Friday, March 18, 2022

தேமொழியின் உரத்த சிந்தனை

 "எனது உரத்த சிந்தனை” என்ற தலைப்பில், திருவாட்டி, தேமொழி மின்தமிழ் மடற்குழுவில் 15-3-2022 இல் கீழ்வருமாறு தெரிவித்திருந்தார், இந்த ஓசனை பலருக்கும் பயன்படலாம். தமிழ்நாட்டு நூலகங்களிலும், பள்ளிகளிலும் செய்ய முற்படலாம். என் பரிந்துரை.

--------------------------

தமிழ்நாட்டிலும் மாணவர்கள் கல்வி கல்லூரி புத்தகங்களைத் தாண்டி தங்கள் வாசிப்பைப் பரவலாக்க வேண்டும். அது ஒன்றே அறிவார்ந்த சமூகத்திற்கு அடிகோலும். இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்பைக் கொண்டு செல்வதற்கு எனக்குத் தோன்றிய வழி ஒன்று ....... 

நாம் இளமையில் தொடங்க வேண்டும் தோழர். குறிப்பாகப் பள்ளி நாட்களில். இளமையில் பழக்கம் ஏற்பட்டால் பிறகு அவர்களுக்கு வழக்கமாக ஒட்டிவிடும். பள்ளி நாட்களில் கோடை விடுமுறையில் இங்கு (USA) பொது நூலகத்தில் மாணவர்களுக்குப் படிக்கும் போட்டி வைப்பார்கள். என் பிள்ளைகள் பங்கு பெற்றுள்ளார்கள்.

வயதுக்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டிய, அவர்களுக்கு எதிர்காலத்தில் உதவக்கூடிய நூல்கள் பட்டியல் வைத்து ஒவ்வொரு நூலுக்கும் புள்ளிகள் வைத்திருப்பார்கள். அந்தந்த வயதுப் பிரிவினரும் பட்டியலில் உள்ள நூலைப் படித்து, தான் படித்த நூலில் எது பிடித்தது என்பது போன்ற ஒரு சிறு குறிப்பு எழுதிக் கொடுத்தவுடன் அவர்கள் கணக்கில் அந்த நூலுக்கான புள்ளிகள் இணைக்கப்படும். சேமிப்புக் கணக்கு போல. அதிகப் புள்ளிகள் பெறுபவர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்.

கால எல்லை இல்லை, கட்டாயம் இல்லை, நூல் குறித்து என்ன எழுத எவ்வளவு வேண்டும் என்ற விதிகளும் இல்லை, எழுதியதில் சரி தவறு என்பதும் இல்லை. நூலைப் படித்துப் புரிந்து தனக்கே ஒரு கருத்து உருவாக்கிக் கொள்வதும், தனது சொந்தக் கருத்தை எழுத்து வடிவில் விவரிப்பதும் மட்டுமே முக்கியம். படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எழுதுவதற்கும் நல்ல பயிற்சி. படிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டால் எவராலும் கிடைப்பது எதையும் படிக்காமல் இருக்க முடியாத நிலை வந்து விடும், அவர்களில் பலர் சிந்தித்து தனது சொந்தக் கருத்தையும் எழுதத் தொடங்கிவிட்டால் சிந்திக்கும் எழுதும் ஆற்றல் கொண்டவர் நிறைந்த எதிர்காலமும் உருவாகும். எழுதும் எவரும் நிறைய படிப்பவராகவும் இருப்பார்.

அரசு முதலில் இணையத்தில் கிடைக்கும் விலையற்ற மின்னூல்கள் உதவியுடன், பொதுநூலகம் வழியாக முன்னெடுக்கும் ஒரு முயற்சியாகத் தொடங்கலாம். அல்லது bapasi கூட இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். செம்மையான வாசிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எதிர்காலத்திற்கான மூலதனம்.

நாட்டில்/உலகில் எங்கு இருக்கும் பள்ளி மாணவர்களும் பங்கேற்பது zoom வழிக் கல்வி, கைபேசி வழி வாசிப்பு உள்ள இக்காலத்தில் பெரிய காரியம் அல்ல. நூலாசிரியர்கள், பதிப்பகத்தார் தங்கள் நூல்களில் ஒன்றை மின்னூலாக விலையின்றி இணையத்தில் எவரும் படிக்கும் வண்ணம் பொதுவெளியில் அளித்தும் பங்கு பெறலாம். படிக்க வேண்டிய நூல்கள் பட்டியலில் ஒரு ஆசிரியரின் நூலும் இணைக்கப்படுவதே எழுத்தாளர்களையும் சிறப்பிக்கும். நாட்டுடைமை ஆக்கப்படும் ஆசிரியர் நூல்கள் போன்ற மதிப்பு. ஆனால் ஆசிரியர்கள் முன் வந்து தங்கள் நூல்களை வழங்குவதே நல்லது.







No comments: