வினைக்கலன் (continously stirred tank reactor - தொதுதாவி - CSTR) போலவே கருதலாம். இந்த வினைக் கலனில் ஒருபக்கம் வினைப்பொருட்கள் உள்ளே போகும்; உள்ளே துருவணை (turbine) ஒன்று வினைப்பொருட்களைச் சுழற்றிச் சுழற்றித் தூக்கியடித்துக் கலந்து கொண்டே இருக்கும்; குறிப்பிட்ட இருத்தல் நேரம் முடிந்தவுடன், இன்னொரு பக்கம் விளை பொருட்கள் வெளியே வரும். பொதுவாக இது போன்ற வினைக் கலன்களின் நீர்ம மட்ட உயரம் விட்டத்தின் அளவே இருக்கும். (ஐந்தாவது ஆயவூன்று)

அத்தகையை உருளை வினைக்கலத்தின் வழியாக, ஒரு மணி நேரத்திற்கு 3000 லிட்டர் பாறைநெய் போகிறது என்று வையுங்கள். அதன் இருத்தல் நேரம் 1/2 மணி. அப்படியானால் அந்த உருளையின் கொள்ளளவு 1500 லிட்டர்களாக இருக்க வேண்டும். மாறாக, 6000 லிட்டர் பாறைநெய் போகிறது என்றால் அதே இருத்தல் நேரத்தில், உருளையின் கொள்ளளவு 3000 லிட்டராக இருக்கவேண்டும். பொதுவாக கொள்ளளவு V1, திணைக்களக் கொண்மை Q1 என்றால், இருத்தல் நேரம் t என்றால்,

V1 = Q1*t.

இரண்டு வேறுபட்ட திணைக்களக் கொண்மை கொண்ட, ஆனால் ஒரேவிதமான, ஆலைகளை ஒப்பிடும் போது இந்த இருத்தல் நேரம் என்பது ஒன்று போல் இருக்க வேண்டும் என்று சொன்னேன் அல்லவா?

எனவே, V2/V1 = Q2/Q1 என்ற ஒப்புமை நமக்கு விளங்கும்.

இப்பொழுது உருளை என்பதை ஒரு பட்டறையில் (workshop) எப்படி மானவப் படுத்துகிறோம் (manufacturing) என்று பார்ப்போம்.

பட்டறையில் L நீளமும், r ஆரமும் கொண்ட ஒரு புழம்பை உருவாக்க வேண்டுமானால், L நீளமும், 2*(pi)*r அகலமும் கொண்ட ஒரு செவ்வகத்தை எடுத்து, நீள வாட்டை அப்படியே வைத்துக் கொண்டு, அகல வாட்டை ஒரு உருளை மாகனை(roller machine)யில் போட்டு உருட்டி, பின் நெருங்கி வரும் விளிம்பு(edge)களை ஒன்று சேர்த்துக் கூடு போல ஆக்கி, அதன் பின் மேலும் கீழுமாய் வட்ட மூடிகளை ஒட்டி மொத்தமாய்ப் பற்ற வைத்து (பற்ற வைத்தல் = welding) உருளையை உருவாக்குவோம். இனி அடுத்து அறிய வேண்டியது, உருளையின் கொள்ளளவும், பரப்புமாகும்.

இப்பொழுது,

உருளையின் கொள்ளளவு =V= (pi)*(r)^2*(L) = 2*(pi)*(r)^3, (ஏனென்றால், பொதுவாக தொதுதாவியில் - CSTR ல் L=2r) அடுத்து, உறவாட்டமாய்ப் பார்த்து, சிறியதாய் இருக்கும் முடிப் பரப்புகளை ஒதுக்கிச் சுவர்ப்பரப்பை மட்டும் கருதினால், (இது தான் ஆறாவது ஆயவூன்று)

உருளையின் பரப்பளவு = (pi)*(2r)*(L) = (pi)*(2r)*(2r)

உருட்டுவதற்கு முன் இருந்த செவ்வகத்தட்டின் திண்ணம் t என்றும் அதன் அடர்த்தி rho என்றும் கொண்டால், உருளையின் மதுகை = செவ்வகத் தகட்டின் மதுகை = M = (pi)*(2r)*(2r)*t*(rho).

எனவே, V/M = r/(2*t*Rho)

இருவேறு திணைக்களக் கொண்மைகளை ஒப்பிடும் போது கலன்களின் மாழை அடர்த்தியும் ஒரே போலத்தான் இருக்க முடியும். அதே போல இரண்டு திணைக்களங்களிலும் கலச் சூழமைவுகள் (vessel environments) குறிப்பாக அழுத்தம், வெம்மை போன்றவை, ஒன்று போலத்தான் இருக்க வேண்டும். இந்த நிலையில் இரு வேறு நிலைகளிலும் திண்ணம் ஒன்று போலத்தான் இருக்க முடியும். (முன்னால் சொன்ன மூன்றாம் ஆயவூன்றின் ஒரு பகுதி)

இந்த நிலையில் புதிய திணைக்களத்திற்கும், பழைய திணைக்களத்திற்கும் ஒப்பிட்டால்,

2/M2) / (V1/M1) = r2/r1
தவிர, V = 2*(pi)*(r)^3 = ஃ r = [V/(pi*2)]^(1/3)
ஃ r2/r1 = (V2/V1)^(1/3)
மற்றும் (V2/V1)*(r1/r2) = (M2/M1)
மறு சொற்களில் சொன்னால்,
(M2/M1) = (V2/V1)^(2/3)

இப்பொழுது ஒரு உருளையின் விலை அதன் மதுகையைப் பொறுத்தது. மதுகைக் கூடக்கூட விலை கூடும் அல்லவா? எனவே,
ஃ (C2/C1) = (V2/V1)^(2/3) (இதில் C2 என்பது புதிய திணைக்களத்தின் கொளுதகை; C1 என்பது பழைய திணைக்களத்தின் கொளுதகை.)

இந்தச் சமன்பாட்டில் உள்ளார்ந்த ஆயவூன்றுகள்

1. திணைக்களம் ஏந்தங்களால் ஆனது; மாகனைகளே கிடையாது; பாய்மங்கள் புவியீர்ப்பினாலேயே நகருகின்றன.
2. இரண்டு திணைக்களங்களுக்கும் இருத்தல் நேரம் ஒன்றுதான்
3. மொத்தத் திணைக்களமும் ஒரு CST வினைக் கலனாய் உருவகிக்கப் படுகிறது
4. இரு திணைக்களங்களிலும் ஒரே சூழமைவு இருக்கிறது; எனவே ஒரேவிதமான மாழையிலேயே, ஒரே திண்ணத்திலேயே திணைக்களங்கள் அமைகின்றன.
5. உருளையின் விட்டமும், நீர்ம உயரமும் சமம்.
6. உருளை வினைக்கலத்தின் சுவர்ப் பரப்பைப் பார்க்க, மூடிப்பரப்புகளை ஒதுக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

16 comments:

Anonymous said...

ஐய்யா இலங்கையில் கொள்ளளவு எனும் சொல்தான் "capacity" குறிக்க பயன்படுகிறது. நீங்கள் கொண்மை என்று குறிப்பிட்டுள்ளீர்கள் காரணம் என்ன??

Anonymous said...

மேலும் "costs" நீங்கள் "கொளுதகைகள்" என குறிப்பிட்டுள்ளீர்கள், "செலவுகள்" என்பது பிழையா??

இது மாதிரியே:

புயவு = வலு
ஆயவூன்றுகள் = அனுமானம்
புழம்புகள் = குழாய்


"புயவு" என்ற சொல் "muscle" க்கு சாலப்பொருந்துவதாக இல்லையா?

எண்ணையில் தொழில்ப்படும் "மின்னோட்டிகள்" (motors) உள்ளனவே??

"crude oil" என்பதற்கு "கனியநெய்" என்பது சரியாகதா??

வாயு தானே "Gas", வளி என்பது "Air" குறிக்காதா??

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவரே!

கொள்ளளவு என்பதையும் capacity க்குச் சமமாய்ப் பயன்படுத்தியிருக்கிறேனே! கொண்மையும் கொள்ளளவும் ஒருபொருட் சொற்கள் தாம். இது சரி, அது சரியில்லை என்று கொள்ளக் கூடாது. கொள்ளளவு கூட்டுச் சொல்; கொண்மை தனிச்சொல். அவ்வளவு தான்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

விளக்கியதற்கு நன்றி ஐய்யா :) இது நான் சரியில்லை என்று கொள்ளவில்லை. நான் சரியாக வாசிக்கவில்லை.
வேறு சொற்கள் என நினைத்தேன்.

சிவகுமார் said...

எவ்வளவு ஆழமான நுட்பியல் கட்டுரைகளையும் தமிழில் எழுத முடியும் என்பதை தங்களின் இக்கட்டுரை நிரூபிக்கிறது. நல்ல கட்டுரை. நன்றி ஐயா.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

"இது கொள்ளும் என்று நினைக்கிறீர்களா?" என்ற வழக்காற்றையும், "கட்டுபடி ஆகுமா, ஆகாதா?" என்ற பேச்சையும் எண்ணிப் பாருங்கள். "கட்டுபடி" என்ற சொல்லின் போக்கை ஒட்டியே கொள்ளும் தகை என்ற எண்ணத்தில் கொளுதகை என்ற கூட்டுச் சொல் எழுந்தது. cost என்பதற்குக் கொளுதகை என்ற சொல்லைக் கொண்டது மிகுந்த யோசனைக்குப் பின் தான். செலவு என்பது expenditure / expense என்பதற்கு இணையாய் அமையும். [விலை, பகர்ச்சி = price.]

வலு என்பது strong, strength என்பதோடு தொடர்பு கொண்டது. power என்று சொல்ல நெடுநாள் பலரும் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். மிகுந்த முயற்சிக்குப் பின் தான் இந்தப் புயவு என்ற சொல் எழுந்தது.

அனுமானம் என்பது guess. "இது நடக்குமா, நடக்காதா? உங்கள் அனுமானம் என்ன?" என்ற உரையாட்டை எண்ணிப் பாருங்கள். assumptions என்பது சற்று வேறுபட்டது. Not all guesses need be assumptions. இரண்டிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

தமிழில் எழுதுவதற்கும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உள்ள சரவலே (சிரமமே) இந்த நுண்ணிய வேறுபாட்டை நாம் கவனிக்க மறுப்பது தான். நம்மில் பலரும், கிட்டத் தட்ட அமையும் சொற்களைப் பெய்து கட்டுரைகளை ஒப்பேற்றி விடுகிறோம்.

மொழிநடையில் துல்லியம் வரவேண்டும் என்று விடாது நான் சொல்லி வருகிறேன். ஆங்கிலத்தில் இவ்வளவையும் துல்லியமாய்க் கையாளுவதால் தான் அங்கே நடை சிறக்கிறது; முடிவில் கதைக்கும், கவிதைக்கும், அரட்டைக்குமே தமிழ் சரிப்படும் என்று ஒரு சிலர் சொல்லத் தலைப்படுவது இந்தத் துல்லியக் குறைச்சலால் தான். அதன் விளைவால் தான் வெறும் வெட்டிப் பேச்சிற்கு மட்டுமே பலரும் தமிழைக் கையாளுகிறார்கள். உருப்படியான பேச்சென்றால் ஆங்கிலத்திற்குத் தாவி விடுகிறார்கள். குறை தமிழிடம் இல்லை; நம்மிடம் இருக்கிறது.

ஆய்வூன்று என்ற சொல்லையும் நம்முடைய நாகரிகத்துக்குள்ளே இருந்து காணவேண்டுமென்றே ஆயக்காலின் ஆழத்தைக் கொண்டு வந்தேன். கூடிய மட்டும் சொற்கள் நம்முடைய பழக்க வழக்கங்களில் இருந்தே எழ வேண்டும். அப்பொழுது தான் அவை நிலைக்கும்.

புழம்பு, தூம்பு, குழாய் (=குழல்) எல்லாமே துளையுள்ள பொருள்களைக் குறிக்கும். ஓர் ஒழுங்கு வரவேண்டும் என்பதற்காக இவற்றை ஒரு சில ஆங்கிலப் புழக்கங்களுக்கு இணையாகப் பாவிக்கிறேன்.

மொழியியல் வழி, அருகாமையில் உள்ள பொருள்களைச் சொல்லுகிறேன்.

புழம்பு ~ புடலங்காய்
தூம்பு ~ தும்பிக்கை
குழாய் ~ புல்லாங் குழல்

புழம்பு என்பதை pipe என்ற பெயருக்கும், தூம்பு என்பதை tube என்ற பெயருக்கும், குழாய் என்பதை hose என்ற பெயருக்குமாய்ப் பயன்படுத்தி வருகிறேன்.

புயம் என்ற சொல் தோள் என்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. வுகர ஈறு இதுவரை பயன்பட்டதில்லை. muscle என்பதற்கு வழக்குச் சொல் தசை என்பதே.

மின்னோட்டிகள் என்றும் மின்னோடிகள் என்றும் புழக்கம் உண்டு. மின்னோடிகள் என்ற புழக்கம் ஒரு 40 ஆண்டுகாலம் உள்ளது.

இதே போல generator - யை மின்னாக்கிகள் என்பார்கள்.

crude oil என்பதை கரட்டுநெய் என்று சொல்லியிருக்கிறேன். கரடாய் இருப்பது crude ஆய் இருப்பது தான். "என்னது கரட்டு முரட்டென்று இவன் இருக்கிறான்?" இங்கே crude oil என்ற சொல்லை எழுதாமால் petroleum என்பதைச் சொல்லும் வகையில் பாறைநெய் என்று சொன்னேன்.

வாயு என்பது தமிழ்மூலம் கொண்ட இருபிறப்பிச் சொல். அந்தச் சொல்லின் முடிவில் யுகரம் வரும் காரணத்தால் கூட்டுச் சொற்களில் பல இடங்களில் பலுக்க எளிமை வராது நிற்கிறது.

வளி என்பது ஒருகாலத்தில் air யைக் குறித்திருக்கலாம். இப்பொழுது விதப்பாக்கி அதை gas ற்கு நிகராகப் பயன்படுத்தலாம். (காற்று என்பதையே air என்பதற்குப் பொதுமையாகப் பயன்படுத்துகிறோம். அதே பொழுது காற்றின் அடிச்சொல்லான கால் என்பதில் இருந்து இன்னொரு சொல்லாகக் கிளைத்துக் காலகம் = nitrogen என்ற பயன்பாடும் உண்டு.)

வளி என்பது gas என்ற பொருளில் தமிழ்நாட்டில் வெளிவந்த அறிவியல் கட்டுரைகள் சிலவற்றில் 40 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பட்டு வந்திருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

ஐயா எனக்கு இந்த தமிழ்நாட்டு வழக்குகள் வெகுவாக தெரியாது. விளக்கியதற்கு நன்றி. மின்னோட்டிகள், வளி போன்ற சொற்களை இன்றுதான் முதல்முதல் கேள்விப்படுகிறேன். நீங்கள் சொன்ன அனேக பதில்கள் எனக்கு பூரன திருப்தியை அளித்தது நன்றி, (மின்னோட்டிகள், வளி போன்றவற்றை தவிர) இங்கே காற்று "wind" என்பதை குறிக்காதா??. எனக்கு பாடசாலையில் விஞ்ஞானபாடத்தில் இப்படி சொல்லித்தந்ததை வைத்துதான் கேட்கிறேன்.

மின்னோட்டிகளை பொருத்த வகையில், எண்ணை முலமும் தொழில்பட கூடிய ஒன்றுக்கு "மின்" என்ற முன்னொட்டை பயன்படுத்தலாமா?

செல்வராஜ் (R.Selvaraj) said...

ஐயா, மீண்டும் அருமையானதொரு நுட்பப் பதிவு. நன்றி. Crude பற்றிச் சில நாட்கள் முன்பு பின்னூட்டில் கேட்டிருந்தேன். இங்கே கரடு (கரட்டு) என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது பொருத்தமாய் இருக்கிறது. Crude Petroleum = கரட்டுப்பாறைநெய்.

இன்னும் சில சம்பந்தப்பட்ட கருத்துக்கள்/கேள்விகள். Product=புதுக்கு என்று குறித்திருக்கிறீர்கள். முன்பு Production=விளைச்சல் என்று நீங்கள் குறித்திருந்ததை ஒத்து விளைபொருள் என்று கொள்ளலாமா என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். Raw Material --> Desired Product என்ற பலுக்கலில் 'இயல் பொருள்-->விழைபொருள் என்று 'விழைபொருள்' என்றும் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இது குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துளதா?

Stirred என்பதற்குத் துருவிய என்பதை விட 'கிளறிய' சரியாக வருமா? நீங்களே முன்பு அப்படிப் பாவித்திருந்த நினைவிருக்கிறது. அதோடு துருவுதல் என்பது scrapingற்குப் பொருந்தும் என்று நினைக்கிறேன். தேங்காயைத் துருவித் தொட்டியில் இருந்து எடுப்போமே?

Anonymous said...

"product" க்கு "உற்பத்தி" சரியில்லையா??

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

உங்கள் முன்னிகைக்கு நன்றி.

product என்பதற்கு விளைப்பு என்றும், புதுக்கு என்றும் இரு சொற்களையும் புழங்கிக் கொண்டிருக்கிறேன்.

விளைப்பு என்பது வேளாண்மையில் இருந்து கிளைத்து மானவப் படுத்தலுக்கு (manufacture) வந்தது. புதுக்கு என்பது நாட்டு மாழைத் தொழில் இடங்களான பட்டறைகளில் இருந்து வந்தது. கொல்லன் பட்டறையில் பழையதைக் கொடுத்து அவன் அடித்தோ, பற்ற வைத்தோ, முலாம் பூசியோ, இன்னும் இதுபோன்ற நாட்டுப்புற முறைகளில், பழையதைப் புதுக்கிக் கொடுப்பதால் வந்தது.

புதுக்கு / புதியது என்பதும் பூத்தல் என்ற வினையோடு தொடர்பு கொண்டவை தாம். பூத்தலும் புதலியலோடு (botony) தொடர்பு கொண்டது தான்.

விளைப்பு, புதுக்கு என்ற இரண்டுமே ஒரு பொருட் சொற்களாய் இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். வட்டி என்ற சொல் இன்றைக்கு interest என்பதற்கு வழங்குகிறது. ஒரு 200, 300 ஆண்டுகளுக்கு முன்வரை பொலிசை, வாசி என்ற சொற்கள் இருந்திருக்கின்றன. அதே போல, பொலுவு, பொலி என்ற சொற்கள் வழக்கிறந்து, இலாபம் என்ற சொல் எழுந்திருக்கிறது. எது நிலைக்கும், எது அழிந்துபடும் என்று சொல்லுகின்ற பக்குவம் நமக்கு இல்லை. நாம் முன்வைக்கும் காலகட்டத்தில் உள்ளோம்.

desired product என்பதற்கு விழை பொருள் என்று சொல்லுவதில் விழை என்ற முதற்சொல் சரி; ஆனால், அடுத்த சொல்லான பொருள் என்று வரும் போது விதப்பாய் உணர்த்த மாட்டேன் என்கிறது. ஒருவேளை, விழைப் புதுக்கு என்று சொல்லலாம்; அதே பொழுது, விழை விளைப்பு என்று சொன்னால் ஒலிக்கச் சரவலாய் இருக்கிறது. desired good என்னும் போது விழை பொருள் என்பது சரியாக இருக்கிறது. நான் மீண்டும் மின்சாரம் என்ற சொல்லிற்குப் போகிறேன். அதில் ஒளி என்ற பொருள் கொஞ்சம் கொஞ்சமாய் முதல் நினைவுக்கு வராமல், electricity என்ற பொருள் வர எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்? அதுபோலத்தான் ஒவ்வொரு புதுப் புழக்கமும்.

கிளறிய என்பதை agitated என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறேன். பொதுவாக நம்மூர்ச் சமையலில் பிசுக்குமை (viscosity)கூடிய நீர்மங்கள் மற்றும் ஆக்கங்களைத் தான் நாம் கிளறுகிறோம்.

strir என்பது கொஞ்சம் எளிதானது. stirring போது, நீர்ம மட்டம் பரவளைவாக (parabola) மாறி ஒரு குழிவு ஏற்படுகிறது பாருங்கள். துருவுதல் என்பது குழிவு ஏற்படுத்தலே. தேங்காயைத் துருவும் போதும், குழிந்து தோண்டுகிரோம். நம்முடைய கத்தியின் வள்ளேடு (வள்ளும் ஏடு வள்ளேடு; blade; வள்ளும் கருவி வாள்; வள்ளுதல் பிரித்தல், வெட்டுதல்) தேங்காயைத் தோண்டத்தான் செய்கிறது.

துருவுதலைச் செய்யும் கருவி துருவணை = tubine; ஒரு தூம்பில் போகும் நீர்மம், வேகம் கூடும் போது, சுழித்துக், குழித்து ரெயனால்சு எண் 2100 க்கு மேல் போகும் போது ஆகும் நிலை துருவளைப்பு = turbulence. துருவளைப் பாய்வு = turbulent flow; இழைமப் பாய்வு = laminar flow.

சுரண்டி எடுத்தல் = scrapping. scrap என்னும் போது துருவுவது ஒரு செயல்; அது போக இன்னும் வெவ்வேறு செயல்கள் நடக்கலாம்; பொதுவாக அதைச் சுரண்டி எடுத்தல் என்றே சொல்லுகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

உற்பத்தியும் ஓர் இருபிறப்பிச் சொல். உருத்தல் என்னும் வினை தோன்றுதலைக் குறிக்கும். ஏற்கனவே நான் சொன்ன விளைதல், பூத்தல் என்ற சொற்களும் தோன்றுதலைக் குறிக்கும் வினைச்சொற்கள் தான்.

மாறுபாடு புழக்கத்தில் தான்; உருத்தல் என்பது to take shape என்ற பொருளையும் கூடவே சுட்டிக் காட்டிவிடும். காட்டாக உருத்தலின் தொடர்பான உருவாதல், உருப்படுதல் போன்றவற்றையும் பாருங்கள். (உருப் பட்டு வந்தது தான் உருப்படி = item; காட்டு: பாடியதில் எத்தனை உருப்படி தேறும்?) உருப்படுதலில் கிளைத்த உருப்படி என்ற
சொல் தான் வடமொழிப் பலுக்கில் ஈற்றை அழுத்திப் பின் டகரம் தகரமாய் மாறிக் கிளைக்கும். டகர, ணகர, ளகரங்கள் தமிழிய மொழிகளில் இருந்து வடக்கே போகும் போது இந்தத் திரிவு பெரும்பாலும் நடக்கும். உருப்படி>உருப்பட்டி>உருப்பத்தி>உற்பத்தி. இது போன்ற ஈறு இங்கே ஏற்படுவது, உறுதியாக வடநாட்டுப் பழக்கத்தைக் காட்டுகிறது.

இரண்டு காரணங்களுக்காக உற்பத்தி என்ற சொல்லைத் தவிர்க்கிறேன்.

1. இந்தச் சொல் வடிவம் உள்ள பொருட்களை விதப்பாகக் குறிக்கிறது. புதுக்கு, விளைப்பு என்பவை இன்னும் பொதுமை வாய்ந்தவை; உரு என்ற கருத்தீடு நாம் product பற்றிச் சொல்லும் போது சட்டென்று தோன்றாது இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் உருப்படி என்பதன் பொருள் இன்றும் நமக்கு வேண்டும். அதற்கு product என்ற விதப்பைக் கொடுத்தால் அப்புறம் பொதுமைப் பொருள் விலகிப் போகும்.

2. இருபிறப்பிச் சொற்களைக் கூடியமட்டும் நான் தவிர்ப்பேன். ஏனென்றால் அவை மூலம் பற்றிய புரிதலில் குழப்பம் எழுப்பி விடுகின்றன. (சொல்லின் வேர் இங்கிருந்தது என்று நாம் நிலை நிறுத்துவதற்குள் பெரிய வேலையாய்ப் போய்விடுகிறது. என்ன பண்ணுறதுங்க? நாம் நிறைய இழந்திருக்கிறோம்.) வேறு வழி அப்போது தெரியவில்லை என்றால் மட்டுமே இருபிறப்பியைப் புழங்க முற்படுவேன்.

தவிர விளைப்பு, புதுக்கு போன்றவை சுருக்கமாகச் சொல்லவந்த கருத்தைச் சொல்லி விடுகின்றன.

அன்புடன்,
இராம.கி.

செல்வராஜ் (R.Selvaraj) said...

அய்யா, இந்த இடுகையைச் சார்ந்த ஒரு சொல் - Unit - என்பதற்குச் சரியான சொல்லாக எதைப் புழங்கலாம் என்று நேரம் கிடைக்கையில் சொல்ல முடியுமா? இது பல பொருட்களில் வழக்கில் இருந்தாலும், Unit Operations என்னும் பொருளில் எப்படிச் சொல்லுவது என்று (எனது வேதிப்பொறியியல் கட்டுரைகளுக்காகத்) தேடிக் கொண்டிருக்கிறேன்.

எனது தற்போதைய எண்ணம் - 'ஒருக்கம்' என்பது. ஒருக்கச்செலுத்தங்கள்=unit operations - இது சரியா? சரியான பொருளைச் சொல்லுகிறதா? இல்லை, துல்லியமாய் வேறு பரிந்துரைகள் உங்களிடம் உள்ளதா?

நன்றி.

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

unit பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். அது அளவு என்ற முறையில், அலகு என்ற சொல்லால் ஆளப் பட்டிருக்கிறது. how many units make one foot? எத்தனை அலகுகளால் ஓர் அடி ஆனது? 12 அணுங்குழைகளால் (அங்குலம் = வடமொழித் தெரிவு).

அதே பொழுது நீங்கள் கேட்டிருப்பதற்குப் பொதுவாக, ஐ என்றும் ஈறு போட்டுச் செல்லுவது சரியாக இருக்கும். காட்டாக, ஒற்றை, இரட்டை, கை (= ஐந்து), பத்தை. ஆனால் ஒற்றை என்பதை இந்தக் காலத்தில் தனியான (alone, single), ஒற்றைப்படை (odd) ஆகிய பொருள்களில் பட்டுமே பழகிவருகிறோம்.

அதன் காரணமாய், ஒரும, இரும, எண்ம, பதினறும என்ற வரிசையில் முதலில் வரும் "ஒரும" என்ற சொல்லையே இங்கு பயனாக்கலாம். அதே போலத் தான் சொல்லறிஞர் ப.அருளியின் எடுவிப்பில் (எடுவிப்பு - edition), தஞ்சைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட அருங்கலைச் சொல் அகரமுத்லி (Dictionary of Technical terms)யில் ஆளப்படுகிறது,

அதன்படி unit operations = ஒரும இயக்கங்கள், unit processes = ஒருமச் செலுத்தங்கள் என்று ஆகும்.

ஒருக்கம் என்பது ஒருக்குதல் என்ற பிற வினையில் (ஒருங்குதல் தன்வினை) எழுந்த பெயர்ச்சொல். ஒருங்கில்லாமல் சிதறிக் கிடப்பதை ஒன்று சேர்ப்பது என்ற பொருள் வரும் பொதுவாக to make uniform = to unify என்ற பொருளைப் பேச்சு வழக்கில் தெரியப்படுத்துவோம். unicode என்பதை ஒருங்குறி என்று சொல்லுகிறோமே, அது போல. இந்த ஒருக்குதலுக்கும் இணையாய் ஒன்றித்தல் என்ற சொல்லும் உண்டு. ஒன்றியம் = union என்று சொல்லுவது அப்படி எழுந்தது.

இந்தச் சொற்கள் எல்லாம் மிகக் குறைந்த அளவே விலகி, விதப்புப் (special) பொருள்களைக் கொடுக்கக் கூடியவை.

அன்றாட வழக்கிற்குப் பெரிதும் விலகியும் நாம் சொற்கள் படைக்கக் கூடாது. துல்லியமும், ஏற்கனவே பழகிப் போன புழக்கமும் ஒன்றிற்கொன்று முரணாகிப் பல போது ஆகின்றன. கூடியமட்டும் மதிப்பு நயனீட்டால் (value judegement) சொற்களைத் தெரிவு செய்கிறோம்.

மேலே நான் சொன்ன அகரமுதலி அறிவியலார் / நுட்பியலார் பலரும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பொத்தகம். கொஞ்சம் கனமானது.

நான் அருளியிடம் இருந்து பல இடங்களில் மாறுபடுவேன். இருந்தாலும் அவருடைய பரிந்துரைகளை ஒரு முறை பார்ப்பது நல்லது.

அன்புடன்,
இராம.கி.

செல்வராஜ் (R.Selvaraj) said...

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா.

>>>>
மேலே நான் சொன்ன அகரமுதலி அறிவியலார் / நுட்பியலார் பலரும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு பொத்தகம். கொஞ்சம் கனமானது.

நான் அருளியிடம் இருந்து பல இடங்களில் மாறுபடுவேன். இருந்தாலும் அவருடைய பரிந்துரைகளை ஒரு முறை பார்ப்பது நல்லது
>>>>

நீங்கள் சொன்ன அருளியின் அகரமுதலியைச் சென்றமுறை ஊர் வந்தபோதே கனம்பார்க்காமல் வாங்கிவந்துவிட்டேன். பலமுறை அதனைப் பார்க்கிறேன். நுட்பியல் சொற்களுக்கு அது பெரிதும் பயனுள்ளதாகத் தான் இருக்கிறது.

Unit என்பதற்கு ஒருமம் ஒக்கம் என்று அவரின் பரிந்துரைகளை இப்போது பார்க்கிறேன். முன்பே கவனிக்காது விட்டுவிட்டேனா இல்லை இதை விடப் பொருத்தமாக ஏதேனும் தேடினேனா என்பது நினைவில் இல்லை. மன்னிக்கவும்.

சில சமயங்களில் நீங்கள் சொல்வது போல் அதில் இருந்து வேறுபாடு தோன்றுகிறது. உங்கள் பரிந்துரைகளும் சற்று வேறுபட்டிருப்பதைப் பார்க்கிறேன். காட்டாக, distillation என்பதற்கு, 'காய்ச்சிவடித்தல்' என்று அவர் சொன்னதை விட, 'துளித்தெடுத்தல்' என்று நீங்கள் குறிப்பது பொருத்தமாகத் தோன்றுகிறது.

ஒருமச் செலுத்தங்கள் என்றே நான் இனிப் பாவிக்கிறேன். ஆனால், 'யூனிட்' பற்றி இன்னொன்று. திருப்பூர் பக்கமாகப் போனீர்களானால், 'எத்தன யூனிட்டப்பா போட்டிருக்கிற?" என்பது போன்ற புழக்கம் உண்டு. எத்தனை இயந்திரங்கள் (மிசின்) வைத்துத் தொழில் செய்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் சாதாரணமாகப் புழக்கம் உண்டு. விசைத்தறிகள் குறித்தும் கூட இப்படிப் புழங்குவர் என்று நினைவு.
இந்த அர்த்தத்திலும் ஒருமம் என்பதைப் பாவிக்கலாமா என்று தெரியவில்லை. பிறமொழிகளில் இருந்து கடன்வாங்கிய சொல்லாக யூனிட்டையும் அப்படியே எடுத்துக் கொள்ள இது ஒரு காரணமாக அமையுமா என்றும் கேள்வி எழுகிறது. இக்கேள்வியில் கருத்தில் குறையுளதெனில் பொருத்துக் கொள்ளுங்கள். நன்றி.

செல்வராஜ் (R.Selvaraj) said...

ம்ம்ம்... பொறுத்துக் கொள்ளுங்கள், இந்தப் பிழையையும் சேர்த்து. :-)

இராம.கி said...

அன்பிற்குரிய செல்வராஜ்,

விசைத்தறிகளை units என்று சொல்லுவது பற்றிக் கேட்டிருந்தீர்கள். அவற்றை அலகுகள் என்றே தமிழில் சொல்ல முடியும். இன்ன பொருள் என்று அடையாளம் சொல்ல விழையாமல், பொதுப்படையாகச் சொல்லும் போது, எண்ணக் கூடியதாய் இருந்தால், அலகுகள் என்பது பயனுறும்.

"ஒரு உருவாய்க்கு 100 அலகுகள்;அந்த அலகு காசு அல்லது பைசா என்று சொல்லப் படும்.

அதே போல " ஒரு கட்டிடத்தில் எத்தனை வாழும் அலகுகள் (living units) இருக்கின்றன?" என்று கேட்கலாம்.

இப்படி எண்ணுமை வரும் இடமெல்லாம் அலகு என்று சொல்லைப் பயன்படுத்தலாம். விதப்பாகக் குறிக்க வேண்டுமானால், தறிகள், நாணயங்கள், தளவீடுகள் என்று குறிக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

(அவக்கரத்தில் எத்தனையோ முறை என் மடல்களில் தட்டச்சுப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. அதனால் உங்களுடையதைப் பொறுத்துக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.