இருவேல் மரம் கிழக்கிந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், பர்மா, தாய் லந்திலும் வளரும் மரம். நம் இரு தொடர்ச்சி மலைகளிலும் உண்டு. மஞ்சட் கடம்பு, வேங்கை, பூவன், தேக்கு, கருமருது போன்ற மரங்கள்நிறைச் சோலைகளில், இதுவும் வளரும். சற்று ஈரப்பதம் இருந்தால் வெகு எளிதில் இது முளைத்து கோணல் மாணலாய் வளர்ந்துவிடும். இம்மரத்தின் இலை, தளிர், பூ போன்றவற்றைக் கால்நடைகள் விரும்பி உண்ணா என்பார். இருள், இருள, யெருள், இருவேல், எர்ரா சென்னங்கி, ஜம்பு என்று இம்மரப் பெயர்கள் தென்னிந்திய மொழிகளில் வரும்.
Burma Ironwood, Pyinkado • Assamese: চিম চপা shin shapa • Bengali: লোহা কাঠ loha kat • Hindi: जंबू jambu, जांबु jambu • Kannada: ಬೆಟ್ಟದಾವರಿಕೆ ಮರ bettadavarike mara, ಹೊನ್ನಾವರಿಕೆ honnavarike, ಇರುಳ್ irul, ಜಂಬೆ jambe, ಷಿಲ್ವೆ shilve, ತಿರುವ tiruva • Konkani: जांबा jamba • Malayalam: ഇരുൾ irula, കടമരം katamaram • Marathi: जांभा jambha, सुरिया suriya, येरूळ yerul • Mizo: thinguk • Nepali: जांबु jambu • Odia: କଙ୍ଗଡ଼ା kangara • Sanskrit: कनककुली kanakakuli, शिंशपा shinshapa • Tamil: இருவேல் iruvel • Telugu: బోజ boja, ఎర్ర చెన్నంగి errachennangi, కొండ తంగేడు konda tangedu • Tulu: ಚಿರುವೆ chiruve, ತಿರುವೆ thiruve • Mizo: Thing-uk
எளிதில் இலையுதிர்க்கும் இம்மரம் 18 மீ உயரம், 60 செ,மீ தண்டுவிட்டம் கொண்டது. நடுமரத்தில் பொந்தெழலாம். மெதுவான, செஞ்சாயை கொண்ட, சாம்பற்பட்டை பெருந்துண்டுகளாய் உதிர்ந்துபோகலாம். இதன் மரவயிரம் செஞ்சாயைக் கருநிறங்காட்டும். அதனால் இருள்மரமென்றார் போலும். இது இருவுள் (rail) அடிக்கட்டையாகப் பயன்படுகிறது. மரத்தின் கூர்ந்த இரட்டைக் கூட்டிலை நீள்காம்பில் 2-4 இணைகளாய் 3-6 செ,மீ நீளத்தில் உருவாகும், இலைக்கு மருத்துவப்பயன் சொல்லவில்லை. பட்டையும், விதையும் சீழ்ப் புண்களைக் குணமாக்கும். மார்ச்சு- ஏப்ரல் மாதங்களில் வெள்ளை நிறச் சிறு பூங்கொத்துகள் பூக்கும். காம்பிலாப் பூக்கள் மீச்சிறியவை. திசம்பரில் நெற்றுக்களைக் காணலாம். இம்மரத்தில் பழங் காணமுடியாது. 10-15 செ,மீ. நீளமுள்ள வளரி போல் வளைந்த கடினத் தட்டை நெற்றுகளே உண்டு. நெற்றில் 6-10 விதைகள் இருக்கும். இருள்மரமெனப் பெயர் பெற்றாலும் ”தீங்கனி இரவம்” இதுவல்ல.
அடுத்து இலந்தைக்கு (Jujube-tree. Zizyphus jujuba) வருவோம். இதன் மாற்றுப் பெயராய் இரந்தை, இரத்தி/தை, இரம், குவலி, கோண்டை, கோல், கோலம், கோலி, கோற்கொடி, வதரம், வதரி, ஆகியவையுண்டு. இதில் இலந்தை, இரந்தை, இரத்தி/தை போக மற்றவை பழத்தால் எழுந்தவை. இலந்தை= முள்மரம் (இல்-தல்=குத்தல். இலந்தல்= குத்தல். இலந்தை= குத்தும் மரம். லகரமும் ரகரமும் தமிழில் போலிகள். எனவே இரந்தை; மெல்லொலி சிலபோது வல்லொலி ஆவதால் இரத்தி/தை. இரு+அம் = இரம். குவலி = குவல்ந்து காணும் பழம். குவல்> குவள்> கோள்> கோள்+ந்+து+ஐ = கோண்டை. குவல்>கோல்; கோல்>கோலம், கோலி, கோல்கொடி (கொடி ஏன் சேர்ந்தது? விளங்கவில்லை.) வற்றம்>வத்தம்>வதரம்/வதரி; பழத்தை வற்றவைத்தும் சாப்பிடலாம். சங்கதத்தில் வதரி, badri ஆகும். 108 பெருமாள்தலங்களில் ஒன்றாய், அலகநந்தா ஆற்றின் மேற்குக்கரையின் இலந்தைக்காடு (சங்கதத்தில் பத்ரிக ஆரண்யம்) சொல்வர்.
”இரவம்” இலந்தைக்குக் பொருந்துமா? - எனில் பொருந்தும். இல்>இரு>ஈர் என்று புழங்கியுள்ளது. ஈர்த்தல் = குத்திப் பிளத்தல் இரு>இரள்>இரண்டு. ஒன்றை இரண்டாய் இரள்ந்தது இரண்டு. இர(ள்)வு என்பதன் பேச்சுவழக்கில் ளகரம் குன்றி இரவு ஆகும் இரவு>இரவம் முள் மரத்தைக் குறிக்கும். இரு>இருள் என்பதும் இரள்போல் குத்தலைக் குறிக்கும். இரவம் = இருள்மரம் என்றது குத்தும் மரமான இலந்தையைக் குறிக்கலாம். இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கு இதழிகளைச் சேர்ந்த, முட்களுள்ள குறுமரம் பழத்தை வைத்து மரம் பெயரிடப்பட்டதால், ”தீங்கனி இரவம்” என்ற கூற்றுப் பொருந்துகிறது சங்க இலக்கியத்தில். இலந்தையை ஒட்டி 3 காட்சிகளுண்டு.
முதல் காட்சி
”உழைஅணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப் புல்அரை இரத்தி பொதிப்புற பசுங்காய் கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்” (நற் 113/2) என்ற வரிகள் மூலம் ”மான் அண்ணாந்து தழை தின்றதால், வளையும் உயர் கிளைகளையும், புல்லிய அடிமரத்தையும் உடைய இலந்தையின் கொத்துக் கொத்தாய்க் கிடக்கும் பசிய காய்கள் மலைசார்ந்த சிறு பாதையில் உதிர்ந்து பரவிக் கிடக்கும்” காட்சி.
இரண்டாம் காட்சி
”இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து - புறம் 34/12” என்ற அடியின் மூலம் ”ஓங்கிய இலந்தை மரம் கொண்ட அகன்ற இடத்தையுடைய பொதியின் விவரிப்பு.
மூன்றாம் காட்சியில்
”மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் - புறம் 325/11,12” என்ற வரிகளால், ”வலிய பொதியிலில் உலர்ந்த தலையையுடைய இலந்தை மரத்தின் அசையும் நிழலில் மென்தலைச் சிறுவர் அம்பெய்து விளையாடும் காட்சி.
3 காட்சிகளும் இலந்தையின் சிறப்பை உணர்த்தும், 5-12 மீ உயரம் கொண்ட புதராகக் காட்சியளிக்கும் இம்மரக் கிளைகளில் முள் நிறையவே இருக்கும். நெருங்கிய குருணைகளோடும் (close-grained), நுணுகத் துகுப்போடும் (fine-textured) காட்சியளிக்கும் இம்மரம் சிவந்து, கடினமாய், உறுதியாய், நாட்பட உழைக்கும் படி, மட்டஞ்செய்யச் சீய்ப்பதற்கும் பளிச்சுக் காட்டவும் கூடியதாய் இருக்கிறது. இது கொண்டு, கிணறுகளுக்கு அணைகொடுக்கவும், கட்டிற்கால்கள் செய்யவும். படகு விலாமட்டைகள் செய்யவும். வேளாண் கருவிகள் செய்யவும், வீட்டுத் தூண்கள், உத்தரங்கள், கருவிக் கைப்பிடிகள், நுகங்கள் எனப் பல பொருள்கள் செய்யவும் பயன்படுகிறது. இம்மரம் எரிக்கவும் பயன்படுகிறது. இலை, பழம், விதை, வேர் பற்றிய புதலியல் (botany) விவரங்களைத் தவிர்க்கிறேன். ஏற்கனவே இணையத்தில் உள்ளவற்றைத் தேடிவிடமுடியும். மருத்துவக் கூறுகளை மட்டும் இங்கு விவரிக்கிறேன்.
https://www.femina.in/tamil/health/home-remedies/elanthai-pazham-medicines-817.html என்ற வலைத்தளத்தில்,
”இலந்தைப் பழம் போல் அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். இலந்தையின் கொழுந்திலை ”சீழ் மூலம், அரத்த அதிசாரம், மெய் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்த மேகம் ஆகியப் பிணிகளைப் போக்க சித்த மருத்துவத்தில் பயனாகிறது. இலந்தம் பட்டையை நன்றாகத் தூள் செய்து தேங்காய் எண்ணெயுடன் குழைத்துச் சிரங்குகள், காயம்பட்ட விரணங்களின் மேல் தடவிக்கொண்டுவர ஆறும் எனக்குறிப்பிடப்படுகிறது. கொழுந்து இலவம் இலையை நன்றாக அரைத்து எந்தவிதமான கட்டிகளுக்கும் மேல்வைத்துக் கட்டிக்கொண்டுவர அடங்குவதாகக் குறிப்புகள் உள்ளன”.
http://mooligaikal.blogspot.com/2012/04/blog-post_22.html என்ற வலைத்தளத்தில்,
இலந்தை பழத்தில் நிறைய சக்திகள் உள்ளன. அதேப்போல இலந்தை இலையிலும் அதிக மருத்துவ சக்திகள் உள்ளன. இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும். இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும். இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு நீங்கும். இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
http://nammalvar.co.in/2017/12/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/ என்ற தளத்தில்,
இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக் காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.
https://www.tamilmithran.com/article-source/NjQzNjU0/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D என்ற தளத்தில்,
இலந்தை இலையை அரைத்து நாள்பட்ட புண்களில் வைத்து கட்டினால் புண் விரைவில் ஆறும். இலை மற்றும் பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து குளித்தால் கை, கால்களில் ஏற்படும் குடைச்சல், வலி போன்றவை நீங்கும்.
என்று குறிப்பிடபடுகிறது. வெட்டுக்காயத்திற்கு இந்த மர இலைகளை அரைத்து இழுதாய் போட்டு இழுகுவது முடியும் போலும். இருப்பினும் ஒரு சித்தமருத்துவர் இதைச் சொன்னால் நாம் உறுதி கொள்ளலாம்.
என்னுடைய பரிந்துரை இன்னும் இலவமாகவே இருக்கிறது. ஆனால் நான் சித்தமருத்துவம் தெரியாதவன். என்னுடைய முடிவை ஏரணத்தின் வழி பெற்றேன். ஒரு மருத்துவரைப் பார்த்து உசாவியே இலந்தையின் இயலுமை அறியவேண்டும். பட்டகை (fact) ஏரணத்தை (logic) விடப் பெரிதல்லவா?
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment