வாழிவேதியல் (Biochemistry), நூக வாழியல் (Microbiology), வாழிநுட்பியல் (Biotechnology), ஈனியல் (genetics) போன்ற துறைகளைத் தமிழில் சொல்லித்தர வேண்டும் என எண்ணினால், அமினக் காடிப் பெயர்களைத் தமிழில் சொல்ல விழைவது தவிர்க்க முடியாதது. என்னைக் கேட்டால், வெறுமே ஆங்கிலப் பெயர்களை வைத்து ஓட்டுவது சிந்தனையைத் தடுக்கவே செய்யும். எண்ணிப் பார்க்க. பொதுவாய், 100 பேர் ஆங்கிலவழி வேதியல் வகுப்பிலிருந்தால், ஓரிருவர் மட்டுமே வேதியல் புரிந்து, பின்னால் ஆய்வுப்பணிக்குச் செல்வார். இதே படிப்பைத் தமிழில் சொல்லிக் கொடுத்தால், இருவர் 10 பேராக வாய்ப்பு உண்டு. இதன்பிறகும், 90 பேர் ஆய்வினுள் செல்லாது வெறும் படியாற்ற (application) வேலைக்கே போக நேரலாம் தான். ஆயினும் அவருக்குங் கூடத் தமிழில் சொல்லித் தருவது உதவவே செய்யும். ஆங்கிலத்தில் மட்டும் வேதியல் சொல்லித் தருவோமெனில் படியாற்ற வேலையிற் கூடச் சிறப்புறுவது கடினம்
-----------------------
கட்டுரைக்குள் போகுமுன் Bio என்ற சொல்லாட்சி பற்றிப் பேசவேண்டும். 50, 60 ஆண்டு காலமாய் ”உயிர்” என்றே நம்மூரில் இணைச்சொல் பழகினார். நானும் கூட நெஞ்சு நெருடல், கேள்வியோடு இச்சொல் பழகினேன். ”உயிரின் வரையறை என்ன? வேதியலோடு உயிர் சேருமா?” என்ற கேள்விகள் இயல்பாய் எழும். பொருள்முதல் வாதருக்கு உயிர் ஓர் இயக்கம், அல்லது மூச்சுக் காற்று கருத்து முதல் வாதருக்கோ, அது உடலுறையும் ஆவி/ஆன்மா. ஆம். பின்னவர் கருத்தில், இத்ற்குத் தனியிருப்புண்டு, இப்போது ஆழ்ந்து எண்ணுக, உயிர் உள்ள/ போன பொருளுக்கு வேதியலுண்டு. உயிருக்கு உண்டா? ”உயிருள்ள” என்பதைத் தானே ”வாழ்கிற” என்கிறோம்? அப்புறமென்ன? எந்நெருடலுமின்றி ”வாழியைப்” பழகலாமே? ஏன் சுற்றிவளைத்து உயிரை வேதியலோடு ஒட்டி ஆகுபெயர் ஆக்குகிறோம்? நெருளவில்லையா? எங்கெலாம் bio வருகிறதோ, அங்கெலாம் ”வாழியைப்” பயிலலாமே?
-----------------------
அமினக் காடிகளில் முதலில் வருவது Glycine. 19 ஆம் நூ. நடுவில், glukus ‘sweet’ எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து இதை உருவாக்கினார். கல்>கரு என்பதற்கு sweet பொருள் தமிழில் உண்டு. கல்+நல்> கரு+நல் = கன்னல். கரும்பின் இற்றைப் பொருள் இனிப்பு. கற்கண்டு என்பதையும் எண்ணுக. கல்>கலி>கலிக்கு இனிப்புப் பொருள் தருவதில் தவறில்லை.. -ine என்பது அறிவியலில் அமினக் காடியைக் குறிக்கும் ஓர் ஈறு. ஓரிமை (uniformity) கருதி அதையே தமிழிலும் கொள்:ளலாம். எனவே Glycine ஐக் கலிக்கின் எனலாம்.
அடுத்தது Alanine. Acetaldehyde ஐயும், அமோனியாவையும் (ammonia- நீர்க்காலகை) நீரக காய்ந்தையையும் (hydrogen cyanide; cyan= காயநிறம்) வினைக்க வைத்து 1850 இல் Adolph Strecker இதை உருவாக்கினார். செருமனில் இந்த அமினக்காடிக்கான பெயரை aldehyde ஐ வைத்தும், பலுக்கல் எளிமைக்காக-an- இடையொட்டைச் சேர்த்தும் ஆக்கினார். Aldehyde என்பது alcohol இலிருந்து ஓர் OH குழுவைக் குறைத்துக் கிடைத்ததாகும். தமிழில் OH குழுவை நீரகை என்றழைப்போம் (நீரகம்= hydrogen. அஃககம்= oxygen. அஃகை= oxide. நீரஃகை>நீரகை = OH) நீரகைக் குழு அல்லாதாகிய வடிவம் அல்நீரகை. இதையே aldehyde-க்கு இணையாய்ப் பயனாக்கலாம். எனவே அலனின் என்ற ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் கொள்ளலாம். தவறில்லை. நம் விளக்கமும் அச்சொல்லிற்குப் பொருந்தும்.
3 ஆவது Proline. இது pyrrolidine எனும் சினைப்பெயரால் எழுந்தது. Pyrrolidineக்கு tetrahydropyrrole எனும் இன்னொரு பெயருமுண்டு. அதன் வேதி வாய்ப்பாடு (CH2)4NH. 19ஆம் நூ. நடுவில், அரத்த நிறம் குறிக்கும் purrhos எனும் கிரேக்கச் சொல்லும், oleum‘oil’ எனும் இலத்தீன் சொல்லும் சேர்ந்து pyrrole எழுந்தது. எள்* நெய்= எண்ணெய் என்பது oil இன் தமிழ் வடிவம். சுருக்கம் கருதி, எள்>அள் என்பதை oil குறியீடாய்த் தமிழில் பயனுறுத்தலாம். அரத்தத்தின் வேர்ச்சொல் அல்>அர். இரண்டையும் சேர்த்து, அர்+ அள் = அரள். ஆழ்ந்த சிவப்பு நிறத்தைக் குறிக்கலாம். பூ எனும் முன்னொட்டு, முன்சொன்ன ஆழ்சிவப்பைச் சற்றே குறைக்கும். பூவரள்= pyrrole. பூவரளிதின்= Pyrrolidine. பூரளின் = proline. .
4 ஆவது Valine. இது Valeric acid எனும் பெயரால் உருவானது, அக் காடிப் பெயரோ, Valerian தாவரத்தால் உருவானது. தாவர வேர்ப்பொடியைக் காய்ச்சிப் பெற்ற சாறில் இக்காடி காணப் பட்டதாம். ஆழ் தூக்கத்திற்கும், உடல் வலிமைக்கும் இது உகந்ததென்று கிரேக்க, உரோம நாகரிகங்களில் கருதினார். தாவரப் பெயர் valere (to be strong, healthy) எனும் இலத்தீன் வினையில் மரப்பெயர் கிளர்ந்தது, வல்>வலரியன் தாவரத்தையும், வலரிக் காடி valeric acid ஐயும், வலின் valine அமினக் காடியையும் குறிக்கலாம்.
5 ஆவது Leucine. இது 19 ஆம் நூ. தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, இக் காடியை நம் உடம்பு தானே உருவாக்காது, ஆயினும் இது உடலுக்குத் தேவை. பெருதம் (protein) உள்ள கறி (meat), பாற்பொருள் (dairy product), சோயாப்பொருள் (soy product), வியம் (bean) பயறு (legume) ஆகியவற்றில் இக் காடி உண்டென்பார். பொதுவாய் இப் பொருள்கள் வெள்ளையாவதால், கிரேக்கச் சொல்லான ”leukos ‘white’ என்பதிலிருந்து, காடிப்பெயர் உருவானது. வெளுக்கின் என நாம் சொல்லலாம்.
அடுத்து 6 ஆவது isoleucine தமிழில் இசைத்தல்= ஒன்று போலாதல். ”அவரோடு நான் இசைந்தேன்”. வேதியல் (chemistry), பூதியலில் (physics) வரும் isotope ஐ நினைக. அதை இசைத் தாவு என்பார். இசைந்து நிற்கும் தாவு. ( தாழ்வு>தாவு= பள்ளம். உறைவிடம். தாழ்ங்கல்= தாங்கல்= தாமதித்தல்; தாவளம்= தங்குமிடம்.) தமக்குள் நிறை (weight) வேறுபடினும் அணுக்கள் முறைப் பட்டியலில் (periodic table) ஒரிடம் கொண்டவை. (ஒன்றிற்கொன்று இசைந்த, ஒரே அணுவெண் கொண்ட, அதேபொழுது நிறை வேறுபடும் அணுக்கள் இசைத்தாவுகள் ஆகும்.). அதே கருத்தில் இங்கே இசைவெளுக்கின் என்கிறோம். ஒரே வாய்ப்பாடும். நிறையும் கொண்டு, அமைப்பில் மட்டும் வேறுபடும் வேதிகளை iso முன்னொட்டிட்டு அழைப்பார்.
7 ஆவது Phenylalanine முதலில் Phenylக்கான சொல். French phényle, Greek φαίνω (phaino)"shining"இன் வழி பிறந்தது. Phenyl பூண்டுகளை ஒளி தரலுக்குப் பயனான வளிகளில் இருந்து பெற்றார். (1825 இல், இலண்டன் தெருவிளக்குகளில் எரிந்த வளியின் வடிசலில் benzene என்பதை Michael Faraday, கண்டார்.) இச்சொல் Greek pheno (I bear light) என்பதில் இருந்து எழுந்தது. ஆழ்ந்து பார்த்தால், தமிழில் வெயினல் என்பது Phenyl ஐ குறிக்கும் சொல்லாகலாம். வெயில்= ஒளியும். சூடும் சேர்ந்தது. வெயினல் அலனின் என்பது இக்காடிக்குச் சரிவரும்.
8 ஆவது Methionine. 1920களில் கண்டுபிடிக்கப்பட்டது. ”methyl+ Greek theion ‘sulphur’ என்று சொற்பிறப்பு சொல்வார். முதலில் methyl பார்ப்போம். 19 ஆம் நூ; நடுவில் German Methyl /Methylen, French méthyle/méthylène, Greek methu ‘wine’ + hulē ‘wood’ என்பதில் இது உருவானது. மேலையருக்கு மதுப்பெயர் எங்கு உருவானதென்று தெரியாது.. மத்து> மது என்பது மயக்கம் தரும் சாறு. உல்வை = மரம். இரண்டையும் பொருத்தினால், மதுல் என்பது methyl ஐக் குறிக்க முடியும். அடுத்து Greek θεῖον (theîon, “sulfur”)க்கு வருவோம். கந்தகம் என்ற தமிழ்ச் சொல் .காய்ந்து>காந்து>கந்து என்று கிளைத்தது. காய்தல் = எரிதல், தீய்தல். எனவே தீயகம், கந்தகத்திற்கு மாற்றுப் பெயர். மத்தீயனின் என்பது Methionine க்குச் சரியாய்ப் பொருந்தும்.
9 ஆவது, Serine. இது silk ஓடு தொடர்புற்றது. வேறு மொழிகளில் OE:sioloc, Greek: σηρικός,sērikós,"silken", Mandarin: sī, Manchurian: sirghe, Mongolian: sirkek என்பார். பட்டு மூதாயைப் (Bombyx mori) பட்டுப்பூச்சி என்பார். இதன் புழு, இலைகளைப் பூழ்த்து (துளைத்து)ச் சாப்பிடும். குறித்த வளர்ச்சிக்குப் பின், தன்னைச் சுற்றிக் கூடுகட்டி உருமாறிப் பூழ்த்தி> பூச்சி ஆகும். இப் பட்டுப் புழு/பூச்சி முந்தி, முந்தி, முன் நகர்வதால், மூதாய் ஆயிற்று. (இதுபோல் ஆனால் வேறுபட்ட செந்நிற மூதாயைத் தம்பலப் பூச்சி என்பார்). பட்டுப் புழுவை, மூதாய்ப் புழு, (larva) என்றும். கடுவன்புல்லி (caterpillar. மீச்சிறு பூனையாய்த் தரைபுல்லி நகரும்) என்றும் அழைப்பதுண்டு.
உருமாற்று வாகைக்குள் (pupal phase) இப்புழு நுழைகையில், உமிழ்சுரப்பியால் ஒரு பெருத இழையை (protein fibre) உமிழ்ந்து தன்னைச் சூழ ஒரு கூடமைத்துப் புழு-> பூச்சி உருமாற்றம் நடைபெறும். வல்லுறும்படி, அசைவற்றுக் கிடக்கும் புழுவிற்குக் கூடே காப்பு ஆகும். பதப்பட்ட கூடுகளை, வெந்நீரிலிட்டு, பூச்சிகளைக் கொன்று, மாந்தர் பயன் கொள்வார். புழுக்களை வளர்த்து கரட்டு silk உருவாக்கும் Sericulture ஐ, 5000 ஆண்டுகளாய்ச் சீனம் செய்து வருகிறது. இந்தியா, கொரியா, நேபாளம், சப்பான், மேற்கு நாடுகள் என இந்நுட்பம் பின்னால் பரவியது. பதப்பட்ட கூட்டைச் செள்ளு/செள்கு என்றும் குறிக்கலாம். (சுள்> செள்> செரு> சேர் = கூடல்) கூட்டு நூல் செள்கு நூலாகும். (பட்டு நூல் என்பது இணைச் சொல்) Serine = செளின்
No comments:
Post a Comment