Thursday, August 09, 2018

சங்கம் - 1

மொழிவளர்ச்சி என்பது, ஒரு சிக்கிலா நூற்கண்டை நீள வலிப்பது போல் எண்ணுற்று (quantify) நிகழ்வதில்லை. கால மாற்றத்தில் மொழி பேசுவோர் எண்ணிக்கை கூடக் கூட எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி போன்றவற்றில் மொழிமாற்றம் ஏற்படலாம். ஓரிட விதப்பு (specialized) வழக்கு இன்னோரிடத்துப் புரியாது போகலாம். ஒருசொல்-பலபொருள், பலசொல்-ஒருபொருள் தன்மை என்பது மொழியில் மிகுத்து வரலாம் இதுவரையிலாத பொருட்பாடுகள் கூட ஒரு சொல்லிற்கு ஏற்படலாம். ('நாற்ற'ப்பொருள் இற்றைத்தமிழில் மாறியுள்ளதே?) மொழிவளர்ச்சி தெரியாவிடில் சொல் தோற்றம் எப்படியென முடிவு செய்வதில் முரண் வரலாம். மொழித்தொனியும் இடத்திற்கிடம் மாறலாம் (ஈழம், தென்பாண்டி, கொங்கு, வடதமிழகத் தொனிகள் வேறானவை.) மொழிக் கிளைகளின் இத்தகைய இயல்பு வேறுபாட்டைத் தான் இயல்மொழிக் கிளைப்பென்றும் முரணியக்க மொழிவளர்ச்சி (dialectic language development) என்றுஞ் சொல்கிறார்.

20ஆம் நூற்றாண்டிலெழுந்த ”சங்கவிலக்கியச்” சொற்கூட்டின் தோற்றம் பற்றி சில மாதங்கள் முன் மின்தமிழ்க் குழுவில் ஓர் உரையாட்டு எழுந்தது. சொற் கூட்டை முதலில் யார் சொன்னார் என்பது ஒரு விதயமெனில் ”சங்கச்” சொல்லிற்கு மரபுப் பின்புலத்தில் தமிழ்வேர் சுட்டுவது இன்னொரு விதயம். தமிழ் போலும் மொழிகளில் சொல்லின் பொருட்பாடுகள் ஒன்றிலிருந்து இன்னொன்று என வெவ்வேறு காலங்களில் சரம் போல் எழும். (சில பொருட் பாடுகள் ஒரு சரத்தில் விலகித் தோன்றின், ஒன்றிற்கு மேலும் சரங்கள் உண்டென்றோ, செய்யப்படும் அலசலில் தவறென்றோ பொருளாகும். "சங்கப்" பின்புலம் தெரிந்து கொள்ளுமுன் தமிழ், பாகத, சங்கத மொழிகளின் ஊடே வரும் இடையாற்றத்தைத் தெரிந்து கொள்வது தேவையானது.)

தமிழிற் பயனுறும் சில சொற்களின் மேலோட்ட வடமொழித் தோற்றங் கண்டு, அவற்றின் வேர் சங்கதத்தில் உள்ளதெனத் தமிழரிற் பலரும் கருதுகிறார். இக் கருதுகோளின் பின்னுள்ள தரகுவருக்கப் புரிதல், தமிழர் பண்பாட்டுத் தளத்தை அவ்வளவு ஆள்கிறது. ”மெய்யியலா? அறிவார்ந்த உரையாடலா? பழைய அறிவியற் கருத்தா? சங்கதத்திலிருந்தே மாநிலங்களுக்குப் போகும்” என இந்தியா எங்கணும் சொல்லப் படுகிறது. இதை மறுப்போர் குமுகாயத்தில் ஒதுக்கப் படுகிறார். மாநில மொழிகளுக்கும், சங்கதத்திற்குமான இருவழிப் போக்குவரத்தைப் பலரும் உணர்வதில்லை. இத்தனைக்கும் பழங் கலைஞர், தொழில் முனைவோர் மாநில மொழிகளிலேயே தத்தம் வித்தைகளைத் தம் மாணவர்க்குச் சொல்லிக் கொடுத்தார். பல கலைச்சொற்களின் வேர்கள் நம் வட்டார மொழிகளிலேயே உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பரிமாற்ற மொழியாய் (exchange language) இருந்த சங்கதம் இவற்றையே இந்திய வட்டாரங்களில் இருந்த படித்த மக்களிடையே பரப்பியது. இருப்பினும் பல சொற்களின் ஊற்று, சங்கதம் என்றே சொல்லப் படுகிறது. ஒருமுறை மின்தமிழ் மடற்குழுவில் “வடமொழி என்பது சங்கதமா?” என்ற கேள்வியை திரு.பானுகுமார் கேட்டு குழுமக் கருத்தறிய விழைந்தார். அவர் கேள்வி கீழே:
----------------------------------------
தொல்காப்பியத்தில் “வடமொழி” என்பதற்கு சங்கதம் (சமஸ்கிருதம்) என்றே நிறைய உரையாசிரியர் எழுதிச் சென்றுள்ளார். ஆனாலும் சில அறிஞர் (குறிப்பாக, கார்த்திகேசு சிவத்தம்பி, தெ.பொ.மீ) அதைப் பிராகிருதம் என்றே பொருள் கொள்வார். http://tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051452.htm. ”தொல்காப்பியர் காலத்திருந்தே தமிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மொழி சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியாகும். தொல்காப்பியர் வடக்கிலுள்ள மொழி பற்றிப் பொதுவாக வடசொல் எனக் குறிப்பிடுவார். அதனால் இச்சொல் பிராகிருதம், பாலியாகிய மொழிகளையும் குறிப்பதாக வேண்டும்” என்று தெ.பொ.மீ. குறிப்பிடுவார். 1. உண்மையில் வடமொழி யென்பது சங்கதம் மட்டுமா? அல்லது பாகதமுஞ் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டுமா? 2. அப்படிச் சேர்த்துப் பொருள்கொள்ள வேண்டுமெனில், கிடைத்த கல்வெட்டுகளின் படி தமிழுக்கும், பாகத்திற்கும் மட்டுமே கி.மு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. சங்கதக் கல்வெட்டோ,  மிகப் பிந்தியது. தொல்காப்பியம் எழுந்த காலம் கி.மு. என்றால், அக்காலத்தில் சங்கதக் கல்வெட்டுக்கள் இல்லை. அதிகாரப் பூர்வ சங்கதக் கல்வெட்டின் காலம் கி.பி.150ஆம் நூற்றாண்டு. எழுத்தில்லாத மொழிக்கு இலக்கணம் படைக்க முடியுமா?"
-------------------------------------
பலருக்கும் இக்கேள்வி எழலாம். சங்கதக் கட்சியார் பலருங் கவனமாய், பாகதச் சங்கத ஊடாட்டம் ஒதுக்கி, ”சங்கதம் தாய் பாகதம் மகள்” எனத் தலைகீழ்ப் பாடம் படிப்பார். பொ.உ.மு. 1000-200 இல், குறிப்பாய், சனபதக் காலத்தில் (பொ.உ.மு.1000-600), வடக்கே பாகதமே பரந்தது. கத்துவதைக் கத்தம்>கதம் என்று சொல்லலாம். ஈழப்பேச்சில் கதைத்தல் என்பது, பேசுதலைக் குறிக்கும். பா+கதம்= பரவற்பேச்சு. இதைப் பெருகதம் (prakrit), மாகதம்/ மாகதி என்றுஞ் சொல்வார். தமிழைத் தனித்துச் சொல்வதில் எத்தனை அருகதையுண்டோ, அதே அருகதை பாகதத்திற்குமுண்டு. அகண்ட மகதப் பேரரசின் கிளைவழக்குக் கலவையாய் (முகலாயப் பேரரசில் பிற்காலத்தில் எழுந்த இந்துத்தானி போல்) சம்+கதம் என்பது எழுந்தது. சங்கதத்தின் திருந்திய மொழி செங்கதம் (செம்+கதம்). இந்துத்தானியில் இருந்து எழுந்த சர்க்காரி இந்தி போல் இதைக் கருதலாம். சங்கதமும் செங்கதமும் ஒரே மொழியின் 2 வேறு வழக்குகள். இன்றோ பேச்சு மொழி இன்றி, ஏட்டுச் செங்கதத்தைச் சங்கதமாய்க் கொள்கிறார். அதிற்றான் குழப்பமே! (பேச்சுத் தமிழின்றிச் செந்தமிழ் மட்டும் எஞ்சினால் எப்படி?)

ஒருமொழிக் கிளைகள், கால இடைவெளியால், வட்டாரப் போக்குவரத்து இல்லாததால், நுட்பியல் பரிமாறாததால், பொருளியல், வணிக, ஆட்சித் தாக்கங்களால், அரசியல் குமுக நடைமுறையால், தனித் தனி மொழிகள் ஆகலாம். 2000/3000 ஆண்டில் தமிழுக்கும் அது நடந்தது. அருவத் தமிழ் தெலுங்காகி. கொங்கணத் தமிழ் துளுவாகி. கங்கர் தமிழ் கன்னடமாகி, சேரலத் தமிழ் மலையாளமாகி, எழுத்து/சொல்/ பொருளில் சிச்சிறிதாய் மாறிப் பங்காளி மொழிகளாயின. ”இவ்விடங்களிற் புழங்கிய தமிழிலிருந்தே, இவை தோன்றின” என்பதை மறுத்து, நொதுமலாய்ச் (neutral) சில ஆய்வாளர் முந்து / தொடக்கத் திராவிடம் (proto-/early Dravidian) என்று சொல்வார். நான் அப்படிச் செய்யேன். தயங்காது திராவிடத்தைத் தமிழியமென்பேன். நான் அறிந்தவரை முந்து திராவிடம் 95/98 % தமிழே. இதை ஏற்க மறுப்போரே முந்து திராவிடக் கதை படிப்பார். [அதே பொழுது, அறிவுப் புலப் போட்டியில், கல்விச்சாலை அரசியலால் (academic politics) எழும் ’முந்து திராவிடம்’ என்பதை நான் புரிந்து கொள்கிறேன். மொழித்தொடர்ச்சி, விதப்பு, நுணுக்கம் போன்றவற்றில் நமக்கு எவ்வளவு உரிமையுண்டோ, அதே உரிமை பழந்தமிழ்ச் சேய்களான மற்ற திராவிட மொழிகளுக்கும் உண்டு.]     

பாகதத்திலும் பாஷை (இதுவும் ’பேச்சு’ம் ஒன்றே; பொ.உ.மு.1500-1200 களில், வேத மொழி, வழக்கு மொழிப் பங்களிப்பில், இற்றை இலாகூர் சுற்றி சந்தசு/பாஷை மொழி எழுந்தது. பொ.உ.மு.500 இல் இதற்கே பாணினி இலக்கணஞ் செய்தான்), மராட்டி (படித்தானத்தின்-Paithan அருகில் இருந்த மொழி.), மாகதி (2500 ஆண்டுகளுக்கு முன் பிம்பிசாரன் தொடங்கி நந்தர், மோரியர், சுங்கர், கனகர் எனப் பலர் புரந்த, பேச்சுமொழி இதுவாகும். தேரவாத இலக்கியப்பாலி இதில் இருந்து கிளைத்தது. மகாயானமோ பொ.உ.500களில் சங்கதங் கலந்த பாலியில் தொடங்கி முடிவில் சங்கதத்திற்கே வந்து சேர்ந்தது), அருத்தமாகதி (மகததின் வடக்கே வச்சிரம் புழங்கிய, மகாவீரர் பேசிய, மொழி. திகம்பரச் செயினம் இன்றும் இதைக் காப்பாற்றும். சுவேதாம்பரம் சங்கதங் கலந்த அர்த்தமாகதிக்கு மாறியது), அங்க மொழி (வங்கத்தின் முந்தைமொழி), கூர்ச்சரி (குசராத்தியின் முந்தை வடிவம்), சூரசேனி [வடமதுரையின் பேச்சு மொழி. இதன் கீழ்வ ந்த காடிபோலியின் (அங்காடிப் பேச்சின்) திரிந்த வடிவமே நடுவணரசின் முற்றாளுமையாற் பரவும் இந்தி, மைதிலி (பீகார் மிதிலையிற் பரவிய பேச்சு. இந்தித் தாக்கத்தில் குன்றியது), அவந்தி, காந்தாரி போன்ற வழக்குகளும் வடக்கேயுண்டு. இவற்றைத் தனிமொழிகள் என்று சொல்லவிடா அளவிற்கு ஆங்காங்கே மொழி ஏமாற்றும் நடக்கிறது.

2500 ஆண்டுகளுக்கு முன் வடக்கே பாகதர், தெற்கே தமிழரெனக் கிடந்த நாவலந் தீவில், விண்டம்> விந்தம்> விந்தியம் வரையில் தமிழாட்சியிருந்தது. (விள்ளல்> விண்டல் = பிரித்தல். விண்ட மலை தமிழ் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. அதுவே வெள்ங்+கடம்> வெங்கடம்> வேங்கடம் (வெள்+து= வெட்டு; கடம்=மலை) என்றானது. (வேங்கடத்தையே வேங்குன்றம்> வேகுன்றம்> வைகுண்டம் என்று தெலுங்கின் வழி வைகுண்டம் ஆக்கினார். விண்டம், வேங்கடத்தின் பழைய அடையாளங்களை வெங்காலூர்க் குணாவின் “தமிழரின் தொன்மை” என்ற பொத்தக வழி அறியலாம். அந்நூலின் எல்லா வரைவுகளையும் நான் ஒப்புக் கொள்ளாவிடினும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்று சொல்வேன். இதையே ”வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியர் காலப் பனம்பாரனார் பாயிரங் குறிக்கும். அப்புறம் என்ன முந்து திராவிடம்? ஆழ்ந்து நோக்கின், தமிழாட்சி, மூவேந்தர் எல்லைகளை விடப் பெரியது. (இன்றுந் தமிழின் ஆட்சியெல்லை, தமிழ் நாட்டை விடப் பெரியது.)

பழ இலக்கியத்தை அலசின், விண்டத்தின் தெற்கு நாடுகள் பற்றி வடவருக்கு நெடுங்காலந் தெரியாதது புரியும். விண்டப் பிரிப்பை பொ.உ.மு.500-200களில் மோரியரும், பொ.உ.மு. 230-பொ.உ..220 களில் (இற்றை ஔரங்காபாதின் அருகே கோதாவரிப் படித்தானத்தில் எல்லையதிகாரிகளாய் அரசாண்ட) நூற்றுவர் கன்னருமே முதலில் உடைத்தார். ’மொழி பெயர் தேயமெ’ன்ற மாமூலனாரின் சங்கச் சொற்றொடர் மூலமும், கன்னரின் நாணயங்களின்  இரு புறங்களிலும் இரு மொழிகளில் அச்சடித்ததாலும், கன்னராட்சியில் தமிழும் பாகதமும் ஆண்டது புரிபடும். இந்திய வரலாற்றில் வடபுல/ தென்புல நாகரிக, பண்பாட்டு ஊடாட்டம் அறியக் கன்னராட்சியை உறுதியாக ஆய வேண்டும். இதையறியாத தனித்தமிழ் ஆர்வலர், நூற்றுவர் கன்னரைக் குறைத்துப் பேசுவார். “வடுகரெனும்” கண்ணோட்டம் நம் கண்ணை மறைத்துவிடக் கூடாது.

தாய்வழி உறவுற்ற அவர் நாட்டில் அகநானூறு போலவே ’அகம் எழுநூறு (கஹ சத்தசை; ’கதா சத்தசை’ என்றுஞ் சொல்வர்.)’ என்ற நூலெழுந்தது. தமிழரிடை பரவிய பெருங்கதை (உஞ்சை உதயணன் கதை) கன்னரவையில் எழுந்தது. வேதநெறி/மறுப்பு நெறிகளை ஒருசேரப் புரந்ததும் இவர் கல்வெட்டுக்களிற் புலப்படும். இவர் நாட்டின் வழியே செயினமும், புத்தமும் தெற்கு நுழைந்தன. தென்னக அற்றுவிகம் (ஆசீவிகம்) வடக்கே சென்றது. தமிழகம் போல் சமயப் பொறை கன்னர் நாட்டிலும் இருந்தது. மகதம் போகும் தென்னகச் சாத்துகள் படித்தானத்தின் வழியே சென்றன. தவிரக் கன்னர், சேரரின் மேலைத் துறைமுகங்கள் மேலை வணிகத்திற்கும், சோழ, பாண்டிய, கலிங்க, மகதரின் கீழைத் துறைமுகங்கள் தென்கிழக்காசிய வணிகத்திற்கும் கால்கோலின. பல்வேறு ஒற்றுமைகள் கொண்ட கன்னருக்கும் தமிழர்க்குமான நட்பைச் சிலப்பதிகாரம் பேசும். (இச்சான்றுகளை மறுத்துத் தமிழர் வரலாற்றைக் குலைக்க முற்படுவோரே சிலப்பதிகாரத்தை ஒரு புதினமென்பார். கூடவே கொங்கு வஞ்சியை குடவஞ்சியோடு குழப்புவார்)..

கன்னர் ஆட்சியின் தென்கிழக்கிற் பாகதமும், அருவத் தமிழும் ஊடிப் பிறந்தது பழந் தமிழருக்கு வடுகாயும், பாகதர்க்குத் தெலுகு/தெனுகாயும் ஆனது; [தெல்/தென்/தெற்கு) இதைத் தக்கணம் என்றுஞ் சொல்வர். ’திரிகலிங்கின்’ திரிவு ’தெலுங்கு’ என்பதற்கு ஆதாரமில்லை.] வடுகு/தெலுகுப் பெயர் விளையாட்டே மொழியுண்மையைக் காட்டும். கன்னர், பிந்தைச் சளுக்கர் தொடர்பால், ஒரு காலத்தில் கன்னடமும் வடுகெனப் பட்டது. தமிழ்ப் பலுக்கின் படி படகரும் வடகரே. சிலம்பிற் பயிலும் ’கொடுங் கருநாடர்’ என்பது, ”கொடுகிய (தமிழைப்) பேசும் கருநாடரைக்” குறித்தது. [கொடுகு = வளைவு, திரிவு. எதிலிருந்து கொடுகியது?- என்று கேட்டால், பொ.உ.மு.80களில் உருவான பழங் கன்னடத்தின் தொடக்கம் புரியும். இப்படிக் கேள்வி கேட்க நாம் தயங்குகிறோம்.] ஒரு காலத்தில் மலையாளிகள் தமிழ்த் தொன்மை பற்றிப் பேசத் தயங்குவார். இன்றோ சங்கப் பின்புலத்தை அவருஞ் சொல்கிறார். நாம் கேள்வி கேட்கக் கேள்வி கேட்கக் கன்னடரும் சங்கப் பின்புலத்தை ஏற்றுக் கொள்வார். இந்தியெதிர்ப்பை இப்பொழுது புரிந்துகொள்கிறாரே?

வரலாற்றோட்டத்தில், தெற்கே தமிழர் சுருங்க, தெலுங்கரும்/கன்னடரும் விரிய, வேங்கடப் பொருள் சிச்சிறிதாய் மாறியது. முதற் பொருளான விண்ட மலையைக் குறியாது, வடபெண்ணையை ஒட்டி வெய்யில் கொளுத்தும் இராயல சீமையை இரண்டாம் பொருளாய்க் குறிக்கத் தொடங்கியது. வேம்+ கடம் = வேங்கடம் = வெய்கடம் என்பார் ந.சுப்புரெட்டியார். இன்று இதுவும் மாறி மூன்றாம் பொருளில் திருமலையை வேங்கடம் என்கிறார். ஏற்கனவே கடத்திற்கு மலைப்பொருள் உண்டெனில் (காடு, பாலைநில வழி என்ற பொருள்களும் உண்டு) வேங்கடாசலம் என இன்னோர் அசலம் (மலை) எப்படி வந்தது? - என்று நாம் கேள்வி கேட்பதில்லை.  இந்த.அசலச் சேர்ப்பே, திரு மலை = வேங்கடம் என்பதைப் பிந்தைப் புரிதலாய்க் காட்டும். (விண்ட மலையில் விண்டு கோயில் உண்டா?- என்பது ஆய வேண்டிய கேள்வி.) தமிழக வடகிழக்கின் உள்ளதோர் ஓரமலை சங்க காலத்தில் எப்படி நமக்கு முழு வடக்கெல்லை ஆகும்? காலங் காலமாய்த் தமிழ் நிலமும், சிந்தனையுஞ் சுருங்கிச் சுருங்கிக் காலப் பிறழ்ச்சியில் பொருட் பிறழ்ச்சியாகி இதுவே உண்மையென நாம் எல்லோரும் மயங்கிக் கிடக்கிறோம்.

சங்க காலத்தில் கடற் பக்க ஆந்திரம் பெருங்காடு. (அதனுள் சாலை போட்டு வடக்கே போனது, பேரரசுச்சோழர் காலத்தில் நடந்தது.) சங்க காலத்தில் வடக்கு ஏகிய சாத்துகள் இராயலசீமையின் வேங்கடங் கடந்து படித்தான (>பைத்தான்) வழி, தக்கணப் பாதையில் மகதம் போயின. சங்க நூல்களில் நூற்றிற்குப் பாதி பாலைப் பாட்டுகளே. (தக்கண, உத்தரப் பாதைகள் அறியாது இந்தியத் தொன்மை புரியாது. தமிழ் ஆய்வும் விளங்காது. தமிழறிஞர் என்று இதை உணர்வாரோ அன்றே முன் நகரலாம். இன்றேல் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டியது தான்.) பாலை தாண்டி வடக்கே மகதம் போகாது, தென்கிழக்கு, மேற்கு நாடுகளுடன் கடல்வாணிகஞ் செய்யாது, தமிழகம் வளர வில்லை, நம் ’அகமும் புறமும்’ ஆழ்ந்து சொல்வதை எப்போது புரிந்து கொள்வோம்.? பொருளியல் புரியாது வரலாறு புரியுமா?

பல்வேறு கிளைமொழிகள் கலந்து பாணினிக்கு அப்புறம் கி.மு.300களில் வடமேற்கின் பாஷாவை (சந்தஸ்) அடிப்படையாக்கிச் சங்கதம் (கலப்புமொழி) எனும் எழுதாக் கிளவியைப் படிப்பாளிகள் உருவாக்கினர். பாணினி சங்கதப் பெயரை எங்கும் பகரவில்லை. பிற்காலத்தில், குப்தரின் ஆட்சிமொழியாகிச் சங்கதம் செங்கதமானது. குப்தவரசு பெற்ற அகல் வளர்ச்சியில் வட்டார இலக்கியங்கள் சங்கதத்துள் பெயர்க்கப் பட்டன. (பஞ்சதந்திரம், பெருங்கதை போன்றவை குப்தர் காலத்தில் சங்கதத்துள் வந்த மொழிபெயர்ப்புகளே.) வட்டார மொழிகளைச் சிச்சிறிதாய்ச் சங்கத மொழி விழுங்கிப் பரவியது. காளிதாசன் முதல் பல்வேறு புலவர் குப்தர் அவையிற் சங்கத இலக்கியம் படைத்தார். (குப்தரும், ஓரளவு பல்லவரும் இல்லாது போயிருந்தால் இன்று சங்கதம் இல்லை.) பொ.உ.150 களில் பாகத எழுத்தால் (பெருமி; brahmi) இதை எழுதினார். பொ.உ.9-10 ஆம் நூற்றாண்டில் பெருமி நகரியானது. வெவ்வேறு அரசுகளின் எழுத்து முறைகள் வெவ்வேறு காலங்களில் இதுபோல் தோன்றின.

சாதவாகனரின் கீழ் அதிகாரிகளான பல்லவர் இராயலசீமையில் இருந்து இறங்கி வந்து வடதமிழக ஆட்சியைப் பிடித்துக் கொண்டார். இவர் ஆட்சியில் பாகதம் கொஞ்சங் கொஞ்சமாய் வெளியேறிச் சங்கதப் புழக்கங் கூடியது. தமிழியிலிருந்து கிரந்தத்தை உருவாக்கிச் சங்கதம் எழுதினார். கிரந்தம், நகரி எழுத்திற்கும் முந்தியது. இவ்வரலாற்றைக் கூடத் தமிழர் மறந்தார். கிரந்த ஆர்வலரும் பேசக் காணோம். நம் உரிமைகளை ஒரு பக்கம் விட்டுக் கொடுத்து, இன்னொரு பக்கம் ”கிரந்தத்திலிருந்து தமிழெழுத்துப் பிறந்தது” என்று தலைகீழ்ப்பாடம் ஓதுவார். வேறொன்றும் இல்லை இருக்க இடங் கொடுத்தாற் படுக்க இடங் கேட்பது வாடிக்கை. வெற்றி பெற்றோர் வரலாறு எழுதுவது போல் எல்லாவற்றிற்கும் சங்கதமே ஊற்றென இன்று மாறி உரைக்கிறார். (மீண்டும் குப்தர் காலத்தை இந்தியா எங்கும் கொண்டு வர இந்துத்துவர் எண்ணுகிறார் போலும்.)

வட மொழி என்பது இடத்தை வைத்துப் பெயரிட்ட சொல். வட புலத்தின் தொலைவில் உள்ள நமக்கு அது ”வடக்கிருந்த/இருக்கும் மொழி” அவ்வளவு தான். குப்தர் காலத்தில் மட்டுமே இது சங்கதம். சங்க காலத்தில் இது பெரிதும் பாகதம்; படித்தோர் வழிச் சிறுபான்மையிற் பாஷா/சந்தஸ். வரலாற்றுப் பொருள் காலத்திற்கேற்ப மாறியது. நாளா வட்டத்தில் பல்லவர் தாக்கத்தில் பாகதப் புரிதல் குறைந்தது. பின் ஏற்பட்ட கருத்துமாற்றத்தைச் சங்ககாலத்திற் கொண்டு போய் வலிந்து பொருள் கொள்வது தவறு. அக்காலத் தென்னக மொழி, தமிழே. இன்றுள்ள மற்ற தென்மொழிகள் அக்கால வட்டாரக் கிளை மொழிகள். ஆக இருந்தன. (இன்றோ, தென்மொழியெனத் தமிழைப் பொதுப்படச் சொல்வது தவறு.) 

அன்புடன்,
இராம.கி.

No comments: