Thursday, August 09, 2018

சங்கம் - 8

’சங்கச்’ சொல்லிற்கான வளைவுப் பொருளையும், கூட்டப் பொருளையும், அவற்றின் படியாற்றங்களையும் இதுவரை பார்த்தோம். இனிக் கூட்ட நீட்சியாய் எண்ணிக்கைப் பொருள் பார்ப்போம். இதன்வழி. "படையிலொரு தொகை" என்றவொரு பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது. படையும், படைத் தொகையும் எனப்பார்த்தால் அது பெரிய புலனம். இதன் விவரங்கள் சங்க இலக்கியங்களில் நேரடி கிடைப்பது அரிது. ஏனெனில் அடிப்படையில் சங்கநூல்கள் அகப், புற நூல்களாகும். புறமென்றாலுங்கூடப் பரணிநூல்கள் போல் போரை நேரடியாக விவரிப்பனவல்ல. வடபுல நூல்களைச் சார்ந்தே இச்செய்திகளை அணுகவேண்டியுள்ளது. இதனாலேயே தமிழ்நூல்கள் பின்வந்தவை என்றுசிலர் கருதலாம். வேர்ச்சொற்கள் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பொ.உ.மு.600 - பொ.உ.200 வரைக்கும் வடக்கிலும் தெற்கிலும் படை தொடர்பாக பல இடையாற்றங்கள் இருந்ததாகவே சொல்ல முடிகிறது. என்னால் முடிந்தவரை, படைத்தொகைச் செய்திகளை, கீழே சுருங்கச் சொல்கிறேன்.

மரஞ்செடிகளின் தண்டுபோலவே மாந்தனுக்கும் கால்களுண்டு. குத்திநிற்பதை நட்டநிற்பதாய்ச் சொல்வர். ’நடை’ச் சொற்பிறப்பை என்றேனும் நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? ஒருகாலை முன்நகர்த்திப் பின்நட்டு, இரண்டாங் காலை முன்நகர்த்திப் பின்நட்டு,, அடுத்தடுத்துத் தொடர்வதே நடப்பதாகும். இதிலெங்கு தவறினும் விழவேண்டியதுதான் ஆக, நடுவதில் விளைவது நடை. 70000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து நடந்துவந்து இந்தியத் துணைக்கண்டத்துள் மாந்தர் நுழைந்தார். இனி நிலம்படும் பாதத்திற்கு வருவோம். நடந்துவந்த பாதையிற் சுவடின்றி யாரும் நடக்கமுடியுமோ? படு>படி>பதி என்பது ”பதம்>பாதத்தின்” தொடக்கம். பாதம் படுவதுபோல் மற்ற செயல்களில் மாந்தர் படிவதையும் படுதலென்பார். பட்டுவ வாக்கியங்களிற் (passive voice) இதைப் பயன்படுத்துவோம். ”பொத்தகம் என்னால் படிக்கப் பட்டது”. தன் வினையிலும் ’படு’ என்பது துணைவினையாகும். ”அவன் செயற்பட்டான்”. ஒருவகையிற் பார்த்தால் படுதல் என்பது ஒரு கட்டகச்சொல் (systemic word).

ஒரு வேட்டையில் 4 ஆட்கள் போவதாய் வையுங்கள். ஆட்களோடு, ஆயுதங்கள் (படைக்கலன்கள்), துணைப்பொருட்கள் (தளமாடப் பயனுறும் தளவாடம்). என எல்லாமுஞ் சேர்ந்தாற்றான் வேட்டை ஆடமுடியும், குறிப்பிட்ட செயலைச் சாதிக்கும் இதை வேட்டைக் கட்டகமென்போம். இதுபோல் படுதலைச் செய்யுங் கட்டகம் படை. இதுவொரு பொதுமைச் (generic) சொல். வேட்டை, நிலந்தோண்டல், இன்னொரு மாந்தக்கூட்டம் அழித்தல் என்பன எல்லாமும் படைச்செயல்களே. ஓர் இனக்குழுவின் நிலைப்பென்பது எப்போது சிக்கலாகிறதோ, அப்போது இனக்குழுவிற்காகப் படை ஏற்பட்டே தீரும். நாளாவட்டத்தில் காவல், தாக்கல், அழிவென்ற கண்ணோட்டங்கள் இதனுள் வரும். விலங்காண்டி காலத்திலிருந்து இன்றுவரை படையளவு கூடியுள்ளதே தவிர, கருத்தீடு மாறவில்லை.

துணைக்கண்டத்தின் நெய்தலிலும், அடுத்தடுத்துள்ள திணைகளிலும் மாந்த நகர்ச்சிக்கு நெடுநாட்கள் நடையே வழியானது. நடைக்கு அடுத்த நகர்ச்சி சகடங்களால் விளைந்தது. விலங்காண்டி நிலையிருந்து வளர்ந்தபின், குறிப்பிடத்தக்க நுட்பியல் மாற்றமாய்ச் சக்கரம், சகடம், சகடை, தேர், உருளம்> உருடம்>உருதம்>ரதம் போன்றவை குமுகத்தில் உருவாகின. இவை எப்பொழுது எங்கு முதலில் உருவாகின என்பது இன்னுந் தெரியாது. ஆனாற் சிந்து சமவெளியில் இவையிருந்ததற்குச் சான்றுகளுண்டு. [தொடக்கத்தில் காளைகளே சகடங்களை இழுத்திருக்கலாம். கால்>காள்>காளை; கால்நடை என இன்றும் சொல்லப் படுவதே ”காளையின்” சொற்பிறப்பைக் காட்டும்]. இதேபோன்ற சான்றுகள் எகிப்திய, சுமேரிய நாகரிகங்களிலும் கிடைத்துள்ளன.

பொ.உ.மு.9000-1800 வரை சிந்துசமவெளியில் குதிரைப்புழக்கம் இருந்தது போல் தெரியவில்லை. இத்தனைக்கும் ஆவ்க்கனித்தான், இரான், நடு ஏசியா போன்ற மேற்குநாடுகளில் குதிரை உலவியது. ஆரியருக்கும் குதிரைப் பழக்கமுண்டு. இட்டைட், மித்தனி போன்ற நாகரிகங்களில் குதிரை / குதிரை வண்டி கொண்டே ஆரியர் முன்னிலைக்கு வந்தார். சிந்துவெளி நாகரிக முடிவில் குதிரைத் தாக்கம் இந்தியாவில் ஏற்பட்டிருக்கலாம். பாரசீகம், அரேபியா போன்ற நாடுகளிலிருந்து நிலம் மூலம் வடக்கேயும், நருமதைத் துறைகள் தொடங்கி தீவகற்பம் முழுதும் கப்பல் மூலம் தெற்கேயும் குதிரைகள் இறக்கப்பட்டன. இதன் பின்னர் சுமைவண்டிகளைக் காளைகளும், வேகவண்டிகளைக் குதிரைகளும் இழுத்தன. இந்திய நாகரிகத்தில் பொ.உ.மு.2000/1800க்கு அப்புறமே படைவேலைகளுக்குக் குதிரை பயன்பட்டது. குதிரையையும், வண்டிகளையும் இணைத்த பின்னாற்றான் சாலைகளிற் கல்லைப் பாவும் பழக்கமும், மேடுபள்ளமில்லாது சாலைகளை அமைக்கும் நுட்பமும் இந்தியாவிற் பரவியது.
.
இதேநேரத்தில் இந்தியாவில் யானைகளும் மாந்தவேலைக்கு உதவியாய்ப் பழக்கப்பட்டு வந்தன. அவற்றை வைத்து எதிரிக் கோட்டைகளை அழிப்பது பொ.உ.மு.2000க்கு முன்னாலும் இருந்திருக்கலாம். இப்பழக்கம் எப்போது ஏற்பட்டதென உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. பொ.உ.மு. 1800க்கு அப்புறம், சகடங்களும், யானைகளும், குதிரைகளும் போர் உத்திகளில் சேர்ந்து பயன்படத் தொடங்கின. போரையொட்டிய இலக்கிப்பு முயற்சியில் (logistic effort. இலக்கு= குறிப்பிட்ட இடம்; இலக்கிப்பு= குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தல்.) தேரும், யானையும் ஒன்றுபோல் கருதப்பட்டன தேரை நகர்த்துவதும், யானையை நகர்த்துவதும் அவற்றின் எடை கூடக்கூட ஒரே யளவு மாந்தமுயற்சி கொண்டவையாகக் கருதப்பட்டன. சதுரங்கத்திலும் கூட rook ஐச் சிலர் தேரென்பர். வேறு சிலர் யானையென்பர். இவற்றிற்கிடையே ஒற்றுமைகளும் இருந்தன, வேற்றுமைகளும் இருந்தன. (இரண்டையும் நடத்துவோர் நம்மூரில் ஒரே மாதிரியாய்ப் பாகரென்றே சொல்லப்பட்டார்.)

படையின் முதலலகு பட்டி/பண்டி/பத்தி/பந்தி என்றழைக்கப்பட்டிருக்கலாம். (இவற்றுள் சரியான சொல் ஏதென்று இங்கே சொன்ன இயலுமைகளுக்குள் என்னாற் சொல்லமுடியவில்லை.) இன்றும் பட்டி என்பது கால்நடைத் தொகுதியையும், கால்நடைகள் கட்டும் இடத்தையும் குறிக்கிறது. (முல்லை நில ஊர்கள் பட்டியென அழைக்கப்பட்டன.) ’பண்டி’ வண்டியையும், யானையையுங் குறித்தது. வடபுல நூல்களிலும் (மோனியர் வில்லியம்சு அகரமுதலி, மகாபாரதம், அல்பெருனியின் பயணக்குறிப்புகள்), தமிழ் நிகண்டுகளிலும், அகரமுதலிகளிலும், இலக்கியங்களிலும் குதிரை கட்டுந் துறை “பந்தி” என்றழைக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு சேர்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இச்சொல் வரும். இக்கட்டுரையில் இப்போதைக்குப் பட்டியென்றே பயில்கிறேன். மற்ற சொற்களை இன்னும் ஆய்ந்து சரியான முடிவிற்கு வரவேண்டும். 

மகாபாரதப் படி ஒரு பட்டியில் 1 தேர், 1 யானை, (தேரை/யானை சுற்றி) 3 குதிரைகள் (தேரும், யானையும் குதிரைக் கணக்கில் ஒன்றுபோலவே கருதப்பட்டன), ஒவ்வொரு குதிரையையுஞ் சுற்றி 5 காலாள்கள் இருந்ததாய்ச் சொல்வர். குதிரைகளுக்கும் ஆட்களுக்குமான மொத்தக் கணக்கைச் சரியாய்ப் புரிந்துகொள்ளவேண்டும். (அரபுப்பயணி அல்பெருனி இதில் தவறினார்.) 1 தேரிழுக்க 4 குதிரைகளெனில் பட்டியில் மொத்தம் 4+3+3= 10 குதிரைகள் இருந்தன. ஆட்களைக்கணக்கிட்டால் தலைவன், முன்னால் யானைப்பாகன், பின்னால் துணை யானைப்பாகன், தலைவன் வேல்வீச யானை மேலிருந்து உதவும் 2 வீரர், யானையோடு கீழோடிவரும் உதவியாளென 1 யானைக்கு 6 பேருண்டு. இதுபோல் தலைவன், தேர்ப்பாகன், மெய்க்காவலன், தலைவனுக்குத் தளவாடம் கொடுத்துதவும் 2 வீரர், தேர்ப்பழுது பார்க்கும் தச்சனென 1 தேருக்கும் மொத்தம் 6 பேருண்டு. எனவே மகாபாரதப் படி, 1 பட்டியில் 2*[6+3*(1+5)] = 48 ஆட்களிருந்தார். எனவே ஒரு பட்டியில் தேர், யானை, குதிரைகள், ஆட்களின் விகிதம் (1:1:10:48). சனபதங்களுக்குச் சற்று முன்னிருந்த குரு, பாஞ்சால அரசுகளில் இதுவே வழக்கம் போலும்.

மாறாகக் குடிலரின் அருத்தசாற்றப் படி பார்த்தால், 1 தேர் அல்லது 1 யானையைச் சுற்றி 5 குதிரைகள், 1 குதிரை சுற்றி 6 காலாட்கள் என்றுவரும். இக்கணக்கின் படி தேர்:யானை:குதிரைகள்:ஆட்கள் ஆகியோரின் விகிதம் 1:1:(4+5):.2*[6+5*(1+6)] = (1:1:14:92) ஆகும். மகத அரசில் இதுவே பழக்கம் போலும். (பாரதக் காப்பியம் பொ.உ.மு. 1000-800 ஐ ஒட்டிய கதையைச் சொல்லும். அக்காப்பியம் பொ.உ.மு.400 களில் எழுதப்பட்டு படிப்படியாக இடைச் செருகல்கள் பெற்று பொ.உ.400 வரை எழுதப்பட்டுக்கொண்டே வந்தது. படை பற்றிய விரிவான குறிப்புகள் பெரும்பாலும் இக் காலகட்டத்தின் பிற்பகுதியில் வரையப்பட்டிருக்கலாம்) பட்டிக்கு மேலும் அக்காலத்தில் படையணிகளுண்டு. இவற்றைக் கீழே கொடுத்துள்ளேன். சங்கதப் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவில் சங்கதப் பெயர்களே உள்ளன. தமிழ்ப்பெயர்களை பெருமாய்விற்கு அப்புறமே என்னால் அடையாளங் கண்டுகொள்ள முடிந்தது. அவற்றைக் கீழே சொல்லியுள்ளேன்.

3 பட்டிகள்      = 1 படைமுகம் [சேனாமுகம். மகாபாரதக் கணக்கு (3:3:30:144),           அருத்தசாற்றக் கணக்கு (3:3:42:276)];
3 படைமுகங்கள் = 1 குழுமல்    [குல்ம.      மகாபாரதக் கணக்கு (9:9:90:432),           அருத்தசாற்றக் கணக்கு (9:9:126:828)];
3 குழுமங்கள்    = 1 கணம்     [கண,       மகாபாரதக் கணக்கு (27:27:270:1296),       அருத்தசாற்றக் கணக்கு (27:27:378:2484)]);
3 கணங்கள்     = 1 வானி      [வாகினி.    மகாபாரதக் கணக்கு (81:81:810:3888),        அருத்தசாற்றக் கணக்கு (81:81:1134:7452)];
3 வானிகள்     = 1 தானை     [ப்ரிதனா    மகாபாரதக் கணக்கு (243:243:2430:11664)     அருத்தசாற்றக் கணக்கு (243:243:3402:22356)];
3 தானைகள்    = 1 குமம்       [சமூ       மகாபாரதக் கணக்கு (729:729:7290:34992)     அருத்தசாற்றக் கணக்கு (729:729:10206:67068)];
3 குமங்கள்     = 1 சேனை     [அனீகினி   மகாபாரதக் கணக்கு (2187:2187:21870:104976) அருத்தசாற்றக் கணக்கு (2187:2187:30618:201204)];
10 சேனை      = 1 அக்கவானி. (அக்க்ஷௌகினி அல்லது அக்குரோனி).

இக்கணக்கை மனத்துள் அசைபோட்டுப் பாருங்கள், திகைப்பாயிருக்கும். ஒரு சேனையில் 2187 யானை/தேர்களென்பது சாத்தார எண்ணிக்கையல்ல. இதிலுள்ள 2187 யானைகளைப் பழக்கவேண்டுவதும் பெரிய வேலையே. அருத்தசாற்றப்படி நேரடித்தொடர்பிலா ஆள்பேர் அம்பென இன்னும்பலர் படையொட்டி வேலைசெய்திருப்பார். மொத்தநாடே எங்குபார்த்தாலும் படைமயமானது போலும். ஏறத்தாழ 3 சேனைகளைக் குறிக்கும் 6000 யானைகளை நந்தர் வைத்திருந்தாரென அலெக்சாந்தர் காலக் கிரேக்கக் குறிப்புகள் சொல்லும். [பல்வேறு நாடுகளைப்பிடித்த பின்னால், அலெக்சாந்தர் சிந்தாற்றங்கரைக்கு வந்தபோது, பெருமாண்ட நந்தர் படையில் 6000 யானைகளுக்குமேல் இருந்ததாகவும், கிரேக்கர் அதை வெல்லமுடியாதென்று கருதியும், வீடு விட்டுத் தொலைவுவந்த தம்வீரர் பல்வேறு போர்களாற் சோர்ந்தாரென்பதாலும், ”இனிமேலும் இந்தியாவிற்குள் நகரவேண்டாம், ஊருக்குத் திரும்புவோம்” என அலெக்சாந்தர் முடிவுசெய்தானாம் போகும்வழியில் பாபிலோனில் நோய்ப்பட்டு இறந்தானாம்.]

நந்தரை வென்று, பேரரசுருவாக்கிய மோரியர் இன்னும் ஓரிரு சேனைகள் அதிகம் கொண்டிருக்கலாம். வேந்தரின்கனவு சேனையாற் கூடியது பொ.உ.மு.400- பொ.உ. 0 என்றுதெரிகிறது. மோரியருக்கு அப்புறம் சுங்கர், கனகரிடம் சேனைகள் குறைந்தன. 1 சேனையளவு படைகொண்ட செங்குட்டுவன் வடக்கே போகையிலிருந்த கனகர் நலிந்து போனவர். (செங்குட்டுவனுக்கு முன் தமிழ்வேந்தர் யாரும் சேனைகள் வைத்திருந்தது போல் தெரியவில்லை. அப்படியேதும் சங்கநூல்களிற் குறிப்பில்லை. நான் படித்தவரை 1 சேனையை முதலில் வைத்தவன் ச்ங்குட்டுவன் போலவே தெரிகிறது. அதுகாறும் படைதிரட்டலில் அவனை மிஞ்சிய அரசன் தெற்கே இருந்ததுபோற் தெரியவில்லை.) தவிர, இந்தியாவில் எவரும் 10 சேனைகள் வைத்திருந்ததாய் வரலாற்றில் எந்தக் குறிப்புகளுமில்லை. மேலேவரும் அக்கவானி போன்றவை முற்றிலுங் கற்பனை உருவகங்களாகவே எனக்குத் தோற்றுகின்றன. உயர்வுநவிற்சியின் உச்சகட்டமாய் கௌரவர் பக்கல் 11 அக்கவானிகளும், பாண்டவர் பக்கல் 7 அக்க வானிகளும் மகாபாரதத்திற் பேசப்படும். மேலேயுள்ள கணக்குகளை வைத்துப் பார்த்தால், இத்தகைய படையைக் குருச்சேந்திரம் தாங்கியிருக்குமா என்பதே பெருங்கேள்வி. எனவே தான் பார்தப்போர் என்பது கற்பனைப்போர் என்று சொல்லவேண்டியுள்ளது. The paraphernalia is too much to consider. Hence the war described could be purely imaginary. 

அடுத்தது அக்கவானி. போர்நடுவே படையினருக்கு ஆணையிடச் சங்கூதும் அளவிற்குப் பெரிதான வானி எனும்பொருளில் பெரும்படையணிக்கு இப்படிப் பெயரிட்டார் போலும். சங்கத்தின் முதற்குறை அங்கம். அங்கத்தின் வலித்த ஒலிப்பு அக்கம். சங்கம்>அங்கம்>அக்கம். வளைவுப்பொருளிலிருந்து கூட்டப் பொருளை முன்கொண்டதுபோல், சங்கிலிருந்து இங்கும் எண்ணிக்கைப் பொருள் எழுந்தது. அக்கவானி என்ற சொல்லே கற்பனையை உணர்த்தும். மகாபாரதந் தவிர்த்து ’அக்ஷௌகினி’ வேறெங்கும் பயின்றதுபோல் தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் தானையே பெரிதும் பேசப்படும். (தானைக்குத் தண்டமெனும் பெயருமுண்டு.) தானைபயிலும் சங்கநூல் வரிகளைப் பேசினால் கட்டுரை நீளும். எனவே சேனை பேசும் பழைய நூல்வரிகளை மட்டும் இங்கு விவரிக்கிறேன். .

”இகல்வேந்தன் சேனை” என்பது கலி 108 -1 இல் வரும் சொல்லாட்சி. சிலம்பின் 19 ஆம் காதை முடிவில் வரும் வெண்பாவில் ”விற்பொலியும் சேனை” என்றகூற்று வரும். இவ்வெண்பா பிற்காலப் புலவரால் இடைச்செருகப் பட்டதென வேங்கடசாமிநாட்டார், உரையிற் கூறுவார். காதைகளின் இடைவரும் வெண்பாக்கள் இளங்கோ எழுதியதல்ல என்று “சிலம்பின் காலம்” நூலில் நான் சொன்னேன். “வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன் புட்கைச் சேனை பொலியச் சூட்டி” என்பது சிலம்பு 25 ஆம் காதையின் 146-147 ஆம் வரிகள். ”தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும் வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத” என்பது சிலம்பு 26 ஆம் காதையில் 80-81 ஆம் வரிகள். குடவஞ்சியிலிருந்து வடக்கேகிய படைகள் கடல்விளிம்பைத் தொட்டுப்போந்தனவாம்.

அதே 26 ஆம் காதையில் செங்குட்டுவன் நூற்றுவர் கன்னரின் சஞ்சயனுக்குச் (= தூதனுக்கு) சொல்வதாய் 162-165 ஆம் வரிகள் வரும். ”கூற்றங் கொண்டுஇச் சேனை செல்வது நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக் கங்கைப் பேர்யாறு கடத்தற்கு ஆவன வங்கப் பெருநிரை செய்க தாம்” என்றுவரும். செங்குட்டுவன் வெறுந்தானைகளைக் கொண்டிருந்த மன்னனல்லன். பெருஞ்சேனையைக் கொண்டு, கனகரைப் பொருதுமளவிற்கு வடக்கே போனவன். மேலும் சிலம்பு 25ஆம் காதையில் 191-194ஆம் வரிகள் ”தாழ்கழல் மன்னன் தன்திரு மேனி வாழ்க சேனாமுகம் எனவாழ்த்தி இறைஇகல் யானை எருத்தத்து ஏற்றி அறைபறை எழுந்ததால் அணிநகர் மருங்கென்” என்றுவரும்.

”தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்” என்பது மணிமேகலை 8.59. இருபெரும் மன்னர் மணிபல்லவப் புத்தபீடிகையை தாமே கொள்வதற்காக தம்பெருஞ் சேனைகளால் சண்டையிட்டாராம் அடுத்து, சேர, பாண்டியரின் யானை, தேர், குதிரை மாவொடு, வயவர் நிரம்பிய சேனைகளோடு வஞ்சியிற் பொருதி சோழன் காரியாற்று மாவண் கிள்ளி அடைந்த வெற்றி பற்றி, 

வஞ்சியினிருந்து வஞ்சி சூடி
முறஞ்செவி யானையும் தேரும் மாவும்
மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர்
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியொடு வாழி ஊழிதோ றூழி.

என்று மணிமேகலை 19, 120-128 வரிகள் சொல்லும். இவைபோக, சேனைத் தலைவர் பற்றி நாலாடியார் 3 ஆம் பாட்டும், சேனை, சேனாபதி பற்றி நான்மணிக் கடிகை 52, 55 உம், கார்நாற்பது 20 உம் கூறும். இக்கூற்றுகளைப் பார்க்கும்போது சேனையளவிற்குத் தமிழர் படைதிரட்ட முடிந்தது பொ.உ.மு.200க்கும் அப்புறமென்றே தெரிகிறது. பொ.உ.மு.462 க்கு அருகில் முதற்கரிகாலன் சேனைகொண்டு படையெடுத்து அசாதசத்துவின் மகன் உதயபட்டனோடு பொருதினானா அல்லது ஒரு சில தானைகளைக் கொண்டு பொருதினானா என்பது தெரியவில்லை. சேனைகளுக்கான ஆள்-அம்பு வலுவைப் பார்க்கும்போது அவ்வளவு முந்தைய காலத்தில் பெருஞ்சண்டை நடந்திருக்குமா என்றும் ஐயப்படவேண்டியுள்ளது. இதேபோல் தான் மகாபாரதப் போர்ச்செய்திகளும் பின்னால் சேர்க்கப்படவையோ என்று ஐயுறுகிறோம். படைகள்பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாய்ப் பார்க்கலாம்.

இதுகாறும் சொன்னவற்றால், வளைவு, கூட்டம், எண்ணிக்கை எனும் 3 பொருள்களின் வழியே பார்த்தால், சங்கம் என்பது அடிப்படையில் தமிழ்ச்சொல்லாகவே தெரிகிறது.

அன்புடன்,
இராம.கி. 

No comments: