Tuesday, March 28, 2006

கதையும் காதையும்

ரவீன் என்று ஒரு நண்பர், முன்பெல்லாம் forumhub -இல் வரலாறு பற்றிப் பொதுவாகவும், ஈழம் பற்றி விதப்பாகவும் எழுதுவார். ஆழமாகவும், ஈடுபாட்டோடும் இருக்கும். இப்பொழுது எங்கு இருக்கிறார், இணையத்தில் எழுதுகிறாரா என்பது தெரியாது. [இது போலப் பல நண்பர்கள், முன்பு நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது எழுதுவதில்லை, அல்லது அவர்கள் எழுதுவதை நான் அறியாமல் இருக்கிறேன்.] அப்படி ரவீன் எழுதும் போது, ஈரானியர் gatha என்று பயன்படுத்தியது தான், கதை பற்றி முதலில் வந்த வழக்கு என்று சொல்லியிருந்தார். இது தமிழ் இணையம் மடற் குழுவிலும் வந்தது என்று எண்ணுகிறேன். அதை மறுத்து நான் எழுதிய இடுகை. உங்கள் வாசிப்பிற்கு சற்று திருத்தங்களுடன்.

கதை என்று சொல்லும்போது, இரண்டு பொருள்கள் இருக்கின்றன. ஒன்று வெறும் பேச்சு. இன்னொன்று story என்ற பொருள். முதலில் பேச்சு என்பதற்கு வருவோம்.

கத்துகடல் சூழ் நாகை காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊரடங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி யெழும்.

இந்தக் காளமேகம் பாடல் படிச்சிருக்கீங்களோ? கத்துகடல் - னா சத்தம் போடுற கடல்; அந்தப்பக்கம் ஈழத்துலேயும் இச் சத்தத்தைக் கேட்டிருப்பீங்க. கத்தல்- ஓசையிலே தான் எல்லாமே ஆரம்பிச்சுது. ஆனாலும் ஓசை ஒழுங்கில்லாமா தத்தக்க, பித்தக்கன்னு வந்தா நாம, "இவன் உளர்றான்"னு சொல்லிருவோம். அதனாலே ஒரு ஒழுங்கோடெ, அடுத்தடுத்து ஒரு விதமாச் சேர்த்து, நம்ம பேசுறது இன்னோருத்தருக்கு புரியுற மாதிரி வந்தாத் தான் அது பேச்சு. அதாவது, பேச்சுங்குறதுலெ ஓர் ஒழுங்கு இருக்கோணும், அந்த ஒழுங்கும் தொடர்ந்து வரோணும், நாம சொல்றது இன்னோருத்தருக்குப் புரியணும்னா, அவருக்கும் நமக்கும் ஒரு குழூஉக் குறி இருக்கோணும். அதாவது ஒரே மொழியிருக்கோணும். இதெல்லாம் இருந்தாத்தான் அவன் கதைக்குறான்னு சொல்றோம். "அவன் கதைக்குறது விளங்கேல்லெ" என்று சொல்கிறோம் இல்லையா?

சரி, கதைங்கிற சொல் எப்படித் தான் வந்தது?

கல் என்பது மலை, பாறை, சிறிய பாறை, துண்டுப் பாறை என எல்லா வற்றையும் குறிக்கும். அதேபோலக் கருமை என்ற பொருளிலும் அந்த வேர் வரும். கல்லுதல் என்பது தோண்டுதல், உடைத்தல். ஓசை என்ற பொருள், கல்லோடு கல் மோதுவதால், ஏற்படுகிறது. "கலீர் ஓசை", "கலகலவென்று சிரித்தான்" என்று சொல்கிறோம் அல்லவா?

குல்>கல்>கல்+து = கற்று>கத்து= ஓசை எழுப்பு., கூவு (கற்றல் என்னும் படிப்பு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கத்திக் கத்திப் படிப்பதால் தான் வந்தது; என் இளமைப் பருவத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன். இன்றைய மதரசாப் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்லாமல் அன்றையத் திண்ணைப் பள்ளிக்கூடங்களும் ஒரே சத்தமாய்த் தான் இருந்தன.)

கல்>கள்>கணீர் = ஓசைக்கான இன்னொரு ஒலிக் குறிப்பு.
கலி = ஒலி
கத்து>கத்தல் = ஓசையை எழுப்பல் ( இக்கத்தலில் பொருளிருக்க வேண்டும் என்பதில்லை.)
கத்து+ஐ >கத்தை>கதை = ஓசைகளின் தொகுதி (இது பொருளோடு வரும் பேச்சு), ஒலியிட்டு உரை

வாயால் 'பெ.....பெ' என்று ஊமையர் ஒலியெழுப்பும் போது பொருளற்று இருக்கிறது. அதனால் தான் "சும்மா பேத்தாதே" என்கிறோம். பேத்துவது என்பது பொருளற்று ஓசை எழுப்புவதைக் குறிக்கும். அதே சொல், பேத்து>பேச்சு என்று ஆனவுடனே, பொருளுள்ள தொகுதியாக ஆகி விடுகிறது. பொருட்பாட்டு வளர்ச்சியைப் பாருங்கள். இதே சொல்லை வைத்து, எதிர்மறையைக் காட்டுதற்குப் "பொருளற்ற பேச்சு" என்று சொல்கிறோம். (அதாவது பேத்தல் என்பது பொருளற்ற பேச்சு) பேச்சு என்ற சொல்லே பாஷை எனத் திரிந்து வடமொழியில் வருகிறது. ஆங்கிலத்தில் இதே சொல்லுக்கு இணையாய் speech என்று ஆகிறது. செருமனில் sprake என்று ஆகிறது; தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள பாலங்களில் இதுவும் ஒன்று. வடமொழியில் இருக்கும் பாஷையைத் தமிழ்ப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு நாம் பாடை என்கிறோம். பேசாமல், பேச்சு என்றே இணைச்சொல்லைச் சொல்லி விட்டுப் போகலாம்.

அது போலக் கத்தல் கதையானால் பொருள் உள்ள ஓசைத் தொகுதியான பேச்சாகிறது. கல்>கழல்>கழறு = பேசு என்றும் ஆகும்.

அதே போல, கத்து>கது>கது+அர்>கதர்>கதரு>கதறு = ஒலியிடு, கூவு, அரற்று, முழங்கு என்ற பொருளும் வரும்.

இப்பொழுது கதை = story என்ற பொருளுக்கு வருவோம்.

நான் உங்களிடம் ஒரு செய்தி சொல்கிறேன். நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். என் வாயிலிருந்து புறப்பட்ட செய்தி உங்கள் செவிக்குச் செல்கிறது. அதை உங்கள் மூளை புரிந்து கொள்கிறது. அதை நீங்கள் மூன்றாமவருக்குச் சொல்கிறீர்கள்; அவர் காதால் கேட்கிறார். இப்படி ஒருவர் மாறி இன்னொருவருக்குச் செய்தி போகிறது. இந்தச் சரத்தைக் கீழ்க்கண்டவாறு காட்டலாம்.

வாய்1---->காது2---->வாய்2---->காது3---->வாய்3---->காது4---->வாய்4---->காது5---->வாய்5---->காது6---->வாய்62---->காது7---->வாய்7

இப்படி அடுத்தடுத்து போய்க்கொண்டே இருக்கும் செய்தித் தொடர்பில், ஒவ்வொருவரும் இன்னொருவரின் அடையாளம் தெரியும்வரை, தங்களுக்கு யார் இச்செய்தி சொன்னாரென்று அடுத்தவரிடம் சொல்வார். இந்தச் செய்தியாடல் குறுகிய காலத்திற்குள் நடந்தால் இந்த அடையாளங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். நாளடைவில், தொடர்பு வெளியும், காலமும் கூடக்கூட, முந்திச் சொன்னவரின் அடையாளங்கள் மனதில் அழிந்து கொண்டே வந்து "இச்செய்தியை எங்கோ கேட்டேன்" என்று சொல்லத் தொடங்கி விடுகிறோம். முடிவில், சொன்னவர் யாரென்பது முகமையில்லை, சொன்னது முகமை என்றாகிறது. கதை என்பதிலும், உள்ளடக்கம் தான் முகமை; யாரிடம் கேட்டோமென்பது முகமையில்லை என்று ஆகிவிடுகிறது. (இது படைப்பாளருக்கு வருத்தம் தரும் நிலைதான்; ஆயினும் நடைமுறையில் இதுவே பெரும்பாலும் நடக்கிறது. படைத்தார் பெயரை மறந்துவிடுகிறோம்.)

இங்கே, தொடர்பு என்பது இரு மாந்தர்க்கு இடையே என்று வைத்துப் பார்த்தால், மேலே உள்ள சங்கிலித் தொடரில் மீண்டு வருகிற சரம் என்பது, முன்னவரின் வாய்ப் பேச்சு ----> பின்னவரின் கேள்வி (=கேட்பு) என்று ஏற்பட்டுக் கொண்டே வரும். அதனால் ஒரு சங்கிலி எழும்.

இதே சங்கிலியை, வெறுமே ஒரு மாந்தனை வைத்துப்பார்த்தால் "அவர் கேள்விப் பட்டது, அவர் சொன்னது" என்று ஆகி வரும். இச்சரமும் திருப்பித் திருப்பி ஒரு மாந்தரில் இருந்து இன்னொரு மாந்தருக்கு எழலாம். இதனாலும் ஒரு சங்கிலி எழ முடியும்.

இரண்டு சங்கிலிகளையுமே, மொத்த நீளத்தை வைத்துப் பார்த்தால் நமக்கு ஒரு மாறாட்டமும் தெரியாது.

இரண்டாம்வகையில் எழும் கருத்துத்தான் "செவிவழிச் செய்தி" என்பது. வேறொன்றுமில்லை, கேட்டது கதை. "கர்ண பரம்பரைச் செய்தி" என்கிறாரே, அதுவும் இதுதான். கர்ணம் என்பது செவி என்ற பொருளில் உள்ள கன்னம் என்ற தமிழ்ச் சொல்லின் வடமொழி வடிவம்.

[குல்>கல்>கன்>கன்+அம்>கன்னம் என்று சொல் வரலாறு காட்டுவார் சொல்லறிஞர் ப.அருளி. (தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் அருளி ஆற்றிய மொழியியல் உரைகள், அறிவன் பதிப்பகம், தனித் தமிழ் மனை, காளிகோயில் தெரு, தமிழூர் (திலாஸ்பேட்), பாண்டிச்சேரி - 605009). அவர் கட்டுரையை இங்கே மீள நான் உள்ளிடுவதைக் காட்டிலும் நீங்களே படிப்பது சாலச் சிறந்தது.)
குல் - துளைத்தல் கருத்து மூல வேர்.
கன்னம் = துளை, செவித்துளை, காது, காதை அடுத்துள்ள குழி விழும் கன்னம், கதுப்பு.
கன்னம் = காது
காதுக்கு மேற் பக்கமாக முடிக்கும் குடுமியை 'கன்னக் குடுமி' என்பார் ஈழத்தார்.
கன்னன் = 'வெங்கதிர் மதலை மிகு கொடையாளன் அங்கர் கோமான் கவச குண்டலன்" - பிங்கலம் 741. (காதில் குண்டலம் இருந்ததால் தான் அங்கர் கோமான் கன்னன் ஆனான்.)
கன்னம்>கனம் = செவி (அணங்கு கொல் ஆய்மயில் கொல் கனங் குழை மாதர் கொல் மாலும் என் நெஞ்சு.)
கன்னம்>karna (karnah) வடமொழிச் சொல்; ஒப்பு நோக்குக வண்ணம்>வர்ணம் (வடமொழிச் சொல்)]

இத்தகைய செவிவழிச் செய்தி தான், காதால் கேட்டது. அதாவது காதை. ஒவ்வொரு காதையும் இப்படித்தான். அது இட்டுக் கட்டியதல்ல. காதால் கேட்டது; காதுற்றது; எனவே அது காதை; காதை நாளடைவில் கதை ஆயிற்று. சங்க காலத்தில் காதை என்ற சொல்லே வழங்கிற்று. சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் படித்துப்பாருங்கள். "இக்கதையைக் கேட்டுள்ளீரா?" என்ற வாசகம் கதையைச் செவியோடு தொடர்பு ஏற்படுத்தும்.

கதை என்ற இரண்டு விதமான சொல்லாட்சிகளுக்கும் இன்றைக்கு ஒரே வடிவம் இருந்தாலும், 2000 ஆண்டுகளுக்கு முன் வெவ்வேறு வடிவங்கள் இருந்தன.

காதை = கேட்கின்ற நிகழ்வுத் தொகுதி
கதை = பேசுகின்ற ஓசைத் தொகுதி.

ஏற்கனவே பொருளற்ற பேச்சு என்ற தொடரைப் பார்த்தோம் அல்லவா, அது போல இட்டுக்கட்டிய கதை என்பதும் ஓர் எதிர்மறைப் பேச்சு.

ஈரானியர் gatha என்று பயன்படுத்தியது தான் முதலில் வந்த வழக்கு என்று ரவீன் forumhub-இல் சொல்லியிருந்தாலும், அப்பொருள் எப்படி எழுந்தது என்று அவர் சொல்லவில்லை. வடமொழியின் சொற்பிறப்பு அகரமுதலியைப் (மோனியர் வில்லியம்ஸ்) பார்த்தால், அதில் "கத்" என்ற வேரையே போட்டு, அதற்கு மேலே கூறிய "பேசுதல்" பொருளே கூறப்பட்டுள்ளது. பிறகு, எப்படி story என்ற பொருள் வந்தது என்று வடமொழி வழி நமக்குப் புரிவதில்லை. ஏனெனில், பேசுதல் எல்லாமும் கதை அல்லவே?

காதைக்குள்ளே, அங்கங்கே சுருக்கி, வேகம் காட்டச் செய்திகளைத் தொகுத்து உரைப்பதைக் கட்டி உரைப்பதென்று சொல்வார். கட்டி உரைப்பது கட்டுரை ஆகும். பின்னாளில் இச்சொல் essay என்பதற்கு இணையாகப் பயன்படத் தொடங்கிற்று. ஆங்கிலத்தில் story என்பது history -யின் குறுகிய வடிவம் என்பார். வரலாற்று நிகழ்வுகளை கட்டி உரைத்த கட்டுரை history. இதை இன்றையத் தமிழில் வரலாறு என்கிறோம். சிலம்பில் கட்டுரை என்று வருவதெல்லாம், நிகழ்வுகளைத் தொகுத்த history ஆகவே அமைந்திருப்பது ஒரு வியப்பு.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

நல்ல பதிவு வழக்கம் போல. நன்றி ஐயா.

இராம.கி said...

அன்பிற்குரிய பெருவிஜயன்,

உங்கள் வருகைக்கு நன்றி

அன்புடன்,
இராம.கி

வசந்தன்(Vasanthan) said...

கதை, பறை என்பதெல்லாம் எங்களிடம் 'பேசு' என்ற பொருளிலும் பயன்பாட்டிலுள்ளன. (ஆனால் துல்லியப்படுத்தினால் கொஞ்சம் வித்தியாசமான பொருளைத் தருவன)

"பாடை" என்ற சொல்லை ஒருமுறை உரையொன்றிற் கேட்டு குழம்பியிருக்கிறேன். கிளிநொச்சியில் முனைவர் கு.அரசேந்திரனது உரையொன்றில் அவர் பாடை, பாடை என்று சொல்லக்கேட்டபோது உடனே அது என்னவென்று பிடிபடவில்லை.

பதிவுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

நல்ல அலசல் ஐயா. இந்தக் கட்டுரை தொகுத்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. ஒருமுறைக்கு இருமுறை பலமுறை படித்தால் தான் மனதில் நின்று இதுகாறும் தவறாகப் பயன்படுத்தி வந்த சொற்களுக்கு சரியான சொற்களைப் பயன்படுத்த முடியும்.