Friday, March 03, 2006

பொக்கீடு

budget என்பதற்கு இந்திய நாட்டில் எப்பொழுதுமே ஒரு பெரிய எதிர்பார்ப்பு உண்டு; மற்ற நாடுகளில் இவ்வளவு உண்டா என்று தெரியவில்லை; எனக்குத் தெரிந்து நான் சில காலம் வாழ்ந்திருந்த நெதர்லாந்திலும், கனடாவிலும் அவ்வளவு முகன்மை கொடுப்பதில்லை. (சவுதியில் அரசுக்கு உள்ளுக்குள்ளேயே இது அடங்கிவிடும். செய்தித்தாள்களில் மேலோட்டமாய்த் தான் வெளிவரும்.) பாராளுமன்ற நடைமுறைகளில் இந்தியாவின் முன்னோடி என்று நாம் சொல்லிக் கொள்ளும் ஆங்கிலேயப் பாராளுமன்றில் கூட இத்துணை ஆரவாரம் இருக்குமா என்று தெரியவில்லை.

budget என்பது இந்தியாவில் ஒரு பெரிய கவனிப்பு; அலசல்; ஆழ்ந்த ஆராய்ச்சி. ஆனால் இவை எல்லாம் ஆங்கில நாளிதழ்களில் தான்; ஆங்கில நாளிதழ்கள் ஆழ்ந்து பேசுகின்ற அளவுக்கு தமிழ் நாளிதழ்கள் budget பற்றிப் பேசுவதில்லை. இன்னும் சொன்னால், budget என்ற சொல்லைக் கூடத் தவறான முறையில் நிதிநிலை அறிக்கை (financial statement) என்று நம்மூர்த் தமிழ் நாளிதழ்கள் மொழி பெயர்க்கின்றன.

உண்மையில் budget என்பது வெறும் நிதிநிலை அறிக்கை அல்ல. அது அதற்கும் மேற்பட்டது. இந்த ஆண்டு இந்த இனத்தில் இவ்வளவு செலவழித்தோம்; இந்த வகையில் இவ்வளவு வருமானம் இருந்தது என்பது வரவு செலவுக் கணக்கு. வரவு செலவு அறிக்கை என்பது ஒரு நிறுவனத்தில் பொலுவு-நட்ட அறிக்கையைப் (profit and loss statement) போன்றது. பொலுவு-நட்டம் போக, நம் அரசுப் பணங்கள் எவ்வளவு எந்தவகையில் முதலிடப் பெற்று இருக்கின்றன? எவ்வளவு கடன் இருக்கிறது? எங்கெங்கு கடன் வாங்கியிருக்கிறோம்? நாட்டின் நிதிகள் எங்கு இருக்கின்றன என்றும் சேர்த்துச் சொல்லுவது நிதிநிலை அறிக்கை (financial statement). இது ஒரு நிறுவனத்தின் ஐந்தொகைச் சிட்டையைப் (balance sheet) போன்றது.

budget என்பது இதற்கும் மேலானது. இந்த budget-ல் ஒரு நாட்டின் நிதி அமைச்சர் நடந்து முடிந்த கணக்கை மட்டும் சொல்லாமல், வரும் ஆண்டில் தன் துறைக் கணிப்பில் "எந்த இனங்களில் எவ்வளவு வருமானம் நாட்டிற்கு வரும்? எந்த வகைகளில் எவ்வளவு செலவழிக்கப் போகிறோம்? இந்த வரவு செலவில் பற்றாக் குறை இருந்தால் மேலும் வரவைக் கொண்டுவர என்னென்ன செய்யப் போகிறோம்" என்று விவரமாகச் சொல்லுகிறார். இதில் முகன்மையானது, "எந்த வகையில் செலவு செய்யப் போகிறோம்?" என்பதைக் கோடிட்டு வகுத்துக் காட்டுவதே.

சரி, budget என்பதை ஆங்கிலத்திலேயே சொல்லிக் கொண்டிருக்காமல், எப்படித் தமிழில் செல்லுவது?

"தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள்" என்ற தலைப்பில் ஆகசுடு 1985 வெளிவந்த முதற் பொத்தகத்தில் பக்கம் 121-ல் "கொப்புளம்" பற்றிய சொல்லை விவரித்துச் சொல்லும் போது சொல்லறிஞர் அருளி சொல்லுகிறார்.
------------------------------------------------------------
பொக்கு>பக்கு = பை
பொக்கு+அணம் = பொக்கணம் = பை
பொக்கு> (French) Bouge = leather bag
Bouge +Ette>bougette = small leather bag
இட்டு>இட்டி = சிறுமை, இட்டிது = சிறிது "அகாறளவு இட்டிது" - (குறள் 478:11)
இட்டி>Ette = small
>O>F: Bouge = a small leather bag or wallet; a skin bottle
Bouget = A representation of an ancient water vessel (earlier spelling of budget)
(F) Bougette>(English)Budget = A pouch, bag, wallet, usually leather
>Budget = to put in a budget or wallet, to store-up
>Budgetless = without a budget, presenting no finacial statement
---------------------------------------

ஆக budget-ற்குத் தொடர்பான சொற்கள் எல்லாம் பொக்கணம், பொட்டணம், பொட்டலம், பொதி போன்றவையே. budget என்பது நம் பண்பாட்டிலும் உள்ள ஒரு நடைமுறை தான். நம் ஊர்களில் ஏதாவது ஒரு கோயிலுக்கு நேர்ந்து கொண்டு தாய்மார்கள் முடிந்து வைப்பார்கள்; "முடிந்து வைத்ததை அந்த உண்டியலில் போடு" என்று சொல்லுவார்கள்; ஒரு குறிப்பிட்ட செலவுக்கு என்று எடுத்து வைத்து அதைத் தனியே பொட்டணம் கட்டி வைப்பார்கள்; மண்பானையில் பொதிந்து வைப்பார்கள்; பொதுவாக, பொக்கணம் = முடிச்சு; பொட்டணம் = சிறுமூட்டை; பொட்டலம் = சிறுமூட்டை; பொதி = மூட்டை என்ற சொற்கள் நாட்டுப்புறக் குடும்பப் பொருளாதாரத்தில் மிகவும் தலைமையானவை. இந்தப் பெயர்ச்சொற்களின் வினைமூலம் என்ன?

பொக்குதல், பொக்கித்தல், பொக்கிடுதல்
பொட்டுதல், பொட்டித்தல், பொட்டிடுதல்
பொத்துதல், பொத்தித்தல், பொத்திடுதல்
பொதிதல், பொதித்தல், பொதியிடுதல்

இவை எல்லாமே உள்ளடங்குதலை, முடிச்சுப் போட்டு ஒதுக்கிவைத்தலை, பொதியிட்டு வைத்தலைக் குறிக்கும் சொற்களே. பொட்டுதல், பொத்துதல் என்பவை நீட்சியாய்ப் பார்க்கும் போது இன்னும் வேறு சில பொருட்களை உணர்த்துவதால், அவற்றை விலக்கி, இங்கு பொக்கிடுதல் என்ற வினையையே கையாள முற்படுகிறேன். அதன் மூலம் இந்தச் சொல்லுக்குப் புதிய ஆட்சி கிடைக்கும். (சொல் பழையது தான்; புதிய ஆட்சியில் பொருள்நீட்சி கொடுக்க முற்படுகிறோம். பொக்கிடுதல் = முடிந்து தனியே வைத்தல்)

to budget = பொக்கிடுதல்
budget(n) = பொக்கீடு
budget speech = பொக்கீட்டுரை
They have allocated Rs.200 Cr. towards education in this year's budget = இந்தாண்டுப் பொக்கீட்டில், ரூ.200 கோடியைக் கல்விக்கென ஒதுக்கியிருக்கிறார்கள்.

என்ற சொற்களை பரிந்துரை செய்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

Thangamani said...

புதிய சொற்களை தெரிந்து கொண்டேன். பயன்படுத்த முயலுகிறேன். நன்றி!

Anonymous said...

இலங்கையில் "பாதிடு" அல்லது "வரவு செலவுத்திட்டம்" எனும் சொற்கள் பயன்பாட்டில் உள்ளன, இதில் ஏதேனும் தவறுகள் உண்டா??

மேலும் நீங்கள் "பாராளுமன்றம்" எனும் சொல்லை பயன்படுத்தினீர்கள். "நாடாளுமன்றம்" என்பதை விடயிதே சரியானது என்பதாக என்கருத்து எது சரியா?? "பார்" என்பது நாட்டை குறிக்கும் ஒரு சொல்லாகும்தானே??

Anonymous said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

பாதீடு என்பது பகுத்திடுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து எழுந்த பெயர்ச் சொல். பகுத்து ஓம்புதல் என்ற சொல்லாட்சி கூட உண்டு தான். நம்மிடும் இருக்கும் பொருளைப் பகுத்து வைத்தல் என்று சொல்லும் போது அங்கே பங்கு வைத்தல் என்ற எண்ணம் வந்து விடுகிறது.

அப்படி ஒரு பொதுமைப் பொருளில் பயன்படுத்தக் கூடியதை budget என்பதற்கு விதப்பாகப் பயன்படுத்தத் தயங்கியே நான் பொக்கிடுதல் என்ற சொல்லைப் பரிந்துரைத்தேன். பொத்துதல், பொதியிடுதல் என்ற சொற்களையும் இதே காரணம் பற்றியே தவிர்த்தேன்.

பாராளுமன்றம் என்ற சொல்லிற்குத் தமிழ்நாட்டில் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. பாராளுமன்றம் என்ற சொல்லில் பார் என்பது உலகையே குறிக்கிறது. இது என்ன பாரையா ஆளுகிறது? நாட்டைத்தானே ஆளுகிறது? என்று சொல்லி நாடாளுமன்றம் என்ற சொல்லைப் பரிந்துரைத்தவர் மூதறிஞர் இராசாசி. இரண்டுவகையான புழக்கமும் இங்கு உண்டு. நான் பாராளுமன்றம் என்ற சொல்லைப் பயன்படுத்தியது அதன் பலருக்கும் தெரிந்தது என்பதால் என்றே கொள்க.

சொற்பிறப்பின் படி பார்த்தால் இரண்டு சொற்களுமே சரியான ஆக்கங்கள் இல்லை. பரல்மன்றம் என்பதே சரியாக இருக்கும். பரலுதல் = பேசுதல்; பரைதல் என்ற இன்னொரு வினையும் பேசுதலைக் குறிக்கும். இன்றைக்கு மலையாளத்தில் பெரிதும் புழங்கும் சொல். பிரஞ்சு மொழியில் parle என்பதும் பேசுதலைத் தான் குறிக்கும். மக்களின் படியாளர்கள் (representatives of people) பரலிக் கொள்ளும் இடம் பரல்மன்று.

தமிழிய மொழிகளுக்கும், மேலை மொழிகளுக்கும் இருக்கும் இன்னொரு தொடர்பில் இந்த பரலுதல் என்ற வினைச்சொல்லும் ஒன்று.

இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

ஈழத்தில், பேசுதல் (இதனையும் "கதைத்தல்" என்ற சொல்லால்தான் குறிப்போம்)என்பதற்குப் "பறைதல்" என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இந்த ஒரு சொல்லைவைத்தே என்னை மலையாளியா என்று கேட்டவர்களுமுண்டு.

கொப்பளம் என்று எழுதினாலும் பெரும்பாலும் 'பொக்களம்' என்றே பேச்சுவழக்கிற் பயன்படுத்தப்படுகிறது (என் இடத்தில்) இரண்டும் சரிதானா?

பல சொற்களை அறியத்தந்ததுக்கு நன்றி.

Anonymous said...

பட்ஜெட் என்றில்லாமல் குறைந்தபட்சம் பாதீடு என்றாவது இலங்கைத்தமிழர்கள் பயன்படுத்துகிறார்களே.
அதுவே போதும்.
அவர்களின் இணையச் செய்தியூடகங்களில் இச்சொல் வருவது கவனிக்கத்தக்கது. நாளடைவில் அச்சொல் பழக்கத்துக்கு வந்துவிடும்.

rajendran said...

பொக்காளி அம்மை (சின்னம்மை) என்ற பரவும் நோய் அனைவரும் அறிவர். உடலெங்கும் சிறு நீர்க்கட்டிகளாக தோன்றி சிலநாட்கள் இருந்து குணமாகும்.

அந்தச் சொல்லின் ஊடாக பார்க்கையில் பொக்கிடுதல் மிகச் சரியான சொல்தான்.