Monday, March 07, 2022

கற்றா

திருவாசகத்தின் 39 ஆம் ப்குதியான திருப்புலம்பலில் 3 ஆம் பாட்டின் 4 ஆம் அடியில் கற்றா என்ற சொல் வரும். அது இறைவனைக் குறிக்கிறதா, மணிவாசகரைக் குறிக்கிறதா என்றொரு சுவையான உரையாட்டு திரு. ஆறுமுகத் தமிழன் முகநூல் பக்கத்தில் எழுந்தது.  https://www.facebook.com/arumugatamilan/posts/10228351906805425

உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே

கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே

எனும் அப்பாடலில் கற்றா என்பது மணிவாசகரையே குறிக்கிறது என்பது திரு. ப. சரவணனின் வாதமாகும். (‘திருவாசகம் எல்லோருக்குமான உளிய உரை’ சந்தியா பதிப்பகம்)  ”இல்லை, கற்றா  என்பது இறைவனே!” என்பது நண்பர் நாக, இளங்கோவனின் வாதம் (https://www.facebook.com/arumugatamilan/posts/10228351906805425) இதற்கடுத்து மேலும் 2  தொடர்ச்சிகளை  திரு. கரு.ஆறு. தன் பக்கத்தில் வெளியிட்டார். அவற்றை அவர் பக்கத்திற்குச் சென்று படியுங்கள். இங்கு என் பார்வை கடைசி 2 அடிகளில் நிலை கொள்கிறது,.   

கூத்தனுக்கு 5 அம்பலங்கள்.  முதலில் குற்றாலம் (குன்றில் தண்நீர் தெறிக்கும் இடம்.)  குற்றால நாதர் கோயிலுக்கு ஒரு KM-இல்  சித்ரசபைக் கோயில். குற்றாலத்தில்  2 கோயில்களையும் ஒரு சேர நினைக. அவை சிறியனவே. 2 ஆவதில் தான் கூத்தனின் ஆடல். இக்கோயில்  ஒரு தெற்றில் உள்ளது. எனவே தெற்றம்பலம். தெற்று = வெளித்தெரியும் திண்ணை (அ) மேடு. குன்றிலோ, வெட்டவெளியிலோ தெற்று இருக்கலாம். (தெள்ளியன், தெளிவு, தெரிதல், தெரியனம்>தெரிசனம், தெற்று, தெறிப்பு போன்ற பல சொற்கள் துல்>தெல் வேரில் தொடங்கியவையே. பல்வேறு தெற்றம்பலங்களும் உண்டு. வேறு கட்டுரையில் விளக்குவேன்.) செம்பு, வெள்ளி, பொன், மணி என வேயாது உள்ள இத்தெற்றிலும் இறைவன் ஆடுகிறான்.  தெற்றம்பலம் சிறிதாகையால், சில் தெற்றம்பலம்> சிற்றெற்றம்பலம்> சித்தெற்றம்பலம். சங்கதத் தாக்கில் அம்பலத்தைச் சபையாக்கி, சித்தெற்று சபை>சித்ர சபை என்பார்.  மூலம் தெரியாது பிற்காலச் சமய அறிஞர் சிலர் சித்ரத்தை ஓவியமாக்கிப் நம்மைக் குழப்புவார். திருவாசக, தேவார காலத்தில் இக் குழப்படி இல்லை. 

அடுத்து, தாமப் பெருநை ஓடும் நெல்லையில் தாமம்பலம் (தாமம் = செம்பு. தாம>தாம்ரம்). வெள்கை ஓடும் மதுரையில் வெள்ளம்பலம். பொன்னிக்கருகில் தில்லைப் பொன்னம்பலம். (ஒரு கால் சிற்றெற்றம்பலம்> சிற்றம்பலம். அம்பலச் சொற்குழப்பங்கள் தனிக்கட்டுரை) முடிவில் ஆலங்காட்டு- மணியம்பலம். ஆடலான் கருவறை உட்சுவரில் மணிகள் பொருத்திய அம்பலம். செம்பு, வெள்ளி, தங்கம், மணி எனக் கோயில்கள் வேயப்பட்டன. ”அது உள்ளா, வெளியா” என்பது வேய்பொருள், சூழமைவு பொறுத்தது.  கம்போடிய Bayon கோயிலிலும் மணியமைப்பு இருந்தது. சிவலிங்கக் கருவறை உட்சுவரில்  மணிகள் பதிக்திருந்தார். 13 ஆம் நூ.வில்  கெமெருக்கும், வியத்நாமியருக்கும் நடந்த போர் முடிவில் வியத்நாமியர் மணிகளைப் பிடுங்கிக் கொண்டார்  2018 இல் கம்போடியா போனபோது மணிபிடுங்கிய கருவறை உட்சுவரைப் பார்த்தேன். பின்னரே ஆலங்காட்டு மணியம்பலக் கருவறை அமைப்புப் புரிந்தது, ஆக இங்கும் கொள்ளை நடந்ததோ, என்னவோ? கோயில் கொள்ளைகள் எந்நாட்டில் நடக்கவில்லை?  இனிக் குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தனை விளிக்கும் பாடலின் 3 ஆம் அடிக்கு வருவோம். 

”உன் குரை கழற்கே” என்பதற்கென்ன பொருள்? கழல் தெரிகிறது, ஆண் காலில் அணியும் தண்டை இது பாதத்திற்கு ஆகுபெயராய் ஆளப்படுகிறது. குன்றித்த>குஞ்சித்த பாதம்  என்பது காலைத் தூக்கி வளைத்து எழுந்த பாதம். குல்+ந்+து = குன்று. குல் என்பது எழுச்சிக் கருத்தையும், வளைவுக் கருத்தையும் குறிக்கும் வேர். குன்று என்பது எழுந்துள்ள, முகடுள்ள, வளைவு,   குன்றித்தல் = குன்று போல் குவித்தல். இங்கே கால் குவிக்கப் பட்டதால் பாதம். குன்றித்த பாதமானது. குன்றித்த>குன்னித்த> குஞ்ஞித்த>குஞ்சித்த என்பவை வெவ்வேறு வழக்காறுகள். (குன்றுதல் = குறைதல் பொருள் என்பது வேறுவகையில் எழும். இதோடு குழப்பிக் கொள்ளவேண்டாம்.)

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

                                                                           - திருநாவுக்கரசர் திருவிருத்தம்

மேலேயுள்ள பாட்டில் ”குனித்த” என்ற சொல்லாட்சியையும், ”எடுத்த பொற்பாதம்” என்பதையும் நோக்குக. மணிவாசகர் பாடலுக்கு விளக்கம் தரும். அடுத்து, குல்>குரு என்பதும் அதே பொருள் கொண்டது தான்.வெயர்க்குரு< வேர்க்குரு என்பது சூட்டால் உடம்பில் எழும் எழுச்சியைக் குறிக்கும். குரு>குரை->குரைத்த  என்பது குன்றித்த-விற்கு இணையானது, வேறு எந்தப் பொருளும் இதற்குப் பொருந்தாது. ஆனாலும் நம்மூர் அகரமுதலிகள் இப் பொருளைப் பதிந்ததில்லை. வெறுமே குரை= பெருமை என்றுரைக்கும். எழுச்சியின்றிப் பெருமைப் பொருள், எப்படி வரும்? நம்மூர் அகராதிகளின் போக்கு சிலபோது புரிவதில்லை. உரைத்தல், குரைத்தல் (=ஒலித்தல்), சிரைத்தல், திரைத்தல், நுரைத்தல், பரைத்தல், வரைத்தல் போன்றவை இயல்பானால், குரைத்தல் = குன்றித்தல் எனும் பெருமைப் பொருள் கட்டாயம் ஏற்படுமே? ஏன் நம் அகரமுதலிகளில் இச்சொல் இல்லை? 

நான் குரைகழலை வினைத்தொகையாய்க் கொள்வேன். ”எடுந்த பாதம்”

அடுத்து சிவநெறியில், இறைவனானவன் மாதொரு பாகன். இடப்பாகத்தில் மங்கையைக் கொண்டவன். மதுரை தவிர்த்து மற்ற இடங்களில் ஆடலான் இடக்கால் தூக்கியே ஆடுகிறான். எனவே குன்றித்த பாதம் என்பது உலக நாயகியின் பாதத்தைக் குறிக்கிறது. அதை நாடியே, மணிவாசகர் இயல்பாய்ப் பேசுகிறார்.”கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே” இங்கே ஒன்றை நோக்குக. தாயீன்ற ஈத்தைக் கன்றென அழைப்பது சில்லாண்டுகள் மட்டுமே. அதற்கப்புறம் இளம் மாடென்றே அழைப்போம். மாந்தரிலும். பால் குடி மாறியபின் குழந்தை என்னும் பயன்பாடு போய்ச் ”சிறார்” ஆகிவிடுமே?. அதுபோல் கன்றும், இளம் மாடு ஆகிவிடும். என்றைக்கு இலை, தழைகளை தானே தேடியுண்டு தன்பசி தீர்க்கக் கற்றுக் கொண்டதோ, அதன்பின், தாயை, இள மாடு தேடாது. அதுவரை அதற்குத் தாய்ப்பால் தேவை. கன்றை ஆத்தது (=ஆக்கியது) ஆ, (என்னை ஆத்தவள் என் ஆத்தாள்.) கன்று+ ஆ = கற்றா  இது இருபெயர்க் கூட்டுச் சொல். நான்காம் வேற்றுமைத் தொகை. கன்றுக்கு ஆ என்று கொள்ளவேண்டும். கன்று பாலுக்கழுதால், கன்றுதேடிக் கற்றா வந்து கசிந்துருகும். உடன் பால் சொரியும். ”கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே” என்பது இறைவனை நாடி மணிவாசகக் கன்று வேண்டுவதே.


No comments: