Wednesday, March 15, 2006

சமயம்-1

"என்ன இது! இப்படியா ஒருத்த இருப்பாக! இருப்புக் கொள்ளாம! சூடு கண்ட பூனையாட்டாம் அங்கும் இங்குமா அலமறிஞ்சு இருக்கீக.......உக்காருங்கய்யா! சம்மணம் போட்டு உக்காருங்க! தாமரையாட்டம் குத்தவைச்சு உங்களை இருக்கச் சொல்லலையே! சம்மணந்தானே போடச் சொன்னாக! அதுக்கே இவ்வளவு சங்கடப் பட்டா எப்படி? உடற்பயிற்சி, ஓட்டம், நடை எல்லாம் உண்டோ ? இல்லை வெறும் சுகவாசியா? ஓகம் பண்ணுறவுக தான் தாமரை, அல்லின்னு அழகு பார்க்கோணும்! உங்களுக்கு என்னாச்சு!"

"வேறெ ஒண்ணும் இல்லைங்க; தரையிலே இருக்காம, குறிச்சிலேயே உக்கார்ந்து பழகியாச்சா, திடீர்னு சொன்னோன்னெ சரவலா இருக்கு. கொஞ்சம் பொறுங்க! ஆமாம், இது சம்மணமா, சப்பளமா?"

"எல்லாம் ஒண்ணுதாங்க! சப்பணம்னு கூடச் சிலர் சொல்லுவாக. சப்பையா உக்காந்தா சப்பளம்னு தஞ்சாவூர்ப் பக்கமும், சம்மணம்னு திருநெல்வேலிப் பக்கமும் சொல்றதுதான். சம்முன்னு, சமக்க சேர்ந்து உக்காந்தா சம்மணம். சமக்க உக்கார்றதுக்கு விரிக்கிறது தான் சமக்காளம். (புரியாத் தனமா ஜவளி, ஜாமான் ஜவ்வாதுன்னு சொல்றாகல்லே அது மாதிரி ஜமக்காளம்னு சிலபேர் நீட்டி முழக்குறதும் உண்டு. அவுங்கள்லாம் ஆஷ்டுக் குஷ்டி ஆட்கள்.) காலை மடக்கி ஒண்ணு மேலே இன்னோண்ணு போட்டு அட்டணக்கால் இடுறமில்ல? அது கூட ஒருவகையான சப்பணம் தான்."

"சில பேர் சம்மணம் போட்டு உக்கார்ற போது கூனிக் குறுகி அசடு வழிஞ்சு.....அதேயேன் கேக்குறீக? முதுகு வளையாம நெஞ்சு நிமிர்த்தி உக்காரணுமில்லே? சவையிலே வேறெ மாதிரி உக்காந்தா குத்தமாயிடாது? பட்டிக் காட்டான்னு சொல்லமாட்டாக?"

"சவையிலெ நெஞ்சு நிமிர்த்தி உக்கார்ற போது, கல்லுப் போல சில போது சமைஞ்சு போயிடுறோம். என்ன பண்றது? இந்தக் காலு மரத்துப் போகுது; சமைஞ்சு போறதை அமைஞ்சு போறதுன்னும் சொல்றதுதான். அப்படிச் சமைஞ்சு, அமைஞ்சு இருக்கிற இடம் தான், அரசனுக்கு முன்னாடி இருக்குற திருவோலக்க மண்டபம். "சமை"ங்குறது "சவை"ன்னும் ஆகும்"

"என்ன? ஒரு மாதிரிப் பார்க்கிறீக? இதுக்கெல்லாம் தொடக்கம் வெறும் 'உம்ம்ம்ம்ம்' கிற ஒலிதாங்க! 'அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!' -ங்கிற கம்பன் தொடர் படிச்சிருக்கிகள்லே? அதுலே 'உம்' னு வருது பாருங்க அதுக்குப் பொருள்தாங்க இந்த உடன்பாட்டுப் பொருள். இது ஒருத்தர் கொள்ற காதல் மட்டும் இல்லெ; காகுத்தன், பிராட்டி இரண்டு பேருக்குமே நோக்கிக் கொள்றதுலே ஓர் உடன்பாடுன்னு கம்பன் நமக்குப் புரிய வைக்கிறான்."

இப்ப.... ஒருத்தர் ஏதோ ஒரு கருத்தைச் சொல்றார். நாம் அதைக் கேட்டு, "ஊம்"முன்னு மட்டுமே, சொல்லிக்கிட்டு இருக்கோம். மறு விடையே சொல்லலை. அவருக்கு அய்யம் வந்துருது.

"என்னங்க, நீங்க! ஊம் கொட்டிக்கிட்டே இருந்தா எப்படி? ஒத்துக்கிறீங்களா, இல்லையா?"

விளங்காம அவரு கேட்டாலும், ஊம் கொட்டுதல் - னா ஒப்புக் கொள்ளுதல் - னுதான் அருத்தம். 'ஊம்' கிறது ஈழத்தார் வாயிலெ ஓம்னு ஆகும். தமிழகத்தார் வாயிலெ ஆம்னு ஆகும். வட தமிழிய மொழிகளில் "ஹாங்"னு ஆகும். மொத்தத்தில் உம்முதல்னு சொன்னா உடன்படுதல்னு தான் பொருள்,

உம்முதல்ங்கிறது அம்முதல்னும் திரியும். அம்முதல்னா தெலுங்கிலெ "ஒரு பொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்" னு பொருள் கொள்ளும். இந்த அம்முதல்லெ இருந்து வந்தது தான் தமிழில் இருக்கும் சிறப்புச்சொல்லான அங்காடி. தெலுங்குச் சொல் தெரியாமப் போச்சுன்னு வச்சுக்குங்க, அங்காடி எப்படி வந்ததுன்னே நமக்குத் தெரியாமலே போயிருக்கும்.

உடன்பாட்டுப் பொருள் ஒன்று படுதலையும், பொருந்துவதையும், சேர்தலையும், கூடுவதையும், ஏன் ஒட்டுவதையும், ஒடுங்குவதையும் கூடப் படிப் படியாகக் குறிக்கும்.

"என்னடா இது? வகுப்பு எடுக்குறான்னு பார்க்கிறீகளோ? மன்னிச்சுக்குங்க, அண்ணாச்சி! குமார்னு ஒருத்தர் இந்தொனேசியாவிலெ சாகர்த்தாவுக்குப் பக்கத்துலே (காரவாங்னு நினைக்கிறேன்) இருந்தார். துகிலியல் (textile) வினைஞர். சிவநெறியிலே ஆழ்ந்த ஈடுபாடு. ஒரு தடவை இணையத்துலே "சமயம்" கிற சொல் எப்படி வந்துச்சுன்னு கேட்டார். ஓய்வு நேரத்துல, நமக்கு இதே பொழப்பாப் போச்சா? அங்கேயும் இங்கேயும் தேட ஆரம்பிச்சு, ஊரம்பட்டுக்குச் செய்தி சேர்ந்துருச்சு. அதான் இப்படிக் கானல்லே.....சொல்ல ஆரம்பிச்சேன். வேண்டாம்னா சொல்லிருங்க! நிறுத்திப்புடுவோம்."

"நீங்க ஒண்ணு, நிறுத்திடாதீங்க, சொல்ல வந்ததைச் சொல்லிப் புடுங்க; சொல்லு, பொருளு, பிறப்பு, வளர்ச்சின்னு பேசுனாலே, பத்துப்பேர்லெ ஏழு பேருக்கு ஒருமாதிரியாத் தான் இருக்கும்; மீதி மூணு பேராவது படிக்க மாட்டாகளா!"

"அது சரி, எல்லாம் ஒரு நப்பாசைதான்"

அன்புடன்,
இராம.கி.

13 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//"நீங்க ஒண்ணு, நிறுத்திடாதீங்க, சொல்ல வந்ததைச் சொல்லிப் புடுங்க; சொல்லு, பொருளு, பிறப்பு, வளர்ச்சின்னு பேசுனாலே, பத்துப்பேர்லெ ஏழு பேருக்கு ஒருமாதிரியாத் தான் இருக்கும்; மீதி மூணு பேராவது படிக்க மாட்டாகளா!"
//

ஒரு ஆள் வந்திட்டன்.

சம்மணம், சம்மாணம், சப்பளம் - எங்கட ஊரில எப்படிச் சொல்லுறவை எண்டதே மறந்திட்டன் எண்டது இப்பதான் உறைக்கிது. 'சப்பளம்' கொட்டி இரு. இதுதான் என்று நினைக்கிறேன். அநேகமாக வசந்தன் வந்து *எனக்கு* சொல்லித்தருவார் என்று நினைக்கிறேன். :) :(

தொடருங்கள் ஐயா.

-மதி

குமரன் (Kumaran) said...

இன்னொருத்தனும் வந்துட்டேன். தொடருங்கள் ஐயா.

ஞானவெட்டியான் said...

அப்பு,
இப்பதிவை நீங்க நிறுத்திப்புட்டா நான் எப்படிச் சொற்களஞ்சியத்தைச் சேர்ப்பது? புழங்குவது.

நான் புழங்கினா நாலுபேராவது, அது என்ன ஐயா?ன்னு வினாவெழுப்பமாட்டார்களா என்ன?

Thangamani said...

இரண்டாவது ஆள்!

VSK said...

செங்கிருததில் 'ஸம்மனம்' என்றால்,[இரண்டு சுழி 'ன', 'ண' அல்ல] 'மரியாதை அளித்தல்' என்று பொருள் சொல்லுகிறது.

அதிலிருந்துதான் இந்தப் பெயர் வந்தது எனக் கருதுகிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

மதி, உங்களுக்குச் சொல்லித்தர ஒண்டுமில்லை. இப்போதெல்லாம் நான் கதைப்பதை மட்டுமே சொல்வதாக உத்தேசம். எங்களுக்குள்ளயே - பக்கத்துப்பக்கத்து ஊருக்குள்ளயே எக்கச்சக்க வித்தியாசம். (கொஞ்ச நாளுக்கு முதல் நடந்த "கெதி - கெரி" பற்றின குழப்பம் தனிக்கதை. சின்னதா ஒரு பதிவு எழுதலாமெண்டு நினைக்கிறன். நீங்கள் புங்குடுதீவுக்கதை கதைக்க முதல் என்ர பக்கத்து ஊர்க்காரன் சயந்தனுக்கும் எனக்குமே 'பிறழ்ச்சினை' இருக்கு.)

எங்கட ஊரில, சம்மணம், சம்மளம் என்று சொல்வதாகத்தான் ஞாபகம். சப்பாணி என்றும் சொல்வதுண்டு.
சம்மணம் கொட்டி இரு, சம்மளம் கொட்டி இரு, சப்பாணி கொட்டி இரு
என்பதாக வரும். கொட்டி என்பதற்குப் பதிலாக கட்டி என்றும் சொல்வதுண்டு.

சம்மளம் சப்பளமாவதற்கு அதிகம் கஸ்டப்படத் தேவையில்லை.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//எங்கட ஊரில எப்படிச் சொல்லுறவை //

"சப்பணம் கொட்டி இரு." இப்படித்தான் எனக்கு ஞாபகமிருக்கு.

இராம.கி said...

அன்பிற்குரிய மதி, குமரன், ஞானவெட்டியான், தங்கமணி, வசந்தன், ஷ்ரேயா ஆகியோரின்,

வருகைக்கு நன்றி.

சம்மணம், சம்மளம், சப்பளம் ஆகியவை ஒரே பொருளில் வருபவையே. (சப்பாணி வேறு பொருள். அது கையைச் சேர்த்துச் சப்பையாய்க் கொட்டுவது; சப்பாணி கொட்டுதல் என்ற அந்தப் பொருள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் வரும். சிறு அகவையில் பிள்ளைக்குச் சப்பாணி கொட்டச் சொல்லிக் கொடுப்போம். தவிர, மனவளர்ச்சி இல்லாமலோ, அல்லது உடல்வளர்ச்சி குன்றியோ சப்பையாக இளம்பிள்ளை போலக் கிடப்பவரையும் சப்பாணி என்றே சொல்லுவார்கள். பதினாறு வயதினிலே ஞாவகம் வரக்கூடும்.)

தமிழ், மற்றும் தமிழிய மொழிகளில் மெல்லெழுத்து, மெல்லுயிர்மெய் என அடுத்தடுத்துச் சேர்ந்து வரும் சொற்களில் பல,

மெல்லெழுத்து, இணையான வல்லுயிர்மெய் என்றோ,

இணையான வல்லெழுத்து, இணையான வல்லுயிர்மெய் என்றோ,

திரிவது இயற்கை. காட்டாக, மலையாளத்தில், வந்நு என்பார்கள்; அதை நாம் வந்து என்போம். (நகரத்திற்குத் தகரம் இணையானது)

இங்கே சம்மளம், என்பது சப்பளம் என்று ஆகிறது. (மகரத்திற்குப் பகரம் இணையானது.)

தோன்றியது தோற்றியது என்றும், தோணியது (இங்கே னகரம். ணகரமாக மேலும் அதிகமாய்த் திரிந்திருக்கிறது.) என்றும் மாறுவதைப் பாருங்கள்.

"என்பது, எந்நுவது, என்னுவது, என்றுவது, எண்டுவது" என்று எத்தனை திரிவுகள் பாருங்கள்?

இதனை திரிவுகளும் ஒரு மொழிக்கு வட்டாரவழக்கில் நடக்கக் கூடியவை தான். கொஞ்சம் கூர்ந்து படிக்க வேண்டும். திரிவு என்பது கெடுதல் அல்ல; பலநேரம் அது நம் உயிர்ப்பைக் காட்டுகிறது; இது போன்ற நகர்ச்சியில் தான் புதிய புழக்கங்கள் கிடைக்கின்றன. நான் சொல்லுவதெல்லாம் இந்தத் திரிவுகளை அடையாளம் காணுங்கள்; விதிகளாக்குங்கள்; இந்தப் புரிதல் இருந்தால், கலைச்சொல் படைப்பது எளிது. புதுச் செய்திகளைத் தமிழால் சொல்லலாம். தமிழ் என்பது நம் நாவில் இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய SK,

உங்கள் வருகைக்கு நன்றி. சம்மனம் என்பது சங்கதச் சொல் என்று சொல்லியிருக்கிறீர்கள். சம் என்ற முன்னொட்டு சங்கதத்தில் பெரிதும் ஆளப் படுவது உண்மையே. அதே பொழுது, அது சங்கதத்திற்கு மட்டுமே உரியதல்ல. அப்படித் தவறாகப் புரிந்து கொண்டுதான், சகரச் சொற்கள் பலவற்றைத் தமிழில்லை என்று சிலர் சொன்னார்கள். சகரக் கேள்வி தமிழில் ஆழப் பார்க்க வேண்டியது.

"சங்கதமா, செங்கதமா, செங்கிருதமா?" என்பது இன்னொரு கேள்வி. அதற்குள் நான் இங்கு நுழையவில்லை.

இந்தத் தொடர் 6 பகுதிகளைக் கொண்டது. அது முடியும் போது ஓரளவிற்கு நான் சொல்லவந்ததை விளக்கியிருப்பேன் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//நீங்க ஒண்ணு, நிறுத்திடாதீங்க, சொல்ல வந்ததைச் சொல்லிப் புடுங்க; சொல்லு, பொருளு, பிறப்பு, வளர்ச்சின்னு பேசுனாலே, பத்துப்பேர்லெ ஏழு பேருக்கு ஒருமாதிரியாத் தான் இருக்கும்; மீதி மூணு பேராவது படிக்க மாட்டாகளா//

படிச்சுட்டமில்ல?., 'நீங்க ஒண்ணு, நிறுத்திடாதீங்க!!', அருமை!!!

இராம.கி said...

அன்பிற்குரிய அப்டிப்போடு,

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

அன்புடன்,
இராம.கி.

kana said...

சம்மணம்/சமணம்-சமணன் மாதிரி
கால் போட்டு..அதாவது பத்மாசன நிலையில் உட்காருவது.அதான்
சமணங்கால்.

Sudar said...

தொடருங்கள் ஐயா. தாங்கள் எழுதுவதைப் படிப்பவர்களில் நானும் ஒருவன்.