Thursday, March 17, 2022

அறுசுவைகள் - 1

"சிந்தனை வளர - பாடநூல் அமைப்பு " என்ற நூலில் திரு T.பக்கிரிசாமி (செல்விப் பதிப்பகம், காரைக்குடி) ஓர் ஆழ்கருத்தைச் சொல்லியிருந்தார். "ஆதிமனிதனிடம் பருப்பொருள், இடப்பொருட் சொற்களே இருந்தன. கருத்துச் சொற்கள், அறிவாலுணரும் சொற்கள், கலைச்சொற்கள், பண்புச்சொற்கள் அப்போதில்லை. அமானுஷ்யச் சொற்களும் (supernatural) இல்லை." என்பார். இயல்பான பருப்பொருள், இடப்பொருட் சொற்களை அவர் ஐம்புலன் சொற்கள் என்பார். அவர் கருத்தின்படி, "நல்லது, உயர்ந்தது, ஞானம்” போன்ற கருத்து முதற் சொற்கள் ஆதிகாலத்தில் உருவாகி இருக்கமுடியாது, பின்னாலேயே அவை உருவாக முடியும். இன்று வழங்கும் கருத்தியற் சொற்களின் (ideological words) மூலம் ஐம்புலன் சொற்களாய் இருந்திருக்கும் என்பார். . 

அவர் தரும் எடுத்துக்காட்டு: 'மதம்' என்பதாகும்.  இதற்கு religion என்றே பொருள் கொள்கிறோம். ஆதியில் 'மதி -சந்திரன்' எனும் பருப்பொருளிலிருந்தே இது வந்திருக்குமெனச்  சொல் வரலாறு காட்டுவார். இதுபோல், பருப்பொருளறிவுக் கருத்திலிருந்து (ஞோ>நோ) மெய்ப்பொருளறிவு சுட்டும் ”ஞானம்” எழுந்தது. நல்லென்ற கருத்துமுதலும் நெல்லெனும் பருப்பொருளிற் தோன்றியதே. பல்லவர் (பின்னாற் பேரரசுச் சோழ,பாண்டியர்) பார்ப்பனர்க்குக் கொடுத்த ஊர்கள் சதுர்வேத மங்கலங்களென்றும், பார்ப்பனர் அல்லாதார்க்குக் கொடுத்தவை நெல்லூர்> நல்லூர் என்றும் நம்மூரில் ஆயின. சென்னையை அடுத்த சோழங்க நெல்லூர் இப்படியே சோழிங்க நல்லூராயிற்று. (மங்கலம், நல்லூர், நகரம், காமம், ஊர் பற்றி வேறு கட்டுரையில் சொல்வேன்.) நாம் ஆழ்ந்து பார்த்தால், அவரின் பார்வை, சொற்பிறப்பியல் ஆய்வில் நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.

ஐம்புலன் சொற்களிலிருந்து கருத்துமுதற் சொற்கள் எழுவதோடு, இன்னுமோர் கருத்துமுண்டு. எம்மொழியிலும் பொதுமையில் (generic) தொடங்கி விதுமைக்கு (specific) கருத்து வளராது. விதுமையிலிருந்தே பொதுமைக்கு ஏகும். இயல் மொழியில் சொற்சிந்தனை அப்படியே வளரும். மார்க்சிய முரணியக்கச் சிந்தனையும் (Marxian Dialectical thinking) இதையே சொல்லும். இதுபற்றி என் கட்டுரைகளில் சொல்லியுள்ளேன். எ.கா: தமிழர் பால், கொழுப்பிலிருந்தே நெய்ப்பொருளை முதலிற் கண்டார். அறிவுகூடி, நுட்பந் துலங்கி, எள்வித்தில் நெய்யெடுத்தவன், எள்நெய் (=எண்ணெய்) என்றே சொன்னான். பின்னால் கடலை, தேங்காய், ஏன் மண்ணில் கிட்டியவைகளையும் எண்ணெய்ப் பொதுமை கொண்டு, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், மண் எண்ணெய் எனும் விதுமையாய் அழைக்கத் தொடங்கினான்.

மொழியிற் கருத்து/சொல் வளர்ச்சி, இப்படி நீள்சுருளாய் (helical spring), மறுகித் தோன்றி, விதுமையும் பொதுமையுமாய் எவ்வளித்துச் சொற்களை உருவாக்கும். (எழுவுதல் எவ்வுதலாய்த் தொகுந்தது. எகிறுதலென்றும் பொருள் கொள்ளும், evolve= எவ்வளிப்பது. எல்லாவற்றையும் ’வளர்ச்சியாக்கி’ எவ்வுதலை மறக்க வேண்டாம்.) 'நெய்'  ஆவின் நெய்யாய் விதுமையிற் தோன்றியிருக்க வேண்டும். (’நெய்’ வரலாறு அறிந்தேனில்லை.) பின் 'நெய்', பொதுமைக் குறியீடாகி, 'எள்நெய்' விதுமைக் குறியீடாகி, முடிவில் 'எண்ணெய்' பொதுமைக் குறியீடாக மீண்டும் வளர்ந்திருக்கிறது.

------------------------------------------

மேற்சொன்ன புரிதலோடு சுவைக்கு வருவோம். இங்கும் பொதுமைக் கருத்து முதலுக்கு அடிப்படை, ஐம்புலன் சொல்லாகவே உள்ளது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு ஆகிய ஆறு விதப்புக்களை நாவால் உணர்வதாலேயே (இவற்றுள் இடையுலப்பு (overlap) உண்டு) ”சுவை” எழுந்திருக்கும். (நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனும் 8 மெய்ப்பாட்டுச் சொற்களை இங்கு பேசவில்லை. அவை நாகரிகம் வளர்ந்த நிலையில் ஏற்பட்டிருக்கலாம்.) சரி,  சுவையை எப்படி உணர்கிறோம்?  

நாக்கில் 1000 கணக்காய் சிற்சிறு உப்பல்களும் (papillae), அவற்றுள் சுவைத் தளிர்கள் எனும் உணர்கருவிகளும், உணர்கருவிகளுக்குள் மயிர் போல் தோற்றும் நூகுளை (microvillus) உணரிகளும் (sensors) உள்ளன.  தாடை/பற்களின் இயக்கத்தால்,  உணவு கடிபட்டு, மென்பட்டு, அரைபட்டு, வாய்நீரால் குழம்பாகி. நூகுளைகள் தூண்டுற்று, ”எச்சுவை?” என்று தாம் மதித்த செய்ஞையை (signal) மூளைக்கு அனுப்ப,   அங்கு தேங்கிய பதிவுகளோடு ஒப்பிட்டு, ”நாக்குணர்வது இனிப்பா, புளிப்பா, உவர்ப்பா, துவர்ப்பா, கார்ப்பா, கசப்பா?” என மூளை முடிவு செய்கிறது.   

நிரவல் மாந்தனுக்கு 10000 சுவைத்தளிர்கள் உள்ளதாம். ஒவ்வோர் பக்கலும் (fortnight) இவை புதிதாகின்றனவாம்.  முதியோரிடம் தளிர்கள் புதுக்காததால், 5000 அளவிலே சுவைத்தளிர்கள் குறைந்து போவதால், சுவை காண்பதில் தடுமாறலாமாம். புகைபிடிப்போரிடமும் சுவைத்தளிர் குறைவதால், அவரும் தடுமாறலாமாம். சுவை காண்பதில் சுவைத்தளிர்கள் மட்டுமன்றி, உச்சி மூக்கின் விரையுணர் பெறுதருக்கும் (Olfactory receptors) பங்குண்டு. சுவைத் தளிர்களும், விரையுணர்விகளும் சேர்ந்தே மூளைக்குச் செய்தி அனுப்பும். மெல்லும் போது, உணவு சில வேதிகளை வெளியிட, அவை மூக்கில் தாக்க, விரையுணர் பெறுதர்கள் தூண்டப்படுகின்றன. மூக்கும் நாக்கும் சேர்ந்தே உணவு விரைச் சுவையைக் (flavor) கண்டுபிடிக்கின்றன.  தடுமன் பிடித்துச் சளி, மூக்கை அடைத்தால், விரைச்சுவை காண்பது கடினமாகும். ஏனெனில் அப்போது விரையுணர் பெருதர் உள்ள உச்சிமூக்கை வேதிகள் போய்ச் சேராததால், மூளைக்கு விரைச்சுவை சரியாய்த் தெரிவதில்லை. சுவையை ஆய்வதற்கு முன்னால் உணவிற்கான சில பொதுச் சொற்களையும், தின்பன, பருகுவன பற்றிய சொற்களையும் பார்ப்போம். 

”ஆ” வாயொலி அங்காத்தலையும், அவ்>அவ்வு இன் திரிவான ”ஊ” வாய் மூடுவதையும் குறிக்கும். ”ஊ” வளர்ச்சியாய் வாயுள் உணவு ஏகும் வினை குறிக்க ஊ>*ஊள்>உள் என்ற சொல் எழுந்தது. இது வளர்ந்து *ஊள்>ஊண் ஆகியது. இன்னும் வளர்ச்சியில் ஊண்>உண்>உணவு ஆகும். உண்ணுவது, உண்டுமாகும், (உண்டேன்.) உண்டால், ”உண்டி” கிளைக்கும். தொடக்கில் ஊண்/ஊன் இடையே வேறுபாடில்லை. ”ஊண்” என்பது விலங்கு வழி கிடைக்கும் ஊனையே முதலில் குறித்தது. அப்போது மாந்தவுணவு பெரிதும் ஊனே. மரக்கறி அல்ல. நெடுநாட்கள் கழித்து, நாகரிகம் எழுந்தபிறகே, சில மனத்தடைகளால், மாந்தர் மரக்கறி உண்டார். வெவ்வேறு கால மாந்தரின் கவாலக் (கபாலம்) கொண்மையை அளந்து, மாந்த வளர்ச்சியை உன்னித்த மாந்தவியல் அறிஞர் ஊனால் மாந்த மூளையளவு பெருகியது என்பார். *ஊள்+து>ஊட்டு = இன்னொருவருக்கு உட்செலுத்துவது. பெயராகவும் வினையாகவும் பயனுறும். ஊட்டு+இ = ஊட்டி = உண்ணப்படும் உணவு. உண்டும் பெயராகும். உண்டு+இ = உண்டி.  

மேற்கூறியவை போகப் பதம், இரை, அசனம், ஓதனம்,  வல்சி, ஆக்காரம், உறை என்ற சொற்களையும் உணவுப் பொதுப்பெயராக்குவர்  ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். முதலில் வருவது பதம். பல்லில் படுவது பதம். படு>பது>பதம் எனச் சொல்வளர்ச்சி காட்டும். 2 ஆவது, இரை. பல்லால் கடித்து இற்றப் படுவதால் (இறுக்கப் படுவதால்), அது இற்று>இற்றை>இறை>இரை. 3 ஆவது அசனம். பார்ப்பதற்கு வடமொழி போல் தோன்றும். பல்லின் இடையில் உணவுத் துண்டுகளை இட்டுத்  தாடைகளை அசைத்துக் கடிப்பதால் இது அசனமாகும்.  4 ஆவது ஓதனம் இரைபட்ட உணவை தன் சத்தை உவந்து வெளிப்படுத்துவதால் உணவு ஓதனமாயிற்று. உவதல்> ஓதல் = வெளிவரல். உவக்களித்தல்> ஓக்களித்தலை நினைவு கொள்ளுங்கள்.  5 ஆவது வல்சி. வல்லுறுதல் = வல்வினைக்கு ஆளாதல். வல்லுற்றது = வல்யி>வல்சி ஆகும்,  6 ஆவது ஆகாரம். வாயை அங்காத்து (=ஆஃக்/ஆஹ் எனத் திறந்தல்) நிரைப்பது ஆகு + ஆரம் = ஆகாரம். முடிவில் 7 ஆவது சொல் இறை. வாய்க்குள் அடைத்துக் கடித்து இரைபட்டவுடன், தன்சுவைகளை உறுத்திக் காட்டுவதால் உறை, 

உணவுப் பெயர் போலத் துற்றி, திற்றி என்பன தின்னப்படும் திண்மப் பொருளுகான விதப்புப் பெயர்களாகும். துல்>துள் என்பது துளையிடலைக் குறிக்கும் வேர்ச்சொல். துல்>துல்நம்>துன்னம் = துளை. ஊசியால் துளை யிட்டுப் பின் தைக்கிறவர் துன்னகாரர் என்றும் தையலார் என்றும் சொல்லப் படுவார். துன்னகாரர் என்பது முதல் வேலையால் எழுந்த பெயர், தையலார் என்பது இரண்டாம் வேலையால் எழுந்த பெயர். வாயில் முன்னிருக்கும் பற்கள் திண்மத்தில் துளையிடும் வேலை செய்கின்றன. அதனால் துன்னுதல் என்ற சொல் உணவை ஒட்டியும் எழுந்தது பின் அது தின்னுதல் என்று திரியும். துன்னுதல் என்பதைக் கொச்சை வழக்கு என்றும் தின்னுதல் பண்டிதர் வழக்கு என்றும் சில ஆசிரியர் சொல்வர். தவறு. துன்னுதலே சரியான வழக்கு. பொத்தகம்>புத்தகம்  போல் இதுவும் தலைகீழ் புரிதலாய் இன்றிருக்கிறது. துல்>துல்_து = துற்று>துற்றி என்பதும், துற்றி>திற்றி என்பதும் இயல்பான வளர்ச்சிகளாகும். 

அடுத்தது பருகுவன பற்றிய சொற்கள். பானம், துவை பற்றியது. பல் என்பது பன்மைக்கான வேர்ச்சொல். பல்குதல்> பலுகுதல்> பருகுதல் என்பது பல் துளிகளாய்ப் பெருகுதல்  இங்கே வாய்க்குள் நீர்மம் பருகுகிறது/ பெருகுகிறது. அதே பல்குதல்> பகுதல்>பாத்ல் என்பதும் பெருகுதலைக் குறிக்கும்.  பாநம்> பானம் என்பது பருகும் நீர்மம். இதையும் தவறாய் வடமொழி என்பார். ஆழ்ந்து ஓர்ந்தால் அப்படியில்லை.  துள்ளுவது துளிப்பது போல் துள்கவும் செய்யும். துள்கு-> துள்வு-> துவ்வு- துவ்வுதல் என்பது குடிப்பது தான். துவ்வப்படுவது துவ்வை>துவை. 

குடித்தல் என்பது குள்>கொள்ளுதலைக் குறிக்கும். உள்ளுவது போலவே கொள்ளுவதும் வாய்க்குள் செல்வதைக் குறிக்கும். குள்>குடு>குடி என்பது அப்படிப் பிறந்தது. துல்>துரு>தூர் என்பதும் துளி யாதலைக் குறிக்கும். மழைத் துளித் துளியாய்ப் பெய்தால் தூர்கிறது என்கிறோமே?்நினைவு கொள்க. தூரித்தல், துரிங்குதல் என்பன இதன் வழிச் சொற்கள். துரிங்கு- என்ற சொல் நம்மிடம் இல்லை. இந்தோயிரோப்பியனில் உள்ளது. Drink.


No comments: