4 ஆவது சுவைச்சொல் துவர்த்தல். துருத்தல் =(முன்தள்ளல், துருப்பு;> துப்பு-> துப்பல் =உமிழல். துருவுதலும் கூட முன்தள்ளலே. துருவு> துர்வு> துவுர்> துவர். இங்கும் இடமுகட்டு (metathesis) உண்டு. துவர்ப்பை, “மென்றுணர்ந்தது ஏற்பு இல்லாததால், உமிழத் தூண்டும் சுவை” எனலாம். .அட்டுதல் =ஒட்டுதல். அட்டி(ங்)கை = ஒட்டிகை = astringency. அட்டியது பிடிக்காது துப்ப முயல்வோம். இது 2,,3 முறைகூட நடக்கலாம். துவரம், துவர்ப்பின் இன்னொரு வடிவம். astringent (adj.) 1540s, "binding, contracting," from Latin astringentum (nominative astringens), present participle of astringere "to bind fast, tighten, contract," from assimilated form of ad "to" (see ad-) + stringere "draw tight" (see strain (v.))." நாவல், கொட்டை, கடுக்காய், நெல்லிக் கொட்டை, தான்றிக்காய், பாக்குக்கொட்டை, வாழைக்காய், மாதுளை, நாவல் பழம், மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்றவை துவர்ப்புச் சுவை காட்டும். [இங்கோர் இடைவிலகல். குவரம் = துவர்ப்பு = astringence என்று சாமிநாத.அகராதி. கொடுப்பது வியப்பு. மேலும் ஆயவேண்டும்.)
ஐந்தாவது சுவைச்சொல் காழ்த்தல். குறிப்பிட்ட விதமான உறைத்தலில் (=அழுத்தத் தாக்கலில்) எழுந்தது. வெப்பத்தால், காரத்தால், புளிப்பால் என மூவகை உறைப்புண்டு. 2, 3 பரிமானங்கள் வழிப் பரவியே வெப்பம் தன் தாக்கைக் காட்டும். ஒன்றிற்கொன்று எதிரான காரம், புளிப்போ அப்படி யில்லை. வெப்பம் போலன்றிப் புளிப்பும், காரமும் இலக்குத் தாக்கில் (local attack) இருப்பைக் காட்டும். கார்த்தலுக்கும் புளித்தலுக்கும் நடுவே இடையுலப்புண்டு. காரம் தகிக்கையில் ஒருவித எரியுணர்வு (burning sensation) தென்படும் ஒரு அலங்கப் (organic) பொருளுள் கரிமம் (carbon), நீரகம் (hydrogen). அஃககம் (oxygen), காலகம் (nitrogen) போல் மாழையல்லாதன (non-metals) மட்டும் இருப்பதில்லை. அலங்க மாழைப் பூண்டுகள் (organometallic compounds) சிலவும் உண்டு. தாவர, விலங்கு சார்ந்த அலங்கற் பொருள்களை எரிக்கையிக் உள்ளிருக்கும் மாழை, அஃகுதை (oxide) சாம்பலாய் மிஞ்சும். அரபியில் இதை al-kali = the ashes என்பார். களரிய (potassium) மாழையை இதன்வழி தான் கண்டுபிடித்தார்.
கள்>கழு>கரு>கார் என்றும், கழி>காழ் என்றும் இச்சொல் வளரும். காழ்த்த்து = கார்த்தது. கார்>காரம் என்பது தமிழே. கரு>கரில் என்பதும், காழ்>காய்>காயம் என்பதும், கள்>கரு>கடுகம் என்பதும் காழ்த்தலுக்கான இணைச்சொற்கள். ”கடுகு சிறுத்தாலும் காரம் போகாது” எனும் பழமொழியை ஓர்க. கடுகடுப்பு என்ற இரட்டைச் சொல்லையும் நினைக்க. ஆங்கிலத்தில் caustic taste என்பார்.
1400, "capable of burning or destroying organic tissue, corrosive," from Latin causticus "burning, caustic," from Greek kaustikos "capable of burning; corrosive," from kaustos "combustible; burnt," verbal adjective from kaiein, the Greek word for "to burn" (transitive and intransitive) in all periods, which is of uncertain origin with no certain cognates outside Greek. தமிழைக் கண்டுகொள்ளாத விளைவு. கார்> காய்> காய்த்த> caustic
ஓர் அறிவியல் சோதனையில், பூனைநாக்கில் சில காரக் கரைசல் துளிகளை வைத்து, அதன் மறுவினைகளை ஆராய்ந்த போது, பூனைநாக்கின் அடியிருந்து எழுந்து அதன் முகத்தசை (facial muscle) வழி மூளைக்குப் போகும் தப்பணக் கட்டு நரம்பில் (chorda tympani nerve) உள்ள நீர் நரம்பு, உப்பு நரம்பு, குயினின் (quinine; இது ஒரு காரதை - காரம் போன்றது - alkaloid) நரம்பு போன்றவை தூண்டுற்றதைக் கண்டறிந்தார். இதே போல் நம் நாக்கிலும் நடக்கிறது, அப்படிக் காணின், காரச்சுவையைப் பல் வேறு நரம்புகளின் கூட்டுணர்வால் மூளை அறிவதைப் புரிந்து கொள்ளலாம். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவையும் காரச்சுவை கொண்டவையே. .உடலிலுள்ள கொழுப்புகளை எரிக்கும் தன்மை காரச் சுவைக்கு உண்டென்று பலரும் நம்புகிறார்.
ஆறாவது சுவைச்சொல் கைப்பு. கள்>கய்<கை>கைப்பு என்று கருமைக் கருத்தின் வழி செ.சொ.பே. யில் வரும் விளக்கத்தை நான் ஏற்பதில்லை. என் நீண்ட விளக்கம் துளைக்கருத்தில் அமையும். ஒரு மாந்தக் கட்டுடல் துன்புறுகையில், தானே தளர்ந்து, குலைந்து, குழையும். குல் எனும் துளைக் கருத்து வேர், குலைதல்/ குழைதல், குடைதல் (=தளர்தல்/வாடல்), மெலிதல், சோர்தல், நொய்தல்/நோதல் போன்ற சொற்களையும், கலங்கல்/ கயங்கல்/ கயந்தல்/ கைந்தல்/ கசந்தல் சொற்களையும் உருவாக்கும், சிலவற்றைப் பார்ப்போம்.
குல்> குள்> குளு> குளை> குடை> குடைதல் =துளைத்தல்; ”ரொம்பக் குடையுறான்.” குள்> கூள்> கூண்டு = கூடு (=துளையுள்ளது), பதர் (உள்ளீடிலாக் கூலம்) ; குள்> குடு> குடல்> குடலை (இரண்டுமே துளையுள்ளவை); குழு> குழல்; குழை> குழாய் (வேற்றுமொழிச் சொல் அல்ல.); குள்> குடு> குடுவை [களிமண், மாழை, கிளர்த்தி (glass) போன்றவற்றால் ஆனது); குழு> குழ> குழை. (அளவு மீறிய கொதிப்பில் சோறு குழையும். மீக்குழை நீர்ச்சோறு கூழாகும்). நீர் கூடக்கூட, வழலை (soap) குளகுள> கொளகொள ஆகி. உருக்குலையும். நீரில் சருக்கரைக் கட்டி உருக்குலையக் கரையும். குள்> கள்> கள> கர> கரை-தல் = சோர்தல், மெலிதல் “ காசநோயால் கரைந்து போனாள்”; குலை>குலைதல் = மெலிதல்; ”உடம்பு குலைந்தது.” குல்> குள்> குளறு> குழறு> குழறுதல் = நா தளர்தல்;
அடுத்து, குல்>குழு>கழு>கய> கயக்கம் = வாட்டம், கலக்கம். கய> கயக்கு = சோர்வு, மனக்கலக்கம். கய> கயங்குதல் = சோர்தல். கயவு = மென்மை. கய> கயந்தலை என்பது இன்னும் உறுதி பெறாத, பிறந்து சில வாரங்களே ஆன, குழந்தையின் மென் தலை, கயந்தலை = மனத் துயர். மனத்துயர் கூடிய நிலையில் மனம் கசந்து போகும். கசந்த நிலையில் நொகையான (negative) எண்ணங்கள் கூடும். கயந்தவர் = கீழோர். ”எது முறை?” என்பது குமுக ஞாயம். கயந்தவரைக் கீழ்மையர் என்பது உலகவழக்கம். கயவர் =கீழ்மக்கள்; கயம் =கீழ்மை, கயம் =தேய்வு, குறைபாடு, கேடு.
இனிக் கசப்புச் சுவைக்கு வருவோம். கயப் பாக்கு - கசக்கும் பாக்கு (பாக்கு துவர்க்கும் எனினும் சில கசப்பையும் சேர்த்துக் காட்டும்); கயினி = கணவன் இறந்து, மணம் கசந்த பெண் = கைம்பெண். கயினி =கசக்குமீன். கள்> .கய்> கை. கைத்தல் = கசத்தல், நைந்து வருந்தல், “கைத்தனள் உள்ளம்” கம்பரா. மாய்சன.30; கைக்கிளை = ஒருதலைக் காமம், மருட்பா, காந்தாரப்பண். ஒரு தலைக் காமம், கயந்து>கசந்து கிளைத்தது கைக்கிளை. மருட்பா = பல பா வகை கலந்தடிக்கும் பா. சீர்மையர்க்குக் கசந்த பா. 3 ஆம் சுரமான காந்தாரம், சங்கதம் போன நற்றமிழ்ப்பெயர். காய்ந்த ஆரம்> காய்ந்தாரம்> காந்தாரம். (காய்தல் =கசத்தல். ஆரம் =ஒலி; ஆர்தல்> ஆரித்தல் =ஒலித்தல். ஆர ஆரித்தல் = நிறைந்து ஒலித்தல். யகரம் தொகுத்து, காந்தார மூலம் தெரியாமல் போனது. காய்க்கிளை> கய்க்கிளை> கைக்கிளை என்பதிலும் பொருளுண்டு.சுரத்திற்கு மட்டுமின்றிப் பண்ணுக்கும் காந்தாரம் பெயராகும்.
கைக்குதல், கைக்கை போன்றன கசப்பின் வேறு வடிவங்கள்; கைகம் = நஞ்சு; நைய்ஞ்சு போக்குவதால் நஞ்சு. கைகச் செய்வதால் கைகம். நஞ்சும் கசப்பும் தொடர்புள்ளவை. கைகேசி = கரிசிலாங் கண்ணி (கசப்பானது,); கைச்சல் = கசத்தல்; கைச்ச நாரத்தை = bitter orange; கைத்தகம், கைதகம், கைதல், கைதை = தாழை, கைந்து/குழைந்து போகும் தாள் கொண்டது தாழை ; கைத்தா = காட்டு ஆமணக்கு; கைத்து = abhorence வெறுப்பு; கைத்துப் போதல் = களிம்பேறுதல்; கைதை = (கசப்புக் காட்டும்) எட்டி. வளர்ந்தோங்கிய நெற்கதிர்கள் காற்றில் குழைந்து ஆடுவதால் வயலும் கைதையாகும்; கைத்தலை = கைம்பெண்; கைப்பங்கொட்டை = எட்டியிலும் 3 மடங்கு கசக்கும் கொட்டை. பிலிப்பைன்சில் வளர்கிறது. எப்படியோ தமிழ் மருத்துவத்தில் வந்துள்ளது;
கைப்பான் = (கசப்புப்) பாகல்; கைப்பு = ஆடு தின்னாப் பாளை; கைப்புக் கெண்டை = கசப்பு மீன்; கைம்பெண் = வாழ்க்கை கசந்த பெண். வாழ்கை கசந்த ஆணைக் கையாண் எனலாம். கைம்மை = காதலனைப் பிரிந்த தனிமை; கையர் = கீழ்மக்கள்; கையாந்தகரை = கரிசலாங் கண்ணி; கையா நீர் = கரிசலாங் கண்ணிச் சாறு; கைனி = கைம்பெண். கசப்புத் தாவரங்களைக் குறிக்கக் ”காடு, புனம், பேய்” போன்றவை அடைகளாகும். நொச்சி, வேம்பு, நிலவேம்பு, கண்டங்கத்திரி, சீந்தில், பேய்ப்புடல், நாரத்தை, கசப்புக் கொழுமிச்சை (bitter citroen) போன்றவை கசக்கும்.
கசப்பு என்பது நமக்கு மட்டுமின்றி மற்ற தழிழிய மொழிகளிலும் பயில்கிறது. ம.கசப்பு. கய்பு; க.கய், கயி, கய்யி,கய்பு, கய்பெ; தெ.கசு, கை, கயிபெ, கைபெல; இரு. கேசபெ; எரு. கய்ச்சு; கோத.கய்; குட. கய்; கோண். கேசுகே, கைத்தானா; பர். கேபி; மா. க்வசெ; பட. கைமெஙூ; கோண். (அடிலா)கய்யு.. கசப்பிற்கு இணையாய் ஆங்கிலத்தில் bitter (adj.) என்பார். விள்ளும்/வெட்டும்/பிளக்கும் உணர்ச்சி என்பது அதன் பொருளாகும். Old English biter "having a harsh taste, sharp, cutting; angry, full of animosity; cruel," from Proto-Germanic *bitras- (source also of Old Saxon bittar, Old Norse bitr, Dutch bitter, Old High German bittar, German bitter, Gothic baitrs "bitter"), from suffixed form of PIE root *bheid- "to split" (source also of Old English bitan "to bite;" see bite (v.)).”
ஆக, தித்திப்பு (sweet), புளிப்பு (acidic), உவர்ப்பு (salty), துவர்ப்பு (astringent), கார்ப்பு (caustic), கைப்பு (bitter) என அறுசுவைகளைப் பார்த்தோம்.
No comments:
Post a Comment