Monday, July 13, 2020

சொத்தாவணங்கள்

ஒரு சமயம்,   தி இந்து (தமிழ்) இதழில் “சொந்த வீடு” எனும்பகுதி 2ஆம் பக்கத்தில் ”சொத்து ஆவணங்களில் புழங்கும் சொற்கள்” என்ற கட்டுரை வெளிவந்தது. அது ஓவியா அர்ஜுன் என்பார் எழுதியது. அதிலுள்ள சொற்கள் சில தமிழாகவும், சில வேற்றுமொழிச் சொற்களாகவும் இருந்தன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். விளக்கம் அவருடையது. பிறைக் கோட்டினுள் என் தமிழாக்கத்தையும் சொல்தொடர்பான சில குறிப்புகளையும் கொடுத்துள்ளேன். இச்சொற்கள் பல்லவர், முற்காலப் பாண்டியர், பெருஞ்சோழர், பிற்காலப்பாண்டியர், விசயநகரப் பேரரசு, சுல்தான்கள் அரசு, கிழக்கிந்தியக் கும்பணி வழியே ஆங்கிலேய அரசிற்கு வந்து இற்றை இந்திய அரசமைப்பின் கீழ் புழங்குகின்றன. வெவ்வேறு வரலாற்றுக்காலத் தாக்கம் இச்சொற்களுக்குள் உண்டு. .

பட்டா: ஒரு நிலம் யார் பெயரில் உள்ளதென்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த்துறை அளிக்கும் ஆவணம். (இச்சொல் தமிழே. நில உரிமையாளருக்குக் கொடுக்கப்படும் ஆவணம் பட்டா.. இதன் படி வருவாய்த்துறையில் இருக்கும்.)

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டிலுள்ளது என்பது தொடர்பான விவரங்களடங்கிய வருவாய்த் துறை ஆவணம் (இதுவும் தமிழே. சிட்டையிலிருந்து உருவாகியது சிட்டா ஆகும். சிட்டை என்பது தமிழ்க்கணக்கு ஆவணங்களில் ஒன்றான முதற்குறிப்பு. சிட்டா என்பது வருவாய்த்துறை ஆவணம். நில உரிமையாளருக்கு இதன் படியைக் கொடுப்பர்.)

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்தப்பகுதியிலுள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம். (கிராமம் என்பது கம்மம்/காமம் எனும் தமிழ்ச் சொல்லின் சங்கத வடிவம். காமமென்ற சொல் பாகதத்திலுமுண்டு. இலங்கையில் பரவலானது. தமிழில் காமம் அரிதே பயிலும். ஊரென்பதே நம்மூரில் பெரிதும் புழங்கும். அடங்கலென்ற சொல் தமிழே. சிட்டை விவரங்களே ஊர்ப்பார்வையில் எல்லா நிலங்களுஞ் சேர்த்து அடக்கிக் காட்டப்படும். அடங்கலென்பது வருவாய்த் துறை ஆவணம். இதன் படியை நில உரிமையாளரிடம் கொடுக்கமாட்டார். அரசிடம் மட்டுமேயிருக்கும்.)

புல எண்: நில அளவை எண்

கிராம தானம்: கிராமத்தின் பொதுப்பயன். (’காமதானம்’ என்று சொன்னால், இற்றை நிலையில் தவறான பொருளுணர்த்தும். எனவே ஊர்க்கொடை என்று சொல்லலாம். தானம் தமிழே. ’தந்தது’ என்று பொருள்படும். காமக்காவற் பொருளில் ஒருகாலத்தில் ’காம ஆட்சி’ பயன்பட்டது. புத்த காஞ்சியின் காவல் தெய்வம் தாரா தேவியே காம ஆட்சியாவாள். இன்று இவளைக் காமாட்சி என்றாக்கிக் காமக்கண்ணி எனப் புரிந்து அம்மனாக்கி விட்டார்.)

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காகக் குறிப்பிட்ட நிலத்தைத் தானமாய் அளித்தல். [இது தெய்வத்தானம். பெருமானருக்குக் (ப்ராமணருக்கு) கொடுத்தது பெருமத்தானம் (ப்ரமதானம்). இன்றைக்கு மங்கலம் என முடியும் ஊர்களில் பெரும்பாலானவை ஒரு காலத்தில் சதுர்வேதி மங்கலங்களே. பெருமானர் அல்லாதாருக்குக் கொடுத்த ஊர்கள் நெல்லூர்>நல்லூரென முடியும். சென்னை வேளச்சேரி ஒரு காலத்துச் சதுர்வேதி மங்கலம். சென்னை அண்ணாநகருக்கு அருகிலுள்ள திருமங்கலமும் அப்படியே. இற்றைச் சோழிங்கநல்லூர் ஒருகாலத்து நெல்லூர்.

அற்றுவிகம் (ஆசிவிகம்), செயினம், புத்தம் போன்ற வேத மறுப்பு சமயங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்டவை பள்ளிச் சந்தம் எனப்பட்டன. பற்றி (பக்தி) இயக்கத்தின் விளைவாய், வேத மறுப்புச் சமயங்கள் நம்மூரில் குறைந்தபோது அவ்வாலயங்கள் பலவும் சில சிவ, விண்ணவக் கோயில்களாய் மாற்றப்பட்டன. அன்றேல், பள்ளிச்சந்த நிலங்கள் சிவ, விண்ணவக் கோயில்களுக்கு மாற்றியெழுதப் பட்டன. இன்றோ கோயில்களைச் சுற்றியுள்ள இது போன்ற நிலங்கள் பல்வேறு ஊர்ப் பெரியவர்களால் கவர்ந்துகொள்ளப் பட்டுள்ளன. பெரும்பாலானவற்றை அடையாளங் காண்பது சிக்கல்.]

கிராம நத்தம் ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புப் பயன்பாட்டுகாக ஒதுக்கப்பட்டநிலம். (ஊர்நத்தம் நல்ல தமிழ்ச்சொல். public பயன்பாடின்றி private புழக்கத்திற்கு மட்டுமானது நத்தம். private க்குச் சொல்லைத் தேடி இன்று பலர் அலைகிறார். என்னைக் கேட்டால் நத்தம் பொருத்தமாய் அமையும். தயக்கமின்றிப் பயன்படுத்தலாம்.)

இனாம்தார்: பொதுநோக்கத்துக்காகத் தனது நிலத்தை இலவசமாய் அளித்தவரைக் குறிக்கப் பயன்படுத்துஞ் சொல். (நத்த நிலத்தை இலவயமாய் ஊர்க்கொடைக்குக் கொடுத்தவர். கொடையாளர்.)

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு எல்லைகளைக் குறிப்பது. [பலகோணப் பரப்பின் அளவும், பக்கநிலங்கள் யாருக்குச் சொந்தமென்பதும் இச் சொல்லின் பொருள். வியல்தல் = விரிதல்; வியம் = extent. வியத்தீரணம் என்பது சரியான தமிழாக்கம்.]

ஷரத்து: பிரிவு (பிரிவையே வைத்துக்கொள்ளலாம்.)

இலாகா: துறை (துறையையே வைத்துக்கொள்ளலாம்.)

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்தல் (கிறுவுதல், கீறல் என்பவை கல்வெட்டில் பதித்தலைக் குறிக்கும்.. அக் காலத்தில் இது கிறயம் எனப்பட்டது. இன்றுங் கூடச் சிலர் அப்படி எழுதுவார். பொத்தகம் புத்தகமானது போல் மீத்திருத்தமாய் இது கிரயமாகிப் போனது. நல்ல சொல் கிடைக்க வல்லினம் பயன்படுத்தினாற் போதும்.)

இறங்குரிமை: வாரிசுரிமை. (ஒருவரின் வழி வருகிறவர் வாரிசு. நல்ல தமிழே.)

வில்லங்கச் சான்று: ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர் அதனை மறைத்து விட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம். (பல்வேறு மோசடிகளை இந்த வில்லாங்கச் சான்றே வெளிக் கொணரும். இப்பொழுது இச்சான்றுகளிலும் மோசடி நடக்கிறது.)   .     .                         
குத்தகை: ஒரு நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையைச் சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

தாய்ப்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம் இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்ததென்பதை அறிய உதவும் முந்தையப் பரிவர்த்தனை ஆவணங்கள். (பத்திரம் = ஏடு, ஆவணம். பரிவர்த்தனை = பரிவட்டனை. வட்டுதல் = கொடுத்து வாங்குதல். cycle of exchange.)

ஏற்றது ஆற்றுதல் = குறித்தவகை பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதி அளித்தல்.


அனுபவ பாத்தியதை: நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை (அனுபவ பாத்தியதை = நுகர்ச்சிப் பங்கு.)

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல் (சுவாதீனம் = தன்னுமை.)

ஐமாபந்தி = வருவாய்த் தீர்வாயம் (இத் தமிழ்ச்சொல்லையே பயன்படுத்தலாம்.)

நன்செய் நிலம்: அதிகப்பாசன வசதி கொண்ட நிலம் (வசதி = ஏந்து)

புன்செய் நிலம்: பாசனத்தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்

நல்ல தமிழச்சொல்லைப் பயன்படுத்தினால் பதிவு அலுவங்களில் ஏற்பார்களா என்பது கேள்விக்குறி. தமிழ் நாட்டில் தமிழ் அப்படித்தான் இப்போது உள்ளது. ”நல்ல தமிழா? வீசை என்ன விலை?” - என்று கேட்கும் நிலையில் தமிழர் பலரும் உள்ளார். இருந்தாலும் முயல்வோம்.

அன்புடன்,
இராம.கி.     

No comments: