Monday, March 21, 2022

அமினக் காடிகள் (amino acids) - 2

10 ஆவது Threonine இது threonic acid ஓடு, தன் கட்டமைப்பில் ஒன்றுபட்டதால் எழுந்த பெயராகும். Threonic acid என்பது threose (C4H8O5) எனும் 4 கரிம முகனச் சக்கரிதையில்       (4 carbon monosaccharide) உருவானது,  

------------------- 

Threose ஐப் பேசுமுன், alcohol, glycol, glycerol, methyl alcohol, ethyl alcohol, vinegar, acetum, acetic acid, acetone போன்ற அடிப்பெயர்கள் பற்றிச் சொல்லவேண்டும். இவற்றிற்கு ஆன முந்தைப் பரிந்துரைகளில் இப்போது மாறுவேன். அக் காலத்தில், அலங்கப் பெயரொழுங்கு (naming order of the organic compounds), செந்தரம் (standard) பற்றிய கவனமின்றி,  alcohol ஐப் பாவாணர்  வெறியமென்றார். அருளியோ அதையும், எரிநறாவையும் பரிந்துரைத்தார். (acetic acid =புளிங்காடி , acetylene =ஓண்வளி, methane =ஈரவளி என்றும் சொன்னார்) அற்றை ஆர்வத்தில் நானும் வெறியத்தை பயனுறுத்தினேன். glycol =களியம், glycerol =களிச்செறியம் என்றும் பரிந்துரைத்தேன். இப்போது  மாற்றம் தேவையென  உணர்கிறேன்.  

களியலை alcohol க்கும் [mid 16th c.: French/medieval Latin (earlier form of alcohol ), from Arabic al-kuḥl ‘the kohl’. In early use the term referred to powders, specifically kohl, and especially those obtained by sublimation; later ‘a distilled or rectified spirit’ (mid 17th century)], கலிக்கலை glycol க்கும். கலிச்செறியலை glycerol க்கும் பொருத்துவது சரியாகலாம். (கலித்தல்  = சுவைத்தல்.) Methyl alcohol ஐ மதுல் களியல் என்றும்,  ethyl alcohol ஐ ஆதைல் களியல் என்றும் சொல்லலாம். (காற்று = ஊதை. காற்றில் ஆது (ether) உள்ளதாகவும் (ஆது> ஆதன்) அதிலிருந்து வாழ்பொருள் பெறலாமென்ற கருத்து 18/19 ஆம் நூ.வில் உண்டு. ”ஆதில் பெற்றது ஆதைல்” என்று கொண்டால் நாம் முன் நகரலாம்..     

அடுத்தது vinegar. Middle English/ Old French இல் vyn egre, based on Latin vinum ‘wine’ + acer ‘sour என்பார். vine ஐ வல்லி என்றும் acer ஐ அஃகர் என்றும் சொல்லலாம். (wine drinking - வல்லிகை துவ்வல்.) புளிஞ்சுவை  vinegar ஐ, வல்லஃகர் எனலாம். Latin word acetum comes from Proto-Indo-European *h₂ḱ-, and later Proto-Italic *akēō (Be sharp-tasting, be sour). Acetum என்பதை அஃகுதம் என்றும், acetic acid ஐ அஃகுதக் காடி என்றும், acetone ஐ அஃகுதன் என்றும் சொல்லலாம்) (என் முந்தைப் பரிந்துரையான acetic acid = சாலியக் காடியை ஒதுக்கவேண்டாம். அது அஃகுதக் காடிக்கு மாற்று ஆகலாம்.) அஃகுதனில் உள்ள அஃகைக் குறைத்துக் பொதுப்பெயரான ketone க்குக் குதனை இணையாக்கலாம்.

-----------------------------

மேற்சொன்ன சக்கரிதையின் இழுனைக்கணை முனையில் (linear chain end) குதனுக்கிற்கு (ketone) மாற்றாய், அல்நீரகைக் (aldehyde) இருக்கும் . இச் சக்கரிதைகளை அல்நீரதைக் (aldose) குடும்பில் சேர்ப்பார். அரதச்சுதை (erythrose; அரத்த>அரத = செந்நிற. சுதை = அமுது, சுவை = சருக்கரைப் பொது ஈறு.)  இதன் எதிரிடமராய் (enantiomer) Threose ஐக் கருதுவர்.  [எதிரிடமர் [Greek ἐνάντιος (enántios) 'opposite' = ஆடிநிழலாகும் ஆடியிசமர். (optical isomer) = திடர் இசமர் (stereo-isomer)]. அரத (erythro) என்பதைத் தலைக்கீழாக்கித் தர+ அ எனக் கொண்டு, வகர உடம்படுமெய் சேர்த்தால் ”தரவச்சுதை”, threose இற்குச் சரி வரும்.  இதன்படி, தரவனக் காடி = threonic acid. தரவனின் = Threonine. 

11 ஆவது Tryptophan. 19 ஆம் நூ. கடைசியில் கணையத்தோடு (pancreas) கலிச் செறியலைத் (glycerol) தேய்த்துப் பெற்றது இந்த அமினக்காடியாகும் .  இதன் சொற்பிறப்பாய்,    tryptic ‘relating to trypsin’ + Greek phainein ‘appear’. from Greek tripsis ‘friction’, from tribein ‘to rub’ என்பார். தேய்த்த உருவன் = தேய்த்துருவன் = tryotophan. 

12 ஆவது Tyrosine இதற்கு முன் cheese ஐப் பார்ப்போம். பாலென்பது  பால்மமும் பால்பொருளும் சேர்ந்த கூழ்மிதவை (suspension). கூழாதல் =coagulation. பாலில் உறைகுத்தி நொதிக்க வைக்கிறோம். தைத்தல் = உறை குத்தல். இதன் சொற் பிறப்பு துல்>துள்>தள்>தய்>தை என்றமையும். தய்>தயில்>தயிர் என்பது சொல் வளர்ச்சி. நொதிப்பின் பின்,  தயிரும் வழிகையும் (whey) பிரியும். பொதுவாய், இவ்விரண்டையும் மீளக் கலந்து சோற்றோடு பிசைந்து உண்ணுகிறோம்  மாறாய், முழு வழிகையையும் தயிரிலிருந்து பிரித்தால், தயிர் மிகவும் கெட்டி யாகும். இதன் உச்சம் கெழு தயிர் = நிறை தயிர் =  cheese. ஆங்கில விளக்கமாய், curd of milk coagulated, separated from the whey, pressed and used as food என்பார். அருளியார், அருங்கலச்சொல் அகரமுதலியில் Cheese = பாலடை என்பார். வேதியலின் படிக் கெழு தயிரும் பாலடையும் வெவ்வேறு வகைப் பொருள்கள். அரூளியாரின் பரிந்துரையை இதில் ஏற்கத் தயங்குவேன்.   

[Old English cyse (West Saxon), cese (Anglian) West Germanic *kasjus, Old Saxon kasi, Old High German chasi, German Käse, Middle Dutch case, Dutch kaas, Latin caseus, Italian cacio, Spanish queso, Irish caise, Welsh caws). Of unknown origin; perhaps from a PIE root *kwat- "to ferment, become sour" (source also of Prakrit chasi "buttermilk;" Old Church Slavonic kvasu "leaven; fermented drink," kyselu "sour," -kyseti "to turn sour;" Czech kysati "to turn sour, rot;" Sanskrit kvathati "boils, seethes;" Gothic hwaþjan "foam"). But de Vaan writes, "no etymology can be found which does not require some poorly-founded assumptions," and suggests a loan-wordஎன்பார்.  கெழுதயிர் என்பதற்குப் பழங் கிரேக்கத்தில் τῡρός (tūrós, “cheese”) என்பார்.  தயிரசின் என்பது   Tyrosine க்குப் பொருந்தும்.   

13 ஆவது  Glutamine, 14 ஆவது Glutamic acid. இரண்டையும் சேர்த்தே காண்போம்.  மாந்தக் குருதியில் பெரிதுமுள்ளது பரி (free) அமினக் காடி Glutamine ஆகும். தசைகளில் உருவாகியதைக் குருதி மற்ற கட்டகங்களுக்குக்  கொண்டு செல்லும்.  19 ஆம் நூ. முடிவில், Glutamine பெயர், glutamic acid ஐயும் amine ஐயும் பிணைத்துச் செய்ததாகும். Glutamic acid என்பது gluten ஐயும் amine ஐயும் சேர்த்து உருவானது. கோதுமை, வரகுழை (barley), கம்பு போன்ற கூலங்களில் கொளுதம் (gluten) எனும் கட்டுமானப் பெருதம் (structural protein) இயல்பாயுண்டு. ”கொளு (glue)” வழி ”கொளுதம் (gluten)” ஏற்பட்டது. தமிழில் 4 பசைச் சொற்களுண்டு.  பள்> பய்> பயின் என்பது ஒன்று. பிள்> பிளி> பியி> பியின்> பிசின் என்பது 2 ஆவது. கொள்ளல் = பற்றல் பொருளில், கொள்> கொளு> கொளுது என்பது 3 ஆவது. கொளுந்து> கொயிந்து> கோந்து என்பது 4 ஆவது  கொளுதமிக் காடி = glutamic acid. கொளுதமின் = glutamine. 

15 ஆவது Asparagine, 16 ஆவது Aspartic acid. இரண்டையும் சேர்த்தே காண்போம்.  19 ஆம் நூ.வில், asparagus தாவர வழி, (இலத்தீனில் asparagus; கிரேக்கத்தில் asparagos) இப்பெயர் பெறப்பட்டது.  asparagus = இளந்தண்டு. பொலிதல் (to swell) பொருளில் கிரேக்கச் சொல்லான spargan இல் கிளைத்தது. பொலிகின் = asparagine. பொலுதக் காடி = Aspartic acid.

17 ஆவது Cysteine 19 ஆம் நூ கடைசியில்,  cystine [Greek kustis ‘bladder’ (because it was first isolated from urinary calculi)] வழி எழுந்தது. bladder = குட்டம். cystine = குட்டக் கல் = குட்டின். குட்டைன் = Cysteine.

18 ஆவது Lysine இது சில்களின் (cells) சுவரை அல்லது படலத்தை (film) அல்லது ஊடகத்தை (membrane) உடைத்துப் பெற்ற காடி. இப்படி உடைப்பதை  இலத்தீன் lusis ‘loosening’, கிரேக்கம் luein ‘loosen’ என்பதிலிருந்து பெறுவார். இளகுதல் = -lysis. இளகின் =lysine.

19 ஆவது Arginine. இது German Arginin, Greek arginoeis ‘bright-shining, white’ ஆகியவற்றிலிருந்து பெற்றது. Argentum = வெள்ளி. வெள்கினின் = Arginine.

20 ஆவது Histidine. 19 ஆம் நூ. கடைசியில், Greek histos ‘web, tissue’ + -ide என்பதில் இருந்து கிளைத்தது tissue = திசு; வட்டு = சுற்றிப் பின்னப்பட்டது. வட்டிதின் = histidine. 

இதுவரை வாழிவேதியல் (Biochemistry), நூக வாழியல் (Microbiology), வாழி நுட்பியல் (Biotechnology), ஈனியல் (genetics) போன்ற துறைகளில் பேசப்படும் அமினக் காடிகளைத் தமிழில் எப்படி அழைப்பது பற்றிப் பேசினேன். இக் காடிகளை ஒன்றோடொன்று பிணைத்துப் பலமராக்கியே (polymerized) பெருதங்கள் (proteins) செய்யப்படுகின்றன. ஒரு பொளிதை (monopeptide), இரு பொளிதை (dipeptide)......பல்பொளிதை (polypeptide) என்று இவை பெருகிக் கொண்டே போகும். [பொளிதை = Peptide (from Greek language πεπτός, peptós "digested"; derived from πέσσειν, péssein "to digest") பொளிதல் = உடைத்தல். செரித்தல், சிறிது ஆக்கல்,] சுவையாரமான பொளிதைகள் பற்றிப் பேசத் தொடங்கினால் மிக விரியும். வேறு கட்டுரையில் பார்ப்போம். 

மேலே சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாதவர் அருள்கூர்ந்து, ”ஈனியல் - ஒரு தொடக்க விருத்தி (Genetics- A beginner's Guide; B. Guttman, A. Griffiths, D. Suzuki, T. Cullis, One World Publication, Oxford, England)” என்ற நூலைப் படியுங்கள். இப்போது இந்திய வெளியீடும் கூட வந்துவிட்டது. குறைந்த விலை தான்.]  இந்நூலின் 40 ஆம் பக்கத்திலிருந்து ஒரு படத்தைப் படியெடுத்து இணைத்துள்ளேன். உங்கள் புரிதலுக்கு உதவும். 


  


No comments: