Thursday, March 16, 2006

சமயம்-3

இப்ப சகர வரிசைச் சொல்லைப் பார்க்கலாம்.

அம்>சம்.

இந்த மாற்றத்தை, மற்ற மொழிகளில் எல்லாம் இயல்புன்னு ஒத்துக்கிற மொழியாளர்கள் தமிழ் மட்டும் ஏதோ விதிவிலக்குப் போல சொல்லிக்கிட்டிருக்காக. அதுக்குத் தொடர்ச்சியா, சகரத்துலே தொடங்குற தமிழ்ச் சொல்லெல்லாம் சங்கதத்திலேந்து (சமற்கிருதத்திலேந்து) கடன் வாங்குனதுன்னு இவுக சொல்றாக. சகரத்தை அகரமாக்கும் ஒரு பழக்கம் தமிழுக்கு உண்டுன்னு தலைகீழா வேறே இவுக சொல்றாக. இந்த வாதத்தை யார் கொண்டாந்தாகன்னு தெரியலை; கேட்டா, தொல்காப்பியர்னு அடையாளம் காட்டுறாக. அதாவது,

க த ந ப ம எனும் ஆவைந்தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே - தொல். மொழி. 28
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ, ஐ, ஔ என்னும் மூன்றலங் கடையே - தொல். மொழி. 29

என்று தொல்காப்பியர் சொல்றாராம். அதாவது, "க,த, ந, ப. ம ஆகிய ஒலிகள் எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதல் வரும். சகரமும் அப்படித்தான்; ஆனா ச, சை, சௌ - அப்படின்னு ஒரு சொல்லும் தொடங்காது. (அலங்கடைன்னா விதிவிலக்குன்னு அருத்தம்)" - இப்படி இவுக பொருள் கொள்றாக.

"எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்; பாடினவன் பாட்டைக் கெடுத்தான்"ங்கிறது பழமொழி. பாவாணர் இதை ஒத்துக்குனது கிடையாது. அவர் "இது பாட வேறுபாடு; எப்பவோ இதை மாத்தி எழுதிப் புட்டாங்க"ன்னு சொல்வார். இதற்கு துடிசை கிழார் சாமி சிதம்பரத்தின் துணையையும் அவர் கொண்டு வருவார். சாமி சிதம்பரம் சொல்ற தொல்காப்பியப் பாடம் இப்படியிருக்கு:

க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே

"அய்யா, சகரக் கிளவி மற்றது மாதிரித்தான்; ஆனா கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல்லே வராது"

மேலே சொல்றபடி பார்த்தா சகரம் மொழி முதல்லே வரும். பாவாணர் எதுனாலே அப்படிச் சொன்னாருன்னா, நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு பழைய மேற்கோள் வெண்பா வருது. அதுலே ஆணித்தரமா, சகரம் மொழி முதல்லெ வரும்னு சொல்லியிருக்கு.

சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி - சவிசரடு
சத்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை

இன்னும் போய், ஒப்பியன் மொழிநூல் - 1 (தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 143-144) - லும், தமிழர் வரலாறு - 2 (தமிழ் மண் பதிப்பகம், பக்கம் 42-44) பல்வேறு சகரச் சொற்களை பாவாணர் எடுத்துக் காட்டுவார். இங்கே நான் கொஞ்சம் தான் காட்டாகக் கொடுத்துருக்கேன். இது எல்லாமே வடமொழியிலேர்ந்து கடனா? - ன்னு பாவாணர் கேட்பார்.

சக்கை, சகதி, சங்கு, சச்சரவு, சட்டம், சட்டி, சட்டுவம், சட்டை, சடங்கு, சடலம், சடை, சண்டை, சண்டு, சண்டை, சண்ணு, சதரம் (உடம்பு), சதுப்பு, சதை, சந்து, சந்தை, சப்பட்டை, சப்பரம், சப்பனி, சப்பாணி, சம்பல், சப்பு, சப்பை, சம்பளம், சம்பு, சம்பா, சம்மணம், சமம், சமர்த்து, சமை, சமையம், சரக்கு, சரடு, சரவடி, சரவை, சகர், சரி, சருகு, சருவம், சல்லஒப்பியன் மொடை, சல்லி, சலங்கை, சலவன், சலவை, சலி, சலுகை, சவ்வு, சவத்தல், சவங்கல், சவட்டு (சவட்டி-சாட்டி), சவட்டை - சட்டை, சவட்டு - சமட்டு - (சமட்டி - சம்மட்டி), சவடி, சவம், சவர், சவலை, சவள், சவளம், சவளி, சவை, சழி, சள்ளை, சளி, சற்று, சறுகு-சறுக்கு, சன்னம்

இன்னும் தொல்காப்பியத்துலே, சில மொழியாட்சிகள் விட்டுப் போயிருக்கிறது என்றும் பாவாணர் சொல்லுவார். மேலும் அவர், "தொல்காப்பியம் ஒரு இலக்கண நூலே அன்றி, அகரமுதலி அன்று. அதில் ஒரு சொல் இல்லாவிடில் அது தமிழே இல்லை என்பது மொழியறிவும் உலக அறிவும் இன்மையையே காட்டும்." என்று ஆணித்தரமாக எடுத்துரைப்பார்.

ஒரு தமிழ்-தமிழ் அகர முதலி (சண்முகம் பிள்ளை; தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம்) யை நாம எடுத்துப் பார்த்தால் ககர முதற் சொற்கள் கிட்டத்தட்ட 3200 இருக்குறதைப் பார்க்கலாம். இதே போல சகர முதற்சொற்கள் 1800 க்கும் மேலே இருக்கு. ககரமுதற் சொற்களைப் போல 56 % சகர முதற் சொற்கள் இருக்கும் போது அவற்றைக் கடன் என்று சொல்லுவதை, நம்மாலே நம்ப முடியாமல, அண்ணாச்சி!

நமக்குத் தோணுற கேள்விகள் பல.

சகரம் முதலாகாத மொழி உண்டோ ? உரசொலியும் (ஸ), அதிரொலியும் (ஜ) ஆக பல சகரங்கள் இருக்கும் மற்ற மொழிகளின் ஊடே, சகரம் முதலில் வராது என்று சொல்லப்படும் தமிழ் என்ன ஒரு தனி வகை மொழியா? இத்தனைக்கும் நாகரி எழுத்துக்களை ஆயும் போது அவை தமிழி எழுத்தைப் பின் பற்றியதாக இருக்க வேண்டும் என்று கொள்ளப் பெரும் வாய்ப்பு இருக்கு. அதில் சகர வருக்கம் என்று சொல்லும் போது சகரத்தை முதலில் வைத்தே சொல்லுகிறார்கள்; அப்படி இருக்கும் போது, சகரம் தமிழில் சொல்முதலில் வராதுன்னு சொன்னா, அது பொய்யான தோற்றமாய் நமக்குக் காட்டுது.

மேலும் எகரத்திற்கும் அகரத்திற்கும் உள்ள தொலைவும், ஒகரத்திற்கும் அகரத்திற்கும் உள்ள ஒலியியல் தொலைவு (phonetic distance) நிரம்பக் குறைவுதான். செ, சொ என்ற ஒலிகள் தமிழில் முதலில் வரும் போது, 'ச' என்று மட்டும் முதலில் வராதாம். அது எப்படி? ஆகாரம் முதலில் வருமானால் அகரம் வராது என்பது ஒலியியலுக்கு எப்படிப் பொருந்தும்? பழந்தமிழர்களின் நாக்கு என்ன வளையலையா? "சாவு என்ற சொல்லை ஏற்கலாம், சாவு>சாவம்>சவம் என்ற சொல்லை ஏற்க முடியாது"ன்னா அது என்ன கூத்து? ஈரொலிகள் (diphthongs) மொழிக்கு முன்னே வராதுன்னு சொன்னா, அதிலே பொருள் இருக்கு. (குரவம் - கிற சொல்லைத் தப்பான வகையில் வடமொழிப் பாணியில், ஈரொலி பலுக்கி 'கௌரவம்' னு எழுதுவதை இங்கே பார்க்கோணும். இதே போல, நாய் கவ்விற்று என்றே தமிழில் வரும்; கௌவிற்று என்று வராது.) ஔகாரம், ஐகாரம் போல அகரத்தையும் பார்த்தால் எப்படி? மொத்தத்தில் சகரம் மொழிக்கு முதலில் வராது என்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாத கருத்தாக இருக்கு. இப்படி ஒரு விதி தமிழ்லே இருக்கும்னா, மற்ற தமிழிய மொழிகள்லெ ஏன் இல்லை என்ற கேள்வியும் நமக்கு எழுகுது. தமிழ் மட்டும் என்ன ஓர் அலங்கடையா? இல்லாத ஒரு விதியை இருக்குன்னு வச்சுக்கிட்டு, பல தமிழ்ச் சொற்களை ககரத்தில் இருந்து சில அறிஞர்கள் சகரத்துக்குக் கொண்டு வருவாக. இதுக்கு கன்னடத்தெ வேறெ துணைக்கு அழைப்பாக. என்னால் இதை ஒத்துக்க முடியலை.

எனக்குத் தோணுறது:

"ஊசிமுனையின் மேல் கோபுரம் கட்ட முடியுமா? ஒள்ளத்தியோண்டு இடத்துலே அரமணையா கட்ட முடியும்?"

"சகரம் முதல்லே வரலைன்னா, தமிழ்ங்கிற கோபுரம் இடிஞ்சே போகும். கணக்கில்லாத சொற்களின் பிறப்பு நெறி கெட்டுப் போகும். சங்க காலத்திலே இருந்து இன்னை வரைக்கும் இருக்கிற தமிழை வச்சுப் பார்த்தா இது பகுத்தறிவாப் படலை."

இனிப் பெரியவங்களுக்கு விட்டுருவோம். "சம்"மில் இருந்து மொழி முதல் தொடங்கும் என்றே கொண்டு நாம மேலே நடப்போம்.

அன்புடன்,
இராம.கி.

9 comments:

Anonymous said...

Sir can you please write in normal tamil?? I try my best but still can't understand what you are trying to convey. i'm sure there are more people like me :)

பரி (Pari) said...

கர்நாடக இசைல ச->ஷ கொலையக் கேட்டா எரிச்சலா இருக்கும் :)

இன்னொன்னு 'ச்'சாவடிக்கிறது('ச' உச்சரிப்புக்கு முன்னாடி 'ச்' சேத்துக்கிறது.)

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

normal Tamil என்று எதைச் சொல்லுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. நான் வட்டாரத் தமிழில் ஆங்காங்கு எழுதியது புரியவில்லையா? சொல்லவந்த செய்தி புரியவில்லையா? அல்லது ஊடே வந்த தொல்காப்பியச் செய்தி புரியவில்லையா? பாவாணரின் தருக்கம் புரியவில்லையா?

வாசகருக்குப் புரியாத நிலையில் கட்டுரை எழுத எனக்கும் விருப்பமில்லை. அதே பொழுது, எழுதும் புலனத்திர்கு ஏற்பக் கட்டுரை நடை அமையும் என்றும் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால்:

சகரத்தில் தொடங்கும் சொற்கள் எல்லாம் தமிழில் கடன் வாங்கியவை என்றே ஒரு சிலர் கூறுவார்கள். இதற்குத் தொல்காப்பிய நூற்பாவை மேற்கோள் காட்டுவார்கள். அப்படி இருக்கமுடியாது என்று தேவநேயப் பாவாணர் எதிர்விளக்கம் கூறுவார். அதை இங்கு சொன்னேன். தவிர சகரச் சொற்கள் ஒரு அகரமுதலியில் ககரச் சொற்களில் பாதியாகவாவது இருக்கின்றன. சகரத்தை மறுத்துவிட்டால் அப்புறம் தமிழ் என்ற ஒரு மொழி நிற்காது என்றும் சொன்னேன்.

அவ்வளவு தான். மீண்டும் படித்துப் பாருங்கள். உங்களுடைய கேள்விகளை எழுப்புங்கள். என்னால் இயன்ற அளவு மறுமொழிப்பேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பரி,

சகரத்தை ஷகரமாக ஒலிக்கும் பழக்கம் கருநாடக இசையாருக்கு மட்டுமல்லாமல், தமிழ்ரில் ஒரு பகுதியாருக்கே பழக்கமாக வந்து கொண்டு இருக்கிறது. அதைத் தவறென்று பலருக்கும் உணர்த்த வேண்டும்.

இப்பொழுது இன்னும் சிலரிடம் ச்சா என்ற தேவையில்லாத பழக்கம் புதியதாய் உள் நுழைகிறது.

ஓரெழுத்துக்கு ஓரொலிப்பு மட்டுமே என்பது தமிழில் கிடையாது. தமிழ் ஒலிப்பு என்பது "எழுத்து,அது வரும் இடம் (சொல்லின் முதலா, கடையா, நடுவா)" என்பதைப் பொறுத்தே அமையும். அப்படி வருவதிலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது. தமிழின் எளிமையும் அதிலேயேதான் அடங்கியிருக்கிரது.

இதை விளக்கி ஒரு பதிவு எழுத முயலுவேன்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

தட்டச்சுப் பிழை. மேலே உள்ளதில்,

அடங்கியிருக்கிறது என்பதற்கு மாறாய் அடங்கியிருக்கிரது என்று அடித்துவிட்டேன்.

மன்னியுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

பரி,
தமிழில் 'ச'கரத்தில் தொடங்கும் சொற்கள் வல்லின உச்சரிப்பைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது ch உச்சரிப்பு. நீங்கள் சொன்னபடி 'ச்' உச்சரிப்போடுதான் சாவடிக்கிறதை உச்சரிக்க வேண்டும். chaavu என்பதே சரி, saavu என்பதன்று. இப்படித்தான் சென்னையை Sennai என்று உச்சரித்துக்கொண்டு, அதை Chennai என்று எழுதுவது தவறென்று சிலர் சொல்கிறார்கள்.

'ச'கரம் சொல்லின் இடையிலோ கடையிலோ உயிர்மெய்யாக வரும்போதுதான் (S) உச்சரிப்பைப் பெறும். தொடக்கத்தில் வந்தால் (Ch) உச்சரிப்புத்தான்.
சட்டை (Chattai) -> ஸட்டை(Sattai)என்றாகிவிட்டது.
சண்டை (Chandai) -> ஸண்டை(Sandai) என்றாகிவிட்டது.

மொழித்தொடக்கத்தில் 'S' உச்சரிப்பு வருவதுதான் சரி என்று இருந்தால் எங்கள் புணர்ச்சி விதிகளை மூட்டை கட்டி வைக்க வேண்டியதுதான்.

வேந்தன் அரசு said...

அ, ஐ = அவை:
உங்க விருப்பத்துக்கு தமிழை திரிக்கிறீங்க.

சைகாரத்தில் தொடங்கும் சங்கச்சொற்கள் இல்லை. அதுக்கு தொல்காப்பியர் இலக்கணம் செய்யாமல் விட்டாரா?

Unknown said...

ஐயா வணக்கம், தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் நீங்கள் இப்படிப் பேச்சுத் தமிழில் எழுதுவது ஏற்புடையதாக இல்லை! நல்ல தமிழில் எழுதக் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

Srinivasan Ramakrishnan said...

//அய்யா, சகரக் கிளவி மற்றது மாதிரித்தான்; ஆனா கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல்லே வராது"//
ச வும் அப்படித்தான் எனில் ச வையும் க,த,ந,ப,ம வுடன் இணைத்து முதல் வரியிலேயே அவை ஆறெழுத்தும் என்று சொல்லியிருக்கலாமே. எதற்காக ச விற்கு தனி செய்யுள்.
அதுதான் முதல் வரியில் க,த,ந,ப,ம எல்லா உயிருடன் செல்லும் என்று சொல்லிவிட்டாரே. பிறகு எப்படி ஔ வுடன் செல்லாது என சொல்லுவார்.ஔ உயிர் எழுத்து இல்லையா?