Monday, July 13, 2020

machine and related words

ஒருமுறை machine learning என்பதை எப்படித் தமிழிற் சொல்வது? - என்று கேட்டார், அதைச் சொல்ல நினைக்கும் போது, machine, engine, hickey, gadget, equipment, apparatus, tool, device, facility, இன்னும் சில கருவிகள் பற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணினேன்.

முதலில்  machine, engine பார்ப்போம். இவை எல்லாவற்றையும் பொறியெனச் சொல்லும் பழக்கம் நம்மில் நிறையப் பேருக்கு உள்ளது. அது சரியில்லை. Engine is a driver. machine can be either a driver (ஓட்டி) or a driven one (ஓடி). It justs converts one form into another. இருவளை (two wheeler), விலங்கிழுப்புச் சகடம், பல்வேறு வையங்கள் (wagons) ஆகியவற்றை வண்டியென்ற பொதுப்பெயர் கொண்டு அழைக்கிறோம். ஒவ்வொரு வண்டியிலும் ”ஓட்டி, ஓடி” என 2 பாகங்களுண்டு.

1. சகட்டில் (car) கன்னெயைக் காற்றில் எரித்து புகையுண்டாக்கி அதை உலக்கை-உருளைப் (piston-cylinder) பிணைப்பிற்குள் அனுப்பி அமைவது எந்திரம் (engine) என்னும் ஓட்டி அல்லது துரவு (drive).

2. சட்டகையும் (chassis) சக்கரங்களுஞ் (wheels) சேர்ந்தது ஓடி (driven machine).

ஓட்டியையும் ஓடியையும் கவைக்கும் முறை சகட்டிலும் இருவளையிலும் வேறுபடும். விலங்குச் சகடத்தில் ஓட்டி என்பது மாடு/குதிரையெனும் விலங்கைக் குறிக்கும். ஓடி என்பது  சட்டகையையும், சங்கரங்களையும் சேர்த்துக் குறிக்கும்..

காட்டாய், தெறுமப் புயவு மின்னாக்கி (thermal power generation) அல்லது அனல் மின் நிலையத்தில் உயரழுத்த நீராவி ஒரு சுழலியைச் (turbine) சுற்றுகிறது. அந்தச் சுழலியோடு ஒரு மின்னாக்கி இணைக்கப் பட்டு அலைமின்சாரத்தை (alternating current) உருவாக்குகிறது. இதில் சுழலி என்பது engine. மின்னாக்கி என்பது ஒரு electrical generating machine. இதேபோல் புனல்மின் நிலையத்தில் நீர்ச்சுழலி என்பது driver. மின்னாக்கி என்பது driven machine. தமிழில் எ(ல்)ந்திரம்> எந்திரமென்பது எற்றுதல் (= தள்ளுதல்) தொடர்பாய் எழுந்த சொல். இதற்கு இயக்குதற் பொருள் வரும்படி இய(ல்)ந்திரம் என்றுஞ் சொல்வர். எல்லுதல்/இயலுதல் என்ற இரு செயல்களுமே ஒரு machine ஐ, இன்னொரு machine இயக்குவது குறித்தது.. காட்டாக நாம் பயன்கொள்ளும் சீரூந்து என்பது 4 பேரோ, 8 பேரோ செல்லும் ஒரு சகடம் (car) ஆகும். இது வெறுமே ஒரு machine அல்ல. இதனுள் 2 machine கள் உள்ளன.  4 சக்கரமிருக்கும் சகடத்தை (machine 1) சகடத்தின் எந்திரம் என்னும் 2 ஆம் machine இயக்குகிறது.

அப்படியெனில் machine ஐ எப்படித் தமிழில் சொல்வது? இதற்கான விடை யெளிது. ஆனாற் கவனம் வேண்டும். திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் சீராகச் செய்யவும், தன்னால் இயலாத பெரு வேலைகளை தன் சிந்தனையால், கருவிகள்/கட்டுப்பாடுகளாற் செய்யவுமே மாந்தன் machine ஐக் கண்டுபிடித்தான். இதில் முகன்மையானது அச்செடுத்தது போல் ஒப்பிட்டு மீளச் செய்யும் வேலையின் நேர்த்தி.

மா என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு அளவு, ஒப்பீடு, அதிகம், வலி ஆகியவை பொருட்பாடுகளாகும். .ஆங்கிலத்தில் machine ஐ, ”1540s, "structure of any kind," from Middle French machine "device, contrivance," from Latin machina "machine, engine, military machine; device, trick; instrument" (source also of Spanish maquina, Italian macchina), from Greek makhana, Doric variant of Attic mekhane "device," from PIE *magh-ana- "that which enables," from root *magh- "to be able, have power." என்று குறிப்பிடுவார்.

இந்த வரையறையில் முகன்மை ”மா” என்பதே. தமிழில் அன்னுதல் என்பது போலுதல் பொருள் கொள்ளும்.. மா+அன்னுதல் என்ற சொற்கள் புணரும் போது உடம்படுமெய்யாக யகரம், வகரம் பெரும்பாலும் பயன்படும் ஓரோ வழி ககரமும் சிலபோது பயன்படலாம். இங்கே அதைப் பெய்து மா+க்+ அ(ன்)னுதல் = மாக(ன்)னுதல் என்ற கூட்டுச்சொல்லை உருவாக்கலாம் ”ஒன்றைப் போல் இன்னொன்றைச் செய்துகொண்டிருந்தலை அது குறிக்கும். வலி, அதிகம் என்ற பொருளும் இதனுளுண்டு. ஒரு machine இப்படித் தானே இயங்குகிறது? machine = மாகனை அல்லது மாகனம். நான் சில காலமாய் மாகனத்தைப் பயின்று வருகிறேன். பலரும் இதைக் கேள்வி கேட்கிறார். என் விடை சிறியது. ”கருவி என்பது நம்மிடம் பலகாலம் இருந்தது. 200/250 ஆண்டுகளிற்றான் machine எனும் பெருங்கருவியை அறிந்தோம். machine ஐக் குறிக்கக் கருவியம் என்பதைக் காட்டிலும் மாகனம் எனக்குப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது.

பொறி என்றசொல் எந்திரத்திற்கு ஒரு மாற்றே (குறிப்பாக உள்ளக எரிப்பு இயந்திரத்திற்கு - internal combustion engine - அதுவொரு மாற்று.) அதன் பொருளை நீட்டி மாகனத்திற்கு இணையாகப் பயில்வதற்கு நான் தயங்குவேன். (இந்தத் தெளிவுகள் எனக்கு வர நெடுங்காலம் பிடித்தது. என்னுடைய பழைய ஆக்கங்களில் எந்திரம், பொறி என்ற சொற்களின் பயன்பாட்டில் சற்று குழப்பம் இருந்திருக்கிறது, இப்பொழுது 4,5 ஆண்டுகளாய் இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கிறேன்.) என் பரிந்துரை machine learning = மாகனப் பயிற்றுவிப்பு. (மாகனம் பயில்கிறது. நாம் பயிற்றுவிக்கிறோம்.)

அடுத்தது hickey யும் gadget உம்.

hickey (n.) = "any small gadget," 1909, American English, of unknown origin. என்றே ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலி சொல்லும். *gadget  என்பதற்கு, 1886, gadjet (but said to date back to 1850s), sailors' slang word for any small mechanical thing or part of a ship for which they lacked, or forgot, a name; perhaps from Fr. ga^chette "catchpiece of a mechanism, " dim. of ga^che "staple of a lock." என்று சொல்வர். staple of the lock என்பதைக் கொக்கி என்றே தமிழில் சொல்கிறோம்; பூட்டைத்திறந்து காட்டி, "சாவியை இப்படிப்போட்டுத் திறந்தா, இந்தக் கொக்கி இக் காடைக்குள்ளே விழணும்பா" என்று சொல்லுகிறோம் இல்லையா? கொக்கும், கொடுக்கும் ஒன்றுதான். "வளைந்த பொருத்து" என்று பொருள்.

கொடுக்காப்புளிப் பழம் சாப்பிட்டிருக்கிறீர்களோ? வளைந்து சுருண்டு கிடக்கும் பழம் கொடுக்காப்புளி. சற்றே மெலிந்த புளிப்புடன், சுவையாக இருக்கும் பழம். இற்றை நகர்ப்புறத் தமிழர் சற்றும் அறியாப் பழம். நாட்டுப் புறங்களிலுங் கூட இப்போது அழிந்துகொண்டிருக்கும் பழம். [தமிழ்நாட்டின் வளத்தில் இன்னும் ஒன்றாய் இது அழிந்து கொண்டிருக்கிறது.] அதில் வரும் கொடுக்கு என்ற முன்னொட்டு வளைந்த நீட்டத்தைக் குறிக்கும். வாலிற்குக் கூட கொடுக்கென்ற பொருளுண்டு. கொ(டு)க்கின் சிறியது கொ(டு)க்கட்டை ஆகும். மேலைமொழிகளில் get என வருவது போல் கட்டை என்ற சொல் நம் மொழியில் சிறியதைக் குறிக்கும் பின்னொட்டாய் அமையமுடியும்.

கொக்கட்டை என்பதைச் சொல்வதற்குப் பெரிதாய்த் தோன்றினால், அல்லது தயங்கினால், கொக்கை என்றே கூட gadget -யைச் சொல்லலாம். கொக்கை - catchpiece of a mechanism என்று சொல்ல முடியும். hickey ஐயும் அப்படி அழைக்கும் போது gadget ஐக் கொக்கட்டை என்றே அழைக்கலாம். இன்னுஞ் சில தொடர்புள்ள சொற்களுண்டு. எல்லாவற்றையும் கருவி என்றே ஒரேயடியாய் அழைப்பது நம்மில் பலருக்குள்ள சோம்பல் என்றுதான் தோன்றுகிறது. (எனக்கும் அது இருந்தது. இப்போது அது தவறு என்று உணர்ந்ததால் துல்லியங் கட்ட வேறு சொற்களைக் கீழே பரிந்துரைக்கிறேன்.

Equipment இது இருவகையாய் ஆனது. ஒன்று பொருள் தாங்குவது. இன்னொன்று செயல் செய்வதற்கானது. முதல்வகையைச் செய்கலன் என்றும், இரண்டாம் வகையை ஏந்தம் என்றுஞ் சொல்லலாம். முதல்வகை வேதியாலைகளிலும், இரண்டாம் வகை மாகனவியல், மின்னியல் போன்ற மற்ற மானுறுத்தல் (Manufacture = மானுறுத்தி) ஆலைகளில் பயன்படும்.

அடுத்தது apparatus (n.) "a collection of tools, utensils, etc. adapted as a means to some end," 1620s, from Latin apparatus "tools, implements, equipment; preparation, a preparing," noun of state from past participle stem of apparare "prepare," from ad "to" (see ad-) + parare "make ready" (from PIE root *pere- (1) "to produce, procure"). ஒரு பொருளைப் பண்ணுவதற்குப் பயன்படுவதால் இதைப் பண்ணம் எனலாம்.

அடுத்தது tool இதன் அடிப்படை tawlen என்ற பழஞ் செருமானியத்தில் உருவாகியது. taw (v.) ”to prepare" (leather), from Old English tawian "prepare, make ready, make; cultivate," also "harass, insult, outrage" to do, make," from Proto-Germanic *tawōjanan (source also of Old Frisian tawa, Old Saxon toian, Middle Dutch tauwen, Dutch touwen, Old High German zouwen "to prepare," Old High German zawen "to succeed," Gothic taujan "to make, prepare"), from Proto-Germanic root *taw- "to make, manufacture" (compare tool (n.)). தமிழில் ஒன்றைத் தக்கதாகுவதற்கு தகைத்தல் என்ற தன்வினையுண்டு. இன்னொன்றைத் தக்கதாக்க தகைவித்தல் என்ற பிறவினைச்சொல் உண்டு. இதில் விளையும் பெயர்ச்சொல்லான தகைவி tool க்குச் சரிவரும்.

அடுத்தது device ஒரு பொருளைச் செய்வதற்காக விதப்பாய்ச் செய்யப்பட்ட கருவி = device. Facility = ஏந்து (ஏல்தல் வினையில் கிளர்ந்த சொல் இது ஏல/இயலச் செய்வது)

Machine = மாகனை மாகுதல் என்பது மாத்தல்= பருக்குதல் என்றவினையில் கிளர்ந்த சொல்.. மாகு = பெரியது. மாகனை = பெரியதாய்ச் செய்ய உதவும் அலகு.

Unit = அலகு
Arrangement = அடங்கல், அடங்கு (ஒரு கூடைக்குள்/கட்டகத்துள் விதவிதமாய் ஒழுங்கு செய்வது)
Means of production = புதுக்க ஏது
Workshop = பட்டறை
Drive = துரவி (ஒன்றைத் துரத்துவது துரவி)
Vessel = கலன், ஏனம்
Utility = ஊடுழை
widget = இடுக்கை
Function = பந்தம்

அன்புடன்,
இராம.கி.

5 comments:

kathir said...

நன்றி ஐயா!

ஒவ்வொரு சொல்லையும் அதை எப்படி தோற்றுவித்தீர்கள் என்ற எண்ண ஓட்டம் மட்டுமன்றி வேரிலிருந்து எடுத்திருக்கீங்க என்பதைத் தெளிவா எழுதி இருக்கீங்க. Drive - ஓட்டி, துரவு மிகவும் பிடித்திருக்கு. மின்னியற் கலப்பிகளில் drive signal துரவு சமிக்கை என்று சொல்லலாம் இதைக்கொண்டு.

Product என்பதை தயாரிப்பு என்று அகராதிகள் சொல்லுகின்றன. உற்பத்தி என்றும் சொல்லுகின்றன. விளைப்பு என்று கேள்வி பட்டிருக்கேன். production, produce, product, producible எல்லாம் ஒரு வேரிலிருந்து பெற முடியுமா.

நன்றி
கதிரவன்

இராம.கி said...

முடியும். product என்பதற்கு விளைப்பு என்றும், புதுக்கு என்றும் இரு சொற்களையும் புழங்கிக் கொண்டிருக்கிறேன்.

விளைப்பு என்பது வேளாண்மையில் இருந்து கிளைத்து மானுறுத்தலுக்கு (manufacture) வந்தது. புதுக்கு என்பது நாட்டு மாழைத் தொழில் இடங்களான பட்டறைகளில் இருந்து கிளைத்து மானுறுத்தலுக்கு வந்தது. கொல்லன் பட்டறையில் பழையதைக் கொடுத்து அவன் அடித்தோ, பற்ற வைத்தோ, முலாம் பூசியோ, இன்னும் இதுபோன்ற நாட்டுப்புற முறைகளில், பழையதைப் புதுக்கிக் கொடுப்பதால் வந்தது. புதுக்கு / புதியது என்பதும் பூத்தல் வினையோடு தொடர்பு கொண்டவை தாம். பூத்தலும் புதலியலோடு (botony) தொடர்பு கொண்டதே. மானுறுத்தலில் கரட்டுப் பொருள் (raw material), ஊடுழைகள் (utilities), ஆற்றல் பயனுறுத்திப் புதுக்குகளைச் செய்கிறோம்.

விளைப்பு, புதுக்கு என்ற இரண்டுமே ஒரு பொருட் சொற்களாய் இருப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். வட்டி என்ற சொல் இன்றைக்கு interest என்பதற்கு வழங்குகிறது. ஒரு 200, 300 ஆண்டுகளுக்கு முன்வரை பொலிசை, வாசி என்ற சொற்கள் இருந்தன. அதே போல, பொலுவு, பொலி என்ற சொற்கள் வழக்கிறந்து, இலாபம் என்ற சொல் இப்போது எழுந்துள்ளது. எது நிலைக்கும், எது அழிந்துபடும் என்று சொல்லும் பக்குவம் நமக்கில்லை. நாம் முன்வைக்கும் காலகட்டத்தில் உள்ளோம்.

produce என்பதும் product என்பதும் ஒரே பொருள்கள் தான். இருப்பினும் produce ஐ புதுகை எனலாம்.

production = புதுக்கம்,
produce = புதுகை,
product = புதுக்கு,
producible = புதுக்கக் கூடிய.

kathir said...

நன்றி ஐயா. என்றும் எங்களுக்கு புதுச்சொற்கள் நல்கியும் வழிகாட்டியும் நல்முடன் இருக்க வாழ்த்துகின்றோம். என் தொழிலில் புதுக்குகள் ஆக்கும் படி நிலைகளை எழுதலாம் என்றிருந்தேன். சொற்கள் கிடைத்துவிட்டன. முன்பு நீங்க எழுதிய specification, specify என்று பல புதிய சொற்களைச் சேர்த்து வந்துள்ளேன்.



அன்புடன்
கதிரவன்

விஸ்வநாதன் said...

ஐயா!. Function = பந்தம், இதில் இயக்கம் ஏதும் இல்லையே!. சொந்தபந்தம், பந்தக்கால் போன்றவற்றில் உள்ள பந்தமும் இதுவும் ஒன்றா?. Functional க்கு இது எப்படிப் பொருந்தும்?.

புவனேஸ்வரன் said...

ஐயா, produce என்பதற்கு கலித்தல் என்னும் சொல் சரியாக வருமா?