Sunday, March 06, 2022

Fair

fair என்பதற்கான இணையாய், பலரும் "நேர்மையான, நேரிய, செவ்விய, கவினிய, தகவுடைய" என்ற சொற்களையே பயிலுகிறார். பாத்தி (compartment) பாத்தியாகப் பார்த்தால், இச்சொற்கள் அந்தப் பயன்பாட்டிற்குச் சரியாகத்தான் தோன்றுகின்றன. ஆனால் அப்பயன்பாட்டின் மூலம் ஒப்பேற்றும் உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. பலகாலமாய், இணைச்சொல் துல்லியம் பற்றி நான் சொல்லி வந்திருக்கிறேன். ஒரு பொருளை உணர்த்த, நெருங்கிவரும் இன்னொரு சொல்லால் சொல்லுவது கவிதைக்குச் சரிப்பட்டுவரும்; அறிவியலுக்குச் சரிப்பட்டு வராது என்பது என் கொள்கை. தமிழைக் கவிதை மொழியாகவே எத்தனை நாள் வைத்திருப்பது?

முதலில் fair என்பதை ஆங்கிலச் சொற்பிறப்பியல் வழி பார்ப்போம்.

O.E. faeger "beautiful, pleasant," from P.Gmc. *fagraz (cf. O.N. fagr, O.H.G. fagar "beautiful," Goth. fagrs "fit"), from PIE *fag-. The meaning in ref. to weather (c.1205) preserves the original sense (opposed to foul). Sense of "light complexioned" (1551) reflects tastes in beauty; sense of "free from bias" (c.1340) evolved from another early meaning, "morally pure, unblemished" (c.1175). The sporting senses (fair ball, fair catch etc.) began in 1856. Fair play is from 1595; fair and square is from 1604. Fair-haired in the fig. sense of "darling, favorite" is from 1909. Fairly in the sense of "somewhat" is from 1805; it earlier meant "totally." Fairway (1584) originally meant "navigational channel of a river;" golfing sense is from 1910. First record of fair-weather friends is from 1736.

இதில் free from bias, morally pure, unblemished, favorite, somewhat, totally என்ற பொருட்பாடுகள் எல்லாம் வழிநிலைப் பொருள்களாய் அமைந்தவை. முதற்பொருள் beautiful என்பதில் இருந்தே கிளைத்திருக்கிறது. beauty / அழகு என்ற கருத்தோ ஒளிநிறைந்த தோற்றத்தில் தான் முதலில் எழுந்தது. ஆழ ஓர்ந்து பார்த்தால் fair என்பதற்கு ஒளிநிறைந்த என்ற பொதிவுப் பொருளே (positive meaning) அடிப்படையாய் இருக்க முடியும்.

தமிழில் வயத்தல், வியத்தல் என்ற இரண்டு வினைச்சொற்களுமே ஒளிசெய்தல், விளங்குதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். வயங்குதல் என்பதும் கூட ஒளி செய்தல், விளங்குதல் என்று உணர்த்தும். வய மீன் என்பது உரோகினி நாள்காட்டைச் சுட்டும். ஒளிநிறைந்த மீன் என்ற பொருள்.

ஒரு பெண்ணைப் பார்த்து, "அவள் சிவப்பும் இல்லை, கருப்பும் இல்லை, ஆனால் fair" என்று ஆணாதிக்கக் குமுகாயத்தில், பொதுவாகச் சொல்லும் போது, "முகம் களையாக ஒளிநிறைந்து இருக்கும், நிறம் இங்கே பொருட்டில்லை" என்று தானே வழக்கில் பொருள் இருக்கிறது?

வியத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த வியப்பு என்ற சொல்லும் கூட முகம் மலர்ந்த, ஒளிகூடிய தோற்றத்தையே உணர்த்தும். இனிப் பெருமைப் பொருள் இதனின்று அடுத்துக் கிளைப்பதும் இயற்கை தான், விய, வியல், வியன், வியக்கம் ஆகிய சொற்கள் எல்லாம் பெருமை, சிறப்பு என்ற பொருட்பாடுகளைக் கொண்டு வந்து தரும். கூடவே வியல் என்ற சொல் பொன்னையும் குறிக்கும். வியலன்> வியாழன் என்பதும் பொன்னிற Jupiter யைக் குறிப்பது தான். வியந்துதல் என்பது ஒன்றை விளக்கும் வினையாகி, மேலும் சகரப் போலியில் வியஞ்சுதல் என்றாகி, வியஞ்சகம் என்ற பெயர்ச்சொல் "விளங்கும்படி செய்கை" என்று பொருளில் காட்டும். ஒரு பொருளை விளக்கி உணர்த்துவதை வியக்கனம் என்றே தமிழில் சொல்லுவார். வியக்கனம்>வியாக்கணம் ஆகி மேலும் வியாகரணம் என்று வடமொழியில் திரிந்து, விளக்க நூல்களைக் குறிக்கும். நாம் தான் சொற்பிறப்பு தெரியாமல் இதை வடமொழி என மயங்கிக் கிடப்போம்.

வியத்தல் என்ற வினையில் எழும் வியவு என்ற சொல் fairness (brightness, beauty) போன்ற பொருட்களைத் தெளிவாகவே குறிக்கும். கீழே பல்வேறு கூட்டுச் சொற்களை வியவு என்ற சொல்லாட்சி வைத்துக் காட்டியிருக்கிறேன். ஆங்கிலத்தில் இப்பொழுது fair என்பதற்கு என்ன பொருளெல்லாம் சொல்லுகிறாரோ, அதை ஒரே சொல்லால், பெரும்பாலும், கொண்டுவர இயலும். கட்டற்ற, தளையற்ற என்ற பயன்பாடுகள் அந்த அளவிற்கு வாய்ப்பாக அமையாது.

fair comment = வியவு முன்னிகை
fair competition = வியவுப் போட்டி
fair copy = வியவுப் படி
fair dealing = வியவு அணுகை = வியவணுகை
fair margin = வியவு வரந்தை
fair market value = வியவுச் சந்தை மதிப்பு, வியவு மாறுகடை மதிப்பு
fair play = வியவு ஆட்டம் = வியவாட்டம்
fair price = வியவு விலை
fair rent = வியவு வாடகை
fairs and festivals = வியந்தைகளும் விழவுகளும் (இந்த fair யை காட்சி என்றே இதுவரை தமிழாக்கி வருகிறோம்; என்னைக் கேட்டால் வியந்தை என்றே சொல்லலாம். ஒரு fairக்குப் போனால் அங்கிருக்கும் காட்சிப் பொருட்களைப் பார்த்து வியந்து தானே வருகிறோம்? வியந்தை என்பது ஒரே சொல்லாக சொல்லுதற்கு எளிதாய் அமைந்து விடுமே?)
fair trade = வியவு வணிகம்
fair treatment = வியவு நடத்தை
fair valuation = வியவு மதிப்பீடு
fair wage = வியவுக் கூலி
fair weather = வியவு வானிலை
fairy tale = வியவுக் கதை

No comments: