கருங்கடுகு (black mustard- Brassica nigra), கேழ்க்கடுகு (brown mustard- B. juncea), வெண்சிறு கடுகு (white mustard- B. hirta/Sinapis alba) என 3 கடுகுகள் உண்டு. ஐ, எனும் ஓரெழுத்து ஒருமொழி, நுண்மை, வெண்மை ஆகியவற்றைக் குறிப்பதால், ஐயவி, வெண்கடுகாகும். [நீரில் அவித்தலை மட்டுமின்றி, நெருப்பில் இட்டதும் முன்பு அவியே. (அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்... )] கொழுமைக்கும் (health) கடுகு பயனாகும். வெண்கடுகைத் தின்றாலோ, புகை நுகர்ந்தாலோ, தொண்டைத் தொற்று போகுமாம் . காயத் தொற்று போகுமா? தெரியாது. ”வெண் கடுகு, நாய்க்கடுகு (Cleome viscosa) ஆகிய இரண்டையும் சமமாய் எடுத்து நாளும் புகைத்தால், நோய்க் கிறுமிகள், நச்சுப் பூச்சிகள் வீட்டை அண்டாதாம்”. உடற்புண் குணமாக 10 கி. வெண்கடுகு இலைகளை 100 மி.லி. நெய்யிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி, அவ்வெண்ணெயைப் புண்ணின் மேல் பூசலாமெனுங் குறிப்பையும் இணையத்தில் பார்த்தேன்.
கடுகெண்ணெய் 2 விதம். 1. செக்கு நெய். 2. பொடியோடு, நீரைக் குடுவையில் இட்டுச் சூடாக்கி இன்னொரு குடுவையில் ஆவி பிடித்துக் குளிர்விப்பது. 2 ஆம் முறையை வேதியலில் நீராவித் துளித்தெடுப்பு (steam distillation) என்பார். இந்தக் கடுகு ஆவிப்பு எண்ணெயில் காடி வேதிப்பொருள்கள் குறைந்திருக்கும். இது சங்க காலத்தில் இருந்ததா? - என்பது தெரியாது. ஆனால் செய்வதொன்றும் கடினமில்லை. கடுகெண்ணெயைப் புயவுள்ள பட்டுயிரி ஈரி (powerful antibacterial agent) என்பார். கேடு விளைக்கும் E. coli, salmonella, staph, listeria போன்ற பட்டுயிரிகளையும், சில கொதியங்கள் (yeasts), பூஞ்சைகளையும் (fungii) கடுகாவிப்பு எண்ணெய் அழிக்குமாம். வேர்வை நாளங்களைத் தூண்டி, வேர்வை எழ வைத்து உடம்பின் வெம்மை குறைக்கவும் இவ்வெண்ணெய் தடவலாம். காய்ச்சல் காலத்தில் பயன்படும்.
வெண்கடுகைக் கத்தூரிமஞ்சள், சாம்பாணியோடு (= சாம்ப்ராணி) அரைத்துப் போட்டால் சுளுக்கு குணமாகுமாம். வெண்கடுகை அரைத்து வீக்கம், கைகால் வாதமுள்ள இடங்களில் அப்பினால், உடல்வீக்கம் வற்றுமாம். (தலைவன் காயத்தோடு உடல் வீக்கமும் இருக்கலாம்.) இத்தனை மருத்துச் செய்திகளையும் ஒரு சித்த மருத்துவரே உறுதிசெய்ய வேண்டும். நாட்டு மருத்துப் பொருள் விற்க, இணையத்தில் பலர் இப் புறப்பாட்டைப் பேசுவார். எல்லாம். heresay, வெட்டி யொட்டிய தப்புந் தவறுமான கூற்றுகள். உருப்படியான மருத்துவர் கூற்றாக ஒன்றையும் நான் காணவில்லை. நம் நிலை பரிதாபத்திற்கு உரியது. எதையும் அறிவியல் வழி ஆய நாம் அணியம் ஆகவில்லை. புண்ணில் பூசிய மைக்களிம்பில், ஐயவி எண்ணெயோ, தூளோ கலந்திருந்ததா? தெரியாது என்று தான் இப்பொழுது சொல்லவேண்டியுள்ளது.
கருங்கடுகு எண்ணெயின் காரம் அதிலுள்ள allyl isothiocyanate வேதிப்பொருளால் எழும். உடம்பின் பல்லாயிரக் கணக்கான சில் (cell) சுவர்களில் இருக்கும் ( வலி, குளிர், எரிச்சல் உணர வழி செய்யும்) வாய்க்கால்களுக்கு இப்பொருள் ஊறு செய்யுமாம். எனவே கடுகெண்ணெயை அதிகம் தடவுவதும் கூடச் சிக்கல் தான். வெண் கடுகில் allyl isothiocyanate-இற்குப் பகரியாக, காரங் குறைந்த வேறு isothiocyanate இருப்பதால், ஐயவி எண்ணெயைப் பல இடங்களில் விரும்புவர். இப் புறப்பாட்டில் ஐயவி பயன்பாடு அதனால் தான் சொல்லப் படுகிறது போலும். நான் சொன்ன எந்த வேதியல் காரணமும் பழந்தமிழர்க்குத் தெரியாது. ஆனால் வெண்கடுகு எண்ணெய் நல்லதென பட்டறிவில் அறிந்தது பாட்டில் வெளிப் படுகிறது.
அடுத்து இரவந்தழை. இரவம் = ஒருவகை மரம், இருள்மரம், Ironwood of Ceylon, Mesua ferrea என அகரமுதலிகளில் குறிப்புண்டு. நாம் முன் நகர அக்குறிப்பு உதவவில்லை. இரவை இருளெனக் குறித்தாரா? இருளேன் மரங் குறிக்கும் விதப்பானது? மரநிறம் கருப்பா? இருளில் பூக்குமா? புரியவில்லை.
இது இலங்கையின் தேசிய மரம். நம் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் உண்டு. பொதுப் புழக்கம் அரிது. இலங்கை விகாரைத் தோட்டங்கள், சாலைகளில் இம்மரம் உள்ளதாம். வெவ்வேறு மொழிகளில் பொதுப்பெயராய். கீழுள்ளவை குறிக்கப்படும் இவற்றில் இருள்மரக் குறிப்பைக் காணோம். அகராதிப் பணியாருக்கும், புதலியருக்கும் (botanists) இடையே எந்தக் கலந்தாய்வும் நடைபெறவில்லை என்றே தோன்றுகிறது. (நான் நம்மூர் அகர முதலிகளைச் சற்று ஐயத்தோடேயே பார்ப்பேன். பெரும்பாலும் இவறைத் தமிழறிஞர் மட்டுமே செய்திருப்பார். துறையறிஞர் ஆலோசனை மீக்குறைவு. பெரிய உசாவலும் அதில் இருக்காது.
Common name: Cobra saffron, Ceylon ironwood, Indian rose chestnut • Assamese: নাহৰ nahor, নোক্তে nokte • Bengali: নাগেশ্বর nagesar • Garo: kimde • Gujarati: નાગકેસર nagkesar • Hindi: नागेसर nagesar • Kannada: ನಾಗಕೇಸರ nagakesara, ನಾಗಸಂಪಿಗೆ nagasampige, Atha • Kashmiri: नागकेसरः nagkesarah • Konkani: नाग चम्पो nag champo, व्हडलो चम्पो vhadlo champo • Malayalam: നാഗകേസരം nagakesaram, Churuli, Nagapoovu, Nanku, Vayanavu, Nagacampakam • Manipuri: নাগেসৰ nageshor • Marathi: नागचाफा nag chafa, नागकेशर nagkeshar • Mizo: herh-sê • Nepali: नाग केशर nag keshar • Oriya: ନାଗକେଶର nagakeshara • Pali: नाग naga • Sanskrit: नागकेसर nagakesara • Tamil: நாகமரம் nakamaram • Telugu: నాగకేసరము naga-kesaramu • Tibetan: na ga ge sar • Tulu: ಬೈನಾವು bainavu, ಕೇಶರ keshara. தமிழில் இதை மலைநங்கை, நாகசுரம், நாகப்பூ, நாங்கு, நாங்கில், நாங்குல், சுருளி என்றும் அழைக்கிறார்.
13-15 மீ உயரம் வளரும் மரத்தின் அடிவிட்டம் 90 செ,மீ. ஆகலாம். குறுகிய, நீளவாட்டில் (oblong 7-15 செ,மீ. நீளம்) உள்ள இலைகளின் மேற்பக்கம் அடர்பச்சை; அடிப்பக்கம் வெண்மை. இளந்தளிர்கள் சிவந்தோ, பொன் பூஞ்சையாகவோ (yellowish pink) தொங்கும். இளமரப் பட்டை வெடிப்போடு சாம்பல் நிறத்திலிருக்கும். எளிதில் பட்டையைப் பிய்க்கலாம். முதிர் மரங்களின் பட்டை செம்பழுப்பு வீச்சுடன், கருஞ்சாம்பல் நிறம். பட்டையினுள் ஆழ்சிவந்த இம்மரத்தின் அடர்த்தி (15% ஈரப்பதத்தில்) 940 - 1,195 kg/m3. வெகு எளிதில் மரத்தை அறுக்க முடியாது, இருவுள்களின் (rails) அடிமரக் கட்டையாகவும், கட்டமை மரமாகவும் (structural timber) இம்மரம் நெடுநாள் பயனாகிறது. பழங்காலத்தில் ஈட்டி செய்யவும் இது பயன்பட்டது.
மரவுறுதியால் இரும்பை உணர்த்தும் ஆங்கிலப் பெயர் (Ironwood of Ceylon, Mesua ferrea) ஒட்டியே, ”இருள்மரம்” என்ற பெயர் அகராதிகளில் எழுந்தது போலும். இந்திய மரபில் அப்படிக் குறிப்பில்லை. நம்மூர்ப் பெயர் பூவால் ஏற்பட்டது. 4 வெள்ளை இதழ்களும் ( விட்டம் 4-7.5 cm) நடுவில் ஏராளம் மஞ்சள் கேசரங்களும் (stamens) கொண்ட மணப் பூ இதுவாகும் . முகரும் நறையத்தையும் (perfume),ஊது வத்திகளைம் பூவிலிருந்து செய்கிறார். நம் இலவம்பஞ்சு போல், இதன் காய்ந்த பூவைச் சில நாடுகளில் தலையணைகளில் பொதிவாராம், முற்றலர்ந்த கேசரங்கள் சம்பங்கி போன்றும், இதழ்கள், படமெடுக்கும் நாகம் போன்றும் தெரிவதால் நாக சம்பங்கி, நாகப்பூ, நாக கேசரம் போன்ற பெயர்கள் எழுந்திருக்கலாம்.
இம்மர இலைகளை அரைத்து நெற்றியில் பற்றிட்டால், தீவிரத் தடுமன் விலகுமாம். வித்து நெய்யை அரிப்பு, எரிச்சல், காயம், வாதம் ஆகியவற்றிற்குத் தடவலாமாம். அரவ நஞ்சை முறிக்க, மர வேர் பயன்படுமாம். மூல அரத்தக் கசிவிற்கும், சளியோடு கழியும் வயிற்றாலைக்கும் காய்ந்த பூவிதழ்கள் பயன்படும். பெருந்தாகம், அளவு மிஞ்சிய வேர்வை, இருமல், செரிமானம் இன்மை ஆகியவற்றிற்கு அன்றலர் பூவிதழ்கள் தின்பது நல்லதாம். மொத்தத்தில் பூ, இலை, விதைகள், வேர்கள் மூலிகை மருந்தாய் பயன்படுகின்றன.
ஆனால், மேற்கூறிய எந்தப் புதலியல் குறிப்பும் பழத்தைப் பற்றிச் சொல்ல வில்லை. ”தீங்கனி இரவம்” எனும் விதப்பு, பாட்டில் வருவதால் ”இது இல்லையோ?” என்ற ஐயமும் எழுகிறது. இம்மர அடையாளம் சரியானால், இப் பழம் பொதுப் பயன்பாட்டில் இன்று கூட இருந்திருக்கவேண்டுமே? அப்படிக் காணோமே?. தவிர, நாகசம்பங்கி மரம் நம்மூர் மரபில் பூவால் விதப்புற்றது. வெட்டுப்புண்ணுக்கு ”மைபோல் மரப்பொருள் அரைத்த இழுதை” இழுகுவது கூட மேலே புதலியல், மருத்துவக் குறிப்புகளில் புலப்படவில்லை. இந்த ஆய்வின் பின் என் முடிவு ”தீங்கனி இரவம்” என்பது நாக சம்பங்கி அல்ல. இனி, இருள்மரம் எனும் இருவேல (Ironwood tree, Xylia xylocarpa)மரத்திற்கும், இலந்தைக்கும் (Jujube-tree. Zizyphus jujuba) வருவோம்.
அன்புடன்,
இராம.கி.
2 comments:
எள் + நெய் = எண்ணெய்
கடுகு + நெய் = கடுகுநெய்; கடுகு எண்ணெய் பிழை. திருத்திடுக.(பல இடங்களில் உள)
சிறப்பான பதிவு
தொடருங்கள்
Post a Comment