Monday, July 13, 2020

சிகிச்சையும் வைத்தியமும்

"சிகிச்சையும் வைத்தியமும் தமிழ்ச்சொற்களா?" என்ற கேள்வி ஒருமுறை எழுந்தது. இவை இரண்டும் இருபிறப்பிச் சொற்கள். இவற்றின் வேர் தமிழில் இருந்து பின் வடமொழியில் பழகியிருக்கின்றன. முதலில் சிகிச்சையைப் பார்ப்போம்.

சுல்>சொல் என்பது ஒளியை, மலர்ச்சியைக் குறிக்கும் வேர்ச்சொல். 2006 இல் கொன்றையும் பொன்னுமென்ற தொடரை எழுதினேன். அதன் நாலாம்பகுதியில் [http://valavu.blogspot.in/2006/01/4.html] இவ்வகைச் சொற்கள் வரும். சுல்லில் எழுந்த இருபிறப்பிகள் சுல்>சுல்+த்+த்+அம்= சு(ல்)த்தம்> சுத்தம் என்பதும் சுல்+க்+அம்= சு(ல்)கம்>சுகம் என்பதுமாகும். சுத்தம் என்பது தூய்மைப்பொருள் கொள்ளும். சுகம் என்பது நலப்பொருள் கொள்ளும். இரண்டு சொற்களுமே வடமொழியில் புழங்கியவை, ஆனால் தமிழ்வேர் கொண்டவை. சொக்கம்>சொகம்>சுகம் = பொலிவோடு மலர்ச்சியோடு இருக்கும் தன்மை; ”சுகமா இருக்கீங்களா?” என்றால் சோர்வில்லாமல் முகத்தில் ஒளிவிடுவது போல் இருக்கிறோமா என்று பொருள். health என்பதற்கு நாம் அச்சொல்லையே புழங்குகிறோம். மேலையர் ”கொழிதா இருக்கீங்களா?” என்று கேட்பார் கொழுது>கொழிது = health = செழிப்பு, நலம், சுகம். கொழித்தல் = செழிப்புறுதல். to be on the increash, flourish. குல்>குலி>கொலி>கொழி. கொழி-த்தல் > கொழு-த்தல். கொழிவி-த்தல் = செழிப்பி-த்தல் = to heal. 

வித்தை என்பது தொடக்க காலத்தில் வில் வித்தையையே குறித்தது. விலங்கின் அருகே போகாது தொலைவில் இருந்தே அம்புவிட்டு விலங்கை விழுத்தாட்டுவது விலங்காண்டி மாந்தனுக்குப் பெருங்கலையாகத் தெரிந்தது. வில்+த்+தை = வி(ல்)த்தை> வித்தை. பின்னால் இதுபோல எல்லாவித அருங்கலை, அறிவுகள், படிப்புகள், எல்லாங் கற்றவர் வித்தைக் காரன் ஆனார். வித்தை விச்சையென்று பேச்சுவழக்கிற் சொல்லப்படும். சுகவிச்சை என்பது நோய்வாய்ப்பட்டவனை, காயப்பட்டவனைச் சுகப் படுத்தும் கலை. சுகவிச்சை>சிகிச்சை (cikitsaa) என்பது சங்கதத்தில் போனது. 

தமிழில் சாயுங்காலம் என்பதை ஒரு சாரார் ”சாய்கிறச்சே” என்று சொல்லி பெயர்ச்சொல் போலவே ஆளுவர். அது இன்னுந் திரிந்து சாய்கிரட்சை> சாயரட்சை>சாயரக்ஷை என்று சங்கத வண்ணம் கொள்ளும். இதுபோல் பல சொற்கள் வடப்பூச்சு பெற்றுள்ளன. நாமும் அவற்றில் மயங்கி அவற்றைச் சங்கதச் சொல்லென்றே சொல்வோம். சுகவிச்சை>சிகிச்சையான கதை இப்படித் தான். எந்தச் சங்கத அகரமுதலியிலும் இதற்கு வேர் கிடையாது. ஆனால் பாகதம், சங்கதத்தில் இது நன்றாகவே புழங்கும். (சாமவிதான பிராமணா, மனுநீதி, யஜ்னவல்க்கீயம், மகாபாரதம் போன்றவற்றில் இது பயன்பட்டிருக்கிறது.) இத்தகைய சொற்களை இரு பிறப்பிகள் என்போம். தோற்றம் இங்கிருக்கும் ஆனால் புழக்கம் அங்கிருக்கும். (நடுச்செண்டர் என்கிறோமே, அதுவும் ஒருவகை இருபிறப்பி தான். பாதி தமிழ், பாதி ஆங்கிலம். புழக்கம் மட்டுமிங்கே. இது போன்ற சொற்களும் பேச்சுத்தமிழில் நிறையவுண்டு.) சிகிச்சையைச் சிலர் “ஸ்பஷ்டமாய்” ஒலிக்கவேண்டும் என்றெண்ணிச் சிகிழ்ச்சை என்பார். குமரிமாவட்டத்தில் இது அதிகம்.

அடுத்தது வைத்தியம். வித்தை போல வில்லில் கிளைத்த இன்னொரு சொல்லுண்டு.. வெளிப்பாட்டுப் பொருளில் அது வரும். செடியில் வெளிப் பட்டுக் காய்ந்து உலர்ந்து விழுந்த பூ ”வீ” எனப்படும். காய்க்குள், பழத்துள் வெளிப்படுவது வில்+த்+து = வித்து. வித்துக்கு விதை என்றும் பெயருண்டு. வித்தை மீண்டும் மண்ணிலிட்டால் (வித்திட்டால் என்றுஞ் சொல்வோம்) செடி, தளிர் போன்றவை வெளிப்படும். வெளிப்படுவதை முளைத்தல் என்றுஞ் சொல்வோம். வித்து என்பது அடிப்படையில் விதையை மட்டுமின்றி மரஞ் செடி போன்றவற்றையும் உணர்த்தும். (அறிவு தொடர்பான வடமொழிச் சொற்கள் இந்த வெளிப்பாட்டுப் பொருளிலேயே வரும். ஆனால் அவர்கள் காட்டும் வேர் பொருந்திவராது. தமிழ்வேரே சரியாகப் பொருந்தும்.)

முல் என்றாலும் வெளிப்படுவது, தோன்றுவது என்று பொருள் கொள்ளலாம். முல்> முள்> முளை என்றும் அச்சொல் திரியும்.முல்> மூல்> மூலிகை என்பது மண்ணிலிருந்து வெளிப்படும் மரஞ் செடி கொடிகள். பல்வேறு மூலிகைகளையே அன்று மருந்தாய்க் கொண்டார். மூலிகை> முலிகைக்கும் ஆங்கில medicine க்கும் தொடர்புண்டு. அதேபோல் முல்> முலுந்து>முருந்து> மருந்து என்பதும் மூலிகையோடு தொடர்புடையதே. மருந்து கொடுப்பவன் மருத்துவன் ஆவது போல் வித்துக் கொடுப்பவன் வித்துவன்/ வித்தியன் ஆவான். ”வித்தியன்” ”வைத்தியனாய்” வடக்கே பலுக்கப் படும். இதுவும் ஓர் இருபிறப்பி. நான் தொடர்ச்சியாகச் சொல்லி வந்துள்ளேன். இங்கிருந்து அங்கு போயிருக்கிறது. அங்கிருந்து இங்கு வந்திருக்கிறது. இரண்டையும் மறுப்பவன் நானில்லை. ”இந்தையிரோப்பியம் தனி, தமிழியம் தனி” என்று சொல்லி ”தமிழியம் இந்தையிரோப்பியத்திடம் கடன் வாங்கியது, ஒன்றும் தரவில்லை” என்பவரே இதை மறுக்கிறார்.
       
சும்மா பாவாணரைத் திட்டுவதற்கு மாறாகப் பாவாணரையும், அவர் வழி வந்தோரையும் ஆழ்ந்து படித்தால் நான் சொல்லும் மொழிக்குடும்பு உறவு புரியும். இல்லையென்றால் எல்லாமே தலைகீழாகத் தான் தென்படும். ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். காதை மூடிக்கொள்கிறவருக்கு நான் ஒன்றுஞ் சொல்லமுடியாது.

வித்துவம் (= மருத்துவம்) என்ற சொல்லின் பொருள் பற்றிச் சிலர் ஐயுறுகிறார். எல்லோருக்கும் தெரிந்த பெயர் பெற்றதொரு சிவநெறிக் கோயிலையும், இன்னொரு விண்ணெறிக் கோயிலையும் அவற்றின் ஊர், இறைவன் பெயர்களையும் வேர்ச்சொல் வழி புரிந்துகொண்டால் ஐயம் வராது. வைத்தீஸ்வரன்கோயிலென இன்று சங்கதம் ஊடாகச் சொல்லப்படும் ஊரின் பழம்பெயர் புள்ளிரிக்கு வேளூர். இதைப் புள்ளிருக்குவேளூர் என்று திரித்துப் புள் (சடாயு)+ இருக்கு (வேதம்)+ வேள் (முருகன்)+ ஊர் (சூரியன்) என்று பிரித்து ஒரு கதையைப் பொருந்தப் புகல்ந்து சங்கதத் திருப்பம் நடக்கும். அவ்வூர் இறைவர் பெயர்களுக்கும் இதற்கும் பொருத்தமே இருக்காது. எல்லாம் மூதிகக் கதைகளாய்ச் சொல்லப்படும். இதுபோன்ற மூதிகங்கள் நம்மூரில் பல கோயில்களில் சங்கதத் தாக்கத்தால் சொல்லப்படும். அவற்றை எல்லாம் உண்மையென எண்ணி நாமும் தடுமாறிப் போவோம். இப்பெயர்த் திரிப்பு தேவார மூவர் காலத்திற்கு முன்பே நடந்திருக்கலாம்.

இதற்கு மாறாய் புண்ணின் வேர்ச்சொல் புள்ளாவதால் (புள்ளப்பட்டது புண்) புண்ணாகவே பொருள்கொள்ளலாம். இரித்தல்= நீக்குதல், விலக்குதல்; எனவே புள்ளிரிக்குதல் = புண்ணைக் குணப் படுத்தல். என்று பொருளாகும் புள்ளிரிக்கு வேள் என்பவர் புண்ணைக் குணப்படுத்தும் வேள். எனவே பண்டுவர். வினை தீர்த்தான் என்ற இன்னொரு பெயரும் இங்கு இறைவருக்கு உண்டு. உடலுக்கு வந்த வினை தீர்ப்பவர். இன்றும் வினையென்ற சொல்லுக்கு நோய், வலி, கெடுதல் பொருள்கள் கொள்ளப்படுகின்றன. வினைதீர்த்தானென்பது பண்டுவருக்கு இன்னொரு பெயர். நினைவு கொள்ளுங்கள். தானாக ஏற்படும் புண், அறுவையால் ஏற்படும் புண் என இரண்டையும் குணப்படுத்துபவர் பண்டுவராவார். வித்தென்பது முன் சொன்னபடி மூலிகை மருந்து. வித்துவர்= மூலிகை மருத்துவர். வித்தீசர்= மருந்து தரும் ஈசர். வித்தீசரை வித்தீஸ்வர்> வைத்தீஸ்வரெனச் சங்கதத்தில் பலுக்குவார். மீண்டுமதைக் கடன்வாங்கி ’அன்’ ஈற்றை நாம் சேர்ப்போம். இறைவன் பெயர் வைத்தீஸ்வரனாகும். வினை தீர்த்தான், வித்தீசனோடு புள்ளிரிக்கு வேள் என்பனவும் ஏரணத்திற்குப் பொருந்திவரும். எந்த மூதிகத்தையும் நாம் இங்கே உள்ளே கொண்டு வரவில்லை. மருத்துவரும், பண்டுவரும் ஒரே ஆளாவதுண்டு. இக்காலப் பட்டமும் Medicino Bachelor and Bachelor of Surgery (MBBS) என்றே அமையும்.

இனி விண்ணெறிக் கோயிலுக்கு வருவோம். திருவித்துவக்கோடு என்பது கேரளத்தில் பட்டம்பியிலிருந்து ஒரு மைல் தொலைவில், பாரதப்புழைக் கரையிலுள்ள ஊர். இதைக் குலசேகர ஆழ்வார் விற்றுவக் கோடென்பார். இங்குள்ள கோயில் 108 தலங்களில் ஒன்றாகும். பெருமாள் பெயர் உய்யவந்த பெருமாள். உய்தல்= உயிர்வாழ்தல். நோய்ப்பட்ட பற்றியாளர் (பக்தியாளர்) சுகமாகி உய்வதற்கு, வந்த பெருமாளென்ற பொருள். நாலாயிரப்பனுவலின் 691 ஆம் பாசுரத்தில், பெருமாள் திருமொழியில்,

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளத் துயர்தரினும் விற்றுவக்கோட். டம்மா,நீ
ஆளா வுளதருளே பார்ப்பன் அடியேனே

என்ற பாட்டு வரும். ”என்னதான் வலிதரும் அளவிற்கு வாளாலறுத்துச் சுட்டாலும், மருத்துவனிடமிருந்து விலகாத நோயாளன் போல், என்னதான் நீ துன்பந் தந்தாலும் வித்துக்கோட்டு அம்மானே, உன் அருளை விட்டு விலகுவேனோ?” என்பார் ஆழ்வார். பத்துப் பாசுரங்களும் வலி, துன்பம், துயரம் ஆகியவற்றைச் சொல்லி அவற்றிலிருந்து உய்யவந்த பெருமாளை வாழ்த்தும். வித்துவன் என்பது நல்ல தமிழென்று பெருமாள் திருமொழியைப் படித்தாவது புரிந்துகொள்ளலாம்.     

இனி ஆயுள்வேதத்தில் வரும் வேதத்தை 4 வேதங்களோடு தொடர்புறுத்துவதும் தவறே. வித்தம் என்ற சொல்லே இங்கு பேச்சுவழக்கில் வேதமாயிற்று. வித்தம் = மருந்து நூல். வித்தம் தெரிந்தவன் வித்தன். ஆயுள்வித்தன் = ஆயுளுக்கான மருந்து தருகிறவன். சங்கதத்திலும் வைத்தியனென்ற சொல்லுக்கு புலமையாளன், மருத்துவன் என்ற பொருளுண்டு. வேதம் என்ற சொல் வைதீகம் என்று கூட்டுச்சொற்களில் திரியும். சங்கதத்தை மேடாகப் பார்த்துத் தமிழைப் பள்ளமாய்க் கருதுவோர்க்கு இது புரிவது கடினம். எல்லாவற்றையும் வேதமென்று சொல்ல முற்படுவது ஒருவித ஓரப்பார்வையே.

இன்னும் ஓரிiரு செய்திகள் சொல்ல மறந்தேன். பண்டுவம் என்பது பண்ணுதல் என்னும் கைவேலையையொட்டிப் பிறந்தது. மேலை மொழிகளிலும் surgery என்பது கைவேலையை ஒட்டியே பிறந்தது. [surgery (n.) c. 1300, sirgirie, "medical treatment of an operative nature, such as cutting-operations, setting of fractures, etc.," from Old French surgerie, surgeure, contraction of serurgerie, from Late Latin chirurgia "surgery," from Greek kheirourgia, from kheirourgos "working or done by hand," from kheir "hand" (from PIE root *ghes- "the hand") + ergon "work" (from PIE root *werg- "to do"). இதில் வரும் kheir "hand" என்ற கிரேக்கச்சொல் நம் “கையைப்” போல உள்ளதைப் பார்த்து வியக்காதிருக்க முடியாது. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியத்திற்கும் உறவுண்டெனச் சொன்னால் கவனித்துப் பார்க்கத் தான் இங்கு ஆட்களில்லை. ”கண்ணைமூடிப் பாதை கடந்து விடுவோம்” என்பவருக்கு மேற்கொண்டு என்னசொல்ல?]

எப்படி வித்துவம் வித்தியமாகியதோ  அதுபோற் பண்டுவம் பண்டிதமாகும். சங்கதத்தில் நுழைந்த வித்தியம் வைத்தியமாகி வித்தை தெரிந்தவன் என்றும், மருத்துவனென்றும் எப்படிக் குறித்ததோ, அதே போல் பண்டிதன் என்பது புலவனையும் பண்டுவனையும் சேர்த்தே குறிக்கும். வித்துவானென்ற சொல் ஒருகாலத்தில் தமிழ்புலவர்க்குப் பட்டமாயிருந்தது. அதை ”வட மொழிச் சொல்” எனத் தவறாய் முடிவுகட்டிப் பல தமிழ் ஆர்வலரும் ”புலவர்” என்று பெயர் மாற்றச் சொன்னார். அதுவும் மாறியது. வித்துவான் என்பதை வித்துவன் என்றே வைத்திருக்கலாம். கருணாமிர்த சாகரம் எழுதிய மு. ஆபிரகாம் பண்டிதர், தாழ்த்தப் பட்டோரால் இன்று மீண்டும் கண்டெடுத்துப் போற்றப்படும் அயோத்திதாசப் பண்டிதர் போன்றோர் பண்டிதரென அழைக்கப்பட்டது அவரின் புலமையாலா, மருத்துவப் பின்புலத்தாலா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஆய்வு செய்யவேண்டிய புலம் அது. ”பண்டுவம்/ பண்டிதம் மட்டுமே தமிழ், வித்துவம்/வித்தியம் தமிழில்லை” என்று சிலர் கூற முயல்வது எனக்கு முரணாய்த் தெரிகிறது. வெறும் நம்பிக்கையின் பேரில் ”ஒன்றைத் தமிழில்லை” என்று சொல்ல இப்படி அணியமாவது விந்தையிலும் விந்தை. இதிற் சான்றுகள் வேறு கேட்கிறார். குமுகாயத்தைப் பார்த்தாலே போதுமே? கைப்புண்ணிற்குக் கண்ணாடி எதற்கு?

அன்புடன்,
இராம.கி.   



1 comment:

kathir said...

பண்டுவம்- surgery அருமையான பாடம்