Tuesday, March 29, 2022

பட்டடை

கவிக்கோ ஞானச்செல்வன் தன் முகநூல் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தார்

--------------------------  

பட்டறை என்றொரு சொல் உலோகத்தொழில் மரவேலை செய்யும் இடங்களைக்குறிக்கும்

கொல்லுப்பட்டறை-இரும்பை அடித்துக் கொல்லுவது இங்கேகுற்றமன்று.

தட்டார் பட்டறை பொன்னை அடித்துக் கம்பியாக்கித் தட்டித்தட்டி அணிகலன் செய்வர்.

தச்சுப்பட்டறை -மரம்  அறுத்துப்பலகூறுகளாக்கி நிலை,கதவு,நாற்காலி,மேசை எனப் பல ஆக்குவார் இங்கே.

செந்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை.இங்கே தமிழை உடைத்து அறுத்து ஏதும்செய்வாரோ?

மானுட இயல் பயிற்சிப் பட்டறை. என்ன செய்வர் இங்கே? கவிதைப்பட்டறை? ??

கூத்துப் பட்டறை???

WORKSHOP என்ற ஆங்கில சொல்லாட்சியை அப்படியே மொழிபெயர்த்து பயன்படுத்த தமிழ் என்ன பிச்சைக்கார மொழியா?

கூத்துப்பயிற்சிக்களம்,

கவிதைப் பயிற்சிக்களம் என்றாற்போல் ஒன்று கொள்ளலாமே!

---------------------------

அவர் பக்கத்தில் நானளித்த முன்னிகை:

-------------------------- 

பட்டம், பட்டயம் போன்றவற்றை வாங்கலாம், பட்டையைக் கூட நெற்றியிலோ, கழுத்திலோ கட்டிக்கொள்ளலாம்.  ஆனால் பட்டடை என்று சொல்ல மட்டும் தயக்கமா? (அது பட்டறை அல்ல. பட்டடை. பேச்சுவழக்கில் பட்டறையானது)  வியந்து போகிறேன். இது போன்ற சிந்தனைகள் ஏன் நம்மூரில் எழுகின்றன? புரியவில்லை. கொல்லன் பட்டடை என்ன அத்தனை இழிவா?  உவமைக்கு முன்பொருள் ஆகக் கூடாதோ? பட்டடையின் மேலமைந்த ஒப்புமையில், செந்தமிழ்ப் பயிற்சிப் பட்டடை, மானுடவியல் பயிற்சிப் பட்டடை, கவிதைப்பட்டடை, கூத்துப் பட்டடை என்று சொல்வது தவறா? நுட்பியல் ஒப்புமையில் கலைப் பயிற்சியை யாரும் சொல்லக் கூடாதோ? அது தாழ்ச்சி-கீழோர், இது உயர்ச்சி-மேலோரா?

படுதல் = ஆளாதல். ”திரை அசைந்து தூணில் படுகிறது”. படுதலுக்கு இயற்கைச் சூழமைவு போதும். இது அமையாத போதில் சற்று  வலுக்காட்டி (உடல் வலு, அறிவு வலு, முன்னிரண்டும் சேர்ந்த நுட்ப வலு என எதுவாகவோ இருக்கலாம்) மாந்தர் செய்வது பட்டுதலாகும். என்னைக் கேட்டால், ஆளாக்குதல் என்று பொருள் சொல்வேன். பட்டுதல் = தட்டுதல் என்பது முதல் பொருள்.தமிழ் அதோடு நின்றுவிடவில்லை. அதற்கு மேலும் வளர்ந்துள்ளது. மாழையைப் பட்டிப் பட்டம் உருவானது. இளங்கலைப் படிப்பின் முடிவில் தேர்ச்சி பெற்றபிறகு, இளங்கலைப் பட்டம் தருகிறார். முன்னாளில் கையில் மாழைப் பட்டம் கட்டினார். இன்று தாள் பட்டத்தை, மின் பட்டத்தை நம்மிடம் தருகிறார். இதுபோல் இள மின்னியல் பட்டயருக்கும் நடக்கிறது.  அரசருக்குப் பட்டம் சூட்டுகிறார். இவர் இன்னார் என்று பட்டை கட்டுகிறார். எல்லாம் அடையாளச் சிக்கலுக்குத் தான். பட்டம், பட்டயம், பட்டை போன்ற சொற்களை ஒதுக்குவீர்களா? 

”பட்டென்று அடிப்பது, உடைப்பது, நொறுக்குவது” என்று பட்டுதலுக்குக் கரடாய்ப் பொருள் கொள்வது சரியல்ல. கருமான் தொழில் தான் செம்பு, இரும்பின் வழி எழுந்த மாந்த நாகரிகத்தின் அடிப்படை. கருமான் கொழு செய்த பின்னரே பயிர்த்தொழில் இங்கு வளர்ந்தது. வேளாண்மைக்குக் கொடுக்கும் பெருமையைக் கொல்லனுக்கும் கொடுங்கள்.  அவன் யாரூக்கும் இழிவானவன் அல்லன். பட்டடை = பட்டு+அடை என்பதை, வினைத்தொகை என்றும், இருபெயரொட்டு என்றும் இரு விதமாய்ப் புரிந்துகொள்ளலாம். வினைத்தொகைக்குப் போகுமுன்னால், 821 ஆம் குறளைப் பார்த்து விடுவோம். இதில்  

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை 

நேரா நிரந்தவர் நட்பு. 

பட்டடை என்ற சொல்லிற்கு மாறாய்த் தீர்விடம் என்றும் பாடம் இருப்பதாய்ப் பரிமேலழகர் சொல்வார். ஆகப் பட்டு அடை என்பது எறிந்து வரும் அம்பைத் தடுக்கும் அடைகல் என்று பொருள். பட்டு அடையும் கல் = பட்டு அடை கல் என்பதில் கல்லைத் தொகுத்து, அடை என்பதே அடைகல்லுக்கு ஆகுபெயர் ஆனது போலும். செ,சொ,பி. அகரமுதலியில் முதற்பொருள். 

1.அடைகல்  ஆங்கிலத்தில் anvil செம்புக் காலத்தில் இது கருங்கல். மாழையே அல்ல,

2. கொல்லன் களரி. ஆங்கிலத்தில் anvil செம்பு, இரும்புக் காலத்தில் இது இரும்பாகிவிட்டது, இன்று இதை அறியாமல் எந்த sheet metal, smithy, forging, casting work ஐ முதலாண்டுப் பொறியலில் ஒரு மாணவன் செய்துவிடமுடியாது. ஒரு காலத்தில் mechanical engineering இன் ஓவமே (icon) இப் பட்டடைதான். அகர முதலியில் இருந்து ஒரு  படம் எடுத்து இணைத்துள்ளேன்.  இதில் ஒரு பட்டைப் பரப்பும் (A), ஒரு கூம்பும் (B) உண்டு. கீழே வரும் பொருள்களில் A, B என்று குறித்திருப்பதற்கு பட்டடையின் பாகப்பொருள் புரிந்துகொள்க,    

3. ஆணி முதலியன செல்லுதற்கு அடியிருந்து தாங்கும் கருவி (A). 

4. தரையிலிருக்கும் போது நிலத்தில் பதியாதபடி அடியில் வைக்கும் தோணி தாங்கி (A), 

5. தலையணையாக உதவும் மணை (A), 

6. உட்காரும் பலகை (A), 

7. கால்வாய் கடத்தற்கு உதவும் பலகை (A), 

8. தேர்த்தட்டு (A), 

9. அதிர்வேட்டுக்குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை (B), 

10 தொடர்ந்து வெடிக்கும் அதிர்வேட்டு (B), 

11. கவரிலிடும் மண்படை (A), 

இனி இரு பெயரொட்டிற்கு வருவோம். பட்டு = இலை, ஓலை, தழை. கூலம். பட்டம் = பெரிய இலை, ஓலை, தழை. பட்டத்தைச் சங்கதம் பத்ரம் ஆக்கும்.. 

12. குவியல், இலைக் குவியல். 

13. தவசவுறை, ஓலையால் தவசங்களை அடைக்கும் உறை  

14. தவசங்கள் இடுவதற்கு ஓலைகளால் அமைந்த படுக்கை,  

15. குடிவாரம் = ஒப்பந்த உழவருக்குப் பேசிக்கொண்ட மேனி வரைந்து கொடுக்கும் வாரம்.

16. பயிர்த்தொழில் செய்கை, 

17. இறைப்புப் பாசனமுள்ள நன்செய்த் தாக்கு, 

18. ஐந்தாம் சுரமாகிய இளியிசை, ஒன்று இன்னொன்றோடு இணங்குதலை, அதாவது ஒன்றுதலை, தமிழில் இளிதல் வினையால் சொல்லலாம். இளி நரம்பை, கிளை நரம்பு என்று கூடத் தமிழிசையிற் சொல்வதுண்டு. (தென் மாவட்டங்களில் ”இவனுக்கிவன் கிளைகாரன்: என்று சொல்லிச் சுற்றத்தையும், நண்பரையும் ஒருங்கிணைத்தாற் போற் குறிக்கும் சொல்லாட்சி உண்டு.) பட்டும் அடையும் இலைக்கான கிளைகாரச் சொற்கள். எனவே பட்டடை, இளியானது, “வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து”. சில்ம்பு. 3.63. “ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த” = சிலம்பு 7-1.14.   

19. ஒருவகை இசைக்கணம்,   இது எனக்குப் புரியவில்லை.    .

பட்டடைப் படம் 



பட்டடை என்ற கருவி பட்டடை உள்ள அரங்கத்திற்கு ஆகுபெயர் ஆனது. இங்கே theory (தெரிசை) மட்டுமின்றி (practice) புரிசையும் சொல்லிக் கொடுப்பதால், செந்தமிழ்ப் பயிற்சிப் பட்டடை, மானுடவியல் பயிற்சிப் பட்டடை, கவிதைப் பட்டடை, கூத்துப் பட்டடை போன்ற சொற்கள் முற்றிலும் சரியே. பொருத்தமும் கூட.

(workshop என்பதற்குப் பணிமனை என்றது தான் நேரடி மொழிபெயர்ப்பு. பட்டடை அப்படிப் பட்டதல்ல.)

    


No comments: