Tuesday, March 14, 2006

ஐந்திணைக் காட்சிகள்

(உரைவீச்சு)

(முன்னால் மடற்குழுக்களிலும், திண்ணையிலும் வெளியானது; இப்பொழுது ஒருசில திருத்தங்களுடன்.)
ooooo

கோடு போட்டாப்புலே,
சாலை போறதுக்கு,
இது என்ன பாலையா?
"மருதங் காணும், மருதம்.....
பொன்னு வெளையுற மருதம்";
வயலும் வயல் சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா?
கும்மோணத்திலேர்ந்து மாயவரம் போறதுன்னா,
அப்படியும் இப்படியும் ஆறு மாரி வளைஞ்சு தான் ஓடும்;
ஆற அமர வேடிக்கை பார்த்துக்கிணு போம்;.
அங்கே பார்த்தீரா, ஓய்?
இறவையைப் போட்டுட்டு குத்தாலம் மாதிரி
தண்ணிக்கடியிலே தொட்டிலே குளிக்குறான்,
இதான்,ஓய் மருதம்!

ooooo

அலையடிச்சு மணல்திரைச்சு
உப்புக்காத்தில், நொரையெழும்ப,
இது என்ன நெய்தலா?
"பாலைய்யா, பாலை.....
பொட்டக் காட்டுப் பாலை";
முல்லையும் மருதமும் திரிஞ்சதாக் கேள்விப் பட்டிருக்கீயளா?
மதுரைலேர்ந்து தூத்துக்குடி போறதுன்னா,
இப்படித் தான் காட்சி திரிஞ்சுகிட்டே போகும்;
பனை, வேலிக் கருவை, புளி, கள்ளி, ஆடா தொடை;
அங்கே பார்த்தீகளா,வே?
வேகாத வெய்யில்லே பதநீரு, நீர்மோரோட
வெள்ளரிப்பிஞ்சையும் நுங்கையும் கூடைலெ விக்கிறான்,
இதான்வே பாலை!.

ooooo

வேங்கையும் கடம்பும்,
பூச்சொரிஞ்சு தடம்போட,
இது என்ன முல்லையா?
"நெய்தல் ஓய், நெய்தல்......
நீலப்பூ நெறஞ்ச நெய்தல்";
கடலும் கடல்சார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீரா?
பிச்சாவரத்துலெ, படகு எடுத்துப் போனீருன்னா,
உப்பங்கழியிலே போயிட்டே இருக்கலாம்;
புன்னை விழுது, எறாலு வலை, செங்கால் நாரை;
அங்கே பார்த்தீரா, ஓய்,
டொக்குன்னு நாட்டுத் துமுக்குச் சத்தம் கேக்குது;
கொக்கைச் சுட்டு டப்புன்னு விழுத்தாட்டுறான், பாரும்
இதாரும் நெய்தல்

ooooo

மஞ்சுதழுவ நெஞ்சடைக்க,
பச்சைபோர்த்திப் படங்காட்ட
இது என்ன குறிஞ்சியா?
"முல்லைய்யா, முல்லை.....
மோகமுள்ள முல்லை";
காடும் காடுசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கியளா?
முண்டந்துறைலேர்ந்து பாவநாசம் போற வழியிலே,
அடர்த்தியாப் பேரு தெரியா மரங்கள்;
புலி, மான், முயல், காட்டுப் பன்னி;
அந்தத் தடத்தைப் பார்த்தியளா,
நேத்து இந்தப் பக்கம் புலி நடமாட்டம்
இருந்துருக்கோணும்; வாசனை தெரியேல்லை?
இதான்வே முல்லை.

ooooo

வைக்கலை அசைபோட்டு,
எருமையாட்டம் சோம்பிக்கிடக்க,
இது என்ன மருதமா?
"குறிஞ்சிங்க, சாமி குறிஞ்சி....
கோடைக்குச் சொகமான குறிஞ்சி";
மலையும் மலைசார்ந்துன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?
நிலக்கோட்டைலேர்ந்து கோடைக்கானல் அம்புட்டுக்கும்,
மரமும், வெளியும், தடமும், தேன்கூடும்;
பச்சப்பசேல்னு, நடுவிலே அமைதியாப் பாறையும்,
அந்தப் பச்சை மலை பார்த்தீங்களா,
வளைஞ்சு, வளைஞ்சு மானம் வரைக்கும் போகுதே?
இந்த வருசம் டாண்ணு நீலமாப் பூத்துரும்;
இதாங்க குறிஞ்சி

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Unknown said...

அருமை!!., வயலும் வயல் சார்ந்ததும்தான் ஆனால் சுற்றி வர மலையென்றால் இந்நிலம் எந்(ன்) நிலம்?!. மருதம் பார்த்துப் பழகினாலும்., மனம் என்னவோ நெய்தல் நிலத்தில்.

இராம.கி said...

அன்பிற்குரிய அப்டிப்போடு,

ஐந்திணைக் காட்சிகள் பட்டறிந்த காரணத்தால் எழுதியது. உங்களின் தோய்வுக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.