Friday, August 10, 2018

அளவைகளும் சாரியைகளும் - 1

சொல்லின் கடையெழுத்துக்கள் வருமெழுத்துக்களோடு இணைவதைப் பற்றி எழுத்ததிகாரம் புணரியலிற் கூறும் தொல்காப்பியர், விதப்பான புணர்ச்சி வகைகளைத் தொகைமரபிற் பேசுவார். இவ்விரு பகுதிகளிலும் ஒருகூறாகச் சாரியைகளும் பேசப்படும். இதன் தொடர்பில்,

உயிரும் புள்ளியும் இறுதி யாகி
அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்
தத்தம் கிளவி தம்மகப் பட்ட
முந்தை வரூஉம் காலந் தோன்றின்
ஒத்த தென்ப ஏயென் சாரியை

என்ற 165 ஆம் நூற்பாவின்வழி, ”அளவு, நிறை, எண்ணுப் பெயர்ப்புணர்ச்சியை எப்படிப் புரிந்துகொள்வது?” என்று அமெரிக்காக் கலிபோர்னியாவிலிருக்கும் பேரா. இராசம் தமிழ்மன்றம் மடற்குழுவில் ”தொல்காப்பியத்தில் தசமமுறை” என்ற தலைப்பிற் கருத்துக்கேட்டார். [நான்மதிக்கும் தமிழறிஞரில் பேரா. இராசம் ஒருவர். ஆங்கிலத்தில் இராசமெழுதிய “சங்க இலக்கியத்திற்கான இலக்கணம்” என்ற நூல் ஓர் அருந்தவ முயற்சி. குடத்திலிட்ட விளக்காய் நிலவும் பேரா. இராசத்தைக் குன்றின் மேலிறுத்தித் தமிழுலகம் பாராட்டும் நாள் கூடிய விரைவில் மலரட்டும்.]

அளவைப் பெயர்களுக்கும் எண்ணுப் பெயர்களுக்கும் இடையே ஓரிமை யுண்டு. அறிவியல் வளர வளர, எல்லா அளவைகளையும் எண்வழி உணர்வதே வளர்ச்சியென ஆனது. தடுக்கிய இடமெலாம் தோயல் (digital) கருவிகள் புழங்கும் இக்காலத்தில் சாரியைகள் ஊடுவரும் அளவைகளின் புணர்ச்சியைப் புரிந்தாள்வது தமிழ்க்கணிமைச் சிந்தனையை வளர்க்கும். பேராசிரியர் கேள்விக்கு நேரடியாக மறுமொழிக்காது சற்றே சுற்றிவளைத்து, எழுத்ததிகாரம் 7 ஆம் நூற்பாவில் தொடங்கி, பல்வேறு அளவை முறைகளைப் பேசி, சாரியைக்கு வந்து, அளவைகளுக்கும் சாரியைகளுக்குமான உறவாடலைச் சொல்ல முற்படுகிறேன். சாரியைகள் இல்லாவிடில் எண்களுமில்லை; அளவைகளுமில்லை. வெவ்வேறு பாவு நூல்களாய்க் (warp threads) அளவைகளைக் கொண்டால் ஊடு நூலாய்ச் (weft thread) சாரியை அமையும். பாவையும் ஊடையும் ஒழுங்குறப் பிணைத்து நெய்ய வில்லையேல் அடர்-துகிலைக் கட்டமுடியாது. முதலில் அளவைகளைப் பார்ப்போம்.

"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"

எனும் நூற்பாவிற்கு உரைசொல்லும் இளம்பூரணர், “நிறுத்தளத்தல் (weighing), பெய்தளத்தல் (measuring liquid volumes), நீட்டியளத்தல் (length measurement), தெறித்தளத்தல் (time measurement), தேங்க முகந்தளத்தல் (measuring powder volume), சார்த்தியளத்தல் (measurement through relative means), எண்ணியளத்தல் (counting)” என 7 முறைகள்கூறி, மாத்திரையளந்ததைச் சார்த்தியளத்தல் முறையென்று சொல்வார். நச்சினார்க்கினியரும் வரிசைமாற்றி இம்முறைகளைப் பதிவார். [பிறைக்கோட்டிற்குள் ஆங்கிலப்பெயர் கொடுத்தது என் புரிதல்/முயற்சி]

இம்முறைகள் பற்றி 2006 இல் ”அளவைகள்” எனுந் தலைப்பில் (http://valavu.blogspot.in/2006/04/blog-post_12.html.) வலைப்பதிவிலும் மடற்குழுக்களிலும் கேள்விகள் எழுப்பினேன். 9 1/2 ஆண்டுகளில் என் புரிதலில் மேலும் தெளிவேற்பட்டு இடுகைப்பிழைகளைத் திருத்தினேன். இன்னொரு பணியில், ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு (Unicode Consortium) திரு. சிறீரமணசர்மா சமர்ப்பித்த பின்ன, சின்ன முன்னீட்டிற் (proposal on fractions and symbols) தவறான குறியீடுகளும் சமன்பாடுகளும், செய்திகளும் நிறைந்ததுகண்டு, அவற்றைத் தடுத்துநிறுத்த நண்பர் நாக.இளங்கோவனோடும், கல்வெட்டியலார் சிலரோடுஞ் சேர்ந்து மாற்றாவணம் உருவாக்கவேண்டியிருந்தது. (அம்முயற்சியை வேறிடத்திற் பேசவேண்டும்.) இப்பணிக்காக South Indian Inscriptions தொகுதிகளின் பல்வேறு கல்வெட்டுக்களையும் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்படிக் கற்றதின் வழி எழுவதே ”அளவைகளும் சாரியைகளும்” எனும் இப்பதிவாகும்.

[நம்மவர் பலரும் இலக்கியம் பயின்றால் கல்வெட்டுப் படிப்பதில்லை; கல்வெட்டுப் படித்தால் இலக்கியம் பயில்வதில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று சேரமுடியா எதிரிடைகள் (mutually exclusive) என்று எண்ணிக் கொள்கிறார். இதன்விளைவாய்ப் பெரும்பாலான தமிழறிஞர் கல்வெட்டியலாரை மதிப்பதில்லை; ”கல்வெட்டெல்லாம் கொச்சைத்தமிழ்; சங்க இலக்கியமே உயர்த்தி” என்பர். கல்வெட்டியலாரோ தமிழறிஞரைச் சீண்டுவதேயில்லை. தற்செயலாய்த் தமிழ்மேடைகளில் இருவரும் இருப்பதோடு சரி; இந்நிலை எதிர்காலத்தில் மாறவேண்டும். இருவருமே தமிழுக்குத் தேவையானவர்.. வலக்கண்ணால் மட்டுமே பார்த்து, இடக்கண்ணிற் திரைகட்டி, நாம் ஒதுக்கிவைக்க முடியுமோ? ஒதுக்கின், ஒரு மாந்தனுக்கு ஒருங்கான பார்வை எப்படி வரும்? மாந்தனுக்கு ஏன் 2 கண்கள்?] சரி அளவைகளுக்கு வருவோம். இவை பெரும்பாலும் மாந்தவுடலில் தொடங்கி வேளாண் பயிர் விளைப்பில் ஊடுருவிப் பின் போக்குவரத்தில் வளர்ந்து முடிவில் வானில் நிலைத்துள்ளன.

அன்புடன்,
இராம.கி.

No comments: