Tuesday, March 01, 2022

பகரப் பெயர்களும் அவற்றின் சில நீட்சிகளும்.

தமிழ்த் தோற்றத்தை 100000 - 50000 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று தமிழைப் பாவாணர் முதல்மொழி ஆக்குவார். இன்றைக்கு நமக்குத் தெரிந்த பட்டகைகளோடு உரசிப் பார்த்தால் அவர் முடிவு நிற்காது. இற்றை வரலாற்று மொழியாய்வின் படி, ”தமிழ் முதன்மொழியா?” என இன்னும் எனக்குத் தெரியாது. ஆனால்  ”கட்டாயம் மிகப் பழைய மொழி” என உறுதி சொல்வேன். ஒரு புறம் இப்படி முயல்கையில் இன்னொரு புறம் சிந்துவெளிச் சோதியில் தமிழரைக் கலக்கச் சிலர் துடிப்பதையும் பார்க்கிறேன். தமிழர் தோற்றை சிந்துவெளி, அதன் மேற்கே இலமைத்துகள் என நிறுத்தி, ”தமிழ்த்தோற்றம் 4000 ஆண்டுகளுக்கும் குறைவு,  தமிழ்நாட்டுள் தமிழர் நுழைவு பொ. உ. மு. 1800 க்கு அப்புறமே” என ஆணியடிப்பதில். புறம் 201 ஐ  அரைகுறையாகப் புரிந்து தொங்குவதில், இவருக்கு அளப்பரிய  ஆர்வம். குறுங்காலத்தில் தமிழரை அடைக்கத் துடிக்கும் இதுபோன்ற திராவிடப் போக்கு எங்கு நம்மைக் கொண்டுசெல்லும் என்பது தெரியவில்லை.. 

என் கணிப்பில், தமிழ்மொழி  20000 ஆண்டுகளுக்கு முன் இப்போதைய நிலப் பரப்பில் தோன்றியிருக்கலாம் என்றே சொல்வேன். இங்கிருந்தே தமிழரில் சிலர் வடக்கு ஏகிச் சிந்து வெளியில் நிலைத்திருக்கலாம். (இதுவரை தெரிந்த ஈனியல் போக்குகள் அதை மறுக்கவே இல்லை. சிந்துவெளி மாந்தருக்கும் இருளருக்கும் தொடர்பு சொன்னவர் கூட, தெற்கிருந்து வடக்கு  அல்லது வடக்கிருந்து தெற்கு என்று திசை சொன்னாரா, என்ன?)  ஏன், மேற்கொண்டு நடந்த நகர்ச்சியில், பிராகுவிகளாயும், எலாமைத்துகளாகவும் கூடத் தமிழர் மாறியிருக்கலாம். அவையெலாம் வெவ்வேறு ஆய்வுகள். இங்கு அவற்றைச் சொல்வதில் பொருளில்லை.  (கால விளக்கம் வேறு கட்டுரையில் வரும்) இங்கே ஒரு முன்னிகையாய் அதைச்சொல்ல முயன்றதற்கு ஒரு காரணம் பகரப் பெயர்களாகும். ”மொழி வளர்ச்சியின் வெவ்வேறு காலங்களில் தமிழ்ப் பகரப் பெயர்கள் கீழ்வரும்படி திரிந்தெழுந்தன” என்று பாவாணர் வழியார் சொல்வார்.

தன்மை: யா(ன்/ம்)>ஞா(ன்/ம்)>நா(ன்/ம்), 

தன்மை உடைமை: யா(ன்/ம்)>யெ(ன்/ம்)>எ(ன்/ம்)

முன்மை: நூ(ன்/ம்)>நு(ன்ம்),>நி(ன்/ம்)>நீ(ன்/ம்)>நீ.  

முன்மை உடைமை: நூ(ன்/ம்)>நு(ன்/ம்)>உ(ன்/ம்)

படர்க்கை. (அ/இ/உ)வ(ன்/ள்/ர்), (அ/அஃ)(து/வை)

படர்க்கை உடைமைக்குத் தனிச்சொல்லில்லை. வேற்றுமை உருபுகளால் சொல்லப்படும்.

இவை போக, தா(ன்/ம்)>த(ன்/ம்) பயன்பாடுமுண்டு. உடம்பெனும் மெய் தவிர்த்து ஒவ்வொரு வாழி (living being)யுள்ளும் உயிருள்ள கருத்தை (எழுத்து இலக்கணம் எழு முன்பே) தமிழர் கொண்டதை இது குறிக்கும்.  எ(ன்/ம்), உ(ன்/ம்), (அ/இ/உ)வ(ன்/ள்/ர்), அ(து/வை) எனில் உடம்பும் உயிரும் சேர்ந்த நிலை. [உயிரிலா அ(து/வை)யுமுண்டு)]. என்/ம்)த(ன்/ம்). உ(ன்/ம்)த(ன்/ம்), அவ(ன்/ர்)த(ன்/ம்), அவ(ள்/ர்)த(ன்/ம்), அ(தன்), அவை(தம்) எனில் உயிர்மட்டும் விதப்பாய்க் குறிக்கப்படும், ”என்றன் உடம்பு” எனில் ”என் உயிரின் உடம்பு” என்றாகும். ”அவன்றன் வீடு எனும் போது ”அவன் உயிருக்குச் சொந்தமான வீடு” என்று பொருளாகும்., இவ்வீடு கல், மண் மரம், மாழை சேர்ந்ததாகலாம். உடம்புமாகலாம். ஆழச் சிந்திந்து வேறுபாடுணர்க. 

மேலவை போக, ”தன்/ம்” என்பது தனித்தும் பயனாகலாம்.  உடம்பு/ உயிரைப் பிரித்துச் சொல்லும் பழக்கம் தமிழில் எப்போது எழுந்ததென்று தெரியாது. ஆனால் த(ன்/ம்) என்பதை உடம்பு, உயிர் வேறுபாடன்றிப் புரிந்துகொள்வது கடினம்.  இப்படிப் பிரித்துணர்வது பழம் மாந்தனுக்கு இயல்பென்றே தோன்றுகிறது. அவனுக்கு உயிரை வரையறுக்கத் தெரியாது போகலாம். ஆனால் கண்ணெதிரே, விலங்குகளால் இறப்பு, கொலை நடந்தபோது உணராது போவானோ? எனவே ஆதி மொழிப் பேச்சில் உயிரை அவனால் உருவகிக்க முடியும்.  தா(ன்/ம்), த(ன்/ம்) என்பதன் நீண்ட விளக்கத்தை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

சரி, ”யான், நூன், (அ/இ/உ)வ(ன்/ள்/ர்) எனும் மூலச்சொற்கள் எப்படிப் பிறந்தன?” எனில், ”ஏ, நூ” விற்கு ”உயர்வுப்” பொருளும்,  அ/இ/உ ”சுட்டுகள்” என்றும் சொல்வார்   உயர்வு என்பது அடிப்படையில் கருத்துமுதல் (conceptual based) சொல்.. பாவாணரின் ஆதிச்சொற்கள் எல்லாம் பெரும்பாலும் கருத்து முதலாகவே உள்ளன. இவ்வமைப்பில் பாவாணரோடு நான ஒருப் படேன். நான் பெரும்பாலும் பொருள்முதல் (materialistic) சொற்களையே மூலமாய்த் தேடுவேன். பழவுலகின் பெரும்பாலான மாந்தர்  இகர உயிரிலோ, அன்றேல் அதன் போலியான யகர மெய்யிலோ தான் தம்மைக் குறிப்பார். விலங்கில் இருந்து மாந்தர் கிளைத்தது பேச்வினால் தான் என இற்றை அறிவியல் கூறும். இரண்டையும் பொருத்தி, அதாவது  யாவோடு, ”ஆல்” ஒலிக்குறிப்பைச் சேர்த்தால் (ஆல்தல் = ஒலித்தல். அது பொருள்முதற் சொல்.). ”யால்” என்னும் சொல் கிட்டும். வெறும் பேசுதலுக்கு மாறாய் ”நான் பேசு-தல்” என யாலுக்குப் பொருள் சொல்லலாம். . இதன் வழி,  யால்>யான் = பேசும் நான் எனத் தன்மைப் பகரப்பெயரைப் புரிந்துகொள்ளலாம். 

இனி, முன்மைக்கு வருவோம். நுகரமும், முகரமும் தமிழில் போலிகள். முன்மை என்பது முன் இடம். முல்-தல் = முன்வரும் செயல். தவிர, முல்-தல் என்பது மொழிதலின் முன்னிலை.  முள்> முள்> மொள்> மொழு> மொழி-தல் என்பதையும் அது குறிக்கும்.  முல்>நுல் எனபதும் முன்வரும் செயலை, நுல்?நுல்வு>நுவ்வு>நுவல்->நூல்- என்று பேசுதலைக் குறிக்க்கும்.  இன்னும் நீட்சியாய், முல்>நுல்>நுன்>நூன் எனில் முன்வரும் ஆளைக் (ஆண்,பெண் யாராகினும்) குறிக்கும். நு(ன்/ம்) என்பதை நூ(ன்/ம்) என்பதில் வந்ததாய்ப்  பாவாணர் கொள்வார். நான் நு(ன்/ம்) என்பதிலிருந்து நூ(ன்/ம்) எழுந்ததாய்க் கொள்வேன்.   

அடுத்தது படர்க்கை. வல்> உல்> உர்> உரும், வல்> வள்> வாள் என்பன வன்மையாய் எழும் விலங்கொலிகளைக் குறிக்கும். வல்> வன், வல்> வள், வல்> வர் என்பனவும் அதே பொருளனவே.  அ/இ/உ என்னும் முச்சுட்டுக்களோடு வன்/வள்/வர் என்பவற்றைச் சேர்த்துப் படர்க்கைப் பெயர் எழுந்ததாகவே நான் கொள்வேன். அவன்>ஆன்>அன் என்பது அடுத்த நிலைத் திரிவு. அன் ஆண்பால் படர்க்கை விகுதியாகும். அவள்>ஆள்>அள் பெண்பால் படர்க்கை விகுதியாகும். அவர்>ஆர்.>அர் பலர்பால் படர்க்கை விகுதியாகும். ஒழுங்காய்ப் பேசத் தெரியாத, ஒருசில அங்காகத்தல் ஒலிகளை மட்டும் தெரிந்த விலங்குகளே முதலில் அல்து>அஃது>அது எனப்பட்டன. பின் உயிரெல்லாதனவும் சேர்த்து அஃறினை எழுந்திருக்கலாம்.  

அடுத்து, மொல்>ஒல்>ஒலி என இன்னொரு ஒலிப்புச் சொல் பிறந்ததாய்க் கொள்ளலாம்  எந்த இடப்பெயரோடும் சேராது இது பொதுவாகப் பயனாகி இருக்கலாம். அடுத்து, எல்>எல்லுதல் = கூப்பிடுதல் என்பதற்கு வருவோம். “அஞ்சியோ, மிகமகிழ்விலோ சத்தம் போடுதல்” என்ற பொருளில் yell இந்தையிரோப்ப்பியனில் வரும். தமிழிலும் எல்-தல் உண்டு. ”சொல்லுதல், ஒலித்தல்” பொருளில் அமையும். எல்- எனும் அடிச்சொல் மறந்து, எல்>என் எனும் நீட்சியே இன்று புழங்குகிறோம். இது சங்க காலத்திலேயே உண்டு. ”என்றேன், என்கிறாய், என்பான்/ள்?ர்” என முக்காலத்தும் பயன்படுத்துவோம். ”என்னு/என்கு-தல், என்ப, என்ம” என்ற பயன்பாடுகளும் உண்டு எல்லாவறிற்கும் எல்>என் நீட்சியே தொடக்கம். ”சரி, எல்>ஏல் பயன்பாடு எங்கே?” எனில், ”அழைப்பில் மட்டுமுள்ளது” என விடையிறுக்கலாம்., எல்>எல்ல>எல்லா, எல்லே> எலே>எளே>எடே, எல்லா> எலா> எளா> எடா, எல்லி> எலி> எளி> எடி, ஏலா, எலேலோ, ஏலே> ஏளே> ஏடா, ஏடி எனப் பலவும் எல்-தலில் பிறந்தவையே. தவிர, ஏல் தல் = எதிர்கொள்ளுதல், எதிர்த்தல், பொருந்தல் என்ற் நீட்சிப் பொருள்களும்  அமையும்.

எல்லுவோர் ”நம்மோடு சேர்ந்த மாந்தர்” என்றே கொள்ளப்படுவார். ”எல்லோன்/ள்/ர், எல்லவன்/ள்?ர், எல்லது/வை, எல்லாம், எல்லீர், எல்லார், எல்லோர் (= எல்லார்+எல்லீர்)” என்று பல சொற்கள் இதன் வழி கிளைக்கும். எல்கிறவருக்கு “கூட இருப்பவர்” என்ற பன்மைப் பொருள் இரண்டாம் நிலையில் வந்துசேரும். இனி, அனைத்து என்பதற்கு வருவோம்.

எல்கு-தல்> ஏகு-தல்  என்பது ”கூடல், ஒன்றுசேரல்” என்ற பொருள் கொள்ளும்.  ”எல்லோரும்” என்பது கூட்டம். அல்லது தொகுதி. பல தொகுதி இருப்பின், 1 தொகுதி, 2 தொகுதிலள், ------- என மேலும் விரியும். ஏகு-தல் சொல்லிற்கு, ஒரு தொகுதிக்குக் கீழே பன்மையும். ஒரு தொகுதிக்கு மேல் பல தொகுதிகளைத் தொட்டால் ஒருமையும் பொருளாகும். ”முரணியக்க எதிர்கள் (dialectical opposites)” என்று மார்க்சியத்தில் சொல்வது இவை போன்றவை தாம். சொற்களிலும் இப்படி அமையலாம். ஒரே சொல் ஒரு பார்வையில் ஒருமையும், இன்னொரு பார்வையில் பன்மையும் காட்டும். ஏகு-தல்> ஏகு> ஏகம் என்பது அப்படிப்பட்ட சொல். ஏகம் தமிழ்ச்சொல்லே. மொழியியல் புரியாரே, அதைச் சங்கதச்சொல் என்பார்.

அடுத்து,  அன்+ஏகம் = அனேகம் என்பதற்கு “ஒன்று அல்லாதது” என்ற பொருள் வரும் . அனேகம் என்பது பன்மை குறிக்கும் சொல். ”அனேகத்து உறுப்பினர்” என்பது ”அனைத்து உறுப்பினர்” என்று பேச்சுவழக்கில் ஆகும். இத்தோற்றம் புரியாமல் நம்மில் அனேகர் “அனேகம்>அநேகம்” என்பது  சங்கதம் என்பார்.  ஆனால் அனைத்து என்பது தமிழென்பார். என்ன வேடிக்கை? பாருங்கள். ”அத்துச் சாரியை” ஊடே வருவது நமக்கு உண்மையை விளக்க வில்லையா?  இங்கிருந்து கடன்போய் அங்கு ஏற்றுக்கொள்ளப் பட்ட ஏகத்தை வடபால் மொழிகள் ஒன்று என்ற பொருளில் பயிலும். இந்தியில் ஏக் என்கிறாரே? அத ஏகத்தின்  குறைவு, மறவாதீர்.  ஏகத்திற்குப் பன்மைப் பொருளும் உண்டு. ஒருமைப் பொருளும்  உண்டு.

”ஒன்றுபட்ட சங்கம் - ஏகுற்ற சங்கம் - ஏகிய சங்கம்” என்று  சொல்லும் போது ஏகிய என்பது பெயரடை . சங்கம் என்பது பெயர். பொதுவாய்ச் சங்கதம் போன்ற சொல்திரிவு மொழிகளில்  (Inflective languages) முதல் பெயர்ச்சொல்லின் முதலெழுத்தைத் திரித்தே  பெயரடை உருவாக்குவர். பின் அப்பெயரடையை இரண்டாம் பெயரோடு ஒட்டுவர். அதன்படி, தமிழில் இருந்த  கடன் பெற்ற ஏகத்தை “ஐக்கிய” என்று திரித்துப் பயன்படுத்துவர்.  அண்மையில் திரு ஒப்பிலாமணி அழகர், தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில், “ஐக்கியம் என்ற சொல் தமிழ் இல்லை என்று சொல்வது சரியா? அதற்கான தமிழ்ச்சொல் என்ன? ஐக்கிய நாடுகள் சபை எனச்சொல்லி வருகிறோமே?” என்று கேட்டிருந்தார்.. அவருக்கு விடைசொல்ல முற்படுகையில்,  முழுப் பகரப்பெயர் விவரங்களைக் கொண்டு தனிக் கட்டுரை எழுதுவது நல்லதென்று தோன்றியது. எழுதி விட்டேன். 


No comments: