Wednesday, July 29, 2020

தீங்கனி இரவம் - 1

அண்மையில் நண்பர் நாக. இளங்கோ புறம் 281 பாடலை மிகச் சிறப்பாக விளக்கியிருந்தார். கூடவே ”தீங்கனி இரவத்தின்” அடையாளம் பற்றிக் கேள்வியும் எழுப்பினார். நான் "இலந்தை (Jujube-tree. Zizyphus jujuba)' என்றேன்.  நண்பர் இரவாவோ, “நாக சம்பங்கி” என்றார் புறநானூற்று உரைசெய்த இக்கால முகன உரையாளர் பலரும், தம் உரைகளில் நாக சம்பங்கியின் தாவரப் பெயரான, “Mesua ferrea (Cylon Ironwood tree) ”-ஐக் குறிப்பார். 3 ஆவதாய், இருள்மரம் (இருவேல (Burma Iron wood tree, Xylia xylocarpa) என்பதும் இயலுமை காட்டும்.  இரவப் பெயருக்கு 3  மரங்களும் சொந்தங் கொண்டாடும்.  ஆழம் போகாது சரியான மரம் அடையாளங் காணமுடியாது. என் பார்வை கீழே விளக்குகிறேன்.

இப் புறப்பாட்டின் தலைவன் சாத்தாரனல்லன். குறுநிலக் கிழானில் பெரியவன் ஆகலாம். பாடியவரும் கிழாரே.  அரிசிலாற்றங்கரை சேர்ந்தவூர் அவரதென ஔவை. சு. துரைசாமி சொல்வார். தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, செல்வக்கடுங்கோ வாழியாதன், வேளாவிக்கோமான் பதுமன், அதியமான் நெடுமானஞ்சி, வையாவிக் கோப்பெரும் பேகன், அதியமான் எழினி போன்றோரை அரிசில்கிழார் பாடினார். பாட்டின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 140-135. பாட்டினுள் 3 வகைச் செயல்கள் சொல்லப்படும். முதலாவது வீட்டின் தாழ்வாரத்தில் தழைகள் செருகுவது. அடுத்தது வீட்டுவளாகத்தில் சிலர் யாழ், பல்லியம் இசைப்பது, மூன்றாவது வெட்டுப்பட்ட வீரனுக்கான மருத்துவப் பணிகளைச் சொல்லித் தலைவி  தோழியை அழைப்பது. அரிசில்கிழார் பாட்டின் (புறம் 281. திணை: காஞ்சி துறை: தொடாக் காஞ்சி) அடிகளைப் பொருள்புரியத் தோதாக, சற்றேமாற்றிக் கீழே கொடுத்துள்ளேன். 

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ, 
வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க,  
கைபய பெயர்த்து, மையிழுது இழுகி, 
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, 
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, 
நெடுநகர் வரைப்பில் கடிநறை புகைஇ, 
வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறி 
கழற்கால் நெடுந்தகை புண்ணே, 
காக்கம் வம்மோ காதலம் தோழி

பெருவீரர் நடக்கையில்  டங்கென ஓசையிடும் காலணித் தண்டையை இசை மணி என்பர். 10000 பேரை வெற்றி கொண்டோரே இதை அணியலாமெனச் செ.ப. அகரமுதலி உயர்ந்து நவிலும். பெரும்பாலும் வெட்டு, கையில் ஏற்பட்டிருக்கலாம். அடிக்கடி போர் நடந்த சங்க காலத்தில் ( சிச்சிறு இனக்குழுக்களோடு பொருதிக் கரைந்து, சேரர், சோழர், பாண்டியர் எனும் முப்பெரும் இனக்குழுக்கள் சேர்ந்துவந்த காலம். போரும், மண உறவுகளும், பொருளியல் தொடர்புகளும் நிறைந்த காலம்,) ஓயாது சண்டை. பல வீட்டுத் தலைவர்  வெட்டுறுவதும், புண்ணாற்றுவதும், அதற்கென ஆள். பேர், அம்பு இருப்பதும் தொடர்கதை ஆகியிருக்கலாம். It must have been frequent. 

ஏனெனில் தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல்  24 ஆம் நூற்பாவில், ”இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்” என்று தனித் தொடருண்டு. ”பேய்ப் புண்ணோன்= பெரும் புண்ணோன்; துன்னுதல் கடிந்த= நெருங்கமுடியா அளவிற்கு; தொடாக் காஞ்சி= தொடாது ஆற்றும் செயல்” எனக் கொள்ளலாம். இங்கே புறப் பாட்டில், வெட்டுப்புண் திறந்துகிடந்தது. தைக்கவியலா நிலை. மெதுவே காய வேண்டும். வீட்டையும், மருந்துப் பணிகளையும் தலைவி ஒருசேர நிருவகிக்கிறாள். அரிசில்கிழார் அவள்திறன் கண்டு வியந்து, தலைவி பார்வையில் பாடுகிறார். பேய்க்காஞ்சி எனச்சில உரைகளிலும் தொடாக் காஞ்சி என வேறுசில உரைகளிலும் துறை குறித்துள்ளார். பாட்டின் நிலை விவரிப்போம்.

பட்டுயிரிகளோ (bacteria), வெருவிகளோ (virae), பூஞ்சைகளோ (fungii) புண்ணுள் சேரக்கூடாதெனில், வீட்டுள் வெளியார் வரக்கூடாது. இதை அறிவிக்க வேப்பந் தழையை வெளித் தாழ்வாரத்தில் செருகுகிறார். பெரியம்மை,, சின்னம்மை,  தட்டம்மை போட்டால், வெளியாருக்கு வெருவி பரவக் கூடாதென எழுதருகையாக (warning) இன்றும் வேப்பந்தழை செருகுவோம். வெட்டுப்புண் பட்டால், வேறு சிக்கல். ”உள்ளாருக்குப் பரவக்கூடாது.” பழமரபில் இதற்கும் வேப்பந்தழை செருகுவர் போலும். சூடணி வெருவிக் (corona virus)காலத்தில்  எளிதில் நோய்க்கு ஆட்படுவோர்/ மூத்தோர் வீட்டிலிருந்தால், ”வெளியிருந்து வெருவி நுழைய வேண்டாம்” என உணர்த்த, இன்றுஞ்சிலர் தழை செருகிறாரே? . 

அடுத்து வெட்டுப்புண்ணை வெளியார்க்கு உணர்த்த, தீங்கனி இரவந்தழை செருகுகிறார். (வெட்டுக்காயம்  அடிக்கடி ஏற்பட்டதென்றேனே?) இரவந்தழை இதன் குறியீடு. வெட்டுப் புண் உற்றோன் வலியால் துடித்துத் துயிலின்றி முனகுகிறான். அவனைத் தூங்கவைக்க, யாழிசை, பல்லியம் (பல கருவிகள்) முற்றத்தில் சேர்கின்றன. முழவோசைக் குறிப்பு பாட்டிலில்லை.) வலி ஆறலுக்காக இசை எழுந்ததோ? வெட்டுக்கையைப் பையப் பெயர்த்து, மைபோல அரைத்த இழுதை (nicely ground paste. என்ன இழுதென்று பார்ப்போம்) புண்ணின்மேல்   இழுகி (= அப்பி), புண்தோலில் ஐயவி சிதறி (ஐயவி, ஆகு பெயராய் கடுகெண்ணெயைக் குறிக்கும். நேரே கடுகையல்ல ), எரிச்சல் போக்க மூங்கிலால் ஊதுவார். (ஆம்பல்= மூங்கில். அல்லித்தண்டென சிலர் அறியாது சொல்வார். உடம்பெரிச்சலுக்கு இன்று மின்விசிறி  போடுகிறோமே? பழங்காலத்தில் காற்றூதினார் போலும்). 

காற்று நகர்வால் தண்டோசை எழக்கூடாதென இசைமணி எறிந்து ( =கழற்றி), தலைவன் தூங்கும்படி காஞ்சிப்பண் பாடத் தலைவி, தோழியை அழைக்கிறாள்.   [காஞ்சியை, “நிலையா உலகத்தில் நிலைப்பேறு எய்தல்” என்பார். வெட்டுற்றவன், ”நிலையோம்” என மயங்க, நிலைப்பாயென உறுதிதரக்  காஞ்சிப்பண். இரங்கலுக்கான விளரிப்பண் என்றும் ( வீ.ப.கா. சுந்தரம். தமிழிசைக் கலைக்களஞ்சியம். பா.தாசன் பல்கலை.... பக் 75-76.)  தூங்கவைக்கும் பண் என்றும் சொல்வர்.  செம்பாலையின் விளரியைக் குரலாக்கிப் பண்ணுப் பெயர்க்கக் கிட்டும் பெரும்பண் இது. ( அரி காம்போதியின் தைவதத்தைச் சட்சமாக்கிப் பண்ணுப் பெயர்க்கக் கிட்டுவது தோடி. ஆரோசை: ச ரி1 க1 ம1 ப த1 நி1) துன்புற்றாருக்கு நம்பிக்கைதரப் பாடும் தோடி.. ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின்,“தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் வந்துதித்த ---” என்ற பாடலை இங்கு நினைவு கொள்க.] 

அதே பொழுது, மற்ற சேடியர் நீள்வீட்டின் வரம்புகள் (= சுவர்கள்) அருகே (இக்காலச் சாம்பிராணிப் புகை போல) அக்கால அகிற்புகை எழும்பச் செய்கிறார். தணலுள் வெண்சிறு கடுகும் இடப்படுகிறது.  கடிநறை strong fragrance எனப் பாடலில் வருகிறது.; வீடு நெடுகிலும் புகை எழாது, பெரும்பாலும் முற்றஞ்சுற்றி இருக்கலாம்.  மருத்துவத்தை விவரித்து, ”அன்புத் தோழியே! வேந்தனுறும் விழுமந் தாங்கிய, பூம்பொறி கழலைக் காலில் வேய்ந்த, என் நெடுந்தகையின் (=கணவனின்) புண் காக்க வருவாயோ” என்று தலைவி அழைக்கிறாள். அடுத்த பகுதியில் ஐயவியின் விவரத்தினுள் போய், பின் தீங்கனி இரவத்தை அடையாளங் காண்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: