Sunday, August 05, 2018

சட்டினி

"சட்னி என்பதன் தமிழ்ச்சொல்? துவையல் தமிழா? இருப்பின் சட்னியை நீர்த்துவையல் எனலாமா?" என்று ஒரு கேள்வி முகநூல் சொல்லாய்வுக் குழுவில் எழுந்தது. இதற்கு விடை சொல்லாது ஊடே புகுந்து பேச்சை இட்டவி, பிட்டுப் பக்கம் திருப்புவோர் இருக்கிறார். அது என்னவோ தெரியவில்லை. தமிழர் மரபு என்று நினைப்பதையெல்லாம் கேள்விகேட்டு, ”இட்டவி இந்தோனேசியன், இடியப்பம், சீனக்கொடை, பிட்டு தமிழருக்குத்தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் யுவான் சுவாங் நீராவிப் பாத்திரம் இங்கில்லை என்கிறார்”. என்றொருவர் உரைப்பதைக் கேட்டால் ஏதேதோ எண்ணத் தோன்றுகிறது. இன்னதென்ற கேள்வியின்றி, எல்லாமே இங்கேன் குதறப் படுகின்றன? இதுபோற் பேச்சுகளின் ஆழ, அகலம் என்னவென்று புரிய வில்லை. பொ.உ. 6 ஆம் நூற்றாண்டிற்கு முன் (அதாவது பல்லவருக்கு முன்) தமிழர் வெற்றுவேட்டு என்று முடிவு செய்வதில் இவ்வளவு கவனம் எதற்கென்றும் புரியவில்லை. “திராவிடக் கட்சிகள்” அப்படியேதேனும் சொல்கின்றனவா? இதிலுள்ள அரசியல் தான் என்ன?
    .   
முதலில் சட்டினி பற்றிப் பேசிவிட்டு மற்ற இட்டவி, இடியப்பம், பிட்டு பற்றி அப்புறம் வருகிறேன். சட்டினியும் துவையலும் சற்று வேறானவை. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சமையல் தெரியா ஆண்கள் தம் அம்மா, மனைவி போன்றோரிடம் உசாவி அறிக. சமையல் பற்றித் தெரிந்து கொள்ளாது, ”அச்சொல்லை, இதற்கு மாற்றாய்ப் பயனுறுத்தலாம்” என்பதும் ”அது வடசொல், இது தமிழ்ச்சொல்” என்பதும் சற்று அதிகப்படியான பேச்சு. சாப்பிடுவோர் எல்லோருக்கும் சமையற் பெயர்கள், உணவுப் பெயர்கள் புரிந்துவிடுவதில்லை. கொஞ்சம் மெனக்கிட வேண்டும்.

சட்டினி அரைக்கு முன், அதன் எல்லா உட்குறு பொருள்களையும் (ingredients). வாணலியிலிட்டு வதக்குவதில்லை கறட்டு (raw) நிலையிலேயே சில பொருட்களை சிச்சிறிதாய் வெட்டி அரைத்து விடுவது வழக்கம். காட்டாகத் தேங்காய்ச்சட்டினியின் உட்குறு பொருள்களான தேங்காய்த் துருவல், பொட்டுக் கடலை, பச்சைமிளகாய் அல்லது வறல்மிளகாய் (மிளகாயில்லாக் காலத்தில் மிளகையும் எலுமிச்சைச்சாறையும் வைத்துச் செய்திருக்கிறார். எப்படியென்று விவரமானவர்கள் கூறவேண்டும்.), உப்பு, தேவையான நீர் போன்றவற்றை இட்டு, அரைத்து வைத்துக்கொண்டு, வேறொரு பக்கம் கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, சிறிதளவு எண்ணெய் ஆகியவற்றை வாணலியிலிட்டு தாளித்து, (அரைப்பு, தாளிப்பு ஆகிய) இரண்டையும் கலந்துவிட வேண்டும் உள்ளேயிடும் தண்ணீரின் அளவைப் பொறுத்து சட்டினி கெட்டியாகவும், களிமிதவையாகவும் (suspension) இருக்கும். கெட்டிச்சட்டினி வேண்டுமா, தண்ணிர்ச்சட்டினி வேண்டுமா என்பது நம் உகப்பைப் பொறுத்தது.

தக்காளிச்சட்டினியில் தேங்காய்க்கு மாறாய்த் தக்காளியும், பொட்டுக் கடலைக்கு மாறாய் சின்னவெங்காயம், பூண்டு போன்றவையும் சேர்க்கப்பட்டு, முன்செய்தது போல் பச்சையாய் அரைத்துப் பின் முன்சொன்ன தாளிப்பைக் கலந்துவிடுவர். இதுபோல் சின்னவெங்காயம் நிறையச்சேர்த்து வெங்காயச் சட்டினி செய்யலாம். (பெரியவெங்காயம் இதற்குச் சரிவராது.) எல்லாம் உங்களின் செய்துபார்க்கும் திறமை பொறுத்தது. சட்டினியில் ஒன்றுமட்டும் மாறாது. பச்சை அரைப்பு, தாளிப்பு, பின் இரண்டின் கலப்பு,    .

துவையல் (இதைத் துகையலென்றுஞ் சொல்லலாம்.) செய்வது வேறு மாதிரி. இதன் உட்குறு பொருள்களான தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வறல்மிளகாய் (துகையலில் பச்சை மிளகாய் சேராது. மிளகாய் இல்லாக் காலத்தில் இதிலும் மிளகு பயன்பட்டுள்ளது. எப்படியென்று தெரியவில்லை), கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, சிறிதளவு எண்ணெய் ஆகியவை கலந்து வாணலியில் வதக்கிப் (தாளிப்பு என்பது எண்ணெயில் ஒரிருவெடிப்பு வருவது. வதக்கலென்பது எண்ணையில் உட்குறு பொருள்கள் ஊறி, தத்தம்ம் நீர்ச்சத்தை வெகுவாயிழந்து வதங்குவது.) பின் அரைக்க வேண்டும். துகையலில் தேங்காயின்றி, அல்லது தேங்காயோடு சேர்த்து, கருவேப்பிலை, புதினா. கொத்துமல்லி, பீர்க்கங்காய், கத்திரிக்காய், முட்டைக்கோசு போன்றவற்றைச் சேர்த்து வெவ்வேறு துவையல் உருவாக்கலாம்.

ஆக சட்டினி, துவையலாகிய இரண்டின் உட்குறுபொருள்களும், செய்முறைகளும் வெவ்வேறு. ஒரு சொல்லிற்கு மாறாய் இன்னொன்றை பயனுறுத்தக் கூடாது. உறையூட்டி (refrigerator) உங்களிடத்தில் இல்லை யென்றால், சற்று உயர்ந்த ஊதும வெம்மையில் (atmospheric temperture) ஒரு வேளைக்கு மேல் (4 மணி நேரத்திற்கு மேல்) சட்டினி நொதியுறாது (enzymatic action) நிற்காது. (நொதியுற்ற சட்டினி கெட்டுப்போகும். உடலுக்குக் கெடுதி.). (வதக்கியபின் அரைக்கப்பட்டதால்) சற்றுயர்ந்த ஊதுமை வெம்மையில் 2 வேளைகளுக்கும் மேல் (குறைந்தது 8-10 மணி நேரத்திற்கு) துவையல் நொதி உறாது நிற்கும். ஆக, நிறைய நேரம் நிற்கும் தன்மையில் இரண்டும் வேறுபட்டவை.

சரி சட்டினி, துவையலென்ற சொற்கள் எப்படியெழுந்தன. முதலில் துகையலைப் பார்த்துவிடுவோம். அது துவட்டுவதாலும், அரைப்பதாலும் ஏற்பட்ட சொல். துவட்டுதல் என்பது துவளுதலின் பிறவினைச் சொல். (துவர்த்தலும் துவட்டைக் குறிக்கும்.) குறிப்பிட்ட உட்குறுபொருள் (தேங்காய், கருவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, பீர்க்கங்காய், கத்திரிக்காய், முட்டைக் கோசு போன்றவை துவள்கின்றன. பின் அரைபடுகின்றன. அரைத்தலும் பிறவினைச் சொல்லே.

சட்டினிக்கும் துவையலுக்கும் (உட்செயல்களின்) செய்முறையொழுங்கு மாறுகிறதெனினும் இரண்டின் உட்செயல்கள் ஒன்றே. ஒன்றை தமிழனது என்றும் இன்னொன்றை தமிழனது அல்ல என்பதும் ஏரணத்திற்கு ஒத்து வருமா? ஆனால் ”சட்னி என்ற சொல் தமிழ் மாதிரித் தெரியவில்லையே?” என்றுசிலர் கேட்கிறார். என் எதிர்க்கேள்வி, “இனாபா” என்பது தமிழா? “என்னப்பா?” எனும் தமிழ்த் தொடரை வட ஆற்காட்டுத் தமிழர், குறிப்பாகச் சென்னைத் தமிழர் என்னாப்பா>இன்னாப்பா>இனாபா என்று பேச்சுத்தமிழில் ஆக்கிவிட்டார். இருப்பினும் அதைத் தமிழில்லை என்போமா?

நெல்லையில் சவட்டுதல் என்பது மிதித்தல், மொத்துதல், அடித்தல், அழித்தல், மெல்லுதல், உருவில்லாது அழித்தல். தேங்காய்த் துருவல் அம்மியிலும், ஆட்டுக்கல்லிலும் என்னாவாகிறது? சவளப்பட்டுப் போகிறதல்லவா? சவட்டுதலென்பது வகர/ககரப்போலியில் சகட்டுதல் என்றுஞ் சொல்லப்படும். ”சகட்டுமேனிக்கு அடிச்சுத் தள்ளிட்டான்” என்கிறோமில்லையா? ஏற்கனவே c1v1c2v2 என்று தொடங்கும் சொற்கள், c2v2 என்பது க - வாக இருந்தால் அது மறைந்து c1V1 என்று பலசொற்களில் நெடிலுருவம் எடுக்கும் என்று பல தடவை சொல்லியிருக்கிறேன். பகல்>பால் ஆவது போல் சகட்டுதல்> சாட்டுதலாகும். சாட்டுதலுக்கும் மேற்சொன்ன பொருள்தான். சவட்டுதற்கான ஒரு கருவி சவட்டை>சாட்டை. மற்ற தமிழிய மொழிகளில் ம சாட்ட. க சாடி, வாசடிம் சாவுடி, தெ.சாடி, கோத. சாட். சாடுதல் என்னும் தமிழ்ச்சொல்லுக்கு இணையாய் ம. சாடு, க.சாடிசு, து.சாண்டினி (ஈட்டியை அசைத்தல்) குரு. சாட்காரை சாண்டுதலெனும் தமிழ்ச்சொல்லுக்குக் குற்றுதல் என்றுபொருள். இதன் இணைச் சொற்கள் ம.சாண்டுக, க.சாடிக, தெ.சாடின்சு, து; சாண்டுனி

துளுச்சொல் எப்படி அமைகிறதென்று பார்க்கவேண்டும். தமிழில் கற்பி என்பது வினைச்சொல். கற்பனை என்பது பெயர்ச்சொல். சிலர் வியப்பாக கற்பனி என்ற வினைச்சொல்லை உருவாக்குவார். மரி என்பது வினைச்சொல். மரணம் என்பது பெயர்ச்சொல். சிலர் மரணி என்று இன்னொரு வினைச்சொல் உருவாக்குவார். சாட்டு>சாட்டுணை என்பது சாட்டுணி>சாட்டினி என்றாகிச் சட்டினி ஆனதோ தெரியவில்லை. துளு/தமிழ் உறவாட்டம் பார்க்கவேண்டும். வேர்ச்சொல் நன்கு புரிகிறது. சட்டினி என்ற இறுதி வடிவம் எப்படியெழுந்தது என்று தெரியவில்லை. இன்னும் ஆய்வு வேண்டும் என்று மறுக்கவில்லை. ஆனால் சவட்டுற் காரணத்தால் சட்டினி உறுதியாய்த் தமிழ் தான்.

பொதுவாய்த் தேங்காய்ச் சட்டினி என்ற முறையில் அது தென்னகம், வேண்டுமானால் மராட்டி, ஒடிசா, வங்கம் சேர்த்துக்கொள்ளலாம். அம்மியும் ஆட்டுக்கல்லும் தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்துள்ளன. சட்டினியின் சேர்பொருள்கள் மிளகாய் தவிர்த்து. எல்லாமே நம்மூர்ப் பொருள்கள் தாம். மிளகாய்க்கு மாறாய் மிளகு எப்படிச் சேர்க்கப்பட்டது என்பதற்குச் சேர்மானக் குறிப்பு தேவை. துவையலுக்கு ஆன சொற்பிறப்பே சட்டினிக்கும் அமைகிறது. ஒருபக்கம் துவட்டல், இன்னொரு பக்கம் சவட்டல். துவட்டல் தமிழ், சவட்டல் தமிழல்ல என்பது ஏரணமில்லாது தெரிகிறது. வேறு எந்த வடபுலத்தாராவது சட்டினி தம்முடையது என்கிறாரா? பெயரைக் கண்டு தடுமாறாதீர் சட்னி இன்னொரு “இனாபா”.

அப்புறம் இட்டவி, இடியப்பம், பிட்டு பற்றிய ஓரிழை 2008/2009 களில் தமிழ்மடற்குழுக்களில் ஓடியது. அதில் என்னவெல்லாம் கருத்து வைத்தாரோ, அதே கருத்தைப் 10 ஆண்டுகள் கழித்தும் திரு. மணிவண்ணன் வைக்கிறார். அது அவர் உரிமை. ஆனால் ”இப்படியோர் உரையாடல் நடந்தது, இன்னார் இப்படிச்சொன்னார், நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றாவது சொல்லியிருக்கலாம். இராம.கி.யைக் கண்டுகொள்ளாமல் (ignore) இருப்பது தான் சரியான அரசியல் என்ற நினைப்போ தெரியவில்லை. மனம் கொஞ்சம் நெருடுகிறது..
 
http://valavu.blogspot.com/2009/07/1.html
http://valavu.blogspot.com/2009/07/2.html
http://valavu.blogspot.com/2009/07/3.html

மேலேயுள்ள பதிவுகளைப் படித்தபின் இட்டவி, இடியப்பம், பிட்டு என்ற சொற்கள்/ உணவுகள் பற்றிக் கேள்விகள் இருப்பின் வேறொரு இழை யெழுப்பிக் கேளுங்கள். சொல்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

No comments: