Monday, July 06, 2020

உதிரம்

உதிரம் என்பது தமிழ்ச்சொல்லா? என்று திரு. தமிழ் என்பார், தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்டிருந்தார். இது அவருக்கான விடை.

உல்-தல் = எரிதல் பொருள் வேர். காய்தல், துன்பப் படுதலையும் குறிக்கும் எனவே எரியின் நிறமான சிவப்பும் இதற்குப் பொருளாகும். உல்>அல்>எல் என்றும் எரிதல் சொற்கள் எழும். உல் என்பது வளமான வேர். ஏராளம் சொற்களை உருவாக்கும். அவற்றை விரிப்பின் பெருகும்.
உல்>உலர்-தல் = காய்தல்
உலர்-த்தல் = காய்த்தல், புலர்த்தல்.
உலர்-தல்>உலறு-தல் = வற்றுதல்.
உல்>உலை = நெருப்புள்ள அடுப்பு

உல்+ஓகம் =    சிவப்பின் திரட்சி = செம்பு. மாந்தன் மூன்றாவதாய்க் கண்ட மாழை. பின்னால் விதப்புப் பொருள் மாறிப் பொதுமைப் பொருள் வந்தது. எல்லா மாழைகளையும் உலோகம் என்று அழைத்தார். செம்பை முதலில் குறித்த இந்தச் சொல்லைச் சங்கதச்சொல் என்று பலகாலம் தனித்தமிழ் அன்பர் கருதினார். பாவாணரே கூட அப்படித்தான் கருதினார். எனவே தான் மாழை என்ற சொல்லை அவர் அறிமுகப் படுத்தினார்.அப்படி இருக்கத் தேவையில்லை. ஆழ ஆய்ந்தால் உலோகம் தமிழ்ச்சொல்லே. ஓகம் = திரட்சி, திரள்.

உல்>உரு>உரு-த்தல் = பெருஞ்சினம் கொள்ளுதல் “ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்து” கலி39, 23. பொதுவாய் சினமுற்றபோது முகத்தில் அரத்தம் அதிகம் பாய்வதால், முகம் சிவந்து காணும். எனவே சிவத்தல் என்ற பொருளும்  உருத்தலுக்கு வந்துசேரும்.

உருத்தலுக்கு எரிதல் என்ற பொருளும் வேர்ப்பொருள் காரணமாய் ஏற்படும். எரிதல்  = அழலுதல் “அகம் உருப்ப நூறி” (புறம் 25.10)

உரு>உரி = சிவப்பு நிறம்

திரம் என்பது திரட்சிக்கான இன்னொரு வடிவம்.

உரு+திரம் = உருத்திரம் = பெருஞ்சினம். உருத்திரம் கொண்டவன் உருத்திரன், நாம் சிவன் என்று சொல்லும் தெய்வ உருவை வடமொழியில் ருத்ர என்பார். அவர் சிவன் என்றே பொருள் கொள்வார்.  தமிழிலும் அதே பொருள் உண்டு. உருத்திரன் தமிழ்ச்சொல்லே. உகரம் தவிர்த்த ”ருத்ர”  வடசொல்.

உரி+திரம் = உரித்திரம் = மஞ்சள், மரமஞ்சள். இரண்டின் நீரகச்செறிவு (hydrogen concentration) காடி அரங்கில் (acid range) இருந்தால் மஞ்சள் நிறமும், களரி அரங்கில் (alkali range) இருந்தால் சிவந்த குங்கும நிறமும் காட்டும்

உருப்பு, உரும்பு, உருமம், உருநம்>உண்ணம் போன்றவை வெப்பத்தைக் குறிக்கும் சொற்கள். அவையும் இவற்றோடு தொடர்புடையவை தாம். உண்ணம் வடமொழியில் உஷ்ணமாகும். 
உரு>உருத்து= சினம்

பல சொற்கள் தலைக்குறை, இடைக்குறை, கடைக்குறையில் பலுக்க எளிதாக உருவங்களை மாற்றிக்கொள்ளும். (ஏதேனும் நல்ல இலக்கண நூலை எடுத்துச் சற்று படியுங்கள். இது புரியும்.)
 இங்கே இடைக்குறையில்,

உருத்து>உத்து = செம்பு
உத்து>உத்தும்பரம் = செம்பு
உத்தும்பரம்>உத்தாம்பரம் = செம்பு
உத்திரம்>உதிரம் = செந்நீர், குருதி, அரத்தம். குருதியும், குரு = செம்மை நிறத்தால் உருவான சொல்லே.

உருத்திரம்>உத்திரம் = மஞ்சள், மர மஞ்சள்

உத்திரம்> உதிரத்தை உதிர்+அம் என்று பிரிப்பது தவறான புணர்ச்சிப் பிரிப்பு. 

அன்புடன்,
இராம.கி.

2 comments:

திரு...... said...

ஐயா உங்கள் சொல்லாய்வுகளை நான் படித்து வருகிறேன். சிறப்பாக உள்ளது. நாங்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இலக்கியப் பேரவை நடத்தி வருகிறோம்.. தாங்கள் நாங்கள் நடத்தும் இலக்கிய கூட்டங்களுக்கு வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள இயலுமா? மின் காணொளி செயலி வழி வலை ஊடக கூட்டங்களும் நடத்தி வருகிறோம்.
நீங்கள் அலைபேசி எண் அனுப்பினால் தொடர்பு கொள்ள வசதியாயிருக்கும்.
நன்றி
இவண்
சாலமன் தங்கதுரை.

இராம.கி said...

iraamaki@bsnl.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு மடல் அனுப்புங்கள். மேற்கொண்டு தொடர்வோம்.