Thursday, August 02, 2018

பனுவலும் text உம் ஒன்றா? - 4

கலிங்கமென்பது நான் பார்த்தவரை ஒரு கணப்புப் (generic) பயன்படாகவே தெரிகிறது. அரசர், செல்வரிலிருந்து வறிய மக்கள் வரை, அவர் உடம்பின் உச்சி முதல் உள்ளங்கால் வரை, பொதுவாய் அணியுந் துணியே கலிங்கம் ஆகும். இதற்கான விவரிப்பு எடுத்துக் காட்டுகளை ஐந்தைந்தாய் “வாசகம், எடுகோள் (reference), அடைப்புக் குறிப்பில் முன்னிகை” என்ற கீழேயுள்ள  வரிசையில் அடுக்கியுள்ளேன்..

”கலிங்கம் துயல்வர” நற்.20-4 [கலிங்கம் அசைய; இங்கே சொல்லப்படும் கலிங்கம் கனத்ததில்லை; அசையுமளவிற்கு மெல்லியது தான்.] ”புன்பூங் கலிங்கமொடு” நற்.90-4 [விலை குறைந்த மெல்லிய கலிங்கமொடு; பூங் கலிங்கம் = பூப்போன்று மெதுவான கலிங்கம். புன் = cheap]  ”நெய்யுங் குய்யும் ஆடி, மெய்யொடு மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும்” நற்.380-2 [நெய்யும் புகையும் மேல் விழுந்து உடம்போடு கலிங்கமும் தோளும் மாசு பட்டன. நெய்யும், புகையும் பட்டால் பருத்தியாடை இன்றும் மங்கும்.]

”கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ” குறு.167-2 [துவைக்க வேண்டிய கலிங்கத்தை கழற்றாது உடுத்து; பருத்தியைத் துவைத்துக் கட்டுவது நெடுங்காலப் பழக்கம்.] ”பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி” பதி 76-13 [துவைக்க வேண்டிய கலிங்கம் போல் நீர்த்துறை மலர்ந்த பகன்றையைத் தலையிற் சூடி உழுகிறார். கலிங்கம் இங்கே உழவரின் தலைப்பாகையாகிறது. அழுக்குத் துண்டு தலைப்பாகை ஆனது. பகன்றை மலர் வெண்கலிங்கத்திற்கு உவமையானது.]

”சில்பூங் கலிங்கத்தள்” கலி.56-11 [சில்லெனும் பூப்போன்ற மெது கலிங்கம் அணிந்தவள்; பூப்போல துணியென்பது தென்பாண்டிப்பேச்சு. துணியின் மெதுவான பரிசத்தைச் சொல்ல பூ விதப்பான குறியீடு.] ”கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர்கொள் மான்நோக்கின் மடந்தை” கலி.69-3 [கலிங்கத்துள் ஒடுங்கிய (காதல் கொள் மான்நோக்குடைய) மடந்தை வெட்கம் பிடுங்கித் தின்பதால், ஆடையுள் ஒளிகிறாள்] ”அடிதாழ் கலிங்கம் தழீஇ” கலி.92-42 9 [காலின் அடிவரை தாழும் கலிங்கத்தைப் பிடித்து; கலிங்கமென்பது இங்கே தோள், இடுப்பு, தலையில் அணியும் துணியல்ல. காலின் அடிவரையுள்ள ஆடை. முகன்மையான குறிப்பு இங்கே கிடக்கிறது. Kalingaam is not a fancy fabric.]

“கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்” அக.86-21 [கரை கட்டிய கலிங்கத்துள் ஒடுங்கினாள். கோடிக் கலிங்கம் = கரையுள்ளபடி நெய்த கலிங்கம். இதைப் புதுக் கலிங்கமென்றுஞ் சொல்லலாம். இன்றைக்கும் ஊர் விழாக்களில் புதுத் துணியைக் கோடியென்பர்.] ”முருங்காக் கலிங்கம் முழுவது வளைஇ பெரும் புழுக்குற்ற” அக.136-20 [கசங்காக் கலிங்கம் உடம்பைச் சுற்றியதால் பெரும் புழுக்கம் அடைந்த; கசங்குதலென்றே இற்றைக் காலத்திற் சொல்கிறோம். முருங்குதல் வழக்கு கொஞ்சமும் இல்லை. கோடை காலத்தில் உடம்பு முழுக்கக் கலிங்கத்தாற் சுற்றின் புழுங்கத் தானே செய்யும்? இங்கே கலிங்கம் = outer garment cloth. So this cloth is nothing special to be imported from far away Kalinga.]

“பாம்புரி அன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழைஅணி வாரா ஒண்பூங் கலிங்கம் உடீஇ” புற 383-11 [பாம்புரி போன்ற வடிவானதாய், மூங்கிலில் உட்கிடக்கும் மென்தோலின், இழையணி தென்படாத, ஒளிமிகு, மெது கலிங்கத்தை உடுத்தி. இழையணி = threadline அருமையான கலைச் சொல் The cloth is so fine that one can’t find threadlines. Very fine count ஆல் நெய்த துணிகளை இப்படிச் சொல்லலாம்.]  ”நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ” புற.392-15 (நேரான கரையுடைய நுண் நூற் கலிங்கம் உடுத்தி. நுண்ணூல் = fine count. கரை வைத்த துணிகளின் மேல் இன்றும் தமிழருக்கு ஈர்ப்பு. காஞ்சிபுரம் புடவைகள் கரைக்குப் பெயர் பெற்றவை.] ”போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ” புற.393-18 [பதி 76-13 இன் தலைகீழ் ஒப்புமை. போதுவிரிப் பகன்றையின் புதுமலருக்கொப்பாய் அகன்றுமடிந்த கலிங்கத்தை உடுத்தி;] ”பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கமொடு” 397-15 [பாம்புரிபோல் மீமெது கலிங்கத்தோடு; எப்போதும் துணிகளுக்குச் சொல்லப் படும் ஒப்புமை பாம்புரி. கணக்கற்ற பாம்புகள் திரிந்த காலம் போலும்.] ”புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்” புற.398-28, [உயர்ந்தோன் மேனியில் மெது துகில்/கலிங்கம்; நாட்டாமையின் தோளிற் கிடக்கும் துண்டு உணர்த்தப்படுகிறது. it must have been a fine fabric.]

”தொன்றுபடு சிதாஅர் மருங்குநீக்கி மிகப்பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலஞ்.............லவான கலிங்கம் அளித்திட்டு புற.400-12-13 [நாட்பட்ட கந்தையை மடியில் நீக்கி, மீப்பெருஞ் சிறப்பின் வீறு சால்ந்த நன்கலம் ........லவான கலிங்கம் அளித்திட்டு. கந்தையை நீக்கிக் கோவூர்க் கிழாருக்கு நலங்கிள்ளி கலிங்கம் அளித்தது சொல்லப் படுகிறது. ஓலை செல் அரித்ததால், கலிங்கப் பெயரடை தெரியவில்லை.] ”நலம்பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒருகை” திரு-109 [தொடையின்மேற் கிடந்த கலிங்கத்தில் அசைகிறது ஒருகை; இது மேலாடையல்ல. கீழுடம்பில் அணியும் பருத்தியாடை. முழுக்கவும் மெலிதாக, see through ஆக இருக்க முடியாது. எனவே நல்ல பயன்பாடுள்ள, run of the mill vEtti cloth. How can this be imported from Kalinga?]

”கானமஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்” சிறு 85 [காட்டு மயிலுக்கு கலிங்கம் கொடுத்த அருந்திறல் அணங்கிய ஆவியர் பெருமான் பேகன். இந்தக் கலிங்கம் அரசன் போர்த்தி யிருந்த உயர் போர்வை. must be very valuable.] ”நின்அரைப் பாசியன்ன சிதர்வை நீக்கி ஆவியன்ன அவிர்நூல் கலிங்கம்” பெரு-469 [நின் இடுப்பில் இருக்கும் பாசிவேர் போன்ற கந்தையை நீக்கி ஆவிபோலமைந்த, ஒளிதரும் நூலாலான கலிங்கம்; பாசிவேர்க் கந்தை என்பது வலிய ஒப்புமை. அழுக்குப் பாண்டற் கந்தலாய்ப் புலவர் துணி உள்ளது. அதேநேரத்தில் பாலாவிபோல வெள்ளை வெளேரென்று ஒளிவிடும் புதுக்கலிங்கம் கொடையாகிறது.] ”வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் கண்பொருபு ஊகூஉம் ஒண்பூங் கலிங்கம்” மது.433 [வெயில் மழுங்கி மாலையிற் படரும் செக்கல் நிறம்போல் அசையும் உருவின் கண்பொருது உகுக்கும் ஒளிபூத்த கலிங்கம்]

“கலிங்கம் பகர்நரும்” மது.513 [கலிங்கம் விற்போரும்; இன்றும் சேலை விற்போர் நம் வீதிகளில் கலிங்கம் பகர்ந்து வருகிறார்.] ”மென்நூற் கலிங்கம் கழன் புகை மடுப்ப” மது.554 [மென்நூற் கலிங்கம் கழுலும் அகிற்புகையில் மணஞ்சேர்க்க; துணிக்கு மணஞ்சேர்ப்பது இன்றும் சில பொரிம்புகளிற் (brands) செய்யப்படுகிறது.] ”இணையணை மேம்படப் பாய்அணை இட்டு காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை” நெடு 134 [இணையான அணை மேம்பட, பாயணையிட்டு, அதன்மேல் துவைத்துக் கஞ்சி தடவிய, சுருக்கமில்லாத, கலிங்கத்தை விரித்து, ஒட்டினாற் போல் அமைந்த தூய மடி விரிந்த படுக்கை. (மடியும் பருத்தித் துணி தான். மடி பற்றிப் பல தவறான கருத்துக்கள் உலவுகின்றன. கீழே பார்ப்போம்.) கஞ்சி தோய்த்த துணிகள் இன்றும் படுக்கை விரிப்பாய்ப் பயன்படுத்துவதுண்டு. குறிப்பாகத் தங்கும் ஆடம்பர விடுதிகளில், செல்வர் வீட்டுப் படுக்கைகளில். இது போன்ற துணிப் பழக்கம் 2000 ஆண்டுகள் கழித்து இன்றுந் தொடர்வது வியப்பே.]

”பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல் அம்மாசு ஊர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு” நெடு. குறிப்பாக146 (பூப்போன்ற துகிலைத் தழுவியேற்ற வளை அல்குல். (அல்குல் என்ற உறுப்பு பெண்களுக்கு மட்டுமானதல்ல. ஆண்களுக்கும் உண்டு. இடுப்பிற்குங் கீழே தொடைகளுக்கும் மேலே முக்கோணமாய் அமைந்து, முன்னும் பின்னும் புடைத்து நிற்கும் பகுதி அல்குலாகும். அதற்கும் பெண்ணுறுப்பிற்கும் தொடர்பில்லை. அல்குலின் பின்பகுதியைப் புட்டமென்பார்.) அம்மாசு ஊர்ந்து கிடந்த ஒளிநூற் கலிங்கத்தோடு.. எம்மாசு என்பது வெளிப்படச் சொல்லப்படவில்லை. அல்குலின் மேல் துகில் கிடக்கிறது. அல்குலின் கீழ் கலிங்கங் கிடக்கிறது. இரண்டின் வேறூபட்ட உருவகத்தை ஆழப் புரிந்துகொள்ள வேண்டும்.]
”இழைமருங்கு அறியா நுழைநூற் கலிங்கம்” மலை 561 [இதுவும் புற.383-11 போன்ற இழை மருங்கு அறிய முடியாத நுண்ணிய நூலாற் செய்த கலிங்கத்தைக் குறிக்கிறது. நுழைநூல் = micro filament]

இனிச் சங்கநூல்கள் அல்லாதவற்றிற்கு வருகிறோம். இதில் ஓரிரண்டு விளக்கங்கள் மட்டுமே கொடுக்கிறேன்

”கல்லுண் கலிங்கம் நீக்கி” (பெருங். 4:16:23). “மணிமுடி கலிங்க மாலை” என்ற மேருமந்.123 வரிகள் பொதுக் குறிப்பே. ”சேலை புடவை கலிங்கம்” என்ற உரிச்சொல் நி 147 வரிகள் பொதுக்குறிப்பே. ”வாம வருங்கலம் ஆடை கலிங்கமும் கோசிகமும்” பது. பரிண. 8.25. உற்ற உதிரம் செழிப்பான் கலிங்கத்தை மற்று அது தோய்த்து” வளையாபதி 43. ”கண்டத்தில் இட்ட கலிங்கத்தால் கால்வருந்த” பாரதவெண்.296. ”நொம்மென் கலிங்கம்” பட்டினத்தார். பா, கோவை 19, 46 (நொய்மையான கலிங்கம்) ”காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த” கலிங்கத்துப் 64 [இங்கே ஒரு சிலேடையுள்ளது. காஞ்சி= ஒட்டியாணம். மேகலையென்ற அணியைக் குறிக்கும்.

புத்த இலக்கியங்களில், குறிப்பாகத் திபெத்திய வயிரயான நூல்களில் காஞ்சி நகரம் ஒட்டியாண நகரென்றே பேசப்படும். மணிமேகலை காஞ்சி நகரத்தில் முடிவதும் புத்தக் குறியீடே. மணிமேகலைத் தொடரில் அதைக் குறிப்பிடுவேன். இடுப்பில் மேகலை குலையாதிருக்க, அதன்கீழ் அணிந்த கலிங்கம் குலைந்து போனதாம். இன்னொரு பொருள்: காஞ்சியான் (கருணாகரத் தொண்டைமான்) பிடித்ததாற் கலிங்க நாடு குலைந்து போயிற்றாம்.] ”முலைமேல் கலிங்கம் ஒன்றிட” திருப்புக. 1079 (மேல்வருக்கத்தார் முலைமேற் கலிங்கம் தரிப்பது திருப்புகழ் காலத்தில் வந்துவிட்டது போலும்.) ”கலிங்கமாங் காலிந் துயிலையும்”  கோலாசல.பு.12 ”ஈழமும் நீடுகலிங்கமும் மன்றற் இயந் துவைப்ப” கோடீச் கோவை 292 ”கலாம் பெறும் கலிங்கம் கலையுடன் தரித்து” விராலி. குற. 6

ஆகக் கலிங்கம் என்றுமே ஒரு விதப்புச்சொல் அல்ல, அதுவொரு கணப்புச் சொல். சொற்பிறப்பியல் வழி காணுமுன் தமிழிலக்கண ஒழுங்கைப் புரிந்து கொள்ளவேண்டும். தமிழில் ”ங்கு” என வரும் சொற்களை “lingering verbs" எனலாம். ஆங்கிலத்தில் வரும் present continous போல இது தோற்றினும் முற்றிலும் அப்படியில்லை. கீழே எடுத்துக்காட்டுக்களைப் பாருங்கள்.

"அசங்குதல், அடங்குதல், அணங்குதல், அரங்குதல், அலங்குதல், இசங்குதல், இடங்குதல், இணங்குதல், இயங்குதல், இரங்குதல், இலங்குதல், இளங்குதல், இறங்குதல், ,உடங்குதல், ,உணங்குதல், உயங்குதல், உலங்குதல், உழங்குதல், உறங்குதல், கசங்குதல், கரங்குதல், கலங்குதல்" - இதெல்லாம் ஒருவகை. இவற்றில் அங்குச்சாரியை உள்வந்து நிற்கும். ”அணுங்குதல், அதுங்குதல், அமுங்குதல், அலுங்குதல்,  அழு/ளுங்குதல், அறுங்குதல், இடுங்குதல், இணுங்குதல், இறுங்குதல், உருங்குதல், உழுங்குதல், உளுங்குதல், உறுங்குதல், ஒடுங்குதல், ஒதுங்குதல், ஒருங்குதல், ஒழுங்குதல், கருங்குதல்” என்பது இன்னொருவகை இவற்றில் உங்குச்சாரியை உள்வந்து நிற்கும். இவையிரண்டுந்தான் தமிழில் பெரிதுமுண்டு. ஆனால் “இழிங்குதல், கலிங்குதல்”என மூன்றாம்வகையில் இங்குச்சாரியை ஓரோவழி உள்வந்து நிற்பதும் உண்டு. இங்குச்சாரியை பயிலுஞ்சொற்கள் தமிழிற் குறைவு அதேபோது அவை இல்லாமலுமில்லை. பலவிடங்களில் இவை உங்குச்சாரியைச் சொற்களோடு போலிகாட்டும்.

நம்பேச்சிற் சாரியைகள் இல்லாதும் வினைச்சொற்களைப் பயிலலாம். மேற்சொன்னவற்றில் அங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால், ஊடே ஐகாரஞ்சேர்த்து, “அசைதல், அடைதல், அணைதல், அரைதல், அலைதல், இசைதல், இடைதல், இணைதல், இயைதல், இரைதல், ..........., இளைதல், இறைதல், உடைதல், உணைதல், ............, உலைதல், உழைதல், உறைதல், கசைதல், கரைதல், கலைதல்” என்பவை கிடைக்கும். [நடுவே 2 இடங்களில் சொல்தெரியாது அல்லது இற்றைப்புழக்கமின்றி இடைவெளி காட்டி யுள்ளேன்.) அதேபோல் உங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால், உகரத்தோடு “அண்ணுதல், அத்துதல், அம்முதல், அல்லுதல், அழு/ளுதல், அறுதல், இட்டுதல், இண்ணுதல், இறுதல், ..........., உழுதல், உள்ளுதல், உறுதல், ஒடுதல், ஒதுதல், ஒருதல், ஒழுதல், கருதல்” என்பவை கிடைக்கும், (இங்கும் இடைவெளி விட்டுள்ளேன்.) அதேபோல இங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால் இகரஞ்சேர்த்து “இழிதல், கலிதல்” போன்றவை கிடைக்கும்.

அதாவது, கலிங்குதலின் சாரியையில்லா வினைச்சொல் கலிதலே. கலிதல் என்பதற்குக் தோன்றுதல் என்றும் பொருளுண்டு, (ஊடும் பாவும் கலந்து பிணைந்து கட்டுப்பட்டு துணியெனும் புதுப்பொருள் தோன்றுகிறதல்லவா?. கலித்தல்= செழித்தல், தழைத்தல், வளர்தல், முகுதல், பெருகுதல், கலித்தலுக்குச் செலுத்தல் பொருளுமுண்டு, கலிங்கல் என்ற பெயர்ச் சொல்லைக் கலிங்கு, கலுங்கு என்று வெவ்வேறுவிதமாய்ச் சொல்வர். கலித்தலைச் செய்யும் கருவியும் கலிங்கெனப் பெயர்பெற்றது. இதோடு ஒப்பும் ஏரி மடுகும்>மதகும் அதே பெயர்பெற்றது. மதகில் வெளிவரும் நீர்ப்பாய்வுm கலிதமானது. ஏரி மதகு கொள்ளாமற் நீரோட்டம் பொசியலாம்; வெடிக்கலாம், கக்கலாம், தமிழில் கலிதத்திற்கு, “கக்குகை, வெடிக்கை, பொசிகை” என்ற 3 பொருள்கள் உண்டு. கலிங்கு என்றசொல், கலிஞ்சென்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்படும்.

மடுகு எனுங் கருவியில் விளைந்தது மடியெனும் கலிங்கம். இன்னும் இருவிதப் பொருண்மைகளாலும் இப்பெயர் ஏற்பட்டது. ”இத்துணி மிகவும் நீளமானது (18 முழம் புடவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்) இதை மடித்து வைக்கவேண்டும்” அடுத்தது ”இதை மடியிற்றான் கட்டிச் செருகிக்கொள்ள வேண்டும்”.இப்படியாக ஆக்கம், பேணல், பயன்பாடு என்ற மூன்றாலும் மடி என்னும் பெயர் ஏற்பட்டது. சங்க இலக்கியம் படித்தால் துணிப் பொருண்மையில் வேறு விதப்புப்பொருள் கிடையாது.

”துறைபோகு அறுவைத் தூமடி அன்ன” நற்.70-2, [நீர்த் துறைகளில் துவைத்து உடுத்தும் தூய்மையான மடி அறுவையைப் போல”   ”தூது ஒய் பார்ப்பான் மடிவெள் ஓலை” அக.337-7 [தூதாகச் செல்லும் பார்ப்பானின் மடிக் கலிங்கத்தில் ஒருக்கும் வெள்ளோலை”] ”..... என்னரை முதுநீர்ப் பாசி யன்ன உடைகளைந்து திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ” புற.390-15 அதியமான் ஔவையார், [இதே கருத்து மேலே கோவூர்க் கிழாருக்கு நலங்கிள்ளி கலிங்கம் அளித்ததையொட்டி வந்தது. இங்கே அவருக்கு முற்பட்ட காலத்தில் அதியமான் நெடுமானஞ்சியால் ஔவையாருக்கு அளிக்கப்பட்டது. அங்கே கலிங்கம். இங்கே மடி. அவ்வளவு தான் வேறுபாடு. அங்கும் முதுநீர்ப் பாசிபோல சிதறிய உடை களைந்து பகன்றை மலர் போன்ற பொது மடி கொள்ளப்படுகிறது. மடி என்பது கணப்புச் சொல் என்றறிய இந்த ஓர் எடுத்துக்காட்டு போதும். அதற்கும் பார்ப்பனருக்கும் ஏற்பட்ட கணுக்கம் பின்னால் வந்தது. “உடுக்க மடி கொண்டு வா” என்பது இங்கே துவைத்த ஆடை என்றே பொருள்படும். “நான் மடியாய் இருக்கிறேன்; என்னைத் தொடாதே” என்பது சாதி வழக்கத்தில் ஏற்படும் தவறான நிலை. மடிச்சீலை என்பது தூய ஆடை, அது கோவணத்தைக் கூடக் குறிக்கலாம்.]

”தெண்திரை அவிர் அறல் கடுப்ப ஒண்பகல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து” மது 520, [தெள்ளிய திரையில் விளங்கும் கருமணலைப் போல ஒன்றியதாய், சிறியதும் பெரியதுமான மடிப் புடைவைகளை விரித்து. ஆகப் புட்டாப் போட்ட புடைவைகள் அன்றும் இருந்திருக்கின்றன.] இன்னொரு காட்டு நெடு 135 இல் உள்ளது. அதை கலிங்கத்தைப் பற்றிச் சொல்லுகையில் சொல்லிவிட்டேன். அதில் கலிங்கத்தோடு, மடியும் உள்ளது. உடம்பின் மேலே கலிங்கம், உடம்பின் கீழே படுக்கையின் மேலே மடி.]

இதுவரை கலிங்கம், மடி என்பவற்றைப் பார்த்தோம். இனித் தென்கிழக்கு ஆசியாவில் ”கலிங்” என்ற பெயர் தமிழர்க்கு எப்படி ஏற்பட்டதென்று பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: