Thursday, August 09, 2018

சங்கம் - 3

’சங்கத்’திற்குச் சங்கத மூலங் காட்டுவதிலுஞ் சிக்கலுண்டு. 

மோனியர் வில்லியம்சின் படி, அதர்வண வேதம் [அருத்த சாற்றம் (Arthasastra) வேதங்களைத் த்ரயீ என்பதால் அதர்வணக் காலம் பொ.உ.மு. 300க்கு அப்புறமே], 

மகாபாரதம் [பொ.உ.300/400இல் எழுத்துற்றது. http://en.wikipedia.org/wiki/Mahabharata], 

பாகவத புராணம் [https://en.wikipedia.org/wiki/Bhagavata_Purana பொ.உ 800-1000. சிலர் ~பொ.உ.600 என்பர்] 

ஆகியவற்றிற்கு முன்னால் தேடினால் ”சங்கத்”திற்குச் சங்கதத்தில் நேரடிப் பொருளில்லை. இருக்கு வேத (~பொ.உ.மு.1200) வழியிற் பார்த்தாலும் சுற்றி வளைத்தே பொருள் வரும். ஆயினும், தமிழ் - சங்கதப் பரிமாற்றங்களுக்குச் சங்கத மூலங் காட்டச் சிலர் விழைகிறார்; ஒரே நிலத்து 2 மொழிக் குடும்பங்களின் இடையே எழுதா வரலாற்றின் முன்னும் சொற்கள் பரிமாறியிருக்கலாமே? அவற்றை எப்படிக் கணக்கிடுவது? எழுத்துப் பயன்பாட்டை மட்டும் வைத்து ’இது இம்மொழி’ என்று சொல்ல வலுத்த ஆதாரம் தேவையில்லையா? அவையின்றிச் ’சங்கம்’ சங்கதவழி எழுந்து, தமிழிற் கடன் என்று சொல்வது எப்படி? 2 மொழிக் குடும்பங்களுக்கும் இது பொதுவாகலாமே?. ஆய்வு வலுப்படும் வரை இது போன்ற சொற்களைத் தொகுப்பதைத் தவிர்த்து வேறு ஏதேனும் வழியுண்டா?.

தமிழ் வழி பார்த்தால், ’சங்கத்திற்கு’ 3 பொருட்களுண்டு. 

முதலாவது வளைவுப் பொருள். இதன் வழி உருவான சொற்கள்: சங்கு, 9 குபேர நிதிகளுள் ஒன்று, கைவளை, நெற்றி, குரல்வளை, கைக்குழி, கணைக்கால், அழகு ஆகியவற்றைக் குறிக்கும். 

இரண்டாவது கூட்டப் பொருள். இதன் வழி ஈறாறு கூடுமிடம், ஆறு கடலோடு கூடுமிடம். சேர்க்கை, அவை, புலவர் கூட்டம், முச்சங்கங்கள், செயின புத்த சங்கங்கள், அன்பு, புணர்ச்சி முதலிய சொற்களமையும். 

மூன்றாவது கூட்ட நீட்சியான எண்ணிக்கைப் பொருள். இதன்வழி எழுந்தவை: இலக்கங்கோடி, படையிலொரு தொகை என்பன. 

இனி நெய்தல் வழி வந்த வளைவுப் பொருளைப் பார்ப்போம். சொற்பிறப்பினுள் நேரே செல்லாது, பலவிடங்களில் இருந்து தொகுத்த பழைய நெய்தற் செய்திகளையே முதலிற் சொல்கிறேன். சற்று நீளம் தான். பொறுத்துக் கொள்க!.

70000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து அரேபியா, இரான் வழி, பழங்குடி மாந்தர் (Homosapiens Sapiens) இந்தியாவினுள் நுழைந்ததாய் இசுபென்சர் வெல்சின் (Spencer wells) ஈனியலாய்வு சொல்லும். Y குருமிய (Chromosome) அடையாளப் படி இவரை M130 என்பார்; 1,50,000 ஆண்டுகள் முன் இந்தியாநுழைந்த (இப்போது 3,00,000 ஆண்டுகள் என்று சொல்லப்படுகிற) அத்திரம்பாக்க நிமிர்ப்பு மாந்தனிலும் (Homo Erectus) இவர் வேறு பட்டவர். ”M130 எனும் இந்த நெய்தலார் (coastal people) பேசியது தமிழா?” என்பது தெரியாது. ஆனால் உறுதியாக ஏதோவொரு மொழியை இவர் பேசினாரென்றே இற்றை அறிவியல் சொல்கிறது. (இன்னொரு வகையாய் 30,000 ஆண்டுகளுக்கு முன் உள் நுழைந்த M20 என்பவர் தான் தமிழரா?) மொத்தத்தில் இப்பழங்குடிகளிடம் தமிழ் உருவாகி இருக்கலாம். அதையெல்லாஞ் சொல்லச் சரியான தரவுகள் நம்மிடம் இல்லை. ஆனாலும் இன்று தமிழ் பேசுவோரின் மரபுகள் பல பழங்குடிக் கூறுகளைக் கொண்டுள்ளது உறுதி. இந்தியாவுள் நுழைந்து இவர் குமரி சேர்ந்தது பெரும்பாலும் 2000 ஆண்டுகளுக்குள் இருக்கலாம். இவய் இருப்பை உறுதி செய்யும்படி இற்றைக்கு 35000 ஆண்டுகள் முந்தைய தொல்லியல் அடையாளம் இலங்கையிற் கிடைத்தது. 

இந்தியாவிலும் இவர் இருப்பை உறுதி செய்வதாய், 2001 அக்தோபரில் விழுப்புரம் மாவட்டக் கடற்கரையில் 1 கி.மீ தள்ளிய ’ஓடை’யெனும் ஊரில் இரும்புக்காரை மத்திகைக்குள் (ferricrete matrix; ferruginous and concrete matrix.-இரும்பு மண்ணூறலும் காரையுஞ் சேர்ந்து கற்காரை போல் அமையும் மத்திகை) புதைந்து கிடக்கும் குழந்தையின் தலைப் படிமம் (fossil) கிடைத்தது. பாறையை உடைத்து, மண்டையோட்டை எடுக்கவியலாக் காரணத்தால் நேராத (indirect) முறையில் ஆய்வுகள் நடந்தன. தலைப்படிமத்தின் காலம் பெரும்பாலும் மீப்பெரும் பனிக்காலத்தின் (Pleistocene epoch) நடுவில் அமையலாமென்றே இவ்வாய்வின் முடிவு சொல்கிறது. அப்படியெனில் ஏறத்தாழ இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முந்தைய தலைப் படிமம் இதுவாகும். ஆக ஈனியல் முடிவிற்கும், தொல்லியல் ஆய்விற்கும் முரணில்லை.

இப்பழங்குடி மாந்தரே, ஏறத்தாழ 55000 ஆண்டுகள் முன் (பர்மிய, தாய்லந்திய, கம்போடிய, இந்தொனேசியா சேர்ந்த) சுந்தாலந்து (Sundaland) வழி உதிரிக் குடும்புகளாய் (100 கி.மீக் கடற்பயணந் தவிர) நடையாய் நகர்ந்து, வடக்கு ஆத்திரேலியா வரை போய்ச் சேர்ந்தார். இவரே இற்றை ஆத்திரேலியப் பழங்குடியாரின் முன்னோர் ஆவார். ஒரு வகையிற் பார்த்தால் ஈனியல் வழி தமிழருக்கும், ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் பெருத்த உறவுள்ளதாம். (தேனியைச் சேர்ந்த நம்மூர் விருமாண்டி பற்றிப் பலரும் அறிந்திருப்பார்.) இற்றைக்கு 9000 ஆண்டுகள் முன்னுங் கூட ஆத்திரேலியப் பழங்குடிகளுக்கும் தமிழருக்கும் இடையே இரண்டாம் முறை கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அண்மை ஈனியல் ஆய்வுகள் சொல்கின்றன. 

இது வரை நம்மூர் அறிவியலார், மொழியியலார் யாரும் இவ்வாய்வுகளைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. குமரிக்கண்டம் என்ற, அறிவியற் சான்றுகள் அதிகமில்லாத, 19ஆம் நூற்றாண்டுத் தேற்றையே சொல்லிச் சொல்லி, ஆழ்ந்து கிடக்கிறார். (நானும் ஒரு காலத்தில் அப்படியிருந்தேன். இப்பொழுது இம் மாயையில் இருந்து வெளிவந்து மாற்றுக் கோணம் நாடுகிறேன். அழிந்து போன குமரிக்கணடம் என்பது தவறு; ஆனால் அழிந்து போன குமரி நிலம் என்பது வேறு செய்தி. அது உறுதியாய் நடந்தது.) ஆப்பிரிக்காவில் நெய்தலார் விட்டு வந்த தொடர்புகளையும் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற இடங்களில் தேட வேண்டும். மாந்தவியல் (anthropology) வழியான ஆய்வுகளும் தொடர வேண்டும்.
     
அடுத்த செய்தி இந்தியப் பெருங்கடலின் ஆழம் பற்றியது. 16500 ஆண்டுகள் முன் 130/140 மாத்திரிகள் (metres) கடல் ஆழங் குறைந்து இந்தியக் கடற்கரை இன்னுந் தள்ளிக் கடலுள் இருந்தது. வெதண மாற்றத்தில் (climate change) பனிப் பாறைகள் உருகிக் கடலுயர்ந்தது. அப்போது சில இடங்களிற் கூடவும், சிலவற்றில் குறைந்தும், இந்திய நிலம் அழிந்தது. குமரியின் தெற்கே 250 கி.மீவரை நிலம் அழிந்ததுண்டு. இது போல் கடலுயர்ந்ததால், பழங்குடி மாந்தன் இந்தியத் துணைக்கண்டத்துள் வந்து சேர்ந்த  தடயங்கள் (கிடைத்திருக்கக் கூடிய) அழிந்து போய், முன்சொன்ன ’வரலாற்றிற்கு முந்தைய’ தமிழக, இலங்கைத் தடயங்கள் தொடர்பின்றி உள்ளன. எண்ணிக்கை கூடுமுன் இந்தியப் பழங்குடிகள் நெடுங்காலம் நெய்தலில் வாழ்ந்திருக்கலாம் என்றே சொல்ல வேண்டியுள்ளது. 

தவிர, தீவக்குறையின் திணையொழுங்கால் நருமதைக் கழிமுகந் தாண்டித் தெற்கே வந்தால், நெய்தலும், குறிஞ்சியும், முல்லையும் சில அயிர மாத்திரிகள் (கி.மீ.) அகலத்திலேயே நெய்தலை அடுத்து இருப்பதால், ஒரு திணையிலிருந்து இன்னொரு திணைக்குத் தாவிப் போவதும், மாறி மாறி நகர்வதும் அவ்வளவு ஒன்றுங் கடினமல்ல. தென்னிந்திய மேற்குக்கரையின் பூகோள அமைப்பு அப்படி இருக்கிறது. இது இயற்கை நமக்குக் கொடுத்த வரம்..

ஒவ்வொரு திணையாக காலவோட்டத்தில் அடுத்தடுத்து மக்கள் நகர்ந்ததாய் இடது சாரியர் சொல்வர். ஆனால் எல்லாத் திணைவாழ்க்கைகளும் சம காலத்தில் இருந்தனவோ என இப்பொழுது சிந்திக்க வேண்டியுள்ளது. இசுபென்சர் வெல்சின் தேற்றஞ் சொல்லும் நெய்தல் முகன்மை, (குறிஞ்சி. முல்லை, மருதம், நெய்தல் என்று படித்து வளர்ந்த) நம்மூர் ஆய்வாளருக்கு, குறிப்பாகக் குமரிக்கண்டம் என்னும் ஒரு முனையாருக்கும், வேதம், சங்கதம் எனும் இன்னொரு முனையாருக்கும் பேரதிர்ச்சி தரலாம். ஈனியலாய்வை முடிந்த முடிவாய்க் கொள்ளாவிடினும் அறிவியல் அடிப்படையில் நான் பெரிதாய்க் கருதுவேன். திராவிட மொழியார் 8000 ஆண்டுகள்முன் இரான், பலுச்சித்தான், சிந்து சமவெளிவழி தெற்கு வந்தார் எனும் Dravidian Descent தேற்றத்தை விட Coastal Descent and subsequent Dravidian Ascent எனும் மாற்றுத் தேற்றம் மாந்தவியல், தொல்லியல் தடயங்களுக்குச் சரியாய்ப் பொருந்துகிறது. இதன் நெளிவு சுழிவுகளையும் என் புரிதலையும் வேறு ஒரு கட்டுரையில் விளக்குவேன். (குறிப்பாக அண்மையில் வெளிவந்த Ancient Ancestric South Indians (AASI), இரானிய மருத நிலத்தாரும், AASI யும் கலந்து பிறந்த Ancestric South Indians (ASI), பின் ASI-யும் steppe pastoralists உம் கலந்துபிறந்த Ancient North Indians (ANI), ஆகியோர் பற்றியும், அரியானாவில் பெற்ற Rakhigarhi மாந்தரின் ஈனியல் முடிவுகள் பற்றியும் என் கேள்விகள் பலவுண்டு. இவற்றை வேறொரு கட்டுரையில் தான் வெளிப்படுத்த வேண்டும்.)
 
ஆயிரம் ஆண்டுகளில் மேற்கிலிருந்து தெற்கு சுற்றிக் கிழக்குக் கடற்கரை வழி நடந்த முகன மாந்த நகர்ச்சியில் நெய்தலாருக்கு கடலோடு கூடிய நெய்தற் பட்டறிவு சிச்சிறிதாய்க் கூடியிருக்கலாம். அதனால், புணை, கலம், ஓடமெனப் பல்வேறு ஏந்துகள் வடிவெடுத்தன. இத்தனை வடிவுகள் இக்கடற்கரைப் பகுதியிலெழ, மேற்சொன்ன திணைகள் அருகிருந்ததும் காரணமாகும். 

காட்டாய், ஆற்றுக் கழிமுகத்தில் விளையும் கோரைப் புற்கட்டைக் கடலில் இட்டால் மிதந்தது கண்டு, புணை>பிணை செய்ய முற்பட்டார். [கொடு> கோடு> கோரை எனச்சொல்லெழும். தமிழ்நாட்டிற் பலவிடங்களில் - சென்னைப் பள்ளிக்கரணை, சிதம்பரம்-சீர்காழி வழி கொள்ளிடந் தாண்டிய தைக்கால், திருநெல்வேலி-செங்கோட்டைச் சாலையில் சேரன்மாதேவிக்கு முந்தையப் பத்தமடை- எனப் பல பகுதிகளிற் கோரை செழித்து வளர்கிறது. மேற்குக் கடற்கரையிலும் கோரைகளுண்டு. சிந்தாறு (Indus) கடலிற் சேருமிடத்திலும் இவை வளர்ந்தன. கனம், கோல், சன்னம், நாணல் எனக் கோரைகளிற் பல விதப்புகள் உண்டு. உலோத்தல் போன்ற சிந்துவெளித் துறைமுகத்தில் இது போன்ற புணைகள் செய்யப் பட்டிருக்கலாம். நம்மூர்க் கோரைகளை வைத்து ஆழமான ஆய்வுகளும், செய்து பார்த்துப் பிழை தவிர்க்கும் முயற்சிகளும் எழ வேண்டும்.]

கோரைக் கட்டுகளைப் பிணைத்தது புணை. அகம் 186-12 இல் கொழுங்கோல் வேழத்துப் புணையை பரணர் சொல்வார். கொழுங்கோல் வேழம்= கொழுத்த கொறுக்கம் புல் தட்டை (கரும்பிற்கும் வேழம் என்றதாற் குழம்புகிறோம் வெள்ளை நார்த் தட்டை வேழமாகும்.) 38 இடங்களுக்குமேல் புணை பற்றிய சங்கக் குறிப்புகளுண்டு. (எகிப்து, சுமேரியா, சிந்து, அசிரிய, பாபிலோனிய. பொனீசிய, அசுடெக், மாய, இங்க்கா, ஈசுடர் தீவு, பாலினீசியப் பழம் நாகரிகங்களிற் புழங்கிய) கோரைப் புற் கட்டுகளாலான. reed-ship, read boat போன்றதே நம்மூர்ப் புணை. அழகன் குளத்தில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லிற் கீறிய ஓவியமும் இப்புணையைக் காட்டியது. மேற்சொன்ன நாடுகளில் எல்லாம் புணை நுட்பியல் தனித்தனியாய் எழ வாய்ப்பில்லை. அதே பொழுது முதலில் எங்கெழுந்தது? அறியோம். இவற்றைக் கட்டும் நுட்பம் இன்று சில நாடுகளில் மட்டுமே எஞ்சியுள்ளது. எகிப்திய, சுமேரிய, இங்க்கா சான்றுகளைக் காண்கையில் 100பேர் பயணஞ் செய்யவும், பெருஞ்சுமை கொண்டு செல்லவும் புணை நுட்பியல் உதவியது புரிகிறது. ஒரு காலத்தில் இவற்றைக் கொண்டு மாந்தர் பென்னம் பெரிய கடலையுங் கடந்திருக்கலாம். இற்றைக் கப்பல் நுட்பியல் கூடப் புணைகளிலிருந்தே வளர்ந்திருக்கலாம். 

அடுத்தது கல்லப்(=தோண்டப்)பட்ட கலம்/ dug-out canoe. கடற்கரையில் உயர்ந்து வளர்ந்த மரத்தைத் தோண்டி உருவாக்கிய தொள்ளையும், தொண்டலும், தோணியுங் கூடத் ”தோண்டற்” பொருளின. குயவன் தோண்டியதும் தோண்டியே. களிமண் தோண்டிக் குடஞ் செய்யவும், மரந் தோண்டி கலஞ் செய்து நீர்கடக்கவும் முடிந்தது. உண்கலன், கொள்கலன், அணிகலன், படைக்கலன், அறைகலன், மென்கலன் என்று பொருட்பாடு பின்னால் விரிந்தது. கலமென்ற சொல் வளர்நிலையிற் dug-out canoeவை மட்டுங் குறியாது, பல்வகைக் கடலோடங்களைக் குறித்தது. தோணியும், புணையும் கலந்து செய்த ஓட(raft) நுட்பியல் வந்தது. அதற்கு அப்புறம் அடித்தண்டோடு (நெஞ்செலும்புகளைப் போன்று) இரு பக்கம் மரச் சட்டம் பொருத்திக் குவியும் கூட்டுச் சட்டம் வந்தது. (கூட்டிற்கும் hull ற்கும் சொற் பொருட் தொடர்புண்டு. நம்மூர் சீரை> சீலையே sail ஆனது. கப்பல் நுட்பியல் பற்றிய உலகின் பல்வேறு சொற்களுக்கும் தமிழுக்குமான ஆழ்ந்த தொடர்பைப் பாவாணர் சொல்வார்: இச் சொற்களை விரித்தால் அவையே ஒரு தனிக்கட்டுரை யாக முடியும்.)

முடிவாக (நெஞ்சாங் கூட்டைத் தசைகளாலும், தோலாலும் மூடுவது போல்) நீர் நுழையாத படி மரப்பலகைகளை இழைத்துப் பொருத்தி, கயிறு, மர ஆணிகளாற் (இரும்பாணிகள் அப்புறம்) கூட்டை மூடி/ கவ்வி/கப்பிச் செய்யும் கப்பல் நுட்பியல் உலகெங்கும் பரவியது (”கப்பல்” என்ற சொல் எழுந்த வகை இப்போது புரிகிறதா?) பொதுவாக மரத்தில் கல்லியது என்றாலும், விதப்பாக மரச் சட்டங்களின் மேற் கப்புகளை வைத்து மூடும் நுட்பியலாற் கப்பல் செய்யப் பட்டது. குறைக் கொண்மையால் (carrying capacity), மரத்தோணி நுட்பியல் பெரிதும் வளரவில்லை. தமிழருக்கும் கப்பல் நுட்பியலுக்குமான தொடர்பு வரலாற்றில் பலவிடங்களில் வெளிப்பட்டது. பொ.உ.1421 இல் சீனவேந்தர் ஆணையால் உலகைச் சுற்ற முற்பட்ட சீன மாநாய்கன் செங்ஃகோ தன் கலங்களுக்கான ஏவலை (order) கோழிக்கோட்டிற் (முன்னாளையச் சேரரின் மாந்தை பெரும்பாலும் இது தான். பழைய சேரர் தொண்டி இதற்கு மிக அருகில் கடலண்டியில் இருந்தது) கொடுத்து, ஓராண்டு அங்கு தங்கி தனக்கு வேண்டியபடி கப்பல் செய்து போனானாம் ஏன் இங்குவந்து கப்பல் செய்ய வேண்டும்? திறமை கருதித் தானே? (வாஸ்கோட காமாவும் இங்கே தான் வந்திறங்கினான். மாந்தை/தொண்டியின் புகழ் அவ்வளவு பெரிது.)

சாலி ஆற்றங்கரையும் அதனருகே இருந்த சேரர்தொண்டியும் தெளிந்த கப்பல் நுட்பத்தால் சிறப்புற்றன போலும். (சேரலர்>கேரளர் அப்போது வட்டாரத் தமிழே பேசினார்.) தொண்டி>தோண்டியும், தோணியும், கப்பலுஞ் செய்ததால் தொண்டி என்ற பெயர் அத்துறைக்கு ஏற்பட்டிருக்கலாம். (ஒரு சிலர் தொள்ளப் பட்ட நிலமெனப் பொருள் கொள்வர். அச்சிந்தனை பொருத்தம் இல்லாதது.) பல்வேறு விதமாய் ஆய்ந்து பார்த்தால், சேரரின் பழந்தொண்டி, மேலே சொன்னபடி பெரும்பாலும் கோழிக்கோட்டிற்கு அருகில் இருந்திருக்கலாம். 

பன்னாட்டுக் கடல்நுட்பக் கலைச்சொற்கள் தமிழ்மூலம் காட்டுமென்று முன்னாற் சொன்னேன். (நுட்பந் தெரிந்தோரின் சொல் உலகெங்கும் பரவாதா? இந்தையிரோப்பிய மொழிகளின் ”ship” நம் கப்பலோடு s சேர்த்துத் தமிழ்த் தொடர்பு காட்டும். Old English scip "ship, boat," from Proto-Germanic *skipam (cognates: Old Norse, Old Saxon, Old Frisian, Gothic skip, Danish skib, Swedish skepp, Middle Dutch scip, Dutch schip, Old High German skif, German Schiff), "Germanic noun of obscure origin" [Watkins]. Others suggest perhaps originally "tree cut out or hollowed out," and derive it from PIE root *skei- "to cut, split.")

அன்புடன்,
இராம.கி.

No comments: