Friday, March 18, 2022

அறுசுவைகள் - 2

இனிச் சுவையின் சொற்பிறப்பிற்கு வருவோம். இதன் மாற்று வடிவாய்ச் ”சுவடு” என்பதுமுண்டு. “அடிமையிற் சுவடறிந்த” (ஈடு.2.6:5). சுவடன் (=சுவைஞன்) என்ற வளர்ச்சியும் அதே ஈட்டில் காட்டப் பெறும். (”சுவடர் பூச்சூடும்போது புழுகிலே தோய்த்துச் சூடுமாப் போலே” (திவ்.திருப்ப. 9 வியா.) ”சுவண்டை” இன்சுவையைக் குறிக்கும். இத்தனை சொற்களுக்கும், சுவைத்தலின் அடிப்படையாய் வேறு வினைச்சொல் அகரமுதலியிற் காட்டப்படவில்லை. ஆக, இச்சொற்கள் அப்பூதியாகவே (abstract) காட்சி தருகின்றன. இவை கடன் சொற்களா எனில். இல்லை. சுவைத்தல் என்பது தமிழில் மட்டுமின்றி, மற்ற தமிழிய மொழிகளிலும் புழங்குகிறது [ம. சுவய்க்குக, க.சவி, தெ:சவிகொனு, து.சம்பி, சவி, கோத.சய்வ், நா.சவத், கொலா.) தமிழில் ஐகாரமும், டுகாரம் சொல்லாக்க ஈறுகள். ஆழ்ந்து ஓர்ந்தால், "சொவச்சொவ / சவச்சவ" எனும் ஒலிக்குறிப்பே இவற்றின் வேராய்த் தோன்றுகிறது.

taste-ற்கு வேர் தெரியாதென ஆங்கில அகராதிகள் பதிந்தாலும், ”நாக்காற் தடவல், மெல்லல், உணரல் போன்றவையே முன்வினை” என்பார். to become soft என்பதை ஓர்ந்தால், கூட்டுவினை என்பது புரியும். சில பொருட்கள் soft உம், சில hard உம் ஆனவை. hard-ற்கு இணை கடினம். (கடித்தல் வினை). ஆனால் soft-ற்கு ”மெல்” என்பது பகரியாகவே உள்ளது. near description; not the real thing. அதனால் தான் விதப்பான வேறு சொல் taste இற்கு இருந்திருக்கும் என்கிறோம். கடிபட்டு, மென்பட்டு, சில்லாகி, தன்மேல் அழுத்தமுள்ள வரை கூனிக் குறுகி, மெலிந்து, வளைந்து, நெளிந்து, குழைந்து நொய்யாகிப் போனதை, பரப்பு வழவழவென்று ஆனதை, இத்தனையும் சேர்ந்து புதுப்பண்பு குறிக்கும் வகையில் சவ்வுதல் > சவைத்தல் > சுவைத்தல் என்ற வினைச் சொல்லும் ”சுவை” என்ற பெயர்ச் சொல்லும் கிளைத்தன. சவைக்கும் போது நா-வினையால் ஏற்படும் ஒலிக் குறிப்பே இவ்வினைச்சொல்லை உருவாக்குகிறது. (அதேபொழுது நூகுளை உணரிகளும், விரையுணர் பெறுதர்களும் சேர்ந்தே சுவையை அறிவதால், மெல் எனும் சொல் ஒரு கால், smell -ஐக் குறிக்கலாம். ஆய்ந்து பார்த்தால், முருகு, மரு என்ற இணைச்சொற்கள் தமிழில் உண்டு.)

soft என்பது வாயில் மெல்லும்போது திண்மம் (solid) சவைத்துப் போவதைக் குறிக்கிறது. ”என்ன இது சவச்சவ என்றிருக்கிறது?” என்கிறோமே? சிலர் வழக்கில் இது சுவையிலா நிலையையும் குறிக்கும். (மொள்ளல் வினை வழி மொழியும், ஒலியிலா மோனமும் எழுவதுபோல் இதைக் கொள்க. மோனம், முனங்குதல் என்ற இன்னொரு வினையும் எழும்பும்.) மெல்லுதல் வினையாற் சவைத்த நிலை (softy state) ஏற்படுகிறது. மெல்லுதல் என்பது சிறிய grinding-process- செயல்முறை; சவை என்பது தட நிலை - state. I prefer to use a state rather than a process here. மெல் என்பது சில இடங்களிற் சவைக்குப் பகரி ஆகலாமே ஒழிய முற்றிலும் அல்ல. சொவ்விய / சவ்விய நிலை, இயற்கையாலோ, மாந்தர் செய்கையாலோ ஏற்படலாம். மெல்லல் என்பது மாந்தச் செய்கை மட்டுமே. இந் நுணுக்கத்தைச் சொல்ல ஒலிக்குறிப்பைத் துணைக்கொண்டால் குடிமுழுகியா போகும்?  :-) (மெல்லை soft இற்கு இணையாக்குவதை நான் தவிர்ப்பேன்.) 

சவ்வியதின் தொழிற்பெயராய், மெல்லைப் பயனாக்குவதாய் மென் மூடு தோலைக் குறிப்பதாய்ச் சவ்வு (membrane) என்ற சொல் எழும். sago வின் சோற்றை, நொய்யான மாவுப் பொருளை, காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் சவ்வரிசி எனப்படும். சவ்வாதல், பிசின் (to be viscid) போலாவதைக் குறிக்கும். சவுக்குச் சவுக்கு எனும் அடுக்குத் தொடர் வளைந்து கொடுக்கும் குறிப்பைக் காட்டும். ”சவ்”வை ஒட்டிய இத்தனை சொற்களும் கடன் சொற்களா? வியப்பாய் இல்லையா? இவற்றின் வேர்கள் என்ன? சவத்தலுக்குத் தொடர்பான சப்புதலும் சப் எனும் ஒலிக்குறிப்பில் எழுந்ததே. இதுவும் தமிழிய மொழிகளில் பல்வேறு விதமாய்ப் புழங்கும். (ம.சப்புக; க.சப்பரிக, சப்படிக, சப்பளிக, தப்படிக; தெ.சப்பரிஞ்சு, சப்பு; து. சப்பரிபுனி; கோத.சப்; துட.செப்; குட.சப்பெ, சபெ; நா.சவ்ல்; பர்.சவ்ல்,சல்; மா.சொப்பு; பட.சப்பு).  சப்புதல் = அதுங்குதல் to be bent, pressed in, to become flat. சுவையில்லாது இருப்பதையும் சப்பென இருப்பதாய்க் குறிப்பதுண்டு.

இன்னொரு வளர்ச்சியாய், வாயில் மெல்லும் வழி சவளல், சவட்டல் சொற்கள் ஏற்பட்டு மிதித்தலைக் குறிக்கும். தென்பாண்டியில் ஒருகால் மிதிவண்டியைச் சவட்டுவண்டி என்றார்.  உறுதியிலாது வளைந்து கொடுப்பவன் சவடன். (”அஞ்சுபூத மடைசிய சவடனை” திருப்புகழ் 5.57). சவடால் = வீண் பகட்டுக் காட்டல். (இதை வேற்று மொழி என்பாருமுண்டு.) சவள் = நீரைச் சவட்டும் துடுப்பு.. சவளல் = வளைதல். சவள்தடி = துவளும் தடி, குந்தம்; சவளமென்பார். சவளக்காரர் = ஈட்டி வீரர். javelin ஐ சவளத்தோடு  பொருத்தினால், நம்மூர்ச் சட்டாம்பிள்ளைகள் நான் ஆங்கில ஒலிப்பைக் காட்டுவதாய்ச் சாடுவர். இவருடைய அறியாமைக்கு நான் அடிபடுவேன். சவளம் = நெளிவு காட்டும் புளியம்பழம். சவளன் = வளைகாலன். வளைந்துநெளி துணிச்சரக்கு ”சவளி”. அறியாமையால் சிலர் இதை ஜவளியாக்குவார். வடமொழியில் இது இல்லை. 

சவளைக்காரர் = நெசவார். சவு-த்தல் = மெலிதல் ( யாழ்.அகராதி) சவட்டி (அடிக்கப்) பயன்படும் வளைகருவி சவுக்காகும். சவண்டிலை = நெளிவு இலை. சவள்> சவண்> சவணம் = மாழைக்கம்பி இழுக்கும் கம்மியக் கருவி. சவலைப் பிள்ளை = ஆண்டுவளர்ச்சி பெற்றும் உடலுறுதி பெறாது, துவளும் பிள்ளை. சவலைக்குள் soft இருப்பதை எளிதாய் உணரலாம். ”சவலை” திருவாசகத்திலும் பயிலும். tender பொருளும் அதற்குண்டு. சவலைக் கதிர் = தவச மணி இல்லாக் கதிர், உள்ளீடிலாக் கதிர்,  தனிச்சொல்லின்றி 2 குறள்பாக்களை இணைப்பது சவலை வெண்பா.  தனிச்சொல்லே நேரிசை வெண்பாவிற்கு உறுதி தரும். .

தொல்காப்பியத்தில் 3 இடங்களிலும், சங்க இலக்கியத்தில் 31  இடங்களில் ”சுவை” பயிலப்பட்டுள்ளது. எனவே அது நாட்பட்ட சொல் தான். சுவைக்கு இணையாய்ச் ”சாரம், இரதம், இனிமை” என்று திவாகரமும், ”தீம், இரதம், இன்சுவை” என்று பிங்கலமும்  சொல்லும் சவடு>சவரு> சவரம்>சாரம் என்பது இயல்பான வளர்ச்சி வாய்க்குள் உணவுத் துண்டித்துச் சவட்டிப் பெறுவது சாரம். அடுத்தது இரதம். உள் எனும் வேர், உராய்தலின் தொடக்கம். கடை வாய்ப் பற்களின் அடியில் கடித்து உராய்ந்து பெறுவது சுவை. உராய்தல் என்பது தன்வினை. .உராய்த்தல் பிறவினை. உராய்த்தலின் திரிவு உரத்தல். உரத்தம்>உரதம் என்பது அதன் பெயர். இனிமைத் தாக்கத்தால் உகர முன்மை  இழந்து இகர முன்மை எழும். உரதம் இரதமாகும். (இரதப் பெயர் கொண்டவள் இரதி. காமனின் காதலி. சுவையானவள் என்று பொருள் கொள்ளும்.). இன்னொரு வழியில் உரயுதல்> உரசுதல் ஆகும். உர(/ரி)ஞ்சுதல் என்றும், உரசுதல்>உருசுதல் என்றும் திரியும். உருசிப்பெற்றது உருசி. சங்கதத்தில் இதைக் கடன் வாங்கி ருசி ஆக்குவார். உராய்தல் எனும் தமிழ் மூலம் தெரியாதோர், சங்கதத்திடமிருந்து தமிழ் கடன் வாங்கியதென்பார். 

அடுத்தது இனிமை.  தித்திப்பின் விதப்பின்றிச் சுவையெனும் பொதுவிற்கும் இணையாய்ப் பயனாகியுள்ளது. தொல்காப்பியத்தில் 2 முறையும், சங்க இலக்கியத்தில் 268 முறையும் பயனாகும். இதில் எத்தனை முறை தித்திப்புப் பொருள், எத்தனை முறை சுவைப்பொது என்ற கணக்கிற்குள் நான் போக வில்லை. ஏனெனில் பொறுமையுடன் செய்யவேண்டும். சொற்பிறப்பிற்குள் வருவோம். மேலே இற்றுதல் பற்றிச் சொன்னேனே? நினைவுள்ளதா?.  இதன் வேர் இல்.. இல்(லு)தல் = குத்தல் to pierce, துளைத்தல் to make a hole, பிளத்தல் to cut into two, கீறல் to divide; பொடித்தல், நுண்ணிதாக்கல். இல்லி- துளை.  கடற் கரையில் இல்லித் துளைத்துப் போவது இல்லிப்பூச்சி.  இல்>ஈல்>ஈர்> ஈர்ந்தை= பொடுகு, பேன்முட்டை.  இல்லிக்குடம்= ஓட்டைக்குடம்,  கல்லில் இல்லியது (=தோண்டியது, துளைத்தது) இல் = மலைக்குகை இல்>ஈல்>ஈ என்றாலும் குகை.  

ஈ= அம்பு. இல்>இள்>ஈள்>ஈட்டு = செலுத்து, குத்து. ஈள்கருவி = ஈட்டி. ஈல்/ஈர்- = பிரி-, பிள-.  ஈர்>ஈ- = பிரி-, பிள-. ஈல்>ஈலி = கைவாள் (sword), சுரிகை (dagger). ஈர்தல் = இரண்டாக்கல். பனை/ தெங்கு/ ஈச்சையின் ஓலைக்காம்பை ஈர்ப்பது ஈர்க்கு. ஈர்ப்பொருள் நிறைந்தது ஈந்து. பேச்சுவழக்கில் ஈச்சு. ஈர்-இரு-இரள்-இரண்டு. ஓரெண்ணை இன்னொன்றால் வகுப்பது ஈல்தல். வகுத்துவரும் எண் = ஈல்வு>ஈர்வு>ஈவு.  ஆறு போகும் வழி இரண்டாகி மீண்டும் கூடின், நடுத்தீவு அரங்கம். *அருத்தது>அறுத்தது = அரங்கம். இன்னொரு சொல் இலங்கை. இல்லியதை (= அறுபட்டதை) இலங்கியது என்பார். (ஈழமும் ஈலில் எழுந்ததே.) ஓய்மாநாட்டு நல்லியக் கோடனின் ஊர் மாவிலங்கை. தென்பெண்ணையில் திண்டிவனம் அருகிலுள்ள ஆற்றுத் தீவு.

ஒருகாலத்திற் கடல்மட்டம் உயர்ந்து, முகனை நிலத்திலிருந்து (main land)ஈல்ந்து (>ஈழ்ந்து) பிரிந்தது Srilanka. ஈழம், இலங்கை இரண்டும் தமிழ்ச்சொற்களே. பழந்தமிழகம் என்பது இற்றைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இலங்கைத்தீவும் அதன் தெற்கே கடலுள் மூழ்கிய பகுதிகளும் சேர்ந்ததே. இற்றைத் தமிழ்நாடு - ஈழத்திற்கு இடைப்பட்ட கடற்பகுதியும், குமரியின் தெற்கே கடல்கொண்ட பகுதிகளும் எனக் கடலுக்குத் தமிழர் இழந்தது மிகுதி. ஆங்கிலத்தில் isle-ஐ ஈல்>ஈழ் என்றே பலுக்குவார். ”சொல் தோற்றம் தெரியாதி” என்றும் அகர முதலியிற் சொல்வார். island-ஐ  ”நீர்மேல் நிலம்” என்பார். ஈழமெனும் சொல் பார்த்தால் இப்படிச் சுற்றிவளைக்க வேண்டாம்.  இச்சொற்களின் தமிழ்த் தொடக்கம் புரியும். முகனை நிலத்திலிருந்து இன்னொரு நிலம் ஈல்ந்தது என்பதில் ஓர் அறிவியல் உண்மையுண்டு. ஈழமெனும் விதப்பு,, உலகத் தீவுகளைக் குறிக்க, மேலைநாடுகளிற் பொதுமைப் பெயரானதெனில், தமிழன் கடலோடியது எப்போது? தமிழன் தொன்மை எப்போது?

மேலே இல்-தல் எனில் துளைத்தல் என்றேன். துளைத்த பின் குறிப்பிட்ட இடத்தில் உள்ளீடு இருக்காது எனவே இன்மைப் பொருளும் துளைப்பொருளில் இருந்து, எழும்பும். இன்மைப் பொருளில் இருந்து ”இலம்பாடு” போன்ற வறுமைச் சொற்கள் எழும்.. இலகு போல் நொய்மைச் சொற்களும், இலவு போல் மென்மைச் சொற்களும் எழும்.  இல்>இன்னு என்பதும் நொய்மை, மென்மை போன்றவற்றைக் குறிக்கும் இலக்கமும் (=நூறாயிரம்) நொய்மைப் பொருளில் எழுந்ததே. இது தமிழிலிருந்து வடக்கேகிப் பெயர்ச்சொல்லாகி மிகப் பின்னாளில் தமிழுக்கே கடனாகியது. இலக்கத்தின் இணையான நெய்தல், நொய்தல்>நெய்தல் என்று பிறந்தது. நெய்தல் தமிழானால் இலக்கமும் தமிழே. அடுத்து இல்லித்தது இலியும்; பின் இழியும். இழிதல் = இறங்குதல். இது நீர்மம் இறங்குதற்கு விதப்பாய்ப் பயனாகும்.  இன்னியது நொய்யதானது, மென்மையானது என்று பொருளாகிச் சுவையின் பொதுச் சொல்லாகும். (இன்பமும் இனியதும் தொடர்புற்றதோ என நாம் மயங்கலாம். இரண்டும் நுண்ணிதாய் ஒன்றுபடினும் வெவ்வேறு பயன் கொண்டவை. இன்பத்தைப் பேசினால் கட்டுரை நீளும். எனவே தவிர்க்கிறேன்.)  

ஆக, சுவையின் சொற்பிறப்பு மிக ஆழம் கொண்டது. இனி அறுசுவைகளுக்குள் வருவோம். 


No comments: