Sunday, July 19, 2020

ஆனந்தம் -1

கடந்த சூலை 10 இல், மரு. செம்மல் (Semmal Manavai Mustafa) தன் முகநூல் பக்கத்தில், “ஆனந்தம் தமிழ் சொல்லா ? இல்லையா ?” எனக் கேட்டார். பலரும் தாம்கொண்ட கருதுகோள் அடிப்படையில், ”வடசொல்” என்றார். சிலர் பாவாணரைக் காட்டி, ”தமிழ்ச்சொல்” என்றார். “வடமொழிக்” கூற்று அதிகச் சத்தம் போடுவது நம்மூர் வழக்கம். சங்கதக் கருத்தாக்கம் நம் சிந்தனையை ஆட்டிப் படைக்கிறது. முடிவில், “டும் டும் டும். இதனால் அறிவது என்ன வெனில், ஆனந்தம் எனும் sanskrit சொல்லை தமிழ்ச்சொல் என்ற பாவாணரும், ’ஆனந்தம்மே யாறா வருளியும்(திருவாச.2, 106)’ என்றெழுதிய மாணிக்க வாசகரும் தமிழ் மொழியை சரியாக அறியாதவர்கள் டம் டம் டம்” என்று நகைப்பாக மருத்துவர் இன்னொரு இடுகையிட்டார்.

”அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை என்று பாடிய வள்ளலாருக்கு ஜோதி என்பது வடமொழி என்று தெரிந்திருக்காதோ? பக்தி இலக்கிய காலத்துக்குள் எண்ணற்ற பல வடசொற்கள் தமிழிலக்கியத்தில் சேர்ந்து விட்டன. இன்றுநம் இலக்கியத்தில் ஆங்கிலச் சொற்கள் கலந்ததுபோல. மேயர், பால்கனி என்ற சொற்களைத் தமிழ் என்று வாதிடுவோர் உண்டு. ஆனந்தம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லையெனில் அது பிற்காலத்தில் வடமொழியிலிருந்து வந்து கலந்த சொல்தான்” என்று திரு.மணிவண்ணன் முன்னிகையிட்டார். பேரா. செல்வாவோ, ”என் கருத்து இந்த 'ஆனந்தம்' எனும் சொல்லைப்பற்றியதன்று. ஆனால் நீங்கள் அடிக்கடி கூறும் இக் கருத்து"சங்க இலக்கியத்தில் இல்லையென்றால் அது பிற்காலத்தில் வடமொழியில் இருந்து வந்து கலந்த சொல் தான்" எனும் உங்கள் கூற்று மிகவும் தவறானது மிகவும் அடிப்படையான பிழை கொண்டது” என மறுமொழித்தார்..

திரு. மணிவண்ணன், “இருக்கலாம். ஆனால் சங்க காலத்திலேயே ஆனந்தம் என்ற சொல் வடமொழி இலக்கியங்களில் பரவலாக இருக்கும்போது, தமிழில் அவை மிகக்குறைவாக இருக்கும் போது, அந்தத் தரவை எளிதில் புறக்கணிக்க முடியாது. மேலும், தமிழ் போல் ஒலிக்கும் சொற்களை யெல்லாம் தமிழாகவே கருதும் பழக்கம் தமிழர்களிடையே இருக்கிறது. மேயர், பால்கனி போன்ற சொற்கள் தமிழிலிருந்து தான் ஆங்கிலத்துக்குச் சென்றன என்று கூறுவோரைக் கேட்டிருக்கிறேன். அகராதி பார்த்தாலே எந்தச் சொல் தமிழிலிருந்து வந்தது, எது வடமொழியோடு தொடர்புள்ளது என்று சொல்லமுடியும். அகராதிச் சொற்பட்டியலில் தமிழ் வேருள்ள சொற்கள் ஏனைய தமிழ்ச்சொற்களோடு புணர்ந்து பல புதுச் சொற்களைக் கிளைத்திருக்கும். வடமொழி இரவற்சொற்கள் பிற வடமொழிச் சொற்களோடு புணர்ந்து தமிழிலக்கிய வழக்கில் இல்லாத, தமிழ்ப் பேச்சில் இல்லாத சொற்களைக் கிளைத்திருக்கும். எல்லாமே தமிழிலிருந்து வந்தது என்ற கண்ணோட்டத்தை ஒழித்து விட்டுப் பார்த்தால் இதை ஏற்றுக் கொள்ள முடியும்.” என மறுமொழி எழுதினார்.

இவ்வுரையாடல் நடக்கையில், வேறுவேலையில் ஆழ்ந்ததால், நான் பங்குகொள்ளவில்லை. தவிர, சிலவற்றைச் சரிபார்க்க வேண்டியிருந்தது. சரிபார்த்த பின் இவ்விடுகை எழுதுகிறேன். ஆனந்தம் வடசொல் என்றவர்,  ”மற்ற இந்தையிரோப்பியனில் இதுபோல் உண்டா?” -என்று பார்த்தாரா? தெரியவில்லை. அப்படியொரு தேடலே இன்றி முன்முடிவில் வடசொல் என்பது தருக்கப் பிழை. மற்ற இந்தையிரோப்பியனில்  bliss, joy, happiness, felicity, rejoice போன்றவை தாம் உள்ளனவே  (இச்சொற்களுக்கீடான மேலை இந்தையிரோப்பியச் சொற்களைப் பார்த்தே சொல்கிறேன்) தவிர, ”ஆனந்தத்தின்” இணையாய் அங்கெதையும் கண்டேனில்லை. அதுவே சிந்திக்க வைக்கிறது. சங்கதம் எங்கு இச்சொல்லைப் பெற்றது?

தவிர, சங்க காலத்திலேயே  வடமொழி இலக்கியங்களில் "ஆனந்தம்" பரவல் என்றவர்,  ”மூலங்களைப் போய்ப் பார்த்தாரா?” தெரியவில்லை. பொதுவாகச் ”சங்கதத்தில் அது, இதுவுண்டு” என்போரில் பெரும்பாலோர் கேள்வி ஞானத்தில் Rhetorical ஆய்ப் பேசுவார். வெகு சிலர் தவிர, பலரும் மூல ஆவணங்களைத் தேடுவதில்லை. தமிழ்ச்சான்று கேட்கும் இவர் மோனியர் வில்லியம்சாவது பார்க்கவேண்டும்,  அவ்வகரமுதலியின் 139 ஆம் பக்கம் சொற்பதிவிற்கு அணைவாகக் கொடுத்த எடுகோள்களில், இருக்கு வேதம் (கி.மு.1200), யசுர் வேதம் சுக்கில பக்கம் Vaajasaneyi Samhita (1200-800 BCE), Tittriiya upanishad (600 BC) என 3  தவிர்த்து வேறெதுவும் சங்க இலக்கியத்திற்கும் முற்பட்டுத் தெரியவில்லை. இந்நூல்களிலும் எத்தனை இடங்களில் ஆனந்தம் பயின்றதென ஆயவேண்டும். எனக்குச் சங்கதம் கொஞ்சமே தெரியும். எனவே தேடலுக்கு மாறாய், இம்மூன்றில் நிறைய இடங்களில் உள்ளதாகவே கொள்கிறேன்.

ஆனந்தம் பயனுற்றதாய் அந்த அகரமுதலியிற் சொல்லப்படும் மற்றவை எல்லாமே சங்க காலம். அல்லது பிந்தையவை, [அதர்வ வேதத்தின் காலக் கணிப்பு சிக்கலானது. அதர்வ வேதத்தை 800-600 BC எனப் பலர் சொல்லினும், அருத்த சாற்றம் (இதிலும் 400 CE வரை இடைச்செருகுண்டு), மனு ஸ்மிருதி ( கி,பி,200) ஆகிய நூல்கள் வேதங்கள் மூன்றென்றே சொல்லும்.  அடுத்து இராமயணம் (400 BC-300 CE), yajnavalkya (300-500 CE), Raghuvamsa (500 CE), Bhattikavya (700 CE), Giitagovindam (1200 CE) என்ற நூல்களை ஒதுக்கலாம்.]  தமிழில்  இச் சொல் நிலை இனிக் காண்போம். கூடவே 9 ஆம் நூ. திவாகர நிகண்டு ”ஆனந்தம் இன்பம் அகமகிழ்ச்சி ஆகும். தொய்யலும் கட்டியும் அப்பெயர் சிவணும்” என்ற 1464 ஆம் நூற்பாவின் வழி ஆனந்தத்தின் பொருளையும் பார்ப்போம்.   ஆனந்தத்தின் முதல் தமிழ் வெளிப்பாடு இதுவல்ல.  9 ஆம் நூ,வின் முன்னும் இச்சொல் பயின்றது.

அப்பர் 5 இடங்களிலும், மணிவாசகர் 41 இலும் பயனுறுத்தினார்.  யாருங் காணா இறைவனை, தான் நேரே காண வாய்ப்புற்ற மணிவாசகருக்கு முழுமுதல் ஆனந்தத்தில் அப்படி ஈடுபாடு. ”கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்டுகொண்டு இன்றே” என்று கோயில் திருப்பதிகம் 6:4 இல் விவரிப்பார். தன்னை ஆட்கொண்டருளியதை வியந்து அதிசெயப்பத்தும் பாடுவார். யார் கதையில் இத்தனை  திருவிளையாடல்கள் நடந்தன?  மணிவாசகர் காலத்தை களப்பிரருக்குச் சற்றுமுன், 3 ஆம் நூ.முடிவு, 4 ஆம் நூ. தொடக்கத்திற்குக் கொண்டு போவேன். பலரும் இதை ஏற்காது, அடம் பிடித்து  9 ஆம் நூ. என்பார். மணிவாசகரைத் தவிர்த்தால், இச்சொல் தொடங்கிய காலம் கி.பி.6 ஆம் நூ. ஆகலாம். பதினெண்கணக்கு நூல்களிலும், ஐம்பெருங் காப்பியங்களிலும், சங்க இலக்கியத்திலும் ஆனந்தம் எனுங் கூட்டுச்சொல்லில்லை. (ஆனால், அதன் பகுதியான நந்தம் உண்டு. கீழே காண்போம்).

அடுத்து, ’ஆனந்தம்’ கருத்துமுதல் வாதத்தில் எழுந்ததாய்த் தோற்றுகிறதே? பொருள்முதல் வாதமாய் எப்படிப் பார்க்கலாம்? - என்றாய்வோம்.  (நான் கொஞ்சம் கட்டுப்படி. கருத்துமுதல் வாதச் சொற்களை ஏற்பதில்லை.)  எங்களூரைச் சேர்ந்த  T.பக்கிரிசாமி என்பார், ”அறுபுலன் சொற்கள் ஐம்புலன் சொற்களிலிருந்தே தொடங்கும்.” என்பார். அது உண்மைதான். ”நல்லது, கொடியது, பண்பு, சிறப்பு, அறம்” போன்ற கருத்துமுதற் சொற்களை (conceptual words) அறுபுலன் சொற்கள். (கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு) எனும் ஐம்புலன்களால் இவற்றை அறிய ஒண்ணுமோ? How does a conceptual word form? எண்ணிப் பாருங்கள்.

நெல்லை ஐம்புலனால் அறியலாம். நெல்> அரிசி> சோறு வழி பசியாறலாம். பசியாறின் மனம் அமைதியுறும்.  “நல்லது” என்ற சொல் ஏற்பட நெல் வழிவகுக்கும். சென்னையில் சிலகாலம் நான் வசித்தபகுதி சோழகங்க நல்லூர். அது பல்லவ அரசரால் பார்ப்பனர் அல்லாதாருக்குத் தானமாய்க் கொடுக்கப்பட்டது. ஏரி வேளாண்மை இருந்த ஊர். இங்கே நெல்லூர்>நல்லூர் ஆயிற்று. இதுபோல் தமிழகமெங்கும் உள்ள நல்லூர்கள் எல்லாம் நெற் பின்புலத்தையே காட்டும். பொதுவாக மொழி வளர்ச்சியில் ஐம்புலன் சொற்களே சற்று உருமாறி அவற்றிற்கு அருகில் அமையும் ஆறாம்புலன் சிந்தனைகளுக்குப் பெயராகும். இன்னும் 2 காட்டுகள் பார்ப்போம்.: மதி = சந்திரனைக் குறிக்கும் ஐம்புலச்சொல்.  மதிப்பு, அதிலெழுந்த அறுபுலச் சொல். அரத்தம்,  ஐம்புலச்சொல். அரத்து (= சிவப்பு)  அறுபுலச்சொல். நான் ஆய்ந்தவரை, பெரும்பாலான ஆறாம் புலச் சொற்கள் இப்படியே உருவாகின்றன.

அன்புடன்,
இராம.கி.

No comments: