Thursday, August 09, 2018

சங்கம் - 7

சங்கமென்ற சொல்லிற்கான பொருள்வரிசையில், மூன்றாவதாய் அமைவது ”கூட்டநீட்சியான” எண்ணிக்கை. இதன்வழிப் பொருட்பாடுகள் "இலக்கங் கோடி, படையிலொரு தொகை" என்பன. தமிழிய, வட இந்திய, மேலை மொழிகளின் எண்ணுச்சொற்களிடையே வியத்தகு ஓரிமையிருப்பதாகவே நான் உணர்கிறேன். சொற்கள் வேறாயினும், உள்ளிருக்கும் செலுத்தமும் (process) பொருளும் (meaning) ஒன்றுபோற் காட்டும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் முன்தொடர்பு இருக்குமென நான்சொல்வதற்கு இதுவுமொரு காரணம். தமிழில் எண்கள் எழுந்தவகை சொல்ல ஏராளம் உண்டு. அதேபொழுது இந்த நீள்தொடரை மேலும் நீட்டுவது முறையல்ல என்பதாற் சுருங்கச் சொல்கிறேன். முதற்கருத்தீடு ’ஒன்றைப்’ பற்றியது.

விலங்கியல், மாந்தவியல் அறிவின்படி, மாந்தனின் உணவுப் பழக்கமே அவனைக் குரங்கிலிருந்து வேறுபடுத்தியது என்பர். பல்வேறு மாந்தக் குரங்குகளில் இறைச்சி சாப்பிடத் தொடங்கியவன் அவனே. ஒருகாலத்தின் அவன் மூளை கிடுகிடுவென வளரத்தொடங்கியதும் இறைச்சி சாப்பிடத் தொடங்கியதாற்றான். இன்றைக்கு மரக்கறியுணவை வலியுறுத்தும் பலருக்கும் இது வியப்பாகலாம். ஆனால் அது உண்மை. ஒந்நு/ஒந்து/ஒண்ணு/ஒண்டு எனுஞ் சொற்கள் (ஒன்னு/ஒன்று என அதன்பின்னும் ஏற்பட்ட திருத்தங்கள்) எல்லாம் பெரும்பாலும் வாயுட்புகும் இறைச்சியால் ஏற்பட்டனவோ என்றே ஐயுற வேண்டியுள்ளது. ஊனிற்கும் ஊணிற்குமான எழுத்துப்போலி இந்த ஊகத்தை நமக்கு எழுப்புகிறது. இதன் விளக்கத்தை இங்கு நான் கூறவில்லை. வேறுதொடரிற் பார்க்கலாம்.

இரண்டென்பது ஊனை ஈரும், இரளும் வினையில் எழுந்ததாய்த் தோற்றுகிறது. ஈர்தல்= இரளுதல்= வெட்டுதல், பிரித்தல். துமி>துவி என வட இந்திய, மேலை மொழிகள் கையாளும். (துமித்தலும் கூட ஈர்தலே.) முன்று என்பது முன்வந்து காட்டும் மூ>மூக்கு, இதை நூ>நுதி>நுசி>நாசி, தூ>துயி>துதி (ஒருபொருட் சொற்கள்) என்றுஞ் சொல்வர். (வடவிந்திய, மேலை மொழிகள் வழக்கம்போல் ரகரத்தை உள்நுழைத்து துயியைத் த்ரயி>three என்றாக்கும். உலகின் பல பழங்குடிகளும் (1,2, பல) என்றோ, (1,2,3, பல) என்றோ, எண்ணுவதில் தேங்கி நின்றார். இன்னுஞ் சிலகுடிகள் கைவிரல் கொண்டு, ஐந்து எனும் கருத்தீட்டுக்குள் வந்தார். ஐ, ஐது, ஐந்து, அய், செய் என்றும் தமிழிற் சொல்லப்படும் அள்>அய்>ஐ என்று இச்சொல் வளரும். அள்ளுதல் = சேர்த்தல். ஐந்து விரலும் சேர்த்தே அள்ளுகிறோம். அஞ்சென்பது ஐந்து> அய்ந்து> அய்ஞ்சின் பேச்சுவழக்கு. இன்னும் வளர்ச்சியடைந்தோர், 4,6,7,8 ஆகியவற்றை ஊடே எண்ணி வளர்ந்துள்ளார்.

நால்கை என்பது நலிந்த கையைக் குறிக்கும். ஐந்திற் குறைந்துபோன கை. நால்கை> நால்கு> நான்கெனத் திரியும். கையிலாத நால்/நாலும் பழக்கத்தால் 4 ஐக் குறிக்கும். ”ஆறு, ஏழு, எட்டு” என்பவை 1,2,3,5 என்ற அடிப்படைகளைக் கொண்டு கூட்டப்பொருளில் எழுந்தன. சற்று நீளமான அவற்றின் சொற் பிறப்புக்களை இங்குநான் சொல்லவில்லை. ’பல’வெனுங் கருத்தும் முன்னேறிய பழங்குடிகளிடம் இருந்துள்ளது. 10 எனும் அளவிற்கு எண்ணிக்கையில் முன்னேறியவர் புதுக்கற்கால நிலையில் இருந்திருக்கலாம் என மாந்தவியற் குறிப்புகள் சொல்கின்றன. பல என்ற சொல்லை வரையறுத்து 10 ஐக் குறித்தது சிந்தனை வளர்ச்சி தான். தொடக்கத்தில் பல், வெளுப்பு நிறத்திற் பிறந்து, பொருள்நீட்சி பெற்று, வாய்ப்பல் குறித்தது. மேலும் பொருள்நீட்சியில் பன்மையைக் (many) குறித்து, முடிவிற் பல்து> பஃது> பத்து என்றாகி 10 ஐ வரையறுத்தது. மேலைமொழிகளின் ten னுங் கூடத் தந்தம்/பல்லையே குறித்தது. ஈரைந்து என்பதைத் ’துவிசெய்’ ஆக்கி தச எனத்திரித்து வடபுலத்தில் ஆள்வர்.

10 வந்தபின், 9 ஏற்படுவது இயல்பு. துவள்ந்து>துவண்டு போன பத்து, தொண்பது ஆனது, தொண்பது>தொன்பது>ஒன்பது ஆயிற்று. தொள்ளும் ஒள்ளும் ஒரே பொருளன. எப்படிக் கையைத் தொகுத்து நால்/ நாலு, நான்கைக் குறித்ததோ, அப்படித் துவள்>தொள்>தொண்டு என்பது ஒன்பதைக் குறித்தது. நமுத்தல்> நவுத்தல்>நவத்தலும் குறையைச் சுட்டும். நவமென்ற வடபுலச்சொல் அப்படியெழுந்தது. இங்கும் மொழிகளிடை ஒரே சிந்தனை தென்படுவதைக் காணலாம். கூர்ந்துபார்த்தால், ஊனில் தொடங்கி, பின் ஈர்ந்து, அடுத்து மாந்தரை மையமாக்கி (anthropocentric) 3,5,10 ஆகிய எண்களைச் செய்துள்ளார். பல்வேறு மொழிகளைப் பார்க்கையில் இவையே அடிப்படை எண்களாய்த் தெரிகின்றன. இவற்றை வைத்தே, 4,6,7,8,9 என்ற வழிபடு (derived) எண்களை உருவாக்கியுள்ளார்.

அடுத்தது நூறு. இதைச் செய்கையில் மாந்த உறுப்புச் சிந்தனை போதாமல் ஆனது. சில குடிகள் கைவிரல் 10 ஐயும், கால்விரல் 10 ஐயுஞ் சேர்த்து 20 எனும் அலகை உருவாக்கி எண் கட்டகம் (numeric system) செய்தார். (தென்னமெரிக்க மாயன்கள் இவ்வகையினர்.) சுமேரியர் போன்றோர் 60 ஐ வைத்து எண்ணு முறை உருவாக்கினர். ஒரு மணிக்கு 60 நுணுத்தம் (minutes), ஒரு நுணுத்தத்திற்கு 60 துளிகள் என இன்றுஞ் சொல்கிறோமே, அது சுமேரியர்வழி வந்தது. பெரிதும் 10 ஐயும், சிறுபால் 60 ஐயும் அடிப்படையாகத் தமிழர் கொண்டார். ஒரு நாளுக்கு 60 நாழிகை. ஒரு நாழிகைக்கு 60 விநாழிகை என்பதும் சுமேரியர்மாதிரிச் சிந்தனை தான். அதேபொழுது 10 இன் சிந்தனை தமிழரிடம் மறையவில்லை. இருபது, முப்பது, ......எழுபது, எண்பது என்று அமைவதும் நம் மரபு தான். தமிழர் எட்டின் அடிப்படையைக் கொண்டார் என்பது பிழையான புரிதல்..

அடுத்த வளர்ச்சி மாந்தவுடலிலிருந்து புவியிற்காணும் கல், மண் என நகரத் தொடங்கியது. உடையக்கூடிய (கல் போன்ற) ஏதோவொன்றைக் கீழே போடுகையில் ஒன்று பலதாவதுபோல், வலிந்து கீழிட்டு நுறுக்கும்> நொறுக்கும் போது நூறாகிறது. பொடிப்பொடியாகிறது. நூறெனும் சொல்லிற்கு சங்க இலக்கியங்களில் இப்பொருள் நெடுகவுள்ளது. நூறு>நீறு=பொடி. நுறுக்குவதற்கு இன்னொருசொல் சதைத்தல்> சதாய்த்தல். “போட்டு சதாய்ச்சிட்டான்பா” என இன்றுஞ் சொல்வோம். சதைத்தலின் இன்னொரு வடிவம் சாத்துதல். சதைத்தலிலெழுந்த வடசொல் சதம். சங்க காலத்தில் தமிழருக்கு வடக்கே (இற்றை மராட்டியக் கோதாவரிக் கரையில் ஔரங்காபாது அருகில்) படித்தானத்தைத் (Paithan) தலைநகராய்க் கொண்ட நூற்றுவர் கன்னர் (பாகதத்தில் சதகர்ணி) ஆண்டார். தமிழகத்தையும் மகதத்தையும் வணிகத்தால், இடையாற்றங்களால், இணைத்தவர் இவரே. எதிரிகளை நூறும் அடைப்பெயரை இவர் பெற்றார். கன்னர் (= கருநர்) என்பது சேரர்/சோழர்//பாண்டியர் போல் ஓர் இனக்குழு அடையாளம். 

தமிழிய, வடவிந்திய மொழிகளிடையே எண்களில் இணைச்சிந்தனை நிலவியது நெடுகவும் உண்மை. அவை தனித்தனியே தேர்ந்துகொண்ட சொற்கள் தாம் வேறு. மேலைச்சொல்லும் நூறுதல். சதைத்தல் போலவே அமையும்..100 க்கான மேலைச்சொற்கள் கொத்தற் கருத்தில் எழுந்தவை. ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலி பொருள்கூறாது வெறுமே சொல் இணைகளை மட்டுங் காட்டும். Old English hundred "the number of 100, a counting of 100," from Proto-Germanic *hundratha- (source also of Old Frisian hundred, Old Saxon hunderod, Old Norse hundrað, German hundert); first element is Proto-Germanic *hundam "hundred" (cognate with Gothic hund, Old High German hunt), from PIE *km-tom "hundred," reduced from *dkm-tom- (source also of Sanskrit satam, Avestan satem, Greek hekaton, Latin centum, Lithuanian simtas, Old Church Slavonic suto, Old Irish cet, Breton kant "hundred"), suffixed form of root *dekm- "ten. கொத்தலும் சாத்தலும் ஒருபொருள் கொண்டன. சகரமும் ககரமும், ஹகரமும் மேலைமொழிகளில் போலிகள். ஒரு பக்கம் ககரம் சகரமாக, இன்னொரு பக்கம் ககரம் ஹகரமாகும். பொருள் ஏதோ ஒன்றுதான்.

நூறென்ற எண்ணுப்பொருள் சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் வந்துள்ளது. “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்று” (திரு.155-156), “நூற்றிதழ்த் தாமரை” (ஐங்.20-2), ”பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை ஆற்றல்” (பரி 3-40), “மையிரு நூற்றிமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று ஐயிருநூற்று மெய்ந்நயனத்தவன் மகள் மலர் உண்கண் மணிமழை தலைஇயென” (பரி 9-8,9,10), “நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன” (புறம் 27-2), ”புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க, வரிபுனை வல்வில் ஐவர் அட்ட” (கலி 104 57,58), “மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனை” (கலி 52-2), “பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்” (புறம் 62.10),”நூறுசெறு வாயினும் தமித்துப்புக் குணினே” (புறம் 184.3) என்பன அவையாகும்.

அடுத்தது ஆயிரம். நுறுக்குவதற்கும் கீழே, விடாது துவட்டி/தவட்டி எடுக்கையில் கல், தவடு>தவிடு பொடியாகிறது. தவட்டுதல்= சிறு பொடியாக்குதல். துவையலும் சிறுபொடியாக்குவதே. என்ன? ஈரஞ் சேர்ந்து பொடியாக்குவது. தவட்டுதல்>தவடு>தவிடு என்பற்கும் மேலைமொழிகளின் thousand ற்கும் தொடர்புள்ளதுபோல் தோற்றுகிறது; தவிடு பொடியாதல்; தவட்டுதல், தென்மாவட்டங்களில் சவட்டுதல் ஆகும். சவடென்பது வண்டல் மண்ணையும், ஆற்றுமணலையுங் குறிக்கும். (ஊரெலாம் காணும் ஆற்று மணற் கொள்ளை சவட்டுமணற் கொள்ளையே.) இதேபருமையில் ஆனால் கடற்கரையிற் கிடக்கும் மணல் சற்றேதிரிந்து, உப்பையுணர்த்தி, சவடு>சவர் என அழைக்கப்படும். சவத்தலே சவர்த்தலாயிற்று. சவ்வு>சவ்விரம்> சவிரம்> சாவிரம்>சாயிரமென இச்சொல் திரியும். கன்னடத்தில் சாயிரம் = ஆயிரம். (கன்னடச்சொல் தெரியாவிடின் ஆயிரத்தின் சொற்பிறப்பறிய நாம் தடுமாறியிருப்போம்.) இதற்கு இணையாய்த் தமிழில் அயிரம்/அயிரை = நுண்மணல், கண்ட சருக்கரை. அயிர் = நுண்மை.

சாயிரம்>சகயிரமாகி, பின் சகஸ்ரமாகி, சங்கதத்திற் புழங்கும். இதைத் தலைகீழாய் ஓதி ”சகஸ்ரமே ஆயிரமாயிற்று” என்றும் சிலர் சொல்வர். சவட்டுதலின் தொடர்பான சவளுதல் = துவண்டுபோதல், சவித்துச் சவலையான பயிர் சாவி,. சவித்தழிந்த உடல் சவம். சாவட்டை= சாவிப்பயிர், சாம்பிப்போதல்>சாவிப்போதல்= ஒடுங்குதல் போன்ற சொற்களைப் பாராது இவர் சொல்கிறார். சவைத்தலின் இன்னொரு வெளிப்பாடு அவைத்தல்; அரிசி குற்றலைக் குறிக்கும். அவல்= flattened rice. இவற்றையும் சங்கதத்தார் கவனிப்பதில்லை. ஆயிரம் தமிழில்லையெனில் இத்தனையும் தமிழில்லை என்றாகும். ஒரு சொல்லைத் தனித்துப்பாராது, சொற்றொகுதியாய்ப் பார்க்கும்படி நான் சொல்வது இதற்கே. ஆயிரம்போலவே இன்னொருசொல் அயிர்தம். சகஸ்ரத்தை ஆயிரத்திற்கு வைத்து, அயிர்தம்>அயுதத்தை வட புலத்தார் பத்தாயிரத்திற்குப் பயனுறுத்தினார். சாயிரம் புழங்காத தமிழரோ அயிர்தமும், ஆயிரமும் ஏறத்தாழ ஒன்றாய் ஒலிப்பதால், குழப்பந் தவிர்க்க, அயிர்தத்தைப் பத்தாயிரமென்கிறோம்..

’ஆயிரம்’ பழகிய சங்கச்சொல்லாட்சிகள் ”அடையடுப்பறியா அருவி ஆம்பல் ஆயிரவெள்ளம் ஊழி வாழி, ஆத வாழிய பலவே”  (பதி.63.19-21), “ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள” (பரி.3-42), ”ஆயிர அணர்தலை அரவவாய்க் கொண்ட” (பரி 3-59), “அந்தர வான்யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து” (பரி.தி.2-95-96), ”சாலிநெல்லின் சிறைகொள்வேலி ஆயிரம் விளையூட்டாக” (பொரு. 247-248), “தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய” (மது 11), “ஆயிரவெள்ளம் வாழிய பலவே” (பதி 21.38), “ஆயிரம்விரித்த அணங்குடை அருந்தலை” (பரி 1.1), “மாசில் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம்” (பரி.3.22), “மின்அவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த கவைநா அருந்தலைக் காண்பின் சேக்கை” (பரி 13.27-28), “அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த” (பரி.தி.1.79), “அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்” (கலி.105.15), ”வளஞ்சால் துளிபதன் அறிந்து பொழிய வேலியாயிரம் விளைக நின் வயலே” (புறம் 391.19-21) என்பனவாகும். ஆயிரமென்ற எண்ணிற்கு மேற்பட்ட சொல்லாட்சிகள் தமிழிற்குறைவு. ஆனால் இல்லாதில்லை. நிகண்டுகளிலும், ஒருசில காட்டுக்களிலுமுண்டு. (மறவாதீர். சங்க இலக்கியங்கள் அகரமுதலிகள் அல்ல.)

அயிர்தலுக்கும் கீழே பொடித்து நொய்வது நொய்தலாகும். ”நொய்>நொசி” ஆங்கிலத்தின் nice ஓடு இணைகொண்டது. ”அம்மண்னைத் தொட்டுப்பார், நொய்யாக இருக்கும்.” நொய்தல், நெய்தலென்று திரிந்து 100000 (=10^5) த்தைக் குறிக்கும். இலவுதல்>இலகுதலும் நொய்தலைக் குறிக்கும். இலகல்= நொய்ம்மை. இலகுதல் தன்வினை. இலக்குதல் பிறவினை.. இலக்கலிற் பிறந்த இலக்கம், முற்றிலும் தமிழே. இலக்கத்தைச் சங்கதம் இலக்ஷ என்னும். பிறகு, ”தமிழ் அங்கிருந்து கடன்வாங்கியது” என்பர். ”நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழுமுறை” என்று பரி. 2.13- 15 ஆம் வரிகளிற் பயிலும். ஆயிரத்திற்கு மேற்பட்டு அடுத்தடுத்துயரும் எண்களாய் கால எண்ணிக்கை சொல்லப்படும். இலக்கமும் (10^5) நெய்தலும் ஒன்றென வடபுல நூல்களைப் பார்த்தே நான் அறிந்தேன். நெய்தலை வடக்கெ ந்யுதமென்பார். (தமிழாய்வர் கொஞ்சமாவது பாகதம், சங்கதம் படிக்கவேண்டும். நம்மூர்ச் சிந்தனை வடக்கே பெயர்ந்து கிடக்கிறது. வேரிங்கே விளைவங்கே. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, தமிழாய்வாளர் உண்மையறிய சங்கதப் படிப்பு கட்டாயந்தேவை. இந்தக்காலத் தமிழ்ப்படிப்பில் இதை ஒதுக்கியது பெரிய தவறு.) நெய்தல், இலக்கத்தோடு நூறாயிரமும் நம் வழக்கிலுண்டு. “நூறாயிரம் கை ஆறறி கடவுள்” என்பது பரி. 3.43.

அடுத்தது கோடி. நுணுகிய துகள்களைக் குவ்விக் குவிப்போம். குவ்வியது குவலும்/குவளும். 10^7 எனும் எண்ணுணர்த்தி குவளை என்ற பெயர்ச்சொல் உருவாகும். (இதில் கூடிய எண்ணிக்கை என்ற உட்பொருள் இதிலுள்ளது.) குவளை குவளியாகி தெலுங்கிற் குவடியாகி முடிவிற் கோடியாகும். வடக்கே கோடியே புழங்கியது. ’குவளை’ அங்கில்லை. தமிழில் இரண்டும் உண்டு. ஆனால் கோடியே மிகுதி. “ஒன்று பத்தடுக்கிய கோடிகடை இரீஇய பெருமைத்தாக நின் ஆயுள் தானே” (புறம் 12.5-6), “கோடியாத்து நாடுபெரிது நந்தும்” (புறம் 184-6), “கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய” (புறம் 202-7) ஆகியவை இதற்கான சொல்லாட்சிகள். (குவளை= கோடி என்ற இணையைத் தமிழருக்குப் புரியவைத்தவர் சொல்லறிஞர் இரா.மதிவாணன். [அவருடைய கட்டுரையை அடையாளங் காட்ட பரணில் தேடினேன். இப்போது கிட்டவில்லை. தெலுங்குமொழி பலவகையில் பாகதத்திற்கும் தமிழுக்குமான பாலமே. நூற்றுவர் கன்னர் ஆட்சியில் ஏற்பட்ட விளைவு இது. (இற்றைத் தமிழாய்வோர் குறைந்தது இன்னொரு திராவிட மொழியையும் கட்டாயம் படிக்கவேண்டும்.)]   

நெய்தல், குவளை என்றசொற்கள் குவிந்த நுண்துகள்களாய் காட்சி அளித்தாலும், நீர்ப்பூக்களெனும் மாற்றுப்பொருளுமுண்டு. அகப்பாட்டுக்கள் பலவற்றில் அப்படியே ஆளப்படும். அந்த மிகுதியே நம்மை எண்ணுப்பொருள் காட்டவிடாது தடுக்கும்.) ஒவ்வோர் எண்ணுக்கும் ஏழெட்டு நிகர்ச்சொற்களை மரபுகருதி மறைப்பாகப் புழங்குவது இந்தியாவெங்கணும் நடைமுறையாகும். காட்டாக வானம்= 1, கை= 5, திசை= 8, கைத்திசை=  58. இப்படிப் பல்வேறு சொற்களையும் சொற்கூட்டுகளையும் வட்டார மரபுக்கேற்பப் புழங்குவர். குழூஉக்குறி புரியாதோர் விளங்காது நிற்பர். [”நாலுபேர் சொல்வாங்க” என்ற மரபுப்பேச்சிற்கு ”நாலுதிசையிலும் உள்ளவர் சொல்வர்” என்பதே பொருள். ”4 ஆட்கள் சொல்வர்” என்பதல்ல.] இலக்கத்திற்கு நெய்தலும், கோடிக்கு குவளையும் அடையாளமாய்க் கொள்ளப் பட்டன. நெய்தலையும், குவளையும் இப்படிப் புழங்கியபிறகு ஆம்பலையும், தாமரையையும் தமிழர் விட்டுவைப்பாரா, என்ன? ஆம்பல், சங்கம், தாமரை என்ற எண்சொற்களும் கூடப் பிறந்தன.

நூறுகோடி = 10^9 என்ற எண்ணைக் குறிக்க ’ஆம்பல்’ புழங்கியுள்ளது. அவைத்தல் பற்றி முன்சொன்னேன் அல்லவா? அவல்மட்டுமின்றி அவமென்ற பெயர்ச்சொல்லும் அதிற்கிளைக்கும். அதற்கும் மிக நுண்ணிய பொருளுண்டு. ஒருபொருளை அவத்திவிட்டால் (10^9 பங்காக்குவது என்பது பின்னென்ன?) அழிந்தே போகும். எனவே அவத்திற்கு அழிவுப்பொருளும் வந்தது..அவம்>ஆம் எனத் தொகும். ஆம்புதல், ஆமுதல் போன்ற வினைகளை எழுப்பும். ஆம்பல் பேச்சுவழக்கில் ஆம்ப என்றாகும். சங்கதத்தில் ஆம்ப்ய ஆகி, மகரந் தொலைத்து ஆப்ய என்றாகும். யகரமும் ஜகரமும் வடசொற்களில் பல இடங்களிற் (மேலைமொழிகளிலும் போலி/) ஆப்ய>ஆப்ஜ ஆகும். வட நூல்களில் இதேபொருளில் இச்சொல் புழங்கியது. இதைக் குமுதம்>குமுத> சமுத>சமுத்ர என்றுஞ் சொல்வார். வடபுலத்திலும்  10^9 என்பதே இதன் பொருளாகும். ஆம் என்பதற்கு நீரென்ற பொருளுமுண்டு. கொஞ்சங் கொஞ்சமாய் எண்ணுப்புலம் என்பது கல்>மண்>மணலென நீருக்குள் வந்து விட்டது பாருங்கள். இன்னொரு வகையில் அம்பல்>ஆம்பல். அம்புதல்= கூம்புதல் என்பதால் அல்லியைக் குறிக்கும். அல்= இரவு. பகலிற் கூம்பி, இரவில் மலரும் அல்லிக்கு ஆம்பல் பெயர் ஏற்பட்டது.

அடை/இலை பக்கத்தில் உள்ளது நீராம்பல் பூ. ”அடையடுப்பறியா அருவி ஆம்பல் ஆயிரவெள்ளம் ஊழி வாழி” என செல்வக்கடுங்கோ வாழியாதனை பதி.63.19-21 இல் கபிலர் அழகுறப்பாடுவார். ”அடையடுப்பறியா நீராம்பல் பூ” = 10^9. பூத்த வஞ்சி/ பூவா வஞ்சி என்ற இணையை இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். 10^9 ஆண்டுகள் செல்வகடுங்கோ வாழியாதன் வாழவேண்டுமாம். (இதில் வரும் வெள்ளத்தின் பொருள் இன்னும் பெரிய எண்ணைக் குறிக்கும். கீழே பாருங்கள்.) என்னவொரு ஆசை கபிலருக்கு வந்தது பாருங்கள்? ”நெய்தலும் குவளையும் ஆம்பலும், சங்கமும் மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம் கழிப்பிய வழுமுறை” என்று பரி. 2.13-15 ஆம் வரிகளில் அடுத்தடுத்த பெரிய எண்ணாய் ஓர் ஒழுங்கு முறையைக் காட்டும். இதுவரை பார்த்த படி, நெய்தல்/இலக்கம்/நூறாயிரம்= 10^5. குவளை/கோடி= 10^7. ஆம்பல்/நூறுகோடி= 10^9.. இனிச் சங்கத்திற்கு வருவோம். இதன்மதிப்பு இன்னுங்கூட. தமிழரைக் குறைத்து மதிப்பிடாதீர் தோழர்களே!

சங்குபற்றி முன்சொல்கையில் 1000 இடம்புரிச் சங்கிற்கு 1 வலம்புரிச் சங்கு கிடைக்குமென்ற பெருதகை (probability) சொன்னேன். அதுபோல் 1000 வலம்புரிச் சங்கிற்கு 1 சலஞ்சலம். ஆயிரம் சலஞ்சலத்திற்கு 1 ஐஞ்சுன்னம். இதைப் பெருக்கிப்பாருங்கள். 1000* 1000* 1000 = 10^9 என்றாகும். (இதைத்தான் ஆம்பல் என்று சொன்னோம்.) இதற்குமேலும் இதே பெருதகையில் ஓரெண் வேண்டும் எனில் அது 10^12 தான். சங்கமென்ற சொல்லுக்கு இதையே வழிப்பொருள் ஆக்குவர். வடநூல்களில் இதேபொருள் சொல்வர். 10^12 என்பதை 10^5 * 10^7 = இலக்கங் கோடி என்று சொல்லலாம். தமிழ் அகரமுதலிகளில், நிகண்டுகளில் இப்பொருளுள்ளது. இப்போது புரிகிறதா, சங்கத்தின் எண்ணுப்பொருள்? அடுத்தது நூறு சங்கம் 10^14. இதை வெள்ளமென்று குறித்திருக்கிறார். சங்கதத்தில் ஜலதி என்பர். இதுவரை சொன்னதில் தாமரை விட்டுப்போனது. அது சங்கத்திற்கும் வெள்ளத்திற்கும் இடைப்பட்டதெனப் பரி. 2.13-15 ஆம் வரிகள் சொல்லும். எனவே பத்துச்சங்கம் = 10^13 = தாமரை ஆகலாம். என்னால் உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. வேறு ஏதேனும் விளக்கம் தோன்றினால் பின்னர் சொல்கிறேன். . 

இனி முடிவிற்கு வந்துவிட்டோம். அடுத்த பகுதிவரை பொறுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Harinarayanan said...

தமிழ்எண்கள் குறித்த விரிவான விளக்கங்களுக்கும், சங்கத்தமிழ் சான்றுகளுக்கும் இலக்கம் நன்றிகள் ஐயா.
அன்புடன்,
அரிநாராயணன்.

Harinarayanan said...

இதுகுறித்த மேலதிக புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறேன் ஐயா. நன்றிகள் பல